பெறுனர்:
திரு
கனம்
உயர் திரு
ex-மாண்புமிகு
பழைய அமைச்சர் பெருந்தகையே
பழைய மின்சார அமைச்சரே
கழகத்தின் காவல் தூணே
.............. ஆற்காடு நாராயண வீராசாமி அவர்களே
ஏதோ நாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் ஏதேதோ செய்து விட்டோம்; சொல்லி விட்டோம். உங்கள் மகத்துவம் இப்போது தான் எங்களுக்குத் தெரிகிறது. என்னென்னமோ நடக்குது; எப்படி எப்படியோ நடக்குது.
எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்.
*
அடுத்து ...
இன்னொரு பெறுனர்.
மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
ஐயா,
உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.
தினமும் எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கேட்க நாங்கள் அத்தனை முட்டாள்களா? அதெல்லாம் வேண்டாம்.
ஆனால் இன்னொரு உதவி மட்டும் செய்து விடுங்கள்.
சென்னைக்காரர்களுக்கும் மின் தட்டுப்பாடு என்றால் என்ன என்று தயவு செய்து சொல்லிக் கொடுத்து விடுங்கள். உங்க ஊரு நத்ததிலேயும் (அங்கெல்லாம் மின்சாரத் தடை இருக்குல்ல??) , அட .. எங்க ஊர் மதுரையிலேயும் எப்படியெல்லாம் மின்சாரத் தடை நடக்கிறது என்பதை சென்னைக்காரர்களுக்கும் செய்து காண்பித்து விடுங்கள் - உங்களுக்கு ரொம்ப புண்ணியமாக இருக்கும்.
கரண்ட் வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அது மோசமான voltage drop-உடன் இருக்கணும். எல்லாம் இது மாதிரி சென்னைக்கும் பாத்து பாத்து செய்யுங்க ...
இப்படிக்கு
மின்துறை விலக்குகளால்
விளக்கு இல்லாமல் இருக்கும்,
மின்சாரத்தை எதிர்பார்த்து
ஈசி சேரில் படுத்தே கிடக்கும் ஒரு மதுரைப் பரதேசி
*
மதுரைக்கு வந்த (மின்சார) சோதனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள் ....
வீட்டுக்கு வந்த பேத்திக்கு இரண்டு சக்கர வண்டியில் போவதென்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த ஆர்வத்தில் ஓடியாடி ஏறியதில் புதிதாக வாங்கிய செருப்பு அறுந்து போய் விட்டது. அவள் அம்மாவிற்கு மகள் ஆசையாய் வாங்கிய செருப்பு அறுந்து விட்டதே என்று கவலை. செருப்பை எடுத்துக் கொண்டு செருப்பு தைப்பவர் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டேன். நாலைந்து கிலோ மீட்டர் அலைந்தும், ‘அந்தக் காலத்தில்’ அவர்கள் இருக்குமிடமான பஸ் நிலையம், தெரு மூலைகள் எங்கும் யாரையும் காணோம். ஒரே இடத்தில் கடை ஒன்றிருந்தது. பக்கத்தில் போனால் ஆளே இல்லை. மறுபடி வேட்டை தொடர்ந்தது. எங்கும் யாரும் இல்லை. திரும்பிப் போகலாம் என்று வந்த போது அந்தக் கடையில் ஆள் இருந்தது.
அப்பாடா என்று அந்தக் கடைக்குப் போனேன். இளைஞன் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். இடையில் ஒரு கைலி. அந்தக் கைலிக்குப் பதிலாக ஒரு ஜீன்ஸ் போட்டிருந்தால் --- there would be another decent good looking young man there - என்றிருந்திருக்கும் என்று நினைத்தேன். அவரைப் பற்றி நினைத்ததைச் சொல்லலாமா என்று நினைத்துப் போகும்போது அவர் என் மீது ஒரு ‘குண்டு’ போட்டார்;
‘வாங்க சார் .. யாரோ வெளிநாட்டுக்காரர் வந்திருக்கார்னு நினச்சேன்’ என்றார்.
‘அட .. என்னங்க இப்படி கேலி பண்றீங்க?’ என்றேன்.
‘இல்ல சார்’ அப்டின்னுட்டு நான் போட்டிருந்த ட்ரவுசரைப் பார்த்தார்.
அடுத்து அவரிடம் செருப்பு தைக்க இடம் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. நீங்கள் தான் இந்த ஏரியாவிலேயே ஒரே ஆளு போலும் என்றேன்.சொல்லிட்டு,’அதிகமா யாருமே இல்லைன்னு பார்த்ததும் சந்தோஷமா இருக்குது’ என்றேன்.
’ஏன் சார்?’
‘குலத் தொழில்னு ஒண்ணை வச்சிக்கிட்டு நாங்கல்லாம் ஆட்டம் போடுறோம்ல ... அதெல்லாம் இப்ப குறைஞ்சதும் சந்தோஷம் தான். நீங்க கூட ஏன்யா இன்னும் இந்த தொழில் பாக்குறீங்க?’ அப்டின்னேன்.
அவர் பதில் சொல்வதற்குள் இன்னொரு இளைஞன் பாண்ட், ஷர்ட்டில் வந்தார். (செருப்பு தைப்பவர் பெயர் ஆனந்த் என்று ஏற்கெனவே பெயர் கேட்டு வைத்திருந்தேன். ) ஆனந்த், வந்தவர் தன் தம்பி என்றும் அவருக்கு அரசு வேலை கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடு சொன்னார்.
’நான் இந்த தொழிலை விட முடியலை,சார். ஆனா என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு கலெக்டர், டாக்டர் வேலைக்கு அனுப்பணும்னு ஆசையா இருக்கு’ என்றார்.
‘ரொம்ப நல்ல ஆசை. வழிநடத்துங்க; பிள்ளைகளிடமும் எல்லாமும் சொல்லுங்கள்; நல்லா படிக்க வையுங்கள். இன்னும் காலம் காலமா ‘குலத்தொழில்’னு ஏதாவது ஒண்ணை சுமந்துகிட்டு இருந்தது போதும்’யா. செத்தா சங்கு ஊதணும்னு நினைச்சா, செத்தவன் வீட்ல உள்ள ஒரு ஆள் அப்படி ஊதிக்கட்டும்; சாவுக்கு டான்ஸ் ஆடணுமா .. அவங்க வீட்ல இருக்கிறவனுங்க ஆடட்டும். குலத் தொழில்னு பழைய வேலையெல்லாம் இன்னும் பாத்துக்கிட்டே இருக்கிறது தப்புல்ல’ என்றேன்.
ஆனந்த் நான் சொன்னதை முழுமையாக ஆதரித்தார். தன் குடும்பத்தின் அடுத்த வாரிசு செருப்பு தைக்காது’ என்று முழு நம்பிக்கையோடு சொன்னார்.
மகிழ்ச்சியாயிருந்தது. ஆனாலும் ஆனந்த் தன் வாழ்க்கையை அதுபோல் ஆக்க வேண்டும் என்ற ஆவலில் இல்லையே என்று சிறிது கவலைதான். அந்தப் ‘பொறி’ இவர்களிடையே இல்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
தாழ்த்தப்பட்டவர்களாக பலரை முடக்கி வைத்து, குலத்தொழில் அப்டின்னு அவங்க தலையில மிக மோசமான வேலைகளை ஏற்றிவைத்து மேலும் அவர்களை முடமாக்கி வைத்துள்ளோம். எல்லோருக்கும் இதில் முழுப்பங்கு இருக்கிறது. பீ அள்ளணும், செருப்பு தைக்கணும், அர்ச்சகர் ஆகணும்; துணி துவைக்கணும்; மயிர் வெட்டணும்; -- இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு சாதியை அடையாளப்படுத்தி, மனிதர்களை மேம்படுத்தி அல்லது சிறுமைப் படுத்தி வைத்திருக்கும் இந்த இடப் பங்கீடு போதுமே. இன்னும் காலங்காலமாய் குலத் தொழில் என்ற பெயரில் அடிமைத்தனம் இன்னும் நீண்டு கொண்டே போகணுமா?
இந்த சாதிக்கு இந்த வேலை என்ற இடப்பங்கீடு தோற்க வேண்டும்; அது விரைவில் சாக வேண்டும்.
தலித் கலை விழாக்கள் என்று அடிக்கடி நடத்துகிறார்கள். அந்தச் சாதியில் பிறந்து உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள், உயர் கல்வி பெற்றவர்கள், அறிவியல் துறையில் முன்னேறியவர்கள், வியாபாரம் செய்பவர்கள் ... இவர்களை அடையாளப்படுத்தி இந்த விழாக்களில் அவர்களின் உயர்வைக் கொண்டாடினால் நல்லது. அதை விட்டு விட்டு இன்னும் குலத் தொழிலாகவே பார்க்கப்படும் சில கலைகளை அந்த மேடைகளில் ஆண்டு தோறும் நடத்துவது யாருக்கும் பெருமையுமில்லை; அதனால் எந்த நல் விளைவும் இருக்கப் போவதுமில்லை. அந்தக் கலைகள் சாதியோடு பின்னப்பட்டிருந்தால் பிறகு எதற்கு அந்தக் கலைகள்? பின் ஏன் இந்த விழாக்கள்? அந்த விழாக்கள் நடப்பதாயிருந்தால் அது அந்த சாதியினருக்கு உயர்வைத் தர முயல வேண்டும். இல்லாவிடில் அந்த விழாக்கள் நடத்தாமல் இருப்பது நல்லது.
’ஏங்க .. உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா? எப்படி இந்த ஆளை உங்களுக்கு வாரிசா தேர்ந்தெடுத்தீங்க? ’
‘அடுத்த ஆளா யாரைப் போடலாம்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு நேத்து ராத்திரி கனவுல சிவ பெருமான் வந்துட்டாரு. என் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாரு... அப்படியே பார்த்தவரு டக்குன்னு நித்தியானந்தா பெயரை ‘டிக்’ செஞ்சிட்டாரு .. அவரே சொல்லிட்டா ... பிறகு நான் எதற்கு கஷ்டப்படணும். அதான் நித்தியைக் கூட்டியாந்து பட்டாபிஷேகம் பண்ணியாச்சி’.
SELECTED & ATTESTED BYLORD SHIVA!!
இப்படி மதுரை ஆதீனம் சொன்னதாக தினசரியில் படித்ததும் எனக்கு ‘சிலீர்’னு ஆகிப் போச்சு. எப்படி சில நல்ல மனுஷங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி நேரடியா வந்து ‘டிக்’ எல்லாம் போடுறார்னு பொறாமைப் பட்டுட்டேன். நமக்கெல்லாம் இப்படி ஒண்ணும் நடக்காம லைப் ரொம்ப டல் அடிக்குதேன்னு ரொம்ப கவலப் பட்டுட்டேன்.
கிறித்துவ நண்பர் ஒருவரிடம் இதைப் பத்தி கவலைப் பட்டு பேசினேன்.
’இன்னைக்கி மாலையில் வீட்டுக்கு வாங்க .. ஒண்ணு காமிக்கிறேன் .. அப்படியே நீங்க அசந்திருவீங்க’அப்டின்னார்.
சரின்னு நானும் அவர் சொன்ன டைமுக்கு வீட்டுக்குப் போனேன். ரெடியா இருந்தார். கணினியில் ஒரு படம் ஓட விட்டார்.
Medjugorje அப்டின்னு ஒரு சின்ன கிராமம். Bosnia-வில் இருக்கு. நம்ம டென்னிஸ் ஜோக்கோவிச் அந்த ஏரியாதான் போலும். அங்க ஒரு ஆறு சின்ன பிள்ளைகளுக்கு மேரி மாதா 1981-ல் இருந்து தொடர்ந்து ‘காட்சி’ கொடுக்குறாங்களாம். காட்சி ஆரம்பிச்சப்போ முதல் வாரம் முழுசும் காட்சி. இப்போவெல்லாம் எல்லா மாதத்திலும் இரண்டாம் தேதி டாண்ணு மாதா அந்த ஆறுல ரெண்டு பேத்துக்கோ, மூணு பேத்துக்கோ காட்சி கொடுக்குறாங்க. அதுவும் இந்த ஆளுக எங்க இருந்தாலும் அங்கே மாதாவும் போயிர்ராங்க.
அமெரிக்கா அங்க இங்கன்னு இந்த ஆளுகளும் போறாங்க. அங்கே மாதாவும் டகார்னு காட்சி கொடுக்கப் போயிர்ராங்க. காட்சி குடுக்குறப்போ நிறைய ஆட்கள் கூட்டம் கூடிர்ராங்க. அவங்க யாருக்கும் மாதா கண்ணில பட மாட்டாங்க. அதில் அந்த Medjugorje ஆளுகளுக்கு மட்டும் மாதா கண்ணில படுறாங்களாம். அப்போவெல்லாம் மாதா அந்த ஆளுக கிட்ட ’மெசேஜ்’ குடுக்குறாங்க. நம்ம காதில, கண்ணுல ஒண்ணும் படாது. ஆனா அவங்களுக்கு மட்டும் தெரியுது. காட்சி முடிஞ்சதும் மாதா சொன்ன மெசேஜ்களை பக்கத்தில இருக்கிற ஆளுக கிட்ட இவங்க சொல்றாங்க. அதில் உள்ள இலக்கணப் பிழைகளை சரி செஞ்சிட்டு, (sic!!) அந்த மெசேஜை எல்லோரும் கேக்குறது மாதிரி வாசிக்கிறாங்க. (மெசேஜ்ல இலக்கணப் பிழையா? மாதா சொல்றதுல பிழையா? இல்ல .. காட்சி பார்க்கிற அந்த அம்மா சொல்றதுல்ல இலக்கணப் பிழையான்னு தெரியலை! அதோட எந்த மொழியில் மெசேஜ் வருதுன்னும் தெரியலை.
கீழே உள்ள படத்தைப் பாருங்க. பொறுமை இல்லாட்டா கூட காட்சியை ஓட விட்டு, ஓரிரு நிமிடங்களாவது பாருங்கள்.
அந்த அம்மாவுக்கு மாதா தெரியிறது உங்களுக்குத் தெரியுதா? காட்சி கிடைக்கிற அந்த அம்மாவுக்கு வலது பக்கத்தில் நிற்கிற அந்த Father ஏதாவது தெரியுதான்னு மேல மேல பார்த்துக் கொண்டு நிற்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருக்கும் போரடிச்சிப் போனது போலும். ஐந்தே முக்கால் நிமிடம் மாதா பேசுகிறார். அந்த செய்தியை வாசிக்க சரியாக ஒரு நிமிடம் மட்டும் ஆகிறது. மாதா பேசும் போது இந்த அம்மா இங்கே தலையாட்றாங்க; பரவாயில்லை. ஆனால் மாதா ஏதோ ஜோக் அடிச்சது மாதிரி சில இடத்தில் சிரிகிறாங்க. ஆனால் செய்தியை வாசிக்கும் போது அதில் ஜோக் ஏதும் இல்லையே என்று பார்த்தேன்.
இப்படி சில அதிசயக் காட்சிகள்
அங்கு தோன்றியதாகச்
சொல்கிறார்கள்.
வானில் சிலுவைக் குறிகள்
எனக்குப் பல ஆச்சரியம். ஏன் தொடர்ந்து 1981-ல இருந்து இன்னும் தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க? 31 வருஷம் ஆகிப் போச்சு.எதுக்காக இப்படி நீளமா, 31 வருஷமா மெசேஜ் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. (சட்டுன்னு மண்டைக்குள்ள ஒரு ஐடியா வந்துச்சு ... ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக மாதா இன்னும் இழுத்து 31 வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!)
மெசேஜ் கொடுக்குறது எதுவரை அப்டின்னு கேட்டேன். ஆறு பேத்துக்கு மெசேஜ் ஆரம்பிச்சாங்களா. அதில் ஒவ்வொருத்தருக்கும் ஆளாளுக்கு பத்து .. பத்து ரகசிய மெசேஜ் கொடுத்திருவாங்களாம். அது முடிஞ்சதும் மெசேஜ் முடிஞ்சிரும் அப்டின்னார் நண்பர். அதில இன்னும் ரெண்டு பேத்துக்கு மட்டும் தான் ரகசியம் பாக்கியிருக்குன்னார். என்ன மெசேஜ் .. எதும் அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு நண்பர் சொன்னார். சரி .. இது ‘அந்த’ விஷயங்களுக்கு மட்டும் அப்டின்னு நினச்சிக்கிட்டேன்.நண்பரின் நம்பிக்கையைப் பார்த்தால் அனேகமா சீக்கிரம் Bosnia-க்குப் புறப்பட்டுருவார்னு நம்புறேன்.
இதில் இன்னொரு சந்தேகம் என்னன்னா, மாதா middle east asian ஆளு. ஆனா அவங்களைப் பார்க்கிறவங்க எல்லாரும் சொன்னதை வச்சி செய்ற சிலை, படங்கள் எல்லாத்திலேயும் அவங்க அப்படியே அமெரிக்க / ஐரோப்பிய ஆளு மாதிரி, அதாவது ‘வெள்ளைக்கார பொண்ணு’ மாதிரிதான் இருக்காங்க. இது எப்டின்னு தெரியலை!
( 1981-லிருந்து இந்தப் ‘புதுமை’ நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இதே போல் போர்ச்சுகல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917-ல் 3 சின்னக் குழந்தைகளுக்குமாதா காட்சி அளித்தாராம். அதனால் அவருக்கு பாத்திமா மாதா என்று பெயருமுண்டு.சரியாக 13 தேதியில் மாதம் ஒவ்வொன்றாக ஆறு மாதங்களுக்கு இந்தக் காட்சி நடந்ததாம். அப்போது இந்தக்
குழந்தைகளுக்கு மாதா 3 ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதில் முதல் ரகசியம் நரகம் பற்றியது. இந்த நரகம் நம் பூமிக்கு அடியில் இருப்பதாம். இதனாலேயே இந்த ‘ரகசியத்தின்’ உண்மை புரிகிறது. என்னுடன் வேலை பார்த்த ஒரு “நல்ல” கிறித்துவர் பூமிக்கு அடியில் நீண்ட துளை போட்ட போது அங்கிருந்து ஆட்களின் அழுகை ஒலி கேட்டதாகக் கூறினார்! இரண்டாவது ரகசியம் உலக யுத்தங்கள் பற்றியதாம். மூன்றாவது ரகசியத்தைப் பற்றிப் பல கதைகளும், விவாதங்களும், முரண்பாடுகளும் உண்டு. இதையெல்லாம் தெரிந்த பின்னும் இப்போது மாதா ரகசியங்கள் கொடுக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது என்பது எனக்குப் புரியவில்லை.)
சரி .. மதுரை ஆதீனம் சும்மா சிவன் வந்து ’டிக்’ பண்ணினதைச் சொல்லிட்டார். இவங்க வீடியோவெல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காங்க. இருந்தும் நம்மட்ட இன்னும் ஒரு கடவுளும் வரலையேன்னு ஒரு வருத்தத்தோடு இருந்தேன். அப்போ முக்கியமா மீதியிருந்த இன்னொரு கடவுளும் வந்ததாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.
நான் இங்க பதிவிட ஆரம்பித்த பிறகு ஏன் கிறித்துவத்தை விட்டு வெளியே வந்தேன்னு எழுத ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் மற்ற மதங்களைப் படிக்க ஆரம்பித்தேனா .. அப்போதான் குரான் ஒன்று வேண்டியதிருந்தது. என்னிடம் படித்த இஸ்லாமிய மாணவர் ஒருவரிடம் ஒரு புத்தகம் கேட்டேன். தானே வாங்கித் தருவதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் குரானைத் ‘தொடும்போது’ நான் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியெல்லாம் கூறினார். அதெல்லாம் நமக்கு லாயக்கு படாது. எங்கே புத்தகம் கிடைக்கும்னு சொன்னா வாங்கிக்கிறேன் என்றேன். எப்படியோ அவரிடமிருந்தே ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் எனக்கு இறையருள் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி அன்பளிப்பாகக் கொடுத்தார். நானும் பயன்படுத்த ஆரம்பித்தேன். அங்கங்கே அடிக் கோடுகள் போட்டு பயன்படுத்தினேன். அதன்பின் அதில் அராபியும் தமிழும் இருந்ததாலும், தலைகீழாகப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டியதிருந்தாலும் வேறொரு புது குரான், தமிழ் மட்டும் உள்ளது, IFT வெளியீடு ஒன்று வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
சில நாட்களுக்கு முன், ரம்ஜான் மாதத்தில் அந்த நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி. என்னவென்றேன். நான் கொடுத்த குரானைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றார். இதென்ன, அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு இப்போது திருப்பிக் கேட்கிறாரேன்னு யோசித்தேன். இருந்தும் தருவதாகச் சொல்லிவிட்டு, சில நாளில் இன்னொரு நண்பர் மூலம் திருப்பிக் கொடுத்தனுப்பினேன். அதோடு, இது அன்பளிப்பாக வந்ததால் என் புத்தகமாக நினைத்து, நிறைய குறிப்புகளும், அடிக்கோடிட்டும் வைத்துள்ளேன் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். எடுத்துச் சென்ற நண்பரும் புத்தகம் கொடுத்தவருக்கு வாத்தியார் தான். இவர் புத்தகம் கொடுத்த போது நான் சொன்னதை அவரும் சொல்லியிருக்கிறார். வந்த பதில் நன்றாக இருந்தது.
ரம்ஜான் மாதத்தில் அல்லா அவரிடம் வந்து அந்தப் புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி விடு என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாராம்! அதனால் தான் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டாராம்.
அதிக நாட்களாக என் கண்ணில் படாத அந்த நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்த நாலைந்து நாட்களில் அதிர்ஷ்ட வசமாக (??) எதிர்த்தாற்போல் வந்தார்.
என்னிடம் வந்து, ’சார், அல்லா அடிக்கடி வந்து கேட்டதால் தான் அப்படி வாங்கினேன்’ என்றார்.
நான், ‘இதையெல்லாம் நம்பிக்கையுள்ளவர்களிடம் சொல்லுங்கள். நானெல்லாம் இதை நம்புவேனா?’ என்றேன்.
’இல்லை சார், ரம்ஜான் மாதம் நோம்பு காலத்தில் முழுவதும் அடிக்கடி அல்லா வந்து என்னிடம் புத்தகத்தை வாங்க திருப்பி திருப்பிச் சொன்னார்’ என்றார்.
’அட போங்கப்பா ...gift கொடுத்த புத்தகத்தைத் திருப்பி வாங்குன்னு சொன்ன உங்க கடவுள நினச்சா சிரிப்பு சிரிப்பா வருது; நீங்களும் .. உங்கள் கடவுளும் ..!. bye' அப்டின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
இப்போதும் எனக்கு ஆச்சரியம். அது சிவபெருமானோ, மாதாவோ, அல்லாவோ இப்படி அடிக்கடி சிலருக்குப் ‘பிரசன்னம்’ ஆகிறார்களே என்று வருத்தமாகப் போச்சு. ஏன் எனக்கு மட்டும் அந்த ‘அதிர்ஷ்டம்’ வரவே மாட்டேங்குதுன்னு ஒரே கவலை.
ஆமா .. இந்த மாதிரிக் கவலைகள் என்னை மாதிரி உங்களுக்கும் இருக்குதா ...?
-------------------------------------
திருவிளையாடல்
கீழேயுள்ள காணொளி ரொம்ப நல்லா இருக்கு. தலைப்பு: JESUS PRANKS.
இப்பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு காணொளி. மதச்சர்ர்புள்ளது தான். ஆனால் ....
இதைப் பார்த்து யாரும் யாரையும் அடிக்கவில்லை;
போராட்டமில்லை;
அட .. ஒரு கண்டனம் கூட இல்லை.
எங்க கடவுளை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று யாரும் ஒரு கடப்பாரையைக் கூட தூக்கவில்லை.
எங்க கடவுளைக் காப்பாற்றினால் ஒரு லட்சம் டாலர் தர்ரேன்னு எந்த அமைச்சனும் சொல்லவில்லை.
வெற்றி பெற்றவர்கள் எழுதும் வரலாறு எப்போதும் அவர்கள் விருப்பம் போலவே எழுதப்பட்டு இருக்கும். இதனாலேயே வளர்ந்து வந்த பழமைக் கிறித்துவர்கள் தங்களை Orthodox என்றும், மற்றவர்களை heretical என்றும் பிரித்து, தாங்கள் கிளைத்து வளர்ந்ததற்கு ‘பரிசுத்த ஆவி’யேகாரணம் என்றும் ஒரு வரலாற்றைப் படைத்து விட்டார்கள். ஆனால் நாக் ஹமாதியின் பழம் எழுத்துக்கள் இதனை ஒரு கேள்விக் குறியாக்கி விட்டுள்ளன. ஆரம்பத்தில் பல்வேறு அமைப்புகளோடு இயங்கி வந்த கிறித்துவம் அப்படியே விடப்பட்டிருந்தால், கால அமைப்பில் மடிந்து போன பல மதங்கள் போலவே அழிந்து போயிருக்கலாம். அந்த அழிவிலிருந்து தப்பித்தது கிறித்துவத்தின் அமைப்பு முறையாலும், இறையியல் கட்டுக்கோப்பினால் மட்டுமே முடிந்தது. (142)
பழமைக் கிறித்துவம், gnostic கிறித்துவம் போலல்லாமல், பிற மனிதர்களோடான உறவிற்கு முக்கியத்துவம் அளித்தது. (146)
Irenaeus கடவுள் இரட்சணியத்தின் வழியை மிகவும் புத்திசாலித்தனத்தாலோ, ஆன்மீகத்தினாலோ அடையும்படி நிச்சயமாக வைக்க மாட்டார். எளிமையானதாகவும், எல்லோராலும் அடையும் விதமாகவும் தான் வைத்திருப்பார் என்றார். (147)
மேலும் Irenaeus, கிறித்துவர்கள் தங்கள் மதத்தைச் சீராக வழுவ வேண்டுமென்றும், தலைமையின் கீழ் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும், தலைமை அனுமதிக்கும் வேத நூல்களை, சமயச் சடங்குகளை, தலைமையின் ஆளுமையை மட்டும் மதிக்கும்படியும் வலியுறுத்தினார்.
ஏசு, லூக்: 14:26-ல் “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன் தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது” என்று கூறியுள்ளார். (எங்கள் உயிரினும் மேலான நபி என்று இஸ்லாமியரும் சொல்வது இதன் அடிப்படையில் தானோ? அவர்களுக்கு முகமது; இவர்களுக்கு ஏசு! மத ஒற்றுமை !!!) தன் வழியில் வருவோர் தங்கள் சுற்றம் முழுமையையும் நிராகரிக்க வேண்டுமென்றும், தன்னைப் போலவே குடும்பம், திருமணம், உறவு என்று ஏதுமில்லாமல் தன் உயிர் பற்றிய கவலையும் கொள்ளாமல் உண்மையைத் தேடி அவர் சென்றது போலவே தன் சீடர்களும் இருக்க அவர் எதிர்பார்த்தார். (148)
கிறித்துவத்தை வெறுத்த நீட்ஷே -Nietzsche , ‘ஒரே ஒருவர் மட்டுமே உண்மையான கிறித்துவன்; அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்’ என்று எழுதினார். (149)
gnostic கிறித்துவம் பூமிக்குள் ஓடும் ஒரு அமைதியான நதி போல் காலம் பூராவும் ஓடி வந்துள்ளது அவ்வப்போது அது நிலத்திற்கு மேலும் பீறிட்டு வருவதுண்டு; மத்திய காலக்கட்டத்திலும் (Middle Ages), அதன் பின் மறுமலர்ச்சிக் காலத்திலும் (Reformation) அப்படி வெளிக்கிளம்பிய கிறித்துவம் பல மாற்றங்களையும் கண்டது. அதிலும் மறுமலச்சிக் காலத்தில் Baptist, Pentecostal, Methodist, Episcopal, Congregational, Presbyterian, Quaker போன்ற பிரிவுகள் பல பழமைக் கிறித்துவத்திற்குள் தோன்றின. இவ்வமைப்புகள் எல்லாமே புது ஏற்பாட்டையும், பழைய சமய வழிமுறைகளையும் தக்க வைத்துக் கொண்டன. கிறித்துவ தேவ திரவியங்களை அவர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றிக் கொண்டனர். ஆனால் அவைகளை எப்போதும் கைவிடவில்லை.
Valentinus, Heracleon, Blake, Rembrandt, Dostoevsky, Tolstoy and Nietzche போன்றவர்கள் அனைவரும் இயங்கி வந்த பழமைக் கிறித்துவத்தின் விளிம்பில் மட்டுமே தங்களை நிறுத்திக் கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கிறித்து, அவரது பிறப்பு, வளர்ப்பு, அவரது அறிவுரைகள், இறப்பு, மீண்டும் உயிரோடு எழும்புதல் - எல்லாமே பிடித்துள்ளன. ஆனால் பழமைக் கிறித்துவத்தில் இருந்த அமைப்பின் ஆளுமைக்கு எதிராகவே அவர்கள் இருந்தனர். இன்றும் இதே நிலை பல கிறித்துவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கிறித்துவத்தின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட பல பழைய கேள்விகள் இன்னும் அதே போல் எழுப்பப்பட்டு வருகிற்ன்றன.
பல கேள்விகள் :- *ஏசுவின் மறு உயிர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது? *பெண்களுக்கான இடம் கிறித்துவத்தில் எது? குருவானவர்களாக, கிறித்துவத்தின் ஆளுமையில் அவர்கள் இடம் எது? *கிறிஸ்து என்பவர் யார்? *கிறிஸ்துவிற்கும் அவரை நம்புவோருக்கும் உள்ள உறவு என்ன? *கிறித்துவத்திற்கும் ஏனைய உலக மதங்களுக்குமான தொடர்புகள் என்ன? (150)
நாக் ஹமாதியில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டிருந்தால் அன்றே அவைகள் முற்றாக எரித்து, அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இருபதாம் நூற்றாண்டு வரை பாதுகாப்போடிருந்து வெளிவந்த இந்த நூல்கள் இப்போது ஒரு புதிய வழியைக் காண்பிக்கின்றன. கிறித்துவத்தின் மீது ஒரு புதிய பர்ர்வையைக் கொடுக்கின்றன. அவைகளை வெறும் மதப்புரட்டு, பைத்தியக்காரத்தனம் என்பது போன்ற தலைப்புகள் கொடுக்காமல், அவைகளைக் கிறித்துவத்தின் ஆரம்பகாலத்து வரலாறாகப் பார்க்கிறோம். இன்றைய பழமைக் கிறித்துவத்திற்குப் போட்டியாக வரலாற்றில் அன்று இருந்த ஓர் உண்மையை இன்று காண்கிறோம். (151)
யோவான் 14: 5 - 7
தோமா அவரிடம் , ‘ஆண்டவரே!நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?’ என்றார்.
இயேசு அவரிடம், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’ என்றார்.
யோவானின் புதிய ஏற்பாடு gnostic கிறித்துவர்களிடமும் சிறப்புத் தன்மையோடு இருந்து வந்துள்ளது. அதே போல் பழமைக் கிறித்துவர்களுக்கும், சிறு மறுப்பு வந்திருந்தாலும், இந்நூல் ஏற்புடையதாயுள்ளது. Gospel of Thomas, Dialogue of the Savior போன்ற நூல்களைப் புறக்கணித்தவர்கள் யோவானை எப்படி ஏற்றுக் கொண்டனர்? கடவுளை ஏசுவின் மூலமாகவே பார்க்க முடியும் என்று சொல்லும் கொள்கையே காரணம்.(119)
Gospel of Thomas-ல் ஏசு இதே போன்ற ஒரு கேள்வியை ஏசுவின் சீடர்கள் கேட்ட போது , ‘ஒளிபடைத்த ஒருவனிடம் ஒளி இருக்கிறது; அதுவே இந்த உலகை ஒளிமயமாக்குகிறது.அவனிடம் ஒளியில்லையேல் அவன் இன்னும் இருளில் இருக்கிறான்’ என்கிறார்.
