Monday, April 15, 2019

1039. ஒரே கல்லில் ரெண்டு (புளிச்ச) மாங்காய் -- 2.0 & பேட்ட













*

காலமெல்லாம் மாறிப் போச்சு. இப்போ யார் வலைப்பூக்கள் .. ப்ளாக் .. எல்லாம் வாசிக்கிறாங்க? எதுக்கு அங்க போய் எழுதி அல்லாடணும்? அதோடு என் கடைசிக்கு முந்திய பதிவுல சூப்பர் டீலக்ஸ் பற்றி எழுதினேன். சினிமா அப்டின்றதுனால 175 பேர் அதைப் “பார்த்துட்டு” போயிருக்காங்க. இதுவே ஆச்சரியம் தான். ஏதோ சினிமா அப்டின்றதுனால் இத்தனை பேர். அடுத்து சொந்தக் கதை ஒண்ணு எழுதினேன். அதுவும் தேர்தலை வைத்து எழுதினேன். 50 கூட வரவில்லை.

அப்போ எதுக்காக இன்னும் ப்ளாக்கை கட்டி “அழணும்னு” அப்பப்போ மனசுல தோணும். அதோடு ப்ளாக் முழு உசிரோடு இருந்த அந்தக் காலத்தில பின்னூட்டங்களே நம்மை அதிக ஆர்வத்தோடு மேலும் மேலும் எழுத வைக்கும். இப்போ அதுக்கும் சுத்தமா ஆப்பு வச்சிட்டாங்க. நிலைமை இப்படி கோமாவில இருக்கும் போது உனக்கு ஏன் இன்னும் ப்ளாக்கில எழுதணும்னு தோணுது. ஆனாலும் என்னமோ கிடந்து அடிச்சிக்கிது ... எழுதுனா அது ப்ளாக்கில...போனா போகுதுன்னு அதன் தொடுப்பை மட்டும் முகநூலில் கொடுக்கிறதுன்னு பொழப்பு போய்க்கிட்டு இருக்கு.


ப்ளாக்குன்னு எனக்கு அத்தனை உசிரு. ஓய்வுக்குப் பிறகு என்ன செய்றது என்று தெரியாமல் தலை வெட்டுன சேவல் ஆடுறது மாதிரி கொஞ்சம் நாள் ஆடினேன். அப்போதான் இப்படியெல்லாம் இணையத்தில் இருக்கிறது என்று தெரிந்து இறங்கினேன் ... ஆடினேன். அதில் இருந்து மொழிபெயர்ப்புக்கான வழி பிறந்தது ... நம்ம பேர்லயே ரெண்டு (மூன்று..?) நூல்கள் எழுதும் வாய்ப்பும் வந்தது. தொடர்ந்து மொழிபெயர்ப்பும் தொடர்கிறது. நேத்து கூட வாக்குரிமை அடையாளச் சீட்டு கொடுக்க வந்த பெண் பெரிய வெள்ளைப் பேப்பர் கட்டோடு உட்கார்ந்து நான் எழுதுவதைப் பார்த்து அதுவாகவே போகுற போக்கில ‘எழுத்தாளர்” அப்டின்னு என்னய சொல்லிருச்சு. தப்பா இருந்தாலும் கேட்க ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒய்வு வாழ்க்கை அம்புட்டு நல்லா போகுது .. அர்த்தமுள்ள காலமா மாறிருச்சு. எல்லாம் ப்ளாக் கொடுத்த வரம்.

அதிலும் தமிழ்மணம் ஆரம்பித்த காசி எப்போதும் இது மாதிரி நேரத்தில் நினைவுக்கு வந்திருவார். வாழி காசி.


சரி .. இந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்குன்னு கேக்குறீங்களா? நேத்து ஒரே கல்லில் இரண்டு மாங்கா ... 2.0, பேட்ட ரெண்டு படமும் ஓடுச்சா. எனக்கு ஷங்கர்னாலே ரொம்ப அலர்ஜி. அதுனால மொதப் படம் இதுவரை பார்க்கவேயில்லை. பேட்ட .. பிடிச்ச நம்மூரு இயக்குனர். அவரு இயக்குனராக ஆகும் முன்பே, இன்றைய இயக்குனர் மூலம் பேரு தெரியறதுக்கு முந்தியே அவரது ஒரு குறும்படம் ஒண்ணு பாத்து வியந்திருந்தேன். ப்ளாக்கிலும் 2011லேயே அதை, அவர் பெயர் வாங்குவதற்கு முன்பே போட்டிருந்தேன்.   அவருடைய மற்ற குறும்பட்ங்களையும் முடிந்த அளவு பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இருந்த போது நேரம் போகாத, சோம்பேறித்தனமான ஒரு week-end பற்றி ரொம்பக் குட்டியாக ஒரு படம் இருக்கும். அதுவும் நன்றாக இருந்தது.





