பதிவர் நண்பர் ஜோ அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்
கலைஞர் தொலைக்காட்சிக்கு என்ன தோன்றியதோ,இன்று மாலை 8 - 8.30 வரை மறக்க முடியுமா? என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. முதல் பாதி பார்க்கவில்லை. நடிகர் திலகத்தின் சில படங்களின் தொகுப்பாக இருந்தது. கருப்பு கலந்த வெள்ளைத்தாடியில், நாம் கடைசியில் பார்த்த கோலத்தில், ரஞ்சிதா தொகுப்பாளராக இருக்க, சில காட்சிகள் பார்க்க முடிந்தது. நடுவில் அவரும் மார்லன் ப்ராண்டோவும் இருப்பதுபோல் சில ஸ்டில்ஸ்.
அவரின் நடிப்பின் சிகரம் தொட்ட காட்சிகள் என்று ஏதுமில்லாவிட்டாலும் சிகரெட் குடிப்பது போல் ஒரு காட்சி ... ம்ம்..யாரும் இனி பிறந்துதான் வரணும்னு தோன்றியது. நடுவில் ரஞ்சிதா சில கேள்விகள். அதில் ஒன்று method acting பற்றி. அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது'மா என்று அப்பாவியாக ஆனால் பட்டவர்த்தனமாகப் பதில் சொன்னார்.
On the water front என்ற மார்லன் ப்ராண்டோவின் படத்தை மூன்றுமுறை பார்த்திருக்கிறேன். ஏனோ அந்தப் படம் பார்க்கும்போதெல்லாம் எனக்கு சிவாஜியின் நினைவுதான் வரும். இந்தப் படத்தை மட்டுமாவது அவர் பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று எப்போதும் தோன்றும். அவர் அதிகம் படிக்காதவர். சொல்லப் போனால் அதிகமாக உலக ஞானம்கூட இல்லாதவர். (அவரின் அரசியல் முயற்சிகளே அதை உறுதிப் படுத்தும்.) கலைகளைப் பற்றி அதுவும் நடிப்பைப் பற்றிகூட எந்த வெளி அனுபவமோ, உலகப் பார்வையோ கடைசிவரை இல்லாதவராய் இருந்தார். பாவிகள்... அவருடன் தொழில் செய்த எத்தனையோ பேருக்கு அவருக்கு இந்த உலகப் பார்வையைக் காண்பிக்க வேண்டுமென்று தோன்றவேயில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு. கொஞ்சம் கோடி காண்பித்திருந்தாலும் அவர் தன் ஆளுமையை இன்னும் விசாலமாக்கியிருக்க முடியுமே. ஒவ்வொரு முறையும் On the water front படம் பார்த்த போதெல்லாம் இது போல் சிவாஜியால் சர்வ சாதாரணமாக நடித்திருக்க முடியுமே; ஆனால், கடைசிவரை இந்த புதிய நடிப்பு வகைகளை அறியாமலேயே, பாய்ஸ் தியேட்டர் நடிப்பை மட்டுமே அவரிடம் இந்த தமிழ் திரையுலகம் பெற்று ஒரு பெரிய கலைஞனின் முழு திறமையை வெளிக்கொணராமலே போய்விட்டதே என்றுதான் தோன்றும்.
அண்ணா அவர்கள் மார்லண்ட் ப்ராண்டோ மாதிரி சிவாஜியால் நடிக்க முடியும்; ஆனால், சிவாஜி போல் மார்லண்ட் ப்ராண்டோ நடிக்க கடினம் என்றாரம். இது நூற்றுக்கு நூறு உண்மை. மிகை நடிப்பே நடிப்பின் உச்சம் என்றிருந்த கால கட்டம். நாடகத்தன்மையிலேயே கதைக் களங்களும் நடிப்பும் இருந்த கால கட்டம். (இன்னும் அதுவே தொடர்வது நம் கெட்ட நேரம்தான்!) அவரே இந்த நிகழ்ச்சியில் சொன்னது மாதிரி இயக்குனர்கள் கேட்டதை மட்டுமே கொடுக்கத் தெரியும் என்ற நிலையில், அவரை ஆளுமை செய்து, அவரது முழு நடிப்புத்திறனை வெளிக் கொண்டுவர இயக்குனர்கள் இல்லாமல் போய்விட்டது நமது இழப்பு.
கப்பலோட்டிய தமிழன் படம் ஒன்று போதும் அவரால் இயல்பான நடிப்பும் கொடுத்திருக்க முடியும் என்பதை நிரூபிக்க. உயர்ந்த மனிதனில் சாப்பிட்டுவிட்டு பல் குத்திக் கொண்டே பேசும் அந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது. தெய்வமகனில் அந்த convent-bred இளைய மகனின் பாத்திரத்தில் அவர் காண்பித்த "சேஷ்டைகள்", அந்த பாத்திரத்தை யார் நடித்திருந்தாலும், அது கேலிக்கூத்தாகத்தான் இருந்திருந்திருக்கும். அவரது in born potentials எல்லாமே வெளியே தெரியாத tips of the icebergs என்றாகி விட்டன.
