Wednesday, February 11, 2026

1366. சூத்திரன்களே, காதுகளைக் கொஞ்சம் திறவுங்களேன் ...

*
*

 

 

அம்பேத்கர் போன்ற சிலர் கொடுத்த அழுத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு அரசியல் சட்டமைப்புகளில் இடம் பெற்றது. பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் இணைக்கப்பட்டனர். எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தும் எந்தவித அதிகார நிலைகளைத் தொடவும் முடியாதவர்களாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு ஓர் ஆதாரமாக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதிருந்தே தங்களைச் சமூகத்தின் உச்ச நிலையில் இருத்திக்கொண்ட  மேன்மக்களுக்கு இது எரிச்சலையே அளித்தது. அதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையே வைத்திருந்தனர்.

இக்குறை தீர்க்கும்  மருந்தாக பல தாமதங்கள், தடங்கல்கள்,போராட்டங்கள் நடந்த பின் மண்டல் அறிக்கை 1990 ஆகஸ்ட் 13ம் தேதி புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பிரதமர் வி.பி. சிங் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மண்டல் அறிக்கைக்கு எதிராக உயர்சாதியினரின் கமண்டல அமைப்புகள் தங்கள் புரட்சியை ஆரம்பித்தன, சுத்திகரிப்புத் தொழிலைச் செய்பவன் அதைத் தொடரட்டும்; செருப்பு தைப்பவன் அவன் குலத்தொழிலைச் செய்யட்டும்; அவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்காகப் புதிய வழிகள் திறப்பதை அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த மக்களைச் சிறிதாவது திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், பிரதமர் பி. நரசிம்ம ராவ் 1991 ஆண்டிலேயே பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு (EWS -Economically Weaker Section) என்பவர்களுக்கு 10% கொடுக்க முன்வந்தது. உச்சநீதி மன்றம் இந்தச் சட்டத்தை நிராகரித்து நீதி வழங்கியது. விடுவார்களா 3% மக்கள்!? 2013ம் ஆண்டு அரசியல் சட்டமைப்பின் 103வது மாற்றமாக இப்புதிய சட்டம் RSS அமைப்பின் நீட்சியான மோடியின் பாஜக அரசினால் கொண்டுவரப்பட்டது (Articles 15(6) and 16(6) are inserted  into the Constitution).

பல உயர் கல்வி நிலையங்களிலுள்ள கீழ்த்தட்டு நிலையிலிருந்து வரும் பல மாணவர்களின் தற்கொலைகள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே வருகின்றன. 2019-2024 என்ற ஆண்டுகளில் மட்டுமே தற்கொலைகளின் எண்ணிக்கை 118% அதிகரித்துள்ளது. இந்தக் கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணிகளில் முறையாக சாதிவாரி மூலம் பணியமர்த்துவது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவைகளைத் திருத்த உச்ச நீதிமன்றமே ஏற்கெனவேயுள்ள யுஜிசி வழிகாட்டுதலை (2012) மறுபரிசீலனை செய்து, மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று உத்தரவிட்டது. இதனால் யுஜிசி 2025ல் அந்த மாற்றங்களை வெளிக்கொண்டு வந்தது. நமது மேல்தட்டு மக்களுக்குப் பிடிக்காத ஒன்று நடந்தால், நம்மை மாதிரி - ஒண்ணும் புரியாமல் - அவர்கள் மெளனமாக இருப்பார்களா என்ன? அவர்களின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. இதற்காக இன்னொரு திருத்தப்பட்ட சட்டம் இந்த ஜனவரி மாதம் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல், 2026 - Promotion of Equity in Higher Education Institutions, 2026 - கொண்டுவரப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டைக் களைவதே இதன் முதன்மையான குறிக்கோள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம வாய்ப்பு மையங்கள் (Equity Opportunity Centers) 24 மணி நேர உதவி எண், தகைமை நெறிக்குழுக்கள் (Equity Committee) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது. புகார்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார்கள் உண்மையாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இச்சட்டங்கள் பொதுப்பிரிவு மாணவர்களால் - அதாவது உயர்சாதி மாணவர்களால் - கடுமையாக எதிர்க்கப்பட்டது. Offence is the best way of defense என்ற உண்மை அவர்களுக்கும், அவர்களை இயக்கிய R.S.S. அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன? இந்த வழிகாட்டுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது எங்கள் சாம்ராஜ்ஜியத்திற்குள் இவர்களுக்கு இடமில்லை என்கிறார்கள்!

