Saturday, July 16, 2005

31. முகத்திரை களைகிறேன்..

எனக்காக என் அப்பா செய்தவைகளில் பிடித்த ஒன்று எனக்கு அவர் வைத்த பெயர். ஆனால், அதனால் இன்று வரை சில பிரச்சனைகள்தான். இதுவரை என் சரியான பெயருக்கு குடும்ப அட்டையோ, தேர்தல் அட்டையோ வந்ததில்லை. உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால், இந்த நிமிடம் வரை எனக்கு மேற்கூறிய இரண்டுமே இல்லை. மூன்றாவது முறையாக குடும்ப அட்டையில் பெயர் சரி செய்யக் கொடுத்துள்ளேன். இந்த முறை பொறுமை போயே போய் விட்டது. அவர்கள் தப்பும் தவறுமாக பெயரை எழுதிவிடுவார்களாம்; நான் அதற்குப் பிறகு V.A.O.-க்குக் காசு கொடுத்து நான் நானேதான் என்று ஒரு சான்றிதழ் வாங்கவேண்டுமாம். அட போங்கப்பா என்று வந்து விட்டேன். இது இப்பொழுது நடந்தது. என் பெயரை வைத்து வந்த சிக்கல்களில் இது கடைசி.

என் பெயரை வைத்து முதன் முதல் வந்த சிக்கலும், எனக்குக் கிடைத்த தண்டனையும் இன்னும் நன்கு ஞாபகம் இருக்கிறது. அந்த சிக்கலில் இருந்து இன்னும் விடுபடவில்லை; அது ஒரு முக்கியமான காரணம் நான் தருமி என்று ஒரு புனைப்பெயரில் வலைப்பூ ஆரம்பித்ததற்கு. அந்த முதல் சிக்கலைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் என் பெயரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே. சின்னவயதில் வீட்டில் ஜார்ஜ் என்று கூப்பிடுவார்கள். பிரச்சனை ஒன்றும் பெரிதாக இல்லை. மிஞ்சிபோனால், என் வயசுப் பசங்க ஜார்ஜ்...கோர்ஜ் என்று கூப்பிடுவார்கள். கொஞ்சம் விரட்டிட்டு போய் கொஞ்சமாய் சண்டை போட்டிருப்பேன். அவ்வளவே.

ஐந்தாம் வகுப்புக்கு வந்த பிறகுதான் பிரச்சனை. நானெல்லாம் தமிழ் மீடியத்தில் படித்த கேசு.
ஐந்தாம் வகுப்பின் கடைசி term-ல் தான் எங்களுக்கு ஆங்கில வாடையே கிடைக்கும்; அதுவும் நான் V std. 'A' section என்பதால்தான் அதுவும். மற்ற section-காரங்களுக்கு 6-ம் வகுப்பிலிருந்துதான். V A -அப்டின்னா, நம்மள மாதிரி, students எல்லாரும் பயங்கரமான 'இது'ன்னு அர்த்தம். அதிலும் V A-க்கு இருந்த எங்க லூக்காஸ் சாருக்கு ஸ்கூல்லியே ரொம்ப நல்ல பேரு. அவருக்கு நான் ரொம்ப pet-ன்னா பாத்துக்கங்களேன். விஷயத்துக்கு வருவோம்; எங்களுக்கு ஆங்கில போதனை ஆரம்பிச்சது. What is your name? What is your father? -இதுதான் எங்களுக்கு முதலில் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஆங்கிலம். நாங்க இதை அடுத்த section பசங்ககிட்ட கேட்டு, அவங்க முழிக்கிறதைப்பார்த்து..அட, போங்க அது எல்லாம் அனுபவிச்சிருக்கணும்.

அது என்னமோ தெரியலை; என்ன மாயமோ புரியலை. சரியாக இந்த சமயத்தில் வீட்டுக்கு வருபவர்களும் இதே கேள்வியை சொல்லிவைத்தது மாதிரி கேட்பார்கள். அப்படி ஒருவர் வந்து கேட்டதும் பயங்கர 'பந்தாவாக' (அப்போவெல்லாம் 'பந்தா' என்ற சொல்லே அகராதியில் இருந்திருக்காது!) மை நேம் இஸ் ஜி. சாம் ஜார்ஜ் என்று சொன்னது என் அப்பாவின் காதில் கர்ண கடூரமாக விழுந்திருக்க வேண்டும். வந்தவர் போன உடனே அப்படி சொல்லக்கூடாது; மை நேம் இஸ் Sam ஜார்ஜ் அல்லது மை நேம் இஸ் Sam என்று சொல் என்று சொல்லிக்கொடுத்தார்கள். எதற்கும் நீங்களும் தமிழில் 'சாம்' என்பதையும், ஆங்கிலத்தில் 'Sam' என்பதையும் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் என் பிரச்சனை என்ன என்பது அதன் முழுப் பரிமாணத்துடன் உங்களுக்குப் புரியும்.

