Friday, September 20, 2013

681. தருமி பக்கம்: IMPORTED FROM NORTH INDIA







*
அதீதம் இணைய இதழின் தருமி பக்கத்தில் வந்த கட்டுரையின் மறு பதிவு:

*



மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டோம். தனித்தனி மாகாணங்கள். ஒரு மாகாணத்திலிருந்து அடுத்த மாகாணம் போனால் வாழ்க்கை நிறைய வேற்றுமைகளோடு இருக்கின்றன. மொழி, பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிது. உள்நாட்டுக்குள்ளே இருக்கும்போதே அயல் நாட்டில் இருப்பது போன்ற உணர்வு. அடுத்த மாகாணம் - ஆந்திரா. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை போய் முழுவதுமாக அந்நியப்பட்டு நின்றேன். அங்கே பேசும் தெலுங்கும், இந்தியும் புரியவில்லை. பேசிய ‘சில்லறை ஆங்கிலம்’ அங்கு சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்டது. ‘ராஷ்ட்ர பாஷா’ இருந்தால் தான் பேசுவோம் என்ற முரட்டுத்தனத்தோடு மக்கள் இருந்ததைப் பார்த்தேன். அடுத்த மாநிலத்திலேயே இப்படி!

நல்ல வேளை .. கேரளா செல்லும் போது இந்த உணர்வு அதிகம் இல்லை. பெண்களூரிலும் கொஞ்சம் பிழைத்துக் கொண்டேன். இந்த வேறுபாடுகளின் நடுவே சில பழக்க வழக்கங்கள் இங்கும் அங்கும் சென்று விடுகின்றன. நம் ஊர் இட்லி, தோசை, சாம்பார் கொஞ்சம் அங்கு பெயரளவில் அடி படுகிறது. ஆனாலும் மக்கள் மொத்தமாக இட்லி தோசைப் பக்கம் விழுந்து விடவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட ரெடி என்பது மாதிரி சிறிது பரவியிருக்கிறது. ஆனால் வடக்கிலிருந்து பெரும் பழக்கங்கள் நம்மை சுத்தமாக அடிமைப் படுத்தி விட்டன என்று நினைக்கிறேன்.

முதல் மாற்றம் - உடை மாற்றம். சேலையும், தாவணியும் போய் சூடிதார் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல மாற்றம். எல்லா வயதினருக்கும் எல்லா ‘சைஸ்’ ஆட்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. விலையும் நம் சேலைகளை விட குறைவே. இந்த சூடிதார் வரும்போது பலர் வெறுப்புக் கொடி தூக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது. ந்ண்பர் ஒருவர் கல்லூரியில் பேராசிரியர். முதுகலை வகுப்பில் ஒரு மாணவி சூடிதாரில் வந்ததும் நண்பர் போர்க்கொடி தூக்கி விட்டார். சூடிதாரில் வகுப்புக்கு யாரும் வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்று ஒரு ’போராட்டம்’ ஆரம்பித்தார். வெற்றியும் பெற்றார்.



அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட் போட்டு சென்றிருந்தேன். அதை அவர் கண்டிக்க, அன்று இரவில் நண்பர்களோடு விவாதங்கள் தொடர்ந்தன. சூடிதார் நிகழ்ச்சியை அவர் சொல்லி தன் வெற்றி பற்றியும் எங்களிடம் சொன்னார். அவருக்கு சூடிதார் அவலட்சணமாகத் தோன்றியது. எனக்கோ அது angelic dress! கடைசியில் நான் அவரின் மகளின் வயதைக் கேட்டேன். என் சின்ன மகள் வயது ... நாலைந்தாவது வகுப்பு. அப்போது அவரிடன் சொன்னேன் .. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மகளே சூடிதார் தான் கேட்பாள்; நீங்களும் வாங்கிக் கொடுப்பீர்கள்  என்றேன். அப்படியே நடந்தது. ஆனால் இன்றும் கூட சேலை தான் எல்லா இடங்களிலும் ’செல்லுபடி’யாகின்றது. முக்கியமாக கல்லூரிப் பேராசிரியைகள் பாவம் இன்னும் சேலையில் தான் செல்ல வேண்டியதுள்ளது போலும் - even in co-ed colleges. பாவம் .. அவர்களும் சூடிதாருக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. ஆனால் பலருக்கு இதில் இன்னும் விருப்பமில்லை என்பதும் தெரிகிறது. எப்படியோ வடக்கின் உடை இப்போது நம் உடையாக மாறிப் போய் விட்டது.

