Monday, June 08, 2020

1100. கருப்பு துரை ...





*

  ஆயிரம் தாண்டிய எனது 1100 வது பதிவு.. 

*****


பயங்கர சிரிப்புன்னா வாயை நல்லா திறந்து சிரிக்கணும்; அதாவது உதடுகள் இரண்டு இஞ்சாவது விரியணும். சத்தம் வேறு வரணும்.

சிரிப்புன்னு சொன்னா உதடுகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மொத்தத்தில ஒரு இஞ்ச் அதாவது இரண்டரை  செ.மீ. உதடுகள் இழுக்கப்படணும்;

புன்னகைன்னா அரை இஞ்ச் அதாவது ஒரு செ.மீ.க்கு கொஞ்சூண்டு கூட உதடுகள் விரியணும்.

மெல்லிய புன்னைகைன்னா அரை செ.மீ, தான் கணக்கு.
ஆனா இந்தப் படம் பார்க்கும் போது அரை செ.மீக்குக் குறைவாக உதடுகள் இருக்கிறமாதிரி மிக மெல்ல்ல்லிய புன்னகையோடு படம் முழுவதையும் - கடைசி பத்துப் பதினைந்து நிமிடங்கள் தவிர்த்து - பார்க்க வேண்டியதிருந்தது.

நல்ல படம் …
*****

ஈரானியப் படம் ஒன்று பார்த்தேன். Where Is My Friend's Home? வீட்டுக் கணக்கு நோட்டைத் தன்னுடன் படிக்கும் தோழனிடம் சேர்ப்பதற்காக சின்னப் பையன் ஒருவன் தன் தோழன் வீட்டைத் தேடி ஓடும் படம். அந்தப் படம் பார்க்கும் போது இது மாதிரி படங்கள் நம் ஊரில் எடுக்க மாட்டார்களா என்று ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இந்தப் படம் பார்த்ததும் அந்த மனக்குறையும் தீர்ந்தது.

நல்ல படம்.
*****

K.D. அல்லது கருப்பு துரை. ”தலைக்கு ஊத்திவிட” பிள்ளைகளும் உறவினர்களும் தயாராக, கோமாவில் இருந்த கருப்பு துரை நினைவுக்கு வந்து வீட்டை விட்டு ஓடிப் போனவருக்கு கோயிலில் துணை கிடைக்கிறது. துணை நண்பனாக, அமைச்சனாகி, அன்பால் பெரியவரை ஆட்டிப் படைக்கிறான் -- நம்மளையும் தான்.

இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது; பார்த்து மட்டுமே ரசிக்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு சீனும் நான் முன்பு சொன்னது போல் மெல்ல்லிய புன்னகையுடன் தான் பார்க்க முடியும். நான் படத்தை அதேபோன்று ஒரு மெல்ல்லிய புன்னகையோடு தான் பார்த்தேன்.

படம் முழுவது செடிகளின் பச்சை வண்ணம் நம்மோடு உடன் வரும். ஒரு வேளை அவர் வீட்டை முதலில் காண்பிக்கும் போது அப்பகுதியை ஒரு வறண்ட இடமாகக் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. இறுதியில் தாத்தா - பேரன் பஸ் ஸ்டாப்பை விட்டுப் போகும் போது பாதைகள் இரண்டாகப் பிரிகின்றன - அவர்களைப் போலவே. கடைசி சீனில் அவர் தப்பிப் போய் விட்டார் என்பதைக் காட்ட வீட்டிற்கு உள்ளிருந்து வெளிக்காட்சியைத் திறந்த கதவு வழியே காண்பித்ததும் நன்கிருந்தது. தாத்தாவின் ஒன்பது ஆசைகளையும் பேரன் நினைவேற்றி வைக்கிறான். என்ன .. மாசக் கணக்கில் கோமாவில் இருந்த மனிதனுக்கு ஊரைவிட்டு ஓடும் அளவிற்கு எப்படி அத்தனை உடல் நலம் கிடைத்தது என்பது மட்டும் ஒரு சின்னக் கேள்விக் குறியாக நின்றது. கருப்பு துரை வள்ளியைப் பார்ப்பதற்கு முன் தன்னைச் சீர்படுத்திக் கொள்வதும், வள்ளிப் பாட்டி மாட்டுச் சாணி வாடை கையிலிருந்த் போகுமளவிற்குக் கையை கழுவிக் கொண்டு தயாராக ஆவதும் .. நல்லதொரு காதல் கவிதை.

இயக்குநர் மதுமிதா. ஆனால் இயக்குநர் என்பது ”மதுமிதா & டீம்” என்று போட்டிருந்தது  அது அவரது பெருந்தன்மையைக் குறிக்கிறது. காட்சிக்குக் காட்சி நன்றாக இருந்தது. பாட்டு வரிகள் மனதைத் தொட்டன.


பார்த்து ரசிக்க வேண்டிய படம். பாருங்கள் …








*





No comments:

Post a Comment