அடுத்த நாள். நமது காட்சி இப்போது V Std. A-ல் ஆரம்பிக்கிறது. இன்று லூக்காஸ் சார் தமிழ் டிக்டேஷன் கொடுக்கிறார். அப்போ எல்லாமே ஸ்லேட்-குச்சி தானே. ஸ்லேட்டில் ஒன்றரைப் பக்கம் வரும் அளவிற்கு டிக்டேஷன் கொடுக்கிறார். எப்போதுமே அய்யா தமிழ் டிக்டேஷனில் ரொம்ப தப்பு போடுவதில்லை. இந்த பதிவிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே; அதிகமானோர் 'ன'வுக்கும், 'ண'வுக்கும் தகராறு பண்ணிக்கொள்கிறார்களே அது போலவோ; வல்லின 'ற'கர மெய்யெழுத்துக்கு அடுத்தாற்போல இன்னொரு மெய்யெழுத்து போடுவார்களே (அடுத்தாற்ப்போல-என்பது போல) அது மாதிரி நான் தப்பு பண்றேனா? இல்லையே! சும்மா சொல்லக்கூடாது; லூக்காஸ் சார் போட்ட அடித்தளத்தில் V & VI Form-ல் (அது என்ன Form என்கிறீர்களா? அந்தக்காலத்தில் முதல் 5 வருடம் = சின்னப்பள்ளிக்கூடம் -Elementary School. அதற்குப் பிறகு 6 வருடம் - பெரிய பள்ளிக்கூடம்; அதாவது High School. அந்த 6 வருடம் என்பது I Form to VI Form; VI Form = S.S.L.C. அதாவது பள்ளி இறுதித் தேர்வு; பிறகு கல்லூரி - Pre-university Class - 3 year degree) மறுபடியும் சொல்கிறேன்: லூக்காஸ் சார் போட்ட அடித்தளத்தில், V & VI Form-ல் எங்கள் தமிழாசிரியர் கந்தசாமிப் புலவர் மாளிகையே கட்டினார்; அவர் சொல்லித்தரும் அழகே தனி; அதுவும் செய்யுட்பகுதி எடுத்தால்... அதனால் தமிழ் மீது காதலே வந்தது. ரொம்பவே digression, இல்ல? விட்ட இடத்துக்கு வருவோம். தமிழ் டிக்டேஷன். அன்றும் (!) வழக்கம்போல் அய்யா தவறின்றி எழுதியிருந்தேன் (நிஜமா, நம்புங்க!) லூக்காஸ் சார் பழக்கம் என்னென்னா, 3 தப்புவரை மன்னிப்பு உண்டு; மற்றவர்களுக்குத் தவறுக்குத் தகுந்தாற்போல் தண்டனை. வழக்கமாக வகுப்பின் ஓரத்தில் இருக்கும் பிரம்பை எடுத்துவருவதும் பெருமைக்குரிய பணி எனக்குத்தான் கொடுக்கப்படும். ஆனால் அன்று சார் வேறு ஒரு பையனைவிட்டுப் பிரம்பை எடுக்கச் சொன்னார். அப்பவே எனக்கு என்ன இது என்று தோன்றியது. பிரம்படி பூசை முடிந்தது. கடைசியில் சார் என்னைக் கூப்பிட்டார். அடி பயம் ஏதுமின்றி சார் முன்னால் போய் நின்றேன். அதிகமாகத் தப்பாக எழுதிய மாணவனுக்குக் கொடுத்த தண்டனையை எனக்கு ஒன்றும் சொல்லாமலே கொடுத்தார். கொடுத்து முடிந்தபின், தப்பு இல்லாமல் டிக்டேஷனை எழுதியவன் தன் பெயரையே தப்பாக எழுதியுள்ளான்; ஆகவேதான் இந்த தண்டனை என்றார்.


விஷயம் உங்களுக்குப் புரிகிறதா? எல்லாம் தமிழ் சாமுக்கும், ஆங்கில Sam-க்கும் வந்த தகராறுதான். அப்பா, சாம் என்று சொல்லவேண்டாம்; Sam என்று சொல் என்றார்களா; தமிழில் Sam எப்படி எழுதுவது என்று தலையைப்போட்டு பிச்சுக்கிட்டு ஒரு வழியாக 'சம் ஜார்ஜ்' என்று முடிவு செய்து எழுதினேன். அது என்ன ஆச்சுன்னு பார்த்தீங்களா?