அவர் இருந்த காலத்திலேயே நான் அடிக்கடி நினைத்ததைத்தான் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்; இந்த மனிதன் ஒரு ஹாலிவுட் நடிகனாக பிறந்திருந்தால், அதுவும்கூட வேண்டாம், பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒரு நடிகனாக இருந்திருந்தால்கூட இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்திருக்க முடியும். அவரின் ஊழ்வினையோ நம் எல்லோரின் ஊழ்வினையோ அவர் நம்மில் வந்து பிறந்து விட்டார்!
அமிதாப் நடிப்பு என்றுமே எனக்குப் பிடித்ததில்லை. அவரின் இப்போதைய விளம்பரப் படங்களில் அவர் காண்பிக்கும் நடிப்புத் திறன்கூட அவரது பழைய படங்களில் நான் பார்த்ததில்லை. ஆனால் சமீபத்தில் அவரது Black படம் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது சிவாஜிதான். இதுபோல் எவ்வளவு சாதாரணமாக நம்மவர் நடித்திருக்க முடியும்; ஆனால் அப்படி ஒரு படமோ, இயக்குனரோ அவருக்குக் கடைசிவரை அமையாமலே போய்விட்டதே என்று தோன்றியது.
62 comments:
நீங்க தேவர் மகன் படத்தில் இருந்து ஒரு ஸ்டில் போட்டது பொருத்தம். என்னளவில் அவரோட நார்மல் மிகை நடிப்பை விட்டு விலகி ரொம்ப அற்புதமாகச் செய்த படம்.
இதுதான் தருமி சார் என்னோட வயித்தெரிச்சலும். நந்தவனத்திலோர் ஆண்டி பாட்டுதான் நினைவுக்கு வருது.
அந்த நிகழ்ச்சியை பாக்க ஒங்களுக்காச்சும் குடுத்து வெச்சதே.
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு சார் ஒவ்வொரு வரியும். இவர் மட்டுமல்லாது எம்.ஆர்.ராதா, வி.கே.இராமசாமி இப்படிப் பல பேரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம். நான் சில மிகப் பழைய எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களை பார்க்கும் போது இவ்ளோ இயல்பா நடிக்கறாரேன்னு ஆச்சர்யப் பட்டிருக்கேன். ஆனா அவரோட பாதை அவர் விரும்பியபடியே வகுக்கப் பட்டதால் இவர்களோடு சேர்க்க முடியாது.
naanum andha nigazhchiyai rasithen. pala kaaranangalil ondru nam iruvarukkum 50 vayadhukku mel aakivittadhudhaan. ennudan adhe araiyil irundha irupadhuvayathukkaararkaL andha nikazchiyai kavanikkave illai.
sivajikku ulaka cin ema theriyadhu enbadhu thavaru. sennaiyil avar regularaaga aangilath thiraippadangkalaip paarthuvandhaar. naadaga nadikaraaga irundhapodhe, indhap pazakkam avarukku irundhadhu. pala padangalil yeethaavadhu oru sceniliye veliyerividuvaar endru avar nanbargal solliyirukkiraargal. avar sonna kaaranam: enakku vendiya oru vishayam padathil kidaiththuvittadhu. atharku mel etharkku andha padaththai naan paarkka vendum ?
sivaajiyai vaithu iyakkiya iyakkuwargalukku qpaarmulaavai thaandip poga manam illaadhadhee avarai innum sirappaaga payanpaduththa mudiyaamal ponadharku kaaranam.
anbudan
gnani
blog commentil eppadi thamizhil ezhuduvathendru enakku seythi anuppungal. theriyavillai.
//ஆனால் சமீபத்தில் அவரது Black படம் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது சிவாஜிதான். இதுபோல் எவ்வளவு சாதாரணமாக நம்மவர் நடித்திருக்க முடியும்//
ஹாய் மதனில் கூட இந்த விஷயத்தை கூறி வருத்தப்பட்டிருந்தார் மதன். அவர் சொன்ன இன்னொன்றும் மிக சுவாரசியமானதாகவே உள்ளது: "ஒரு தந்தியை எப்படி பிரிக்க வேண்டும் என நமக்கு கற்றுத் தந்தவர் சிவாஜி. அப்படி நாம் பிரிக்கவில்லையென்றால், அது அவரின் தவறல்ல - நம் தவறு!"
நான் பெரிதாக உபயோகப்படும்படி ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவ்வரிகளை எனக்கு ஞாபகமூட்டியதற்கு நன்றி!
