தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனவின் ஆரம்பகாலத்தில் டிரம்புக்கு வரவேற்பு சொல்லிவிட்டு, குறுக்குச் சுவர் கட்டிக் கொண்டிருந்தோம். இப்பொழுது நமது பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. நோயின் ஆரம்ப காலத்திலேயே அறிந்திருந்தும் அப்பொழுது தடையேதும் விதிக்கவில்லை. புதியவர்கள் உள்ளே வந்தார்கள். வியாதி பரவியது .அதன்பிறகு தடை. சட்டங்களும் சோசியல் டிஸ்டன்ஸிங் எல்லாம் வந்துவிட்டன. சரி … நடந்தது நடந்து விட்டது. 14ஆம் தேதி வரை தடை உத்தரவு இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்
இப்போதும் கூட நமது மக்களுக்கு புத்தி வந்து விட்டதாக எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய பட்டணங்களில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்குவதற்கும் கறி வாங்குவதற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்தான ஒரு கால கட்டத்தில் படித்தவர்களும் இது போல் இருப்பது கேவலம் தான். அடுத்த வாரம் ஆட்டுக்கறியேகிடைக்காது .. சாப்பிட்டால் இந்த வாரம் தான் என்பது போல் பெருங்கூட்டம் கறிக்கடையில் “கட்டி ஏறியது”. அது கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் மேல்
என்றாலும் ”கட்டியேறிய” கூட்டம் குறைய வில்லை
அடிபட்டாலும் புத்தி வராதா நமக்கு . காவல்துறை கம்பெடுத்தால் தான் நாம் அடங்குவோம் போலும்.
கம்பெடுத்தால்தான் அடங்வோம் என்று சொல்லும்பொழுது இரண்டு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன முதலாவது எமர்ஜன்ஸி பீரியட். அப்போது மதுரைப் பல்கலையில் 12 பேராசிரியர்கள் எம்.பி.ல். படிப்புக்காக சேர்ந்திருந்தோம். வேறு வேறு துறைகள். ஆனால் மதிய சாப்பாட்டுக்கு ஒன்று கூடுவோம். அப்பொழுது நானும் இன்னொரு நண்பரும் மட்டும் எமர்ஜென்சிக்கு எதிராக இருந்தோம். அந்த நண்பரும் ஒரு மிதவாத ஆதரவாளர். மற்ற அனைத்துப் பேராசிரியர்களும் அப்படியே அடங்கிப் போய் எமர்ஜென்சிக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். அதுமுதல் நிகழ்வு. இரண்டாவது நிகழ்வு - ஜெயலலிதா பதவியில் இருக்கும் பொழுது மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டு வந்தார். தொலைத்து விடுவேன் என்றார் . எல்லோரும் பயந்து பயந்து அந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்றினோம். (ஜெயலலிதாவின் அந்த “அடிதடி” எனக்கு
மிகவும் பிடித்தது!) வீடு இல்லாதவன் கூட மழைநீர் சேகரிப்பு ஆரம்பித்து விட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒரு பயம். ஆகவே நாம் கம்பெடுத்தால் தான் அடங்குவோம் என்பது வெகு நிச்சயம். அந்த மாதிரி ஜனங்கள் நாம். சுயக்
கட்டுப்பாடு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் ஆட்கள் நாம்!
சரி .. இப்படியே ஒரு வழியாக 14ஆம் தேதி 144 முடிவுக்கு வருகிறது. அப்போது நாமெல்லாம் 15ஆம் தேதி காலையில் என்ன செய்வோம். ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கத் தீவிரமாகப் பாய்ந்து விடுவோம். பணக்காரன் விட்ட பணத்தைப் பிடிக்க ஓடுவான்; தன் கீழ்
இருப்பவரை விரட்டி வேலை வாங்குவான். வியாபாரிகள் வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பதற்காக மும்முரமாக வியாபாரத்தில் இருப்பார்கள். பாவப்பட்டதுகள் இப்பொழுதாவது வேலைக்குப் போகலாம்; நாலு காசு சோத்துக்குப் பார்க்கலாம் என்று ஓடி ஓடி வேலை தேடுவார்கள். இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த வைரஸ் 15-ந் தேதி காலையில் அல்லது காலையில் இருந்து மறுபடியும் பூதாகரம் எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. கட்டாயம் எடுக்கும் என்பதே பல அறிவியலாளர்களின் கருத்து.. சோசியல் டிஸ்டன்ஸிங் கட்டுப்படுத்தி வைத்திருப்பது 15ஆம் தேதிக்கு பிறகு மேலும் பெரிதாகி வெடிக்கும். வெடிக்கக் கூடிய ஆபத்துக்கள் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றன. என்ன செய்யப்போகிறோம்?
