https://www.facebook.com/M.Elangovan/posts/pfbid031NEYUsZAxbqXY5RL1jnfAtfpLjar3N7wqiLZspbq5J1S7waoG3rhd4ceMq5CzZEJl
எங்கள் அப்பாவின் பிறந்த நாள் இன்று. உயிரோடு இருந்திருந்தால் இன்றோடு அவருக்கு 78 வயது நிறைவடைந்திருக்கும்.
அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீத்தார் கடன் தீர்க்கும் சடங்குகளை செய்யும் புரோகிதர்களும், கோவில் முழுக்க விதவிதமான பெயர்களோடும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதைகளோடும் நிறைந்து கிடக்கும் தீர்த்தத் தொட்டிகளில் நீராட வரும் வட இந்திய மக்களிடம், அவரவர் மொழியில் கதையளந்து காசு கறக்கும் உள்ளூர் கைடுகள் பற்றியும் எங்கள் அப்பா சொல்லிக் கதைகள் கேட்க வேண்டும். விலா நோகச் சிரிக்க வைப்பவை அவை. மேலும் “கொடிது, கொடிது இளமையில் வறுமை” என்பதையும் முழுமையாக அனுபவித்தவர் அப்பா. இளம் பருவத்தில் மற்றவர்களைப்போல காசு கிடைக்கிறதே என்று கோவிலில் கைடு வேலை பார்க்கப் போகாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தியவர்.
அதனால்தானோ என்னவோ அவருக்கு இறை நம்பிக்கை என்பது சற்றும் இல்லாமல் போய்விட்டது போல. ஆனால் அக்காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களைப் போலவே அவரும் தனது கொள்கைகளை வீட்டில் யார்மீதும் திணித்ததில்லை. வீட்டுச் சடங்குகளில் கூட குடும்பத்தலைவராகக் கலந்து கொள்ளவே செய்தார்.
ஆனால், கோவில்களுக்குச் செல்லுதல், மூட நம்பிக்கைகள், பலியிடுதல் போன்ற சடங்குகள், வேண்டுதல்கள், வேண்டுதல் நிறைவேற்றங்கள், விரதங்கள், நல்ல நாள், கெட்ட நாள், ஜோதிடம், ஜாதகம் போன்ற எந்த ஒன்றிலிருந்தும் அவர் தன்னளவில் வெகுதூரம் விலகியே இருந்தார். அதே நேரம் இவை அனைத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த அம்மாவை அவர் கேள்வி கேட்டதுமில்லை, சண்டையிட்டதுமில்லை.
சின்ன வயதிலிருந்து இந்த இருவேறு துருவங்களுக்கிடையே வளர்ந்த நான், இறை நம்பிக்கை குறித்து பலவகையான குழப்பங்களுடனேயே வளர்ந்தேன். “எதையும் ஒருமுறை” என்கிற வினோத கிறுக்குத்தனமும் எனக்கு உண்டு. எனவே அதனடிப்படையில் என் முப்பது, முப்பத்தி ஐந்து வயதுக்குள் இறை நம்பிக்கை சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த பெரும்பாலான விஷயங்களில், சொல்லப்போனால் திருவண்ணாமலை கிரிவலம் முதல், ஈஷா யோகாவின் முதல் நிலை யோக வகுப்புகள் வரை ஒரு எட்டு, எட்டிப் பார்த்துவிட்டு வந்தவனும் கூட. ஆனால் எல்லாவற்றிலிருந்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தலைதெறிக்க ஓடிவந்தவன், இப்போது திரும்பிப் பார்க்கும் போது அவற்றிலிருந்தெல்லாம் வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டது தெரிகிறது.
உடலமைப்பிலும், உடல் மொழியிலும், சிந்திக்கும் முறையிலும் என் அப்பாவின் இன்னொரு போட்டோ காப்பியாக இருக்கும் என் மகன் இந்த இறைநம்பிக்கை, மதங்கள், சடங்குகள் குறித்தெல்லாம் அவனாகவே ஒரு சில கருத்துகளை வைத்திருக்கிறான். பெரும்பாலும் என் அப்பா இருந்தால் என்ன சொல்லுவாரோ அதே போன்ற கருத்துகள். அதே மென்மையான எதிர்க்கேள்விகள். இறை என்ற ஒன்று இருக்க முடியாது என்பதற்கான, அவனளவிலான இயல்பான வாதங்கள் கொண்டவன் அவன். இதைச் சொல்லும்போது நிறைய நண்பர்கள் “அவன் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பான் அல்லது நீங்கள் உங்கள் கருத்துகளை அவன் மீது திணித்திருப்பீர்கள்” என்று சொல்லுவார்கள். அதில் உண்மையில்லை. உண்மையைச் சொல்வதானால் அவனுக்கு என்னைத் தவிர மற்ற அனைத்து நெருங்கிய உறவினர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தான். அதிலும் பல ‘சாமி கொண்டாடிகள்’ கூட உண்டு. நான் எதையும் எவர் மீதும் திணிப்பவனும் அல்ல, இங்கேயும் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த விஷயத்தில் என் மீது திணிக்கப்படுபவற்றை மறுப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.
இந்த வருடம் நடந்த புத்தகத் திருவிழாவில் என் மகன் விருப்பப்பட்டு அவனுக்கு சுரேஷ் காத்தான் சார் வாங்கிக்கொடுத்தது “மதங்களும் சில விவாதங்களும்” என்கிற புத்தகம். தருமி என்ற பெயரில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாம் ஜார்ஜ் அவர்கள் எழுதி, எதிர் வெளியீடாக வெளியாகியிருப்பது. இப்போது புத்தகத்தின் பாதி வரை படித்திருக்கிறான் போல.
இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்பாட்டு வேளையில் இந்தப் புத்தகம் குறித்து பேச்சு வந்தது. ”புத்தகம் எப்படி இருக்கிறது?” என்றேன்.
“ஹா ஹா, பாகுபாடு இல்லாம, யாரையும் விட்டு வைக்காம, எல்லாரையும் நல்லா கழுவிக்கழுவி ஊத்தியிருக்காரு” என்றான் சிரித்துக்கொண்டே.
நான் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு என் மனைவியைப் பார்த்து விளையாட்டாக “சோழர் பரம்பரையில் இன்னொரு எம்எல்ஏ” என்றேன்.
“ம்க்கும்…. ” என்றொரு சத்தம் மட்டும் அங்கிருந்து வந்தது.
No comments:
Post a Comment