Monday, April 29, 2019

1042. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 3


தொடர்புள்ள பதிவுகள்

8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html



இரண்டாவது நாள். காலையிலேயே ஸ்பாட்டுகுப் போய்ச்சேர்ந்து விட்டோம். இது ஒரு பரபரப்பான, வேகமான நாள். இரவு 2 மணி வரை படப் பிடிப்பு செல்லலாம் என்றும் சொன்னார்கள்.  இன்றும் கரி பூசி விட்டார்கள். காலையிலேயே ஷாட் இருக்குமென்றார்கள். எனக்கும் வெங்கிக்கும் ஷாட் இருந்தது. உதவி இயக்குநர் கிருஷ்ணகுமார் எங்கள் ஸ்பாட்டுக்குக் கொண்டு சென்று என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். இதுவரை silence .. start ... rolling  ... action ... என்ற வார்த்தைகளைத் தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது எங்களைத் துரத்திக் கொண்டு அந்த வார்த்தைகள் விழுந்தன.சின்ன ஷாட் தான். ஆனால் நாலைந்து பேர் என்பதால் position  பார்த்து trial shots  பார்த்தார்கள். எனக்கு ஒரு மருத்துவரைத் தெரியும் - Dr. Sam C Bose, a plastic surgeon.  மதுரையில் இருக்கிறார். வயதில் எனக்கெல்லாம் நிறைய சீனியர். ஆள் குட்டை தான். ஆனாலும் ஆறடி உயர ஆட்களோடு போனாலும் எல்லோர் கண்களும் இந்த மருத்துவரிடம் தான் போகும். மிக நல்ல body language இருக்கும். அந்தக் காலத்திலேயே அவரை  ரசித்திருக்கிறேன். 50 வருடத்திற்கு முன் ரீகல் தியேட்டரில் அவர் படியேறி வந்த அழகு இன்னும் நினைவில் இருக்கிறது. மருத்துவ மனையில் தன் ஜூனியர்களோடு அவர் நடந்ததும் நினைவுக்கு வந்தது. சரி .. இந்த சீனில் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தேன். trial shotல் அவரை மாதிரி நடந்து பார்த்தேன். அப்போது  action  என்ற சத்தம் வந்தது. சொல்லிக் கொடுத்தது போல் செய்தோம். இயக்குநர் சில மாறுதல்கள் சொன்னார். மறுபடி action. மூன்றாவது ஷாட் ஓகே ஆயிற்று. அடுத்த சீனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் என்றார்கள். நான் நினைத்தது மாதிரி Sam C Bose மாதிரி நடந்தேனா / நடித்தேனா என்று தெரியவில்லை. காமிரா முன்னால் நின்றதுமே அரை மயக்க நிலைக்குப் போய் விட்டேன். எப்படி நடித்தேன் ... என்ன செய்தேன் என்று படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.





ஷாட்களுக்கு நடுவில் நேரம் எடுக்கிறது ஏன் என்று அப்போது நன்றாகத் தெரிந்தது. அந்த நேரம் தான் cinematographer அடுத்த ஷாட்டிற்கு ஒளி சேர்க்கை செய்யும் நேரம். அந்த இடைவெளியில் காற்று வரும் இடம் தேடிப் போனோம். அங்கே ஒருவர் தனி உடை, மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்து கொண்டிருந்தார். ஏற்கெனவே எனக்கு டெம்பரேச்சர் கொஞ்சம் ஏறிக் கொண்டு இருந்தது. வெங்கியும் என் நிலை தெரிந்திருந்தார் - அதாவது எனக்கு சுத்தமாக மனப்பாடம் செய்யும் திறமையே இளம் வயதிலிருந்தே கிடையாது. இனி எனக்கு முக்கியமான இரு சீன்களில் கொஞ்சூண்டு வசனம் பேசணும். மனப்பாடம் செய்து பார்த்தேன். அட .. போடா என்றது என் நினைவுத் திறன். வெங்கியிடம் சொன்னேன். என்னை மாதிரி ஒரு ஆளு அங்க முளிச்சிக்கிட்டு இருக்கிறார் என்றேன்.


எனக்கு மிகவும் பிடித்த லைட்டிங் ...

ஆனால் அடுத்த ஷாட் நானும் அந்த மனப்பாடக்காரர்  மட்டும் தான். அவர் என்னிடம் பேச வேண்டும். பாவம் அவர். அவர் என்னைவிட மோசம். action என்று சொன்னதும் அவர் பின்னால் இருந்த நண்பரைப் பார்ப்பார். அவர் எடுத்துக் கொடுத்ததும் டயலாக்கை ஆரம்பிப்பார். பாதி செண்டென்ஸில் நின்று விடும். cut என்று சத்தம் கேட்கும். இரண்டு மூன்று தடவை இதே மாதிரி டேக் ஆகிக் கொண்டிருந்தது. கிருஷ்ணகுமார் வந்து நல்லபடியாக ஏதேதோ சொன்னார். அந்த ஆளும் சரியென்று தலையாட்டி விட்டு மீண்டும் தடுமாறினார். தள்ளி விட்டு காரை எடுப்பது போல் சில முயற்சிகள்.  தடுமாறிய ஆளின் நண்பரும் உடை மாற்றி பின்னால் நின்று கொண்டிருந்தார். கிருஷ்ணகுமார் அவரைக் கூப்பிட்டுப் பேசச் சொன்னார். அவர் சரியாகப் பேசினார், முதலில் பேசிய ஆளை குரூப் ஷாட்டில் இருந்து கொள் என்று சொல்லி விட்டு நண்பரை என்னிடம் வசனம் பேசச் சொன்னார். அவர் நன்றாக செய்து ஷாட் ஓகே ஆனது. அவர் பேசும் போது என் reactions சரியாக இருந்தது என்றார் இயக்குநர்.