அதுவும் என் பெயருடன் வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்களேன்:

குழலியைக் கண்டேன் - நல்லா இருக்கு; சாமைக் கண்டேன் - இது எப்படி நல்லாவா இருக்கு?

வீ.எம்மால் முடியும்; ,, சாமால்...ம்..ம்.. ''

முகமூடிக்கு நல்ல மனசு ''சாமுக்கு...எனக்கே பிடிக்கலை


ஷ்ரேயாவிடம் சொல்லுங்கள் '' சாமிடம்..ஏதோ 'சாமி மடம்' மாதிரி இருக்கு.

துளசியின் செல்லங்கள் ,, சாமின்... Ho Chi Minh மாதிரி இல்ல?

ஸ்ரீரங்கனோடு பேசணும். '' சாமோடு....நிச்சயமா நல்லாவேயில்லை

பாலாவுடன் தொடர்பு கொள்ளணும் '' சாமுடன்...அவசரத்தில் தமிழ்சசியை தமிழச்சி
என்று வாசிப்பதுபோல சா மூடன் என்று வாசிக்கக்கூடும்

அதிலிருந்து, நான் எனது பெயரைத் தமிழ்த் தேர்வுகளைத் தவிர எப்போதும் தமிழில் எழுதுவதேயில்லை. மெல்ல மெல்ல குடும்பத்தினரைத்தவிர மற்ற எல்லோரிடமும் எனக்குப் பிடித்த Sam என்ற முதல் பெயரைப் புழங்க வைத்தேன். பள்ளிப்படிப்பு (1949-54; 54-60 - புனித மரியன்னை, மதுரை) முடித்து, கல்லூரி (1960-61-புனித சவேரியார், பாளையங்கோட்டை; 1961-64, 64-66 -தியாகராஜர் கல்லூரி, மதுரை)வரும்போது முழுமையாக எல்லோருக்கும் Sam-ஆகி விட்டேன்.

1966-70 புஷ்பம் கல்லூரி, தஞ்சையில் சேர்ந்தபோது வழக்கமான முறையில் initials-களை வைத்து, ஏற்கெனவே அங்கே ஒருவர் G.S.என்ற சுருக்கப் பெயரோடு இருந்ததால் S.G. என்று அழைக்கப்பட்டேன். எப்படியோ ஓசியாக 'ஜி' பட்டம் கிடைத்தது. பிறகு 70-ல் சொந்தஊர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் (2003ல் ஓய்வு)சேர்ந்த பிறகு கொஞ்சநாள் Sam-ஆக இருந்து, பிறகு வேறு சில Sam-கள் வந்ததால் வித்தியாசம் காண்பிக்கவென்று Sam G ஆனேன். வயது ஏறியபோது புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து நன்கு பழகிய நண்பர் முனைவர் சைலஸால் Samji என்று நாமகரணம் சூட்டப்பட்டேன்; மாணவர்களுக்கும் அப்படியே ஆனேன். (Dr.Silas, உம்ம பேரை எப்படியாவது ப்ளாகில் ஏற்றுவதாகச் சொன்னதைச் செய்துவிட்டேன்; ஆளை விடு'யா!) இதுதான் எமது பெயர்ப்புராணம்.


இப்படித் தமிழில் எழுத நானே தயங்கும் பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பள்ளிப் பருவத்திலிருந்தே முழித்து வந்திருக்கிறேன். ஆகவேதான் வலைஞனாகச் சேரலாமென முடிவெடுத்ததும் என்முன் எழுந்த பெரிய கேள்வி; பெயரை எப்படி எழுதுவது? இந்த பிரச்சனைக்கு முடிவுதான் புனைப்பெயரில் எழுதுவது என்ற முடிவு.

