*
நான் இந்துவல்ல ... நீங்கள் ...?
தொ. பரமசிவன்
’இந்து’ என்ற
சொல்லுக்குப் பொருள் என்ன?
இந்து என்ற
சொல் இந்தியாவிலேயே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ,
பிராமண்யங்கள் என்று சொல்லக் கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை;
இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே
ஐரோப்பிய Orientalist
அதாவது கீழ்த் திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படித்திய சொல். இந்தச்
சொல்லுக்கான ’மரியாதை’ என்ன என்று கேட்டால் ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த
சொல்’ என்பது தான்.
இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு
வேர்ச்சொல்லே கிடையாது.
மறைந்து போன
சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால்
தெரியும். அதிலே, ”வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்ற பொதுப்பெயர் வைத்தானோ
இல்லையோ நாம் பிழைத்தோம்” என்று சொல்கிறார்.
1799ல்
உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் வந்த பொழுது கல்கத்தாவில்
இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்கொண்டாடுவார்கள்.) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu Law என்று பெயரிட்டார். அப்பொழுது தான்
Hindu என்ற சொல்
முதன் முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. (5)
இந்து என்ற
சொல் நமக்கானது இல்லையென்றால் இதற்கான பழைய சொல் என்னவாக இருக்கும்?
இந்து என்ற
சொல் சிந்து நதிக்கு இந்தப் புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால்
பயன்படுத்தப்பட்ட சொல்.
நம்முடைய நாட்டிலே என்ன வகையான பழைய இனப் பாகுபாடு எனக்
கேட்டால், “ஆரிய” என்ற ஒரு சொல் இருக்கிறது. “திராவிட” என்று ஒரு சொல் இருக்கிறது.
இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை
ஆகும்.
ஆரியம்,
திராவிடம் என்ற சொற்களுக்கு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படியொடு
வரலாறு கிடையாது. (6)
ஒரு மதம்
என்றால் மூன்று செய்திகள் அடிப்படையாக அமைய வேண்டும். ஒரு முழு முதற் கடவுள், ஆகமங்கள், குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள் ஆகியன அவை. இந்து
மதத்திற்கு அல்லது அப்படி அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு இவை ஏதுமில்லை. (7)
ஆதி சங்கரருக்குப் பிறகு பெரும்பாலும்
அத்வைத மரபு சார்ந்தவர்கள். இவர்களுக்கு பரமார்த்திகத்திலே அதாவது உயர்ந்த தத்துவ நிலையிலே
கடவுள் என்று ஒருவர் கிடையாது. எனவே, இது ஒரு மறைமுக நாத்திகம். (8)
வேதத்தை ஓதுபவர்கள் ஸ்மார்த்தர்கள்.
வடமொழி வேதத்தை மட்டும் கடவுள் போலக் கொண்டாடுபவர்கள். (9)
’முன்னோர்கள் போல’ என்று சொல்லுவதற்கு
‘சனாதனம்’ என்று அர்த்தம். இந்த வார்த்தையை முன்பு அடிக்கடி சொல்வார்கள். இவர்கள் சொல்லுவது
படி பார்த்தால் … இவர்களின் முன்னோர்கள் என்ன செய்தார்கள். பிறவி ரீதியாக மக்களை மேல்
கீழாக அடுக்கி வைத்தார்கள். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று பிரித்து வைத்தார்கள்.
(13)
பிறப்பினாலே சைவ சமயத்தைச்
சார்ந்தவருக்குத் தான் தீட்சை கொடுக்கும். ஆனால் வைணவ மதம் தாழ்த்தப்பட்டோருக்கும்
தீட்சை கொடுக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையிலிருக்கிறது. ஒரு தாழ்த்தப்பட்டவர் வைணவ
தீட்சை பெற்று வைணவராகலாம். தீட்சை பெற்று வைணவரானவுடன் தீட்சை பெற்றவர்கள் யாரும்
யாருடைய சாதியையும் கேட்கக் கூடாது. ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட வேண்டும். ஆனால்
இன்று எல்லோருமே ‘இந்து’ என்ற போர்வையிலே தலித்துகளை வெறுப்போடு தள்ளிவைத்துப் பார்க்கும்
பார்வைதான் உள்ளது. இராமானுசரின் சாதி எதிர்ப்புக் குரல் தோற்றுப் போய்விட்டது.