அன்புடன்
வெங்கட்ரமணன்
கொத்ஸ்,
ஆனா பாருங்க அந்த படத்தில எனக்கு காக்கா ராதாகிருஷ்ணன்தான் ரொம்ப பிடித்தது. so real and natural...
ஜிரா,
நல்லதோர் வீணை செய்தே ...எனக்கு இது நினைவுக்கு வந்தது.
//..ரஞ்சிதா சில கேள்விகள். அதில் ஒன்று method acting பற்றி. அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது'மா என்று அப்பாவியாக ஆனால் பட்டவர்த்தனமாகப் பதில் சொன்னார்.//
இது இன்னும் கண்ணுக்குள் நிழலாடுது
:(
rapp,
//எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களை பார்க்கும் போது இவ்ளோ இயல்பா நடிக்கறாரேன்னு ஆச்சர்யப் பட்டிருக்கேன்//
ஆஹா... இப்படி ஒரு கருத்தும் இருக்கா? இல்லைங்க .. எனக்கு சுத்தமா உடன்பாடில்லைங்க.
அவரு ஒரு நடிகரா இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் பாப்புலர் ஆனார் என்பதும் ஆனால் அவர் இரண்டிலும் பூஜ்யம் என்பதும் அவர் மேலுள்ள என் கருத்து.
Too biased?? could be ...
ஞானி,
உங்கள் தகவல்படி சிவாஜிக்கு ஆங்கிலப்படங்களில் பரிச்சியம் இருக்குமென்றால் அது எனக்கு ஒரு சேர ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுக்கிறது.
அப்படி உலகப் படங்களைப் பார்த்துமா தன் நடிப்பை அவர் விரிவுபடுத்திக் கொள்ளவில்லை.
அல்லது வெள்ளித்திரைப் படத்தில் பிரகாஷ்ராஜ் பாத்திரம் சொல்வது போல் இங்கே அம்மா செத்தா நெஞ்சில அடிச்சிக்கிட்டு அழுவதுதான் இயல்பு. அதேமாதிரிதான் நம் படங்களில் நடிப்பும் இருக்கவேண்டும் என்றிருந்து விட்டாரா? அறியாமை காரணம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன் இத்தனை நாளாக.
அப்போ தெரிந்தே மிகைநடிப்போடு காலம் தள்ளிவிட்டாரா?
:(
வெங்கட்ரமணன்,
என்னைப் போன்று புகை பிடித்தவர்களுக்கே அவர் சிகரெட்டைக் கையாளுவது ஆச்சரியமாக இருக்கும்.அதேபோல் ஒரு படத்தில் அவர் ட்ரங்க் கால் பேசும் ஒரு காட்சியில் spontaneous ஆக extending the call இயல்பாக கோபத்துடன் செய்திருப்பார்...
நீங்க சொல்வது அத்தனையும் சரிதாங்க. நல்ல நடிகனைப் பயன்படுத்தத் தெரியலை நம்மாட்களுக்கு.
ஆனால் அவுங்களுக்கு (இயக்குனர்களுக்கு)இருந்த முதிர்ச்சி அம்புட்டுதான் அப்ப.
நீங்க மூணு முறை பார்த்தது நான் ஒருமுறையும் பார்க்கலை. தேடிப்பார்த்துட்டால் ஆச்சு.
சூப்பர்மேன்லே மார்லன் ப்ராண்ட் நடிப்பு.
நெசமாச் சொல்லுங்க நல்லாவா இருந்துச்சு.
கடைசியா.........
அமிதாப்பின் ஆரம்பகாலப்படம் சௌதாகர்னு ஒன்னு இருக்கு. கிடைச்சால் பாருங்க. வெல்லம் காய்ச்சி விற்கும் ஆளா வருவார்.
"அந்த நாள்" படத்துல வில்லனா ரொம்ப அட்டகாசமா நடிச்சிருப்பாரு...
என்னா ஸ்டைலுங்க... சூப்பரா இருக்கும்...
அவருக்கு தொடர்ந்து நல்ல இயக்குனர்கள் கிடைக்காதது தான் பிரச்சனை :-(
(அரசியல்ல இருந்ததால தான் MGR பாப்புலர் ஆனார்னா, SSR, மு.க.முத்து எல்லாம் ஏன் ஆகலை? MGR க்கு, ரஜினிக்கு எல்லாம் நடிக்க தெரியாதுனு சொல்றதே பலருக்கு வேலையா போச்சு :-) )
வெட்டீஸ்,
//அரசியல்ல இருந்ததால தான் MGR பாப்புலர் ஆனார்னா, SSR, மு.க.முத்து எல்லாம் ஏன் ஆகலை? //
ஆனைக்கி அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்லக் கூடாதாம்ல...
