Wednesday, September 15, 2010

437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...






*

சிங்கையில் இறங்கி வெளியே சாலைகளுக்கு வந்ததுமே தெரிந்த முதல் உண்மை - நாம் மூன்றாம் உலகத்தில் இருந்து முதலாம் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்.
வெளியே வந்ததும் எங்கும், சாலை இருமருங்கும் அழகான பச்சை. சாலைகள் வழு வழு. சாலைநியதிகளில் 100% ஒழுங்கு. அகலச்சாலைகளில் வழுக்கும் கார்கள். நாங்கள் சென்ற காரின் வேகம் பார்த்தேன். 120 என்று காண்பித்தது (கி.மீ.?) நல்லாத்தான் போகுது என்று

நினைக்கும்போது ஒரு ஈருருளை -அதாங்க, ஒரு பைக் - எங்களைத் தாண்டி சீறிச் சென்றது. சாலைகள் அப்படி ...

பல இடங்களில் காமிரா கண்காணிப்பு உண்டு. நானிருந்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு முறை நாலைந்து பேரை போலீஸ் என்று உள்ளூர் நண்பர்கள் கைகாட்டினார்கள். வேறெங்கும் காவல் துறையினரையோ, அவர்கள் வாகனத்தையோ எங்கும் கண்டேனில்லை. ஆனாலும் ... எல்லாம் ஒழுங்கு! நம்ம ஊர்ல இன்னும் கைத்தொலை பேசியோடு வண்டியோட்டும் புனிதர்களைக் கூட இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நிற்க வேண்டுமென்ற சட்டதிற்குக் கூட  நம்மூரில்  இடமில்லை. பெருமூச்சுதான் வருகிறது. எந்த ஒழுங்குமில்லாத சமூகம் .... :(


எங்கும் நியதி; எதிலும் ஒழுங்கு. பொறாமைக் கண்ணோடுதான் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ஊருக்கு நடுவில் ஓடிய ஆற்றில்
அழுக்கென்று எதுவும் இல்லை. ஒரு
வேளை என்னைப் போன்ற ஆள் யாரும் வேண்டுமென்றே ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலை அங்கே போட்டிருந்தார்களோ என்னவோ ஒரே ஒரு பாட்டில் அந்த நீர்ப்பரப்பில் பப்பரப்பா ... என்று பாவம்போல் மிதந்து கொண்டிருந்தது. என்னாச்சு .. ஊர்ல உள்ள குப்பைகளைக் கொட்டுமிடமல்லவா அது என்றுதான் எனக்குத் தோன்றியது. மிதக்கும் அந்த பாட்டிலைப் படம் பிடிக்க நினைத்து வேண்டாமென்று விட்டு விட்டேன்.(என்ன நல்ல மனசு!)


அமெரிக்காவில் பார்த்த ஞாபகம் உண்டு. அதைப் போலவே இங்கும் சாலைகள்; ஒட்டி வரும் நடை மேடையில் முதலில் புல்; பின் கான்க்ரீட் நடைபாதை; பின் மீண்டும் புல், மரங்கள், வீடுகள். இதே போல் இங்கும் பார்த்தேன். எப்படித்தான் செடிகள் இப்படி வளருதோ. க்ளைமேட் நம்ம ஊர் மாதிரிதான் இருந்தது. ஆனால் அப்பப்போ நல்லா மழையும் பெய்யுமாம். அதனால்தானோ என்னவோ?     மழைத்தண்ணீர் எங்கேயும் தேங்கவும் இல்லை!

நம்மூரில் நல்ல நாளிலும் அப்படி. அதோடு ஒரு நாள் நாலைந்து துளி மழை பெய்து விட்டால் அடுத்த நாள் அப்படி ஒரு தூசி. இந்த ஊரில் - நம்மூர் மாதிரி க்ளைமேட் இருந்தும் - எப்படி தூசியே இல்லை?