(15)
வர்ணாசிர தர்மம் என்பது தமிழ்
நாட்டிலே ஒரு போதும் நடை முறையிலே இருந்ததில்லை. … வேளாளர் என்று
சொல்லக்கூடிய சைவ மடங்களை வைத்திருப்பவர்கள் வருணதரும கணக்கின்படி சூத்திரர்கள்.
ஆனால் நடைமுறையிலே பிராமணர்களுக்கு அடுத்த உயர் சாதி நிலையில் அவர்கள்
இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? வருணாசிரம தருமம் இங்கு நடைமுறையில் இல்லை.
இங்கே சாதி தான் இருக்கிறது. எனவே கோவில் சாதி பேணுகிறதே தவிர வருணாசிரம தர்மத்தைப்
பேணவில்லை.(16)
மதச்
சிறுபான்மைச் சமூகங்கள் -- சாதியினால் தாழ்ந்தவர்கள் எந்தக் கோவில்
அவர்களுக்குத் திறந்திருந்ததோ அந்தக் கோவிலுக்குள் போய் விட்டார்கள்; எனவே ’இங்கிருந்து
துரத்தப்பட்டவர்கள்’ என்று சொல்வது தான் பொருத்தம். ... உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எல்லா
மதங்களுமே ஒரு கட்டத்தில் ஆயுதத்தை ஏந்தி அடுத்த மதத்தை ஒடுக்கிய மதங்கள்
தான். ... சாதி ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும்,
அரசியல் அதிகார ஆதிக்கமும், பலமும் உடையவர்களாலே கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும்
விரட்டப்பட்டார்கள் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்.இங்கு அவர்கள் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போன இடத்திலே அவர்கள் வாழ்கிறார்கள்.
அவர்களுடைய வாழ்க்கை இவர்களுக்குப் பிடிக்கவில்லை. (19)
இப்பொழுது
அந்த ‘கிறிஸ்தவர், இசுலாமியராக அல்லாத இந்து’ என்கிற அரசியல் சட்டம் சொல்வதை
ஒரு சமூக ஆதிக்கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால் ‘இந்து’
என்னும் பண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர்
தெய்வங்களை நிம்மதியாக வணங்கி விட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமையினையும்
மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். (20)
*
16 comments:
இந்தத் தொடரை நான் படித்து வருகிறேன். விருப்பு வெறுப்புக்கு அப்பால்பட்டு பதிவு எழுதப் பட்டிருந்தால் தெரியாத பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் சமூக அவலங்களையே ஒரு மதத்தின் கோட்பாடாக எண்ணி காழ்ப்புணர்ச்சியால் உந்தப்பட்டு செய்திகள் எழுதப்பட்டிருக்கின்றன. சமூக அவலங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த மாதிரி நடைமுறைகள் மனிதனின் ஆண்டை அடிமை என்னும் அடக்கியாளும் குணத்தின் வெளிப்பாடுகளே அவற்றை நீக்க இந்த மாதிரியான காழ்ப்புணர்ச்சிகள் பலனளிக்காது. நான் ஒரு ஹிந்து என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நீங்களும் படித்திருக்கிறீர்கள். தேவைப் பட்டால் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்களேன். மாற்றுக் கருத்துக்கு வரவேற்புண்டு இல்லையா. ?
ஐயா,
// மாற்றுக் கருத்துக்கு வரவேற்புண்டு இல்லையா. ?// என்னங்க ... என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்டீங்க ...! :)
உங்கள் பதிவின் தொடுப்பையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் சிறிது நேரம் மிச்சமாயிருந்திருக்கும். பொறுமையைக் கைவிடாமல் தேடி மீண்டும் கண்டு பிடித்தேன்.
