Wednesday, February 08, 2017

925. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் ஜார்ஜ்…? *





*
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்  ஜார்ஜ்…? *


 மெரீனா வாரம்.
நல்லா ஓடிச்சி.
 ஆறு நாள்.

ஊரு உலகமே கண்ணு போட்டிருச்சி! ஆன்னு எல்லோரும் வேடிக்கை பார்த்தோம் … பார்த்தாங்க. மாடல் மாதிரி நம்ப பசங்களை எடுத்துக் கிட்டாங்க.


என்ன நடந்துச்சோ .. எப்படி நடந்திச்சோ. ஏழாம் நாள். கலஞ்சி போறதுக்கு 4 மணி நேரம் கேட்டிருக்காங்க பசங்க. ஆனா நம்ம க.த. காவல் துறை, அதாவது கடமை தவறாத காவல் துறைக்கு அங்கங்கே வேர்த்திருச்சி. 2 மணி நேரம் …ஒரு மணி நேரம் அப்டின்னு கேட்டிருக்காங்க. கா.துக்கு தாங்கலை. பாஞ்சிட்டாங்க. கண் திருஷ்டி மாதிரி என்னென்னமோ ஆகிப் போச்சு.


இப்போ ஓபிஎஸ் பேசுறதப் பார்த்தா அவர் காவல் துறைக்கு அப்படி ஒரு ஆர்டர் போட்டிருக்க மாட்டார்னு தோணுது. ஒரு வேளை அவர் சொல்றது மாதிரி mini-mumக்கு ஒரு பொறாமை வந்து காவல் துறையை உசுப்பி உட்டுட்டாங்களோ. அல்லது காவல் துறைக்கு ஆறு நாளா அடக்கி வச்சிருந்த தோள் தினவுகள் அதிகமாகப் போய், அதுனால சாமி அவங்க மேல இறங்கி ஒரு ஆட்டம் போட வச்சிருச்சோ என்னவோ…அல்லது சண்டை போடாமல் களத்தை விட்டு போராட்டக்காரர்களை விடுவிக்கக் கூடாது என்ற high level philosophy ஆகக் கூட இருக்கலாம். எல்லாம் அந்த .... கே வெளிச்சம்!


அதுல நான் பார்த்த காணொளிகள் எல்லாம் … அட .. எப்படிப்பட்ட காவல் துறை. மக்கள் நண்பர்களாயிற்றேன்னு தோணும்படி ஆகிப் போச்சு. என்னமா சும்மா ரோட்ல நிக்கிற வண்டிகளை அடிச்சி நொறுக்குறாங்க. ஒரு வண்டிய ரெண்டு போலீசு அடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய்ட்டு … on second thoughts திரும்ப வந்து மீதி இருக்கிற கண்ணாடி அது இதுன்னு போட்டு சதாய்க்கிறாங்க.


ஆனாலும் எனக்கு என்னமோ அந்த பொம்பிள போலீஸ் ரொம்ப பிடிச்சிப் போச்சு. மஹாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணு.என்னே அவர்களது கடமை உணர்ச்சி. தூரத்தில எரிஞ்சிக்கிட்டு இருந்த எடத்தில இருந்து ஒரு குச்சியைப் பத்த வச்சி… அப்படியே ஓட்டமா ஓடியாந்து… அங்க இருந்த ஒரு பாவப்பட்ட ஷெட் ஒன்றினை எரிச்சது உணர்வு பூர்வமாக இருந்தது. கார்த்திகைத் தீபம் ஏத்துறது மாதிரி எப்படி ஓடி ஓடி எரிச்சாங்க. அம்மணி நல்லா இருக்கட்டும் பிள்ளை குட்டியோட.


இன்னொரு காணொளி. அலங்காநல்லூர்னு நினைக்கிறேன். நாலைந்து பேர். பாவம். அஹிம்சாவாதிகள் போலும். போலீஸ் விரட்டி விரட்டி அடிக்கிறப்போ இவர்கள் உட்கார்ந்த இடத்தை விட்டு அகலாமல் உக்காந்திருந்தாங்க. நம்ம காக்கி சட்டை வந்ததுகள். ஒரு இளைஞன். என்ன நினைப்பில் உட்கார்ந்திருந்தானோ… எழுந்திருக்காமல் அப்படியே உக்காந்திருந்தான். பக்கத்தில் சில பெண்களும் உட்கார்ந்திருந்தனர். நம்ம க.உ. காக்கிக்கு உணர்வு கொப்புளிக்க அவனை நாலு சாத்து சாத்தி துரத்தினார். பையன் ஓடவில்லை. ஆனால் நகர்ந்து விட்டான். நம்ம க.உ.கா.க்கு இன்னும் கடமை உணர்வு தீரவில்லை. அங்கிருந்ததில் ஒரு வயதான அம்மா. அதாவது ஒரு கிழவி. அதை நாலு சாத்து சாத்தினார். இப்படித்தான் இருக்கணும்… கடமைன்னு வந்திட்டா கிழவியாவது… குமரியாவது. என்ன நான் சொல்றது …? ஆட்டோவை தீ வச்ச காவல் துறை ஆளைக் கண்டு பிடிச்சி ஒரு பரிசு ஒண்ணு கொடுங்கப்பா. இது மாதிரி நிறைய க.த. ஆட்களை கட்சியில … சாரி …சாரி … துறையில எடுத்துப் போடுங்க. மக்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கும்.


