Thursday, November 01, 2018

1008. மீண்டும் ... மதங்கள் பற்றிய கட்டுரைகள்





*



ஓய்வு பெற்ற பின் ...  தினசரி வாழ்க்கையில் வீடும் வீடு சார்ந்த இடங்களிலும் ட்ரவுசரோடு ஓடிக்கொண்டிருந்தவனுக்கு கடந்த பத்து நாளாக அந்தக் காலத்தில கல்லூரிக்குப் போகும்போது போன மாதிரி தினமும் ஒரு சட்டை ...பேண்ட் போட்டுக் கொண்டு திசைக்கொரு பக்கமாகச் செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது.






சில N.G.O.க்களுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் தமிழில் உறவாடுவதற்காக ஆங்கிலேயர் ஒருவருடன் செல்லும் வாய்ப்பு வந்தது. அமெரிக்க சினிமா கொஞ்சூண்டு பார்த்து அதை அரை குறையாகப் புரிந்து கொள்வதாலும், கொஞ்சூண்டு நாள் அமெரிக்காவில் பவனி வந்ததாலும் அமெரிக்க ஆங்கிலம் கொஞ்சம் எளிதாகப் புரியும் என்ற தைரியம் உண்டு. அவர்களும் நம் நலன் கருதி கொஞ்சம் மெல்லப் பேசுவார்கள். ஆனால் இந்த ஆங்கிலேயர்களின் ஆங்கில உச்சரிப்புகள் புரிய கஷ்டம். உறவுக்காரப் பெண் இங்கிலாந்திலிருந்து வரும் போது அவள் பேசும் ஆங்கிலம் புரிய நிறைய கஷ்டப்பட்ட அனுபவமும் உண்டு. சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு ஒப்புக் கொண்டேன்.

 வந்தவர் 45-50 வயது ஜிம். காவல் துறையில் 20 ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு, இப்போது குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய படிப்புகள் முடித்து, அதன் தொடர்பாக பல ட்ரஸ்டுகள் அவரை தாங்கள் உதவும் அயல்நாட்டு அமைப்புகளில் உள்ள நடப்புகள் பற்றி அவரை ஆய்வு செய்ய அனுப்புகிறார்கள். இங்கு வருவதற்கு முன் கென்யா, நைஜீரியா போன்ற இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். நேரில் வந்ததும் ஒரு பெரிய ‘குண்டு’ ஒன்றைப் போட்டார். வேலை இதுவென்றாலும் பகுதி நேரங்களில் முழுவதுமாக கிறித்துவப் பணியில் ஈடுபடுபவராம். அதைச் சொன்னதும் எப்படி நம் வண்டி பத்து நாட்களுக்கு ஓடுமோ என்ற கவலை சிறிது எட்டிப் பார்த்தது. அறிமுகத்தில் அவரது மத வழிபாடுகள் பற்றி அவர் சொல்ல, நான் ஒரு மத மறுப்பாளன் - அதில் இரு புத்தகங்கள் வேறு எழுதியவன் - என்றதும் அவருக்கு ஆச்சரியம். புத்தகங்களின் படங்களைக் காண்பித்தேன். நூலின் அடக்கம் பற்றிக் கேட்டார். சொன்னேன். பயணத்தின் போது அதைப் பற்றிப் பேசிக்கொள்வோமென்றார்.

எனக்கென்ன .. கரும்பு தின்னக் கூலியா என்ன? ஆஹா...சரியென்றேன். 

வழக்கமாக “பெரிய” கிறித்துவர்கள் என்னைப் போன்ற ஆட்களிடம் பேசுவதை விரும்புவதில்லை; அதிலும் நான் மதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே முகம் சுருங்கி விடும். என்னை எப்போதடா தவிர்ப்போம் என்பதே அவர்கள் நிலையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அட... என் புத்தகத்தை வாசிக்கவே அந்தப் பெரிய “விசுவாசிகள்” தயாரில்லை. தங்கள் நம்பிக்கை மாறி விடுமோ என்ற பயம் போலும்! பிறகு எப்படி முகம் கொடுத்துப் பேசுவது...? ஆனால் நமது அடிப்படைவாதிகளான மூமீன்கள் தொடர்ந்து தொடுத்த விவாதங்களால் நிறைய வாசிக்கவும், உள்ளூற அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கவும் முடிந்தது. மேலும் மேலும் பல “ஓட்டைகளை” எல்லா மதங்களிலும் காண முடிந்த நல்ல நேரம் அது. கிறித்துவத்திலும் இன்னும் மேலும் பலவற்றைத் தெரிந்திருக்கலாம் - ஒருவேளை சில விசுவாசக் கிறித்துவர்கள் மூமீன்கள் போல் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருந்தால்! அப்படி ஒன்றும் நடக்காதது எனக்கு வருத்தமே. ஒரு வேளை கிறித்துவர்கள் மாத். 7:6 வசனத்தை (முத்துகளை பன்றிகள் முன்னால் இறைக்காதீர்கள்) நினைத்து என்னை விட்டு விலகிப் போயிருக்கலாம்!