 பீட்சா, ஜிகர்தண்டா எல்லாம் பிடித்தது. ஆனால் அவரு ரஜினி ரசிகர்னு சொன்னதும் 50% மார்க் குறைச்சிட்டேன். எப்படி இந்த மாதிரி நல்ல டேஸ்ட் இருக்கிறவங்க ரஜினி ரசிகர்களாக இருக்க முடியும்னு என்னை நானே கேட்டுக்கிட்டேன். இதுனால அவர் பேட்ட படத்தையும் பார்க்க விருப்பமில்லை. ஏன்னா சூ.ஸ். வச்சி எடுத்தா அவர் 50 பேரை ஒத்தையா நின்னு தம் கட்டி அடிக்கிறதையும் பார்க்கணுமேன்னு கவலை. சண்டையிலும் தமிழ் கூறும் திரைப்பட நல்லுலகில்... அடிக்க வர்ரவங்க ஒத்தை ஒத்தையா அடிக்க வந்து கதாநாயகனிடம் அடி வாங்கி சாவார்கள். (அது எப்படி அவங்க மட்டும் கதாநாயகன் அடிச்சதும் உடனே செத்துர்ராங்க.. !)


ரெண்டு படமும் ஒண்ணா ஒரே நேரத்தில... சரி .. பிடிக்காத ரெண்டு படத்தை ஒரே நேரத்தில பார்க்கலாம்னு 5 மணி நேரத்தை வேஸ்ட் பண்ணியாச்சு.


அதென்னங்க   ஷங்கர் 300 - 400 கோடி படம் அப்டின்னாங்க. அம்புலிமாமா படம் எடுக்க இத்தனை செலவா? அட... அந்த பஷிராஜனா வர்ராரே அவருக்கு ஒழுங்கா ஒரு தாடி மீசை கூட சரியா வைக்கலை. ஆனால் என்னமோ அங்க இருந்து .. இங்க இருந்து மேக்கப் பண்ண ஆட்கள் வந்தாங்க அப்டின்னு பில்ட் அப் கொடுத்தாங்க. அதைவிட அசிங்கமா நம்ம ஆளு ரோபாட்டா வர்ரார். கிராபிக்ஸ் அப்டின்னாங்க. அதில அந்த human figure கூட சரியா வரலை. மேல்பாதியும் கீழ் பாதியும் சரியில்லாத proportionல இருக்கு. பார்த்தாலே ரொம்ப வேடிக்கையாக இருந்தது. அவர் வர்ராரு.. சென்னையில் பறக்குராறு... சென்னை ரோட்ல டாங்க் ஒண்ணு வந்திருது .. அத வச்சி பறவையை ஷூட் பண்றாரு. ஹீரோ ரோபாட் பொம்மையைப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வந்திச்சு. அது நடக்கிற நடை... பார்க்கிற பார்வை... எல்லாம் 400 கோடி. கதாநாயகிக்கு ஒரு ட்ரெஸ் போட்டு விட்டிருக்காங்க.... what a tasteless vulgarity கடைசியில் தலையோடு சேர்ந்து ஒரு பக்கம் கதாநாயகியும், ரோபோ பேரு என்ன? சுட்டியா? .அவரு ஒரு பக்கமும் நிக்கிற ஒரு சீன் பார்த்தேன். கதாநாயகியைப் பாவம் போல் பார்த்தேன். தாங்க முடியவில்லை... அத்தனை கேவலம்.


விட்டு விட்டுதான் படம் பார்த்தேன். ஆனால் ஷங்கர் படம் என்னால பார்க்க முடியலை. சரின்னு கொஞ்சம் அதிகமா கார்த்திக் படம் பார்த்தேன்.


என்னாங்கையா .. எந்த ஊர்ல எந்த செஞ்சுரில இருக்கோம். அவன் அவன் மெஷின் கன் வச்சி (அந்த கன் எல்லாம் பார்க்கும்  போதும் சிப்பு .. சிப்பாய் வந்தது!) குருதிப் புனலில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் உடம்பு தூக்கி எறியப்படுவதைக் காண்பித்திருப்பார்கள். கார்த்திக் முதல் இரண்டு தடவை அதைக் காண்பித்திருப்பார். ஆனால் கடைசியில் வில்லனை சுடும் போது ...நாலு பேர் மெஷின் கன் வைத்து தொடர்ந்து சுட்டுக் கொண்டே.... இருப்பார்கள். உக்காந்தபடியே.. பத்துப் பன்னிரண்டு குண்டுகளோடு சாய்வார், புரூஸ் லீ பெயர் கூட கார்ல எழுதியிருக்கும். ஆனால் நம்ம சூ.ஸ். சுத்துறது புரூஸ் லீயை விட வேகமாக சுத்துவார். நம்ம ஆளு வி.சே., சூ.ஸ். கூட உக்காந்திருப்பார். ரஜினியை விட ஏறத்தாழ இரண்டு பங்கு ‘வீங்கி’ இருப்பார். உருண்டு உருண்டு நடக்கிறார் வி.சே. கவலையாக இருந்தது.

