Monday, February 22, 2016

889. ஒரு பெரும் நடிகனின் கடும் தோல்விச் சோகம்




*

அறுபது வருஷத்துக்கு முந்தின என் கதையைப் பற்றி  பத்து வருஷத்துக்கு முந்தி எழுதியிருந்தேன். இப்போ இந்த வருஷம் அதே மாதிரி இன்னொரு ஏமாற்றம்.  ஒரே சோகம்…..  அந்த சோகத்தில முந்தி எழுதினதை எடுத்து வாசிச்சேன். அட .. பரவாயில்லையேன்னு அதுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்ததும் மனசில தோணுச்சி

சின்ன வயசில போட்ட ஒரு நாடகத்தில நடிச்சி, நல்ல பேரு வாங்கி …. அதப்பத்தியெல்லாம் எழுதிட்டு கடைசியா கொஞ்சம் விளையாட்டா //நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா?// அப்டின்னு என் முதல் star weekல் எழுதியிருந்தேன். அப்போவெல்லாம் ப்ளாக்கர்கள் எல்லாம் ரொம்பசொந்தமா .. நெருக்கமாஇருப்பாங்கல்லா. அது மாதிரி இருந்த நண்பர்கள் நிறைய பேர் என்வருத்தம்போக நிறைய ஆறுதல் சொன்னாங்க

சில உதாரணங்கள்...

//மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ் பண்ணவன் நான்// அப்டின்னு வெளிகண்ட நாதர் அமெரிக்காவிலிருந்து தன் சோகம் சொன்னார்
//இப்பகூட நாளாகலை தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம். அமிதாப் இன்னும் நடிக்கலையா என்ன? // அப்டின்னு பத்மா அர்விந்த் சொன்னாங்க.
அடுத்து, மதுமிதா, //பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி. // என்று சொன்னாங்க.
அடுத்து ramachandran usha (November 6th, 2005) ஒரு ஐடியாவே கொடுத்தாங்க ..//தருமி மனம்தளர வேண்டாம். விளையாட்டுக்கு சொல்லவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பிரபல விளம்பர நிறுவனங்கள் எல்லா வயது ஆட்களையும் மாடலாய் எடுக்கிறார்களாம். நீங்கள் முயற்சிக்கலாம். //


கட்டக் கடைசியில உஷா கொடுத்த ஐடியா க்ளிக் ஆனது மாதிரி ஒண்ணு இப்போ நடந்திச்சு.  பழைய மாணவ-நண்பன் – தான்யராஜ், பழைய விஸ்காம் மாணவன் - அவனிடமிருந்து ஒரு போன் வந்ததுசென்னையிலிருந்து பேசினான். சென்னைக்கு வருவீங்களாவர்ரதுன்னா எப்போ வருவீங்க? அப்டீன்னு கேட்டான். அவன் கேட்ட போது நான் இருந்ததே சென்னையில் தான். சார் உங்களைப் பார்க்கணுமேநான் சொல்ற இடத்துக்கு வர்ரீங்களான்னு கேட்டான். சரின்னேன். அடையாளம் கேட்டு டாக்ஸி அனுப்பினான். போன இடம் பெரிய இடமாகவும் இருந்ததுஎன்னன்னு கேட்டேன். நடிக்க வர்ரீங்களான்னு கேட்டான். அடபோப்பாதொப்பையும் அதுவுமா இருக்கேன் அப்டின்னேன். அதெல்லாம் பொருத்தமா இருக்கும் அப்டின்னான். என்ன ப்ரோஜக்ட் அப்டின்னும் சொன்னான்ஒரு சீரியல். தாத்தா வேடம். ஆனால் கம்பு ஊனாத கொஞ்சம் energetic தாத்தா அப்டின்னான். நம்மளும் வாழ்க்கையில் துணிஞ்சி நிக்கணும்லா. மூச்சை இழுத்துப் பிடிச்சிகிட்டு, நானும் துணிஞ்சி சரின்னு சொல்லிட்டேன். இன்னும் மூன்று நாட்கள் சென்னையில் இருக்கும் ஏற்பாட்டோடு போயிருந்தேன். வேண்டுமானால்  நீட்டித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.