ஆனால், இப்போது அமெரிக்கா நோக்கி மக்கள் பயணப்பட்டு விட்டார்கள். ஜீன்ஸ், ஷார்ட் டாப்ஸ் போடுவது நன்றாகவே இருக்கிறது; மக்களுக்கு வசதியும் அதிகம். financially quite good!! ஆனால் அடுத்த படி எது என்று நினைத்தால் கொஞ்சம் பயம் தான். சிங்கப்பூரில் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்!

ஆக, சூடிதார் நமது உடையாகவும் மாறி விட்டது. நல்லது. ஆனால் அடுத்த ஒரு கெட்ட பழக்கமும் குடியேறிவிட்டது.
பான் / பாக்கு/ ஜர்தா ... என்று பல பெயர்களில் வந்தது இந்தக் கெட்ட பழக்கம். இதனோடு சேர்ந்த இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்தே வந்து விட்டது. ஒரு சுவர்,  சுவரின் மூலை கிடைத்து விடக் கூடாது. அங்கெல்லாம் சிகப்பு வண்ணத்தில் துப்பி .... கடவுளே! ... காணவே கண்கூசும் அளவிற்கு அலங்கோலம். சுவர்கள் மட்டுமா கெட்டு நிற்கின்றன. நுரையீரலுமல்லவா ..! சமீபத்தில் வந்த ஒரு செய்தி: தமிழ்நாட்டில் பாக்கிற்கு அடிமையாகிப் பலருக்கு கான்சர் வந்துள்ளதாக அச்செய்தி சொன்னது.

அடுத்தப் பிரச்சனை பெரும் தலைவலி கொடுத்து விட்டது. இதற்குப் பதில் தேட இந்து மதம் என்றால் என்ன என்ற பெரும் கேள்வியையே அலச வேண்டியதாகிறது. சமீபத்தில் முர்ளி மனோகர் சொன்னது போல் இந்தியக் கிறித்துவர்கள் 'கிறிஸ்தி இந்துக்கள்' என்றும், இஸ்லாமியர்கள் 'அகமதிய இந்துக்கள்' என்றும் பெயரிடப்படும் நிலைமைக்கு வந்தாயிற்று. எது இந்து மதம்? யார் யாரெல்லாம் இந்துக்கள் என்ற அடிப்படைக் கேள்விக்குச் செல்லும்படி ஆகின்றது. ஏற்கெனவே என் ‘மதங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ( ////முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது...மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை. //இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். தங்கமணியின் பதிவில் இக்கருத்தையும் வைத்துள்ளேன். இந்தக் கருத்துக்காகத்தான் நான் காஞ்சையாவை மேற்கோளிட்டிருந்தேன்.//)  மீண்டும் அதே கருத்தை இங்கும் சொல்ல வேண்டியதுள்ளது. இதற்கு எதிர்க் கருத்தாக //Ekam Sat, viprah bahutha vadanthi என்ற உபனிட உண்மையை ஏற்ற அனைத்து மதமும் இந்து மதமே. அதை உணர மறுக்கும்...// என்ற விவாதமும் உண்டு.

ஆனால் ஆங்கிலேயர் நடத்திய மக்கள் கணக்கெடுப்பில் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த மத மக்களைத் தவிர ஏனையோர் அனைவருக்கும் ஒரே பெயராக ‘இந்து’ என்ற பெயர் வந்ததோ, ’இந்து’ என்ற சொல்லே இடத்தைக் குறிக்க வந்த சொல் என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்தாலும் விவாதங்கள் என்னவோ தொடர்கின்றன.  இன்னும் எங்கள் கிராமத்து பக்கங்களில் வாழ்வோருக்கு ’பெரிய தெய்வங்கள்’ பெரும் பொருட்டல்ல; குல தெய்வங்களும், முன்னோருமே (சிறு) தெய்வங்களாக உள்ளார்கள் என்பதே இன்னுமொரு சான்று.

