Saturday, May 02, 2015

834. புளியாய்க் கரைந்த கணக்குப் புலி - (தருமி பக்கம் 27)


*

*

நான் இப்போது கூட arithmetic-ல் புலிதான். விழுக்காடு போடுவது, சின்னப் பெருக்கல் / வகுத்தல் /கூட்டல் போடுவது இன்னும் பிடிக்கும். கடைகளில் சின்னக் கணக்குகளுக்கும் கால்குலேட்டர் பயன்படுத்துவது பார்த்து எரிச்சல் கொள்ளும் அளவு கணக்கில் புலி தான். மனக்கணக்காகப் போட்டுப் பார்ப்பதும் பிடிக்கும். அட ... எந்த அளவு நான் கணக்கில் புலி என்றால் சைனாக்கார நண்பர் ஒருவர் நம் கணக்குத் திறமையைப் பார்த்து, ‘இதனால் தான் உங்கள் ஊர் ஆளுகள் software-ல் அம்புட்டு திறமையாக இருக்கிறார்கள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார்.

அது எப்போதுன்னா ....

பத்துப் பதினாலு வருஷத்துக்கு முன்னால் நூறே நூறு நாள் மட்டும் அமெரிக்கா போனோமா ... அப்போ ஒரு சைனாக்கார பேராசிரியர் ஒருவரோடு house mate-ஆக இருந்தேன். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி புத்தி. எந்தக் கடைக்குப் போனாலும் அங்கிருக்கும் சாமான்களின் விலையை நம்மூர் காசுக்கு கணக்குப் போட்டு பார்ப்போம். அப்போ நம்மூர் ரூபாய் 52க்கு ஒரு டாலர் என்று இருந்தது என்று நினைக்கிறேன். ஐம்பதால் பெருக்குவது தான் எளிதாயிற்றே... நான் உடனே இத்தனை டாலருக்கு நம்மூர் கணக்கில் எத்தனை ரூபாய் என்று கணக்குப் போட்டு விடுவேன். அவர் டாலருக்கு எட்டால் பெருக்க வேண்டியதிருக்கும். அவர் அதற்காக தன் orgnaizer எடுத்து calculator தேடி கணக்குப் போட வேண்டியதிருக்கும். ஆனால் நான் அவரோடு இருக்கும் போது என்னிடம் கேட்பார். எட்டாம் வாய்ப்பாடுதான் நமக்கு எளிதாயிற்றே ... கேட்டதும் சொல்லிவிடுவேன். எட்டெட்டு என்றால் டக்குன்னு 64 அப்டின்னு சொல்லிடுவோம். ஆனால் 18 x 8 என்றால்,  10 x 8 =80 + 8 x 8 = 64; இரண்டையும் சேர்த்தால்144 அப்டின்னு சொல்லிடுவோம்ல .. அது மாதிரி நான் அவருக்கு மனக்கணக்காக, அவர் calculator எடுப்பதற்குள் சொல்லி விடுவேன். எப்படின்னு கேட்டார். இந்த 18 x 8 கணக்கு சொன்னேன்; அவருக்குத் தலை சுற்றியது. என்னால முடியலைங்க என்றார். அப்போது தான் நமது கணக்கு வித்வத்தையை புகழ்ந்து சொல்லிட்டு, அப்படியே நம்ம software ஆளுகளின் புகழ் பாடினார்.

இப்படி arithmetic-ல் புலியாக இருந்த (இருக்கும்) எனக்கு mathamatics-தான் ஆகாமல் போச்சு.........

அந்தக் காலத்தில் உயர்பள்ளிகளில் 6 வருடங்கள். ஒவ்வொரு வகுப்பும் பார்ம் - Farm - என்று அழைக்கப்படும்.  V Farm வந்த உடன் வகுப்புகள் இருவகையாகப் பிரிக்கப்படும். அதுவும் கணக்கை மட்டும் வைத்தே பிரிக்கப்படும். கணக்குப் புலிகளுக்கு Composite Mathematics  என்றும், சாதா கேசுகளுக்கு  General Mathematics என்றும் இருக்கும். நாம் தான் IV Farm வரை கணக்குப் புலியா ... அதனால் அப்படியே Composite Mathematicsக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் இந்த குரூப்புக்கு கிராக்கி தான். 'A' Section boys நாங்க.