ஒரு சாலை. இரு பக்கமும் 'தண்ணிக் கடைகள்'. நாங்கள் தற்செயலாக பகலில் பார்த்தோம். இரவில் ஜன ரஞ்சகமாக இருக்கும் என்று தெரிந்தது.


கடைகளை வித்தியாசமாக அழகு படுத்தியிருந்தார்கள்.கடைகளே அழகு ...! இரவுகள் அமர்க்களமாயிருக்கும் என்றார்கள். (இங்கு போன சிங்கைக்காரர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றிய ஒரு 'சின்ன'  விளக்கம் கொடுங்களேன்!)



HIGHLANDER கடையில் இருப்பவர்  ஐரிஷ்காரர் மாதிரி உடையில்....

1.நாங்கள் உள்ளேயா.. ?



(அடுத்து வரும் 1,2,3,- இலக்கமிட்ட படங்களைப் பெரியதாக்கிப் பாருங்களேன்.) 







2. உள்ளேயா .. வெளியேயா ... ?

3. இங்கேயும் அங்கேயும் நாங்களா ... ?
ஒவ்வொரு கடையும் தனிக் கவர்ச்சியுடன் காட்சியளித்தன. நானும் பிரபாவும் இதை இரவில் பார்க்க முடியாமல் போயிற்றே என்று மிகவும் கவலைப்பட்டோம். நிச்சயமாக ஒரு பூலோக சொர்க்கமாகத்தான்  இருக்கும் என்று நினைத்தோம். கடைகள் மட்டுமல்லாது அந்த குறுக்குச் சாலையே பலவித அழகோடு இருந்தன - ஒரு உயர fountain .. இன்னும் என்னென்னவோ ...!
அவன் அப்படித்தான் ..!
                                                                                                                                        


சிங்கப்பூரில் ஊரைச் சுற்றிப் பார்த்தோமோ என்னவோ .. நிறைய மால்களுக்குள் சுற்றிச் சுற்றி வந்தோம். கடை கண்ணிகள் (கண்ணின்னு இங்க ஏன் வருது?) எல்லாமே அழகு; சுத்தம்; செழுமை.

ஒரு சைனா பஜாருக்குப் போனோம். . என்னென்னவோ விற்றது. பயங்கர கூட்டம் வேறு. வித வித உணவு வகையறாக்கள். சைனாக்காரர்கள் வெளியே சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளவர்களாம். இந்தக் கடையில் கலர் கலராக 'என்னமோ' விற்றது. வாங்கிச் சாப்பிட ஆசை; ஆனால் அது என்னது என்று யாரிடம் கேட்பது. ஆசையை மூட்டைக் கட்டி வைத்துக் கொண்டேன். பிடித்த லெமன் ஐஸ் டீயை மட்டும் குடித்துக் கொண்டேன்.
 பொருள்கள் ஏதும் நான் அதிகம் வாங்கவில்லை, (முடியணுமே!) எல்லாம் நம்ம ஊர்ல இப்போ கிடைக்குது. electronic goods  விலை குறைவாகத் தோன்றியது. இதில் இன்னொரு ஆச்சரியம். வாங்கிய பொருளுக்கு விற்பனை வரி போடுகிறார்கள். ஆனால் நாம் அப்பொருளை நம் நாட்டுக்கு எடுத்து போகும்போது அந்த விற்பனை வரியை விமான நிலையத்தில் கொடுத்து விடுகிறார்கள். எங்கள் நாட்டு மக்களுக்கு விற்பனை  வரி உண்டு; வெளியாட்களுக்கு இல்லை என்கிறார்கள். நல்ல நியாயமான, நமக்கு லாபகரமான தத்துவம்! தன் நாட்டு மக்களுக்கு வரி; வேறு நாட்டினருக்கென்றால் ஒன்றும் இல்லை!  வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள். (முதல்லேயே தெரிந்திருந்தா கொஞ்சம் தங்க நகை வாங்கியிருந்திருக்கலாம் - தங்ஸ்.)