//MGR க்கு, ரஜினிக்கு எல்லாம் நடிக்க தெரியாதுனு சொல்றதே பலருக்கு வேலையா போச்சு ://
ஆமாங்க சிலருக்கு இந்த மாதிரி மனசுக்குப் பட்டதை டக்குன்னு சொல்றதே வேலையா போச்சுங்க :) ஆனாலும் நானென்னவோ ரஜினி பற்றி இங்க ஒண்ணும் சொல்லலையே.
ஒருவேளை சோக சீன்ல அம்மான்னு எம்.ஜி.ஆர். ஓடிப்போய் தூணில மூஞ்ச வச்சி மூ்டிக்குவாரே அது நல்லா இருக்கும்னு சொல்லுறீங்களோ .. இருக்கும் .. இருக்கும்!!
அந்தக் காலகட்டத்தின் திரைக்கதை,வசனம் போன்றவைகளை தள்ளி வைத்துவிட்டு முகபாவங்களை மட்டும் கணக்கில் கொண்டால் நடிப்புக்கென்று இன்னொருத்தன் இனிமேல்தான் பிறக்கவேண்டும்.நாடகத்துறையிலிருந்து வந்ததால் அதன் பாதிப்பு தன்னிடமுள்ளது என்பது அவரே ஒத்துக்கொண்ட விசயம்.மற்றபடி மிகைநடிப்பா என்று மீண்டும் அந்தக் காலகட்டத்திற்குள் போய் உட்கார்ந்து விட்டு வந்தால்தான் தெரியும்.
//அவரு ஒரு நடிகரா இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் பாப்புலர் ஆனார் என்பதும் ஆனால் அவர் இரண்டிலும் பூஜ்யம் என்பதும் அவர் மேலுள்ள என் கருத்து.
Too biased?? could be ...//
அப்படியேத்தான் நானும் கருதுகிறேன் தருமி. ஆனா, படிச்சவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை இரண்டிலும் பூஜ்யம் என்றவுடன்.
ஆனால் காதல் காட்சிகளில் ரெஸ்ட்லெசாக நிறைய சேஷ்டைகள் செய்யும் பொழுது நான் என்னன்ன செய்ய வேண்டுமென்று நினைப்பேனோ அதெல்லாம் செய்து விடுவார் :-))). நல்ல நடிப்பு :-P!
அதெல்லாம் too biased என்று கூறிவிட முடியாது, குலோசாக கவனிக்கும் யாருக்கும் அது பிடிபடும்.
ராஜநடராஜன்,
//அந்தக் காலகட்டத்தின் திரைக்கதை,வசனம் போன்றவைகளை தள்ளி வைத்துவிட்டு ..//
தலைவரைப் பற்றி பேசிட்டு //..வசனம் போன்றவைகளைத் தள்ளி வைத்துவிட்டு// என்கிறீர்களே! கலைஞர் எழுதணும்; தலைவர் பேசணும்...அடடே! அந்த சேரன் செங்குட்டுவன் ட்ராமா இருக்குமே...வாவ்!!
வாத்தியாரே,
நெஞ்சம் நிறைந்த நன்றி!
தெக்ஸ்,
//காதல் காட்சிகளில் ரெஸ்ட்லெசாக நிறைய சேஷ்டைகள் செய்யும் பொழுது நான் என்னன்ன செய்ய வேண்டுமென்று நினைப்பேனோ அதெல்லாம் செய்து விடுவார் ..//
என்ன தெக்ஸ்! நீங்கள் அவ்வளவு மோசமானவரா? :)
வயசுக் காலமாயிருந்தாலும் அவரது ரொமான்ஸ் சீன்கள் எனக்கு பயங்கர கடுப்பேத்தும். பாவமன்னிப்பு படத்தில் சிவாஜி-தேவிகா ரொமான்ஸ் ஒரு பாட்டுக்கு - பாலிருக்கும் .. பழமிருக்கும்.. - ஒருத்தரை ஒருத்தர் தொடாமலே .. ம்ம்.. எப்படியிருக்கும் தெரியுமா?
ஏதோ எம்.ஜி.மார்.(அந்தக் காலத்தில எங்க குரூப் சொல்றது அப்படித்தான்!)
கத்தாம கத்தி சண்டை நல்லா போடுவார்; உடம்ப நல்லா வச்சிருப்பார் அப்டின்னு சொன்னீங்கன்னா பரவாயில்லை. ஆனா ரொமான்ஸ் சீனுக்கும் அவருக்கும் காத தூரமாச்சே. வேட்டைக்காரன் படம்.. சாவித்ரியோடு நடித்த முதல் படம் .. மெதுவா மெதுவா தொடலாமான்னு ஒரு பாட்டு... கொலவெறி நடிப்பு ... என்னவொரு கண்றாவி..