,








அவன் என்னிடம் படித்து சில வருஷம் ஆகியிருந்தது. அவன் சொன்ன கதைக்கு எப்படி என்னை ஞாபகம் வச்சிக் கூப்பிட்டான் எனக் கேட்டேன். அங்கும் நம் ப்ளாக் தான் வேலை செய்திருக்கிறது. நமது "பழைய" ப்ளாக்கர் ஒருவர்தான் இந்த சீரியலுக்கு வசன கர்த்தா. பெயர் வரவனையான். (நிறைய அருமையாக எழுதிக் கொண்டிருந்த ஆளு .. அம்புட்டு நகைச் சுவை உண்டு. இப்போ  ப்ளாக் பக்கமே வருவதில்லை. சமூக ஊடகங்களில் மட்டும் எழுதுகிறார். ) அறுபது எழுபது வயசில ஒரு ஆளு வேணுமேன்னு அவங்க டீம் யோசிச்ச போது வரவனை என் பெயரைச் சொல்லியிருக்கிறார். (எம்புட்டு ஞாபக சக்தி!) தான்யா – அவன் தான் இயக்குனர் - சரின்னு என்னைக் கூப்பிட்டிருக்கிறான்

வாழ்க்கையில் ப்ளாக் நிறையவே உதவியிருக்கிறது!








அடுத்த நாள் ஷூட்டிங்  அப்டின்னான். காஸ்ட்யூம் என்னன்னு கேட்டேன். முதல் ஷெட்யூலில் வேஷ்டி, முழுக்கை பனியன் அப்டின்னான். பனியன் போடுற கெட்ட பழக்கமே கிடையாது. வேட்டி சுத்தமா கிடையாது. அட .. என்னிடம் தான் இல்லையென்றால் நம்ம மருமகன்களுக்கும் அந்தப் பழக்கம் கிடையாது. சொன்னேன். சரி வாங்க என்றான். அடுத்த நாள் அவனே புது காஸ்ட்யூம் ரெடி செய்து விடுவதாகச் சொன்னான். இரண்டாவது ஷெட்யூலுக்கு வழக்கமான உடை. டி-ஷர்ட் என்றான். அதுக்குப் பஞ்சமில்லை. காலையில் வீட்டுக்கு வந்து அழைத்துப் போகிறேன் என்றான்.





முதல் ஷெட்யூல் ஒரு வீட்டில். வேறு ஏதோ ஒரு சீரியலுக்காக வாடகைக்கு எடுத்த வீடு. புதிதாக இவர்களும் சில “props” (எப்பூடி…! நாங்களும் அவுக professional slang எல்லாம் use பண்றோம்ல…) சேர்த்துக்கிட்டாங்க. சுவத்தில இருக்கும் சின்ன படம் கூட வாடகைக்கு வருகிறது. காமிரா, ஸ்டாண்ட் எல்லாம் ஒரு பக்கம் இருந்தும், லைட் வகையறாக்கள் இன்னொரு இடத்திலிருந்தும் வரும் போலும்.  என் பார்வைக்கு எல்லாமும் புதிதாக இருந்தது. ! இப்படித்தானோ என்று பல விஷயங்கள் தோன்றின. அதற்குப் பிறகு இப்போவெல்லாம் சினிமா, சீரியல் பார்க்கும் போது படத்தை  இப்படித்தான் எடுத்திருப்பார்களோ என்று technical-ஆக  தோன்ற ஆரம்பித்து விட்டன. முன்பெல்லாம் இரண்டு பேர் பேசும் போது அதை ஒரே sequence என்பது போல் தோன்றும். இப்போதெல்லாம் எல்லாம் துண்டு துண்டாகத் தெரிகிறது. வெற்றுவெளியைக்கூட  எதிரில் வைத்து இன்னொருவரிடம் பேசுவது போல் நடிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அட …lip synch ஆகுதான்னு கூட மனசு பார்க்கச் சொல்லுது




நானும் என்பேத்தியும்  நடிக்கணும். அவர் ஒரு RJ.  ஏற்கெனவே நடித்திருப்பார் போலும். என்னைப் போல் அவர் காமிராவிற்குப்  ‘பயப்படவில்லை’.  அவர் வசனத்தை அவர் பேசும் போது நான் frameல் இல்லாவிட்டாலும் பயங்கரமாக சாதாரணமாக நம் வாழ்க்கையில் இருப்பது போல் அவர் பேசுவதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் நான் மட்டும் frameல் இருக்கும் போது அவர் என்னைப் பார்க்காமல் casualஆக ஏதாவது செய்து கொன்டு இருப்பார். எனக்கு அது புரிந்து விட்டாலும் அந்த atmos பிடிக்கவில்லை. அதனால் அவரிடம் நான் பேசும் போது என்னைப் பார்த்துக் கொண்டிருங்க என்று கேட்டுக் கொண்டேன். அதாவது எதிரில் இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பித்துக் கொண்டு நடிக்க வரவில்லை. அவரைப் பார்த்துக் கொண்டே பேச வேண்டிய கட்டாயம் எனக்கு