மால்கள் தோறும் நல்ல சாப்பாட்டுக் கடைகள். சீனாக்காரர்களின் உணவு வழக்கப்படிவீட்டில் செய்து சாப்பிடுவதை விடவும் கடைகளில் சாப்பிடுவதே அதிகமாம். நண்பர் ஒருவர் சீனாக்காரர் தங்கியிருந்து வீட்டிற்குப் புதிதாக வீடு மாறிய போது சமையலறை புழங்காது சுத்தமாக இருந்ததாகக் கூறினார். நாங்களும் சில பல வகை உணவு வகைகளை ருசி பார்த்தோம். எங்கள் வயிறு strong தானா, இல்லை அவர்கள் சுத்தமாகச் சமையல் செய்தார்களா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டதெல்லாம்

எந்த தொந்தரவும் தரவில்லை. சைனா, ஜப்பான் என்று எந்த உணவு வகையையும் கொஞ்சம் ருசி பார்த்தோம்.  கோழியும், மாடும், பன்றியும்,மீனும் அதோடு சேர்ந்த பலவும்  நன்றாகவே ஒத்துழைத்தன.

ஆங்கில நாவல்களை வாசித்த போது அவர்களது ரயில் சரியாக 8.37க்கு வரும் .. போகும் என்றெல்லாம் எழுதுவார்களே.. அதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எண்ணியதுண்டு.ஆனால் இப்போது கொஞ்சம் புரிகிறது. எல்லா ரயில்களும் கணினியின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலும். இந்த தூரத்திற்கு இந்த நேரம் என்ற கணக்கில் எல்லாம் 'சொல்லி வைத்தது' போல் நடக்கும் போலும்.

ரயில்கள் பற்றியே ஒரு பெரிய கதை எழுதலாம். ரயில் நிலையங்கள் மற்ற இடங்கள் போலவே 'செம சுத்தம்'. underground  பாதையில் நாங்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி: கருப்பு உடை; நீண்ட முடி; பின் பக்கம் பார்த்ததால் ஆணா பெண்ணா, John or Cynthia என்றே தெரியாத ஒரு உருவம் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தது. அதைச் சுற்றிலும் சின்னச் சின்ன பாட்டில்கள். சுற்றுச் சுவரில் என்ன கறையோ ... பொறுமையாக உட்கார்ந்து எங்கள் கண்ணில் படாத அந்தக் கறையைத் துடைத்துக் கொண்டிருந்தார். பார்வையற்றோருக்காகவே சிறப்பான ஓர் ஏற்பாட்டை இந்த சுரங்க வழிகளில் செய்துள்ளனர்.

ரயிலின் உட்புறமும் அப்ப்ப்ப்படி ஒரு சுத்தம். நமது கார்களின் உட்பகுதிகளைக்கூட அத்தனை சுத்தமாக நாம் பேண முடியுமான்னு தெரியலை. எங்கும் எப்படி இவ்வளவு சுத்தம் !! எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அமைதியான பயணம். அட .. கைத்தொலைபேசியின் சத்தம் கூட அதிகமாக இல்லை. எல்லோரும் silent mode போலும், ஒரு நாள் பயணத்தில் திடீரென ஒரு தமிழ்ப்பாட்டு சத்தமாக ஒலித்தது. எல்லாம் நம்ம ஆளுதான். ( சிங்கை போய் வந்த பின் நண்பன் பிரபா தன் கைத்தொலை பேசியை silent mode-ல் போட்டு பழகி விட்டான்.)