இங்கு எழுதப்பட்ட இரு தொடர் பதிப்புகளையும் எழுதிய காஞ்சா, பரமசிவன் இருவருமே “இந்து”க்கள் தான்.
ஏற்கெனவே இதனை வாசித்து //நாணயத்தில் நீங்கள் காட்டிய பக்கம் மிகவும் அருமையான பக்கம்// என்று எழுதியுள்ளேன்.
//ஆனால் என்னால் எழுத முடிகிறது என்றால் அதற்கு இருக்கும் துணிவு ”நான் ஒரு ஹிந்து “ என்பதாகவும் இருக்கலாம்.// - இதற்கும் பதில் சொல்லியிருக்கிறேன். நமது அறிவு சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஆழத்தைப் பொறுத்தது மட்டும் தானே அது. இல்லையா? என் துணிவு உங்களுக்கு ஆச்சரியத்தை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்! (’கட்டையில் போற வயசில’ இந்தப் பய இப்படிப் பேசுறானேன்னு தோணுமே!உங்களுக்கு எப்படியோ .. பலருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும், ஹா... ஹா...!)
//hinduism is not a religion- but a way of life,// - எல்லோரும் அடிக்கடி சொல்வது. ஆனால் இதன் பொருள் எனக்கு இன்னும் புரிபடவில்லை. இசுலாமியர்கள் கூட தங்கள் மதம் - மதமல்ல .. இது ஒரு வாழ்வின் மார்க்கம் என்கிறார்கள். வார்த்தை விளையாட்டு ...! அதோடு இக்பால் சொன்னது போல் பல ”மதங்களின் அவியல்” என்பதால் இப்படி சொல்லி அதில் உள்ள பல வேறுமாறான கருத்துக்களை ஒத்துக் கொள்ள சொல்லும் ஒரு ‘அறிவார்த்த’ சொல்லாக இருக்கலாம்!(//ஹிந்து ஒரு வாழ்க்கை முறை என்றுக் கூட சொல்ல முடியாது .. ஹிந்து பல இந்திய வாழ்க்கை முறைகளின் தொகுப்பு .. உத்தராஞ்சலில் இருக்கும் ஹிந்துவும் திருவாங்கூரில் இருக்கும் ஹிந்துவும் ஒரே வாழ்க்கைமுறையா வச்சிருக்கான் .. இல்லையே. - இக்பால் செல்வன்)
//பல நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கிய கலாச்சாரம்.// இந்து மதத்தில் உள்ள அத்தனை ‘பழக்க வழக்கங்களும்’ - வர்ணாசிரமம், சனாதனம் போன்ற மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளும் - சரியானவை தானா?
எங்கள் ’மதம்’ எல்லாவற்றையும் - கடவுள் மறுத்தல், கடவுளைப் பிரித்து கூறு கட்டி வைத்திருப்பது - உள்ளடக்கியுள்ளது என்கிறீர்கள். எப்படி ”ஒரே” மதத்தில் ’எல்லாமும்’ இருக்க முடியும்; அப்படியே இருந்தாலும் அது self-conflicting ஆன ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும். உன் தாய் யாரென்றால் அவர் அல்லது இவர் என்றா சொல்ல முடியும். ஒரு மதம் ஒரு கடவுள் - என்று இக்கடைசிப் பதிவில் பேரா. தெ.பொ. சொன்னது போலல்லவா இருக்க வேண்டும். அது பாதி இது பாதி என்றால் என்ன பொருள்?. அது என்ன ஒரு அவியலா!
//அது சனாதன தர்மம் என்று கூறப்படுகிறது.வாழ்வின் நியதிகளைக் கடைபிடிப்பதில் அடங்கி இருக்கிறது.// இங்கே தான் என் போன்றோர்களின் பெரும் எதிர்ப்பு உங்கள் மதத்தின் மேல் உண்டாகிறது. வாழ்வின் நியதிகள் என்பது என்ன? நீ உயர்ந்தவன்; நான் தாழ்ந்தவன் என்பதா? பிறப்பால் உன் மேல் போடப்படும் சாதியக் கோடுகள் அழிக்க முடியாதவை; அவை உன் சமூகத்தில் உன்னை ஏதோ ஒரு நிலையில் நிறுத்தும் என்பது சரியா?