சரி...tastes differ.ஆனாலும் உங்க டேஸ்ட் ...ம்..நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை! :(
//அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது'மா என்று அப்பாவியாக ஆனால் பட்டவர்த்தனமாகப் பதில் சொன்னார்.//
முதல் மரியாதை படத்துக்குப் பின் "நான் எங்கே நடிச்சேன். 'நீங்க ஒன்னும் நடிக்காதீங்க'ன்னு டைரக்டர் சொல்லிட்டார். அப்படியே அங்கே இங்கே நடந்து வரச் சொன்னார். அவ்வளவுதான்" என்று சொன்னாராம்.
அந்நிகழ்ச்சி பார்க்க வேண்டுமென்று நினைத்தது விடுபட்டு விட்டது.
.. மெதுவா மெதுவா தொடலாமான்னு ஒரு பாட்டு... கொலவெறி நடிப்பு ... என்னவொரு கண்றாவி..//
ஹா ஹா ஹா... இதத்தானேங்க நான் உயர்வுநவிழ்ச்சியா சொல்லியிருந்தேன். இந்த கெலவெறித்தனம்தான் ஊரே அறிஞ்ச கதையாச்சே, சும்மா கிண்லடிச்சிருந்தேன் நீங்க பாட்டுக்கு இந்த காதல் இள(கிழ)வரசனை போட்டுத் தாக்கிப்புட்டீங்களே :-)).
இன்னொன்னும் சொல்லிக்கிறேன், நம்ம காதல் வாழ்க்கையெல்லாம் ""குணா"" படத்தில கமல் சொல்ற "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல்"அல்ல டைப் ;-P.
தெக்ஸ்,
ஓ ..உயர்நவிற்சியா.. அப்படி சொல்லுங்க.
பொழச்சி போங்க..
வாழ்க .. வளர்க :)
Dear Sri Dharumi,
I just learnt about this spot, thanks to Joe Sir. This discussion is very interesting. The terminology overacting itself is a mirage. Acting itself is artificial and as such what is the difference between acting and overacting? I do not understand this. NT was a connoisseur of hollywood films and I have seen him during night shows at the Casino Theatre. He would not stay for the full cinema. He observed and absorbed cinema acting from any language film. And he would present it to suit Tamil culture. He has explained this many times. He respected the Directors as a captain of a ship and obey him irrespective of his age. Many things can be said of him.
He is a genius.
Raghavendran.
www.nadigarthilagam.com
துளசி,
ப்ராண்டோ சூப்பர் மேனாக நடித்திருக்கிறாரா? பார்த்ததில்லை. காட் ஃபாதரை விடவும் என் வயசுக் காலத்தில் பார்த்த on the water front, viva zapata, one eyed jack(?) பிடித்தன.
paul nweman அப்டின்னு ஒருத்தர் இவரைப் போலவே இருப்பார். அவரும் பிடிக்கும்.
நீங்க சொன்ன அமிதாப் படம் எங்கே கிடைக்கப் போகிறது?
Sir, It is unfair to judge Sivaji's acting by Hollywood 'standards.' He has exhibited different styles sometimes in the very same film. To take just one example, the scene in Avan Thaan Manithan when Jayalalitha dashes his hopes just when he is about to declare his love is a fine example of his ability to underplay his emotions.Tamilians as a community are a demonstrative people. That is why they related to his emoting and cried when he cried. Even I foolishly thought he over-acted in Gauravam. But when I saw people rage like him in real life I revised my opinion. Only people from reserved or repressed societies will call his acting theatrical. I refuse to do so. warm regards.
//அவரு ஒரு நடிகரா இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் பாப்புலர் ஆனார் என்பதும் ஆனால் அவர் இரண்டிலும் பூஜ்யம் என்பதும் அவர் மேலுள்ள என் கருத்து.//
இரண்டிலும் பூஜ்யமான ஒருவர் இரண்டிலும் வெற்றி பெற்றது எப்படி, எதனால்...
விதியினாலா :) :) :)
இல்லை நேரம் நல்லா இருந்ததனாலா
//அவரது Black படம் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது சிவாஜிதான்//
ஹ்ம். வெரி ட்ரூ!
உலகளாவிய (அட்லீஸ்ட், இந்தியாளாவிய) படம் ஒண்ணு கூட சிவாஜிக்கு அமையாதது மிகப் பெரிய கொடுமை.
பாரதிராஜா: முதல் மரியாதையில் அவரை நடிக்கக் கூடாது,சும்மா வந்துட்டு போங்க என்று சொல்லி விட்டேன்.
அவரும் ராஜா பாரதி,நீ தான் இயக்குனர்,நீ சொல்றபடி நான் செய்றேன்பா என்றார்.