சரி, பெயர் வேண்டாம் என்ற முடிவெடுத்தபின் ஒரு trial and error மாதிரி ஆங்கிலத்தில் ஒரு blog ஆரம்பிக்க முடிவு செய்து suthal.blogspot.com என்று ஒன்று ஆரம்பித்தேன். (அதை அப்படியே தூங்க விட்டாச்சு; முழிக்க வைக்கவேணும். எப்படிதான் சந்திரவதனா மாதிரி ஆட்கள் 21 ப்ளாக் வைத்து மேய்க்கிறார்களோ! சிலருக்கு 'செல்லங்கள்'; சிலருக்கு ப்ளாக்குகள்!)
பிறந்த நாள், வருஷம் எல்லாம் கேட்டிருந்தது; கொடுத்தேன். பிறகு profile பார்த்தால் எதோ ஜாதகம் போடுவது மாதிரி என்னமோ நட்சத்திரம், ராசி எல்லாம் போட்டிருந்ததைப் பார்த்ததும் எரிச்சல். வாஸ்து, எண்கணிதம், கல் ராசி இப்படிப் போற கூட்டத்தைப்பார்த்து - அதுவும் இளைஞர்களை, என் மாணவர்களைத் திட்டுவது உண்டு; இங்கே என்னடான்னா இப்படி. முதலில் பெயர் தயக்கம்; இப்போது பிறந்த நாள் சொல்ல ஒரு தயக்கம்.

அதோடு, மெரினா பீச்சில், காந்தி சிலைக்குப்பின்னல் ஒரு ப்ளாக்கர்கள் கூட்டம் என்றார்களா கொஞ்சம் adjust பண்ணி சென்னையிலுள்ள மூத்த மகள் வீட்டிற்குப்போய் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்து, அதன்படியே கலந்துகொள்ளவும் செய்தேன். அதுவும் ஒரு தப்பாகப் போய்விட்டது. ஒன்று: எல்லோரும் பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை; Everything was Greek and Latin to me; things were going above my head. நான் என்றைக்கு unicode-யைக் கண்டேன்; என்னமோ template என்றார்கள்; காசி நிர்வகிக்கும் server அப்படி இப்படி என்று பேசப் பேச, ஆஹா, தப்பான முடிவு எடுத்துட்டோமோ என்ற பயம் வந்தது. அது போதாதென்று, வந்த 23-ல் (என்னைச் சேர்க்காமல்) 3 பேரைத்தவிர (இராமகி, டோண்டு,மாலன் - அனேகமாக இதே வயது வரிசையில்) மற்ற எல்லோரும் 25-35 வயதுக்குள் இருந்தார்கள்; அந்த முதிர்ந்த மூவரும் கூட என்னைவிட மிகவும் இளைஞர்களே. இந்த 'வலைக்குள்' சிக்கினால் problem of generation gap வந்துவிடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆரம்பிப்போமா, வேண்டாமா என்று ஒரே குழப்பம். வயதானவன் என்று தெரிந்தால் மரியாதை என்று ஏதாவது காரணம் காட்டி sideline பண்ணிவிடுவார்கள் என்ற பயம். (இப்போகூட பாருங்களேன்; stars for voting in my blog is not working; help me என்று forum-ல் அறைகூவல் விடுத்து நாள் பல ஆயிருச்சு; நாப்பது ஐம்பது பேர் வந்து பாத்துட்டும் போயிட்டாங்க; ம்..ம்..ஒரு சத்தம் வரணுமே.)

இதில நிறைய பேரு அவங்க அவங்க போட்டோவெல்லாம் போட்டுகிடராங்க (அழகான மூஞ்சு; போட்டுக்கிறாங்க! பழமொழி -வயசுக்கு ஏத்தமாதிரி பழமொழில்லாம் சொல்லவேண்டாமா- பழமொழி ஒண்ணு சொல்லுவாங்களே முடி இருக்க மகராசி...அப்படிமாதிரி) ஆனா, நம்ம கொஞ்ச நாளைக்காவது பெயர், வயது, நிச்சயமா போட்டோ எதுவும் இல்லாமல் வண்டியை ஓட்டிப்பார்ப்போம்; என்னதான் நடக்கும்; நடக்கட்டுமே அப்டின்னு ஒரு மாதிரி ஆரம்பிச்சு வைக்க, நம்மளையும் போனா போதுன்னு இரக்கப்பட்ட ஏழெட்டு நல்ல மனுஷங்க (மனுஷிங்களும்தான்) ஏதோ அப்பப்ப வந்து பாத்துட்டு... போய்க்கிட்டு...

இப்ப இன்னொரு ஆசை. பிறந்தது என்னமோ திருநெல்வேலி பக்கம்னாலும் மதுரைக்காரனாக மாறிப்போயாச்சு; நம்ம மதுரை வலைஞர்கள் எல்லோரும், அந்த சென்னைக்காரங்க எல்லாம் கூடிப்பேசுனாங்களே அது மாதிரி வெள்ளமாய் பாய்ந்து வரும் நம்ம வைகை ஆற்றின் கரை மேட்டுல ஒரு கூட்டம் போடணுங்க. யார் யார் மதுரைக்காரங்க? ஆட்டைக்கு வர்ரீங்களா? அருண் வைத்தியநாதன் மாட்டுத்தாவணி (அதுதாங்க, எங்க ஊரு கோயம்பேடு)பற்றி எழுதியிருந்ததாக நினைவு;ஆனா இப்போ அமெரிக்கா ஆளு. அல்வாசிட்டி விஜய்க்கு மதுரை 'புகுந்த ஊரோ'? இப்போ சிங்கைகாரர். வேற யாருங்க மதுரையில் இருக்கீங்க. இந்த சென்னைக்காரங்க பீச்சில கூட்டம் போட்டது நம் வைகை நதிக் கரையோரம் ஒரு கூட்டம் போடுவோமே, அலைகடலென திரண்டு வாருங்களேன். வர்ரீங்களா? யாராவது...Hellooooooooo anybody there?

பி.கு. குழலி, முகமூடி, வீ.ஏம், ஷ்ரேயா, துளசி, ஸ்ரீரங்கன், பாலா, தமிழ்சசி - உங்கள் பெயரைப் பயன்படுத்தியுள்ளேன் நீங்கள் அதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில். தவறெனின் தகவல் அனுப்புங்கள்.

29 comments:

துளசி கோபால் said...

என்னங்க சாம் ஜார்ஜ், நல்ல பேருதானே, பின்னே எதுக்கு இப்படிக் கவலைப்பட்டீங்க?
அமெரிக்காக்காரனுக்கு இது ''அங்கிள் சாம்' ஆச்சே!

ஆனா எனக்கென்னவோ உங்க பூனைப்பெயர் ஐய்யய்யோ நான் சொல்ல வந்தது புனைப் பெயர் தருமி நல்லாவே இருக்கு. உங்கப் பேரைப் படிக்கறப்பவே
திருவிளையாடல் தருமி நினைவுக்கு வந்து சிரிப்புணர்வும் வந்துருது.


மகிழ்ச்சியா இருக்கறது நல்லதுதானே?

உலகமே இன்புறுக!!!

என்றும் அன்புடன்,
துளசி.

முகமூடி said...

உங்க பேர தமிழ்ல ஸேம் (ஸ்ஏம் என்று உச்சரிக்கவும்) என்று எழுதலாமே... கொஞ்சம் பெரிசுதான், அட்ஜஸ்ட பண்ணிக்கொள்ளும் அளவு பெரிசுதான்

// முகமூடிக்கு நல்ல மனசு // உண்மைய சொன்னீங்க... அப்படியே கொஞ்சம் போல்டு லெட்டர்ல போடுங்கண்ணா புண்ணியமா போகும்...

// வெள்ளமாய் பாய்ந்து வரும் நம்ம வைகை ஆற்றின் கரை மேட்டுல // இருந்தாலும் இவ்ளோ குசும்பு கூடாதுங்கோ... வைகை ஆத்துல கள்ளழகர் இறங்கற நேரம் தவிர மத்த நேரத்துல தண்ணி இருக்குதுங்களா... (இரவு நேரத்துல குடிமகனுங்க புண்ணியத்துல தண்ணி ஓட்டம் நல்லாவே இருக்கும், பகல்ல...)

முகமூடி said...

தருமி... உங்கள் நட்சத்திர குறியீடு சரியாக வேலை செய்யாததற்கு காரணம் நீங்கள் நிரல்துண்டின் இரண்டாம் பாகத்தை உங்கள் templateல் சேர்க்காததே... (உங்கள் வலைப்பக்கத்தை view source முறையில் பார்த்தேன்) முதல் பாகம் இணைத்திருக்கிறீர்கள்

செய்முறை இங்கே

மேற்கண்ட தொடுப்பில் குறிப்பிட்டுள்ளபடி நிரல்துண்டின் இரண்டாம் பாகத்தை இணைத்தால் நட்சத்திரம் வேலை செய்யும்... மேலும் இரண்டாம் பாகத்தை இணைத்த பின் Republish செய்யவும் மறக்காதீர்கள்

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

Dharumi said...
"என்னங்க சாம் ஜார்ஜ், நல்ல பேருதானே"
அதுதாங்க துளசி, முதல் வரியிலேயே சொன்னேன் எனக்கு அப்பா வைத்த பெயர் பிடிக்கும்னு. பிரச்சனை என்னன்னா அதை தமிழில் எழுதுவதுதான்!

"புனைப் பெயர் தருமி நல்லாவே இருக்கு"
எனக்கும் பிடிச்சுப் போச்சுங்க; அப்படியே maintain பண்றதாக முடிவு.

"உங்கப் பேரைப் படிக்கறப்பவே
திருவிளையாடல் தருமி நினைவுக்கு வந்து சிரிப்புணர்வும் வந்துருது."

ஏதோ பேரைவச்சாவது சிரிப்பு வருதே, சந்தோஷந்தான்.

நன்றி

தருமி said...

முகமூடிக்கு,

"உங்க பேர தமிழ்ல ஸேம் (ஸ்ஏம் என்று உச்சரிக்கவும்) என்று எழுதலாமே"

ஏங்க விளையாடுரீங்களா? ஸேம் - அப்டின்னா ஆங்கிலத்தில் same என்றுதானே வரும். ஒர் சில நண்பர்கள் same old george என்று கூப்பிடுவதுண்டு. அது சரிப்படாதுங்க.

"// முகமூடிக்கு நல்ல மனசு // உண்மைய சொன்னீங்க... அப்படியே கொஞ்சம் போல்டு லெட்டர்ல போடுங்கண்ணா "
உங்களுக்காக இதுகூட செய்யாட்டா என்னங்க; நாம என்ன அப்படியா பழகியிருக்கோம்!

"உங்கள் நட்சத்திர குறியீடு சரியாக..."
திருத்தங்களைச் செய்து விட்டு மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.
நன்றியும், அன்பும்..

தருமி said...

ஆஹா, முகமூடி ஓட்டு விவகாரத்தைச் சரி செய்து விட்டேன் - என்ன, இப்போது சில பதிவுகளும் நீல நிறத்தில் வந்து கண்ணை உறுத்துகின்றன.
முன்பு, எழுத்தின் வண்ணங்களை எளிதாக மாற்றும்படி எடிட் பக்கத்திலேயே இருந்ததே, என்னாச்சு?

வோட்டுப் போடும் வசதியில்லாமல் இதுவரை இருந்ததால்தான் இப்படி; இனிமே பாருங்கள் - ஒரேயடியாகத்
திக்குமுக்காடப் போகிறேன் நிரம்பி வழியும் ஓட்டுக்களால்!!

மீண்டும் நன்றி

தருமி said...

முகமூடிக்கு,
வயசானாலே இப்படிதாங்க மறதி; கேட்க நினைச்சதை விட்டுட்டேன்.
அதென்ன மதுரை வைகையைப் பத்தி இப்படி புட்டுப் புட்டு வக்கிறீங்க; அதுவும் 'அந்த' விவகாரம்..

வசந்தன்(Vasanthan) said...

தருமி எண்ட பேரே நல்லாத்தான் இருக்கு.
வலைப்பதிவர் 'மா நாடு" சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

Vijayakumar said...

தருமி Vs சாம் ஜார்ஜ்,

சாம் ஜார்ஜ் பெயர் கலக்கலா தான் இருக்கு. ஐரோப்பா அமெரிக்கா ஞாபகம் தான் வருது.

நல்ல வேளை 'அலைகடலென வாருங்கள்' என்று கூக்குரலிட்டீர். வைகை நதியென வாரீர் என்றிருந்தால் நீர் மட்டும் நீரில்லாத வைகைநதி கரையில் நீராக நின்றுப்பீர் என நினைக்கிறேன் :-)

நான் சிங்கைகாரன் எல்லாம் இல்லீங்க. அவ்விடம் நிரந்தரமில்லை. சொந்த ஊர் நெல்லை. நீங்க புனித சவேரியார்னா. நானு புனித யோவான்.

புகுந்த ஊர் மதுரை தான். அடுத்த மாசம் 'அலைகடலுக்கு' ரெடியா சார்.

ஆனா ஜெனரேஷன் gap தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே :-) உங்கள் மின்னஞ்சல் கொடுங்களேன். என்னை தொடர்புக் கொள்ள njvijay at yahoo dot com.

Vijayakumar said...

அட ஸ்டார் குத்து போட்டுங்க போலிருக்கு. என் பங்குக்கு ஒரு + குத்து போட்டாச்சி.

குழலி / Kuzhali said...

நீங்க ஏதோ என்சோட்டு பையனோ என்று நினைத்திருந்தேன், என்ன இருந்தாலும் நீங்க உங்க வயச சொல்லி இருக்க தேவையில்லை இப்போ பாருங்க ஏதாவது திட்ட வேண்டுமென்றால் யோசிக்க வேண்டியதாக உள்ளது.... ஹி ஹி... குழலி(பெரிய்ய சுஜாதா,சாருநிவேதிதா மாதிரினு நினைப்பு அப்படினு நீங்க சொல்வது எனக்கு கேட்கின்றது) என்று புனைப்பெயரில் உலவுவதற்கு ஒரு காரணம் உண்டு அதை சொன்னா பின்னிடுவாங்க என்னை...

ஜோ/Joe said...

தருமி சார்,
எப்படி இத்தனை நாள் உங்கள் பதிவுகளை பார்க்காமலிருந்தேன் என்று தெரியவில்லை . தொடர்ந்து எழுதுங்கள்!

மண்டபத்துல நம்ம சிவபெருமான் சார பாத்தா ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க!

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

வசந்தன் -- வாழ்த்துக்களுக்கு நன்றி

விஜய் -- "ஆனா ஜெனரேஷன் gap தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே :-) உங்கள் மின்னஞ்சல் கொடுங்களேன்"
அந்த விஷயத்தில கவலையே படாதீங்க, விஜய். ஏன்னா, நம்ம புழைப்பே இது வரை 'சின்ன பசங்க'கூடதானே இருந்திச்சு.

தனி மடல் அனுப்பியுள்ளேன்.

இது ரொம்ப தப்பு, விஜய்,இப்படியா போட்டோ எடுக்கும்போதுகூட கை சூப்றது, கையை எடுங்க!

குழலி --"ஏதாவது திட்ட வேண்டுமென்றால் யோசிக்க வேண்டியதாக உள்ளது"
ஒரு ஐடியா தர்ரேன் உங்களுக்கு. ($*&_$$#* @@!*&^$)(*()*)**%#\) - திட்டவேண்டியதெல்லாம் திட்டிட்டு அதை எல்லாம் இதுமாதிரி brackets-குள்ள போட்டுட்டு, இதுமாதிரியெல்லாம் திட்ட நினைச்சேன்; வயசான ஆளுங்கிறதால போனா போகுதின்னு விட்டுடுறேன் அப்டின்னிடுங்க; சரிதானே?

ஜோ -- நன்றி. ஆனா இந்த விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதீங்க - "மண்டபத்துல நம்ம சிவபெருமான் சார பாத்தா ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க" - அப்படியே அந்த ஆயிரம் பொற்காசுக்கு பங்குக்கு வர்ரீங்களா. நம்மகிட்ட அது நடக்காது.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

பின்னூட்டங்களின் நிறத்தை மாத்துங்க தருமி.

(இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)

பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே..
"ஜோ" எந்த "ஜோ"? அவருக்கு 1000 பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)

தருமி said...

"இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)"
அட, மாத்தத்தெரியாம நான் முழிக்கிறது எனக்குத்தான் தெரியும்.

"பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே"
- அதச் சொல்லுங்க.

"பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)"
ஆசை.. தோசை..அப்பள..வடை..

தருமி said...

"இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)"
அட, மாத்தத்தெரியாம நான் முழிக்கிறது எனக்குத்தான் தெரியும்.

"பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே"
- அதச் சொல்லுங்க.

"பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)"
ஆசை.. தோசை..அப்பள..வடை..

தருமி said...

ஹா! தருமிக்கும் html பிடிபட்டுப் போச்சு; பாருங்களேன், அவனாவே font color மாத்திட்டான்!
வாழ்க தமிழ்மணமும், வலைஞர்களின் ஊக்கமும்!

Vijayakumar said...

அய்யா தருமி, சாமி தானே கண்ணை குத்தும். ஆனா இங்கே உங்க எழுத்துக்கள் கண்ணை குத்துதே.

உங்க Template-அ காப்பி பண்ணி எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன். நேரம் இருக்கும் போது உதவுறேன். நீங்களே கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டாலும் சரி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

www.24hourhtmlcafe.com <- வடிவா சொல்லித்தருவாங்க. இது இல்லாட்டியும் சும்மா கூகிள்ல html tags என்று போட்டுத் தேடினா வந்திரும்.

அப்பளம் வடை எல்லாம் வேணாம்..பொற்காசுதான் வேணும்!!(சின்னப்பிள்ளைகள் கேட்பதைக் கொடுத்துவிட வேணும்!!!) ;o)

தருமி said...

ஹலோ, மக்களே இப்பவுமா எரிக்கிற நீல வண்ணத்தில தெரியுது. எனக்கு நீல வண்ணம் 'போயே போயிந்தே'. யாராவது சீக்கிரம் சொல்லுங்க, ஏன் இந்த விஜய்யும், ஷ்ரேயாவும் இன்னும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க?

