Thursday, July 07, 2005

25. 'இவர்களும்'...'அவர்களும்'

எனது சில அனுமானங்களுடன் (premises) இதை எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகள் இருப்பின் தட்டிக்கேட்க முதுகைத் தயாராக வைத்துள்ளேன்.


அனுமானம் 1: தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை; அவ்வாறு எழுதுபவர்களில் பலர் தலித்துகளின் வாழ்க்கை நிலையினைப்பார்த்து அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங்களுக்காக, ஏற்படவேண்டிய சமூகமாற்றங்களுக்காகத் தன்னளவில் முயற்சிப்பவர்கள். ஆதிக்கசாதியாக இருந்து வந்த, இன்னும் இருந்துவந்து கொண்டிருக்கும் பிராமண ஜாதியின் மீது இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்வுகள், துவேஷம் இன்னும் இருப்பதால் தலித்துகளைத் தன்னிலைப்படுத்தி எழுதுகிறார்கள். எனது இந்த கட்டுரையில் அடிக்கடிப் பயன்படப்போகும் - தலித்துகள் & தலித்துகளின் சப்போர்ட்டர்கள் என்பவர்களை 'இவர்கள்' என்ற சொல்லால் குறிப்பிடப்போகிறேன்.


அனுமானம் 2: தலித்துகளுக்காக மற்றவர்களும் வருவதுபோலன்றி, பிராமணர்களுக்கு வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. இந்த பிரிவினரை 'அவர்கள்' என்று சுட்டப்போகிறேன்.


விஷயத்துக்கு வருவோம்...


நான் வலைப்பதிவனாக வந்து வெகு நாட்கள் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஒரு விஷயம் சுருக்கென்று தைக்கிறது. அது நான் வெளி உலகத்தில் சந்திக்காத, அல்லது ஒருவேளை நான் மேம்போக்காக காணாமல் விட்டுவிட்ட ஒரு காரியம். 'இவர்களு'க்கும், 'அவர்களு'க்கும் இங்கு இந்த எலக்ட்ரானிக் உலகத்துக்குள் இருக்கும் இந்த அடிபிடி சண்டை. வெளியில் எங்கும் 'இவர்களு'க்கும், 'அவர்களு'க்கும் நேரடியாக எந்தப் போராட்டமும் இல்லை. பின் ஏன் இங்கு இந்த சண்டை?


வெளியில் 'இவர்களுக்கு' தென்தமிழகத்தில் தேவர்களுடனும், வடக்கே வன்னியர்களுடன் போராட்டம்; இதற்குக் காரணம் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமில்லை. எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல், 'ஆளுமை' சார்ந்த விஷயமாக இது இருப்பதற்கு ஆண்டாண்டு காலமாய் இருந்துவந்துகொண்டிருக்கும் நமது சாதி அமைப்புகளே காரணம். சாதிகள் அழிவதற்கோ, சாதிகளின் ஆளுமைகள் குறைவதற்கோகூட எந்த அறிகுறிகளும் இல்லாத இந்த சூழலில் இந்த பகைமைகள், போராட்டங்கள் 'இவர்களின்' முன்னேற்றத்திற்கு முன் நிற்கும் பெருந்தடைகளே. ஆனாலும் தாண்டியேயாக வேண்டும். தாண்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.


மேல்சாதியாக இருந்துவருபவர்களைக் கண்டு மற்ற எல்லோருக்குமே ஒரு துவேஷம் உண்டாவது இயற்கையே. ஏனெனில், சிறுபான்மையராக இருந்தும் பார்க்குமிடமெல்லம் - அரசாங்க உயர் பதவிகள், நீதித்துறை, அரசியல், மீடியா (இதைப்பற்றியே தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்; ஹார்லிக்ஸிலிருந்து ஹார்ப்பிக் வரை, காம்பிளானிலிருந்து குங்குமம் வரை எதிலும் வரும் மாடல்கள், அறிவிப்பாளர்கள், என்று எங்கெங்கு நோக்கினும் 'அவர்களே')எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருப்பதைப் பார்க்கும்போது எரிச்சல்தான். ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உயர்வுக்குச் சொல்லப்பட்ட காரணம்: "brahminic supremacy". பிறந்த சாதியே இதற்கெல்லாம் காரணம் என்று 'அவர்கள்' சொல்லிக்கொண்டிருந்தது சமூகத்தில் விற்பனையானது. ஆனால், அந்த "myth" உடைக்கப்பட்டது; உடைந்தது. எந்தவிதத்திலும் அவர்களுக்கு மற்ற எல்லோருமே சளைத்தவர்கள் இல்லை என்பதை நிறுவியாகிவிட்டது. இன்று வலைப்பதிவாளர்களின் எண்ணிக்கையிலிருந்தே இது தெரியவரும். இந்த உண்மையை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனாலும் 'அவர்களில்' எல்லோருமே இதை முழுமனதோடு ஒப்புக்கொள்வார்களா மாட்டார்களா என்பதோ, ஒப்புக்கொள்பவர்கள் அதை சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதோ முக்கியமில்லை. நிதர்சனங்களே நமக்கு முக்கியம். அவர்களின் ஒப்புதல் தேவையுமில்லை. சொல்லப்போனால், 'இவர்கள்' பல துறைகளில், முக்கியமாக கலைத்துறைகளில் - எழுத்து,கவிதை,இசை,கலை,...என்று பலவற்றில் - 'அவர்களைத்' தாண்டியாகிவிட்டது. ஆடுவது 'அவர்கள்'; ஆட்டுவிப்பது 'இவர்கள்' என்பதுதான் நிலை. அவர்களது மன மாச்சரியங்களைப் பற்றி யாருக்குக் கவலை. மனத்துக்குள் வைத்து அவர்களில் சிலரோ பலரோ மருவிக்கொண்டிருக்கட்டுமே, நமக்கு என்ன? உள்ளே வந்து விழுந்து தொல்லைகொடுக்காமல் இருந்தால் சரி. அப்படியே தொல்லை தர வந்தாலும் அதைப் புறத்தே தள்ளி "போங்கடா ஜாட்டான்களா" ( ஒரு பதிவில் இதை வாசித்ததால் இங்கு அதைப் பயன்படுத்துகிறேன்) என்று முன்னேறவேண்டும்.'இவர்கள்' முன்னே இருக்கும்
சவால்கள் -