உங்கள் மதத்தின் மேலுள்ள பாசிட்டிவான விஷயங்களை என் பதிவில் எழுதியுள்ளேன். முடியுமானால் படித்துப் பாருங்கள். ஆப்ரஹாமிய மதங்கள் சொல்வது போல் நரகம்- மோட்சம் concept இல்லாமல் ‘மனித தர்மத்தோடு’ உள்ள இந்து மதக் கருத்துக்களைப் பற்றியும் கூறியுள்ளேன்.
//சமூக அவலங்களையே ஒரு மதத்தின் கோட்பாடாக எண்ணி ...//
//சமூக அவலங்களையே ஒரு மதத்தின் கோட்பாடாக எண்ணி ...// -
அப்படியானால் சாதிய வேறுபாடுகள் உங்கள் சமயத்தோடு தொடர்பு இல்லாதவைகளா? அவன் என் கோவிலுக்குள் வரலாம்; ஆனால் நீ வரக்கூடாது. நான் சாமியின் தலையிலிருந்து வந்தேன்; நீ காலிலிருந்து கூட வரவில்லை என்று ‘தோரணம்’ கட்டும் சமூக அவலங்கள் எப்படி உங்கள் மதத்தில் இன்றும் என்றும் ‘சாமியாடிக்கொண்டிருக்கிறது’?
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இந்த தத்துவத்தை இந்த மூன்று பெரும் மதங்களும் அல்லது மார்க்கங்களும் ஓரளவு ஒத்துக் கொள்கின்றன. இந்த அடிப்படை புரிதலுக்கு எல்லோரும் வந்து விட்டால் உலகில் பல பிரச்னைக்ள் தீர வழியுண்டு.
பயனுள்ள பதிவு ஐயா நன்றி
சு.பி.,
ரொம்ப நாளாச்சு பார்த்து; எப்படி இருக்கீங்க?
உங்கள் பின்னூட்டம் எனக்குப் புரிபடவில்லை.
//இந்த தத்துவத்தை இந்த மூன்று பெரும் மதங்களும் அல்லது மார்க்கங்களும் ஓரளவு ஒத்துக் கொள்கின்றன. //
எந்த மூன்று பெரு மதங்களும் ஒத்துக் கொள்கின்றன? பொதுவாகவே எல்லா மதங்களும் ஏதோ ‘ஒரு’ கடவுளை ஒத்துக் கொள்கின்றன என்றே நினைக்கிறேன். பிரச்சனைகள் எழுவது - எந்தக் கடவுள் என்ற மானிடரின் போட்டியில் எழுபவை; பாவம் ... கடவுளுக்கும் பிரச்சனைகளுக்கும் ஏதும் தொடர்பில்லை! எல்லாம் நமக்குள் தான்!
/......................... ... சாதி ஆதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும், அரசியல் அதிகார ஆதிக்கமும், பலமும் உடையவர்களாலே கிறிஸ்தவர்களும், இசுலாமியர்களும் விரட்டப்பட்டார்கள் என்பது தான் சரியானதாக இருக்க முடியும்//
?????????
மனிதனை கடவுள் படைத்தார் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன.
மனிதன் குரங்கிலிருந்து மாறி வளர்ந்தான் என்று டார்வின்ஸ் தியரி விஞ்ஞான அறிவியலில் கூறுகிறது. அப்படியானால் எல்லா மதங்களும், கடவுள் இருக்கிறார் என்பதுமே பொய்தானா.
கடவுள் இல்லை என்று எல்லோரும் கூறத் தொடங்கினால் நாளைய உலகம் எப்படியிருக்கும். எனது மதமே உயர்ந்தது என்பதே ஒரு அறியாமைதான்.
கே. கோபாலன்
I hope you will not use offensive words, like few other guys.
