Thursday, September 04, 2014

787. தருமி பக்கம் (22) -- ஒண்ணாங் க்ளாஸ்
*

ம் .. ம்ம்...  எத்தனை வருஷம் ஆச்சு? 65 வருஷம் ஆயிரிச்சி -- நான் ஒண்ணாங் க்ளாஸ் சேர்ந்து. ஆனா எப்படி எல்லாமும் இப்படி ஞாபகத்திலே நிக்குது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கு?! புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி. மதுரையிலேயே பெரிய கோவில். உள்ளே ஆரம்பப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி. ஹாஸ்டல், போர்டிங்க், ஆர்பனேஜ், fahters’ house என்று சொல்லப்படும் சாமியார்கள் வசிக்கும் பெரிய கட்டிடம், மாட்டுப் பண்ணை, பெரிய விளையாட்டுத் தளம்..... இப்படி என்னென்னவோ இருந்தது ... இருக்கிறது அந்த கோவில் காம்பவுண்டுக்குள்.

ஊர் சுற்றிய பிறகுதான் தெரிந்தது ... இதே மாதிரி அமைப்பில் தான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி வளாகமும், திருச்சி ஜோசப் கல்லூரி வளாகமும், சென்னை லொயோலா கல்லூரி வளாகமும் இருக்கின்றன. அங்கே கல்லூரிகள்... மதுரையில் மட்டும் பள்ளிக்கூடங்கள் மட்டும். ஏன் இங்கு முதலிலேயே ஒரு கல்லூரியை ஆரம்பிக்காமல் விட்டு விட்டார்களோ?!  அதிலும் fathers’ house என்று சொல்வார்களே... நான்கு இடங்களிலும் அச்சு அசலாக அப்படியே இருக்கும். வித்தியாசமே இருக்காது. ஆனாலும் .. என்னதான் சொல்லுங்கள் ... நான்கு கோவில்களிலும் எங்க புனித மரியன்னை கோவில் தான் அழகு .. பெரியது... மிகவும் கம்பீரமானது. அதுவும் ஒரு பெரிய தெருவிற்கு. தூரத்திலிருந்து பார்த்தாலே மிகப் பெரியதாக, அழகாக, கம்பீரமாக நிற்கும்.


ஐந்து வயதில் இந்த கோவில் - ப:ள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன். முதுகலை முதலாண்டு முடிவு வரை வாழ்க்கையே இந்த காம்பவுண்டுக்குள் தான் அதிகமாக இருந்தது. அதன் பின்னும் தொடர்பு விடாமலேயே இருந்தது. அந்தத்தொடர்பை விடாமல் இருக்க மூத்த பேரனின் பெயர் சூட்டும் விழாவைக் கூட இந்த காம்பவுண்டிலேயே வைத்தேன்.


ஓ!  ஒண்ணாங் க்ளாஸ் சேர்ந்ததைச் சொல்ல வந்தவன் எங்கெங்கோ போய் விட்டேன். இப்போது அந்த ஒண்ணாங் க்ளாஸ் இருந்த இடம் நினைவில் மட்டும் இருக்கிறது. அந்த ஒற்றைக் கட்டிடம் இப்போது இல்லை. மாதா கோவிலிற்குப் பின்புறத்தில், கோவிலுக்கும் ஆரம்பப் பள்ளிக்கும் நடுவில் இருந்தது அந்த ஒற்றைக் கட்டிடம். கொஞ்சம் வினோதனமான கட்டிடம் தான். தரையிலிருந்து உயரத்தில் இருந்தது கட்டிடம். பத்து படிக்கு மேல் ஏறிச் செல்ல வேண்டும். கிழக்குப் பக்கம் உயரமாக, அகலமான படிக்கட்டுகள். கைப்பிடிச் சுவரோடு இருக்கும்.இதே ;போல் அகலம் குறைவான படிக்கட்டுகள் வடக்குப் பக்கம் இருக்கும். வடக்கு பக்க படிக்கட்டுகளில் ஏறினால் நீளமான, அகலம் குறைந்த ஒரு அறை இருந்தது.  என் உயர் பள்ளி, கல்லூரி நாட்களில் இந்த அறையில் கத்தோலிக்க இளைஞர் மன்றம் இருந்தது. அதில் பல ஆண்டுகள்  ஐக்கியமாயிருந்த காலமும் உண்டு.

