Tuesday, March 25, 2014

735. இந்து மதம் எங்கே போகிறது? --- 7







***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

**********


*



 தெய்வம் யார்?

வேதம் கர்மாக்களை வகுத்தது. அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள் கர்மாக்களை தியாகம் செய்து விடுங்கள்; அது தான் மோட்சம் என்றன.

வேத, உபநிஷத்துக்காரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க, இதன் அடிப்படையில் ஆறு தத்துவக்காரர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். (296)

அந்த ஆறு பேர்: கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி

கனாதர் உபதேசித்தது – வைஷேஷிகம்.  அக்ஷபாதர் – நியாயம். நியாம் என்றால் தர்க்கம் பண்ணுவது; தர்க்கிகம் என்று பெயர் இதற்கு. கபிலர் – சாங்க்யம் செய்தார்.கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்பது தான் சாங்க்யம். (297) பதஞ்சலி – யோகம் என்ற தத்துவம் சொன்னார்.

வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினி பற்றியும் சிறிது விளக்கம்.

முனிவர்கள் தவம் செய்யும் போது காம்ய ஆசையை மறுத்து ஆசையை அடக்க வேண்டும். ஆனால் தவத்திற்கு இடையூறு வந்தால் முனிவர்கள் அப்பெண்களை நெருங்கி தங்களது காம ஆசையைத் தீர்த்துக் கொள்வார்கள். ஸ்தீரிகளும் மறுக்க முடியாத நிலையில் இருந்தனர்.

கங்கைக் கரையில் புராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருக்கும்போது ஒர் பெண்ணைப் பார்த்துக் காமுறுகிறார். யாரென்று கேட்கிறார். அவள் மச்சகந்தி என்ற சத்தியவதி; ஒரு செம்படவப் பெண்.(298)

ஆற்றைக் கடக்க முனிவர் அவளிடம் உதவி கேட்கிறார். கடக்கும் போது ஆசையைக் கடக்க முடியவில்லை; நெருக்கமாக அணைக்கிறார். ‘இது பஹவத் முகூர்த்தம். என்னோடு சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றுக் கொடு. யாருக்கும் இது தெரியப்போவதில்லை. நீ கன்னியாகவே இருப்பாய்’ என்கிறார்.

அவளது மேனியில் மீன் வாசம் போய் ஆண் வாசம் வந்தது.

’ரிஷி கர்ப்பம் ராத்தங்காது என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஒரு அவஸ்யத்துக்காக, தங்கள் ஞானத்தின் இன்னொரு பலனுக்காக அனுபவிக்கிறார்கள். (299)

ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகி விடுகிறது. அவன் மீனவப் பையன். அவனுக்கு சாஸ்த்ரம் சொல்லித் தரக்கூடாது என்கிறார்கள். ஆனால் அவனோ சாஸ்திரம் கற்றான்; சம்ப்ரதாயம் கற்றான். எல்லாம் கற்றான்

அப்பையன். வளர்ந்தான்; தாடி வளர்ந்தது; ரிஷியானான். வேதம் தொகுத்தான். 18 புராணங்களைத் தொகுத்தான். பிராமணர்களின் முது பெரும் நூலான ‘ப்ரம்ம சூத்திரம்’ எழுதினார். அவர் தான் வ்யாஸர் வேதவ்யாஸர்.

வ்யாஸர் வியாக்கியானம் என்ன? ‘நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason). ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர். தர்க்கங்களைத் தாண்டியவர். உலகத்தைக் கடவுள் தான் படைத்தார். அவரை அறிவு, காரணம், தர்க்கம் போன்றவற்றின் அடைப்படையில் அணுகாதீர்கள். கடவுள் காரணங்களைக் கடந்தவன் (God is above logic.)(301)

இந்த வ்யாஸருக்கு ஒரு சீடர். அவர் ஓர் இயற்கை வாதி – naturalist. அவர் தான் ஜெய்மினி. இவர் வ்யாஸரோடு நிகழ்த்திய விவாதங்கள் சுவாரஸ்யமானவை.

‘ஸ்வாமி, அவனை இங்கே கூட்டி வாருங்களேன்.’ என்றார் ஜெய்மினி.

‘யாரையப்பா?’