"சின்னப்பிள்ளைகள் கேட்பதைக் கொடுத்துவிட வேணும்"

இப்படி அடம் பிடிச்சா என்ன கிடைக்கும் தெரியுமா? ம்..ம்..

தருமி said...

ஏங்க முகமூடி, எப்படி இப்படி எல்லா வலைப்பூக்களுக்கும் போய்ட்டு வர்ரீங்க.பொறுமையின் பூஷணமுங்க!

விஜய், ஷ்ரேயா,

எப்படி இப்போ சரியாப் போச்சா? நீங்க சொன்னது சொல்லாதது எல்லாம் சரி பண்ணியாச்சா? அதோட, voting pad பாத்தீங்களா, இந்தியக்கொடியையே கொண்டு வந்திட்டேன், பாருங்க.

என்னது யார் பண்ணினதா? நானே...நானே பண்ணினது; பிறகு என்ன வேற யாரும் அங்க மண்டபத்திலயா செஞ்சு தருவாங்க!

நந்தன் | Nandhan said...

//அதிகமானோர் 'ன'வுக்கும், 'ண'வுக்கும் தகராறு பண்ணிக்கொள்கிறார்களே அது போலவோ//
Sir, Dharumi sir. Andha adhigamanorla naanum oruthan. engeyachum tamil grammar made easy iruntha sollungalen :(
Illa email kodunga, pesikalam. Ennoda top 3 mistakes ennana
1.neengale sollitinga
2.Ottru miguvathu - athanga sila varthaikala mattum kadaisila meyi ezhutha poduvaangale athu. Eduku podanumo adhuku poda matten :)
3.Itha ivlo naala yaarkiteum kekkama irunthathu.

cheena (சீனா) said...

நான் இங்கு பின்னூட்டம் இட மாட்டேன். காரணம் - பல வரிகள் என் மலரும் நினைவுகள் பகுதியில் வரப் போகிறது. அப்போது இரண்டையும் ஒத்துப் பார்த்து (compare) எழுதுகிறேன்.

http://cheenakay.blogspot.com
http://padiththathilpidiththathu.blogspot.com

முதல் பதிவில் இடுகைகள் இட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டன். உடனே தொடங்க வேண்டும். சரியான பதிவைத் தொட்டு விட்டேன். எழுதி விடுகிறேன்.

அ. வேல்முருகன் said...

எனது மகனுக்கு விளாடிமிர் இல்லிச் அருணன் என்று பெயர் வைத்தேன். லெனின், அப்பா மற்றும் தமிழ் மீதும் கொண்ட பற்றால்.

வகுப்பில் அவனை அழைப்பது விளையாடி அல்லது அவர்கள் வாயில் நுழையும் சொல்லை வைத்து கூப்பிடுகிறார்களாம்

ஒருநாள் கேட்டே விட்டான் ஏன்
பெயரை மாற்றக் கூடாது என

இது காலம் காலமாக உள்ள பிரச்சினை போல்

தருமி said...

பையன் சொல்றது /கேட்கிறது ரொம்ப சரி. என் suggestion என்னவென்றால் அவனுக்குப் பிடித்த பெயர் - அருணன் (?)- மட்டும் கூட வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பாஸ்போர்ட் எடுக்கும் போதோ, வேறு எங்கும் விண்ணப்பங்கள் எழுதும்போதோ, பெயருக்கு spelling சொல்லி அலுக்கும்போதோ பின்னாளில் அவனுக்கு வாழ்க்கை கொஞ்சம் அலுக்கலாம் - என் மகள் மாதிரி! அவளுக்கு 3 பெயர் வைத்தேன். நல்லா பேரு வச்சீங்க.. ஒரு சின்ன பெயரா வைத்திருக்கக் கூடாது என்று படிப்பு முடித்த காலத்தில் அடிக்கடி கேட்டாள்!

Ultra said...

உங்களுக்கு எழுத்து பிரச்சனை .
எனக்கு இடைவெளி (Space Bar) பிரச்சனை.
வேல் முருகன்? (அல்லது) வேல்முருகன்?

தருமி said...

Ultra

ரெண்டு பின்னூட்டம் முன்னால் பாருங்க. எங்க ஊர்க்காரர் வேல்முருகன் ..... அப்டின்னு தொடர்ச்சியா போட்டிருக்கிறார். நீங்க எப்படி?

Post a Comment