JUDGMENT IN NUREMBERG
https://dharumi.blogspot.com/2026/02/1367-judgment-in-nuremberg-review.html
இந்த ஜெர்மனிய
நகரில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் நேச நாடுகளும் அமெரிக்காவும் பல
வழக்குகளை ஜெர்மானிய நாசி அதிகாரிகள் மீது தொடுத்தன. 1946லிருந்து பல
திரைப்படங்கள் இதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் இரு படங்களை
அண்மையில் பார்த்தேன். அதில் 1961 ஆண்டு எடுக்கப்பட்ட படம் - JUDGMENT IN NUREMBERG. Stanley Krammer என்ற பெரிய இயக்குநர்; Spencer
Tracy, Burt Lancaster போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படம். 3 ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். ஓரிரு
காட்சிகளில் வரும் இரு சாட்சிகளின் நடிப்பும்கூட அத்தனை அழகாக இருக்கும்.
ஆனால் இப்படம் பார்க்கும்போது என்னால் அந்தப் படத்தோடு
முழுமையாக ஒன்றிப் போக முடியாமல் இன்னொரு தடங்கல் மனதில் இருந்தது. ஹிட்லரின்
நாசிக் கும்பல் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.. நினைத்துப் பார்க்க முடியாத
கொடுமைகளை நாசி மக்கள் செய்ததாக உலகம் பின்னாளில் தெரிந்து கொண்டது. இப்படத்தில்
வரும் வழக்கில் பலவேறு மக்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவர்களில்
நான்கு நீதிபதிகள் மட்டும் காண்பிக்கப்படுகின்றனர். அனைவரின் மன உளைச்சல்களை
அழகாகப் படம் எடுத்துள்ளனர்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இன்னும் பத்து பதினைந்து
ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற ஒரு வழக்கை நடத்தும் கொடுமை நம் நாட்டிலும்
நடக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றியது. இன்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சூத்திரக்
கயிற்றில் ஆடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘கரசேவகர்களான’ மோடியும், அமித்
ஷாவும், அவர்களின் தாளத்திற்கு நடனமாடும் பெரும் ‘நீதியரசர்களும்’, அவர்கள் தரும் வேதனையான
தீர்ப்புகளும் என் கண் முன்னே வரிசை கட்டி நின்றன.
ஒரு நீதிபதி, கடவுள் ராமரே வந்து என்னை வழி நடத்தி,
பாபர் மசூதித் தீர்ப்பை எழுத வைத்தார் என்றார். இன்னொருவர்
தமிழ்நாட்டில் சனாதனத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, இல்லாத
நியாயத்தை மிகச் சத்தமாகச் சொல்லிக்கொண்டு நீதியளித்தார். இன்னொரு நியாயஸ்தர் பல
வழக்குகளை அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து, ஓய்வு
பெற்றதும் மனித உரிமைக்கழகத்தின் தலைவரானார். இன்னொரு நீதியரசன் பாப்ரி மசூதி
வழக்கில் கொடுத்த ‘நல்ல’ தீர்ப்பிற்காக,
ஓய்வு பெற்றதும் எம்.பி. பதவி பெற்றார். வளர்ந்து வரும் இப்பட்டியல்
மிக நீளமானது.
நீதியரசர்கள் அரசிற்குச் சாதகமாக இருந்தால் தங்கள் ஓய்வு காலத்தில் அவர்களின் சேவைக்கு”
ஏற்றது போல் “பரிசுகள்” அரசரிடமிருந்து பெருவார்கள். ஒரு வேளை அவருக்குப்
பிடிக்காத முறையில் தீர்ப்பளித்தால், லோயா என்ற நீதிபதி 100 கோடி பணம் தருவதாகக் கூறியும், அதை
மறுத்து, பெரிய அரசியல்வாதியின் வழக்கில் அவர் கொடுத்த
நியாயமான தீர்ப்பிற்காக மர்மமாக திடீரென மரணமடைந்தார் என்கிறது அவர்கள் குடும்பம்.
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இன்னும் நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளாவது
தொடரும் ஆபத்து உள்ளது. இன்னும் எத்தனை குற்றச்சாட்டுகள் ஒன்றிய அரசின் மீது வந்தாலும், நமது
மக்களுக்கு மோடியின் மேலிருக்கும் charisma ஈர்ப்பு குறையவே குறையாது. பணமதிப்பிழப்பு,
நாட்டின் சொத்துகள் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி அவரது ஆப்த நண்பர்களுக்குச் ‘சல்லிசு’ விலையில் கொடுத்தாலும் இந்த ஆபத்து
தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும். 2029 வரை அவர் ஆட்சி. அதன் பிறகு ஒன்று
அல்லது இரண்டு முறை ஆட்சிகள் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் கீழ்தான் இருக்குமென
நினைக்கின்றேன்.
2040 – அதாவது இன்னும் 14 ஆண்டுகள் கழித்த பிறகே விடியல்
வரும் என்று நம்புகிறேன். நிச்சயமாக அப்படி ஒரு காலம் வந்தால் அப்போது JUDGMENT
IN NUREMBERG போன்ற ஒரு படம் வரும்,
இந்தப் படம் பார்க்கும்போது அப்படி ஒரு படம் பின்னாளில்
எடுத்தால் எந்தெந்த நீதிபதிகள் குற்றவாளிகளாகச் சாட்டப்பட்டு அமர்ந்திருப்பார்கள்
என்ற நினைவே எனக்கு வந்தது. முன்பு அந்த ஜெர்மன் நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்ட
தண்டனை அத்தனை பெரிதில்லை.1948ம் ஆண்டில் ஆயுள் தண்டனை அவர்களுக்கு
அளிக்கப்பட்டிருந்தும், இந்தப்படம் எடுத்த 1961ம் ஆண்டில் அனைவரும்
அந்தத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றிருந்தனர், ஆனால்
அவர்கள் பெயர்கள் வரலாற்றில் அழிக்கமுடியாதபடி இடம் பெற்று விட்டன. அப்படி ஒரு
வழக்கு பின்னாளில் நடந்தால் நமது நீதியரசர்கள் பலரும் நிச்சயமாக வரலாற்றில் இடம்
பெருவார்கள்; பெற வேண்டும்.
2040ல் அப்படி ஒரு வழக்கு நடந்தால் எனக்குச்
சொல்லியனுப்புங்கள்!!!
No comments:
Post a Comment