Tuesday, April 23, 2019

1040. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 1

*


8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html

*

அதென்னவோ எனக்கொரு ராசி. சின்ன வயசில பல தடவை நாடகங்களில் தலை காட்டியிருக்கிறேன். சோகம் என்னன்னா... கொஞ்சம் பெரிய லெவலில் நடந்த மூன்று நாடகங்களில் பைபிளில் சொல்லும் "Prodigal son" கதையிலேயே தொடர்ந்து நடித்திருக்கிறேன். உண்மையிலேயே நானும் ஒரு ஊதாரிப் பிள்ளை தானே.  அதில் முதலில் நடித்தது மிக இளம் வயதில். அதுவும் எங்கள் கிராமத்தில். என் பாட்டையா நடத்திய பள்ளியின் ஆண்டுவிழாவில். ரொம்பச் சின்ன வயது. எப்படி நடித்தேன் என்று தெரிந்து கொள்ள இங்கே போங்களேன். 


படிக்கிற காலத்தில் கிறிஸ்துமஸ் ஒட்டி இளைஞர் மன்றத்திலிருந்து கோவிலில் ட்ராமா போடுவோம். அதிலும் ஒரு தடவை ஊதாரிப்பிள்ளை நாடகம், அதில் நினைவில் இருக்கும் ஒரே விஷயம் என் நண்பனின் வேட்டி தான், அவன் எனக்கு அப்பாவாக நடித்தான். அவனுக்கு பஞ்சகச்சம் மாதிரி ஒரு வேட்டியைக் கட்டி மேடைக்கு அனுப்பினாங்க. நான் திருந்தி வரும் சீன். இவன் என்னைப் பார்க்கும் வேகத்தில் படியேறியவனுக்கு கால் தடுக்கி வேட்டி பின்னால் சொருகி இருந்தது கழண்டு விட்டது. ஓடி வந்து என்னை இரு கைகளாலும் இறுக்கித் தளுவ வேண்டும். ஒரு கை எனக்கு; இன்னொரு கை வேட்டிக்கு என்று அவன் division of labour செய்ய வேண்டிய கட்டாயம். எனக்குள் அவனுக்கு ஒரு கை இல்லையே.. ஏன் என்று ஒரு கேள்வி. எப்படியோ சமாளித்தான்.

சின்ன வயது நாடக நாட்களில் நினைவில் இருப்பது இவைகள் தான்.
அதன் பின் இப்போது சமீபத்தில் - மூன்று வருஷத்திற்கு முன் - இன்னொரு வாய்ப்பு. யூ ட்யூப்பில் வாரா வாரம் வர்ரது மாதிரியான சீரியல் எடுக்கும்  முயற்சியில் இரண்டு நாள் அனுபவம் கிடைத்தது - கேமிராவிற்கு முன்னால் நிற்கும் வாய்ப்பு. ஆனால் ஆரம்பித்ததைத் தொடர முடியாமல் போனது இன்னொரு சோகம். இருந்தாலும் அந்த முயற்சியை இங்கே பார்க்கலாம். ஒரு பெரும் நடிகனின் கடும் தோல்விச் சோகம் என்ற தலைப்பில் அதைப் பற்றிய என் பிலாக்கணம் இங்கே ...


இப்படியே முக்கால் நூற்றாண்டு ஓடிப்போய் விட்டது. இப்போ சினிமாவில நடிக்கக் கூப்பிட்டால் என்ன வேஷம் தருவார்கள்? நாம என்ன சூப்பர் இஸ்டாரா ... அவர் மாதிரி 65 வயசிலும் ஒரே வீச்சில ஐம்பது பேரை வெட்டிச் சாய்க்கிற ரோலா கொடுப்பாங்க !

வாய்ப்புகள் வந்தால் சில ரோல்கள் வந்து விடக்கூடாதுன்னு நினைப்பதுண்டு.  சில ரோல்களுக்கு வசனமே இருக்காது; இருந்தாலும் ஒன்றரை வரி மட்டும் வரும், உதாரணமா, ஒரு டிரைவர் வேஷம்னு வச்சுக்குவோம். அவருக்கு வசனமே இருக்காது, கார் கதவைத் திறந்து வச்சி பாஸ் ஏறியதும் கதவைச் சாத்தணும். நோ வசனம் ! அடுத்து சமையல்காரர் வேஷம். ஒரு தட்டில் டீ கப் வச்சி, பாஸ் பக்கத்தில போய் “ஐயா ... காபி” அப்டின்னு அமரிக்கையா சொல்லணும்,. முந்தின ரோலுக்கு இது பரவாயில்லை. அடுத்தது இன்னொரு வாடிக்கையான ரோல். டாக்டர் வேஷம். சட்டை, துணி மணியெல்லாம் போட்டிருக்கணும். ஊருக்குப் போகும்போது தூக்கிட்டு போற தோல்பை ஒண்ணு கையில் வச்சிருக்கணும், அல்லது ஸ்டெத்தை இறுக்கமா பிடிச்சிருக்கணும். ரெண்டு வசனம் பொதுவா இருக்கும்.