2009 ஆம் ஆண்டு வந்த இதே போன்ற நோய்ப் பிரச்சனைகள் அப்படித்தான் நடந்தது. இதை “இரண்டாம் வெடிப்பு” என்று சொல்வோமா??
ஒருவேளை தடை உத்தரவுகளை இன்னும் சில நாட்கள் நீடித்தால் நன்றாக இருக்கும். மொத்தம் 48 நாட்கள் என்று சொல்கிறார்கள் அது வரையில் இப்போதுள்ள நிலையிலேயே இருக்கலாமா .. இருக்க முடியுமா? என்பதும் ஒரு பெரிய கேள்வி. பணக்காரர்களுக்கும் மத்தியதர வர்க்கத்தினருக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாகக் கூட இருக்காது . நாமும் பழகி இருப்போம். ஆனால் அன்றாடம் காய்ச்சிகள் ..அவர்களுக்கான அடிப்படை தேவைகளை யார் கொடுக்கப்போகிறார்கள்? அதற்கு அரசாங்கம் ஏதேனும் முடிவெடுக்கிறதா? முடிவெடுக்க வேண்டும் .. ஏதாவது செய்ய வேண்டும் … ஆனால் என்ன நடக்குமோ தெரியவில்லை. ஏனெனில் எப்போதுமே கீழ்த்தட்டு மக்களை, அவர்களின்
நிலையைக் கண்டு கொள்ளும் மனம் இல்லாத மேன்மக்கள் நாம்! சட்டம் போடும்
நேத்தாக்களுக்கு அப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதே தெரியாது என்பது தான். உண்மை.
அவர்களுக்கு “சுவர்” கட்டி அவர்களை “ஓரம் கட்டத்தான்” தெரியும்.
ஒருவேளை கதவடைப்பை நீக்கினால் நாம் எல்லோரும் ஒன்றுகூடி ஒட்டு மொத்தமாக நாட்டை ஒரு ஆட்டு ஆட்டி விடுவோம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே மோடி கதவை மூடும் போது 8 மணிக்கு என்று சொல்லிவிட்டு 9 மணிக்கு 144 போட்டார். பரவாயில்லை நமது தமிழக அரசு. ஒரு நாள் இடைவெளி விட்டு அடுத்த நாள் மாலை வரை நம்மை விட்டு வைத்தார்கள். காய்கறி வாங்க மற்ற அவசிய தேவைகளை வாங்க. அதேபோல் புத்திசாலித்தனமாக இந்த முறையும் மத்திய அரசு சிறிது சிறிதாக மக்களை வெளியே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டால் நல்லது. அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் 22ஆம் நாள் முதலில் முக்கிய தேவைகளுக்கான அலுவலகங்களை மட்டும் ஆரம்பிக்கலாம். அதற்கான ஆட்கள் மட்டும் காக்கிகளின் கம்புகளிலிருந்து காப்பாற்றலாம். வங்கி, பலசரக்கு கடைகள் போன்ற அவசரத் தேவைகளை மட்டும் ஆரம்பிக்கலாம். ஒரு வாரம் கழித்து இன்னும் கொஞ்சம் அதிகமான அலுவலகங்கள், வியாபாரங்களை ஆரம்பிக்கச் சொல்லலாம். நமது உயிரோடு கலந்து விட்ட சினிமா தியேட்டர்களும், மால்களும் மெல்ல 3 வாரங்கள் 4 வாரங்கள் கழித்து ஆரம்பித்தால் போதும். இப்படிப் படிப்படியாக ஒருவேளை கதவைத் திறந்தால் சிரமங்கள் குறையலாம்.
அரசு என்ன செய்யுமோ … நாம் என்ன செய்யப் போகிறோமோ? காலன் கதவைத் தட்டுகிறார் கொஞ்சம் கண்ணைத் திறப்போமா?
“இரண்டாம் வெடிப்பு”
நிகழாமல் இருக்க
ஆவன செய்ய வேண்டும்.
3 comments:
Rightly said sir
Rightly said sir
நல்லதே நடக்கும்... நடக்க வேண்டும்...
Post a Comment