Sunday, May 17, 2015

838. ஒரு கதை தான் .. வெறும் கற்பனைக் கதை தான் !










*




முதல் முதல்ல எழுதின சில புதினங்கள் மூலமாகவோ, வேறு சில நூல்கள் மூலமாகவோ சில புது ஆசிரியர்கள் பரிசு, புகழ், பட்டம் எல்லாம் வாங்குகிறார்களே அது எப்படி என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். எப்படி முதல் புத்தகத்தைப் பதிவிடுவது என்று கூட தெரியாமல் விழி பிதுங்கும் ஆளான நான், என்ன செய்தால் புத்தகத்தை ‘அடுத்த தளத்திற்கு’ எடுத்துப் போவது என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ‘சுற்றும் முற்றும்’ பார்த்தேன். நல்ல ஒரு ஏஜெண்ட் கிடைத்தால் இதெல்லாம் சாத்தியம் என்றார்கள்.

அப்படி ஒரு ஏஜெண்டைத் தேடிப் பிடித்தேன். என்னிடம் ஒரு புதிய நாவலுக்கான ஒரு விஷயம் இருக்கிறது; எழுதினால் பதிப்பிட்டு அதை ‘உயரத்தில்’ வைக்க உதவுவீர்களா என்று கேட்டேன். அவர் உங்கள் கதையின் ’எலும்புக் கூட்டை’ அதாவது the skeleton of the storyயை எழுதிக் கொடுங்கள்; முடியுமா என்று பார்க்கிறேன் என்றார். நானும் இரவும் பகலுமாக உட்கார்ந்து அந்தக் கதையின் படிவத்தை எழுதிக் கொடுத்தேன். நீங்களும் படித்துப் பார்த்து ‘தேறுமா’ என்று சொல்லுங்கள். Skeleton என்பதால் ‘சதை’ இல்லாமல், வெறுமனே முக்கிய பாத்திரங்கள், அவர்களுக்குள் நடைபெறும் சில நிகழ்வுகள் மட்டும் எழுதியுள்ளேன். ஏஜெண்ட் சரின்னு சொல்லிட்டார்னா மீதியை சரி பண்ணிடலாம்னு நினைக்கிறேன்.


 ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு பள்ளிக்கூடம். அதில பன்னிரண்டாவது படிக்கிற ’ஆஜே’ என்கிறவனுக்குக் கீழே இன்னும் இரு பசங்க. அதில் ஒருத்தன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பெயர் ’சுமாரா காமி’. ஆஜேக்கு பக்கத்துத் தெருவில இவன் இருந்தான். அதுனால ஆஜேவுக்கு நல்லா தெரியும். படிக்கும் போது தன் பழைய புத்தகங்களை இவனுக்குக் கொடுக்கிறது வழக்கம். இன்னொரு ஜூனியர் ஆறாவது படிக்கிறான். அவன் பெயர் ‘கான்கு’. இன்னொருவன் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் ஒரு ஊர் சுற்றி. அவன் பெயர் ’கல்மான் ராஜா’.

படிக்கிற காலத்தில் இவர்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. வளர்ந்ததும் ‘விதி’ அவர்களை ஒருத்தருக்கு ஒருத்தர் என்று, பல கால கட்டங்களில் நெருங்குகிறார்கள். இவர்கள் பள்ளியில் படிப்பதாக முதல் அத்தியாயம். அதை முடித்ததும் அடுத்த அத்தியாயத்தில் அவங்க எல்லாம் பெருசா ஆய்ட்டாங்க. ஆஜே வண்டியில ஊர் சுத்திக்கிட்டு சாமான் அது இதுன்னு பலது சேல்ஸ் பண்றார். சுமாரா காமியும், கான்குவும் போலீஸா ஆயிடுராங்க. அதுவும் சீனியர் இல்லையா அதுனால சுமாரா காமி இன்ஸ்பெக்டர் ஆயிர்ரார்; கான்கு இன்னும் சப் இன்ஸ்பெக்டர் தான். கல்மான் ராஜா இன்னும் ஊர் சுத்துறதை விடலை. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. நல்லா வளர்ந்துட்டான். திரும்புற இடமெல்லாம் ஒரே கெத்து தான். பாலோயர்களும் நிறைய இருக்காங்க அவனுக்கு. அப்பப்ப சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். இருந்தும் பாலோயர்கள் அதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை என்பது அவன் ராசி.

