Monday, March 20, 2017

931. பூங்கா காப்பு போராட்டம்





அந்தக் காலத்தில ....

ஏறத்தாழ 17 - 19 ஆண்டுகளுக்கு முன், நான் எங்களது பகுதியில் புதிதாகக் குடியேறியதும் ஒரு சங்கம் ஆரம்பித்தோம். 20-25 வீடுகள் மட்டும் இருந்தன. ஒரே குடும்பம் போல் இருந்தது. 
                                            

அப்போது எப்படியோ  எங்கள் பழைய போன் விரைவாக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அத்தனை வீட்டுக்கும் ஒரே போன் எங்களுடைய போன் தான். வீடுகளும் தூர தூரத்தில் இருக்கும். மழைக்காலங்களில் எங்கும் சகதி. போன் வந்தால் சில நிமிட வித்தியாசத்தில் மறுபடியும் போன் செய்யச் சொல்லி விட்டு, போன் வந்தவர்கள் வீட்டிற்குப் போய் செய்தி சொல்லி விட்டு வருவது வழக்கம். 





அதில் ஒரு வீடு மிகவும் தொலைவில் இருக்கும். எங்கள் இரு வீட்டுக்கும் நடுவில் நெல் வயல். மழையில் இருட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்போது எங்கள் மாடியிலிருந்து அவர் வீட்டுப் பிள்ளையின் பெயர் சொல்லிக் கூப்பிடுவோம். அந்த போன்கள் சிம்லாவில் இருந்து வரும்.   அவர்கள் வீட்டுப் பிள்ளை - பட்டாளத்துப் பிள்ளை - கூப்பிடுவார். அதுவும்  இரவில் தான் வரும். அதுவும் 10 மணிக்கு மேல் தான் அழைப்பு வரும். 








பட்டாளத்துப் பையன். புதிதாகத் திருமணமாகி மனைவியோடு அங்கிருந்து பேசுவார். அவருக்கு உதவுவதில் ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. ஆனாலும் போன்
 வந்ததும் அவர்களைக் கூப்பிடக் கஷ்டமாக இருந்தது. அதனால் ஒரு ஹை-டெக் ஒன்றிற்கு மாறினோம். ஒரு லேசர் லைட் அப்போது கீ-செய்னாக வந்தது. அது ஒன்று வாங்கி வந்தேன். எங்கள் வீட்டிலிருந்து அதை அடித்தால் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டு தொலைக்காட்சி ஸ்க்ரீனில் அடிக்கும்.  கூப்பிட மிக வசதியாக இருந்தது!




மரங்கள் நட்டோம். வீட்டுக்கு வீடு மரங்களைத் தத்து எடுத்தார்கள். அவ்வப்போது கூட்டம் போடுவோம். வழக்கமான பொங்கல் நாளன்று கோலப்போட்டிகள், சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் போன்றவைகள் 
உறவுகளை வளர்த்தன. இதையெல்லாம் விட pot luck dinner ஒன்று மிகவும் எங்களை நெருங்கியிருக்க வைத்தது. அவரவர் வீடுகளில் உணவுகள் சமைத்து யாராவது ஒருவர் வீட்டு மாடியில் இரவு விருந்து நடக்கும். தாய்க்குலத்தை இது நெருங்கி வரச் செய்தது. சிறு பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் என்று பல நிகழ்வுகள் எங்களின் உறவுகளை வளர்த்தன. 



 








அப்படியெல்லாம் இருந்த குடியிருப்புப் பகுதி நன்கு வளர்ந்தது; பெரியதானது. இப்போது முன்பு போல் கூட்டங்களோ, விருந்துகளோ நடப்பது அரிதாகி விட்டது. இதற்கு முடிவு கட்டவே வந்தது எங்கள் பூங்காப் பிரச்சனை. விலகியிருந்த எங்களை இப்போது ஒன்றாக்கி விட்டிருக்கிறது.





















எங்கள் பகுதியில் எங்களுக்கே உரித்தான பூங்கா பகுதி ...  ஒன்றுக்கு இரண்டு தீர்ப்புகளும் உயர்நீதி மன்றத்தில் இருந்து  வந்து விட்டன. ஆயினும் இன்னும் சிலர் அப்பகுதி எங்களுடையது என்று மாநகராட்சி ஆரம்பித்த வேலைகளையும் நிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.








எல்லோருக்கும் எல்லாமும் தெரியவேண்டுமென்றால் ஒரு கூட்டம் தேவையென 19.3.17 அன்று ஒரு கூட்டம் கூட்டினோம். குடியிருப்புப் பகுதி முழுவதும் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரண்ட கூட்டம்; பெரும் ஆர்வம்.





பழைய கால நினைவுகள் வந்தன. எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம்.






புதிதாக என்ன செய்வது என்பது பற்றியும் ஆர்வத்தோடு பேசினோம்.






 







                    

போராட்டங்கள் தொடரும் ... வெற்றியை எட்டும் வரை என்று ஒருமித்து முடிவு செய்தோம்.

யார் கண்டது ... இன்று எதிர்க்கும் ஆட்கள் இன்னும் சில நாட்களில் ஓட்டு போடணும்னு நம்ம முன்னால் வந்து நிற்கலாம். யார் கண்டது!!


**







2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெல்லட்டும்

சார்லஸ் said...

என்ன சார் இது குட்டி நெடுவாசல் போராட்டமா?

Post a Comment