Wednesday, September 16, 2020

1110. பல்லாண்டுகளுக்கு முன் கேட்ட கேள்வி




*

அமெரிக்கன் கல்லூரியில் பணி செய்யும்போது ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்தில் இரு நாட்களுக்கு retreat இருக்கும். யாரேனும் ஒரு கிறித்துவக் கல்வியாளர் வந்து இரு நாட்களுக்கும் எங்களுக்கு ஊக்கமூட்டும் விதத்தில் நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேசுவார்கள். கிறித்துவம், கல்வி, மாணவர்கள் என்று அவர்களது பேச்சு பலவற்றையும் தொட்டுச் செல்லும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதைவிட குடும்பங்கள் பல ஒன்று சேர்வோம். அதுவும் நேரத்தை இனிமையாக்கும். முதலில் வைகை அணைப் பகுதி போன்று ஆரம்பித்து அதன் பின் கொடைக்கானல் என்று இடம் மாறியது. அங்கும் முதலில் செண்பகனூரில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் கல்லூரியில் நடந்து, அதன்பின் கொடைக்கானலில் ஏரிக்கரையோரம் உள்ள அமெரிக்கப் பள்ளியில் நடைபெறும்.

இடம் கொடைக்கானலுக்கு மாறிய பின் நான் தவறாது அங்கு சென்று விடுவேன் - அந்த அளவு கொடைக்கானல் போவது பிடிக்கும். துணைவியார் பணியில் சேர்வதற்கு முன் குடும்பத்தோடும், அதன் பின் அவர்களது வசதியைப் பொருத்து குடும்பத்தோடு, அல்லது தனியாகவாவது ஓடி விடுவேன்.

ஓராண்டு ஏரிக்கரைப் பள்ளியில் குடும்பத்தோடு செல்லாமல் தனியாகச் சென்றிருந்தேன். அதே போல் தனியாக வந்திருந்த மூன்று நண்பர்களோடு அதிக நேரம் கழிந்தது. அதுவும் அவர்களில் தோமினிக் அண்ணனும், ஐசக் பயலும் கொஞ்சம் பக்திமான்கள். மீனாட்சி சுந்தரம் என்ற பிரெஞ்சு பேராசிரியருடனும்ம் என் காமிரா பொட்டியை எடுத்துக்கொண்டு பகலில் ஏரிக்கரைப் பக்கம் சுற்றிவிட்டு  வருவோம். (மூவரும் இப்போது இல்லை..)

அந்த ஆண்டு எங்களுக்கு வந்த சிறப்புப் பேச்சாளரைப் பற்றிக் கேள்விப்பட்ட போதே ஆச்சரியாக இருந்தது. இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இறையியல் கல்லூரி ஒன்றில் முதல்வராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பகலில் ஊர் சுற்றப் போனாலும் மாலை ஆறு மணிக்குமேல் வெளியே குளிருமல்லவா .. ஆகவே ஒழுங்காக உள்ளே அமர்ந்து விரிவுரையைக் கேட்பேன். அன்றைய பேச்சு கிறித்துவின் வாழ்க்கை பற்றி இருந்தது. பேச்சு முடிந்த பின் கேள்வி நேரம். பல நாளாக மனதிற்குள் இருந்த ஓர் ஐயம் - கிறிஸ்து கடவுளா அல்லது கடவுள் அனுப்பிய மெசையாவா என்று. சரி .. கேட்டு விடுவோமே என்று நினைத்து, எழுந்து, Sir, is Jesus a god? என்று கேட்டேன். ஓர் இறுக்கம் வந்தது போலிருந்தது. ஆனால் சிறப்புப் பேச்சாளர் மிகவும் அதிர்வான பதிலை வெகு வேகமாக, என் கேள்வி முடிந்த அடுத்த கணத்தில், No  என்றார். கொஞ்ச நேரம் அமைதி. பின் எனக்கு இரு வரிசைகளுக்கு முன்னால் இருந்த ‘மாப்பிள்ளை’ ஸ்டான்லி ஜெயசிங் - கணக்குப் பேராசிரியர் - தடாரென்று எழுந்தான். ‘ஏண்டா இங்கே வந்தாய்?’ என்று திரும்பிப் பார்த்துக் கோபமாகக் கேட்டான். அவனும் நானும் எப்போதும் வாடா .. போடா … உறவு தான். என்னை எப்போதும் மாப்பிள்ளை என்று தான் முதலிலிருந்தே அழைப்பான். அதனால் அவன் கோபம் பெரிதாகப் படவில்லை. அவனுக்கு மட்டும் கேட்பதுபோல், சிறப்புப் பேச்சாளருக்குக் கேட்காதவாறு ”அவனைப் பார்த்து கொடைக்கானல் ரொம்ப பிடிக்கும்’டா” என்றேன். அவனுக்கு என்னைவிட சிறப்புப் பேச்சாளர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்திருக்கும். அவரை ஒன்றும் சொல்ல முடியாதே … அதனால் அவன் என் பக்கம் திரும்பிட்டான்.

அடுத்த நாள் காலை. காலையுணவு நேரம். Buffet. தட்டில் உணவையெடுத்து வந்து கொண்டிருந்தேன். சிறப்புப் பேச்சாளர் எங்கள் கல்லூரி முதல்வரோடு நின்றுகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்ததும் முதல்வரிடமிருந்து சிறிது விலகி நின்று என்னைப் பார்த்து சிரித்து அழைத்தார். பக்கத்தில் வந்தேன். இடது கையிலிருந்த உணவுத் தட்டை வலது கைக்கு மாற்றிவிட்டு, இடதுகையை என் தோள் மேல் போட்டு அணைத்துக் கொண்டார். மெல்லிய குரலில், “தம்பி, you have asked a very good question in a very wrong place!" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு முதல்வர் பக்கம் திரும்பவும் சேர்ந்து கொண்டார்.

ஒரு வேளை இப்போதைய மனநிலையில் அன்று இருந்திருந்தால் இன்னும் அவரிடம் அதிக விளக்கம் கேட்டிருந்திருப்பேன். அப்போது நான் agnostic என்ற நிலைக்குக் கூட வரவில்லை. நிச்சயமாக அந்த விளக்கம் அப்போதே கிடைத்திருக்கலாம்.

கல்லூரி வந்த பிறகு ஸ்டான்லி என்னிடம் கொஞ்ச நாள் மட்டும் மூஞ்சைத் தூக்கிக் கொண்டிருந்தான். சில நாட்கள் மட்டும். அதன்பின் ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டான். அன்றைக்கு நான் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருப்பதாக நினைக்கின்றேன்.

அவனுக்கு இந்தக் கட்டுரையின் தொடுப்பை அனுப்ப வேண்டும். அதோடு,  https://sixth-finger.blogspot.com/2020/09/66-is-jesus-god-no-so-say-biblical.html - இதையும் அனுப்பணும். என்ன சொல்லி திட்டுவானோ தெரியவில்லை !!

 


No comments:

Post a Comment