பொதுவாக சர்ச்சைகளில் ஈடுபட விரும்புவதில்லை. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குகிறாப்போல் இருப்பவரை எழுப்ப முடியுமா. நான் கூறி இருக்கும் சமூக அவலங்களையே பூதாகாரமாகக் காட்டி வாழ்வியலைக் மத இயலாக்க எனக்கு ஒப்புதலில்லை. காஞ்சா பரமசிவன் இருவருமே இந்துக்கள்தான்/ அதனால்தான் அவர்களால் இப்படி எழுத முடிகிறது. ஒரு இஸ்லாமியரோ கிருத்துவரோ எழுதுவதற்கு மிகவும் சிந்திப்பார்கள். ஏன் அவர்களால் எழுத முடியாது என்றே கூறுகிறேன் மீண்டும் கூறுகிறேன் சமூக அவலங்கள் மதமாக முடியாது. வேண்டுமானால் மதச் சாயல் போர்த்தப்பட்டு எழுதப் படலாம் பிறப்பினால் பேதம் பாராட்டுவதை நானும் என் பதிவுகள் பலவற்றில் சாடி எழுதி இருக்கிறேன். மதத்தை தாயோடு ஒப்பிடுவது எனக்கு உடன்பாடில்லை.
//I hope you will not use offensive words, like few other guys.//
நிறைய கசப்பான அனுபவம் கிடைத்திருக்கும் போலும் ! (விதி...! அப்டின்னு சொல்லிருவோம்ல ...)
//எல்லா மதங்களும், கடவுள் இருக்கிறார் என்பதுமே பொய்தானா.
//
ஆம் (என்பது என் பதில்.)
//கடவுள் இல்லை என்று எல்லோரும் கூறத் தொடங்கினால் நாளைய உலகம் எப்படியிருக்கும்.//
இதற்குப் பதில் இங்கே
//எனது மதமே உயர்ந்தது என்பதே ஒரு அறியாமைதான்.//
புரிதலுக்கு நன்றி.
ஐயா,
//பொதுவாக சர்ச்சைகளில் ஈடுபட விரும்புவதில்லை. /
எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இங்கு நான் ஆரம்பிக்கவில்லை!
//வாழ்வியலை மத இயலாக்க எனக்கு ஒப்புதலில்லை. //
ஆனால் நடைமுறையில் அது தானே உண்மை; அவன் கடவுளின் தலையிலிருந்து வந்தவன்; இவன் காலிலிருந்து வந்தவன் என்று சொல்லி, வாழ்வியலைச் சொல்லித் தருவது மதங்கள் தானே!
//ஒரு இஸ்லாமியரோ கிருத்துவரோ எழுதுவதற்கு மிகவும் சிந்திப்பார்கள்.//
அப்படியா சொல்கிறீர்கள்?அப்போது என்னை எதில் சேர்ப்பது. ஏனெனில் நானும் இதை முன்பே என் சொந்தக் கருத்துக்களோடு சேர்த்து எழுதி வைத்துள்ளேன். இங்கே பாருங்கள்;
// சமூக அவலங்கள் மதமாக முடியாது.//
சமூக அவலங்களே மதங்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தால் என் செய்வது என்பதுதான் என் கேள்வி.
// பிறப்பினால் பேதம் பாராட்டுவதை நானும் என் பதிவுகள் பலவற்றில் சாடி எழுதி இருக்கிறேன்.//
அதைக் கற்று தரும் வர்ணாசிரமத்தைப் பற்றி ஏன் சாடவில்லை?
// மதத்தை தாயோடு ஒப்பிடுவது எனக்கு உடன்பாடில்லை.//
ஒப்பிடவில்லை. தாயில் யாருக்கும் சந்தேகம் வராது. ஆனால் ஒரே மத்த்தில் இரு கருத்துகள் இருந்தால் எந்தக் கருத்து உங்களுக்கு சொந்தம் என்ற என் கேள்விக்கான ஒரு உதாரணம் அது.
ஐயா,
முந்திய பின்னூட்டத்தில் கொடுத்த தொடுப்பு சரியாக இல்லை.
http://dharumi.blogspot.in/2005/09/64-5.html -- சரியாக இருக்கும்.
