Monday, November 26, 2018

1012. தோரணம்





*





*

”வனம்” என்றொரு அமைப்பு கஜாவில் வீழ்ந்த மரங்களில் சிலவற்றிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுந்த பெரிய மரங்களின் மேல் கிளைகளை வெட்டி விட்டு, தடித்த ஏழெட்டு அடி நீளப் பகுதியை மீண்டும் நட்டு விட்டால் இரண்டு ஆண்டுகளில் தளிர்த்து துளிர்த்து மரமாக வளர்ந்து விடும் என்கின்றனர்.

தொடரட்டும் .. மரங்கள் வளரட்டும்.


                                                                                 *****



TOI தினசரியில் திரைப்பட விமர்சனம் போட்டிருந்தார்கள். ஜோசப்... / ஜார்ஜ் ... எதோ ஒரு பெயர். நகைச்சுவை நடிகர் சீரியஸ் ரோலில் அழகாக நடித்திருக்கிறாராம். மலையாளப்படம். 4 ஸ்டார் கொடுத்திருந்தனர். அதைத் தவிர நான்கு தமிழ்ப்படங்கள்... எல்லாம் ஒன்று.. ஒன்றரை ஸ்டார்.

அடப் போங்கடா .... என்றிருந்தது.


                                                                           *****


குருமூர்த்திக்கு ஒரு கடிதம் வந்தது. நறுக்குத் தெறித்தது போல் இருந்தது. இன்னும் பஞ்சாங்க காலத்து ஆட்களாக இருக்காதீர்கள் என்று ஒரு நல்ல திறந்த கடிதம். உலக அறிவுக்கு அடிமைகளாக ஆகாதீர்கள் .. இந்திய அறிவின் வழியேதான் உலகைப் பார்க்க வேண்டும் என்று குருக்களயா அறிவு பூர்வமாகப் பேசியிருப்பார் போலும்.  அதை எதிர்த்து ’ஸ்வாமினாமிக்ஸ்” என்ற தலைப்பில் அங்கலேசரியா ஐயர் நன்கு எழுதியுள்ளார்.



                                                                                  *****


தேவர் இனத்து 7 சின்னப் பசங்க அம்பையில் ஒரு 32 வயது கோனார் சாதிக்காரரைக் காலையில் கொன்று விட்டு, அவனவனும்  தங்கள் தங்கள் வேலைக்கு / பள்ளிக்குப் போய்விட்டார்களாம் .. எந்த வித மன உறுத்தலும் இல்லாமல். எப்படி ஒரு இளைஞர் படை வைத்திருக்கிறது அந்த சாதி. எவ்வளவு பெரிய பெருமை அந்த சாதியினருக்கு? கொலையும் செய்து விட்டு பத்து பதினொறாம் வகுப்புக்கு சென்று விட்டார்களாம். என்ன ஒரு தீரர்கள் !

ஒவ்வொரு சாதிக்கும் ஊருக்கு நாலு பேரை இதே போல் வளர்த்து விடுங்கள்.. நாடு முன்னேறும்.

இது காதல் விவகாரம். கோனார் சாதியைக் கீழ்ச்சாதியாக்கி, தேவர் சாதிக்கு இந்தக் கோபம் .. வெறி. காதலித்த தேவர் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது என்கிறார்கள். நிச்சயமாக எனக்கு அப்படித் தோன்றவில்லை. இன்னொரு சந்தேகம். அட யாதவ் இந்தியா முழுவதும் இருக்கிற கட்சியாயிற்றே. காஞ்சா அய்லய்யாவின் வாக்கின் படி இவர்கள் ”புதிய சத்திரியர்கள்”. இச்சாதியினர் கட்சி அகில இந்தியக் கட்சியாயிற்றே; தேவர் கட்சிகூட பிராந்திக் கட்சி தானே... அதிலும் இப்படி ஒரு மேல்-கீழ் நிலையா?


கடவுளே...

