நல்வழி காட்டிய
தவெக !!
நடந்து முடிந்த
மக்கள் சபைத் தேர்தலில் ஒற்றை எண்ணிக்கையில்தான் தவெக வெற்றி பெறும் என்றுதான்
நினைத்தேன். தவறிப் போனது. கிட்டத்தட்ட பெரும்பான்மை பெற்றது. நான் மட்டுமல்ல தவெக
கட்சியினரே ஆச்சரியப்படுமளவிற்கு வெற்றி குவிந்தது. நமது கணக்கு வழக்குகள், நமக்குத் தெரிந்த
அரசியல் எல்லாம் தோற்றுப் போனது. ஆனது ஆகிப் போச்சு. அதுதான் மூத்த அரசியல்வாதிகள்
தோற்றுப் போகும்போதெல்லாம் சொல்வார்களே .. “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”
என்பார்களே அந்த மேற்கோளைக் காட்டித் தப்பித்துக் கொள்ள வேண்டியது தான். வேற வழி??!!
“யோசித்து” மக்கள் வாக்களித்தார்களா .. இல்லை .. “மோகித்து”
மக்கள் வாக்களித்தார்களா என்று ஒரு கேள்வி எல்லார் முன்னும் இன்னும் நிற்கிறது.
ஏனெனில் தேர்தலுக்கு முன் அக்கட்சியை ஆதரித்த ஜென் ஜி மக்களின் கதை, வசனம்,
நடிப்பு, அலறல், ஆட்டம்,
கூட்டம், பிளிறல் போன்றவைகளை சமூக
வலைத்தளங்களில் பார்க்கும்போது இரண்டாவது காரணம் தான் முன்னின்றதாகத் தோன்றியது.
எப்படியோ, என்னவோ அதெல்லாம் முடிந்த கதை. இனி ‘அந்தக் கதை’ எப்படிப் போகப் போகிறது என்பதை
மட்டும்தான் பார்க்க வேண்டும். அதுதான் நியாயம்.
ஆனால் நடந்து முடிந்ததையெல்லாம் பார்க்கும்போது ஒரு விஷயம்
மட்டும் தனித்து நிற்கிறது. அது என்னவென்று பிறகு சொல்கிறேன்.
இப்போது கடந்த சில ஆண்டுகளாகத்தான், அதிலும்
திராவிடக் கட்சிகள் அரசியலுக்குள் நுழைந்த பின்புதான் ‘துட்டுக்கு
ஓட்டு’, ‘ஓட்டுக்குத் துட்டு” என்பது தான் நடைமுறைக்கு
வந்துள்ளது என்பதுதான் பரவலாகப் பரப்பப்படும் செய்தி. ஆனால் என் பத்துப் பதினோரு
வயதிலேயே – அதாவது 70 ஆண்டுகளுக்கு முன்பே – நான்கணா, எட்டணா,
ஒரு ரூபாய் காசை வெற்றிலை மேல் வைத்து சிகப்பு பெட்டியில், அல்லது பச்சைப் பெட்டியில், ஏதோ ஒரு கலர் பெட்டியில்
ஓட்டைப் போட வேண்டும் என்று வேட்பாளர்கள் கேட்க, அதை
ஆமோதித்து காசை வாங்கிக் கொண்டு – வெற்றிலை மேல் வைத்துக் காசு வாங்கினால் அது
சத்தியம் மாதிரி எடுத்துக் கொள்ளப்படுமாம் – ஓட்டுப் போட்ட மக்கள் நாம் என்று என்
இளம் வயது அனுபவத்தில் நடந்ததை என் வலைப்பூவில் April 13,
2019 அன்று எழுதியிருந்தேன். எங்க காலத்திலிருந்து காசுக்குக்
காலம் காலமாக ஓட்டுப் போட்ட திராபைகள் நாம் என்பதை https://dharumi.blogspot.com/2019/04/1038-4.html
இந்தத் தொடுப்பில் காணலாம்.ஆகவே இது ஆகிவந்த வழி.
முன்னொரு சமயம் இந்தியர்களின் மனோநிலை, தமிழர்களின்
தனிமனித ஒழுக்கமின்மை பற்றிச் சில கட்டுரைகள் எழுத நினைத்து நம் வரலாற்றின் பக்கம்
சிறிதே கண்ணைத் திருப்பினேன். கண்கொள்ளாக் காட்சி கண்முன்
விரிந்தன. என்னை முழுமையாக அதிரடித்தன. இத்தனை மட்டமான மக்களா நாம்; நம் உடலில் ஓடும் ரத்தத்தோடு கலந்து கிடக்கிறதா இந்தக் கேடுகெட்ட
பழக்கங்கள் என்று உறைந்து போனேன். இங்கே படையெடுத்து வெற்றி கண்ட பல வேற்று
நாட்டுப் படைகள் தம் படைபலத்தால் மட்டும் இங்கே வெற்றி பெறவில்லை. வரலாறுதோறும்
நம் ஆட்களே காசு, பதவி, செல்வம்
போன்றவைகளுக்காக, நம்மவர்களையே காட்டிக் கொடுத்து வேற்று
நாட்டவரை வெற்றி கொள்ளச் செய்துள்ளனர். கூகுள் ஆண்டவன் அல்லது இப்போது வந்துள்ள
நுண்ணறிவுச் சுரங்கங்களில் தேடினால் நீங்களும் இந்த முடிவிற்கே வர முடியும்.
ஆகவே காசு வாங்கிக்கொண்டு இன்று நாம் தேர்தலில்
வாக்களிக்கிறோமே ... அது எல்லாமே நம் வரலாற்றில் நாம் காணும் ஒரு வழக்கமான
காட்சிதான். திருமங்கலம், R.K Nagar என்ற புதிய கதைகள் எல்லாமே பழைய
வரலாற்றுச் சின்னங்களின் எச்சம்தான். History just repeats. அவ்வளவே.