1. நல்ல வேளை ... சரியான சமயத்தில்  கொண்டு வந்திட்டீங்க; காப்பாத்திரலாம்.
2. இன்னும் 24 மணி நேரம் கழிச்சி தான் ஏதாவது சொல்ல முடியும்.


அடுத்து இன்னொரு ரோல் - அதுவும் வயசான ஆளுகளுக்கு, ஒரு கயித்துக் கட்டில் அல்லது பணக்காரத் தாத்தாவா இருந்தா பெரிய கட்டில் ஒண்ணுல ஓரமா இருமிக்கிட்டே படுத்திருக்கணும், இருமலும் வசனமும் 75 : 25 விழுக்காட்டில் இருக்கும். அதாவது லொக்கு லொக்குனு இருமிக்கிட்டு, யாராவது ரெண்டு பேர் கைகளைச் சேர்த்துப் பிடிச்சி வச்சிக்கிட்டு இருமிக்கிட்டே தலையை டக்குன்னு சைட்ல திருப்பி செத்துப் போகணும். ஆனால் இந்த நாலாவது ரோல் எல்லாம் பழைய படங்களில் தான் வரும். மாடர்ன் டைம்ஸில் அதெல்லாம் இல்லாமல் போச்சு. அந்தக் காலத்தில எல்லாம் அந்த கிழட்டு ரோலுக்கு ரொம்ப பேர் ஆசைப்படுவாங்க. ஏன்னா.. கடைசி சீன்ல இருமிக்கிட்டே கதாநாயகியை - அதாவது பேத்தியை - இறுகப் பிடிச்சிக்கிட்டே செத்துப் போகலாம்னு அந்தக் காலத்தில் சொல்வாங்க.. இப்போது அந்த சீனெல்லாம் கிடையாது.

இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் இப்படியெல்லாம் எடுத்து வைத்துவிட்டு எடிட்டிங் சமயத்தில் படத்தின் நீளம் .. அகலம் காரணமாக அதையெல்லாம்  துண்டாடுவாங்க. சுத்தமா அம்பேல் கூட ஆகிரும்.
இப்படி பல கண்டங்கள் உண்டு.

இப்போது ஒரு அழைப்பு வந்தது.மேலே சொன்ன எனக்கிருந்த  சந்தேகங்களால் வெளியே சொல்லாமல் எனக்குள் மெளனம் காத்தேன். பிறகு நாலைந்து நாள் கழித்து வீட்டம்மாவிடம் சொன்னேன். அடுத்து நான்கு நாட்கள் கழித்து பிள்ளைகளுக்கு மட்டும் சொல்லி விட்டு, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மெளனம் காத்தோம். கூப்பிட்டவர்கள் கடைசி வரை “தைரியமாக” இருக்க வேண்டுமே. சினிமாவில் தான் கரணம் தப்பினால் மரணம் போன்று இருக்குமே... அதனால் வாய்ப்பு நிச்சயம் ஆன பிறகு பேரப் பிள்ளைகளில் ஆரம்பித்து அனைவருக்கும் சொல்லிக் கொள்ளலாமென நினைத்தேன். என் சம்மதம் கேட்டவர்கள் ஒரு மாதம் முன்பு என்னை நேரே வரச் சொன்னார்கள். சென்னைப் பயணம். சந்திப்பு. நடந்தது..

என்ன ரோல் என்று சொன்னார்கள்.. shooting dayts, place  எல்லாம் சொன்னார்கள்.

அதெல்லாம் எப்படி நடந்ததுது என்று பிறகு சொல்கிறேனே...! அதுக்கு முன்னால என்ன ரோலாக இருக்கும்னு ஒரு guess work சொல்லுங்களேன்!


 *7 comments:

G.M Balasubramaniam said...

நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவங்கள் நிறையவே உண்டு

சார்லஸ் said...

அடடா....அதிர்ஷ்டம் 75 வயதிலும் வருகிறதே...! வாழ்த்துகள்....ஓய்விற்கு பிறகுதான் நீங்கள் ஸ்டார் போல ஒளிர ஆரம்பித்து விட்டீர்கள் . அதுவரை குடத்துக்குள் ஒளியாய்....

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா
காத்திருக்கிறேன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் சார்.

unmaiyanavan said...

வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் இந்த வயது அனுபவங்களை தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.
எனக்கும் இங்கே சிட்னியில் சில நாடகங்களை எழுதி இயக்கிய அனுபவங்கள் இருக்கின்றன
நேரமிருந்தால் படித்து பாருங்கள்
https://unmaiyanavan.blogspot.com/2014/03/blog-post_2.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Winkins Santosh said...

Super sir ��������

Post a Comment