ஒவ்வொரு நிலையத்திற்கும் அறிவிப்பு. கதவருகே படமும் அதில் பச்சை சிகப்பு விளக்குகளோடு விளக்கங்களும் உண்டு. ரயில்கள் நடைமேடையில் போடப்பட்டுள்ள கோடுகளில் சரியாக வந்து நிற்கின்றன. நாம் வெளியே காத்திருப்பதற்கும் கோடுகள். எந்த முண்டும் மோதலும் இல்லாத பயணம். ரயிலில் அரட்டை அடிப்பதை விட மக்கள் பலரும் தங்கள் கைத்தொலை பேசியில் விளையாடிக்கொண்டு வருவார்கள் போலும். சத்தமேயில்லாத, கையில் கூடையோடு வியாபாரிகள் இல்லாமல் ... இன்னும் இதுபோல் பலதும் இல்லாமல் ரயில் பயணம் ...
ரயிலுக்குச் செல்லும் பாதையில் ...சுவற்றில்


அட ரயில்தான் அப்படியென்றால் பஸ் பயணம் ... ம்ம்... ம்.. விமானப் பயணம் போலிருக்கிறது. நான் ஏறிய பஸ்களில் கூட்டம் அதிகமில்லை. பஸ்களே வெளியிலிருந்து பார்க்க அத்தனை அழகு. ஒரு போஸ்டர் கூட பஸ்ஸின் பின்னால், சைடில் யாரும் ஒட்டவில்லை. சுத்தமாகத்தானிருக்கு!


உள்ளே நம்ம பஸ்களில் கம்பிகள் இருக்குமே அந்தக் கம்பிகளைச் சுற்றியும் அழகான வண்ணத்தில், மெதுவான plastic sleeves.  கம்பிகளைப் பிடிக்கவே நன்றாக இருந்தது. சீட்களும் அழகு. சொன்னது போல் விமான சீட்களை விடவும், அதுவும் Tiger Airlines  சீட்களை விட அழகு.




இடது பக்கத்தில் உள்ள படத்தில் ஒரு மீட்டர் போல் ஒன்று தெரிகிறதே ...அது சக்கர நாற்காலிகளோடு யாரும் வந்தால் அவர்கள் வண்டியை இதில் பாதுகாப்பிற்காக lock செய்து கொள்ளலாம். அப்படி யாரேனும்  ஒரு பயணி வந்தால் பஸ் ஓட்டுனர் இறங்கி அவருக்கு உதவ வேண்டும். 'சீக்கிரம் ஏறித் தொலை'யா' என்றெல்லாம் அவர் கூவக் கூடாது.

இன்னொன்றும் 'ரூம் போட்டு யோசித்த' ஒரு விஷயமாகத் தோன்றியது. Ezlink Card - ஒரு கார்டு வாங்கி பஸ், ரயில் இவைகளில் போக பயன்படுத்தலாம். ரயில் நிலையங்களில் நுழையுமிடத்தில் உள்ள தடுப்பான்களில் இந்தக் கார்டை தேய்த்தால் நமக்கு வழிவிடுகிறது - அமெரிக்காவிலும் உண்டு; ஆனால் இங்கே நீங்கள் ஒரு இடத்திற்குப் போக ரயிலில் போய் அடுத்த 20 நிமிடங்களுக்குள் இன்னொரு பஸ் / ரயில் பிடித்தால் இரண்டாவது பயணத்துக்கு முழுக் கட்டணமின்றி குறைவான பணமே கழிக்கப்படுகிறது. காரணமாகக் கூறப்படுவதுதான் interesting ஆன விஷயம். ஓரிடத்திலிருந்து நேரடியாக நீங்கள் செல்லும் இடத்திற்கு போக்கு வரத்து அரசு கொடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மக்களை இப்படி மாறி மாறி பயணம் செய்யும் 'தொல்லையை' அரசு உங்களுக்குக் கொடுத்திருப்பதால் கட்டணத்தில் கழிவு!

