
குட்டியூண்டு நாடுகள்
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி முடிவடைந்ததும், அதே
போல் உலகக் கால்பந்துப் போட்டி முடிந்ததும் நம்மூரில் வழக்கமான ஒரு குரல்
ஒலிக்கும். இத்தனை பெரிய நாடு; அத்தனை பெரிய மக்கள்
எண்ணிக்கை. சின்னச் சின்ன நாடுகள் கூட இத்தனைப் பரிசுகளை
அள்ளிச் செல்லும் போது நாம் மட்டும் வீசும் கை .. வெறும் கை .. என்று இருக்கிறோமே
என்ற பரிதாபக் குரல் தான் அது.
ஆனால் இந்தக் குரலோடு என் குரலையும் இப்போது சேர்த்து
விட்டேன். அதென்னன்னு பாருங்களேன். கால்பந்துப் போட்டியில் முதல் சுற்றில் இரு
நாடுகள் .. அந்த நாடுகளின் பெயர்களையே முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். இப்படி
ஒரு பெயரில் ஒரு நாடா என்று ஆச்சரியப்பட்ட பின், அந்த நாடுகள் பற்றித்
தெரிந்து கொள்ளலாமென நினைத்தேன். ஆண்டவரிடம் கேட்டேன்.கொடுத்த விவரங்கள் இன்னும்
அதிமாக blood pressure-யைக் கூட்டி விட்டது.
க்யூரா காவோ (Cura cao) என்று ஒரு நாடாம். நெதர்லாந்துக்கு
மிக அருகிலுள்ள நாடு. ஒரு காலத்தில் நெதர்லாந்தின் ஆளுமைக்குள் இருந்த நாடு.
இப்போது சுயாட்சி பெற்று, இருந்தும் நெதர்லாந்தின்
தொடர்பிலுள்ள நாடு. இந்தச் சிறிய நாட்டின் ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து அறுபதாயிரம் – 1,60,000 – மட்டுமே.
அதாவது நம் நாட்டில் உள்ள ஒரு பெரிய கிராமத்தின் எண்ணிக்கையே அந்த நாட்டின் மொத்த
எண்ணிக்கை! ஆனாலும் நெதர்லாந்தின் முக்கிய விளையாட்டான கால்பந்து விளையாட்டின்
வீச்சு இந்த நாட்டிலும் உள்ளது. இங்குள்ள கால்பந்து வீரர்கள் எளிதாக
நெதர்லாந்திலுள்ள கிளப்புகளில் விளையாட முடியும். இருப்பினும் அந்த நாடு தன்
நாட்டு வீரர்களை வைத்து விளையாடி, தங்களை உலகக் கோப்பைப்
பந்தயத்தில் நுழைந்(த்)து விட்டனர். நெதர்லாந்து உலக அளவில் கால்பந்து
விளையாட்டில் 8வது தரத்திலுள்ளது. ஆனால் இந்த நாடு தர நிலையில் கீழே இருந்தும்
இறுதியாட்டங்களுக்கு முன்னேறி வந்து விட்டது.
அவர்களது அதிர்ஷ்டம் முதல் சுற்றிலேயே ஒரு பெரிய தரத்தில்
மிகவும் மேலேயுள்ள ஜெர்மனியோடு மோத வேண்டியதிருந்தது. ஜெர்மனியும் ஒரு ஒரு கோல்
வாங்கி, 7 கோல் போட்டு வென்றது. ஒரு வேளை 7:1 என்பது உங்களுக்கு
ஆச்சரியமாக இருந்தால், ஜெர்மன் முந்தியொரு உலகக் கோப்பை
பந்தயத்தில் ஆனானப்பட்ட ப்ரேசிலுக்கு இதே கோல் கணக்கில் வென்றது. அந்த
விளையாட்டைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவைக் காண: https://dharumi.blogspot.com/2014/07/773-fifa-14.html
SPAIN – CPV (CAPE VERDE)
CPV (CAPE VERDE) – இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதா? நானும்
இப்போது தான் இந்தப் பெயரைப் பார்த்து அதிசயித்து நின்றேன். நாட்டைப் பற்றிப்
பார்ப்போமே என்று கூகிள் ஆண்டவரிடம் போனால் அது போர்த்துகல்லின் காலனியாக இருந்த
ஒரு நாடாம். ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? ஆறு லட்சம் மக்கள் –
அதாவது, நம்மூரில் ஒரு சிறிய டவுன் அளவு தான். போர்த்துகல்லின்
கலாச்சாரத்தால் இந்த நாடும் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கின்றனர்
போலும். இவர்களின் தரம் 67. (நம்முடைய தரம் 138) இவர்கள் அதிர்ஷ்டம் முதல்
சுற்றில் இவர்கள் மோத வேண்டிய நாடு இரண்டாம் தரத்திலிருக்கும் ஸ்பெயின்.
எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஸ்பெயின் எளிதாக வென்று வாகை சூடும் என்று நினைத்தால், கதை மாறிப் போனது. 0:0 என்பதுதான் இறுதி முடிவு. ஸ்பெயின் ஆட்டக்காரர்களில் போன போட்டியில் லாமைன் யாமல் என்ற ஆட்டக்காரரைப் பிடித்தது.
ஒருவேளை ஸ்பெயின் இந்த ஆட்டத்தையும் தங்கள் எதிரணியையும் எளிதாக எடுத்துக் கொண்டதால் முதல் பாதியில் இந்த இளம் வீரர் களம் இறங்கவில்லை. இரண்டாம் பாதியில் உள் நுழைந்தார். ஆனாலும் ஆட்டம் மிகவும் வேகமாக நடந்தது ... ஆனால் கோல் எதுவும் விழவில்லை. பந்து என்னவோ CPV பக்கமே இருந்தாலும் கோல் எதுவும் விழவிடவில்லை. CPV தற்காப்பு ஆட்டம் அத்தனை சிறப்பாக இருந்தது. அதுவும் 40 வயதான கோல்கீப்பர் (நல்ல தமிழில் “கவலி” கோல்=கவல்) வோசின்கா – Vozinha- பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் தன் கவலைக் காத்து நின்றார். அவரது ஆற்றல் ஆச்சரியமாக இருந்தது.
நல்லதொரு காவல் தெய்வம்!



No comments:
Post a Comment