இது ஒன்றும் இன்றோ நேற்றோ தோன்றிய புதிய காளான் இல்லை; வேரோடிய
பெருமரம் அது. அந்த மரத்தின் ஊழல், துரோகம் போன்ற பல கனிகளை
உண்டு வளர்ந்த நம் சமூகம் ஊழலைச் செய்வதையும், அல்லது அதை
அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மையோடு வளர்கிறோம். அதனால் தான் ஊழல் செய்யாத
ஓர் அதிகாரி நமது கேலிக்குள்ளாகிறார்.
கடந்து நடந்து முடிந்த தேர்தலில் முறையான ஆட்சி மூலமாக
திமுக பல நன்மைகளை ரூபாய் நோட்டுகளால் நிரப்பியது – ஏனெனில் கஜானா அவர்கள் கைகளில்
இருந்தது. ஏனைய கட்சிகளுக்கு இது ஆத்திரம் தராதா? ஆனால் அவர்கள் என்ன
செய்யலாமென நினைத்து, வாக்குறுதிகளைப் பரப்பினார்கள்.அவர்கள்
1000 தருகிறார்களா ... நாங்கள் 2000 தருகிறோம் என்றொரு எதிர்க்கட்சி சொன்னது.
புதுக் கட்சி அதையும் தாண்டி 2500 தருகிறோம் என்றது. ஒரு வேளை வெறும்
வாக்குறுதிகள் தானே .. பதவிக்கு வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தும்
அவைகளை அவ்வாறு அள்ளித் தெளித்திருக்கலாம்.
இன்னொரு பக்கம் பெரிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களின்
பழைய பாணியிலேயே ஓட்டுக்குத் துட்டு என்பதிலும் தீவிரமாக இருந்தார்கள்.ஒவ்வொரு
ஓட்டுக்கும் இரண்டு, மூன்று என்று ஆயிரங்களைக் கொட்டியதாகக்
கேள்விப்பட்டேன். ஆனால் தவெக என்ற புதிய கட்சி அவ்வாறு பணத்தை அள்ளியிறைக்கவில்லை.
இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, வேட்பாளர்கள் ஒற்றைத்
தலைமையின் சின்னஞ்சிறு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரும் பணக்காரர்கள்
ஒருவேளை அச்சத்தினால் போட்டியிடாமல் போயிருக்கலாம். ஏழை பாளைகள்தான்
முன்னிறுத்தப்பட்டனர். அவர்களிடம் காசு பணம் கிடையாது; தலைவரின்
பெயர் மட்டும் இருந்தது. அதுவே போதும் என்றே அவர்களும் நினைத்தார்கள்; நம்பினார்கள். இரண்டாவதாக, புதுக் கட்சியா? ஆகவே கட்சியும் தங்கள் கஜானாவை அதிகமாகத் திறக்கவில்லை. ஆகவே புதுக்கட்சி
தலைவரின் பலத்தை மட்டுமே நம்பி, தேர்தலைச் சந்தித்தது. பல
இடங்களில் வேட்பாளர்களின் பெயரோ, அறிமுகமோ ஏதுமின்றி நின்று
வென்றார்கள் என்பது உண்மை.
ஆகவே இம்முறை வென்றவர்கள் நிச்சயமாகப் பண பலத்தால்
வெல்லவில்லை. காசு பெற்ற மக்களுக்கும் அந்தக் காசுக்காக மசிந்து விடவில்லை. இது
இப்போதுள்ள துட்டு கொடுத்து ஓட்டு வாங்கிய அரசியல் கட்சிகளுக்கு நல்லதொடு பாடம்
கற்றுக் கொடுத்துள்ளது. காசில்லாமல், தலைமை மேல் கொண்ட நம்பிக்கை மட்டுமே இந்தத்
தேர்தலை வழி நடத்தியுள்ளது. ஆகவே இனி வரும் தேர்தல்களில் காசு கொடுத்து மக்களை
மயக்க முடியாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நாம் மாநிலத்தில் முழுமையாகத்
தெரிந்து கொண்டிருப்பார்கள். காசு இறைத்தும் புண்ணியமில்லை என்பது தெரிந்திருக்கும்.
அப்படியானால் வரும் தேர்தல்களில் பண மூட்டைகள் திறப்பதில் அர்த்தமில்லை என்பது
அவர்களுக்குப் புரிந்திருக்கும். ஜென் ஜி மக்களைக் காசு கொடுத்து ஓட்டு வாங்க
முடியாது என்ற நிஜம் அவர்களுக்குப் புரிந்திருக்கும். அதனால் இனி தேர்தல்களில் பண
ராஜ்ஜியம் தமிழ் நாட்டில் வேலைக்காகாது என்பது புரிந்திருக்கும்.
இந்தப் பாடத்தை நம் அரசியல்வாதிகளுக்குப் புரிய வைத்த தவெக கட்சிக்கு
என் பாராட்டுகள்.
ஆனாலும் ஒரு சந்தேகம் மெல்ல மனதிற்குள் எட்டிப் பார்க்கிறது.
யார் கண்டது ...? அடுத்த தேர்தலுக்குள் election
fund என்ற முறையிலோ இல்லது இன்னும் பல வழிகளிலோ காசு திரட்டி அவர்களும் காசை ஓட்டுக்காக
அள்ளித் தெளிக்கக் கற்றுக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் மட்டுமின்றி மக்களும் காசு வாங்காமல்
வாக்களித்தோமே என்பதை நினைவில் வைத்து அவர்களும் ஒட்டு மொத்தமாக – நல்லவர்களாக – திருந்திய
மக்களாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment