*
இப்பதிவு முழுவதுமாக என் எண்ணங்கள் .. என் கணிப்பு .. என் ரசனை .. இதைப் பொதுவில் வைக்கக் கூடாதென்று பல்லைக் கடித்து என்னை நானே தடுத்துக் கொண்டேயிருந்தேன், முடியவில்லை. அதுவும் நம்ம சூப்பர் இஸ்டார் தொலைக்காட்சித் திரையில் தோன்றி ரத, கஜ, துரக, பதாதிகள் ... ..என்று சொல்லும் போது அவரது வசனம் அடிவயிற்றில் கத்தியைச் சொருகுவது போலிருந்தது. தாங்க முடியவில்லை.
சாம்ராட் அசோகன் நாடகம். சிவாஜி கணேசனின் உச்சரிப்பில் கலைஞரின் வசனம். அதில் சிம்மக்குரலில் வரும் ரத, கஜ, துரக, பதாதிகள் ... என்ற அழுத்தமான, அழகான வசனத்தை அந்தக் காலத்தில் அப்படி ரசித்திருக்கிறோம். இன்று அந்த அமிழ்தை தனது ‘நடிப்பின் தீரத்தினால்’ சூ.இ. கொச்சைப் படுத்துவது போல் படுகிறது.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. அது என்ன ... charisma என்றொரு சொல் உண்டே... அது மாதிரி சிலர் மீது மக்களுக்குக் கண்மூடித் தனமான அன்பு .. அது .. இதுன்னு நிறைய இருக்கு. அதுவும் நம் தமிழ்ப்பட உலகில் இதற்கென்றே தனியிடமே உண்டு. இது ஏனென்று புரிபடவேயில்லை. முதலில் புரட்சி நடிகர் (நடிக்கத் தெரியாமலே நடிகராக இருந்ததால் இந்தப் பெயரோ?) பிறகு சூப்பர் இஸ்டார் (காசு அள்ளிக் கட்டுவதால் இந்தப் பெயரோ?) அடுத்து நம்ம இளைய தளபதி - இந்த வரிசையில் இந்த charisma தொடர்ந்து வருகிறது.
இவர்கள் வந்தால் வரட்டும் என்றும் இருக்க முடியவில்லை. நல்ல படங்கள் வருவதை இந்தப் பிரம்மாக்கள் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். ஒரே பார்முலா ... அதே கெக்கே பிக்கே நடிப்பு ... வேறு நல்ல படங்கள் வந்தாலும் இவர்களது பெரும் படங்களுக்கு முன்னால் நிச்சயம் தோல்வி தான். தமிழ்ப்பட உலகம் இவர்களால் பல மைல் தொலைவு பின் தங்கி விட்டது என்பது என் எண்ணம். இந்த மூன்று நடிகர்களின் படங்கள் போல் மற்றவர்கள் நடித்திருந்தால் அவைகளெல்லாம் நிச்ச்யமாக ஓரிரு நாளில் மண் கவ்வும். ஆனால் இந்த charismatic actors நடித்தால் கூரையைப் பொத்துக்கிட்டு கூட்டம் வரும்.
இந்த மூன்று பேரில் முதல் ஆள் .. முடிந்து போன விவகாரம். மூன்றாவது ஆளின் படங்கள் இரண்டாவது ஆளின் படங்கள் போல் அத்தனை மோசமில்லை. இரண்டாவது ஆள் இருக்காரே ... அவர் ஒரு நல்ல நடிகர்; ஆனால் விசிறிகளால் இப்படி நடிக்கிறார் என்றெல்லாம் ஒரு கதை சொல்வதுண்டு. (என்னைப் பொருத்தவரை முதல் ஆளுக்கு - பெற்றால் தான் பிள்ளையா; அடுத்த ஆளுக்கு - புவனா ஒரு கேள்விக்குறி; மூன்றாவது ஆளுக்கு - துள்ளாத மனமும் துள்ளும்) ஆனால் அந்த வசனங்களை நான் ஒத்துக் கொள்வதில்லை; ஒரு வேளை வில்லன் நடிகராக மட்டும் இருந்திருந்தால் கொஞ்சமாவது பரவாயில்லாமல் இருந்திருக்கும். அவரது கால கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு நடந்த நஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.