கல்மான் ராஜா ஒரு தடவை ரோட்ல போற ஒரு ஆட்டுக் குட்டியை தன் சைக்கிளில் அடிச்சித் தூக்கிட்டான். ஆளுக எல்லாம் ஓடி வந்துட்டாங்க. ‘சாமிக்குப் படைச்ச ஆடு; காசு கொடு’ன்னு விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னமோ ..அப்டி இப்டின்னான். அங்க இருந்து ஒரு போலீஸ் வந்தாரு. கல்மானுக்கு அவரை நம்ம சுமாரா காமி மூலமா கொஞ்சம் தெரியும். அவர வச்சிக்கிட்டு அந்தக் கூட்டத்திலிருந்து தப்பிச்சிட்டான். அவரை நல்லா கவனிச்சிக்கிட்டான். ஆனா அதுக்குப் பிறகு என்ன ஆச்சுன்னா …. இந்த தைரியத்தில அடுத்த வாரம் சும்மா டீக்கடையில் உக்காந்திட்டு இருந்த நாலஞ்சி பேரை பைக்கில போய் இடிச்சிட்டான். அதுல ஒருத்தரு அங்கேயே காலி. போலீஸ் கேசா ஆயிரிச்சி. காசுக்கு அவனுக்கு பஞ்சமா என்ன… காசு எல்லாம் கொடுத்து வெளிய வந்துட்டான்; அவன் பாலோயர்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். வேட்டு போட்டு கொண்டாடுனாங்க.

இங்க இப்படி ஒரு செய்தின்னா …. ஆஜேக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை. அது இதுன்னு வித்துக்கிட்டு இருக்கிற சேல்ஸ் மேன் இல்லியா? அதில முதல் ஏதும் இல்லாமலேயே ஒரு வியாபாரம் ஆரம்பிச்சி, அனியாயமா விலை போட்டு ஏதேதோ வித்து நிறைய காசு சேர்த்திருக்கான். வசதியா வந்துட்டான். ஆனாலும் அநியாய விலை போட்டு வியாபாரம் பண்ணிட்டான்னு அவன் மேல் கண்ணு வச்சாங்க. திடீர் வியாபாரம் …திடீர் பணம். ஒண்ணு கொடுத்தா ரெண்டு தர்ரேன்னு பிசினஸ் பண்ணுவாங்களே… அது மாதிரி. நல்ல சில்லறை.

ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி, சிலர் அவன் மேல் பிராதும் கொடுத்துட்டாங்க. கம்ப்ளெயிண்ட்டை எடுத்துட்டு போய் கான்கு விடம் கொடுத்துட்டாங்க. கான்கு நல்லா விசாரிச்சார். யார் யார் எவ்வளவு பணம் போட்டீங்க … என்ன ஆச்சு … ஏது ஆச்சுன்னு போட்டு நல்லா விசாரிச்சார். புதுசா வந்த சப் இன்ஸ்பெக்டர் வேறயா. நல்லபடியா இந்த கம்ப்ளெயிண்டை முடிக்கணும்னு நினச்சாரு. எல்லா கணக்கையும் போட்டுப் பார்த்தாரு. நல்லா அவருக்குத் தெரிஞ்சு போச்சு … இந்த ஆளு ஆஜே நல்லாவே ஆட்டை போட்டுருக்கான்னு. தப்பை சரி பண்ணனும்னு நினச்சார். ஆஜேயைக் கூப்பிட்டு ஒழுங்கு மரியாதையா எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை கையிலிருக்கிற காசைக் கொடுத்து செட்டில் பண்ணுன்னு சொல்லிட்டு, அதோடு லாக் அப்லயும் உக்கார வச்சிட்டார்.

அப்போ வந்தார் நம்ம சுமாரா காமி. சப் இன்ஸ்பெக்டருக்கு மேலே இருக்காரா இல்லியா ..? அந்த ஜபர்தஸ்ஸை காண்பிக்க வேண்டாமா? அதோட, அவருக்கும் ஆஜேயுக்கும் நடுவில என்ன நடந்துச்சோன்னு தெரியலை. அந்தக் காலத்து தொடர்பை இப்போதும் continue பண்ணிட்டாங்க போலும். கேசு சுமாரா காமிட்ட போனதும் என்ன ஆச்சுன்னு தெரியலை. என்ன கச முசாவோ தெரியலை. ஆனா ஒண்ணு நடந்தது. கான்கு ராவும் பகலும் உட்கார்ந்து எல்லாத்தையும் படிச்சுப் பார்த்து பைசல் பண்ணினாரே அதே கேசை நம்ம ஆளு சுமாரா காமி சட்டு புட்டுன்னு முடிச்சிட்டார்.

என்னத்த பார்த்தாரோ எதைப் பார்த்தாரோ தெரியலை…. புதுசா ஒரு ரிசல்ட்டோடு வந்தார். ’எல்லாம் பார்த்தேன் …அப்படி ஒண்ணும் விசேஷமா இல்லை … எல்லாம் ஒரு ’ஏழரை’ விஷயம் தான். ஆஜே பண்ணுன பிசினஸ்ல ஒரு ஏழரை விகிதாச்சாரம் மட்டும் கொஞ்சம் விலகியிருக்கு. பிசினஸ்னா அப்படி முன்ன பின்ன தான் இருக்கும். இதுக்குப் போய் அவருக்கு எதுக்கு லாக் அப் எல்லாம்’ அப்டின்னு சொல்லி ஆஜேயை லாக் அப்பில் இருந்து வெளியே விட்டுட்டார். அதோடு வெறும் ஏழரைக்கு ஏன் இம்புட்டு இழுப்புன்னு நினச்சி, கேசும் இதோடு முடிஞ்சதாகச் சொல்லி, ஒரேயடியாக ‘மங்களம்’ பாடிட்டார்.