டெக்ஸியில் நம்ம ஊர் கதை
ம்லாய் மொழியில் taxi என்பதை டெக்ஸி என்று கூறுவார்கள் போலும். அதனால் இங்கே எல்லோரும் டாக்ஸியை டெக்ஸி என்றுதான் கூப்பிடுகிறார்கள். (பேசும் போது 'லா' போட்டு பேசுவதும் மலாய் மொழி வழக்கம் போலும்.)  என்னங்க அநியாயம் .. பென்ஸ் கார்கள் எல்லாம் டெக்ஸியாக ஓடுகின்றன. எனக்கு ஓர் ஆசை .. ஒரு தடவையாவது ஒரு பென்ஸ் காரில் போய்விட வேண்டும். நண்பர்களிடமும் சொல்லியிருந்தேன். ஆனால் ஆசை கடைசி வரை பலிக்காமல் போச்சு ...


டெக்ஸி முழு குளிரில் 'ஜில்லென்று' ஓடுகின்றன. ஒவ்வொரு காரிலும் G.P.S. தேவையற்ற பேச்சுக்கள் கிடையாது. நான்கு என்றால் நான்கே பேர்தான் பயணிக்க முடியும். ஐந்து பேரென்றால் இரு டெக்ஸிகள். கொஞ்சம் கூட 'அட்ஜஸ்ட்' செய்ய முடியாத ஊர்! (வண்டியில் ஏறி உட்கார்ந்து, - - - யை வெளியே நீட்டிக் கொண்டு  நம்ம ஆட்டோவில் 'சுதந்திரமாக' பயணம் செய்வோமே அந்த மாதிரி சர்க்கஸ் வேலையெல்லாம் கிடையாது. ஆட்டோ ஓட்டுனரின் இரு பக்கமும் பயணிகளை உட்கார வைத்துக்கொண்டு  நம்மூர் ஆட்டோக்கள் ஓடுதே ... அதைப் பார்த்தாலும் நம்ம மதிப்புக்குரிய காவல் துறைக்கு  ஒன்றுமே தோன்ற மாட்டேங்கிறதை பார்த்தா எனக்கு கொஞ்சம் ஆச்சரியம், நிரம்ப கோபமும், எரிச்சலும். சரி.. அதெல்லாம் இங்க எதுக்கு?) ஓட்டுனர் பக்கத்தில் சில்லறைக் காசுகள் ... இறங்கியதும் நீங்கள் பணம் கொடுத்ததும் மிகச் சரியாக சில்லறையோடு மீதி தருகிறார். தர வேண்டியது அவரது கடமையாம்; அதை வாங்கிக்கொள்ள வேண்டியது நமது கடமையாம்.

bikes - பெரிய பெரிய வண்டிகள் நிறைய இருக்கு. ஒவ்வொரு வண்டியின் பின்னாலும் ஒரு பெரிய பெட்டி இருந்தது. சரி .. வேலைக்குப் போகிற மக்கள் சாப்பாடு, அது இதுன்னு நிறைய வச்சிக்கலாமே .. நம்ம ஊர்ல இந்தப் பொட்டி இல்லையே .. வாங்கிட்டு கூட போகலாமான்னு பேசிக்கிட்டோம். அதன் பின் தான் தெரியும் அதெல்லாம் இரண்டு ஹெல்மட் வைப்பதற்காக என்று. ஆக, அரசு ஒரு சட்டம் போடுது; அதை மக்கள் வழிநடத்தவும் வைக்குது. என்ன அதிசயம் என்றுதானே நமக்கு - or at least - எனக்குத் தோன்றும்!



 எங்கும் சுத்தம் - ஒழுங்கு - கட்டுப்பாடு - சுய ஒழுக்கம் - சட்டம் - சட்டத்தை நடைமுறைப் படுத்துதல் .... அங்க என்னமோ நடக்குதுங்க ....

*** சட்டம் என்று ஒன்றிருந்தால் அதை நடைமுறைப்படுத்த முடியாத அரசோ, காவல் துறையோ, அதிகாரிகளோ இருந்தால் அது என்ன நாடு? 
*** கம்பெடுத்தவன் சொன்னதே சட்டம் என்பது என்ன நாடு?  
*** எத்தனை அக்கிரமங்கள் நடந்தாலும், 'என் பொழப்பு மட்டும் ஓடுச்சுனா போதும்' என்கிற அமைதி காக்கும் "நல்ல மக்கள் கூட்டம்" இருப்பது என்ன நாடு?

