Friday, December 22, 2023

1267. ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?

ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?




நான் இப்போது மொழிபெயர்க்கும் நூல் நம் பண்டைய இந்தியாவின் வரலாறு பற்றியது. இதை எழுதும் போது நினைவில் கீழடி தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. இந்திய வரலாற்றின் ஆரம்பத்தை கீழடியிலிருந்து ஆரம்பித்துத் தொடர வேண்டுமென்று சொல்கிறார்கள். இதுவரை மொழிபெயர்த்த வரலாற்று நூல்களில் தென்னிந்தியப் பகுதிக்கான இடம் இல்லை; அல்லது அதிகமில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை வேரூன்றியிருப்பது போலவே தெரிகிறது.

இப்போது எழுதும் நூலில் கங்கைச் சமவெளியில் நடந்த ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளில் அப்பகுதியில் பல மண் மேடுகளில் ஆய்வு செய்துள்ளனர். பின்னாளில் நடந்த ஆய்வுகளினால் //19-ம் நூற்றாண்டின் புவியியல் - பண்டைய வரலாற்று வல்லுநருமான ராபர்ட் புருஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவரே  முதல் முதலாக இந்த மேடுகளை ஆய்வு செய்து, அதன் கலாச்சாரங்களை வெளிக்கொணர்ந்தார்.’’//

இவரது ஆய்வோடும், மற்ற ஆய்வாளர்களின் முயற்சிகளுக்குப் பிறகும் இந்த மண்மேடுகள் சாம்பல் மேடுகள்” என்று அழைக்கப்படுகின்றன. பண்டைய மனிதர்கள் கால்நடை மேய்ப்பர்களாக இருந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த கால்நடைகளை தொழுவத்தில்வைத்திருந்தனர் என்றும், அவைகளின் சாணியை அவ்வப்போது எரித்து வந்திருக்கின்றனர். அத்தகைய மேடுகளே இந்த சாம்பல் மேடுகளின் பழைய வரலாறு என்று அந்த நூல் மேலும் விவரிக்கின்றது.

இதை வாசிக்கும் போதும் கீழடி நினைவிற்கு வந்தது. அதோடு நான் இருமுறை அங்கு மதுரை இயற்கை நடையோடு சேர்ந்து அங்கு சென்று வந்தது நினைவிற்கு வந்தது. அது ஆரம்ப நிலை. கட்டிடங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளங்களைப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த சிறிது உயரமான ஒரு மேட்டின் மீது ஏறியமர்ந்து இளைப்பாறினேன். நண்பர்கள் அதை ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்த மேடையில் இந்த வரலாற்று நூல் சொல்வது போல் அப்பகுதிகளில் கருப்பு, சிகப்பு மண்பானை ஓடுகள் குவியலாகக் கிடப்பதையும் பார்த்தேன். அதன் வண்ணம், வழுவழுப்பு, கோட்டோவிய்ங்கள் போன்றவற்றை வைத்து, காலத்தையும், கலாச்சாரத்தையும் கணக்கிடுவது பற்றியும் இந்த நூல் பேசுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நான் உட்கார்ந்த மேடும் ஒரு சாம்பல் மேடாக இருக்குமோ? ஒரு பெரும் பண்டைய கலாச்சார வரலாற்று மேடையாக அது இருக்குமோ? என் கீழே ஒரு பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் பொதிந்து கிடக்கிறதோ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

ஆய்வாளர்களிடம் சொல்லி அந்த மேட்டையும் “ஒரு கை” பார்க்க யாராவது சொல்லுங்களேன், ப்ளீஸ் !!!!

 


No comments:

Post a Comment