சத்யராஜ்: அப்பா!உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார் சொல்லுங்க!மார்லன் பிராண்டோவா?
சிவாஜி:டேய்!நான் யாரைக் காப்பியடிக்கிறேன்னு கேக்குறியா?
அந்தக் காலத்துலே நாடகத்துலே கத்துக்கிட்டதுடா எல்லாம்.
ராதா (எம்.ஆர்.ராதா) அண்ணன் தாண்டா எல்லாத்துக்கும் கத்துக் கொடுத்தார்.நடிகன்னா அவர் தாண்ட
நடிகன்!
சூப்பர் மேனுக்கு அப்பாவா அந்த வெள்ளைவெள்ளையாக் காமிக்கும் ஒரு கிரகத்தில் வருவார்.
அப்படித்தான் நினைவு. வயசாகுதுல்லே. மறதி (எனக்கு) வந்துருக்கும்:-)
ப்ரூனோ,
//இரண்டிலும் பூஜ்யமான ஒருவர் இரண்டிலும் வெற்றி பெற்றது எப்படி, எதனால்...
விதியினாலா :) :) :)
இல்லை நேரம் நல்லா இருந்ததனாலா//
ஆமாங்க .. ஆமா..அவரு விதி நல்லா இருந்ததால ..
நம்ம நேரம் அவ்வளவு மோசமா இருந்ததால ..
இந்தப் பதிவின் இரண்டாவது பத்தியைப் படித்துப் பாருங்களேன்
இதில் முதல் பத்தியும் படித்துப் பாருங்களேன்
சுலதான்,
பார்க்காததற்கு ரொம்ப வருத்தப் படத் தேவையில்லை. ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் ஏதும் புதிதாகவோ அதிகமாகவோ சொல்லிவிடவில்லை. சில பழைய காட்சிகள் அவ்வளவே... ஆனால் பல பழைய நினைவுகளை உலுப்பி விட்டு விட்டது.
ராகவேந்திரா,
சிவாஜி நீங்கள் சொன்னதுபோல் ஒரு connoisseurதானோ என்னவோ,, ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒரு connoisseurதான்.
நான் சிவாஜிக்கு உலகப்படங்களைப் பற்றிய பார்வை இருந்திருக்காதென்றே தவறாக எண்ணி வந்துள்ளேன். அப்படி தெரிந்திருந்தும் ஏன் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் method acting பற்றிக் கேட்டதற்கு அதெல்லாம் தெரியாதென்று கூறியிருக்க வேண்டும்.
அடுத்து, அப்படி பரிச்சயம் இருந்திருந்தும் ஏன் அப்படிப் பட்ட அவர் எளிதாகச் செய்யக் கூடிய நடிப்பையும் அதிகம் செய்யாது விட்டார் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.
இன்று கமல் சினிமாவின் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடும் அறிவும் வளர்த்துக் கொண்டிருப்பது போல (உண்மையிலேயெ, சகல கலா வல்லவந்தான்!) சிவாஜி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.He had his own limitations.Probably lack of formal education could have been one of the reasons.(Of course, so also Kamal ...but he is of a 'different'mold!) There are many people whom Kamal considers his mentors, guides, well-meaning friends. But for Sivaji there were people around him who simply adored him; not any one who could have 'instructed' him on world cinema and such related things. Had he made himself familiar with contemporary world cinema he SHOULD have gone still higher.
ப்ரபாகர்,
glad to have another connoisseur.
நீங்களும், ராகவேந்திராவும் என்ன சொன்னாலும், என் ஆதங்கம் எல்லாம் அவர் எளிதாகத் தொட்டிருக்ககூடிய சிகரங்களைத் (அகன்ற உலகப் பார்வை இல்லாததால்.. ) தொடாமலே விட்டு விட்டார் என்பதே.
ஏற்கெனவே சொன்னது போல் அவருக்கு Black போன்று ஒரு படமாவது அமைந்ததா? அவரால் அந்த பாத்திரத்தில் நடித்திருக்க முடியாதா?
on the water front படத்தில் கதாநாயகன் அடி வாங்கி, துயரத்தோடு நடந்துபோவதாக ஒரு காட்சி. அதே போல் NT நடந்து போவதாக சில காட்சிகளை நம் தமிழ்ப்படங்களில் பார்த்திருக்கிறேன். இருந்தும் ... :(
SurveySan,
தமிழன்,
நன்றி
//இந்த மனிதன் ஒரு ஹாலிவுட் நடிகனாக பிறந்திருந்தால், அதுவும்கூட வேண்டாம், பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒரு நடிகனாக இருந்திருந்தால்கூட இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்திருக்க முடியும். அவரின் ஊழ்வினையோ நம் எல்லோரின் ஊழ்வினையோ அவர் நம்மில் வந்து பிறந்து விட்டார்!//
சோகத்துடன் மறுமொழிகிறேன் :(
அபாஸ் "பூச்சுடவா" என்ற படத்தில் மிக அருமையாக underplay செய்து நடித்து இருப்பார். அதை பார்த்து நாம் பாராட்டலாமே ! ஹாலிவுட் தரத்திற்கு ஏற்ப அவரை மாற்றி கொண்டதற்கு.