                                                                                 
                                                                                   *****



நீயா நானா?  ஒரு பக்கம் தமிழ் தெரிந்த வடநாட்டுக்காரர்கள்..இன்னொரு பக்கம் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாத  ஒரு கூட்டம். ஆசிரியனாக வேலை பார்த்த போது ஆங்கிலம் தெரியவில்லை என்று வெட்கமும், வேதனையும் படும் மாணவர்கள் ஒரு புறமும், i dont know tamil என்று பெருமையோடு சொல்லும் மாணவனையும் பார்த்திருக்கிறேன். இது மாறவே மாறாது என்று தான் நினைக்கின்றேன்.

அட... நான் இவ்வளவு பேசுகிறேனே... நான் என் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வி முறையில் தான் சேர்த்தேன். அதனாலோ என்னவோ வாட்ஸ் அப் செய்தியைத் தமிழில் அனுப்புங்களேன் என் மகள்களிடம் இப்போது சொன்னால் கூட கேட்க மாட்டேன் என்கிறார்கள். நானும் நானெழுதிய இரு நூல்களில் முதல் நூலை என் பேரப் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் இட்டேன். எதற்கென்றே தெரியவில்ல !. தமிழ் வாசிக்கும் பேரப்பிள்ளைகள் எனக்கில்லை. அப்படி ஒரு தனிப்பட்ட சோகம் எனக்கு. மொழியின் மேல் காதல் உண்டு என்ற எனக்கு தவறான ஒரு நினைப்புண்டு அதனால்.இந்தி, மலையாளம்,பிரஞ்சு மொழி படிக்க முயன்றேன். மூன்றாவது certificate அளவிற்காவது வந்தது. இந்தியும் மலையாளமும் - முக்கியமாக இந்தியும் -இந்த ka. ga gha. ha என்றெல்லாம் வர ஆரம்பித்தும் அந்த இடத்தை விட்டே ஓடி விட்டேன்.

சரி... நீயா நானாவுக்கு வருவோம். குறளை மேற்கோளாக ஒருவர் சொன்னதும், தமிழ் எனக்குப் பண்பைப் போதித்தது என்று ஒருவர் சொன்னதும், நாமறிந்த மூன்று மொழிகளில் தமிழுக்கும், தமிழருக்கும் உள்ள நகைச்சுவை உணர்வைப் பெருமையாக பேசிய ஒருவரும். எவ்வித பயனும் நோக்காமல் தனது மொழியிலிருந்து 25 நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் என்று சொன்ன ராஜஸ்தான் அம்மையும்....நம் தமிழ்த் தோள்களை நிமிர்த்தினார்கள்.

ஆனால் தமிழ் தெரியாது என்று சொன்ன சிலரில் ஓரிருவர் நிறையவே தங்களைக் கூமுட்டைகளாகக் காட்டிக் கொண்டனர். ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றிக் கேட்டதும் ஒரு புண்ணியவான் - இளைஞர் தான் _ தொல்காப்பியர் என்றார். மொழிபெயர்த்திருக்கிறேன் என்று சொன்ன பெண்மணி பொங்கலைப் பற்றி அழகாகப் பேசியதை இடை மறித்து, அவர்கள் சொன்னதில் திங்கள் என்ற சொல்லை நம்மாள் ஒருவரிடம் திங்கள் என்றால் என்ன என்று கோபிநாத் கேட்டார். இந்தப் புண்ணியவான் monday என்றார். புல்லரித்து விட்டது.  ஆனாலும் என் பேரப் பிள்ளைகளும் இந்த நிலைதான் என்று எண்ணினேன்.


நாடு போகும் நிலையும் நன்றாக இல்லை. மொழி செல்லும் வழியும் நன்றாக இல்ல. இதில் என்ன நமக்கு நாட்டுப் பற்று .. மொழிக் காதல் ...!!








*







2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல்சுவை. ரசித்தேன். மரம் நடல் மிகவும் அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

வனம் அமைப்பின் முயற்சி போற்றுதலுக்கு உரியது
போற்றுவோம்

Post a Comment