அப்பாடா .. ஒரு வழியாக மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வேலை முடிந்தது. 532 கையெழுத்துப் பக்கங்கள். இனி அதைச் சரிசெய்து…. இன்னும் எவ்வளவோ இருக்கு ... ஆனாலும் ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்த மகிழ்ச்சி. கொண்டாட வேண்டாமா...?
சினிமா அதுவும் மலையாளச் சினிமா பார்த்து விட வேண்டும் என்று நெட்பிளிக்ஸில் தேடலை ஆரம்பித்தேன். விஜயசேதுபதி மலையாளத்துப் படத்திலா? அதுவும் நித்தியா மேனன் படமா என்று ஓர் ஆச்சரியம். படத்தின் பெயர் 19(1)(a). அது என்ன சட்டம் என்று பார்த்தேன்: Article 19(1)(a) of the Indian Constitution upholds freedom of speech and expression.
படம் ஆரம்பித்தது. விடியாத இளங்காலை நேரம். விசே வருகிறார். ஒரு டீ குடிப்பதற்குள் யாரோ வந்து அவரைச் சுட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் வரை அவரைக் காணவே காணோம்.
படம் பார்த்ததும் அப்படி ஒரு பெரும் ஆச்சரியம். இது போன்று ஒரு படம் தமிழில் வருவதற்கு அநேகமாக இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகும் என நினைக்கின்றேன்.ஏனெனில் நம் ரசிகப் பெருமக்களின் தரம் அப்படி. இப்படத்தில் விசே வரும் சீன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மீதியெல்லாம் நித்தியா மட்டுமே வருகிறார். அவரைச் சுற்றி மூவர்: ஒரு (இஸ்லாமியத்) தோழி; ஒரு கம்யூனிச தோழர்; வாழ்க்கையையே ஒதுக்கி வாழும் தகப்பன். இவர்களும் வரும் இடங்கள் எல்லாமே ஒரு கை எண்ணுக்குள்ளேயே தானிருக்கும். படங்கள் எதையும் விளக்குவதில்லை. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணி. டமில் ரசிகர்கள் இதில் தோற்றுவிடுவார்கள் என்று இயக்குநர்கள் பயப்படுவார்கள்.
2017 ஆண்டில் பெங்களுரில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் என்ற இதழாளரின் மரணம் இக்கதையின் ஆரம்ப வித்து. இதே போல் இப்படத்தில் வரும் சமுகப் போராளியான விசே கெளரி சங்கர் கொல்லப்படுகிறார். அவரால் எழுதப்பட்ட அவரது கடைசி எழுத்துகள் நகல் எடுப்பதற்காக நித்தியாவிடம் வருகிறது.
பெண் இயக்குநர் இந்துவிற்கு இது முதல் படம். அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். தயாரிப்பாளருக்குப் பெரும் பாராட்டுகள். படம் ஒரு காவியம் போல் மெல்லவே விரிகிறது. படம் முழுவதும் நித்தியாவிற்கே சொந்தம். இறந்து போன போராளி மீது நித்தியாவிற்கு ஏற்படுவது மரியாதை ஏற்படுகிறது. இல்லை .. அதையும் தாண்டி அவர் மீதான அபிமானம், அன்பு, பெருமிதம் எல்லாம் கூடுகிறது.அவரது நூலைத் தன் பையில் வைத்துக் கொண்டு நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடியே இருக்கிறார். சுவற்றில் வரைந்த விசேயின் படத்தைப் பார்க்கும் போது பின்னாலிலிருந்து ஒரு கேள்வி: எதைப் பார்க்கிறாய்? படத்தையா, வாசகங்களையா? என்றொரு கேள்வி. நித்தியாவின் பதில் இரண்டையும் தான். இதுவும் ஒரு காதல் அல்லது பக்தி தான்.
விசேயின் அக்கா வீட்டிற்கு ஒரு பத்திரிகையாளரோடு செல்கிறாள் நித்தியா. அங்கே ஒரு virtual விசே வருகிறார். (இங்கேயும் டமில் ரசிகர்கள் பெயிலாகலாம்!) அமைதியான, அழகான சீன். அந்த வீட்டிலிலிருந்து கிளம்பி நடக்கும் போது நித்தியா நின்று திரும்பி வேகமாகத் திரும்பி வந்து விசெயின் அக்காவைக் கட்டிப் பிடித்துவிட்டு, பின் திரும்பாமல் விரைகின்றார். எனக்குப் பிடித்த சீன்.
விசே எப்படி என்றே தெரியவில்லை. தன்னுடைய இருப்பின் தாக்கத்தை முழுவதுமாகத் தந்துள்ளார். அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் சிகரெட் பிடிக்கும் அழகிற்கு யாரும் பக்கத்தில் நெருங்க முடியாது என்று நினைப்பதுண்டு (புதிய பறவை, ‘யார் இந்த நிலவுப் பாடல் ... போன்றவைகள் நினைவுக்கு வருகின்றன). அந்தப் பாடல்களில் சிகரெட்டும் இன்னொரு character ஆகவே இருக்கும். அதன்பிறகு பல நடிகர்கள் முயன்று தோற்றதை விசே மிக அழகாகச் செய்துள்ளார். சிவாஜியின் நடிப்பில் aesthetics நன்கிருக்கும். ஆனால் விசே செய்தது அப்படியே ஒரு smoker செய்யும் விதத்தை அழகாகக் காண்பித்திருப்பார். இவரும் சிகரெட்டை ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார். மிக மிக சின்ன ரோல் தான் அவருக்கு. ஆனால் நிறைவாகச் செய்துள்ளார். இலைகள் நிறைந்த ஓர் ஒற்றையடிப்பாதையில் நடப்பதைக் காண்பித்திருப்பார்கள். நிறைந்த காட்சி. பின்னால் கதாநாயகி வந்து விடுவாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.
இப்படத்திப் பார்க்கும் போது, தீவிரமாக எழுதப்பட்ட ஓர் ஆணின் கவிதையை ஓர் அழகான பெண்ணின் குரலில் கேட்பது போன்றிருந்தது.
போராளிகள் கொல்லப்படலாம்; ஆனால் போராட்டம் சாகாது என்பதை மிக அழகாகப் படமாக்கியுள்ளனர்.

No comments:
Post a Comment