ஆனால், நம்ம ஆளு ஜிம் அப்படியெல்லாம் இல்லை. அவரோடு பேசியதில் எனக்கு நல்லதொரு திருப்தி. ஏனெனில் விவாதத்தைத் தொடர்வதில் ஆர்வமாக இருந்தார். ஏன் இவர் மதத்தை விட்டு விலகினார் என்பதை அறிவுடன் சிந்திக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். அதோடு நான் மதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதைப் பற்றிச் சிந்தித்தே இந்தக் கேள்விகளை முன் வைக்கிறேன் என்பதை முழு மனதோடு ஒப்புக்கொண்டார். முதலில் வழக்கமாக கிறித்துவர்கள் அளிக்கும் பதில்கள் போன்று சிலவற்றை முன் வைத்தார். எனது அனுபவத்தில் அப்பதில்கள் பொதுவாக சிறு பிள்ளைகளுக்கு ‘ஞானக் கல்வி’ (!) சொல்லித் தருவது போன்றே இருக்கும். நேரடியாகச் சொன்னால் அப்பதில்கள் மிகவும் மொன்னையாக இருக்கும்.


இவரிடம் கேள்விகளை எழுப்பியதும் முதலில் அது போன்றே பதில் சொன்னார். ஆனால் மெல்ல அவைகளை நிறுத்திக் கொண்டு ... அவரும் அதற்கான intellectual பதில்களுக்கு முயற்சி செய்தார், அதோடு மாலையில் நாங்கள் திரும்பிய பிறகு தன் துணைவியாரிடம் பேசும்போது என் கேள்விகளையும் தெரியப்படுத்தியிருக்கிறார். எண்களிட்டு அக்கேள்விகளை அனுப்பியுள்ளார். ஊர் திரும்பியதும் அதைப் பற்றி விவாதிக்கப் போவதாகக் கூறினார்.

எல்லாவற்றிலும் எனக்கு மிகப் பிடித்தது அவர் என் நூல் ஆங்கிலத்தில் இல்லையே என்று கவலைப் பட்டது. இப்போது எங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ... என் நூலில் கிறித்துவ மதத்தை நான் விடுவதற்கானக் காரணங்களையும், கிறித்துவ மதத்தின் மீதான என் கேள்விகளையும் நான் தொடர்ந்து அவருக்கு எழுத வேண்டும் என்றும், எனக்கு அவர் பதில் தருவார் என்பதுமே அது. அதை என் ஆங்கில ப்ளாக்கில் போடுவதாகவும் அதில் தான் வந்து வாசிப்பதாகவும் கூறியுள்ளார்.

எனக்கும் இரு வகையில் இது மகிழ்ச்சியாக இருந்தது. முதலாவதாக, மதங்கள் பற்றி நான் தொடர்ச்சியாக எழுதி வரும்போது அப்போது நடந்த ’யுத்தங்கள்” எனக்குப் பிடித்தது. கேள்விகளும் பதில்களும் மாறி மாறி வந்து வாழ்க்கையின் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அது ஒரு intellectual war தானே!. இரண்டாவதாக, சில கருத்துகளையாவது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாக நினைத்தும் அதை செயலாக்கவில்லை. இது ஒரு நல்ல வாய்ப்பு. thank you, jim for motivating me!

 தூங்கிக்கிடக்கும் ஆங்கில ப்ளாக்கைத் தூசி தட்டி எழுப்ப வேண்டும்.......

























 *

2 comments:

G.M Balasubramaniam said...

முமீன்கள்.....? புரியவில்லை தொடர ஆவல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல முயற்சி. ஆரம்பியுங்கள்.

Post a Comment