உயர வேண்டும் என்ற வெறி;
உயர்த்த வேண்டும் என்ற வேள்வி.

7 comments:

Sri Rangan said...

உளசுத்தியோடு அணுகிய பார்வை.எனினும் அரசியலில் பற்பல காரணிகள் சாதியத்தையும்,மதவாதத்தையும் தூக்கி நிறுத்துகிறது.அத்தகைய நிலையில் மனமாற்றமென்பது சாதிகளை அழித்து சமூக நீதியை நிலை நாட்டுவதில்லை.மாறாக அரசியல்-பொருளியல்,பண்பாட்டுமாற்றங்களே இவற்றைத் தீர்வுக்குக் கொண்டுவரும்.அதற்கான முன்னெடுப்புக்கு மனமாற்றமும் தூண்டுதலாகவிருக்கும்.இந்த அர்த்தத்தில் தங்கள் பார்வையும் நிராகரிக்க முடியாது.
ஸ்ரீரங்கன்

SHIVAS said...

'மீண்டு'ம் வந்துட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி.
http://kanchifilms.blogspot.com/2005/07/blog-post.html

Chandravathanaa said...

நல்ல பார்வை.

தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை
சரியான கருத்து.

தருமி said...

திரு sri rangan "அரசியல்-பொருளியல்,பண்பாட்டுமாற்றங்களே இவற்றைத் தீர்வுக்குக் கொண்டுவரும்." - உங்கள் கூற்றில் உள்ள 3 காரியங்களில் பொருளியல் மட்டுமே தீர்வைத்தர முடியும்; மற்ற இரண்டும் நடக்கக்கூடுமென்று உங்களுக்கு நம்பிக்கை உண்டா? மன்னிக்கவும், எனக்கு இல்லை. sorry for being such a pessimist

Ms சந்திரவதனா - நன்றி

திரு மூர்த்தி - இதுதானே வேண்டாம் என்கிறது. இது என்ன இப்படி; எல்லோரும் கோபித்துக்கொண்டால் எப்படி? திருந்துவோம், அதன் மூலம் திருத்துவோம். அதைவிட்டுவிட்டு...

காஞ்சி பிலிம்ஸ் - வந்ததற்கு மி...க, மி...க நன்றி; அதைவிட மிக்க சந்தோஷம்.
அது சரி, 'மீண்டு' வந்தீர்களா, 'மீண்டும்' வந்தீர்களா...! எதுவாயினும் உங்கள் photoshop அசத்தல்களுக்காகக் காத்திருக்கிறேன். (photoshop தானே?)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

என்ன ஒன்று! நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம். இந்த 'இவர்கள்' இதைப்புரிந்துகொள்ள வைத்தால் போதும்.

-மதி

தருமி said...

நன்றி மதி.

"நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம்"

உயரங்கள் ஏறுவது எளிதா என்ன?

தருமி said...

TheKa Says:
September 1st, 2006 at 9:54 pm e
இருக்கும் சூழலை வைத்துப் பார்த்தால் தருமி, சில சமயங்களில் எனக்கு இந்த ‘உலகமயமாக்கல்’ இதற்கு ஒரு நிறந்தர தீர்வை வழங்க முடியும் என எனக்குப் படுகிறது (இருப்பினும் எனக்கு அந்த ‘உலகமய’திட்டம் பிடிக்காமல் போனாலும்). அதிலும் குறிப்பாக பொருளதார முன்னேற்றம், பணப் புழக்கம் எல்லோரிடத்தும் தங்கு தடையற்று… விரும்பியவர்கள் எதனையும் பெறமுடியும் என்ற சூழல் நிலவும் பொழுது இது போன்ற தடைகள் உடைக்கப்பெறலாம்.

இருப்பினும் நீங்கள் கூறிய அந்த மீடியாக்களின் அதீத கவனம். அந்த சிகப்பாக்கும் க்ரீம் வாங்கி நானும் வெள்ளையாக வேண்டுமென்ற அசட்டுத்தனமான நம்பிக்கைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு, இருப்பதை ஒரு பரிசாக ஏற்று உள்ளூர் மாடல்களே விளம்பாரத்திற்கு பயன்படுத்துவதை காண நேரிடின், நம்பாலம் சூழல் அரோக்கியமான முறையில் சென்று கொண்டிருக்கிறது என்பதனை.

//அனுமானம் 1: தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை; அவ்வாறு எழுதுபவர்களில் பலர் தலித்துகளின் வாழ்க்கை நிலையினைப்பார்த்து அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங்களுக்காக, ஏற்படவேண்டிய சமூகமாற்றங்களுக்காகத் தன்னளவில் முயற்சிப்பவர்கள். //

நல்லா அலசியிருக்கீங்க

Post a Comment