நான் வெங்கியிடம் ’பேசாமல் நீங்களும் என் வசனத்தை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். நான் தடுமாறினால் நீங்கள் பேசி எடுத்து விடலாமே’ என்றேன்.  எங்கள் கேசில் அது முடியாது என்பது இருவருக்குமே தெரியும். என்ன நடக்கப் போகிறதோ?

ஏறத்தாழ மதியம் ஆகி விட்டது. இனி அடுத்த ஷாட் அங்கே நடக்கும் என்று ஓர் அறையைக் காண்பித்தார்கள்.எனக்கு scene details தெரியும். அதை இந்த அறையில் எப்படி எடுப்பார்கள் என்று ஆச்சரியாக நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த அறையைத் தயார் செய்யப் பல மணி நேரங்கள் எடுக்கும் என்பதும் தெரிந்தது. நீண்ட ஒரு ராத்திரிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம்.

இன்னொரு சோதனை. வெய்யிலின் வெக்கையில்  சட்டை வியர்த்து கசங்கி விட்டது. இரு முறை கழட்டிக் கொண்டு போய் தேய்த்துக் கொண்டு வந்தார்கள். அதுவும் முடியாததால் பனியன் வைத்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். (ஆ.வி. எபிசோட் எடுத்த போதும் கேட்ட அதே கேள்வி.) இல்லை என்றேன். ஏதோ கானா தேசத்தில் வானிலிருந்து உணவு விழுமே (எப்படி பைபிள் வார்த்தைகள் எல்லாம் தெரிந்து பயன்படுத்தியிருக்கிறேன். பார்த்தீர்களா?) அதே போல் காஸ்ட்யூம் வண்டியிலிருந்து ஒரு புது பனியன் இறங்கியது. போட்டுக் கொண்டேன்.

மாலை வந்தது. நல்லதொரு மழையையும் அழைத்து வந்தது. வெயிலின் தாக்கம் போய் மழையின் குளுமை வந்தது. நான் சொன்ன அறையில் வேலை நடந்து கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். அழைப்பு வந்தது. ஒரு காட்சியில் நானும் வெங்கியும் மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க எதிர்ப்பக்கம் கதா நாயகன் - ஆர்யா - உட்கார்ந்திருப்பார்.  காமிரா அவருக்குப்  பின்பக்கம் இருக்கும். நான் பேச வேண்டும். அதனால் அந்த ஷாட்டில் நான் பேச காமிரா எங்களைப் படம் பிடிக்கும். கிருஷ்ணகுமார் மனப்பாடமாக எதுவும் பேச வேண்டாம். conceptயைப் பிடித்துக் கொள்ளுங்கள். அதைப் பேசி விடுங்கள் என்றார். கொஞ்சமல்ல ... நல்லாவே நடுக்கம். சிறிதே பெரிய அறை. அதில் பாதி இடத்தை காமிரா பிடித்துக் கொண்டிருந்தது. லைட் போட .. அது இதுவென்று புகைப்படக்குழுவினரே அதிகம் இருந்தனர். அதோடு சேர்த்து மானிட்டர் ... இயக்குநர் குழு ... குற்றேவல் குழு என்று பெருத்த கூட்டம் வேறு. அந்த அறைக்குள்ளேயே 30 - 40 பேர் இருந்திருப்பார்கள். வசனம் பேசும் முன் சுற்றி மக்கள். வெட்கம் .. பயம் ..தடுமாற்றம்........ எல்லாம் ஒரு கலவையாக வந்து என் மேல் உட்கார்ந்து கொண்டது.

வசனம் இரண்டு பகுதியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. முதலில் ஒரு trial. பேசி விட்டேன். ஆரியா நன்றாக இருந்தது என்றார். கொஞ்சம் ஜில் ...  அடுத்து action என்றார்கள். முதல் போர்ஷன் பேசி விட்டு இரண்டாம் பகுதியை ஒரு சிறு pause விட்டுப் பேசணும்.. அது தனி ஷாட் என்பது போல் விட்டு விட்டேன். ‘ஒரு போர்ஷன் விட்டுட்டீங்க...’ என்றார் ஆர்யா. கிருஷ்ண மூர்த்தியும்  சிறு pause விட்டுத் தொடர்ந்து பேசிடுங்க என்றார். ஒரு தம் ... பேசி விட்டேன். cut சொன்ன  இயக்குநர் ‘நல்லா இருந்தது’ என்று  மைக்கில் சொன்னார். ஆர்யாவைப் பார்த்தேன். ‘நல்லா பண்ணிட்டீங்க. என்றார். கொஞ்சம் மேலே பறக்க ஆரம்பித்தேன். ஆனால் மூன்றாவது முறையாக மீண்டும் எடுத்தார்கள். கிருஷ்ணமூர்த்தியும் வந்து நல்லா இருந்தது என்றார்.