கதை இப்படியிருக்க ஆரிய / பிராமண / வைதீக / புராண இந்து தெய்வங்கள் இன்று வேரூன்றி விட்டன. புத்த மதம், ஜைன மதங்களை உண்டு செரித்த பின் இப்போது மீதியிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்த மதங்களின் தாக்கத்தின் தொடராக பிள்ளையார் வந்து சேர்ந்து விட்டார். ஆதி கடவுள் என்ற பெயரில் நடுவில் இங்கு வந்தவரே பிள்ளையார். பிள்ளையார் வெறும் பிள்ளையாராக மட்டும் வந்திருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இப்போது பிள்ளையார் சதுர்த்தி என்ற விழா ஒன்று பெரும் பிரச்சனையாக வளர்ந்துள்ளது. ’எங்களது சாமியைக் கும்பிடுவது உனக்கேன் எறிகிறது?’ என்றும் ஒரு இந்து கேட்கலாம். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பிள்ளையார் சதுர்த்தி இப்போதும் பரிணாமம் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தக் கேள்விக்குப் பிரச்சனையில்லை. ஆனால் விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு பிரச்சனை எதற்கு என்பதுவே இப்போதைய கேள்வி. வட இந்தியர் வளர்த்து விட்ட பிள்ளையார் இன்று தென்னாட்டிலும் வீங்கி மதத் தீவரவாதத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டார்.

பல ‘குரு பூஜைகள்’ .. சில கலவரங்கள், குத்து, வெட்டு. இதோடு இப்போது பிள்ளையார் சதுர்த்தி ஆட்டங்கள். சாமியும் சாதியும் நம் தலையெழுத்துகள். யார் தான் அவைகளை அழித்து, திருத்தி எழுதிவிட முடியும் ??

இதோடு இன்னொரு கேள்வி: வடக்குக் கலாச்சாரம் இங்கே தென்னக மக்களிடம் ஊடுற முடிகிறது. வந்தோரை வாழவைக்கும் தென்னகம்! ஆனால் நமது கலாச்சாரங்கள் அங்கே எதுவும் அப்படி  ஊடுற முடியவில்லையே. ஏன்?



*

16 comments:

குட்டிபிசாசு said...

அப்படியே இந்த ஹோலியை விட்டுவிட்டீர்களே. இப்ப இது நாம் ஊரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த பிள்ளையார் ஊர்வலம் எப்ப வந்து உள்ள நுழைந்தது என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை போவோர்கள், சபரிமலை போவோர்கள் எண்ணிக்கையும் இப்ப ஒரு இருபது வருடமாக அதிகம்.

//பான் / பாக்கு/ ஜர்தா ... என்று பல பெயர்களில் வந்தது இந்தக் கெட்ட பழக்கம். இதனோடு சேர்ந்த இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்தே வந்து விட்டது. ஒரு சுவர், சுவரின் மூலை கிடைத்து விடக் கூடாது. அங்கெல்லாம் சிகப்பு வண்ணத்தில் துப்பி .... கடவுளே! //
வடநாட்டில் உள்ள சில கல்லூரிகளில் வளாகத்திலேயே வெற்றிலை எச்சில் துப்புவதை பார்த்திருக்கிறேன்.

hariharan said...

ஆமா சார், புதுசா பண்டிகைகள் வருது! சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம், திருவிளக்கு பூஜை, இன்னும் எத்தனையோ சம்ஸ்கிருத பண்டிகைகள் வந்துவிட்டன, இப்போது ரெண்டு பெர்த்டே கொண்டாடுகிறார்கள்!