அந்த நடுங்குப்பம் காண்டம் இருக்கே …. அது ஒரு பெரிய சுந்தர காண்டம் மாதிரி. அதில மூணு போலீஸ்காரங்க … ரெண்டு ஆம்பிளை + ஒரு பொம்பிளை ... பெரிய மீனாகப் பார்த்து ஆளுக்கு ஒண்ணு ஆட்டை போட்டதைச் சொன்னாங்க. அதுவும் அவங்க வச்ச நெருப்புல வெந்து வேஸ்ட் ஆகக் கூடாதே அப்டின்ற கடமை உணர்ச்சிலதான் அப்படி எடுத்துட்டு போயிருப்பாங்க. இல்ல?



இதெல்லாம் ஏன் பண்ணினாங்கன்னு தெரியலை. ஆனால் சமீபத்தில் வாசித்த ஒரு நூலில் பார்த்த சில வாக்கியங்கள் இந்த நிகழ்வு மேல் சிறிது அதிகமான வெளிச்சத்தை வீசியது. அதைத் தமிழ்ப் படுத்தி சில வரிகள் தருகிறேன். இங்கேயும் அது பொருந்துமா என்று பாருங்கள்:



“இதே போன்ற “எழுச்சி” இதற்கு முன்பும் இந்தியாவில பல இடங்களில் நடந்து வந்துள்ளன. தெலுங்கானாவிலும், மிசோராமிலும் காவல் துறையும், ராணுவமும் இணைந்து இதே போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியுள்ளன.


1984ல் தில்லியிலும், 2002ல் குஜராத்திலும் நாம் கண்ட நிகழ்வுகள் சீக்கியருக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக நடந்த அந்த நிகழ்வுகள் மக்கள் திரளின் “பெரும் சினத்தால்” எழுந்தது என்று சொல்லப்படலாம். ஆனால் உண்மையில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும், ப.ஜ. கட்சியும் தான் இதற்கான அடிப்படைக்காரணங்களாக இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.


2014ல் மோடி அரசு பதவியேற்றதும்  சிறுபான்மையினரையும், முற்போக்காளர்களையும் கண்காணிப்பதும் தொடர்ந்து நடந்து வந்தன, … நாட்டில் எங்கெல்லாம் அரசியல் தொடர்பில்லாத வலதுசாரிகளின் போராட்டங்கள் ஆரம்பமாகின்றனவோ அங்கெல்லாம் காவல் துறையினரின் அடக்கு முறைகள் தலையெடுத்தன. 

இவை ஒரு வழக்கமான முறையாக நாடளவில் நடைபெற ஆரம்பித்தன. 

 *
இதை எழுதியது ஒரு ஜார்ஜ். டைட்டில்ல வர்ர ஜார்ஜ் இந்த ஜார்ஜ் தான்.


 நீங்க வேற ஜார்ஜை நினச்சிருந்தீங்கன்னா … அது உங்க கனவு ..



 *

5 comments:

Unknown said...

எந்த நேரத்தில் இதை எழுதினீர்கள் என்று தெரியாது. இப்பொழுதுதான் செய்தி வந்திருக்கிறது. ஜார்ஜ் அவர்களின் சேவையைப் பாராட்டி பதவி இட மாற்றம் பரிசுகொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க அகிம்சை; வளர்க காவல் துறையினரின் கடமை உணர்வு.

தருமி said...

ஜார்ஜா ... யாரு அவரு?

சேவையைப் பாராட்டியா ... என்ன சேவை?

G.M Balasubramaniam said...

காலம் கடந்து நினைக்கும்போது புலப்படாதவைகள் எல்லாம் முன்னே வந்து நிற்கலாம்

Unknown said...

இன்னாப்பா, படா ஆளுப்பா நீ; ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறியே. கில்லாடி! கில்லாடி!

தருமி said...

அப்டீன்ற ....!!

Post a Comment