Monday, October 10, 2016

909. ஆண்டவன் கட்டளை

* இந்தப் படத்தைப் பற்றி ரிவர்சில் சொல்லப் போகிறேன்.


படம் முடிந்து வெளியே வந்ததும் ஒரே ஆச்சரியம். அத்தனை இருசக்கர வாகனங்கள் வெளியே இருந்தன. ரொம்ப நாளாச்சு ... இத்தனை வாகனங்களை தியேட்டரில் பார்ப்பது. ஒரே தியேட்டர் காம்ப்ளக்சில்  இரண்டு படம் .. ஒரு வேளை அதனால் கூட இருக்கலாம்!

படம் முடியும் போது “சுபம்” அப்டின்னு திரையில் எழுத்துகள் வந்தன. அந்தக் காலத்தில சுபம் / வணக்கம் அப்டின்னு தான் படங்கள் முடியும். இப்போவெல்லாம் A film by ….. அப்டின்னு டைரடக்கர் பெயர் தானே வரும். ரொம்ப காலத்திற்குப் பிறகு படம் முடிஞ்சி வெளிய வரும்போது சுபம்னு வாசிச்சது சுகமாக இருந்தது.

படம் முடியிற சமயத்தில திடிர்னு எனக்கே ஆச்சரியம். என் வாய் ‘ஈ” என்று இளித்துக் கொண்டிருந்தது. எனக்கே ஆச்சரியம் ... படத்தோடு அப்படி ஒன்றிவிட்டேன் போலும். கதையோடு ஒட்டி இணைஞ்சிட்டேன். படத்தின் மகிழ்ச்சி மனதில் ஊறி ஒன்றி விட்டது என்பதை உணர்ந்து மறுபடி முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டேன். படம் முடிஞ்சி வெளியே போகும்போது அப்படி “ஈ”ன்னு இளிச்சிக்கிட்டே போனா நல்லாவா இருக்கும்?

படத்தில romance கடைசி ஐந்து நிமிடம் மட்டுமே. நம்ம தமிழ்ப் படங்களில் இதுவே ஒரு பெரும் புரட்சிதான். கடைசி சீனில் காதலிக்கு ‘காந்தி’ – அதான் கதாநாயகனின் பெயர் – விமான நிலையத்தில் டாட்டா சொல்லும்போது மாமியார் ஒரு வினாடி முகத்தை, அதைக் கண்டு கொள்ளாதது போல் வெட்கத்தோடு மறுபக்கம் திருப்பும் வினாடி அழகு.

இந்தக் கதாநாயகி உலகப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறார். முதல் படத்தில் குத்துச் சண்டை என்பதால் நன்கு நடித்தாரோ என்று நினைத்தேன். இந்தப் படத்திலும் அவரது ஸ்கோர் செமையாக இருக்கிறது. புது நடிகை .. புது மொழி.. என்று எந்த தடையும் இன்றி இயல்பாக, அழகாக நடிக்கிறார் ... இல்லை... இல்லை ... வாழ்ந்து விடுகிறார். இவரோடு நடித்தால் கதாநாயகர்கள் ஜாக்கிரதையாக ஒழுங்காக நடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் இவர் அவர்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போலும்.

Passport officer ஒரே வினாடியில் பிரச்சனையை அனுசரணையாக முடித்து விடுவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது. ஒரு வேளை அதுதான் ஆண்டவன் கட்டளையோ என்னவோ!

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி தத்ருபமாக ஒரு கோர்ட் சீனைக் காண்பித்ததாக நினைவில் இல்லை. அப்படியே அச்சு அசலாக இருக்குமே .. அப்படி ஒரு thickly packed dingy and dirty room. Thank you art director. அந்த அறையில் இருக்கும் கூட்டம் ... கண்ணில் படும் ஆ ட்கள் ... பல வகை வகையான முகங்கள்  .. மேசை மேல் குவிந்திருக்கும் பைல்களின் குவியல்கள் .. இடமில்லாத மக்கள் நெருக்கம் .... டைரக்டர் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது போல் என்பார்களே அது போல் உன்னிப்பாகக் கவனித்து செய்திருப்பது நன்கு தெரிகிறது.

கூத்துப்பட்டறை ஆட்கள் படத்தில் நிறைய என்று நினைக்கிறேன். அங்குள்ள அரங்கம், ஓப்பனை, ஒத்திகை, ‘ஐயா’வின் மேல் உள்ள பக்தி.. மரியாதை... எல்லாமே கூத்துப்பட்டறை இப்படித்தான் இருக்கும் என்று நானே உருவகப்படுத்திக் கொண்டேன். வக்கீலாக வருபவரை கூத்துப்பட்டறை  நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அப்போது அவர் நன்கு வளர்ந்து விடுவார் என நினைத்திருந்தேன்.

இந்தப் படத்தில் அவரும் அவரது அழகான ஜூனியரும் அசத்தலான மேட்ச். ஜூனியருக்கு சின்ன ரோல் தான் .. ஆனால் .. அசத்தி விட்டார். இலங்கை அகதியாக வரும் அரவிந்தனிலிருந்து ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்களிலும் வருபவர்கள் என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளக் கையெழுத்து போடும் பெரியவர் கூட மனதில் பதியும்படி செய்திருக்கின்றனர். யோகி பாபு எனக்கு ஏமாற்றம் தான்.

முதல்பாதி பார்க்கும் போது நடுவில் சிறிது சுணக்கமாகத் தோன்றியது. ஆனால் அதன் பின் படம் டாப் கியர் தான்.

