Thursday, January 11, 2018

963. கடவுள் என்னும் மாயை ..முன்னுரை






*

இந்நூலின் வாழ்த்துரை  இங்கே ...  





முன்னுரை


புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு.

வலைப்பூக்களில் மதங்களைப் பற்றிய என் பார்வைகளைப் பதித்து வந்தேன். நான் சார்ந்திருந்த மதத்தை விட்டு ஏன், எப்படி வெளிவந்தேன் என்பதை எழுதினேன். நம் மதத்தைப் பற்றி எழுதினோம்; மற்ற மதங்களையும் பார்ப்போமே என்று அவைகளைப் பற்றி தெரிந்த சில விஷயங்களை எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கடினமான, கஷ்டப்படுத்திய வேலை. வாசித்தவர்கள் கேள்விகளோடு திரும்பி வந்தார்கள்; சிலர் மிகத்தீவிரமாக கேள்விகளோடு பொருத வந்தார்கள். அவர்களிடமிருந்து பல கேள்விக் கணைகள். வாசித்தவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயச் சூழல் வந்தது. அப்போது தான் புலியின் வாலைப் பிடிக்கவேண்டிய கட்டாயம் பிறந்தது.

அப்போது புலி வாலைப் பிடித்தேன். ... இன்னும் விட முடியவில்லை!

பதிலைத்தேடி அங்குமிங்கும் ஓடி, அந்தப் புத்தகம் … இந்தப் புத்தகம் என்று நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. கிறித்துவ மதம், இஸ்லாமியம், இந்து மதம் என்று வகை வகையாக வாசித்தேன். வாசிக்க வைத்த எதிரணியினருக்கு எப்போதும் என் நன்றி. வாசித்த நூல்களிலிருந்து முக்கிய பகுதிகளைத் தமிழில் என் வலைப்பூவில் இட்டு வந்தேன். அவை மதம் பற்றிய அறிவையும், ஆழத்தையும் அதிகமாக்க பெரும் உதவியாக இருந்தன. புதுக் கருத்துக்களுக்கு ஆரம்பத்தையும், தெரிந்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கவும் உதவின.

அப்படித் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் நான் கண்ட விஷயங்களில் பல எனக்கு மிகவும் புதியவனவாக இருந்தன. சாதாரண நம்பிக்கையாளர் ஒருவருக்கு அவர் நம்பி பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கும் மதங்களிலேயே அவருக்குத் தெரியாத பல உண்மைகளும், வரலாறுகளும், வேண்டுமென்றே மறைக்கப்பட்ட செய்திகளும் நிறைய இருக்கிறதெனத் தெரிந்தது. பூனை பிடிக்கப் போனவனுக்கு யானை கிடைத்தால் எப்படியோ அப்படி எனக்கும் ஒரு பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியினால் வாசிப்பும் அதிகமாயிற்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வீணாகுமா? அவைகளைப் பாத்தி கட்டி நாற்றுகள் போல் பராமரித்து, வயலில் பாவுவது போல் என் வலைப்பூக்களில் நான் விதைத்து வைத்தவைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாகக் கொண்டு வர முயற்சியெடுத்தேன். பன்னிரண்டு நூல்கள். அவைகளில் ஆங்கிலத்தில் ஒன்பது .. தமிழில் மூன்று. மதங்களைப் பற்றியதாக இருப்பினும் அவற்றில் இரண்டு நூல்கள் புதினங்கள். அவைகளிலும் சில தேவையான தகவல்கள் இருந்தமையால் அவைகளையும் இத்துடன் சேர்த்துள்ளேன்.

இந்தப் பன்னிரெண்டு நூல்களையும் வாசித்து அதில் எனக்குப் பிடித்த, இறைமறுப்புக்கு ஆதரவான கருத்துக்களைத் தமிழ்ப்படுத்தி கோர்வையாக்கினேன். ஒவ்வொரு நூலின் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகளையும், நூலைப்பற்றிய குறிப்புகளையும் இணைத்துத் தந்துள்ளேன். என் கருத்துகள் இருப்பின் அவைகளை சாய்வெழுத்துகளில் அங்கங்கே தந்துள்ளேன். நான் இதற்கு முன் என் சொந்த அனுபவங்களையும், மதங்களைப் பற்றிய என் எண்ணங்களையும் தொகுத்து எழுதிய “மதங்களும், சில விவாதங்களும்” என்ற நூலின் தொடர்பே இந்த இரண்டாம் நூல். இதோ … இந்த நூலின் பக்கங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.





  *

No comments:

Post a Comment