Friday, April 11, 2014

743. ஷியா – சன்னி பிரிவுகள் ... 1







*



 ‘சமாதானம்’ என்ற பொருள் கொண்ட இஸ்லாம் என்ற மதம் முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது காலத்திலேயே பெரும் இஸ்லாமிய நாடாக உருக்கொண்டது. முகமது 622லிருந்து 632 வரை ஏறத்தாழ 99 போர்க்களங்களைக் கண்டு அவரது இஸ்லாமியப் பகுதியை உருவாக்கினார்.

ஆனால் அவரது இறப்பை ஒட்டியே அவரால் உருவான இஸ்லாம் சன்னி – ஷியா என்ற இரு பகுதிகளாக உடைந்தது. இதற்குக் காரணம் நபியின் இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தோன்றிய தகராறே காரணம். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஷியா பிரிவினர் 20 விழுக்காட்டிற்கும் கீழே தான் உள்ளனர். ஆனாலும் ஈராக், ஈரான், பாஹ்ரெய்ன் என்னுமிடங்களில் ஷியா அதிகமாக உள்ளனர்.

சன்னிகள் நபியின் வழிவந்தோரில் தகுதியானவர் பதவியேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஷியா என்ற சிறு பகுதியினர் முகமதுவின் மகளை மணம்புரிந்த அலி பதவிக்கு வரவேண்டுமென விரும்பினர். நபி இறந்த உடனேயே இந்தப் பிளவு ஏற்பட்டு விட்டது.இதில் சன்னிப் பிரிவினரின் விருப்பப்படியே அபு பக்கர் முதல் கலிபா ஆனார். அபு பக்கரை அடுத்து அவரது தேர்வின் படி உமர் அடுத்த கலிபா ஆனார். அடுத்து உத்மன் மூன்றாவது கலிபா ஆனார். இவர் கொல்லப்பட்டு, நான்காவது கலிபாவாக அலி வந்தார். இதனை எதிர்த்து பலர் போர் தொடுத்தனர்.

போராட்டங்களின் முடிவில் அலி கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து அலியின் மகன் ஹுசைன் ஒரு சிறு படையோடு இன்றைய ஈராக், அன்றைய கர்பாலா போர்க்களத்தில் டமாஸ்கஸ் கலிபாவின் படைகளோடு மோதினார். ஆனால் அவர் படை தோற்கடிக்கப்பட்டு, நபியின் பேரனான ஹுசைனும் அவரது குடும்பத்தினர் 72 பேரும் – ஹுசைனின் ஆறு மாதக் குழந்தையும் – அழித்தொழிக்கப்பட்டனர். ஹுசைனின் தலை மட்டும் கொய்யப்பட்டு டமாஸ்கஸில் உள்ள கலிபாவிடம் சேர்க்கப்பட்டது.

குர்ஆனின் வசனங்கள் தங்க எழுத்துகளில் சுவனத்தில் இருக்கும். அதன் நகல் ஜிப்ரேல் மூலமாக முஹம்மதுவிற்கு இறங்கும்; பின், அதனை அவர் முதலில் மனனம் செய்து கொள்வார். பின்னர் அதனைத் தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, அவர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்.. அதன் பின் குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளச் செய்து, எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார். இப்படித் தான் அவை குர்ஆனாக தொகுக்கப்பட்டது. – இப்படி ஒன்றை 1400 வருடங்களாகச் சொல்லிக் கொண்டு தங்கள் நம்பிக்கையை இதன் மேல் இஸ்லாமியர்கள் வைத்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். மதராஸா பள்ளியில் உள்ள பாடத்திட்டம் போல் அழகாக கதை போல் இருப்பது அந்தப் பள்ளிப் பருவத்திற்கு சரி. ஆனால் எல்லோருக்குமல்ல.

இதில் எந்தக் கேள்வி கேட்டாலும் இதே பதில் திரும்பச் சொல்லப்படும். உதாரணமாக, யாருக்கும் எளிதாகத் தோன்றக்கூடிய ஒரு கேள்வி: அல்லா ஏன் படிப்பறிவில்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி இறங்கியும், அத்தனை ஆண்டுகளாக ஒருவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இப்படி தொடர்ந்து இருந்திருக்க முடியுமா? //"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! // - இப்படி சொல்லியிருக்கிறதாம். அது அவர்களது நூல்; அதிலுள்ளவை அல்லாவின் வார்த்தைகள் – நம்பிக்கையாளர்களுக்கு. நமக்கு இது எப்படி ஒத்து வரும்? வலது கையால் எழுத மாட்டாராம்...? எதற்காக இப்படி ஒரு ‘புத்திசாலித் தனமான’ முடிவை அல்லா எடுத்தார்? முகமதுவே நேரடியாக எழுதி விட்டால் //பைபிளிலிருந்தும் தோராவிலிருந்தும் அனைத்து வசனங்களையும் காப்பி அடித்து விட்டார் என்று அன்றைய அரபுகள் குற்றம் சுமத்துவர். அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."(குர்ஆன் 29:48)// அதாவது, இவர் கைப்பட எழுதினால் மற்றவர்கள் இவர் ‘காப்பி’ அடித்து விட்டார் என்று குற்றம் சுமத்துவார்களாம். ஏன், ஒருவர் காப்பியடித்து அதை வாயால் சொல்லி பிறரை எழுத வைத்தாலும் … காப்பி காப்பி தானே! ஏனிப்படி நடக்க முடியாதா? அதுவும் இப்படி ‘தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டாலும்’ இப்போதும் முகமது பழைய மத நம்பிக்கைகளைக் குரானில் இறக்கி வைத்துள்ளார் என்று தானே சொல்லப்படுகிறது.

Really very poor logic of Allah ! அல்லாவின் லாஜிக் என்ன என்று புரியவில்லை.

மேலும் குரானில் இன்றைய அறிவியல் அப்படியே இருப்பதாகவும் அதுவே இது ஒரு 1400 வருடங்களுக்கு முந்திய மனிதனால் எழுதப்பட்டதல்ல; எல்லாம் அறிந்த அல்லாவால் எழுதப்பட்டது என்பது குரான் கடவுளின் வார்த்தை என்பதை நிரூபிக்க அவர்கள் பயன்படுத்தும் இன்னொரு விவாதம். ஆனால் என் பட்டறிவில் ஆணிற்கு எங்கிருந்து விந்து வருகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கினாலும் அவர்கள் சொன்ன ‘எங்கள் முயலுக்கு மூன்று கால் தான்’ என்கிற விவாதம் தொடர்ந்து வருவதையும் பார்க்க முடிந்தது. அதே போல் உலகத்தைச் ‘சுருட்டி வைத்தல்’, சூரியனின் பயணம் போன்றவைகள் எல்லாமே விஞ்ஞானம் என்று கூறுவதைப் பார்க்கும் போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம்: அவர்கள் முயலுக்கு மூணு கால் தான் என்பதே!

அனைத்தும் அறிந்த ஒரு இறைவனென்றால் அவன் சொல்வது மிகச் சரியானதாக, ஆணியின் தலையில் அடிக்கும் சுத்தியலாக கருத்துகள் இருக்க வேண்டும். ஆனால் அடைப்புக்குறி போட்டு தான் அவைகளை மனிதர்களுக்கு விளக்க வேண்டும் என்று நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது இவ்வளவு மோசமான ‘அறிவியல் ஆசிரியராக’ அல்லா இருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது. இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை தான் குரான் தொகுக்கப்பட்டதற்கு மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

இதில் இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். குரான் முகமது இறந்த பிறகு தொகுக்கப்பட்டது. ஆனால் இந்த கால இடைவெளிக்குள் இஸ்லாமியருக்குள்ளேயே, அதுவும் முகமதுவின் நண்பர்களுக்குள்ளும், உறவினர்களுக்கும் இடையே நடந்த போர்கள் பற்றி நிறையவே சொல்லியாயிற்று. எந்தக் குழுவில் யார் அதிகாரத்தோடு இருந்தார்களோ அவர்கள் சொல்வது தான் உண்மையாக இருக்கும் என்பது வெளிப்படை உண்மை; வஹி பெற்றவரே எழுதி வைத்திருந்தால் இருக்கக்கூடிய உறுதி, தெளிவு, நேர்மை இவ்வகைப் பதிவுகளில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான்.

அதுவும் என் வார்த்தைகளைத் தொகுக்க வேண்டாம் என்று முகமது உத்தரவு கொடுத்த பிறகும் ஹதீசுகள் தொகுக்கப் பட்டன. ஏன் தொகுக்கப்பட்டன என்பதற்கான பதில் இல்லை; ஆனால் தொகுக்கப்பட்டிருந்தால் இத்தனை அரசியல், இத்தனை குழுக்கள், அவர்களுக்குள் போராட்டங்கள் இருந்த காலத்தில் அவை தொகுக்கப் பட்டவைகள் என்பதே அவைகளின் மீதான நம்பிக்கைக்கு ஒரு பெரிய கேள்வி.

 //நபி எந்த எழுத்துக்களையும் விட்டுச்செல்லாததனால், "நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், அது நபி கூறியதாகாது.// -- இப்படி ஒரு விவாதம். அதாவது ஒரு ஹதீஸ் சொன்னால் அது நபி சொன்னது என்ற நிச்சயம் இல்லையாம். அப்படி நிச்சயம் இல்லாத ஹதீசுகளை ஏன் இன்னும் வைத்திருக்கிறார்கள். ஒண்ணும் புரியவில்லை ....

சானா குரான் என்று ஒரு தொல்பொருள் கிடைத்தது. ஆரம்ப கால ஆய்வுகள் சில ஜெர்மானிய அறிஞர்களால் ஆரம்பிக்கப் பட்டது. சில தகவல்கள் கசிந்தன. அதோடு சரி ... இப்போது அவை சரியான பாதுகாப்பின்றி ஒரு நூலகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள உண்மைகள் எப்போதாவது வெளிவருமா என்றும் தெரியவில்லை. அது முகமதுவின் check list-ல் அது இல்லை; அதைப் பற்றிய அக்கரை எங்களுக்கு ஏதுமில்லை என்று இஸ்லாமியர் கை கழுவுகிறார்கள்.

இத்தனை குழப்பங்களையும், மனிதக் குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதெல்லாம் பெரும் நம்பிக்கை; நம்பிக்கையற்றவர்களுக்கு இதெல்லாம் வெறும் வேடிக்கை !






*

Wednesday, April 09, 2014

742. கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” ... 2






*
”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர்  “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”  என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும்  அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.

அரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன்.  திரு. R.கோபாலுக்கு மிக்க நன்றி.


2


R.கோபால்

டெம்போரல் லோப் வலிப்புநோய்க்கு ஒரு அசாதாரணமான பக்க விளைவு உண்டு. அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் சிறுபான்மையினருக்கு மத சம்பந்தமான பிரமைகளை உருவாக்குகிறது. இந்த பிரமைகள் இதுவரை கேட்டிராத சில கேள்விகளை கேட்கும்படி விஞ்ஞானிகளை தூண்டியிருக்கின்றன.
இந்த மத நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? மூன்று பெரிய மதங்களுக்கு revelation’  என்னும் வெளிப்படுத்துதல் அல்லது இறைவசனம் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. தீர்க்கதரிசிகள், நபிகள் போன்றோர் உருவாக்கிய மதங்கள், நம்பிக்கைகளின் வழியே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவற்றுக்காக உயிர்கொடுத்தும் இருக்கிறார்கள். மத நம்பிக்கையாளர்கள் இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள், இறைவசனங்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்று நம்புகிறார்கள். நாத்திகர்களோ, இவை மூட நம்பிக்கைகள் என்று கருதுகிறார்கள். டெம்போரல் லோப் வலிப்பு நோயே இதன் திறவுகோல். இந்த நோயே, செவந்த் டே அட்வண்டிஸ்ட் என்ற மதப்பிரிவின் தோற்றத்துக்கு காரணம் என்பது தெரிகிறது. இந்த மதத்தின் ஆவணங்களில், எல்லன் வொயிட் என்ற பெண்மணியின் வெளிப்படுத்தல்கள் மூலமாக இக்கிளை மதம் வளர்ந்தது. (இது தனிக் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.) 
பேராசிரியர் விலயனூர் ராமச்சந்திரன்  மாபெரும் மதத் தலைவர்களுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்திருக்கும் என்பது சாத்தியமான ஒன்று. இது அவர்களுக்கு பிரமைகள், காட்சிகள், விளக்கமுடியாத ஆன்மீக உணர்வு ஆகியவற்றுக்கு தயாராக அவர்களை மாற்றுகிறது.மேலும் ராமச்சந்திரன் பல மதஞானிகள், செயிண்ட் பவுல் உட்பட, அவர்கள் விவரிக்கும் அனுபவங்கள் இந்த நோயாளிகள் விவரிக்கும் அனுபங்களை ஒத்து இருக்கின்றன என்கிறார். மோஸசும், அதே போல இந்தியாவின் நிறைய ஞானிகளும் மூளையில் இப்படிப்பட்ட வலிப்புகளால் அப்படிப்பட்ட நம்பிக்கைகளும், அனுபவங்களும் ஏற்பட்டிருக்கும் என்பது சாத்தியமானதுதான். இந்த அனுபவங்கள் அவர்களது மன வாழ்க்கையை மிக அதிகமாக செழுமைப்படுத்தியிருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம். 
ராமச்சந்திரன் தாங்கள் நடத்திய ஆய்வு முறைகளைப் பற்றிக் கூறுகிறார்: வலிப்பு இல்லாத சாதாரண நபர்களை எடுத்துகொண்டோம். அவர்களது விரல் நுனிகளில் எலட்ரோடுகளை பொருத்தி அவர்களது தோல் மின்சார தடுப்பு அளவை அளந்தோம். இது அவர்கள் ஒரு சில வார்த்தைகளை பார்க்கும்போது எந்த அளவுக்கு வியர்க்கிறார்கள் என்பதை அளக்கிறது. ஒரு சாதாரண மனிதர், மேஜை என்ற வார்த்தையை காட்டினால், வியர்க்கமாட்டார். ஆனால், செக்ஸ் என்ற வார்த்தையை காட்டினால் வியர்க்க ஆரம்பிப்பார். அது பதிவாகிறது. இதன் பெயர் கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் அல்லது கால்வனிக் தோல் அளவீடு என்று சொல்லலாம். இப்போது கேள்வி என்னவென்றால், இதே பரிசோதனையை டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்களிடம் நடத்தினால் என்ன நடக்கும்
வலிப்பு உள்ள நோயாளிகளிடம் மூன்று வகையான வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. பாலுறவு ரீதியான வார்த்தைகள், சாதாரண வார்த்தைகள், மத ரீதியான வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள், எதிர்பார்த்தது போலவே ஒரு உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பாலுறவு மற்றும் மத ரீதியான வார்த்தைகளை காட்டும்போது கிடைத்த அளவீடுகளை பார்த்து அதிசயித்தார் பேராசிரியர் ராமச்சந்திரன். 
கடவுள்போன்ற மத ரீதியான வார்த்தைகளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு மிகப்பெரிய கால்வனிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் இருந்தது என்பதை பார்த்து அதிசயித்தோம். மாறாக, பாலுறவு ரீதியான வார்த்தைகளை காட்டும்போது, குறைவாகவே கால்வனிக் ரெஸ்பான்ஸ் இருந்தது. வேறொரு வகையில் சொல்ல வந்தால், கடவுள், மதம் ஆகிய வார்த்தைகளுக்கு அவர்களது ரெஸ்பான்ஸ் அதிகமாகவும், பாலுறவு வார்த்தைகளுக்கு குறைவாகவும் இருந்தது. சாதாரண மனிதர்களுக்கு இது தலைகீழாக இருக்கும். 
மத ரீதியான பிம்பங்களுக்கு மனித உடலின் பௌதீக வெளிப்பாடு, மூளையில் இருக்கும் டெம்போரல் லோபில் இருக்கும் செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்த முதல் ஆதாரம், தடயம் இதுவே.
ராமச்சந்திரன் டெம்போரல் லோபில் சில இணைப்புகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்து செயலாக்கினோம். அந்த இணைப்புகளின் செயற்பாடுகள் இந்த நோயாளிகளிடம் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. இந்தக் குறிப்பிட்ட நியூரான்களின் இணைப்புகள் மத நம்பிக்கைக்கும், ஆன்மீக நம்பிக்கைகளுக்கும் உகந்தவையாக இருக்கின்றன. இவை இவர்களை நம்பிக்கையாளர்களாக ஆக்குகின்றன.
இந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவர்களது மனதில் நடப்பது நம் எல்லோருடைய மனதில் நடக்கும் விஷயங்களே. ஆனால் உச்சகதியில் இவர்களிடம் நடக்கின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இப்போது, டெம்போரல் லோப்களே நமது மத, ஆன்மீக நம்பிக்கைகளின் அனுபவங்களின் திறவுகோல் என்று தெரிகிறது. மத நம்பிக்கை எவ்வாறு மூளையை பாதிக்கிறது என்பதை ஆராயும் இந்த அதிர்ச்சியான ஆய்வுகள் அறிவியலின் புத்தம் புதிய துறையை உருவாக்கியுள்ளன. அதன் பெயர் நியூரோதியாலஜி. வடக்கு கனடாவில் டாக்டர் மைக்கேல் பெர்ஷிங்கர் (Laurentian University) என்ற ஒரு விஞ்ஞானி இந்த நியூரோ தியாலஜி துறையை பரிசோதிக்க முனைகிறார். டெம்போரல் லோப்களை தூண்டுவதன் மூலம் செயற்கையாக ஆன்மீக உணர்வை எல்லா மனிதர்களுக்கும் அடைய வைக்க முடியும் என்று டாக்டர் மைக்கேல் பெர்ஷிங்கர் கூறுகிறார். டெம்போரல் லோப்களுக்கு நடுவே ஒரு மின்காந்த புலத்தை உருவாக்கும் ஒரு கருவியை டாக்டர் பெர்ஷிங்கர் ஹெல்மட் வடிவத்தில் வடிவமைத்தார். உண்மையான ஒரு மத வெளிப்பாடு அனுபவத்தை இந்த கருவி மூலம் உருவாக்க முடியும் என்று கூறுகிறார். 
டாக்டர் மைக்கல் பெர்ஷிங்கர் இந்த ஹெல்மெட் பலவீனமான காந்த புலத்தை, முக்கியமாக டெம்போரல் லோபில் உருவாக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்குள் இருக்கும் சோலனாய்ட்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு நேரத்தில் ஹெல்மட்டுக்குள் காந்த புலம் பாய்கிறது. அதே நேரத்தில் மூளைக்குள்ளும் பாய்கிறது. பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது.
டான் ஹில் என்ற நோயாளி, ’ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களைப் பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். அதிவேகத்தில் சக்தி மேலேயும் கீழேயும் என் முதுகுத்தண்டில் பாய்வதை உணர்ந்தேன். ஏப்பம் வந்தது. அது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. பொதுவாக நோய்வாய்ப்பட்ட உணர்வு இருந்தது’ என்று தன் அனுபவங்களைச் சொல்கிறார். டாக்டர் பெர்ஷிங்கர் காந்த புலத்தை மாற்ற மாற்ற, டானுக்கு வினோதமான உணர்வுகள் தோன்றின. தான் தனியாக இல்லை என்ற உணர்வு.
டான் ஹில், ’என் காதுகள் அளவுக்கு என்னுடைய தோள்கள் இறுக்கமடைந்தன. நான் இருக்கும் அறையில் யாரும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. அது ஒளிந்திருக்கிறது; என்னைக் கவனிக்கிறது; அதன் கவனிப்பில் நான் இருக்கிறேன் என்ற உணர்வு; என் பின்னால் வந்துகொண்டிருக்கிறது என்ற உணர்வு; அது அங்கே இருக்கிறது. அதுமாதிரி உணர்ந்தேன்’ என்றார். 
இந்த உணர்வை டாக்டர் பெர்ஷிங்கர் இருப்பறியும் உணர்வுஎன்று கூறுகிறார். அவர் மேலும், ‘இதில் இன்னொரு வியக்தி அல்லது எண்ணம் இருக்கிறது. உங்களை விட பெரியது, காலத்திலும் வெளியிலும் பெரிய வியக்தி இருக்கிறது என்ற உணர்வை வலது மூளையில் இருக்கும் டெம்போரல் லோபை தூண்டினால், மிக எளிதில் அடைந்துவிடலாம் என்று எங்களது பரிசோதனை முடிவுகள் சொல்லுகின்றன’ என்கிறார். 
இன்னொரு வியக்தியை உணர்வது இந்த காந்த புலத்தால் மட்டுமே வருகிறதா என்பதை அறிய, காந்தபுலத்தை உருவாக்கியும் உருவாக்காமலும் தன் சோதனைகளை நடத்தினார். முக்கியமாக, இந்த பரிசோதனையின் உண்மை நோக்கம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவில்லை. இது சும்மா மன ஓய்வுக்காக என்று மட்டுமே சொன்னார்கள். பரிசோதனைமுடிவுகள் வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஹெல் மட்டில் காந்தப்புலம் இருந்தபோது, 80 சதவீதத்தினர் அருகே யாரோ இருப்பதாக உணர்ந்தனர். டாக்டர் பெர்ஷிங்கர் இந்த ஆய்வை இன்னும் மேலே எடுத்துச் சென்றார். இயற்கையாகவே காணப்படும் காந்தப்புலமும் இதே போல உணர்வை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறார். கடவுளை பற்றிய உணர்வை மட்டுமல்ல, இன்னும் சில அமானுஷ்ய அனுபவங்களையும் விளக்கலாம் என்று கருதுகிறார்.. உதாரணமாக ஆவிகள் தொடர்பான அனுபவங்கள். டாக்டர் பெர்ஷிங்கர் சுமார் 1000க்கும் மேற்பட்ட மனிதர்கள் மீது பரிசோதனை நடத்தி, மற்ற எவரையும் விட, மனிதமூளையில் இருக்கும் டெம்போரல் லோப்களுக்கும் ஆன்மீக அனுபவத்துக்கும் இடையேயான துல்லியமான தொடர்பை உறுதிப்படுத்தியிருக்கிறார். நியூரோ தியாலஜியின் மிக முன்னேறிய ஆய்வுகளாக இவரது ஆராய்ச்சிகள் உள்ளன. 
மதத்தின் தோற்றம் நாம் நினைத்ததை விட மிகவும் சிக்கலானது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. மதத்தை வெறுமே மத்த் தலைவர்கள் உருவாக்கியது என்றோ, சமூக்க் கட்டுப்பாடு மூலம் உருவானது என்றோ கூறுவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம் என்பதையே நியூரோ தியாலஜி வெளிப்படுத்துகிறது. ஏதோ காரணங்களால், கடவுளை நம்பும் சில அமைப்புகள் நமது மூளையில் உருவாகியிருக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, நமது மூளைகள் உருவாகியுள்ள  விதத்தில், நாம் கடவுளை தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்போம். 

*

Monday, April 07, 2014

741. “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”





*
”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர்  “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்”  என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும்  அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.

அரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன்.  கோபாலனுக்கு மிக்க நன்றி.






*
1

R.கோபால்


 டெம்போரல் லோப் எபிலப்ஸி (Temporal lobe epilepsy) : ஆங்கிலத்தில் temple என்றும், தமிழில் ‘பொட்டு’ என்று நாமழைக்கும் பகுதியில் உள்ள மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. மூளையில் திடீரென்று நியூரான் செல்கள் ஒழுங்கற்று மற்ற மூளைப்பகுதிகளுக்கு தொடர்பில்லாமல் மின்சார சிக்னல்கள் பாய்வதால் வலிப்பு நோய் உருவாகிறது. வலிப்பு நடக்கும்போது, பிரமைகள், வன்மையான போக்கு, மனநிலையில் மாற்றம், நினைவில் பாதிப்பு ஆகியவை நடக்கலாம். சுய நினைவு இழப்பதோடு கூடவே, கை கால்களில் சில பகுதிகளில் ஒரே மாதிரி இழுத்துகொள்ளும் செய்கைகளுமோ, வாய் கோணிக்கொள்வதோ நடக்கலாம். அல்லது நகராமல் அப்படியே பார்த்துகொண்டிருப்பது, யாராவது கூப்பிட்டால் பதில் கூறாமல் இருத்தல் ஆகியவை நடக்கலாம்.
  டெம்போரல் லோப் வலிப்பு நோய் உள்ளவர்கள் தங்களது வலிப்பு அனுபவங்களுக்கு முன்னால், aura எனப்படும் ஒளிவெள்ளத்தை பற்றிக் கூறியுள்ளார்கள். இவை குத்து மதிப்பான எச்சரிக்கையிலிருந்து, மிகவும் ஆழமான அனுபவங்கள், விரிந்த மனநிலைகள் வரைக்கும் வித்தியாசனவை. இவை பாதிக்கப்படும் அந்த மனிதரின் உலகப்பார்வையையே மாற்றக்கூடியவை. ஒவ்வொரு நபருக்கும் இந்த வலிப்பு நோய் வருவதற்கு முன்னால் வரும் aura வித்தியாசனது என்றாலும், பெரும்பாலானவை கீழ்க்கண்டவற்றை கொண்டிருக்கின்றன(Taylor, 1987): -- hypergraphia (விடாது அதிகப்படியாக எழுதிகொண்டேயிருத்தல் அல்லது வரைதல், ), முன்னர் பார்த்தது போன்ற உணர்வு(deja/jamais vu ), புதியதாக நடப்பது ஏற்கெனவே நடந்தது போன்ற உணர்வு, ஏற்கெனவே நடந்தது முதன்முறையாக நடப்பது போன்ற உணர்வு, முன்னர் கேட்டது போன்ற உணர்வு (deja/jamais entendu ), முன்னர் கேட்டதை புத்தம் புதியதாய் கேட்பது போன்ற உணர்வு. பயம், அதி மகிழ்ச்சி, உச்சகட்ட உணர்ச்சிக்குவியல், கடவுளிடமிருந்து செய்தி வந்தது போன்ற உணர்வு.

 பெடோர் தாஸ்தாவஸ்கி உலகத்தின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இருந்ததாகவும், அதன் மீது ஏறத்தாழ இவர் காதலுடன் இருந்தார் என்பதும் ஆச்சரியமானது. நீண்ட நெடும் சிறைத் தண்டனைக்குப் பிறகு தன் வாழ்நாளில் மீதி நாட்கள் யாவையும் எழுதுவதிலேயே கழித்தார். இரவிலும் பகலிலும் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாளைக்கு இரண்டு தடவையிலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் அவருக்கு டெம்போரல் லோப் வலிப்பு வந்தது என்பதைக் குறித்திருக்கிறார். அவரது வலிப்புக்கு சற்றுமுன்னர், அவர் எப்போதுமே, ”ஓரிரு கணங்கள் தனது முழு இதயமும், மனமும், உடலும் உச்சகட்ட உணர்வுக்கும், ஒளிவெள்ளத்துக்கும் எழுச்சி அடைந்து நின்றதையும், எல்லையற்ற பேரானந்தத்தையும் நம்பிக்கையும் நிறைந்து நின்றதையும், அவரது கவலைகள் அனைத்தும் துப்புரவாக நீக்கப்பட்டதையும், உணர்ந்தார்”.

 ஓவியர் வின்சண்ட் வான்கோ, லூயிஸ் கரோல், எட்கர் ஆலன் போ, குஸ்டாவ் ஃப்ளாபெர்ட், பிலிப் கே டிக், ஸில்வியா பிளாத், டிவைன் காமெடி எழுதிய இத்தாலியின் மிகச்சிறந்த கவிஞர் டாண்டே, 18ஆம் நூற்றாண்டின் நாடகாசிரியர் மோலியெர், இவான்ஹோ , வேவர்லி ஆகிய படைப்புகளை எழுதிய சர் வால்டர் ஸ்காட், கலிவர் ட்ராவல்ஸ் எழுதிய18 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் ஜோனதன் ஸ்விஃப்ட், மாபெரும் ஆங்கிலக்கவிஞராக மதிக்கப்படும் அல்பிரட் லார்ட் டென்னிஸன், மாபெரும் கவிஞர் ஷெல்லி, சகலகலா வல்லவர் லியனர்டோ டா வின்ஸி – இவர்கள் அத்தனை பேரும் இந்த வலிப்பு நோய் வாய்ப்பட்டவர்களாக இருந்தார்கள்.

 பொதுவாக வலிப்பு வருபவர்களுக்கு பலவிதமான வேறுபட்ட குணநலன்கள் இருக்கும். மூளையின் ஒரு சிறுபகுதியில் நடக்கும் மூளை வலிப்பு (simple partial seizures ) இதனை aura அல்லது ஒளிவெள்ளம் என்று குறிக்கிறார்கள். இது முழு நினைவு இருக்கும்போதே நடக்கிறது. இந்த சிறு மூளைவலிப்பு அடைபவர்கள் நினைவு தவறிவிடுவதில்லை. ஏற்கெனவே இந்த உணர்வை அடைந்திருப்பது போன்ற உணர்வு (feelings of deja vu ), பழங்காலத்தில் நடந்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருதல், அல்லது நடந்ததை மறந்துவிடுதல் ஆகியவை பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் டெம்போரல் லோபில் இந்த வலிப்பு வருவதால், இல்லாத மணத்தை நுகர்வது, ருசி, எதுவும் யாருமே பேசாமலிருந்தாலும் எதையோ கேட்பது, இல்லாததை பார்ப்பது போன்ற பிரமைகளை நோயாளிகள் அடையலாம்.

டெம்போரல் லோபில் உருவாகும் மின்சார சிக்னல்கள்களால் வலிப்பு நோய் பெறுகிறவர்களுக்கு கடவுள் சந்திக்கிற உணர்வு, தேவதைகளை பார்ப்பது, மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு அடைவது என்பதை மருத்துவவியலாளர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கடவுளோடு ஐக்கியமான உணர்வு, சில சமயங்களில் உலகம், பிரபஞ்சம், ஒவ்வொரு துகளோடும் ஐக்கியமான உணர்வு பெறுகிறார்கள். இதற்கு ஹெர்ப்பஸ் என்னும் பால்வினை நோய் வைரஸ் human herpesvirus 6 காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் தலையில் அடிபடுவதோ, ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டதோ, முதுகுத்தண்டில் மெனிஞ்சிடிஸ் நோய் உருவாவதோ, மூளையில் கட்டிகள் உருவாவதோ காரணமாக அறியப்படுகிறது.

 விலயனூர். எஸ்.ராமச்சந்திரன் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை 1997-லும், டைம் பத்திரிக்கை 2011-லும் உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தன. மனித மூளை, அதன் இயக்கங்கள் குறித்த ஆய்வுகளின் மூலம் உலகம் அறிந்த விஞ்ஞானியாக இருக்கிறார்.

மனித மூளையின் விநோதங்களை ஆயும் இவர் Temporal lobe epilepsy பற்றிக் கூறும் சிலவற்றை இங்கு காணலாம். தன்னிடம் வந்த ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்: ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது ஜான் தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிருந்ததை உணர்ந்தார். வலிப்பு வந்த போது, ”நான் கடவுளாக உணர்ந்தேன். சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜான். இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார். ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்” என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதைக் கூறுகிறார். அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.

 அப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும், ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார். ”உண்மையில் ஒருவேளை கடவுள் இந்த நோயாளிகளை மனத்தில் சந்திக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அதனை ஒரு அறிவியலாளனாக என்னால் பரிசோதனை செய்து அறியமுடியாது. இன்னொரு விளக்கம், இந்த நியூரான்களின் வெடிப்புகள் அந்த உணர்வை இவர்களுக்கு அளிக்கின்றன என்று கூறலாம்.” என்கிறார் எஸ். ராமச்சந்திரன்.

”இந்த டெம்போரல் லோப் என்பது உலகத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை நாம் அறிய உதவும் பகுதி. நமக்கு முக்கியமானது, முக்கியம் குறைவானது என்பதைப் பற்றிய ஒரு வரைபடத்தை மனதிற்குள் வைத்து அதன் மூலம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இந்த டெம்போரல் லோப்பின் மிக அருகே அமைந்துள்ளது அமிக்டலா என்னும் பகுதி. இது உணர்ச்சிகளை நமக்கு உருவாக்கித்தரும் பகுதியோடு இந்த டெம்போரல் லோபை இணைக்கும் பகுதி. இந்த பகுதிகளுக்குள் இருக்கும் தொடர்பின் வலிமையே எந்த பொருள் நமக்கு முக்கியம், எது முக்கியமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது".

"டெம்போரல் லோபில் வலிப்பு நோய் உருவானார்களுக்கு என்ன ஆகும்? கன்னாபின்னாவென்று பாரபட்சம் இல்லாது ஏதேதோ இணைப்புகள் வலிமையாகும். மலை மேலிருந்து வழியும் தண்ணீர் ஒரு பாதையை உருவாக்க, தொடர்ந்து பாயும் தண்ணீர் அந்த பாதையை இன்னும் ஆழமாக இன்னும் அதிக வேகத்துடன் வருவதாக மாற்றுகிறது. இதனால் பல விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இவர்களுக்கு ஆகின்றன. இதனால் நமக்கு உணர்வு ரீதியில் முக்கியமாக இருப்பதை விட்டுவிட்டு, உலகத்தில் வேறு பொருட்களுமே மிகவும் உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக ஆகின்றன. ஒரு மணல் துகள், ஒதுங்கிக்கிடக்கும் ஒரு மரத்துண்டு, கடற்பாசி ஆகிய எல்லாமே மிகவும் ஆழமாக உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக, பெரும் பொருள் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. இப்படி உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மாபெரும் பொருள் கொண்டவையாக பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து அவற்றோடு பங்குபெற்ற உணர்வைத்தான் நாம் ஆன்மீக உணர்வு என்று அழைக்கிறோம்..” என்று எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார்.

 ஜான் தான் வலிப்பில் அடைந்த அனுபவத்தைக் கூறுகிறார்: “நான்  ஒரு புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வைப் பெறுகிறேன்”.

 ராமச்சந்திரன் தவறாக இணைக்கப்பட்ட நியூரான் வயர்களே இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்னால், பத்திரிக்கைகள் மூளையில் கடவுள் பகுதி இருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். டெம்போரல் லோபில் சில நியூரான்கள் ஆன்மீக உணர்வை உருவாக்குபவையாக இருக்கலாம். இந்த உணர்வை ஆன்மீக உணர்வு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டிருக்கலாம். உலக மனிதர்களிடம் இப்படிப்பட்ட மத உணர்வு எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத உணர்வுகள் ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதாலும் அவை பரிணாமக் கொள்கையின் படி நம்மிடம் இருக்கலாம் என்று கூறுகிறார்.




 *




Friday, April 04, 2014

740. இந்து மதம் எங்கே போகிறது? --- 9





*

நம் நாட்டுக்கு சுயராஜ்யம் கொடுக்கலாம் என்று யோசித்த போது தஞ்சாவூர் ஜில்லா ஆடுதுறைப்பக்கமுள்ள ஒரு சின்ன கிராமத்தில் ... ஒரு ரகஸ்ய கூட்டம். அதற்குத் தலைமை தாங்கியவர் மகாப் பெரியவர்.(335)

ஹிந்து தர்ம்த்தை, சனாதன தர்மத்தை, வர்ணாஸ்ரம மநு தர்மத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கூட்டம்.

பெண்களுக்கு 8 வயதிற்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லையென்றால் அவளுடைய ‘பஹிஷ்டையில்’ வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவெறுக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். (336) 

1929-ல் பிரிட்டிஷ்காரர்கள்  குழந்தைகளுக்கு கல்யாணம் கட்டி வைக்கக் கூடாது. அப்படி செய்து வைத்தால் தண்டனை தான். ஜெயில் தண்டனை தான்.

ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. அப்போது parliamentary delegation ஒன்று பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தது.

ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டாஇன்னும் என்னவெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல் அட்டாக் பண்ணப் போறாளோ. அதனால் இப்ப வந்திருக்கிற அந்த டெல்கேஷன் கிட்டே சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும். என்ன சொல்றேள்என மகாபெரியவர் கேட்க,
சிஷ்யாளோ, ‘ஸ்வாமி, இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவர் செய்த செய்யட்டும். சில விஷயங்களை மாத்தறது நல்லது தானேஎன்றனர்.

வெளியே உட்கார்ந்திருந்த என்னிடம் வந்த சங்கராச்சாரியார்தாத்தாச்சார் .. நீரும் நானும் தான் மிச்சம்என்றார்அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைத்தான் செலக்ட் பண்ணியிருக்கேன் என்றார். (338) அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் நூறு தந்திகளை தேசத்தின் பல இடங்களிலிருந்து கொடுக்க ஏற்பாடு செய்தோம்.(339)

பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாதுஎன்பது தான் தந்தி வாசகம்.
தந்தியடித்த பிறகு மகா பெரியவர், ‘நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தைப் பத்தி பிரஸ்தாபிக்க சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும். அதை நீர் தான் பண்ண்ணும்என்றார்.

டெலிகேஷன் சென்னை இந்து ஆபிசுக்கு வந்தது. நான் பார்க்க சென்றேன்.’இவர் மதாச்சாரியர்களின் பிரதிநிதிஎன்று அறிமுகப்படுத்தப்பட்டேன். டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதீயாரும் நானும் பரஸ்பர வணக்கத்தை பரிமாறிக் கொண்டோம். 100 தந்திகளை ஞாபகப்படுத்தினேன்அன்று இரவு சோரன்சன்னை சந்தித்தேன். (340)
Give me a memorandum and meet me in Delhi என்றார் சோரன்சன். மகாப்பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள், சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக் கொண்டு வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்என்று ஒரு மெமோரண்டம் தயாரித்தோம். டெலிகேஷன் அஸ்ஸாம் சென்றிருப்பதாக அறிந்து, மெமோரண்டத்தின் ஒரு காப்பியை அஸ்ஸாமிற்கு அனுப்பி வைத்தோம்.

பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீட்டில், காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனைச் சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின் டெலிகேஷனைச் சந்தித்தேன்.
‘வர்ணாஸ்ரம கதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தை  கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போனார்கள்.
இதன்பின் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet delegation  வந்தது. அவர்களோ, ‘உங்கள் அரசியல் சாதனத்தை உங்கள் தலைவர்கள் தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’ , என்று சொல்லி விட்டார்கள். 
தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். (341)

பட்டேல், ‘மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். வெளியுலகத்தில் மக்களோடு உறவே இல்லை. முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும் மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல்.
இதை மகா பெரியவரிடம் கூறினேன். இது முழுவதும் உண்மைதான் என்றார்.

அடுத்து பண்டிட் நேருஜியைப் பார்த்தேன். அதற்கு முன் பல ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி அவரைப் பார்க்க போனேன். (342)

மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்த்துமே கேட்டு விட்டு, உடனே நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து, ‘If you want to talk about religion you go outside from this nation. We don’t allow specialty to any religion. Here all are equal …. Don’t talk about religion … understand?’ என்றார் ரோஜாவின் ராஜாநான் அதிர்ந்து விட்டேன்.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத் தான் தனியுரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் என்று சொல்லி களத்தில் இறங்கினார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார். சங்கராச்சாரியாவிடம் அபார பக்தி கொண்ட  குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் முன் வந்தார். (343)

சைவ, வைணவ மடங்கள் பலவற்றை நாடு முழுவதும் போய் பார்த்தோம். யாரும் எங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் கூட்டத்திற்கு கராச்சி சிந்துநகர மடாதிபதியைத் தவிர. அம்மாநாட்டில் Freedom of relation and maintaining religious institutions … வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டோம். இதன் பிறகும் மடங்களுக்கான தனியுரிமை குறித்து, Parliament Bill  ஒன்று கொண்டு வர முயற்சித்தோம். அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்தியா பிளவு பட்டுப் பிரிந்தது.

நமது மதாச்சாரப்படி தர்மம் எல்லோருக்கும் ஒன்றுதான். அரசனும் தர்மத்துக்குக் கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம நெறிகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. இதனைத் தான் ‘தர்மவிதிக்கரமம்’ என்கிறோம். (346)

இதனை இரு பகவான் கதைகளைச் சொல்லி விளக்குகிறேன்.

முதல் கதை பாகவதத்தை பரிட்சித்து ராஜாவுக்காகச் சொல்லும் போது நடந்தது. கிருஷ்ணன் கோபியரோடு ஆடிக்கொண்டிருக்கிறான். அப்போது ஒரு கோபியை கிருஷ்ணன் தூக்கிக் கொண்டு போய் லீலை கொண்டாடுகிறான் என சுகப்பிரம்மன் சொல்கிறார்.  இதை கேட்ட பரிட்சித்து ’புருஷன் இருக்கும் போது ஒரு பத்தினியுடன் ஆடிப்பாடி அவனை கவர்ந்து கடத்திச் செல்வது .. அந்தப் புருஷனுக்கு பாவம் இழைப்பாகாதா? நியாயமா இது? என்று கேட்கிறார். (347)

இதற்கு சுகப்பிரம்மம் ‘பகவானாகிய கிருஷ்ணரே செய்தாலும் அது தப்பு தான். அவனுக்கு இதற்கான தண்டனை உண்டு’ என்கிறார்.

இன்னொரு புராணக் கதை:

பஞ்சாப் மாநிலத்தில் ஓரிடம். ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இருவருக்குள்ளும் கடவுளைப் பற்றிய விஷயத்தில் வித்தியாசம். பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தரோ சிவ பக்தன். நடுவில் நாரதர் விளையாடுகிறார்.
நாரதர் ஜலந்தரிடம், ‘உன் சிவ பக்தியால் நீ சிவனின் மனைவி பார்வதி தேவியையே அடையலாமே .. ஏன் இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்’ என்று கொளுத்திப் போடுகிறார். (349)

நாரதர் யோசனையும் கொடுக்கிறார். சிவனுக்கு சாம்வேதம் என்றால் உயிர். அதைக் கேட்டு சிவன் மயங்கி இருக்கும் வேளையில் கைலாயத்துக்குச் சென்று காரியத்தை முடித்து விடு’ என்கிறான்.  இந்த யோசனையின் படி ஜலந்தர் கைலாயம் சென்று பார்வதியைக் கட்டிப் பிடிக்கிறாம். ‘ஸ்வாமி...’ என்று கொந்தளித்து பார்வது கத்துகிறாள்.

ஆனால் இதே நேரத்தில் பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். நமது பக்தைக்கு நாம் ஏன் இன்பம் தரக்கூடாது என்று ஜலந்தர் உருவில் அவளிடம் செல்கிறார். பிருந்தாவும் தன் கணவன் என நினைத்து இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் தருணத்தில் இருவருக்கும் நடுவே ஒரு தலை ரத்தம் வடிய வந்து விழுந்தது.  அது ஜ்லந்தரின் தலை. (350)

சிவன் வெட்டியெறிந்த தலை அது. பிருந்தா தடுமாறுகிறாள். அப்போது விஷ்ணு தன் ரூபத்தைக் காண்பிக்கிறார். பொங்கியெழுகிறாள் பிருந்தா. ‘என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்து விட்டாய்; பகவானாக இருந்தாலும் தவறு தான். உனக்குச் சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ என சபிக்கிறாள். இந்த சாபத்தால் தான் பகவான் சாலக்ராமம் என்ற சிலையாகி விட்டார் என்கிறது புராணம்.

கடவுளே தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பது தான் இக்கதை சொல்லும் நீதி.
இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகம ரீதியாக இன்னும் அது உயிர் வாழ்ந்து வருகிறது. ப்ராமணியத்தின் படி பிராமணன் தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது. அதனால் All are equal  என்ற தர்மம் தான்  இப்போது நம் மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி.(351)

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய பின் சென்னை வந்த போது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மீக சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும்.
ஆன்மீகச் சிந்தனைகள் என்று நான் கூறியதுஉயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல. கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கு நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது.



..... முற்றும் 




Thursday, April 03, 2014

739. கிறித்துவர்களின் கண்களுக்கு .... 5






*


 ரொம்ப வருஷத்துக்கு முன்னால ...

நான் அப்போது தான் கிறித்துவத்தை விட்டு லேசாக விலக ஆரம்பித்திருந்தேன். அதுவரை கோயிலுக்குப் போறது .. அது இதுன்னு... ரொம்ப பக்தி. என்னிடம் பக்தி குறைஞ்சது எங்க அப்பாவுக்கு முதலில் தெரிஞ்சிது. ‘என்னடா?’ன்னார். ‘ஒண்ணும் இல்லையே’ன்னு சொன்னேன். ஒரு சாமியார் கிட்ட கொஞ்சம் மதங்கள் பற்றிக் கேள்வி கேட்டிருந்தேன். அவர் அப்பாவிடம் ‘ஓதி’ உட்டுட்டார் போல! ’இல்ல ... பாதர் கிட்ட ஏதேதோ கேட்டியாம்; சொன்னார்’ என்றார். ’அதெல்லாம் ஒண்ணுமில்லை’ன்னு ஓடிட்டேன். இருந்தாலும் முதல்ல அப்பாவுக்கு சந்தேகம் உள்ளேயே இருந்திருக்கு.

அந்த சமயத்தில் வீட்டில ஏதோ ஒரு விசேஷம். அப்பாவின் தங்கச்சிமார்கள் இரண்டு பேர் சிஸ்டரா போய்ட்டாங்க. எனக்கு அத்தைங்க. சின்ன வயதில் என்னை வளர்த்ததில் அவர்களுக்கெல்லாம் பங்குண்டு. எங்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க. நான் இல்லாதப்போ அப்பா அத்தைகளிடம் என்னமோ சொல்லியிருப்பார் போலும்.

நான் வந்ததும் அத்தைகள் ரெண்டு பேரும் என்னை நடுவில் உக்கார வச்சி மொதல்ல ஏதேதோ கதைகள் பேசினாங்க. அப்டியே மெல்ல சாமி விவகாரத்திற்கு வந்தாங்க. அதாவது சுத்தி நின்னு ‘மந்திரிச்சாங்க’ ... இதுல என்ன ப்யூட்டின்னா.... இந்த சிஸ்டரா போறவங்களுக்கு குருட்டு பக்தி இருக்கும். ரொம்ப ஸ்ட்ராங்கான விசுவாசத்தோடு இருப்பாங்க. ஆனால் பைபிளில் ஒரு கேள்வி கேட்டா ஒண்ணுமே தெரியாது. வாய் வழியா கேட்டு கேட்டு ஒரு நம்பிக்கையோடு வாழ்க்கையை ஓட்றவங்க. பொதுவாகவே கத்தோலிக்க கீனாக்கள் எல்லோருமே இப்படிப்பட்ட டைப்புகள் தான். பைபிள் வாசிச்சிருக்க மாட்டாங்க... ஆனா பக்தி மட்டும் பெருவெள்ளமா பாயும். பயங்கர விசுவாசிகள்!

 நம்ம அத்தைகளும் அது மாதிரி தான். ஏதேதோ ஒண்ணு ரெண்டு கேட்டேன். அவர்களிடம் அதுக்கெல்லாம் பதில் இருக்காதுன்னு தெரியும். அது மாதிரி தான் இருந்திச்சு. ’அதெல்லாம் உடு ... ஏசு நமக்காக எப்படியெல்லாம் பாடு பட்டார் ...’ அப்டின்னு  வழக்கமான இழுவையை இழுத்தாங்க. நானும் கொஞ்ச நேரம் எடக்கு மடக்கா ஏதேதோ கேட்டேன். இன்னொரு அத்தை; அத்தை வீட்டுக்கார மாமா ... இந்த ரெண்டு பேருமே பயங்கர பக்திமான்கள் தான். அவங்களும் இதில் சேர்ந்துக் கிட்டாங்க. நான்கு புறத் தாக்குதல்னு வச்சிக்கோங்களேன். மாமா மட்டும் கொஞ்சூண்டு பைபிளில் இருந்து ஏதாவது ஒண்ணு ரெண்டு பேசுவார்.

 ஏசு .. பாவம் .. அவர் தான் நான் இஸ்ரவேலர் சாதிகளுக்காக வந்தேன்னு சொல்லிக்கிட்டே இருக்காரேன்னு சொன்னேன் ... அவரே அப்படித்தான் தன்னைப் பத்தி சொல்லிக்கிறார். ஆனா நீங்களோ வேற ‘சாதிக்காரவிய..’ உங்களுக்கும் அவருக்கும் என்ன ஆச்சு .. இப்படியே கொஞ்ச நேரம் போச்சுது. நடுவில தங்க்ஸ் வந்து, ‘இப்பல்லாம் இதெல்லாம தேவையா?’ன்னு ஒரு ஸ்பீட் ப்ரேக் போட்டுப் பார்த்தாங்க. நம்ம அப்டில்லாம் உடனே உட்ருவோமா? இன்னும் கொஞ்சம் இழுத்தேன்.

மாமா ‘இவனை பிசாசு மோசமா பிடிச்சிருக்குன்னு ...’ சொல்லிட்டு எழுந்திருச்சி போய்ட்டார். எனக்கும் கொஞ்சம் போரடிச்சிது. அப்படியே எழுந்து மூணு அத்தைமார்களிடம், ‘இப்படியெல்லாம் இருந்திச்சி ... ஆனா .. என்னைக்கி நான் அந்த ‘ஒளி’யைப் பார்த்தேனோ ... அப்பவே எல்லாமே மாறிடிச்சி’ அப்டின்னு சீரியஸா மூஞ்சை வச்சி சொல்லிட்டு... வர்ரேன் அப்டின்னு சொல்லி என் ரூமுக்குப் போய்ட்டேன். சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் அந்த புருடா விட்டேன். சும்மா ஒரு leaving note மாதிரி.


கொஞ்ச நேரம் கழிச்சதும் அத்தை மூணு பேரு .. இன்னொரு சித்தி எல்லோரும் என்னைப் பார்க்க வந்துட்டாங்க. என்னடான்னு பார்த்தேன். அவங்க எல்லோரும் ரொம்ப சீரியஸா ‘என்னப்பா ... ஏதோ ஒரு ஒளி பார்த்தேன் சொன்னியே ... என்னய்யா அதுன்னு?’ ரொம்ப சீரியஸா கேட்டாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ஆனாலும் அதை அப்படியே டொம்முன்னு போட்டு உடைக்கவும் மனசில்ல. ’அதெல்லாம் விடுங்க ... ‘ அப்டின்னு சொல்லிப் பார்த்தேன். என்னை அப்படியே விட அவங்களுக்கு மனசில்லை.

எப்படியோ என்னத்தையோ டெம்போ விடாமால் ஏதேதோ சொல்லி விடுபட்டேன். அப்போ நான் ஏதாவது ஒரு ’கதை’ எடுத்து விட்டிருந்தாலும் அப்படியே நம்பிட்டு எனக்கும் ஒரு க்ளின் சர்டிபிகேட் கொடுத்துட்டு, என் தலையைச் சுத்தி ஒரு halo போட்டுட்டு போயிருப்பாங்க ...


நம்பிக்கையாளர்களை  நம்பிக்கைகளை வைத்தே ஏமாற்றுவது எவ்வளவு எளிது என்பது மட்டும் அன்று நன்கு புரிந்தது.





 *