Monday, March 27, 2017

933. ஆவியில் வந்த என் ஆசை ...3




***
ஆவியில் வந்த என் ஆசை ...1  

ஆவியில் வந்த என் ஆசை ... 2  

***



           
ஆவியின் ”ஆசைஎன்ற ஒரு தொடர் நிகழ்வுக்கு என் பெயரையும் கொடுத்திருந்தேன். எல்லாம் ஒரு சின்ன ஆசை தான். நம் பக்கம் “சீட்டுவிழுந்து விடாதா என்ற ஒரு  நப்பாசை. ஆனால் நப்பாசை நடந்தே விட்டது. ஓவியர் மருது மிகவும் பெரிய மனது வைத்து, தன் சுறுசுறுப்பான நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


***


 
என் நல்லூழ் ...  இந்நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் கொஞ்சம் முகநூலில் எனக்குப் பரிச்சயமான பெயர் - பரிசல்காரன் கிருஷ்ணா. அவரோடு உடன் வந்தவர் ஆவியின் தலைமைப் புகைப்படக்காரர் - கே.ராஜசேகரன். இவரைப் பற்றியும், அவரின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பற்றியும் தெரியும் – பின்னால் சொல்கிறேன் அதைப் பற்றி.  அவரோடு  காணொளிப் பொறுப்பாளராக இன்னொரு இளைஞர்- நாகமணி – வந்திருந்தார். நாங்கள் நால்வரும் மருது அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.




ஓவியர் எனது கல்லூரிக்கு ஒரு முறை வந்த போது அந்த நாள் முழுவதும் அவரோடு இருந்திருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்னை அவர் வீட்டில் பார்த்ததும் என் முகம் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.

இனிய முகம் ஓவியருக்கு. பேச்சிலும் இனிமை. புகழ் பெற்ற மனிதர்களைப் பார்க்கப் போகும் போது பல சமயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து மிகவும் விலகியே இருப்பது வழக்கம் தான். ஆனால் ஓவியரிடம் அந்த குணம் சிறிதும் இல்லை. நல்ல விருந்தோம்பல். எங்களோடு சமதையாக அமர்ந்து பலவற்றைப் பற்றிப் பேசினார்.

ஒரு ஓவியராக அவரது  professional work (!!)  அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விட்டது என்றார்.  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெரிய சுவர்களில் பிரம்மாண்டமாக, பெரிய படங்கள் வரைய கிடைத்த வாய்ப்புகள் பற்றிப் பேசினார். அதனால்  ஓவியத்தில் ”space" பற்றிய அனுபவம் அந்த சிறிய வயதிலேயே கிடைத்தது பற்றிக் கூறினார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிக் கூறியதும் நானும் அந்தப் போராட்டத்தில் என் பங்கைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன்.

அடுத்து அவர் சிறு வயது முதல் அவர் தந்தையோடு ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பித்ததைக் கூறினார். நானும் விடுவேனா .... எப்படி வீட்டில் படிக்கப் போவதாகச் சொல்லி ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்த என் வரலாற்றை எடுத்து விட்டேன்! அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே! வரும் மக்களும் கோலிவுட்டின் வரலாறும், ஆங்கிலப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பெரும் பட்டியல்களை அள்ளித் தெளிப்பது இன்னொரு அதிசயம். இதில் பலரும் அதிகம் படித்திராத மக்கள் தான். அந்தத் தியேட்டரின் மகிமை பற்றிப் பேசினோம்.

ஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பேசிய சுவாரசியத்தில் அந்த நேரம் போனதே தெரியவில்லை. படம் வரையலாமா என்றார். நிலத்திலிருந்து சில இஞ்சுகள் மேலெழும்பியது போல் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் எப்படியிருக்குமென மனதிற்குள் பல கேள்விகள். லைட்டிங்க் செய்ய வேண்டுமென்றார். ஆவி மக்கள் தயாராக வந்திருந்தார்கள். ஒரு லைட்டை என் முகம் நோக்கி வைத்தார்கள். ஒளிவெள்ளத்தில் நான். அப்போதே அரைகுறை நினைவு என்னிடமிருந்து கழன்று போனது போன்று இருந்தது. ஒரு மேஜையின் பாதிப் பரப்பில் பல தூரிகைகள், பல விதப் பேனாக்கள் .. அதில் சிலவற்றோடு என் எதிரில் அமர்ந்தார். என்னை அவருக்கெதிராக வசதியாக உட்கார வைத்து வரைய ஆரம்பித்தார். அவர் தலைக்குப் பின்னால் சுவற்றில் ஒரு கடிகாரம் இருந்தது. கடிகாரத்தின்பெரிய முள் ஏழாம் எண்ணில் இருந்தது. நல்ல பிள்ளையாக, தலையை ஆட்டாமல் என் பெரிய தொந்தியோடு  பிடித்து வைத்த பிள்ளையாராக  அப்படியே அமர்ந்திருந்தேன். பெரிய முள் பதினொன்றைத் தொடுவதற்குள் படம் வரைந்து முடித்து விட்டார்.
 


