Sunday, September 18, 2022

1186. என் மேல ஒரு கேசைப் போடு பார்ப்போம் - திரைவிமர்சனம்




*

என் மேல ஒரு கேசைப் போடு ... பார்ப்போம்

குமாரசாமி மாதிரி ஆளுக நிறைய இருக்காங்க ...  குன்கா மாதிரிதான் நமக்கு யாருமில்லை ...




பல நாள் கழித்து 19 (1) (a) என்ற மலையாளப் படம் பார்த்து அசந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் இன்னும் இரு படங்கள் பெயரைச் சொல்லி அவைகளையும் பார்க்கச் சொன்னார். ஒரு 19 (1) (a) பார்த்து விட்டு, இதுபோல் தமிழில் படமெடுக்க இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்றேன். ஆனால் நண்பர் சொன்ன இரு படங்களில் ஒன்றான .. என் மேல கேசைப் போடு / Enn, thaan case kodu / sue me … என்ற தலைப்பில் உள்ள படத்தைப் பார்த்தேன். பார்த்ததும், ஒரு காலத்திலும் இப்படி ஒரு படம் தமிழில் வரவே வராது என்றே முடிவு செய்தேன்.

இரண்டு நடிகர்களை முதன் முதல் பார்க்கிறேன். அவர்களைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.

கதாநாயகனின் பெயர்:  குஞ்சாக்கோ போபன்.

நீதிபதியாக (மேஜிஸ்ட்ரேட்)  - குன்ஹி கிருஷ்ணன்.

கதை, வசனம், இயக்கம்  - android kunjappan  படம் எடுத்த ரத்தீஷ் பாலகிருஷ்ணன் போடுவால்.

ஆகஸ்டில் வெளிவந்த இப்படத்திற்கு இதுவரை வசூல் 50 கோடி. இதை ஏன் சொல்கிறேனென்றால் மலையாள ரசிகர்கள் இப்படத்தை மிக நன்றாக வரவேற்றுள்ளார்கள்.

இது ஓர் அரசியல் அங்கதம். பாவப்பட்ட மனுஷன் ஒருவன்சாலையில் உள்ள பள்ளத்தினால் சுவர் ஏறிக் குதிக்கிறான். அமைச்சர் வீடு அது. நாய்கள் குண்டியைக் (என்ன .. கேட்க நாராசகமாக இருக்கிறதா? படத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள்!) கடித்துக் குதறி விடுகின்றன. அவன் மேல் திருட்டுக் குற்றத்தைச் சாட்டுகிறார்கள். அவனோ சாலை சரியாகப் போடவில்லை என்று அமைச்சர் மேல் கேஸ் போடுகிறான். மந்திரிக்குக் கடைசியில் தண்டனையும் தண்டமும் கிடைக்கிறது.

முதல் அரை மணி நேரம் பார்த்து விட்டுப் படுக்கப் போய்விட்டேன். வடிவேலு சொல்வது போல் நான் பார்த்த முதல் பகுதி சின்னப்பிள்ளைத் தனமாகத் தோன்றியது. ஒரே ஒரு விசயம் தவிர. கதாநாயகன் ஒரு பூமர் அங்கிள். அவர் பயந்து ஓடி ஒரு கூட்டத்தில் நிற்கிறார்.  எல்லோரும் ஆடுகிறார்கள். நம் அங்கிளும் ஆடுகிறார். அது எனக்கு நிறைய பிடித்தது. (அந்த நடனத்தைப் ப்ரோமாகப்  போட்டு பயங்கரமாக ஹிட் ஆகியிருந்திருக்கிறது. மம்முட்டியின் பழைய படத்தை வைத்து ஆடிய நடனமாம் அது..)

அடுத்த நாள் படத்தைத் தொடர்ந்தேன். நிறுத்த முடியவில்லை. கதை பெட்ரோல் 65 ரூபாய் விற்பதிலிருந்து ஆரம்பித்து, நூத்தி சொச்சம் வரை செல்வது வரை கதையும் தொடர்கிறது என்று காண்பிக்கிறார்கள். நீதிமன்றத்துக் காட்சிகள். மாஜிஸ்ட்ரேட்டாக ஒருவர் வருகிறார்.  அப்படிப் பிடித்தது அவரை எனக்கு. பெயரும் அவரைப் பற்றிய விவரங்களையும் தேடினேன். Got confused!  இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். அவர் பெயர் குன்ஹி கிருஷ்ணன். . அசத்தலான நடிப்பு. 

                               

வழக்கு விசாரணையைக் கேட்டுக் கொண்டே  பாதாம் பருப்பு சாப்பிடுவது, ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடுவதும் ... கோர்ட் அறைக்குள் சுற்றியலையும் புறாக்களை சைட் அடிப்பதும் ... மனுஷன் செம அலப்பறை. மந்திரியை போட்டுப் பார்க்கிறார். பார்க்கும் நமக்கும்  இவரைப் போன்ற குன்கா  நீதிபதிகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. ஆனால் நமக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் வெத்து குமாரசாமிகள்  மட்டும் தான்.

சாதாரண கதை.  நிறைய ஜோக்குகள். இவைகள் எல்லாம் கற்பனைதான் என்றாலும் உண்மையாக இருக்கக் கூடாதா என்ற எண்ணங்களை மனதில் விதைக்கின்றன. இது போன்ற படங்களை அள்ளி அணைக்கும் மலையாள ரசிகர்களுக்கு என் அளப்பரிய மரியாதை.

நாங்களும் வளரணும் .........







*


2 comments:

KILLERGEE Devakottai said...

விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது _ கில்லர்ஜி

KILLERGEE Devakottai said...

திரைத்துறையில் தமிழர்களைவிட மலையாளிகள் மிகத் தைரியமானவர்கள் என்பது எனது அனுபவம்.
நான் நிறைய மலையாளப் படங்கள் பார்த்து இருக்கிறேன்.

முதல்வர் முன்பு நிருபர் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு மிஸ்டர் உம்மன்சாண்டி என்று கேள்வி கேட்பார்கள். தமிழகத்தில் ???

Post a Comment