Friday, February 28, 2020

1085. அழுவாச்சி ஆக்கிய பாடல்கள் ..

முதல் முறையாக அந்த மூன்று பாட்டுகள் கேட்ட பொழுதுகள், அப்போது உணர்ந்த உணர்வுகள் இன்னும் நன்கு நினைவில் உள்ளன.

முதல் பாட்டு  1970ல் இருக்க வேண்டும், அந்த ஆண்டு தான் அந்தப் படம் வெளியானது. தஞ்சையில் வேலை பார்த்த காலம். ரயில் நிலையத்திலிருந்த் வெளியே வந்ததும் எதிரே இடது பக்கத்தில் பெரியார் ஹோட்டல் ஒன்றுண்டு. ஒரு மாலை. அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தோம். புதிய பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது, திடீரென்று அந்தப் பாட்டு ஒலித்ததும் அப்படியே அந்தப் பாட்டு எங்களை இழுத்தது. உடம்பு அதிர்ந்தது போல் உணர்ந்தேன். (சின்ன வயசில்லையா .. அதான் .. கண்ணீரென்றெல்லாம் ஏதும் வரவில்லை. அதாவது இந்தப் பாடலில் நான் அழுகாச்சி ஆகவில்லை.) உடன் இருந்த நண்பர்களும் என்னைப் போல் சிவாஜி ரசிகர்கள். அது எந்தப் படத்துப் பாட்டு  என்பது தெரியாது. செளந்தரராஜன் பாடிய பாடல். நிச்சயம் அது சிவாஜிக்காகத்தான் பாடியிருக்க வேண்டும் என்று நினைத்தோம். எந்தப் படம் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டோம். வியட்நாம் வீடு. படம் இன்னும் வெளிவரவில்லை. 

"உன் கண்ணில் நீர் வழிந்தால் 
என் நெஞ்சில் ரத்தம் கொட்டுதடி ...” 

என்ற பாட்டு. எங்கள் ஊகம் சரி. சிவாஜிக்காகப் பாடிய பாடல். எங்களுக்குள் ஒரு பந்தயம். பாட்டை செளந்தரராஜன் நன்றாகப் பாடியிருக்கிறாரா .. இல்லை .. சிவாஜி அழகாக நடித்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்றோம். ஏனெனில் பாட்டை அத்தனை அழகாகப் பாடியிருந்தார்.மகாதேவன்  இசையமைப்பாளர். சிவாஜியா செளந்தரராஜனா என்று எங்களுக்கு முடிவெடுக்க சிரமமாகப் போய்விட்டது. சாலையில் நின்று கேட்ட பாடல். இன்றும் அந்தப் பாட்டைக் கேட்கும் போது தஞ்சை சென்று வந்து விடுவேன். அவ்வளவு பிடித்துப் போன பாட்டு.


இரண்டாவது பாட்டு ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தில் 

‘காற்றில் வரும் கீதமே .. 
என் கண்ணனை அறிவாயா .

பாடல் மூன்று குரல்களில் ஒலித்தது. பாட்டு கேட்கும்போதே .. வழக்கமாகச் சொல்வார்களே .. அது போல் உடலே அதிர்ந்தது. இன்னும் ஆழ்ந்து கேட்க கேட்க கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அது என்ன ராகம் .. என்ன அது அல்லது இது .. என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசையறிவு கிடையாதே. இருந்தும் ஏனோ அந்தப் பாட்டைக் கேட்கும் போது .. ஒன்று சொல்வார்களே விதிர்ப்பு என்று. அது எனக்கு நடந்தது. கொஞ்சம் அழுகாச்சியானேன். அதன் பிறகு தான் அது எந்தப் படப் பாட்டு .. யார் இசையமைப்பாளர் என்றெல்லாம் தெரிந்தது. பாட்டிற்காகப் படம் பார்த்தேன். கதாநாயகி கதாநாயகனின் வீட்டிற்கு வருகிறாள். வீட்டு உறுப்பினர்களின் அன்பை,ஒற்றுமையை இந்தப் பாட்டில் உணர்கிறாள். பாட்டு முடியும் போது விரைந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் - கண்களில் கண்ணீரோடு!


மூன்றாவது பாட்டு இன்று (28.2.20) காலை கேட்ட பாடல். முதல் முறையாகக் கேட்கிறேன். சைக்கோ படப் பாடல். ஏற்கெனவே ’உன்ன நினச்சேன்’ பாடலை முதல் தடவை கேட்ட போது ஓடும் ஓட்டத்தில் கேட்டேன். பழைய ராஜா பாடல்கள் மாதிரி இல்லையே என்ற வழக்கமான நினைவு தான் வந்தது. ஆனால் இரண்டாவது தடவை ஓடிக்கொண்டிருந்த ரயிலில் - அதாவது ear phone போட்டுக் கொண்டு கேட்டேன். மிகவும் பிடித்தது. அதுவும் அதில் வரும் கிட்டாரின் இசை மிகவும் பிடித்தது. கேட்க கேட்க பிடித்த பாடலாக மாறியது. ஆனால் அதையும் தாண்டி இன்று காலை புதிதாகப் போட்ட spotify appல் சைக்கோ படத்தின் இன்னொரு பாட்டு கேட்டேன். காலையில் நடைப் பயிற்சியில் கேட்டேன் with ear phone. 

"நீங்க முடியுமா .. 
நினைவு தூங்குமா …” 

என்ற பாடல்.  என்னங்க இது? ஒரு புது உணர்வு. சித் ஒரு பக்கம் பாடிக்கொண்டே போகிறார். அவருக்கு B.G.M. வாசிப்பது போல் ஒரு இசைக் கோர்வை. எனக்கு music அப்டின்னா என்னன்னு தெரியாதுன்னு ஏற்கெனவே சொல்லி விட்டேன்.. ஆனால் அனுபவிக்க மட்டும் தான் தெரியும். இது ஏதோ ஒரு புது வகை இசையமைப்பாக இருக்கலாம். குரலிசையும், இசைக் கோர்வையும் - with guitar dominating it - தனித் தனி ட்ராக்குகளில் போவது போல் எனக்குத் தோன்றியது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இரண்டும் பயணிப்பதாகவும் ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று இசைந்திருப்பது போலவும் எனக்குத் தோன்றியது. என்ன வகை இசை ஜாலமோ தெரியவில்லை. ஆனால் அது என்னைத் தொட்டது. மனதை இளக்கியது. கண்கள் கலங்கின. என்னமோ போங்கள் .. இப்படி ஒரு இசையா என்று வியந்து நின்றேன்.


எனக்கு தான் இசை தெரியாது. இசை விற்பன்னர்கள்  யாராவது இந்த மூன்றாவது பாடலை, அதன் சிறப்பை சொன்னால் தெரிந்து கொள்கிறேன். Counter point மாதிரி இதுவும் வேறு ஒரு இசை வடிவமோ?



இன்னொரு உண்மை இன்று எனக்குப் புரிந்தது. வெளிநாட்டுக்காரர்கள் பலரும், அல்லது ஏறத்தாழ அனைவரும் ear phone போட்டு பாட்டுக் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று தான் அதற்கான காரணம் தெரிந்தது. ear phone போட்டு பாட்டு கேட்டால் தான் பாட்டு கேட்கணுமோ… என்ன ஒரு தெளிவு .. என்ன ஒரு clarity.. இசையின் ஒவ்வொரு அணுவும் காதில் அல்லது மண்டைக்கு உள்ளேயே விழுகிறது. இசை ear phone வழியே சொர்க்கத்திற்கு அழைத்துப் போகிறது……..வாவ் !










*

No comments:

Post a Comment