நட்சத்திரபிறந்த நாள் மற்றும் ஆங்கில காலண்டர் வழி பிறந்தநாள்.

Anonymous said...

ரக்ஷா பந்தன் என்ற பண்டிகையும் வடக்கிலிருந்து தான் வந்தது என்று நினைக்கிறேன். என் அலுவலகத்தில்,
வீட்டில் நன்கு அரிசி சாதம் சாப்பிடுகிற நம் தமிழர்களும் கூட, வட இந்தியர்களிடம் தன் மதிப்பை நிலை நிறுத்த சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருநாள் கூட அரிசி சாதத்தை மத்திய உணவாக கொண்டு வந்ததில்லை.

தருமி said...

//சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருநாள் கூட அரிசி சாதத்தை மத்திய உணவாக கொண்டு வந்ததில்லை. //

ஏன் .. ஏன் ... ஏன்ன்ன்???????

குட்டிபிசாசு said...

//அரிசி சாதம்//

…தல,

எதுக்கு இரண்டு வார்த்தை. சோறு என்று ஒரு வார்த்தையில் சொல்லலாமே.

Packirisamy N said...

//In 1893, Lokmanya Tilak transformed the annual domestic festival into a large, well-organized public event. Tilak recognized the wide appeal of the deity Ganesha as "the god for everybody" and popularized Ganesh Chaturthi as a national festival in order "to bridge the gap between Brahmins and 'non-Brahmins' and find a context in which to build a new grassroots unity between them", and generate nationalistic fervour among people in Maharashtra against the British colonial rule. Tilak was the first to install large public images of Ganesh in pavilions, and also established the practice of submerging in rivers, sea, or other pools of water all public images of the deity on the tenth day after Ganesh Chaturthi.//

தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத தலைவலி. அனைவருமே சிரமப்படப் போகிறோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறி கூறியே, நாம் வாழ வேண்டும் என்பதையே மறந்து விட்டோம். நமது அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் ஐயா.

டிபிஆர்.ஜோசப் said...

எங்கிருந்து வந்தாலும் நல்லதுன்னா ஏத்துக்கத்தான் வேணும். அதுல ஒன்னுதான் இந்த சூடிதார். சேலை பார்க்க அழகுதான்னாலும் சூடிதார்தான் சவுகரியம். பாக்கவும் அழகா இருக்கும். புழங்கவும் இதமா இருக்கும். என்னெ மாதிரி ஆண்கள் துணி துவைக்கும் வீடுகளில் இது துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் கூட எளிது!!!!!!!!!!!

அதனால என்னுடைய ஓட்டு சூடிதாருக்குத்தான்.

அப்புறம் இந்த ஆந்திர மாநில அனுபவம். நானும் இதை அனுபவித்திருக்கிறேன். மேலும் அவர்களுடைய உணவு முறைகளும் படு வித்தியாசமானவை. அதையெல்லாம் எழுத ஒரு தனி பதிவே போட வேண்டும் என்கிற அளவுக்கு கடுப்படிக்கும் அனுபவங்கள். சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன்....

தருமி said...

ஜோசப்,
//இது துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் கூட எளிது!!!!!!!!!!!//

ஆமாம் ... ஆனால் இரண்டாவது வேலை மட்டும் எனக்கு ....

Anonymous said...

//எதுக்கு இரண்டு வார்த்தை. சோறு என்று ஒரு வார்த்தையில் சொல்லலாமே.//
முதலில் சோறு என்று தான் எழுத வந்தேன் தல...பிறகு தான் யோசித்தேன், இது நம்ம சாருடைய வலைப்பதிவு. கொஞ்சம் மரியாதையாக எழுதுவோம் என்று மாற்றிவிட்டேன். எடுத்து காட்டியமைக்கு நன்றி. இனிமேல் மரியாதை எல்லாம் வேண்டாம். புழக்கத்தில் பயன்படுத்துகிற வார்த்தைகளையே உபயோகிக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