வாலண்டியன் வழியினருக்கு யோவானில் வரும் வார்த்தைகள் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் பல கிறித்துவர்கள் துறவு நிலைக்கான தனிமை, உருவெளித் தோற்றம், ஆன்மீக நிலை போன்றவைகளை மேற்கொண்டனர். ஆனால் நான்காம நூற்றாண்டிற்குப் பிறகு துறவிகளும் கூட நடைமுறைக் கிறித்துவர்களோடு ஒன்றி, மதக் குருக்களுக்குக் கீழ் வரவேண்டும் என்பதை உறுதிப் படுத்தினர். (120)
இந்த விதக் கட்டுப்பாடுகளினாலேயே, நாக் ஹமாதி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள St. Pachomius என்ற இடத்திலிருந்த குருமடங்களில் நாக் ஹமாதி நகல்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்திருக்கலாமென Frederik Wisse என்பவர் தன் ஆய்வுக் கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் 367-ம் ஆண்டில் மிகவும் அதிகாரம் பெற்றிருந்த Archbishop of Alexandria, Athanasius என்பவர் இது போன்ற நூல்களை- ஐயத்துக்கிடமான தேவப் புரட்டு நூல்களை - எரித்துப் போட உத்தரவிட்டார். அதை மீறி பாதுகாக்கப்பட்ட நூல்களே 1600 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
140 - 400 ஆண்டுகளில் கிறித்துவம் ஒரு அரசியல் அமைப்பாகவே உருவெடுத்தது. இரேனியஸ் gnostic கிறித்துவர்களைப் பகைமையோடு தான் பார்த்தார். (121)
gnostic கிறித்துவர்கள் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் உருவாக்கினான் . ஆகவே கடவுள் மனிதனை வணங்க வேண்டும் என்றொரு வாக்கியம் Gospel of Philip-ல் உள்ளது. (122)
gnostic கிறித்துவர்கள் இதனாலேயே 19-ம் நூற்றாண்டின் மனோதத்துவ அறிஞர் Ludwig Feuerbach என்பவர் சொன்ன ‘theology is really anthropology' (இறையியல் என்பதே மனித இன இயலாகும்.) தத்துவத்தை ஒப்புக்கொள்கிறார்கள். (123)
மனித இயலை பழமைக் கிறித்துவர்களும், gnostic கிறித்துவர்களும் இரு வேறு விதமாகக் காண்கிறார்கள். பழமைக் கிறித்துவர்கள் யூதர்களைப் போலவே, கடவுளும் மனிதனும் மனிதன் செய்யும் பாவங்களால் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறது. ஆனால் gnostic கிறித்துவர்களின் கருத்து வேறுபட்டு நிற்கிறது. 'அறிவு’ அதுவும் ‘தன்னறிவு’ மட்டுமே ’தன்னையே தன்னுள் பார்க்கும்’ திறனைத் தருகிறது.
Valentinus என்பவரின் கருத்துப் படி எல்லாவற்றிற்கும் தாயான ‘அறிவு’ (wisdom) தன் துயரங்களின் ஊடே நான்கு ‘பூதங்களை’க் கொண்டு வந்தது. அந்த நான்கு பூதங்கள்: மண், காற்று, நெருப்பு, நீர். (124)
சுய அறிவற்று இருப்பதே சுய அழிப்பின் முதல் படி. (Self-ignorance is also a form of self-destruction.) Dialogue of Savior என்ற நூலின்படி பிரபஞ்சத்தின் இந்த நான்கு பூதங்களை உணராதோர் அழிவை நோக்கிச் செல்கிறார்கள். (125)
Gospel of Thomas சுய அறிவு மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அந்த நூலில், ஏசு சொல்கிறார்: “தேடுபவன் தொடர்ந்து தான் தேடுவது கிடைக்கும் வரை தேடட்டும். தேடுவது கிடைத்தவுடன் அவன் குழம்பி நிற்பான். அந்தக் குழப்பத்தில் அவன் ஆச்சரியத்தின் விளிம்பிற்குப் போவான். அதன் பின் அவன் எல்லாவற்றையும் ஆளும் திறன் பெறுவான்.”
உள்ளேயிருப்பதாக உணரும் அந்த “ஒளி” எங்கிருந்து வருகிறது? ப்ராய்ட் சொன்னது போல் gnostic கிறித்துவம் ‘உடம்பின் விளக்காக இருப்பது மனமே ’ என்கிறது.