என் மனசுக்குள் இப்படியே பல ..............

*
இன்னும் சில சாலைப்படங்களுக்கு ....


*


*

10 comments:

இலவசக்கொத்தனார் said...

/வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள். /

பல ஐரோப்பிய நாடுகளில் கூட VAT refund என விமான நிலையங்களில் கட்டப்பட்ட வரியை திருப்பித் தரும் வழக்கம் உண்டு.

ப.கந்தசாமி said...

ஏனய்யா இப்படி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க? நாங்க என்ன பாவம் பண்ணினோம்?

SurveySan said...

///ஒழுங்கில்லாத சமூகம் .... :(///

this is our biggggggggggggggest drawback.
how to infuse ஒழுக்கம்?

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

ஒரு self kick for a test!

prabhadamu said...

நீங்கள் சொல்லுவது அணைத்தும் உண்மை ஜயா.

மதுரை சரவணன் said...

என்னங்கய்யா ஒரு குண்டு , குழியில்லத சாலை, ஆறு என்றால் அசுத்தம் சேராமலா இருக்கணும் , கடை கூட இவ்வளவு அழகா இருந்தா அழகின் மதிப்பு தெரியாது.. எல்லாரையும் ஒருமுறை இந்தியா அழைத்து வந்து பின் சிஙகப்பூரை பார்ப்போம் ... என்ன செய்ய .... நம்மனால முடியாத ஒரு விசயத்தை எப்படி சொல்ல...

வடுவூர் குமார் said...

தருமி அய்யா இப்போது சொல்கிறேன் உங்கள் சிங்கை டிரிப்பில் இப்பகுதியை எங்காவது தொடுகிறீர்களா? என்று பார்த்துக்கொண்டு வந்தேன் அதை இப்பதிவில் பார்த்தேன்.
"சக்கர நாற்காலியோடு"
MRT என்று சொல்லப்படும் ரயில் நிலையங்களில் எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர லிப்ட்,நடை மேடையில் சின்னச்சின்ன குப்பி மாதிரி குமிழ்கள் வைத்து அதனுள் அவர்கள் வாகனம் சறுக்காமல் செல்லும் படி அமைத்திருப்பார்கள்.பேருந்து நிலவரத்தை சொல்லிவிட்டீர்கள்,இதே மாதிரி வாடகை பேருந்து அவர்களுக்கு என்று தனியாக உள்ளது.மாற்றுத்திறனாளி வெளியே செல்ல முடியாது என்ற நிலையை எப்படி அழகாகமாற்றி அமைத்துவிட்டார்கள் பாருங்கள்.இதெல்லாம் விட அனைத்து கட்டிடங்களிலும் அவர்கள் ஏறுவதற்கு வசதியாக சருக்கு மேடை குறிப்பிட்ட கோணத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிங்காரச்சென்னையில் எந்த ரயில் நிலையமாவது இப்படிப்பட்ட எண்ணம் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா? ஏன் மதுரையில் கூட கிடையாது.மாற்றுதிறனாளி மட்டுமா? வயதானவர்கள் அவ்வளவு படி ஏறி வண்டியை பிடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள்??இதையெல்லாம் சொல்ல ஏதாவது பெரிய படிப்பு படிக்க வேண்டுமா? நினைக்க நினைக்க கோபமாய் வருகிறது.

தருமி said...

//நடை மேடையில் சின்னச்சின்ன குப்பி மாதிரி குமிழ்கள் வைத்து //

இது பார்வை குறையுள்ளவர்களுக்காக என்றல்லவா நினைக்கிறேன்.

மாயவரத்தான் said...

//வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள்//

யார் அந்த அறைகுறை சொன்னது?!

தாய்லாந்திலும் உண்டு!

Post a Comment