படம் முடிந்ததும் பேச்சு ஓவியக்கலை பற்றியதாக மாறியது. தனது படங்கள் பலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். நால்வருக்கும் அதுவே பெரும் விருந்தாக இருந்தது.    தன் அயல் நாட்டு அனுபவங்கள், அங்கு மறைந்த ஓவியர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை ... அதன் பின் கணினி வைத்து ஓவியம் வரையும் தற்கால முன்னேற்றம், இந்த முன்னேற்றத்திற்கு அவர் முன்பே எடுத்த முயற்சிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
 
திடீரென்று என்னை வேறு ஒரு கோணத்தில் அமர்த்தி, அதற்கும் ஒளி அமைப்பு கொடுத்தார். ஆனாலும் ஒளி போதுமான அளவில் இல்லை என்றார். இந்த இரண்டாம் படம் வரைய அனேகமாக நான்கு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார். படத்தை என்னிடம் கொடுத்தார்.நோ்த்தியான வெகு சில கோடுகளுக்கு நடுவே நான் இருந்தேன். மனதில் உடனே தோன்றிய சொல் “MAGIC". முதல் படத்தை விட இது எனக்குப் பிடித்தது. அவரிடம் இந்தப் படம் ஒரு “MAGIC" என்றேன். மகிழ்ச்சியோடு பெரிதாகச் சிரித்தார்.

அதன் பின்னும் பேசிக்கொண்டிருந்தோம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறி போல் அவரது படங்களில் உள்ள சிறு கிறுக்கல்கள் கூட அழகாக இருக்கிறது என்று நானும் பரிசல்காரனும் அவரிடம் சொன்னோம்.
 
மூன்று மணி நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டார். நிச்சயமாக அது அவர் ஆவியோடு கொண்டிருக்கும் நேசத்திற்கு இது ஒரு அடையாளம் என்றே நினைக்கின்றேன். அந்த மணித்துளிகள் மிகவும் பயனுள்ளதாகவும், நிறைய அனுபவங்களையும் தந்தன. ஒரு பெரிய ஓவியரோடு இணைக்கு இணையாக அமர்ந்து அளவளாவியது ஆவி தந்த கொடை. வாழி.

ஓவியர் வீட்டை விட்டு வெளிவந்ததும் புகைப்படக் கலைஞர் ராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் மருதுவோடு பேசிக்கொண்டிருக்கும்  போது தொடர்ந்து பல படங்கள் எடுத்துத் தள்ளினார். ஒவியர் வரைந்த படங்கள் போலவே இன்னொரு புகைப்பட ஓவியர் எடுத்த படங்களும் கிடைத்தால் நலமே என்று எண்ணிக் கேட்டேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எல்லா படங்களையும் கொடுப்பதாகச் சொன்னார்.
 
அவரின் படங்களை நான் கேட்டுப் பெற ஒரு காரணம் இருந்தது.  மிகப்பல ஆண்டுகளுக்கு முன்  மதுரை சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது ஆவியின் மாணவ புகைப்படக்காரராக இருந்தார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் என் மனதில் இன்னும் தேங்கி நின்று விட்டது. சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு தொடரை ’செளபாஎன்ற எங்கள் கல்லூரி மாணவ நண்பன் ஜூனியர் விகடனில் எழுதி, அது வெளியாகி, பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் இறுதி அத்தியாயங்களில் சீவலப்பேரி பாண்டியன் காவல்துறையினர் ஒருவரின் தலையைத் தனியாகச் சீவி வெட்டியதாக வரும்.


 

இதனை மிக அழகாகப் கொடூரமாகப் புகைப்படத்தில் ராஜசேகரன் காண்பித்திருப்பார்.  ஒரு குழியை வெட்டி, ஆளை உள்ளே இறக்கி, பாதுகாப்பிற்கு வாழை மட்டைகள் கொடுத்து எடுத்த படம். தரையில் தலை ஒன்று தனியாக உருண்டு கிடக்கும். படமே பார்க்க பயங்கரமாக இருக்கும். அந்தப் படம் வந்த போது அதைப் பற்றி நண்பர்களோடு பேசியிருந்திருக்கிறோம். அதன்பின் அவர் ஆவியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் எடுத்த படங்களை சிரத்தை எடுத்து பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அன்று  Portrait எடுப்பதற்கு வசதியான இடத்தில் அவர் எடுக்கும் படங்கள் கிடைத்தால் நல்லதே என்று ஆசைப்பட்டேன். அன்று என் ‘ஆசைகள்’ எல்லாமே நிறைவேறும் என்ற ‘விதி  இருந்திருக்கும் போலும். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்படங்களை எந்தவித மறுப்பின்றி கொடுத்துதவினார். நன்றி.


என்னை யூ ட்யூபில் காணொளியாகக் காண்பிக்க என்னைச் சுருள்  படமெடுத்த நாகமணிக்கும் மிக்க நன்றி. (என்னதொப்பையை மறைக்க நாகமணி ‘ஏதாவதுசெஞ்சிருக்கலாமோவென நானே என்னைக் காணொளியில் பார்க்கும் போது தோன்றியது!)   




















 *

3 comments:

Balakumar Vijayaraman said...

அருமையான ஆல்பமாக வந்திருக்கு ஐயா. பார்க்கும் போது, மனநிறைவா இருக்கு.

நீங்களும் பெரிய புகைப்படக்கலைஞர் தான். எங்களுக்கும் “ஆசைகள்” இருக்கு. பார்த்து செய்யுங்க !

Unknown said...

பிடித்தவர்களுடன் அமர்ந்து பேசும் தங்கள் ‘போஸ்’ எனக்குக் காமராஜை நினைவுபடுத்துகிறது.

ராமலக்ஷ்மி said...

மறக்கவியலாத தருணங்கள். அருமையான படங்கள்.

Post a Comment