ரொம்ப டேக்குகள் வாங்கவில்லை. ஒரு வேளை trial run மாதிரி இருந்திருக்குமோன்னு நினச்சேன். இப்போது நான்கைந்து ஆட்கள் மட்டும் சுற்றி நின்றார்கள். கூட்டம் அதிகம் இல்லைமுதல் ஷெட்யூல் முடிந்தது. கொஞ்சம் தெளிச்சியானது மாதிரி எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. இதே ஷெட்யூலை மறுபடி எடுத்தால் இன்னும் பின்னி விடலாம் அப்டின்னு தோன்றியது. 




ஆனால் மதியம் இரண்டாம் ஷெட்யூல்இதில் நான் மட்டும் காமிராவிற்கு எதிரில்ஆனால் என்னைச் சுற்றி நிறைய ஆட்கள் – எல்லாம் ஒரு ambience வேண்டுமென்பதற்காகஒரு coffee shop situation. சுற்றி நிறைய பேர் இருந்தார்களா … கொஞ்சம் கை கால் உதறல்எப்படியோ ஒப்பேற்றினேன்இரண்டாம் ஷெட்யூல் முடிந்தது.  இதற்கு dubbing நாளைக்கு என்றார்கள்அது ரொம்ப கஷ்டம் என்று எனக்குள் ஒரு நினைப்பு




வீட்டிற்கு வந்து படுத்தால் ஒரே கனவு.





அட … போங்கய்யா… கனவுல தான பாதி வாழ்க்கை எப்பவுமே போகுது!







அடுத்த நாள் dubbing. சின்ன அறை. ஒன்றரை மேசை. அரை மேசையில் ஒரு கணினி. இன்னொரு நீள மேசையின் முடிவில் ஒரு மைக். மைக் முன்னால் உட்கார வைத்தார்கள். கணினி இயக்க ஒருவர். பேச்சு சொல்லிக் கொடுத்து monitor செய்ய இன்னொருவர். சும்மா சொல்லக் கூடாது. Copy & paste கண்டு பிடித்தவனுக்கு ஒரு சிலை வைக்கணும். அதை வச்சே மனுசங்க செம விளையாட்டு விளையாடிருவாங்க போலும். வாங்கமா என்பதில்மாவை மட்டும் வெட்டி விட்டால் வாங்க அப்டின்னு மட்டும் வந்திரும்ல .. அது மாதிரி நிறைய மேஜிக் பண்ண முடியுது






மைக் முன்னால் என்னை உட்காரவைத்து வசனம் சொல்லணும் – நம்ம சீனும் கண் முன்னால் ஓடும். Dubbing monitor சில இடங்களில் நடிப்பை விட வாய்ஸ் நல்லா கொடுக்குறீங்க அப்டின்னார். ஒரு வேளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க அப்படி சொல்லியிருப்பாரோன்னு நினச்சேன்.






இந்த dubbingல எனக்கு ஒரு சின்னப் பிரச்சனை. உட்கார்ந்து கொண்டு அந்த வசனங்களைப் பேசச் சொன்னார். ஏறக்குறைய எல்லாம் முடிந்த போது ஒரு சின்ன ஐடியா வந்தது. நின்று கொண்டு பேசியிருந்தால் இதை விட நன்றாக குரலில் emote பண்ண முடியும்னு தோன்றியது. அவரிடம் சொன்னேன். அடுத்த தடவை அப்படி செய்யலாம் என்றார் – அடுத்த தடவை என்பதே இல்லாமல் போய்விடும் என்பது தெரியாதவராக ….  L





 கொஞ்ச நாள் காத்திருக்கணும் என்றான் இயக்குனர். தலைவர் பார்த்து சரின்னு சொன்ன பின் தொடரலாம் என்றான். சில நாளில் செய்தி வந்தது. தலைவரும் ஓகே சொல்லிட்டாராம்

ஆனால் கொஞ்ச நாளில் இன்னொரு செய்தி; தொடரவில்லைன்னு செய்தி வந்தது. நம்ம ப்ளாக் நண்பர் வரவனையான் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டாராம். அதனாலோ என்னவோ project dropped!




