Wednesday, February 25, 2015

822. நீயா ... நானா ... ?










சென்ற வாரம் நீயா நானா? - 22.2.15 - நிகழ்ச்சி பார்த்த போது ஆச்சரியம் தாங்கவில்லை.  முன்பொரு முறை கல்லூரி மாணவர்களை ஒரு புறம் வைத்து ஒரு நிகழ்ச்சி வந்தது. கல்லூரி மாணவர்களா அவர்கள்? சரியான தர்த்திகள்! நம் இளைஞர்கள் இவ்வளவு மோசமா என்று எரிச்சலாக இருந்தது. ஆனால் இந்த வாரம் வந்த இளைஞர் படை ... அடடே என்று ஆச்சரியப்பட வைத்தார்கள். அழகான, வள்ளுவர் படம் போட்ட ஒரு டி-சர்ட் ... ஜீன்ஸ் என்று உடையில் கலக்கியிருந்தார்கள். ஆனால் அவர்களின் மனமெல்லாம் வள்ளுவர் பொங்கி வழிந்தார். கயல் என்று பரிசு வாங்கிய இளம்பெண் குறளையும் அதன் பொருளையும் விளக்கியது எனக்கு ஒரு குற்ற மனப்பான்மையை அளித்தது.. திருக்குறளில் இவ்வளவு ஆர்வமா? அதில் இவ்வளவு தெரிந்து வைத்துள்ளதே என்று ஆச்சரியப்பட்டு போனேன். பள்ளியில் இந்தி படித்த அந்த மீசைக்கார இளைஞனும் அதே அளவு ஆச்சரியத்தை அளித்தார்.நம் இளைஞர்கள் மத்தியில் திருவள்ளுவருக்கு இத்தனை பெரிய இடமா?

குறளில் எந்தக் கடவுளும் இல்லை; எந்த இடமும் சொல்லப்படவில்லை; எந்த மன்னனின் பெயரும் இல்லை; எந்தக் காலக் குறிப்பும் இல்லை. நிஜமான பொதுமறை! எல்லோருக்கும், எல்லா காலத்திற்கும், மனித இனத்திற்கும் பொதுவான நன்னூல். --- இப்படி என்னென்னவோ கருத்துப் பரிமாற்றங்கள் வந்தன. ஆச்சரியப்பட வைத்தன. இந்த நூலை எல்லோரும் - எல்லா தமிழரும் - வாசித்தேயாக வேண்டும் என்ற நினைவைத் தந்தன.

அறத்துப் பாலும், காமத்துப் பாலும் அவ்வளவு அழகாக பரிமாறிக் கொள்ளப்பட்டன. நட்பைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறாரா வள்ளுவர் என்று புதிதாகத் தெரிந்தது. அதையும் விட வள்ளுவரின் கவித்துவத்தின் பெருமை காமத்துப் பாலில் அவ்வளவு அழகாக இருந்தது. ஊடலும் கூடலும் வள்ளுவனின் கவித்துவத்தோடு மிக அழகாகப் பேசப்பட்டன. கட்டாயம் காமத்துப் பாலைப் படித்துப் பார்த்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பேருந்துகளில் குறள் உள்ளது; ஆனால் பலவற்றிற்குப் பொருள் தெரியவில்லை. உரையை சின்ன எழுத்துக்களில் கீழே கொடுத்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அரசுப் பேருந்துகளில் அமுல் படுத்தலாமே!

குறளை  இதுபோல் பொது இடங்களில் எழுதி வைத்துப் பெருமைப் படுத்தியதற்காக  கோபி திராவிடக் கட்சிகளுக்கு நன்றி சொன்னார். கட்சிகள் என்பதை விட கட்சி என்று சொல்லியிருந்தால் சரியென்று நினைக்கிறேன். திராவிடப் பெயர்கள் வைத்திருப்பதாலேயே எல்லா கட்சிகளும் திராவிடக் கட்சிகளா என்ன ... ?

நிகழ்ச்சி பார்க்கும் போது நம் இளைஞர்களை நினைத்துப் பெருமைப் பட்டேன். சரியான வழியில் தான் நாம் போய்க்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது.

நல்ல டி-சர்ட். அதை நிச்சயம் பிரபலப்படுத்த வேண்டும். எனக்கே ஒரு டி-சர்ட் வாங்கணும்னு கொள்ளை ஆசை.

சே குவாரா படம் போட்டுக் கொண்டு புரட்சி என்றால் என்னவென்றே தெரியாத நாம், ஐயனின் படம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு முதலில் காமத்துப் பாலையாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

பொது இடங்களில் உள்ள குறள்களில் ஏன் காமத்துப் பாலை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  குறளைப் படிக்க அவை பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்.


*******


ஐயனைப் பற்றி எழுதியதும் தமிழ் பற்றி இன்னொரு சோக நினைப்பும் வந்தது.