“மனமே நம் வழிநடத்தி; காரணங்களே நமது ஆசிரியர்”.(127)
Kingdom of God - கடவுளின் ராஜ்ஜியம் என்பதை ஏசு Gospel of Thomas-ல் நன்றாகவே கிண்டலடிக்கிறார்: “உங்களை வழி நடத்துபவர்கள் கடவுளின் ராஜ்ஜியம் வானத்தில் உள்ளது என்றால், அங்கு நீங்கள் போகும் முன் பறவைகள் முதலில் போய்விடும். இல்லை, கடவுளின் ராஜ்ஜியம் கடலில் இருக்கிறது என்றால் முதலில் மீன்கள் அங்கே உங்களுக்கு முன் போய் விடும். ஆனால் கடவுளின் ராஜ்ஜியம் என்பது சுய தரிசனத்தில் தான் (It is a state of self-discovery.) இருக்கிறது”. (128)
gnostic கிறித்துவர்கள் ஏசுவின் மேற்கூறிய விளக்கங்களால் மனிதனின் முழு விடுவிப்பு என்பது வரலாற்றின் வடுக்களாக இருக்காது; ஆனால் அவை மனித மனங்களின் மாறுதல்களால் மட்டுமே இருக்கும் என்று கருதுகிறார்கள். (129)
Gospel of Thomas-ல் ஏசுவின் சீடர்கள் ஏசு எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்க, - அப்போதுதானே அவர்கள் அவரை அடைய முடியும் என்பதால் கேட்க - ஏசு அவர்களுக்கு நேரடி பதில் கொடுக்காது, உங்களிடமே ஒளிந்திருக்கும் பதிலைக் காணுங்கள் என்கிறார்.
அவரது மூன்று முக்கிய சீடர்களில் ஒருவரான மத்தேயு - "place of life" - வாழ்வின் இருப்பிடம் எது என்று கேட்க, ஏசு ‘உங்களில் யார் தன்னையே அறிந்திருக்கிறீர்களோ அவர் அதைக் கண்டு கொண்டு விட்டார்’ என்கிறார். (131)
ஒவ்வொரு gnostic கிறித்துவரும் தன் மனதிற்கு தானே ஒரு சீடனாக இருப்பார் என்றும், தன் மனதே உண்மையின் பிறப்பிடம் என்றும் கருதுவார்கள் என்றும் Testimony of Truth கூறுகிறது. ( இதைத்தான் “ஞானோதயம்” என்கிறோமோ?) (132)
சமயங்களின் மொழியில் உள்மனத்து மாற்றங்களே மொழியாகின்றன; இறையுணர்வை அடைந்தவர்கள் தாங்கள் காண்பது எதுவோ அதுவாகவே மாறிவிடுகிறார்கள்.
“நீ ஆன்மைவைப் பார்த்தாய்; நீயே ஆன்மாவாக மாறிவிட்டாய். நீ கிறிஸ்துவைப் பார்த்தாய்; நீயே கிறிஸ்துவாக மாறி விட்டாய். நீ பரமபிதாவைப் பார்த்தாய்; நீயே பரமபிதாவாக மாறி விட்டாய். நீ உன்னையே
பார்த்தாய்; நீ பார்த்ததும் நீயே”
”Gnosis என்ற இந்த நிலையை அடைந்தவன் இப்போது ஒரு கிறித்துவனல்ல; ஆனால் அவனே இப்போது ஒரு கிறிஸ்து” (அகம் பிரம்மாஸ்மி என்பதுதான் இதுவோ?)
பல gnostic கிறித்துவர்கள் தன்னையே புரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த ஆழ் மனத்து ஆர்வமே பல பேருண்மைகளைத் திறந்து காட்டும் ஒரு சாவியாக மாறி விடுகிறது. “நாம் யார்? எங்கிருந்து நாம் வந்தோம்? எங்கே இங்கிருந்து போகிறோம்?” Book of Contender என்ற நூலின் படி “தன்னைத் தெரிந்து கொள்ளாதவன் எதையுமே தெரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான். ஆனால் தன்னைப் பற்றித் தெரிந்து கொண்டவன் தன்னைப் பற்றியுமல்லாமல், எல்லாவற்றின் அடிப்படை உண்மைகளை உணர்ந்தவனாகிறான்”. (”நான்” என்ற கொள்கையை வைத்து இந்து மதத்தில் உள்ள தர்க்கங்கள் போலவே இவையுமுள்ளன.) (134)
ப்ளோட்டினஸ் - Plotinus - என்ற தத்துவாசிரியர் “கடவுளைப் பார் என்கிறார்கள்; ஆனால் கடவுளை எங்கே எப்படி பார்ப்பது என்று gnostic கிறித்துவர்கள் ஏதும் சொல்வதில்லை” என்கிறார்.
நாக் ஹமாதி ஆன்மீக ஒழுக்கம் பற்றி பலவற்றைக் கூறுகிறது. நாக் ஹமாதியின் மிக நீள நூலான Zostrianos ஞானம் பிறப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. ‘ஒவ்வொருவனும் தனது உடலிச்சைகளை கடும் தவம் மூலம் ஒதுக்கி வைக்க வேண்டும். இரண்டாவதாக, தியானத்தின் மூலமாக தன் மனதை முழுமையாக ஆளுமைப் படுத்த வேண்டும். இந்த நிலைக்கு வரும்போது அவன் கடவுளை முழுமையாக உணர முடியும். (ஆசைகளை ஒழி என்ற புத்த தத்துவம் போலவே இக்கருத்துக்கள் உள்ளன.) (135)
gnostic ஆசிரியர்கள் தங்களது ரகசியமான வழிகாட்டுதல்களை வெறும் வார்த்தையாடல்கள் மூலமாக செய்து வந்துள்ளனர். அவை அந்தந்த சீடர்களின் மனோநிலையை ஒத்ததாக இருக்கவே இம்முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். (இது Zen குரு - சிஷ்ய உறவு போல் உள்ளதாகத் தெரிகிறது.)