பல கனவுகள் போல் இதுவும் ஒரு கனவு…..



ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. காமிராவிற்குப் பின்னாலேயே நிற்பது பழகிப் போன விஷயம். புதிதாக முன்னாலும் நின்று “நடித்து” ஒரு அனுபவம் பெற்றது ஒரு சின்ன மகிழ்ச்சி.

இப்படி காமிரா முன்னால் நின்னதை யாரிடமும் சொல்லவில்லை. மனசுக்குள் ஒரு பயம். முதலில் என் நடிப்புக்கு பாஸ் சரி சொல்லுவாரா …? அடுத்து, இந்த சீரியல் – தமிழ்நாட்டில் ஒரு புது முதல் முயற்சி என்றான் இயக்குனர் –தொடர்ந்து எடுக்க சரி சொல்வார்களா என்ற கேள்வியும் இருந்தது. இப்படிப் பல குழப்பங்கள். அதனால் வெளியே சொல்ல வேண்டாமென்று யாரிடமும் சொல்லவில்லை. வீட்டுக்கு மட்டும் தெரியும். இல்லையென்றானதும் செய்தியை குடும்பத்தில் ஒலிபரப்பியாகிற்று. ஆனாலும் பிறகு போட்டோக்களைப் பார்த்த்தும், சரி இதை இனி உலகத்திற்கே ஒளிபரப்பி விடுவோம் என நினைத்தேன். நண்பர்களிடம் கேட்டேன். எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதனால் தான் – ஒரு டயலாக் மாதிரி சொல்லிர்ரேன் – உங்கள் எல்லோரிடமும் என் வாழ்வின் ஓரு பெரும் சோகத்தையும், ஏமாற்றத்தையும் இப்போது உரித்து உங்கள் முன் கொட்டி விட்டேன் ..  L

சீரியலில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லி மிச்சமானது கொஞ்சம் போட்டோக்கள் மட்டும் தான். அவை கைக்கு வந்த பிறகு தான்  “இந்த உண்மையை உலகத்தின் முன் உடைத்து விடுவோம்” என்று தோன்றியது. கொட்டி விட்டேன்.


இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம். இந்த creativity மதுரக்காரங்க கிட்ட கொட்டி குவிஞ்சி கிடக்கோ… இந்த சீரியல் அனுபவத்தில் நான் சந்தித்த பலரும் மதுரைக்காரர்கள். இயக்குனர், கதாசிரியர், dubbing monitor, photographer என்று மட்டுமல்ல அதன் பின் இதன் தொடர்பாக நான் சந்தித்த முக்கிய நபர்களில் பலரும் எங்க ஊர்க்காரர்கள் தான். அந்த விதத்தில் மிக்க மகிழ்ச்சி.


*
பதினோரு வருஷத்திற்கு முன் என் நாடக அனுப்வத்தை எழுதிய போது அனுபவித்து நன்றாக எழுதியது போன்று ஒரு நினைப்பு. ஆனால் இந்த சீரியலைப் பற்றி எழுதணும்னு நினச்சி ரொம்ப நாளாச்சு. ‘mood’ வரவே மாட்டேன்னு சொல்லிரிச்சு. இப்போ எழுதினதை வாசிக்கும் போது எனக்கே ஒரே dryயாக இருப்பது போல் தோன்றுகிறது. ஏன் இப்படி ஆகிப் போச்சு?

 I know I should improve …but how? 

தெரியலையே!!!


*




17 comments:

சார்லஸ் said...

சார்

நடிப்பையும் ஒரு கை பார்த்துவிட்டு வந்து விட்டீர்கள். நல்ல அனுபவம்தான். சரி உங்கள் நடிப்பை யூடியுபில் பார்த்து விடலாம் என்று நான் கனவு கண்டு முடிப்பதற்குள் உங்களுக்கே அது கனவாக போனதை நினைத்து சற்று வருத்தம்தான். எவ்வளவோ பாத்துட்டீங்க. இதையும் பாத்துட்டீங்க. வாழ்த்துகள்.

Mahi_Granny said...