ஒரு காலத்தில் வழக்காடு மன்றம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தமிழின் அருமையைக் கேட்போருக்குத் தந்தன. இலக்கியங்கள், காவியங்களை ஒட்டிய தலைப்புகள். ராமனின் தம்பி இலக்குவன் - ராவணனின் தம்பி விபீடணன் -- இருவரில் யார் சிறந்தவர்கள் போன்ற தலைப்புகள்.  இதில் எல்லோரும் பேசிவிட முடியாது. தமிழ் கற்றறிந்த பெரியவர்கள் மட்டுமே பேச முடியும். கேட்போருக்கும் தமிழ் மீது ஆர்வமும் வேண்டும். பல இலக்கிய உயர்வுகளை, ஓசை நயங்களை, பொருளழகுகளை, சொல்லழகுகளை  அவைகளில் கேட்க முடியும்; ரசிக்க முடியும். குன்றக்குடி அடிகளாரும்,  பாப்பையாவும் இன்னும் பல தமிழ்ப் பெருமகனார்களும் பேசுவார்கள். இதில் இப்போது  வழக்கொழிந்து போன வழக்காடு மன்றத்தில் ‘சூடு” பறக்கும். கேட்கவும் இனிக்கும்.

கற்றோரை கற்றோரே காமுறுவர். அந்தச் சூழல் இப்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. அன்று போன்று இன்றும் பேசினால் எடுபடாது என்று பட்டிமன்றப் பேச்சாளர்களே கூறுவதுண்டு. ஆனால் வள்ளுவன் பற்றிய நீயா .. நானா? நிகழ்வு அதனைப் பொய்யாக்கி விட்டது. கல்லாதாரையும் கற்றோர் காமுற வைக்கலாம்.

திரைப்படப் பாடல்களில் மேலோங்கி நிற்பது பழைய பாடல்களா, புதிய பாடல்களா என்று ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ஆரம்பித்த நாளே பட்டிமன்றங்களின் திவச நாளாகிப் போனது. லியோனி நன்றாகப் பாடுவார். இந்தப் பட்டிமன்றங்களின் “புதுப் புரட்சிக்கு’ அவர் முன்னோடியானார். நன்றாக இலக்கியத் தரத்தோடு பேசிய பெருந்தகைகளும் இவர் பின்னே - வாலைச் சுருட்டி என்று சொல்வார்கள்; அதே போல் பெருந்தகைகள் தங்கள் தமிழார்வத்தைச் சுருட்டிக் கொண்டு - சென்று விட்டார்கள். அதன் நீட்சியாக வாழ்க்கையோடு ஒட்டிய தலைப்பு என்று பல குப்பைகள் பட்டிமன்றத் தலைப்புகளாகி விட்டன.

டிவிக்கு ஒரு விழா வந்தால் போதும்;  உடனே போடு ஒரு பட்டிமன்றம், முன்பு வழக்காடு மன்றம், பட்டி மன்றம் ஒரு இலக்கிய விருந்தாக இருந்தது. இப்போ பட்டிமன்றம்னா ஏதாவது ஒரு தலைப்பு. நம்மூரு பெருசா; அடுத்த நாடு பெருசா?  மொதப்பிள்ளை ஆணா பெத்துக்கிறது நல்லதா? பெண்ணா பெத்துக்கிறது நல்லதா?  பிள்ளைக கெட்டுப் போறது அப்பனாலேயா அல்லது வாத்தியாராலேயே ..... இப்படியே போகும். எல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான விஷயம். இதுல நடுவர் சொல்றது தான் தீர்ப்பு. அதைத் தான் தமிழக மக்கள் அப்படியே ஏத்துக்குப் போறாங்க. அட இன்னொன்ண்ணு உட்டுட்டேனே ... டிவி சீரியல்கள் பற்றி சில தலைப்புகள் ........... இப்படியே நல்ல நாளுக எல்லாம் டிவியில் சிரிக்குது.

பேச வர்ரவங்களும் நாலு நமத்துப் போன ஜோக். ரெடி பண்ணி வச்சிட்டு வருவாங்க..... நமக்கும் அது பழகிருதா... அந்த ஆளு நகைச்சுவையா பேசுவாருன்னு ஒரு நினப்பு.. ... அவர் வாயைத் திறந்ததும் அவர் சொன்னதுக்கெல்லாம் சிரிக்க வேண்டியது... டிவியில உள்ள எடிட்டிங்கை மறந்து, டிவியில் சிரிக்கிற மூஞ்சிகளைக் காண்பிக்கும் போது மக்களும் சேர்ந்து சிரிச்சிர்ராங்க .. டிவிக்கு நல்லா காசு பார்க்கிற  எளிதான வழி.

எங்க நாட்டுல தான் இந்தக் கதின்னா எங்க போனாலும் இதே தலைப்புகளை வச்சி பட்டிமன்றம் நடத்துறாங்க. தமிழ்நாடு பத்தாதுன்னு எங்கேயும் - அமெரிக்காவா இருந்தாலும், அரேபியாவாக இருந்தாலும் இந்த விளையாட்டு ... தமிழை நல்லா வாழ விடலாமா...? இப்படித்தான்  “கொன்னு .. கொன்னு” ... விளையாடணும்.