சிவாஜின்னு ஒரு படம். வேண்டுமென்றே ‘சிவாஜி’யின் பெயரைக் கெடுக்கவே அப்பெயர் வைத்தார்கள் என்று அந்த சமயத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தார். கூகுள் ஆண்டவரிடம் சிவாஜின்னு போட்டா இந்த சிவாஜி பெயர் வர வைப்பதற்காக என்றும் எழுதியிருந்தார்; உண்மையாக இருக்கலாம். அந்தப் படத்துக் க்தையை வேறு எந்த நடிகரை வைத்து எடுத்திருந்தாலும் நாலே நாள் டப்பாவுக்குள் போயிருக்கும். இந்த ஆளுடைய charisma படத்தை ஓட வைத்தது. ஆனால் அமெரிக்காவிற்குப் பொழைக்கப்போன ஆளு இப்படி கோடி கோடியா டாலர் சம்பாதிச்சிட்டு ’கல்யாண வயசிலேயே’ இங்கே வந்து என்னென்னமோ பண்றாராம். அட போங்கப்பா ...
அதே மாதிரி பொண்ணுகளை டேமேஜ் பண்றதுக்கும் குறைச்சலில்லை; ஒரு படம். இவர் சாதாரண் வேலைக்காரர். அவரது முதலாளி விஜய சாந்தி. இந்தியாவிலேயே டாப் பிஸினஸ் உமன். ஆனால் கடைசிக் காட்சியில் தலைவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டு அவங்க வீட்ல இருப்பாங்க; தலைவர் இன்னும் அதே மாதிரி வேலைக்காரனாக வேலைக்குப் போவார். இப்படி பல கழிசடைக் கதைகள். ஆனாலும் படம் ஓடும். கேட்டால் charisma என்பீர்கள். எங்கிருந்து தான் இதெல்லாம் வருமோ!
எஜமான் அப்டின்னு ஒரு படம். இதுவும் இந்த மூஞ்சி இல்லைன்னா ... வேற எந்த நடிகரை வைத்தாலும் இந்தக் கதையை எடுத்திருக்க மாட்டாங்க. என்னன்னா... இவரு மனைவி புள்ளைத்தாச்சியாக ஆயிருச்சாம். நாளை நாளைக் கழித்து பிரசவம் ஆகணுமாம். ஆனால் உண்மையில் அது கருத்தரிக்கக் கூட இல்லையாம். அதாவது பொண்டாட்டி பத்து மாசமாக வயித்தைத் தள்ளிக்கிட்டு இருக்குதாம். ஆனால் அத்தனையும் நடிப்பாம், இவருக்கும் தெரியாதாம்.
வடிவேலு பாவம் .. இதுவரை சந்திரமுகி போன்ற மொக்கை படம் அவருக்கு வாய்க்கவில்லை. சூ.இ. இந்தப் படத்தில் அடித்த ஜோக்குகளும் மூன்றாம் தரம். சில நல்ல படங்கள் என்று விசிறிகள் சில படங்களைச் சொல்லலாம். நூறு படம் நடிச்சா நான் கூட நாலஞ்சு படம் நல்லா பண்ணிடுவேன்!