இதுல சோகமும் ஏமாற்றமும் எங்கிருந்து வரும். உங்க பக்கம் லாபமோ நஷ்டமோ இல்லையே. சந்தோசப்பட்டுக் கொள்ளலாம் .அனுபவக் கொள்முதலுக்குக்காக.

வல்லிசிம்ஹன் said...

வலைப்பக்கம் வருவதே விட்டுப் போய்விட்டது. இன்று அதிர்ஷ்ட நாள்.
தருமி சாரின் கனவைப் படிக்க வாய்ப்பு. இது நஷ்டமாகிப் போனது வருத்தமே.
உஷா சொன்னது போல் நீங்கள் மாடல் செய்யலாமே.

தருமி said...

Mahi_Granny,
//இதுல சோகமும் ஏமாற்றமும் எங்கிருந்து வரும்.//

கைக்கு கிடைத்தது வாய்க்குள் போக வேண்டாமா?!!

G.M Balasubramaniam said...

மேதாவிகள் எல்லாம் ஒரே மாதிரி போல. 1962-ல் பெங்களூரில் சில அமெச்சூர் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தது பற்றி வலையில் எழுதி இருந்தேன் அதில் ஒரு வசனத்தை ஒரு பதிவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு பால சந்தர் கதை வசனம் போல் இருக்கிறது என்று சொன்ன நினைவு, நானும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு மாதிரி இருந்திருந்தால் யார் கண்டது நானும் பாலசந்தரைப் போலவோ இன்னும் அதிகமாகவோ பெயர் பெற்றிருக்கலாம் என்று மறு மொழி எழுதின நினைவு. ஆனால் என்ன யாரும் என்னை நடிக்கக் கூப்பிடவில்லை.

தருமி said...

G.M Balasubramaniam,
//மேதாவிகள் எல்லாம் ஒரே மாதிரி போல//

அட... போங்க சார் ...!

ராமலக்ஷ்மி said...



இன்னொரு வாய்ப்பு வராமலா போய்விடும்!

தருமி said...

ராமலக்ஷ்மி,
உங்கள் வாயில் சர்க்கரை போடணும்.......... நன்னி!!!

விசு said...

ரொம்ப சந்தோசம். எப்படியாவது யாரிடமாவது பேசி எனக்கு ஒரு வில்லன் ரோல் வாங்கி தர முடியுமா?

Venmathi said...

sir, soooooo nice to read about your acting debut in serial...you have more students in cine field, soon many more chances would knock your door. all the best sir...

துளசி கோபால் said...

சூப்பர் அனுபவம்! எதையும் ஒரு முறை செஞ்சு பார்த்துடணுமாமே.... ஆச்சு டிவி சீரியல் ! அடுத்து என்னவோன்னு இனி இப்போ கனவு காணலாம்😀

சித்திரவீதிக்காரன் said...

இந்தப் பதிவு அடுத்து ஒரு வாய்ப்பை வழங்கும் என நினைக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...
This comment has been removed by a blog administrator.
Balakumar Vijayaraman said...

இப்ப எழுதுனதும் படிக்க சுவாரஸ்யமாத்தான் இருக்கு. சொல்ல முடியாது, அடுத்த வாய்ப்புக்கு இந்த பதிவு பயன்பட்டாலும் படும்... பெரிய ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டாஆஆஅர்ர்ர்ர்ர்ர் ஆகிட்டா எங்களைப் பார்த்து கை காட்டுங்க சார் !

தருமி said...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...
விடுங்க சார், நீங்க ப்ரொட்யூஸ் பண்ணுங்க. உங்களை மெய்ன் கேரக்டராப் போட்டு ஒரு குறும்படம் எடுத்துரலாம். :-)

D. Samuel Lawrence said...

எல்லாம் நன்மைக்கே- பார்வையாளர்களுக்கு. வேடிக்கை இருக்கட்டும். இப்போதைக்கு,தமிழகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.பரவாயில்லை நண்பரே, இன்னொரு வாய்ப்பு வரவில்லை என்றால் என்ன, வாய்ப்பை உருவாக்குங்கள்!அவ்வளவுதானே.எனது நண்பர்,ஒரு தலை சிறந்த நடிகர் என்று நான் சொல்லிப் பெருமைப்பட வேண்டாமா?

Unknown said...

sir, y don't u try for ads, u will perform better than many present day actors.

Post a Comment