அடுத்த ஷாட். அப்படியே உல்டா புல்டா ... இப்போது காமிரா எங்கள் பின்னால் வர நாங்கள் காமிராவிற்கு முதுகு காண்பித்து உட்கார வேண்டும். அதே ரூம். ஆனால் எல்லாவற்றையும் அப்படியே மாற்றிக் காண்பிக்க வேண்டும், நாங்கள் வெளியே காத்திருந்தோம். ஆட்கள் பரபரவென்று செட்டிங்க்சை அப்படியே மாற்றி, அதற்கேற்றாற்போல் ஒளியை மாற்றி மெஷின் போல் வேலை பார்த்ததை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

அடுத்த ஷாட் ரெடி. நான் வேறு சட்டை போட்டுக்கொண்டு வெங்கியோடு உட்கார எதிரில் ஆர்யா. ஒரு விஷயம் பார்த்தேன்; ஆச்சரியப்பட்டேன்; நானும் அதைப் பழகிக் கொண்டேன். ஆர்யா நான் பேசும்போது தீவிரமாக என்னைப் பார்த்து விட்டு, பின் பார்வையை மாற்ற வேண்டும். அவருக்கு டச்சப் அது இதுவென்று செய்யும் போது சாதாரணமாக இருந்தார். ஆனால் அந்த நாற்காலியில் அமர்ந்த உடனேயே முகபாவம் அந்த தீர்க்கமான பார்வையோடு இறுகி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாற்காலியில் அமர்ந்ததும் It was like sinking into his mood ... அப்படியே அமிழ்ந்து போய் விடுகிறார். முதலில் அவர் என்னைக் கூர்ந்து கவனிக்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை ... அவர் அந்தப் பாத்திரமாக மாறுகிறார் என்று தோன்றியது. நானும் அதைப் பழகிக் கொண்டேன். நானும் அடுத்த actionக்கு முன்பே அவரைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலும் நான் பேசிய வசனம் ஓகே ஆனது. அதற்கு முன்பே மேசை மேலிருந்து ஒரு கோப்பினை இடம் மாற்றி வைத்திருந்தேன். அதை என்னிடம் சொல்லி மீண்டும் பழைய இடத்தில் வைக்க சொன்னார்.அது இன்னொரு ஷாட் வாங்கியது. இந்த கூரிய observation அவரிடம் இருப்பதாக பின்னால் மற்றவர்களும் சொன்னார்கள்.

மக்கள் ஏற்கெனவே என்னிடம் ஒன்று சொல்லியிருந்தார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் எங்களைப் போன்ற green horns ஆட்கள் புதிதாக நடிக்க வந்தால் நன்றாகப் பேசி தைரியப்படுத்துவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அது உண்மையாகவே இருந்தது. தேவையோ தேவையில்லையோ ... என்னிடம் இரு முறை நன்றாக இருந்தது என்றார். அது உண்மையோ பொய்யோ .. ஆனால் அந்த  வார்த்தைகள் நன்கு உற்சாகமூட்டின.. அதோடு இரண்டாம் வசனம் எடுக்கும் போது அந்த அறையில் முப்பது நாற்பது ஆட்கள் இருந்து நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வே இல்லை. அதனால் முன்பிருந்த நடுக்கமோ தயக்கமோ சுத்தமாக இல்லை. இயல்பாக இருந்ததாக உணர்ந்தேன். (ஒரு நடிகன் நிஜமாகவே பிறந்து விட்டானோ??!!)

இது போல் இரு வசனங்களை இருபுறம் மாற்றி மாற்றி எடுத்து முடித்தார்கள்.
என் வேலை முடிந்தது என்றார்கள்.







வெளியே நல்ல மழை. மணி பத்தரை ஆகியிருந்தது. தனியாக ஆர்யாவிற்கு நன்றி சொல்ல நினைத்தேன், மழையினால் சொல்ல முடியாது போயிற்று. பசியோடு விடுதி வந்து சேர்ந்தோம்.










மிச்சக் கதைகள் ... மீதிக் கதைகள் ... இனி படம் வெளி வந்த பிறகு தான் என்று நினைக்கின்றேன். இல்லை ... இல்லை ... dubbing இன்னும் இருக்கிறதே. அந்த  அனுபவத்தையும் பிறகு எழுத வேண்டும். மே மாத நடுவில் இருக்குமென்று சொல்லியுள்ளார்கள்.

சாதாரண போட்டோவில் என் கண்ணாடியின் கலர் தெரிந்து கண்ணே தெரியாமல் போய்விடுகிறதே .. மூவி காமிராவில் எப்படியிருக்கும்? பொறுத்திருந்து தான்  பார்க்கணும்....



*

1 comment:

Post a Comment