தருமிய்யா,
//இந்து என்ற சொல் சிந்து நதிக்கு இந்தப் புறம் வாழுகிற மக்களைக் குறிப்பதற்கு வெள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட சொல்.//
உலக மேப் வரைஞ்ச கிளாடியஸ் தாலமி "இந்தியா, இந்திய பெருங்கடல்(Indicum Pelagus ), முதல் கொண்டு எல்லாம் கூறிட்டார் .
அலெக்சாண்டர்,மெகஸ்தனிஸ் (இன்டிகா)எல்லாம் வெள்ளைக்காரங்கனு நினைச்சுட்டாங்களோ அவ்வ்!
வெள்ளையா இருக்கவன் எல்லாம் வெள்ளைக்காரந்தான் :-))
எனவே இந்து என்பதை மதத்துக்குனு சொல்வதே தவறு, இந்தியா என்ற நிலப்பரப்ப்பில் வசிப்பவர்கள் "இந்துக்கள்". அதை மதம் என நினைத்தால் அலெக்சாண்டர் ஆவி வந்து கண்ணைக்குத்தும் :-))
//ஆரிய” என்ற ஒரு சொல் இருக்கிறது. “திராவிட” என்று ஒரு சொல் இருக்கிறது. இந்தச் சொற்கள் இரண்டு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மக்களைக் குறிக்கின்றவை ஆகும்.
ஆரியம், திராவிடம் என்ற சொற்களுக்கு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படியொடு வரலாறு கிடையாது. (6)//
ஆரியன் திராவிடன் என்ற சொல்லுக்கு வரலாறு இருக்கு ஆனால் எப்போ?யாரால்?
ஆரியன் என்றால் இரானியர்கள் ,அங்கே இருந்து தான் அச்சொல்லே வந்துச்சு.
இரான்ல இருந்து இந்து குஷ் மலை வரைக்கும் இருக்க எல்லா இடத்தின் பேரும் "ஆரியன் பிரதேசமே" -- கி.முவில் இந்த வரையறை.
ஆரிய பிரதேசம் என்பது ஆசிய மைனரில் இருந்து இந்து குஷ் மலை வரைக்குமே செல்லும். - கி.பி அல்லது முதல் நூற்றாண்டு காலக்கட்டத்தில்.
# திராவிடம் என்ற சொல் ராபர்ட் கால்வெல் வந்து பிரபலப்படுத்துனார். அது மக்களுக்கு மொழிக்குனு அப்பறமாத்தான் சொல்லப்பட்டது.
திராவிட்- தெற்கு,அதான் மொழியியல் வரலாறில் இருப்பது.
ஆரிய,திராவிட என்பதெல்லாம் நிலத்தை குறிப்பது ,அந்நிலத்தில் வாழ்பவர்கள் பேசிய மொழி அதன் பெயராலே அழைக்கப்பட்டது.
உ.ம். நெல்லையில் பேசும் தமிழ் நெல்லைத்தமிழ் கோவையில் பேசும் தமிழ் கோவைத்தமிழ்!
இந்து என்ற சொல்லுக்கு வரலாறு இல்லைனு சொன்னால் திராவிடம் ,ஆரியம் சொல்லுக்கும் வரலாறு இல்லை :-))
# "ரோமன்" கதோலி கிருத்துவர்
"சிரியன்" கத்தோலிக் கிருத்துவர்
என்பதில் ரோமன்,சிரியன் என்பதெல்லாம் கிருத்துவ மதத்தையா குறிக்கிறது?
//ஆரியம், திராவிடம் என்ற சொற்களுக்கு வரலாறு உண்டு. இந்து என்ற சொல்லுக்கு அப்படியொடு வரலாறு கிடையாது. (6)//
ஆறாவது ரெபரன்ஸ் என்னவோ நானறியேன். ஆனால் இக்கட்டுரை எழுதியவர் கண்டிப்பாக நம்ம திராவிட ஆதரவு எழுத்தாளராக இருக்கவேண்டும். உண்மையை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நினைத்ததை எல்லாம் எழுதுவது பெரும்பாலான தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் ஸ்டைலாகவே மாறி வருகிறது.
