Sunday, July 13, 2014

775. FIFA 14 - முக்காலிறுதி - ப்ரேசில் ஜாதக பலன்கள்







*

ப்ரேசில்   0  -  3  நெதர்லாந்து


நிறைய எதிர்பார்ப்புகள். வழக்கமான ஆதரவு. இவை எல்லாம் சேர்ந்து ப்ரேசிலிடமிருந்து என்னென்னவோ நடக்கும் என்ற ஆசையில் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக லீக் சுற்றுகளில் வெற்றி பெற்றுத் தொலைந்தது; தப்பிப் பிழைத்தது.

ஆனால் அரையிறுதியிலும், ‘முக்காலிறுதி (!)’யிலும் எந்த அணியும் இப்போட்டியில் தோற்காத அளவிற்குத் தோற்றது பார்த்ததும் மனசு ரொம்ப உடைஞ்சி போச்சு. அதுவும் இந்த முக்காலிறுதிப் போட்டியில் ஒரு தடவை கார்னர் பகுதியிலிருந்து ஒரு ப்ரேசில் வீரர் கோல் போஸ்ட்டுகளை ஒட்டி ஒரு பந்தை அடித்தார். அப்பகுதியில் மூன்று ப்ரேசில் வீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் பாய்ந்து தலையால் தட்டி கோலுக்குள் அனுப்ப முயன்றார்கள். மூன்று பேர் தட்டியும் பந்து அவர்கள் தலையில் படாமல் தப்பித்துச் சென்றது. என்னடா ... அநியாயம். இது போன்று எளிதாகச் செல்லக்கூடிய பந்து ஏன் இப்படித் தப்பிச் சென்றது?

அடுத்து, ஆஸ்கர் பந்தோடு நெதர்லாந்து கவல் பகுதிக்குள் வந்து விட்டார்; கவலுக்குப் பக்கத்தில் உள்ள வெள்ளைக் கோட்டிற்கருகே நெத்ர்லாந்து வீரர் தப்பாட்டம் ஆடினார். நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார். ஆஸ்கர் பெனல்டி கேட்டார். நடுவர் கொடுக்கவில்லை. பொதுவாக ஏரியாவுக்குள் தப்பாட்டம் என்றால் பெனல்டி உண்டு, அதுவும் கிடைக்கவில்லை.

எல்லாத்தையும் மண்டைக்குள் போட்டுக் குழப்பிக் கொண்டேன். இது ஏன் ... ஏனிப்படி நடந்து என்று யோசித்த போது “எல்லாம் கிரகங்களின் பலன் தான் இது” என்று தோன்றியது. அதைப் பற்றி யோசித்த போது கீழ்க்கண்ட ராசி பலன்கள், ஜாதக பலன்கள் கிடைத்தன.

உங்களோடு அதைப் பகிர்ந்து கொள்கிறேன் ......


*

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

இந்த தர்மத்தை மனதில் கொள்ள வேண்டும்.


ப்ரேசில்:

ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதியும் லக்கினமும் கெட்டிருந்தால், அவைகள் பயன்படாது. சொந்த மண்ணிலே விளையாடினாலும் இதே கதிதான். இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாது என்பதையும்  மனதில் வையுங்கள்.

நீசமான செவ்வாய் உச்சமான குருவோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளான். எட்டாம் அதிபதிக்கு மரண யோகம் தான்.. ப்ரேசிலின் ஜாதகப் பயனால்  சொந்த மண்ணிலேயே மண்ணில் வீழ்த்தப்பட்டது.


நெய்மர்:

ஏழாம் வீட்டுக்காரன் குரு உச்சமாக இருக்கிறான். அத்துடன் தன் முதுகெலும்பைப் பார்க்கிறான். அதனால்  ஜாதகனுக்குத் அங்கே அடி .. வலி ….
மேலும். லக்கினாதிபதியும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.அதுபோல களத்திரகாரனும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.ஆகவே ஆட்டம் ஆடி விட்டது.
கோல் போடுவதற்கு ஒன்பதாம் வீட்டுக்காரான் முக்கியம். இங்கே அவன் 111ல் இருக்கிறான். ஆகவே வாங்குவதெல்லாம் 7 கோலும், 3 கோலுமாக இருக்கும் என்பது ஜன்ம விதி..


தியாகோ:

ஏழாம் அதிபதி குருவை, எட்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் கட்டிப்போட்டிருக்கிறான். லக்கினாதிபதியை 12ஆம் வீட்டுக்காரன் சூரியன் கட்டிப்போட்டிருக்கிறான். ஆறாம் வீட்டுக்காரன் லக்கினத்தையே செக்கில் வைத்திருக்கிறான். ஆக இந்த 3 அமைப்புக்களுமே மோசமானது. ஆகவே ஜாதகருக்கு கோல் பாத்தியதை இல்லை.