கேஸ் கொடுத்தவங்களுக்கு என்னென்னே புரியலை. அதுவும் பெரிய போலீஸ்காரர்…. அவரே எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லிட்டார் அப்டின்னு சோகமாய்ட்டாங்க. அந்த சோகத்தில சுமாராகாமி பற்றி கொஞ்சம் கோபமா கூட பேசினாங்க. அதுக்குக் கூட பார்ல உக்காந்துக்கிட்ட இருக்கிற ஒரு குரூப் ஆச்சு .. பூச்சுன்னாங்க. ஒருத்தர் கோவமா பதில் சொன்னாரு அதுக்கு. பார்ல இருக்கிறவங்க அங்க அவங்களுக்கு என்ன வேலையோ அதைப் பார்க்கணும். அதை விட்டுட்டு இங்கல்லாம் வால ஆட்டப்படாதுன்னு நியாயமா சொன்னார். அப்படி உங்களுக்கு இப்போ கோபம் வருதே அதே மாதிரி முன்பு கான்கு பத்திப் பேசும் போதும் பொத்துக்கிட்டு வந்திச்சான்னு இன்னொரு நியாயமான கேள்வியையும் எடுத்து உட்டார்.


இனிமே என்னன்னு தெரியலை. சுமாராகாமி இன்ஸ்பெக்டர்லா … அதுனால அவரை விட பெரிய போலிஸ்காரங்க யார்ட்டயாவது போகலாம்னு சிலர் நினைக்கிறாங்க.

இதுக்குள்ள ஆஜே பழைய பிசினஸ் எல்லாத்தையும் ஆரம்பிக்கப் போறதா சொல்றாங்க. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை. பொறுத்திருந்து பார்க்கணும்.


*****

இது தான் நம்ம கதை. ஏஜண்டிடம் கொடுக்கணும். ஏதாவது பரிசு கிடைக்குமான்னு பார்க்கணும்.


நீங்க சொல்லுங்க … இந்தக் கதை தேறுமா ….?





 *

8 comments:

G.M Balasubramaniam said...

இந்தக் கதை ஏஜெண்டிடம் போய் பிரசுரமானால் நீங்கள் பெருமாள் சாமி ஆகிவிடுவீர். உஷார்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

கதை தேறும். நம்பலாம். ஆசிரியர் என்ற நிலையில் உங்களை தேற விடுவார்களா என்பது ஐயத்திற்குரியதே.

Tamil Indian said...

இந்தக் கதை தேறுமா ….?
Auto varum. :-)

சார்லஸ் said...

சார்

பூடகமாக எதையோ சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்துவிட்டது. கதை ரொம்ப நன்றாகவிருக்கிறது. பெரிய நாவலாக எழுதலாம். கதையின் முடிவும் எனக்கு இப்போது தெரிந்துவிட்டது. சுமாரா காமிக்கு மேலே இருக்கும் உயர் அதிகாரிகளையும் ஆஜே சரி செய்து விடுவார். நடந்த தவறின் எந்த சுவடும் தெரியாதவாறு ஆஜே தன் பிசினஸை தொடருவார் . ஒரு வருடத்தில் அவரிடம் பணம் போட்ட மானங்கெட்ட பொது ஜனங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மறுபடியும் பணம் கட்டுவார்கள் . எப்படி ....முடிவு சரிதானா?

விசு said...

முதலில் இது ஒரு எலும்பு கூண்டு இல்லை.. முழு உயிர் பெற்ற வடிவம். ரெண்டாவது ... அந்த ஆளுபெயர் ... கல்மான் ...நான் கேள்விபட்டது என்னமோ அவர் பெயர் Killமான் . மூன்றாவது ... இதை எந்த ஏஜென்ட்டும் எடுப்பார என்று சந்தேகம் ...இதன் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வரும் போல் இருகின்றது... சுமாரா காமி.... சூப்பர்... அப்புறம் அந்த பள்ளிகூட தலை ஆசிரியர் குப்புனுவர காமி ... அவர் பெயர் எங்கேயும் காணோமே...?

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் கதை!

தருமி said...

BROOMBOY writes ....

Broomboy has left a new comment on your post "838. ஒரு கதை தான் .. வெறும் கற்பனைக் கதை தான் !":

என்னது கதை தேறுமாவா? சூப்பர் ஒரிஜினல் கதை இது.... இன்னும் பத்து வருசத்தில முனிரத்தன் என்ற மிக பெரிய டைரக்டர் "நால்வர்" படம் எடுக்க கூட சான்ஸ் உள்ளது.... உடனே கதைய register பண்ணிருங்க...

தருமி said...

sorry broomboy...for unwillingly and accidentally deleting your comment

Post a Comment