naan samibakaalathilthan sivaji ganesan ararkaludaya padangkalai parka thodanginen.neengal marlon brando patri kuriyabodhu enaku avar sivaji patri sonnathai niyapakathirku vanthathu.ungalukku yerkanave theriyum enru ninaikiren ."He can act like me, but i can't act like him" enru oru paytiel kurinar.
anbudan
Sabarish.
naan samibakaalathilthan sivaji ganesan ararkaludaya padangkalai parka thodanginen.neengal marlon brando patri kuriyabodhu enaku avar sivaji patri sonnathai niyapakathirku vanthathu.ungalukku yerkanave theriyum enru ninaikiren ."He can act like me, but i can't act like him" enru oru paytiel kurinar.sivaji ulagam pughal petravar enru enaku theriyavanthathu
Sorry i didnt know to write in tamil.
anbudan
Sabarish.
மறக்கமுடியாத தமிழர்களில் சிவாஜுயும் ஒருவர் என்ற உண்மையை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்!
சிவாஜி யாரு இளையதிலகம் பிரபுஒட அப்பா தன? (சும்மா தமாசு)
நான் பாத்த எதோ சில சிவாஜி படங்கள்ல புதிய பறவையும் ஒண்ணு. "ஆனா ரேகை ரேகை....." செம்மையா பண்ணிருப்பாரு.வேற எதாவது நல்ல சிவாஜி படம் இருந்தா சொல்லுங்க.பாத்து நானும் G.Kva வளத்துகுறேன்.
//..ரஞ்சிதா சில கேள்விகள். அதில் ஒன்று method acting பற்றி. அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது'மா என்று அப்பாவியாக ஆனால் மாகப் பதில் சொன்னார்.//
பட்டவர்த்தனம்ன என்ன தலைவா ?
தஞ்சாவூரான்,
நன்ற
அவனும் அவளும்,
அபாஸ் .. who?
:)
sabarish,
நீங்க கொடுத்த மேற்கோள் அறிஞர் அண்ணா சொல்லியதென நினைக்கிறேன்.
நம்பிக்கை,
நன்றி
அரவிந்தன்,
ஆமா அவரேதான் .. எப்படிங்க இப்படி கண்டு பிடிச்சீங்க?
அதென்ன .. //ஆனா ரேகை ரேகை....." //
G.Kva வளர்த்துக்க: தெய்வமகன், பாசமலர், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், உயர்ந்த மனிதன், .........
பட்டவர்த்தனமா ... டக்குன்னு, வெளிப்படையா இதுக்குப் பதில் சொல்லணுமோ??!!
எனக்கென்னமோ சிவாஜி அவர்களின் நடிப்பு இயல்பானதாகத் தெரியவில்லை. ஒரு சில படங்களைத் தவிர.
அவனும் அவளும்,
அபாஸ் .. who?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ரஜினிய பாத்து "what a man" அப்படின்னு அண்ணாமலை படத்துல சொல்லுவாரே !
எனக்கு தெரிந்து முதல் மரியாதையில் மிக இயல்பாக நடித்திருப்பார். என்னை பொருத்தளவில் முதல் மரியாதை உலகத்தரமான படம். நாம் hollywoodஐ அளவுகோலாக வைக்ககூடாது. hollywood மிகச்சில உலக மொழிப்படங்களைத்தான் அங்கீகரித்திருக்கிறது. அதற்காக வருத்தபட வேண்டியதில்லை என்பது என் எண்ணம். marlon brandoவின் street car named desireஐயும் பாருங்கள்.
அவனும் அவளும்,
//ரஜினிய பாத்து "what a man" அப்படின்னு அண்ணாமலை படத்துல சொல்லுவாரே !//
ஓ! திருட்டுப் பயலே படத்தில் ஜீவன்கூட "பப்ளிமாஸ் மூஞ்சுக்காரன்" அப்டின்னு சொல்லுவாரே .. ஓ! அவரா!! :)))
புகழன்,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
செந்தில்,
முதல் மரியாதையில் கடித்தே துண்டாக்கப்படும் அந்தக் கால் கட்டைவிரல் அந்தப் படத்தின் தரத்தையே கீழே இறக்கிவிட்டதாகத் தோன்றியது.
நீங்கள் சொல்லும் படத்தைப் பார்க்க முயலுகிறேன். நீங்கள் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...