இந்த மூவரில் சூ.இ. படங்களில் தான் லாஜிக் எல்லாம் தூர எறியப்படும். அட ... ஒரு கூட்டமே அடிக்க வந்து நிற்கும். தலைவர் தன் வேல் கம்பை எடுத்து முன்னால் நடுவார். அந்தக் குச்சி அப்படியே எல்லாத்தையும் ஒரு சுத்து வந்து திரும்பி தலைவர் முன்னால் வந்து நிற்கும். இது கவுண்ட மணி, வடிவேலு செய்தால் நல்ல காமெடியாக இருக்கும், ஆனால் கதாநாயகனுக்கே இப்படி,. இப்படி ஒரு அர்த்தம் கெட்ட சீனை டைரடக்கர் வைப்பார்; நம்ம ஆளுகளும் நல்லா விசிலடிப்பாங்க. படமும் வெற்றிப் படமாகும். கெட்ட காலம். என்னமோ சீறி வரும் துப்பாக்கிக் குண்டை பல்லால் கடித்து நிற்க வைப்பார் என்று எதிர்பார்த்தோம்; அது மட்டும் இன்னும் நடக்கவில்லை.
மூஞ்சு கொஞ்சம் பார்க்கிறது மாதிரி இருக்கணும். அதுவும் இல்லை.
அல்லது பார்க்க முன்ன பின்ன இருந்தாலும் மருமகன் தனுஷ் மாதிரி நல்லா நடிக்கணும். அதுவும் இல்லை.
என்னமோ இஸ்டைல் பண்றார் அப்டிம்பாங்க; கடவுளேன்னு தலையில் அடிச்சிக்கணும் - அவரு சிவாஜி படத்தில மொட்டைத் தலையில அடிச்சிக்கிறது மாதிரி. சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அப்படியே வாயில பிடிச்சிருவாராம். இதைத்தான் மக்கள் பெரிய இஸ்டைல்னு சொன்னாங்க. எனக்கு நாயிடம் பந்தைத் தூக்கிப் போட்டா பிடிக்குமே அதே மாதிரிதான் இதுவும் தோன்றியது. அங்க நாய்; இங்க இவர்! கை தட்டுங்கப்பா...
இல்ல ... அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்துக் களைத்தவர் என்பார்கள். உண்மையோ பொய்யோ...? ஆனால் இவர் அப்படி சமூகத்திற்கு ஏதேனும் பண்ணிட்டாரா என்றால் அப்படி ஏதும் இல்லை. (மனோரமா பேசிய பேச்சுக்கு மறைந்தவர் என்றால் போட்டுப் பார்த்திருப்பார். இவர் அணைத்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம். பாபா படத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகச் சொல்வார்கள். .. இப்படி அங்கென்றும் .. இங்கொன்றும் ...)
அட .. இவ்வளவு எதுக்கு? மக கல்யாணத்திற்கு விசிறிகளுக்கு பிரியாணி போடுறேன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டாருல்லா ...
அரசியலுக்கு வந்திருவேன் என்று ரொம்ப நாள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்; நல்ல வேளை .. அது நடக்கவேயில்லை.
ஏன் இப்படி இரண்டாந்தர ஆட்களை மக்கள் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்போதெல்லாம் தமிழ் சினிமா ... நடிப்பு .. என்றெல்லாம் வரும்போது யாரும் எம்.ஜி.ஆரை quote செய்வதில்லை. கால வெள்ளத்தில் மறக்கடிக்கப் பட்டு, காணாமல் போய் விடுகிறார்கள் போலும்.
இருந்தாலும் பாவம் தான் அந்த முதல் தர மக்கள்!
*
*

அட .. இவ்வளவு எதுக்கு? மக கல்யாணத்திற்கு விசிறிகளுக்கு பிரியாணி போடுறேன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டாருல்லா ...
அரசியலுக்கு வந்திருவேன் என்று ரொம்ப நாள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்; நல்ல வேளை .. அது நடக்கவேயில்லை.
ஏன் இப்படி இரண்டாந்தர ஆட்களை மக்கள் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்போதெல்லாம் தமிழ் சினிமா ... நடிப்பு .. என்றெல்லாம் வரும்போது யாரும் எம்.ஜி.ஆரை quote செய்வதில்லை. கால வெள்ளத்தில் மறக்கடிக்கப் பட்டு, காணாமல் போய் விடுகிறார்கள் போலும்.
இருந்தாலும் பாவம் தான் அந்த முதல் தர மக்கள்!
*
*