//(இந்து) இந்தச் சொல் 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த் திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படித்திய சொல்.// என்கிறார் எழுதியவர். ஆனால் இந்து என்ற சொல் 'Indos' (Ἰνδός) என்பதாக கிமு 5 நூற்றாண்டில் கிரேக்கர்கள் இந்தியர்களை குறிக்க பயன்படுத்தியுள்ளார்கள் என்கிறது விக்கி.அதற்கு பிறகு சீனர்கள் பெர்சியர்கள் போன்றவர்கள் கிபி 2 நூற்றாண்டு அதற்கு முற்பட்ட காலத்தில் இந்து என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளர்களாம்.
ஆனால் திராவிடம் எனும் எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் இல்லாத சொல் 1816-ல் அலெக்சாண்டர் கேம்பெல் என்பவரால் தென்னிந்தியரை குறிக்க முதல் முதலாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவர் கிபி 6 நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளார்.ஆக இந்து என்கிற வார்த்தை திராவிட என்கிற வார்த்தைக்கு முன்பே வந்து விட்டது. வெள்ளைக்காரன் காலத்தில் பார்த்தாலும் இந்து என்கிற சொல் 1722 ல் வாரன் ஹோஸ்டிங்ஸ் -hindoos என இந்து சட்டம் பற்றி எழுதும் போது குறித்துள்ளார். அதற்கு ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பிறகுதான் திராவிட என்கிற வார்த்தையை பயன்பாட்டுக்கும் வெள்ளக்காரன் கொண்டுவந்துள்ளான்.பிறகு எப்படி கட்டுரையாசிரியர் திராவிடம் என்கிற சொல்லுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்கிறார்? இந்து என்கிற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல. அதே போல் திராவிடம் என்பது திராவிட மொழி வார்த்தை அல்ல. இரண்டுமே அடுத்தவர்கள் வைத்தது. இரு இனத்தவருக்கும் முன்பு இப்படி அறிப்பட வேண்டும் என்கிற ஆசை இருந்ததாக தெரியவில்லை.
ஒரு கருத்தை தாக்கும் பொழுது இப்படி கட்டுக்கதைகள் அவிழ்த்து விட்டபடி எழுதுவதால் அடிப்படை கருத்தின் மீதே நம்பிக்கையின்மை வரக்கூடும் என்கிற சிந்தனையே நமது எழுத்தாளரிடையே இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.
வவ்ஸ், நந்த்ஸ்,
உங்கள் கேள்விகளை நூலின் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன். ஏதேனும் மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் அனுப்புகிறேன்.
தருமிய்யா,
ஆசிரியரையே தெரியுமா ? அவர் எழுதின நாட்டார் வழக்குகள்,தெய்வங்கள் புத்தகம் மட்டும் தான் படிச்ச நியாபகம், படிக்காமலே குறை சொல்லுறாங்கனு பாய்ஞ்சிட்டா என்ன செய்ய அவ்வ்!
# இந்து என்பதற்கு இந்திய மொழியில் வேர் சொல்லே இல்லைனு சொன்னதும் தேடிப்பார்த்தேன், அப்புறம் மீண்டும் வந்து சொல்ல மறந்துட்டேன்,
இப்ப சொல்லிடலாம்,
இந்து என்பது சிந்து என்பதில் இருந்து மருவிய சொல், சிந்து என்றால் சமஸ்கிருதத்தில் "நதி" எனப்பொருளாம், ஆதிகாலத்தில் நதிக்கு என்னப்பெயர் வைக்க நதினே வைப்போம்னு வச்சுட்டாங்க :-))
சிந்து என்பதை இரானியர்கள் தான் ஹிந்து என உச்சரித்து அழைத்துள்ளார்கள்.எனவே அந்நிலப்பரப்புக்கு "ஹிந்துஸ்தான்" எனப்பெயரிட்டார்கள்.