V Farm-ல் கணக்குக்கு யாகப்பன் என்று ஒரு இளம் ஆசிரியர் வந்தார். வயதான ஆசிரியர்கள் பெரும்பாலும் வேட்டி, கோட் என்று வருவார்கள். இவர் பேண்ட், கோட் என்று வருவார். ஒல்லியாக, உயரமாக இருப்பார். நான் முதலில் அவருக்கு வைத்த ‘பட்டப்பெயர்’ ஆப்ரஹாம் லிங்கன். தாடி மட்டும் வைத்தால் லிங்கன் மாதிரியே இருப்பார். புதிதாக வந்திருந்தாலும் என் அப்பாவிற்கு நண்பராக ஆகியிருந்தார். ஆக அவருக்கு நான் ரொம்பவும் ”வேண்டப்பட்டவனாக” ஆகி விட்டேன். ரொம்ப ஸ்பெஷலாக என்னைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போ கணக்கில் புதிதாக வந்த அல்ஜிப்ராவும், தேற்றங்களும் ராட்சசர்களாக மாறிப் போனார்கள். தேற்றங்கள் குட்டி  போட்டு அதற்கு 'ரைடர்' அப்டின்னு பேர் சொன்னாங்க. இந்த மூணு பிசாசுகளும் என்னை ரொம்பவே கொடுமைப் படித்திட்டாங்க. என்ன பிரச்சனை என்றால் எனக்கு மனப்பாட சக்தின்னு ஒண்ணு சொல்லுவாங்களே அது 0-க்கு ரொம்ப பக்கத்தில் தான் இருக்கும். அட
... உண்மையைச் சொல்லிர்ரேனே .... மனப்பாடசக்தி என்பதும் என்னிடம் அன்றும் இன்றும் கிஞ்சித்தும் இல்லை.

(a+b)2  இதை ஒப்பேத்திட்டேன்.  (a+b+c)2 இது கூட பரவாயில்லை .. தேத்திட்டேன். (a+b+c)3   இங்க உதைக்க ஆரம்பிச்சிது. அப்படியே மனப்பாடம் பண்ணணுமாமே .. உழுந்துட்டேன். எழுந்திருக்கவே முடியலை.

இதை விட்டா தியரம் / தேற்றம். இதுல ஒரு வார்த்தை கூட மாறக்கூடாதாம்; அப்படியே சொல்லணுமாம். நம்மளால முடியுமா அந்த வித்தையெல்லாம்நிறைய பார்முலாக்கள். அதெல்லாம் கொடுத்து மனப்பாடம் பண்ணணும்னாங்க. அதுக்கு நான் எங்க போறது. இந்த தியரங்களை வைத்து ‘ரைடர்’ போடணும்னாங்க. திணறிட்டேன்.

இதுல நம்ம யாகப்பன் வாத்தியார் நம்மட்ட ரொம்ப பிரியமாயிட்டார். என்ன ஆச்சுன்னா.... அப்பா சாரோட நண்பராயிட்டாரா ... அதுனால எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். முதல் பெஞ்சில் ஒரு ஓரத்தில உக்காந்திருப்பேன். பக்கத்தில வந்து நிப்பார்; நல்ல எலும்பா இருபாரா ... அவர் கையை மடக்கி, குட்டு வைக்கிறது மாதிரி தலைக்கு மேல வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். மனப்பாடப் பகுதின்னா என்ன ஆயிருக்கும்.ஒண்ணும் தெரிஞ்சிருக்காது ... நச்சுன்னு மண்டையில் ஒண்ணு விழும். கொஞ்ச நஞ்ச ஞாபகம் இருக்கிறதும் ஒண்ணுமில்லாமல் போகும். ஆக கணக்கில நம்ம ‘புலித் தன்மை’ வேகமாக மறைஞ்சி போக ஆரம்பித்தது. என்னடா .. போன வருஷம் வரை நல்லா கணக்கு போட்ட பயல் இந்த வருஷம் இப்படி ஆயிட்டானே .. ஏன்னு எங்க அப்பாவோ, யாகப்பன் சாரோ கொஞ்சம் யோசிச்சிருந்தா நிலமை மாறியிருக்கலாம். அதெல்லாம் இல்லை... நமக்கும் கணக்குக்கும் இருந்த ஒற்றுமை ஒன்றும் இல்லாமல் போச்சு ... ஒரே sliding தான்.

அப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன். இது வாழ்க்கையின் திசையையே முற்றிலும் மாற்றி வச்சிருச்சு. எப்படின்னு கேட்கிறீங்களா ... சொல்றேன் ... சொல்றேன்.

 *

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்வின் திசை மாறிவிட்டதா
அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் ஐயா
நன்றி
தம 1

சார்லஸ் said...

ஹலோ சார்

அந்தக் கால கணக்குப் பாடங்களில் தேற்றம் அதிகம் இருந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன். மனப்பாட சக்தி உள்ளவர்கள் மட்டுமே முழு மதிப்பெண் எடுக்க முடியும் என்பார்கள் . உங்கள் அனுபவம் அதை உறுதிப்படுத்துகிறது.

Dr B Jambulingam said...

பழைய நினைவுகளை நினைவுகூர்ந்த விதம் அருமை. இப்படி மாறிய பின் என்ன ஆயிற்று என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.
ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

குறும்பன் said...

:)

Post a Comment