இதை எதிர்த்து  மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜெயமால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த வழக்கில் கூறியவை சூத்திரன்களுக்குப் புரிந்தால் நல்லது. அவர் சொல்கிறார்: பிராமணர்களால்தான் சாதியப் படிநிலைகள் வந்தனவா? என்று கேட்கிறார். ஆமாம்; மனுஸ்ம்ருதிதானே அதை அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பிராமணசாதிதான் காரணமானால் இன்றே நீங்கள் உங்கள் சாதியிலிருந்து வெளியேறி விடுங்கள் என்கிறார். உங்களை யார் தடுக்கிறார்கள் என்கிறார். என்ன பதிலோ இது! பிராமண சாதி காரணமாயின், அந்த சாதிக்காரர்கள் தங்கள் நூலை அவிழ்த்தெறிந்து விட்டு, சூத்திரன்கள் நம்மோடு சமமாக உட்கார்ந்தாலே போதுமே!

அவர் தொடர்கிறார்: பலரும் I.A.S., I.P.S., உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி, பிரதம அமைச்சர் என்றெல்லாம் ஆகிறார்களே.. அப்படியிருந்தும் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால் அது அவர்களது மன நிலை; அதற்கு எப்படி பிராமணர்கள் பொறுப்பாவார்கள்? என்று கேட்கிறார். சின்ன பதில் போதும். பிரதமர்களும், ஜனாதிபதிகளும், அரசால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் அதிகாரிகளும் R.S.S. அமைப்பின் கரசேவகர்கள் தானே. கற்பகக் கிரகத்திற்குள் நீங்கள்; வெளியே மசூதிகளை இடிக்கும் கரசேவகர்கள் நாங்கள். இதுதான் உங்கள் நீதி. (ஐயா இப்படிப் பேசுகிறாரே என்றதும் அவரும் ஒரு பிராமணரோ என்று நினைத்து கூகுள் சாமிட்ட கேட்டேன். ஆமாம் என்றது சாமி! நம்ம ஊரு திருப்பரங்குன்ற நீதிபதி நாமிசாதன் மாதிரிதான் இவரும்)

98 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மனுஸ்மிருதியை தீவைத்துக் கொளுத்தினார். (இந்துத்துவம், சனாதனத்தை ஆதரிப்போருக்கு இது தெரிந்திருக்குமா?) அப்போது அவர் சொன்னது இன்றைய நீதியரசர்களின் காதுகளில் விழுந்தால் நல்லது. இவ்வாறு எரிப்பது கடுமையான செயல்தான். ஆனால் உயர்சாதியினரின் காதுகளில் விழுந்தாக வேண்டும் என்பதற்காகவே அதனைச் செய்ய வேண்டியதிருந்தது. இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது செய்யப்பட வேண்டும். கதவுகளை ஓங்கித் தட்டாவிட்டால் அவை திறக்கப்படாமலே போய்விடும். (ஆனால் நம்ம மேல்சாதி மக்கள் என்ன சொல்லுவாங்க தெரியுமா?... நீங்கள் கதவை உடைத்தாலும் கூட உங்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்பார்கள்.)

இதெல்லாம் நம்ம சூத்திரசாதி மக்களுக்கு என்றைக்குத்தான் புரிந்து தொலைக்குமோ?

 

 


No comments:

Post a Comment