 ‘அவன் தான் உலகத்தையெல்லாம் ஒருத்தனே பொசுக்கென படைத்து முடித்து விட்டான் என்கிறீர்களே! … அந்தக் கடவுளைத்தான்’ என்றார் ஜெய்மினி.

 ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது’.

ஜெய்மினி சிரிக்கிறார். ‘அது எப்படி இருக்கும்?’

‘இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகை மூட்டமாக இருக்குமே … அது போல இருக்கும்.’

‘நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பரலோகம் உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரிந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் தெரிந்தவர்களைக் கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்’.

வ்யாஸர் பதிலின்றி மெளனித்த போது (302)… ஜெய்மினி சொன்னார்:

’கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகே 
அஸ்தீ வாரவேதீ …’ யஜூர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.

‘பரலோகம் யாருக்குத் தெரியும்? அதைப் பார்த்தவர்கள் யார்? இருந்தால் வரச்சொல். அது எப்படியிருக்கும்?’

வ்யாஸரோ … ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன் .. உடல் கொடுத்தவன்.’

ஜெய்மினி இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார். இந்த கொடிக்கும் பிராணன் உள்ளது; வளர்கிறது; அசைகிறது; பூக்கிறது; காய் கொடுக்கிறது; கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும் கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்குச சோறு. ’இப்போது இந்தக் கொடியை வாழ வைப்பது கடவுள் என்றால் … தண்ணீர் தான் கடவுளா? அல்லது கடவுள் தண்ணீர் தானா?” ’

’அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு. அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்?’ இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ. அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை. (303)

ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார்.

தம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால் கடவுளுக்கு என்ன அவஸ்யம்? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி.(ஆஹா! ...அழகு!)

வ்யாஸர் பிரம்ம சூத்திரம் என்ற நூலை இயற்றினார். அதற்கு ’உத்தர மீமாம்ஸா’ என்று பெயர். ராமானுஜர். சங்கரர் போன்றோர் இதற்கு உரையெழுதியுள்ளனர்.

ஆனால் ஜெய்மினி ‘பூர்வ மீமாம்ஸ’ என்ற சித்தாந்தத்தைக் கொடுத்தார். வ்யாஸரின் மீமாம்ஸத்தைத் தொட்டவர்கள் ஜெய்மினியின் மீமாம்ஸவைத் தொடவில்லை. ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் பலர் அன்று உண்டு.(304)

வ்யாஸர் பிறந்த கதை பார்த்தோம். இந்த வ்யாஸருக்குப் பிறந்தவர் எப்படி இருந்தார்? (305) ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அப்படியோர் பொழுதில் வ்யாஸரின் ரேதஸ் – உயிர்த் திரவியம் கீழே சிந்தி விட்டது. அதை ஒரு கிளி கொத்தித் தின்று விட்டது அல்லது அப்படி கிளியாக வந்த அழகியுடன் அவர் கூடினார் என்றும் கூறுவார்கள். . கர்ப்பமான கிளி ஒரு ‘குட்டி’ போட்டு விட்டது! தலையெல்லாம் கிளி போல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவனையாக அமைந்ததாம். சுகஹா என்றால் வட மொழியில் கிளி என்று பெயர். அதனால் அந்தக் கிளிப் பிள்ளைக்கு ’சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்வார்கள். (306)

வ்யாஸர் வேதங்களை பிரித்து வகைப்படுத்தி, உபநிஷத்துக்கு பிரம்ம சூத்திரம் பண்ணிய போதும், 18 புராணங்களை தொகுத்த போதும் திருப்தி இல்லை; ‘பாகவதம்’ என்ற மகா காவ்யத்தைப் படைத்தார். இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை. (307)

சுகர், பரீட்சித்து என்னும் ராஜாவிற்கு பாகவதத்தை உபதேசிக்கிறார். பரீட்சித்து ராஜா ஒரு வாரத்திற்குள் உபதேசம் பெற்றால் தான் அவன் மோட்சம் பெற முடியும். உபதேசம் பெற்று அவன் மோட்சம் பெற்றான்.

மோட்சம் பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே … மோட்சம் என்றால் என்ன? வைகுண்டம் என்றால் என்ன?

இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது. வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா? அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா? இங்கு போல் அங்கும் காம ஸுகத்தை அனுபவிக்கிறார்களா? மகப் பேறுகளைப் பெறுகிறார்களா? அங்கேயும் திருடர்கள் இருக்கிறார்களா? ஸ்ந்யாஸிகள் இருப்பார்களா? ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?

… இந்தக் கேள்விகளையெல்லாம் மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள்.

விரஜா என்றொரு நதி. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம். எங்கு பார்த்தாலும் ஆண்கள் பெண்கள் ரொம்ப சந்தோஷமாக கூடிக் கலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு மண்டபம் ஒன்று உள்ளதாம். அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம் தான். (309) அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அதிலே பாம்புப் படுக்கையில் பெருமாள் இருக்கிறார்.

அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸத்ரி லோகம், முதலியவற்றை படைத்துக் கொள்கிறான். அனுபவித்துக் கொள்கிறான். மோட்ச ஸ்வரூபம் என்ற தலைப்பில் சக்கரவர்த்தி ஆச்சார்யார் இதனை விளக்குகிறார். ‘இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது. ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது. எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள். அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை. அனைவருக்கும் சமமான போகம். இதைத் தான் ஸாயுஜ்யம் என்பர். எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படும்.

அவர்களுக்குள் ஏதும் வேற்றுமை ஏற்பட்டு விடாதா என்கிற ஐயம் சிலருக்கு வரலாம். இதற்குப் பதில் ; இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸூரிகள் (நித்யஸூரிகள் என்றால் … என்றென்றும் ஜீவித்து வைகுண்டத்தில் பகவானுக்கு கைங்கர்யம் செய்வார்கள்.) ஆண் பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும் எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை.

(அட … இஸ்லாமிய மறுமை மாதிரி இங்கேயும்!! சொல்லப்போனால் அங்கே இருப்பதை விட இங்கே ஜாதி, பால்வேறுபாடு எதுவும் இல்லையாமே! இஸ்லாமிய மறுமை மாதிரி ஆண்களுக்கு மட்டும் special treatment இங்கே இல்லையே! Good! Well done !!) (310)

ஒரு முத்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக் கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம். அல்லது மற்றொரு முத்தாத்மாவை உதவியாக வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம். இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால் அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே.(311)

கிருஷ்ணன் கோப ஸ்த்ரிகளுடன் ஏன் காமபோகத்தை அனுபவிக்க வேண்டும்?  ஸ்ரீரங்கநாதன் தனது ஆன்ந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என பராசுரபட்டர் ஸ்ரீகுணரத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். உன் அப்பாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். சரி... குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது. உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள். உன்னைப் பார்த்து சிரிப்பாள். நெருங்குவாள். அணைப்பாள். ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். அங்கே அது பேரின்பமாக மாறும். ( சுவன்ம் - modified here !!)

இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம். அங்கே பகவத் ஆனந்தம். இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல் அங்கேயும் ஜாலியாக சுற்றலாம். அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம். அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. (312)

இந்த உலகத்திற்கு போக வேண்டும் என்றால் எப்படி போவது? (இங்கும் போக ‘சுவனப் பிரியன்’ ஆகலாம் போலும்!!) இதற்குப் பல வித்யையைகள் ஓதப் பட்டிருக்கின்றன.

அதில் இருக்கும் one line – ஆத்மாவை அறிகிறவன் மோட்சம் பெறுகிறான்.

தேவர்களும், அசுரர்களும் மோட்சம் பெறுவது எப்படி என்று ப்ரஜாபதியிடம் கேட்கிறார்கள். அசுரர்கள் தேகத்தை தான் ஆத்மா என்று தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள். (313) இந்திரன் காத்திருந்து ஆத்மா என்ன என்பதைக் கண்டு பின் கடைசியில் மோட்சம் போனான்.

இந்த உலகத்தில் நல்லவனாக வாழ வேண்டும். வாழ்ந்தால் இதை விட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென காத்திருக்கிறது என ஆசை காட்டும் வேலைதான் மோட்சம்.( the same carrot and stick story - ஆப்ரஹாமிய மதங்களின் அதே கதை தான் இங்கும். !)(316)






*

No comments:

Post a Comment