சீசர்:



ஜாதகருக்கு 27வ யது முதல் 33 வயதுவரை ராகு திசை. எட்டாம் இடத்து ராகுவால் அந்த திசை நன்மையானதாக இருக்கவில்லை. இரண்டு பெனல்டி கோலைத் த்டுத்திருந்தாலும் அதன் பின் வரிசை கட்டி கவல் வழியாகப் பந்தை விட்டுக் கொண்டே இருப்பார் என்பது ஜாதக லட்சணம்.\


மார்செலோ:

இவர் முதல் பந்தயத்தில் தங்கள் அணிக்கே பிரத்தியட்சமாக முதல் கோல் போட்டு நைவேத்தியத்தை ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகுவந்த குரு திசை, ஜாதகருக்கு அவருடைய சுய
தொழிலில் கொஞ்சம் நன்மைகளைச் செய்தது. ஜாதகரின் நிலமையை அணியில் ஸ்திரப்படுத்தியது. குரு பகவான்உச்சம் பெற்றிருப்பதோடு, லாபத்தில் அமர்ந்திருப்பதையும் கவனியுங்கள்.


ஸ்கோலாரி:

கன்னி லக்கினக்காரர். லக்கினாதிபதி புதன் 12ல். விரையம் ஏறி உள்ளார். ஆகவே ஜாதகரின் அணி அவருக்குப் பயன்படாது.

அனுப்பானடி தராசு என்று மதுரையில் சொல்வார்கள்; இந்தத் தராசில் ஒரு பக்கம் அரைக்கிலோ படியை வைத்து விட்டு அடுத்த பக்கம் இரண்டு கிலோ வைத்தாலும் சமமாகவே காண்பிக்கும்.. 

ஸ்கோலாரியின் பயிற்சி இப்படி ஒரு அனுப்பானடி தராசு மாறியது அவரது பூர்வ ஜென்ம பயன்!



ப்ரேசில் அணி:

பொதுவாக இந்த அணிக்கு லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் சூரியன். மறுபக்கம் கேது. அது ஜாதகருக்கு, லக்கினாதிபதி 12ல் இல்லாமல் இருந்தாலும் நன்மை செய்யக்கூடிய அமைப்பு அல்ல!

*******



ராபனும் பெர்சியும்:

சூரியனும் புதனும் சேர்ந்துள்ளதால் ஜாதகர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கோல் சம்பந்தப்பட்ட செயல்களைச்  செய்து  கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அந்த வீட்டுக்காரன் 12ல் மறைந்தாலும் (பெர்ஸி விளையாடாவிட்டாலும், அவர் வெளியே அமர்ந்த காரணத்திற்காக) சந்திரன் அவருக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.

 *

இப்படிப்பட்ட ஜாதகப் பலன்கள் உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கின.

அடுத்து, அர்ஜென்டினா  -  ஜெர்மனி அணிகளில் எது ஜெயிக்கும் என்று அவர்களது ஜாதகப் பலனகளைப் பார்த்து விட்டு, நாளை காலையில் தீர்மானமாகச் சொல்லி விடுகிறேன். 

சரியா ....?




4 comments:

வேகநரி said...

என்னங்க உங்க விருப்பபமானவங்களுக்கு ஜாதகப் பலன்கள் சரியில்ல போல இருக்கே.

G.M Balasubramaniam said...

இந்தராசி பலன்கள் எல்லாம் யார் கணித்தது.?

வேகநரி said...

ஜெர்மனியிடம் தங்களது தோல்வியையடுத்து அர்ஜென்டினாவில் கடைகள் மீது அர்ஜென்டினர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர்.சில கடைகள் சூறையாடபட்டன. 15 பொலிசார் காயம் அடைந்துள்ளனர்.
இதே அர்ஜென்டினாவிடம் 1 -0 தோல்வியடைந்தது சுவிச்லாந்து மக்கள் தங்க நாட்டிலே எப்படி நடந்து கொண்டனர்? ஏதாவது கரவரங்கள் நடந்தனவா?
சுவிச்லாந்து மக்கள்,ஜெர்மனி மக்கள் இந்தியர்களின் வழிகாட்டிகள்.

தருமி said...

//இந்தராசி பலன்கள் எல்லாம் யார் கணித்தது.?//

http://ananth-classroom.blogspot.in/2010/08/blog-post_13.html

Post a Comment