ஐந்து வயதில் முதன்முறையாக என் அப்பாவோடு அந்தக் கிழக்கு வாசலில் ஏறி என் ஒண்ணாங் க்ளாஸிற்குள் நுழைந்தேன். அப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர். அதனால் அங்கு அப்பாவை எல்லோருக்கும் நன்கு தெரியும். அதோடு என் முதல் வகுப்பு ஆசிரியர் திரு மாணிக்கம் என் அப்பாவிற்குத் தனிப்பட்ட முறையிலும் தெரியுமாம். மாணிக்கம் சார் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். அழகாக இருப்பார். அப்பாவோடு உள்ளே நுழைந்தேன். அப்பாவை சார் வரவேற்றார். என்னை ஆசிரியரிடம் அப்பா ஒப்படைத்தார். சார் என்னைப் பார்த்து எங்கே உட்கார வேண்டும் என்று கேட்டார். வகுப்பை ஒரு சர்வே எடுத்தேன். சின்னச் சின்ன பெஞ்சுகள் போட்டிருந்தார்கள். ஆனால் இரு வரிசைகளில் முதல் இரு பெஞ்ச்கள் மட்டும் சாய்மான பெஞ்சுகள். மற்றவை எல்லாம் மொட்டை பெஞ்சுகள். நான் சாய்மான பெஞ்சைக் காட்டினேன். பாவம்   . அதில் உட்கார்ந்திருந்த ஒரு பையனை கடைசி பெஞ்சுக்குப் போகச் சொல்லி, அந்த இடத்தில் என்னை உட்கார வைத்தார். பள்ளியின் முதல் நாளே இப்படி ஒரு ‘அசைவ நாளாகப்’ போய் விட்டது. பாவம் .. ஒரு நல்ல மாணவனை இடம் பெயர்த்து நான் அநியாயமாக முதல் வரிசைக்குப் போய் விட்டேன்.

ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பு மாணிக்கம் சாரையும், ஐந்தாம் வகுப்பு யாகப்பன் சாரையும் எப்போதும் மறந்ததில்லை. கல்லூரி படிக்கும் போதும் அவர்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம் பயங்கர மரியாதையோடு பேசுவேன். அவர்களும் எப்போதும் என்னோடு அன்பாகப் பேசுவார்கள்.
 *

5 comments:

G.M Balasubramaniam said...

ஒரே வளாகத்தில் பல ஆண்டுகள் படித்தது நினைவுகளை எளிதாக்குகிறதோ.?

விசு said...

அருமையான மலரும் நினைவுகள் பதிவு. நன்றி. இதனை வாத்தியார்களை நினைவு வைத்து இருகின்றீர்கள். அட்டகாசம். தங்களோடு "ஒண்ணாங் க்ளாஸ்" படித்த மாணவர்கள் யாரோடவாது இன்னும் தொடர்பு இருக்கின்றதா? இருந்தால் அவரோடு ஒரு பேச்சு என்று ஒரு பதிவை போடுங்களேன். ருசியாக இருக்கும். நன்றி.

சார்லஸ் said...

தருமி சார்

உங்களின் ஒண்ணாங்கிளாஸ் ஞாபகங்கள் எனக்குள்ளும் அதே ஞாபகங்களைக் கிளறியது . ஏனென்றால் நானும் அங்குதான் படித்தேன் . ஆனால் மாணிக்கம் சாரிடம் படித்ததில்லை . மாணிக்கம் சார் தன் கடைசி வயதில் கடைசி மகளோடு திருநகரில் வசிக்கிறார் என்பது மட்டும் தெரியும் .

தருமி said...

மதுரைக்காரர் ... மரியன்னை பள்ளி மாணவர் ... மகிழ்ச்சி.
மதுரையில் எங்கே இருக்கிறீர்கள்?

மாணிக்கம் சாரின் தொலைபேசி எண், விலாசம் ஏதும் தெரியுமா?

'பசி’பரமசிவம் said...

தங்களின் பால்யப் பருவ அனுபவம் சுவையானது.

நானும் இப்படியான ‘ஃபிளாஸ் பேக்’களில் சுகம் காண்பதுண்டு.

Post a Comment