விஜயசேதுபதி பற்றி என்னத்தைச் சொல்ல? அந்த மனுஷனுக்கு நடிப்பு இயற்கையாக வருகிறது. எதைச் செய்தாலும் அது இயல்பாகத் தெரிகிறது. அவர் தமிழ் சினிமாவின் பெரிய லாபம். இன்னும் உயரணும்... உயர்வார். நல்ல இயக்குனர்களும் அவரை நன்கு “குறி” வைக்கிறார்கள். நமக்கு லாபம்தானே!

பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய அனுபவம் கிடைத்தது. ஞயிற்றுக் (Sunday என்று தமிழில் அடிக்கத் தெரியவில்லையே!) கிழமை.  போன வெள்ளிக்கிழமை வந்த படமாச்சே ... இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்குமா என்று நினைத்துப் போனேன். ஆனாலும் கூட்டம் இருந்தது. அட ...டிக்கெட் எடுக்க வரிசையில் போக வேண்டுமோவென நினைத்தேன். நல்ல வேளை .. அப்படி எல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட்டு எடுத்த பிறகு உள்ளே செல்ல கொஞ்சம் கூட்டம். கூட்டத்துக்குள் போய் இடித்துப் பிடித்துப் படம் பார்த்த பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் முட்டை போண்டாவும், பாப்கார்னும் ரொம்ப பேமஸ். அந்த இரண்டும் இல்லாமல் அங்கு அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களை அந்த தியேட்டரில் பார்த்த நினைவு இல்லை. பழைய நினைவில் இரண்டும் வாங்க நினைத்தேன். தங்ஸ் உருவம் கண்முன் வந்ததால் போண்டாவிற்கு முட்டை போட்டுவிட்டு வெறும் பாப்கார்னோடு ஆசையை அடக்கிக் கொண்டேன்.

*

வானத்தில் பறக்கும் விமானத்தை முதல் பாதியில் அடிக்கடி காண்பிப்பது பற்றியும் சொல்ல மறந்து போனேனே. அதுவும் இன்னும் பலவும் ... மணிகண்டனின் touch தான்.

 *

10 comments:

TBR. JOSPEH said...

நான் மதுரையில் பணியாற்றிய காலத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் வாரா வாரம் ஆங்கில படம் பார்த்ததுண்டு. ஆனால் முட்டை போண்டா சாப்பிட்டதில்லை!
எனக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அந்த கோர்ட் சீன்! மிக மிக தத்ரூபம்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//முட்டை போண்டா சாப்பிட்டதில்லை!// ... What a miss!

Remember sending you few lines some months back. how are you... why so far from blogging? love ........

Anonymous said...

சமீபத்தில் பாத்த படங்கள்ள எனக்குப் பிடிச்ச படம் இது. எம் மனசுல என்ன இருக்கோ அத அப்படியே எழுதியிருக்கீங்க. அருமையோ அருமை.

முட்டை போண்டாவுக்குமா தடை? சின்ன வயசுல சிந்தாமணி தேட்டர்ல எதோவொரு படம் பாக்கப் போனப்போ முட்டை போண்டா வாங்கிக் கொடுத்தாங்க. எதுவுமே நினைவில்ல.. அந்த முட்டை போண்டாவைத் தவிர. இப்ப அந்தத் தேட்டரே இருக்கான்னு தெரியல.

தருமி said...

// சிந்தாமணி தேட்டர்ல//.... தியேட்டர் இருக்கு ... படம் ஓடாது ... ஜவுளிக் கடைக்காரங்க வாங்கிட்டாங்க......

வேகநரி said...

இந்த படத்தை பற்றி நீங்க இப்படி சொல்வதால் அவசியம் பார்க்க தான் வேண்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான விமர்சனம் ஐயா. அதுவும் வித்தியாசமாக. நன்றி.

சார்லஸ் said...

சிவாஜி , எம்.ஜி .ஆர் , ரஜினி , கமல் படங்கள் என்று ஓடி ஓடி பார்த்த அந்த சிந்தாமணி தியேட்டர் தற்போது இடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல். நானே வருத்தப்படும்போது , ' ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ' பார்த்தவர்கள் இப்போது இருந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

“ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி” இந்த தியேட்டரில் ஓடவில்லை என்று நினைக்கிறேன்; சிடி சினிமாவில் தான் ஓடியது என்று நினைக்கிறேன்.

நினைவுக்கு வேறொன்று வருகிறது. நாயக்கர் மகாலின் மேலிருந்து பார்த்தால் இந்த தியேட்டரின் elevation பழைய காமிராவில் உள்ள bellows மாதிரி தெரியும். அந்தக் காலத்து டிசைன்!

தமிழில் முதன் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த தியேட்டரில் வந்தது. இதைப் பார்க்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டதும் பக்கத்து வீட்டிலிருந்தவரும், என் நண்பனின் அப்பாவுமானவரிடம் சொல்லி விட்டார். அவர் அப்போது அந்த தியேட்டரில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் மாட்னி சினிமா நடக்கும் போதே என்னை உட்கார வைத்து விட்டுப் போய் விட்டார். படம் முடிந்ததும் தியேட்டர் மெத்தையில் கடைசி வரிசையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். முருக்கு வந்தது. சாப்பிட்டு விட்டு மாலை சினிமா பார்த்து விட்டு வந்தேன்

Post a Comment