ஆனா சும்மா சொல்லப்படாது. இலக்கிய பட்டிமன்றங்கள் தெரு முக்குகளிலும்.கிராமியச் சூழலிலும் நடந்து வந்தன  இப்போ ஹை டெக்காக மாறிப் போச்சு.. மோடி மாதிரி கண்ணுக்குத் தெரியாத லேசர் லைட் போட்டு, ஹிண்ட்ஸ் வச்சிக்கிட்டு பெரிய மேடைகளில் கச்சேரி தொடர்கிறது. வந்து போறவங்களுக்கு டாலரும், தங்கமும் சேருது. எக்கானமிக் க்ளாஸ்ல வந்துட்டு ... பிசினஸ் க்ளாஸ்ல ப்ளேன் டிக்கட் காசு வாங்கிக்கிறாங்களாம் ... அயல்நாட்டிலிருக்கும் தமிழ் “ரசிகர்களின் தமிழ்ப்பசி”க்கு இவர்கள் இப்போது தீனி போடுகிறார்கள். அங்கிருக்கும்  நம் மக்களுக்கு கொடூரமான தமிழ்ப்பசி தான்!!!

***********








 *******

10 comments:

Geetha said...

நானும் பார்த்தேன் நீயா நானாவை பெருமையாக இருந்தது..

Avargal Unmaigal said...

விஜய் டிவியில் நான் பார்த்து சந்தோஷப்பட்ட பெருமைபட்ட நிகழ்ச்சி இந்த திருக்குறள் பற்றிய நீனா நானா ஷோதான். சிறுவயதில் படித்து மறந்ததை மீண்டும் என்னை படிக்க தூண்டியது இந்த ஷோ. திருக்குறளை நான் இப்போது ஆன்லைனில் படித்து வருகிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த மீசைக்கார இளைஞனுக்கு பாராட்டுக்கள்... என்னவொரு ஆர்வம்...! குறள் தெரிய வேண்டிய அவசியமில்லை... ஆனால் அதன் பொருள் போதும்... தன்னை கவரும் + மாற்றும்... சிறிய பரிசு கூட இல்லையா..? அடப் போங்கையா...

திண்டுக்கல் தனபாலன் said...

/// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்... /// ஹா... ஹா... பெரிய காமெடி ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெருமைப்படவேண்டிய நிகழ்வு. அதனைத் தாங்கள் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. நன்றி.

தருமி said...

///// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்... /// ஹா... ஹா... பெரிய காமெடி ஐயா... //

அடடா டி.டி ...! காமெடியாகச் சொல்லவில்லை. மிகவும் சீரியஸாகச் சொல்கிறேன். பலரைக் கவர வித்தியாசமான தலைப்புகளில் நாம் பதிவுகள் எழுதுவதில்லையா ...? அது போல் குறள் பக்கம் கவர்ந்திழுக்க காமத்துப் பால் நன்கு பயன்படும். அது தவறுமில்லை. என்னைக் கவர்ந்திருக்கிறது.

சார்லஸ் said...

சார்

பள்ளிப் பாடங்களில் காமத்துப்பாலை வைக்கவுமில்லை; கற்றுத் தரவுமில்லை . காமத்துப் பால் என்றால் என்ன என்று கேட்டதற்கே ஆசிரியரிடம் அடி வாங்கியிருக்கிறேன் . இதுவரை படித்ததுமில்லை. கெட்ட வார்த்தையாக மாற்றிவிட்டதின் விளைவே அது . தற்போது வாசித்துப் பார்த்தால் அசிங்கமாக ஓரிடத்தில் கூட வள்ளுவர் எந்த வார்த்தையையும் பயன்படுத்தவேயில்லை என்று தெரிகிறது. இவ்வளவு காலம் வீணாகிப் போனது.

தருமி said...

//இவ்வளவு காலம் வீணாகிப் போனது. //

இதனால் தான் சொன்னேன்:
பொது இடங்களில் உள்ள குறள்களில் ஏன் காமத்துப் பாலை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறளைப் படிக்க அவை பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்.

தமிழன்பு said...

இந்த நிகழ்ச்சி தமிழுக்கு இன்றைய இளைஞர்களின் மத்தியில் கிடைத்த வெற்றி இந்தி இந்தி என்று சொல்லிக்கொண்டுத் திரிவோருக்கு தமிழ் மீதும் குறள் மீதும் இத்தனை இளைஞர்கள் பற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது விளங்கட்டும்.
நீங்கள் சொல்வதை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவரே தன்னுடைய அணுகுமுறை முதலில் காமத்துப்பால்,பிறகு அதற்குத்தேவையான பொருளை ஈட்டுவது அதனை அறவழியில் செலவிடுவது என்றூ தலைகீழாகப் பார்ப்பதாகக் கூறினார்.
அருமையாக தங்களுக்கே உரிய பாணியில் பதிவிட்டிருக்கின்றீர்கள் ஐயா!

தருமி said...

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் சொன்னது மிகச் சரி, தம்பி.

உ;ன்னைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும் போது பெருத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்த்துகள்.

Post a Comment