இப்படி ஓரே அடியா சொன்னா எப்படி? நம்ம அதாவது தென்னிந்திய கடவுளான பாலாஜி என்கிற திருப்பதி பெருமாள் வீடுகளிலும் கடைகளிலும் நீக்கமற நிறைந்து இருந்தார்கள் சூரத்தில். அப்படியே திருவண்ணாமலைக்கும், திருப்பதிக்கும் விசிட் செய்வது மிக அதிகம். இதில் திருவண்ணாமலை சமீபத்தில் ஆரம்பித்தது. மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் கும்பலில் பல மராட்டியர் அல்லது நம் மொழியில் இந்திக்காரகளும் இருந்ததை மும்பை ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன். "மேல் மருவத்தூரு அம்மா" என்று பரவசத்துடன் மெய்சிலிர்த்த கார் டிரைவர் ஒருவரை பெங்களூரில் பார்த்தேன். காரில் கன்னடத்தில் அம்மா புகழ் பாட்டு வேறு :-)
ஆறு ஏழு வருடத்திற்கு முன்பே இன்று சென்னையில் அங்கங்கு விற்கும் அரைத்த இட்லி/ தோசை மாவு அன்றே சூரத்தில் மிக பிரபலம். திருநெல்வேலி
அண்ணாச்சிகள் பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் பெரிய கிரைண்டரில் பிரஷ்ஷா அரைத்து தருவார்கள். பல குஜ்ஜூ வீடுகளில் காலை பலகாரம் "ஊத்தப்பம்"
இட்லி, தோசை, வடை, சட்னி, சாம்பார் காலை பிரேக்பாஸ்ட்க்கு அங்கத்திய ஸ்டார் ஹோட்டல்ல உண்டு.

வேகநரி said...

//அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட் போட்டு சென்றிருந்தேன்.//

தமிழ்மணத்திலே சமீபத்தில் செய்தி பார்த்தேன். தமிழக அரசு கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வந்து ஆண்கள் பேண்ட் சட்டையும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் மட்டுமே அணிய வேண்டுமென்று உத்தரவு. ஜீன்ஸ்,blouse,டி-ஷர்ட் போட்டு செல்ல தடை. நீங்க அனுபவிச்ச சுதந்திரம்கூட 2013 ல் கிடையாது :(

நண்பர் alien,
//வட இந்தியர்களிடம் தன் மதிப்பை நிலை நிறுத்த சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள்//
தன் மதிப்பை நிலை நிறுத்த தமிழர்களிடமே தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவது போலவா:)
அரிசி சாதத்தின் சுவையே தனி.

Gujaal said...

//அரிசி சாதத்தின் சுவையே தனி.//

கம்பஞ்சோறு, ராகிக்களி, வரகரிசிச்சோறு இவற்றை கீரை/கறிக்குழம்பு உடன் சாப்பிட்டுப் பார்க்கவும். நெல்லரிச்சோறு எல்லாம் எந்த மூலைக்கு?

Gujaal said...

//ஆதி கடவுள் என்ற பெயரில் நடுவில் இங்கு வந்தவரே பிள்ளையார். பிள்ளையார் வெறும் பிள்ளையாராக மட்டும் வந்திருந்தால் பிரச்சனையில்லை. //

மேற்கு இந்தியாவின் நிலை கொண்டிருந்த பிள்ளையார் வழிபாடு தெற்கு நோக்கி நகர்ந்தது பல்லவர்கள் வாதாபியை வென்றதற்கு பின்னர்தான் என பதிவர் பைத்தியகாரன் வலைப்பதிவில் எங்கோ படித்த நினைவு. ஆனால் கிழக்கு மாநிலங்களிலோ, வடக்கிந்தியாவிலோ அவருக்கு பெரிய ஆதரவில்லை.

தருமி said...

//வடக்கிந்தியாவிலோ அவருக்கு பெரிய ஆதரவில்லை. //

என்ன குஜ்ஜால் இப்படி சொல்லி விட்டீர்கள்?

Gujaal said...

//என்ன குஜ்ஜால் இப்படி சொல்லி விட்டீர்கள்?//

பெரிய is the operative word here.

Post a Comment