ஓ! திருட்டுப் பயலே படத்தில் ஜீவன்கூட "பப்ளிமாஸ் மூஞ்சுக்காரன்" அப்டின்னு சொல்லுவாரே .. ஓ! அவரா!! :)))
:)))))-----
இல்ல. நான் சொன்ன படம் தப்பு. அது படையப்பா....
//அதென்ன .. //ஆனா ரேகை ரேகை....." ////
புதிய பறவை climaxla இன்ஸ்பெக்டர் வந்து சொல்லுவாரே "அந்த பொண்ணோட ரேகை கெடச்சுடுச்சு கோபால்னு"
அப்பா சிவாஜி பேசுற வசனம் "முகம்,உருவம் உயரம் எல்லாம் ஒன்ன இருக்கலாம் ஆனா ரேகை ரேகை......"
தகவல்களுக்கு நன்றி கண்டிப்பா எல்லா படத்தையும் பாக்க முயற்சி பண்றன் (இதுவல்லவோ லட்சியம் )
அவனும் அவளும்,
''அபாஸ் .. who?
:)//
அய்யோடா .. இப்படி சொன்னது ஒரு ஜோக்குக்காகத்தான் சார்!!
அது என்ன உங்களுக்கு இப்படி ஒரு பெயர்??
அரவிந்தன்,
//இதுவல்லவோ லட்சியம் //
லட்சியமெல்லாமே மலை உச்சிக்குப் போறதாத்தான் இருக்கணுமா என்ன?
60களின் தமிழ் திரைப்படங்களை பார்க்கும்போது மிகவும் வருத்த மாக இருக்கும்.. அப்போது கிணற்று தவளை போன்ற படங்களே தமிழில் அதிகம் எடுக்கப்பட்டன .. ஏனோ சிவாஜியின் மீது எனக்கு பெரிய அபிப்ராயங்கள் ஏற்படவில்லை... நீங்கள் சொல்வது போல் நாம் அவரை சரியாக பயன் படுத்த வில்லை ...சிவாஜி ஒரு முழுமை பெறாத சகாப்தம் என்றே சொல்ல தோன்றுகிறது..
***அது என்ன உங்களுக்கு இப்படி ஒரு பெயர்??***
நல்லா இல்லையா ?
//நல்லா இல்லையா ?//
அப்படி இல்லை; ஆனால் புரியவில்லை. ஏதோ, 'நானும் அவளும்' அப்டின்னா பரவாயில்லை. அதை விட்டுட்டு அவனையும் அவளையும் பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க ??!! :)
உங்களுக்கு சினிமா அறிவு கொஞ்சம் கம்மி தான் !
அபிலாஷா படம் எதுவும் பாத்தது இல்லையா ? அவங்க பட பேரு தான் inspiration.
'நானும் அவளும்' - இது எப்படி ? "அ" வுக்கு "அ" தான் சரி......"நா" எப்படி ஒத்து வரும் ?
//உங்களுக்கு சினிமா அறிவு கொஞ்சம் கம்மி தான் !//
ஆமா..........
//அபிலாஷா படம் எதுவும் பாத்தது இல்லையா ? //
இல்லேங்க.....
//அவங்க பட பேரு தான் inspiration.//
நல்ல வேளை... ப்ரபுதேவா-விஜய் படம் "போக்கிரி" ஞாபகத்துக்கு வருது.....
//தருமி said...
யோகநாதன் செய்யும் சேவைக்கும், அவரின் சேவையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் உங்களின் சேவைக்கும் என் பாராட்டுக்கள்.
உங்கள் வலைப்பூவிற்கு புகைப்படப் பேழை என்ற பொருளில் பெயர் வைக்க நினைத்தீர்களோ?//
புகைப்படப் பேழை
எனப் பேர் மாற்றிவிட்டேன் ஐயா.
கோவை லோகநாதன் பற்றிய பதிவினை பதிந்துள்ளேன் ஐயா.
தேசப் பிதாவின் மறு பிறப்பு.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
what is acting simple acting under acting over acting useless acting - what is method acting- usless action. first of all one should know about his own clulture emotions feelings expressions so many tthings - natural acting is meaningless anybody anybloody can act that is called iyalbu nadippu. marlon acting watch watch . commenting sivaji`s acting is not so easy it is out of criticism as kushwant singh. the great actor no doubt. he achieved so many things. action.means exaggeration of expression. it is very difficult to make understand - western people french people, european , japanese culture chienese, russian culture- there are so many - tamilians and indians are totally different - comparison - critiscism - these are waste of time - useless job - enjoy the real thing and keep it in your mind - don`t wast time and don`t show as if you are from hollywood - sivaji nadippai vimarsikka oru thaguthi vendum. mgr iyalbu nadippu commedy who asked no body bothers why you worry about this
Post a Comment