# ஆவணப்பூர்வமாக இந்தியா என்ற சொல்லைப்பயன்படுத்தியது போர்ச்சுகீசியர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தான் முதலில் இந்தியாவிற்கு வருகை தந்தது, மேலும் 1602 இல் The Dutch East India Company (Dutch: Vereenigde Oost-Indische Compagnie, VOC, "United East India Company") என ஒன்றை நெதர்லாந்தில் பதிவு செய்து ,அரசரின் உத்தரவுடன் கவர்னரையும் நியமித்து இருக்கிறார்கள்.
அதுக்கு பிறகு தான் வெள்ளைக்காரர்களும் "இந்தியா" எனப்பயன்ப்படுத்த ஆரம்பிச்சு இருக்காங்க.
# "இந்து" என்பதை மதம் என்ற பயன்ப்பாட்டில் "இந்துத்வா" என அறியப்படும் ஆர்.எஸ்.எஸ், போன்ற குழுவினரே பயன்ப்படுத்துவதில்லை, அவர்களோட தளங்களுக்கு போனால் " ஏன்சியன்ட் வேதிக் கல்ச்சர்" வேதிக் லிட்டரேச்சர், வேதிக் லைஃப்" என எல்லாவற்றிலும் வேதமா இருக்கும், அவர்கள் எல்லாம் தெளீவாக வேத மதத்தினை பின்ப்பற்றுபவர்களாம் :-))
வைதீகர் அல்லது சனாதனிகள் மதம் என்பது தான் அவர்களோட மதத்தின் பெயர் மற்றபடி "இந்து" என்பது பொது குறியீடு.
மேலும் அவங்க கணக்குப்படி , இந்தியா என்றப்பேரே ஒப்புதல் இல்லை, பாரத் தான். விஷ்ணுபுராணத்தில் "பாரத்வர்ஷா" என அழைக்கப்படுதாம், மேலும் மகாபாரதத்திலும் அப்படியே.
அப்புறம் இந்திய அரசியல் நிர்ணயசட்டத்திலும் அதிகாரப்பூர்வமா "பாரத்" என்று தான் அழைக்கப்படுது "பாரத் கன்ராஜ்யா"-Republic of India
# சீக்கியர்களும், பவுத்தர்களூமே,இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக "இந்து சீக்கியர், இந்து பவுத்தர் என்று தான் அழைக்கப்படுறாங்க. இந்த இடத்தில் இந்து என்பது "இந்தியாவை சேர்ந்த" எனக்குறிக்க.
# திராவிட என்ற சொல் தெற்கை குறிக்கும் சமஸ்கிருத சொல் நீண்ட நாட்களாக உள்ளதே, ராபர்ட் கால்ட் வெல் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிக்குடும்பம் என அழைத்த பின்னரே "திராவிட" என்ற சொல்லுக்கு தென்னிந்தியர்கள் என்ற அழுத்தம் கூடியது.
தேசிய கீதத்தில் ,
"Punjab-Sindhu-Gujarata-Maratha Dravida-Utkala-Banga"
என திராவிட என்பதை தெற்கு நிலப்பகுதி என குறிக்கவே பயன்ப்பட்டுள்ளது, திராவிட என்பதற்கும் வடமொழி வேர் தான், இந்து என்பதற்கும் வட மொழி வேர்தான்.
//ஆசிரியரையே தெரியுமா ? //
அய்யோ.. அம்புட்டு பெரிய ஆளா நான். மதுரையில் நடந்த ‘பசுமை நடை’க்கு வந்திருந்தவரைப் பார்த்து புத்தகம் வாங்கினேன்.அம்புட்டு தான்!
//அவர் எழுதின நாட்டார் வழக்குகள்,தெய்வங்கள் புத்தகம் மட்டும் தான் படிச்ச நியாபகம், //
எப்டிப்பா... இம்புட்டு வாசிக்கிறீங்க. நல்லது .. நடக்கட்டும்.
விளக்கங்களுக்கு நன்றி.
இன்னொரு ஐயம். ஏன் நமக்கும் இந்தியன் அப்டின்னு பேரு..சிவப்பிந்தியர்களுக்கும் அந்தப் பேரு? ஏன்? எப்படி?
Post a Comment