இந்தப் படம் போட்ட காசை எடுத்ததா? எடுக்காமல் நட்டமாகிப் போய், அதனால் ஷங்கருக்குள்ள இந்த “பிரம்ம்ம்மாண்ட வியாதி” சுகமானால் நன்றாக இருக்குமே.


என்ன படமோ.. என்ன லாஜிக்கோ... சூ.ஸ். வச்சி எடுத்தா கார்த்திக் இல்ல யார் எடுத்தாலும் இதே மாதிரி ஹீரோயிசம் வைத்து எடுத்து.... நாசமா ஒரு படம் தான் கொடுக்க முடியும். ஹீரோவாச்சா ... அதுனால் ரெண்டு கதாநாயகி... period film மாதிரி. அட ...  காலேஜ் ஹாஸ்டல் காமிக்கிறார் கார்த்திக்.  காலேஜில படிச்சவர் தானே. அந்தக் கூட்டத்தில் காலேஜ் பசங்க மாதிரி யாரும் தெரியலை. கிழடு கட்டைகளா இருந்துச்சு. என்னமோ போங்க.


மொதல்ல நல்லா படம் எடுக்கிற இயக்குனர்கள் இந்த so called .. stars பக்கம் வராம இருந்தால் நல்லது. கார்த்திக், அட்லீ, ரஞ்சித் மாதிரி ஆட்கள் தங்களையும், தங்கள் திறமையையும்,  கதையையும் நம்பி, பெரிய நட்சத்திரங்கள் பக்கம் போகாமல் இருக்க ஏதாவது மந்திரம் தந்திரம் இருக்கா. இருந்தா சொல்லுங்க.  இருந்தா அத செஞ்சிரலாம்னு பார்க்கிறேன். திரை உலகம் கொஞ்சம் சுபிட்சமாயிருமே.(மாரி செல்வராஜ் அடுத்த படம் எப்படிப் பண்ணப் போறாறோ ... பயமா இருக்கு.)

என்ன நான் சொல்றது ...?

பி.கு. இதை எழுதியதும் அதுக்கு ஏதாவது படம் சேர்க்கலாமேன்னு கூகுள் ஆண்டவர்ட்ட போனேன். (அப்படியெல்லாம் போட்டா தானே நாலஞ்சு பேராவது வந்து வாசிப்பீங்க. எல்லோரும் சுத்தமா visuales ஆக ஆயிட்டீங்களே! ஏனுங்க? ) ஆண்டவர்ட்ட 2.0 போட்டா படம் வந்திரும்னு பார்த்தா அப்படி வரலை... வேறென்னமோ வருது. 2.0 அம்புட்டுதானா?

ஆண்டவர் காசு பற்றி நிறைய சொல்லியிருக்கார் பேட்ட படத்தைப் பற்றி. ஒரு வேளை காசு மட்டும் தான் ரொம்ப முக்கியமோ? மகேந்திரன் இறந்ததும் அத்தனை பாராட்டு. காசு பார்த்து விட்டாரா அந்த மனுஷன். என்னமோ .. ஒண்ணும் புரியலைங்க









 *




3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான மதிப்பீட்டைத் தந்துள்ளீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

எதுக்காக இன்னும் ப்ளாக்கை கட்டி “அழணும்னு” அப்பப்போ மனசுல தோணும். அதோடு ப்ளாக் முழு உசிரோடு இருந்த அந்தக் காலத்தில பின்னூட்டங்களே நம்மை அதிக ஆர்வத்தோடு மேலும் மேலும் எழுத வைக்கும். இப்போ அதுக்கும் சுத்தமா ஆப்பு வச்சிட்டாங்க. நிலைமை இப்படி கோமாவில இருக்கும் போது உனக்கு ஏன் இன்னும் ப்ளாக்கில எழுதணும்னு தோணுது. ஆனாலும் என்னமோ கிடந்து அடிச்சிக்கிது ... எழுதுனா அது ப்ளாக்கில...போனா போகுதுன்னு அதன் தொடுப்பை மட்டும் முகநூலில் கொடுக்கிறதுன்னு பொழப்பு போய்க்கிட்டு இருக்கு.

உண்மை
இன்றைய நிலை இதுதான் ஐயா
ஆயினும் தங்களைப் போன்றவர்கள் ப்ளாக்கைத் தூக்கிப் பிடிக்கத்தான் வேண்டும் ஐயா
தொடர்ந்து எழுதுங்கள்

velvetri.blogspot.in said...

நமக்கு பிடிச்சத நாம எழுதுவோம்.

Post a Comment