Saturday, January 28, 2017

923. I AM SO…. FORTUNATE








*




  73 years. 

Have seen two great events in my life. 

 1965 Hindi agitation – politics of TN changed so totally with the impact persisting even today. 

2017 Jallikattu agitation – will it be a harbinger for the days to come? 

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றிய என் பழைய பதிவுகள்; 

ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் ஓர் இரவு. பத்து மணியிலிருந்து புதிய தலைமுறையின் ‘நேர்படப் பேசு’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டே இரண்டு அரசியல் வியாதிகள் மட்டும் இருந்தார்கள். இருவரையும் மீனை தரையில் வைத்து உரசுவார்களே அதே மாதிரி உரச வேண்டும் என்று தோன்றியது. விடுங்கள் அவர்களை. இவர்கள் போக கூட்டத்தில் ஒருவர்… பெயர் தெரியவில்லை. கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்! மிகவும் தெளிவாகப் பேசினார். ஒவ்வொரு பேச்சிலும் உண்மையும் ஆளுமையும் இருந்தது.


 அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் நான் எவ்வளவு lucky என்பது எனக்குள் நிழலாடியது. இன்னும் பத்து வருஷம் நான் முந்திப் பிறந்திருந்தால் ஒருவேளை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு எதுவும்கூட நினைவில் வந்திருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. முக்கியமான இரு வரலாற்று நிகழ்வுகளை ஆயுட் காலத்தில் பார்த்தாயிற்று.


 மகிழ்ச்சி …

1965 - இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் நல்ல விளைவுகளை இன்னும் அறுவடை செய்து கொண்டு வருகிறோம். தமிழ்நாடு தனித்து நிற்கும் பெருமைக்கு அது தான் அடிகோலியது. ஆட்சி மாறியது. மாணவரின் பலம் என்ன என்று இன்றும் நாட்டுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது. இந்தியை எதிர்த்ததற்கு இன்றும் நமது மக்கள் பலர் பிரலாபித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நேரத்தில் போட்ட ஒரு தடையால் இன்றும் அந்த மொழி நம்மை ஆட்சி செய்வதிலிருந்து தப்பித்தோம்.


 அன்று அந்தப் போராட்டம் எங்கிருந்தோ காற்றிலிருந்து வரவில்லை; மேகத்திலிருந்து விழவில்லை. தி.மு.க. அடியெடுத்துக் கொடுத்தது. திராவிட அரசுகள் மேல் குறையாத “அன்பு” கொண்டோர் நம்மிடம் அதிகம் உண்டு. அவர்கள் என் வாழ்வையே இந்தி எதிர்ப்பு கோணலாக்கி விட்டது என்று கதறுபவர்களும் இன்னும் உண்டு. இவர்கள் இந்தி படிக்காததால் அம்மொழி பரிதவித்துப் போனது என்றும், இந்தி படித்திருந்தால் தங்கள் வாழ்க்கை இமயத்தின் உச்சியில் கொடி நாட்டியிருக்கும் என்றெல்லாம் பேசும் அறிஞர்கள் பலரும் உண்டு. எப்படியோ… அன்று மாணவர்கள் எழுச்சி இந்த மொழிவாரி நாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.


மாணவர் எழுச்சியே அதற்கான பெரும் காரணம். அக்காரணம் எப்படி படிப்படியாக தமிழ்நாட்டில் வளர்ந்தது என்பதையும், தி.மு.க. மட்டுமே அதற்கான முழுக்காரணமுமில்லை என்பதைப் பற்றி மாலன் என் பழைய பதிவில்  ஒரு பின்னூட்டம் மூலமாக எழுதியுள்ளதை இங்கு மேற்கோளிடுகிறேன்:

 இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் 1965க்கும் முன்னரே இருந்து வந்ததுண்டு. மறைமலை அடிகள், திரு.வி.க ( இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றியவர்) போன்றோர் அதில் முனைப்புக் காட்டினார்கள். இவர்கள் அன்றைய சமூகத்தில் மரியாதையைப் பெற்றவர்கள். ஆனாலும் அப்போது இந்தி எதிர்ப்பு 1965ல் இருந்ததைப் போன்ற மக்கள் இயக்கமாக இருக்கவில்லை.ஏன்? ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டதுதான் 1965 கிளர்ச்சிக்கு ஒரு வேகம் கொடுத்தது.

எந்த மனிதனையும் அரசியல் அதிகாரத்தின் மூலம் அடிமையாக்கிவிட முடியாது என்ற ஆதார உண்மைதான் 1965 கிளர்ச்சியின் அடிப்படை.


இன்றும் அதே அரசியல் தத்துவம் உண்மையாகி விட்டது. முரட்டு அதிகாரமும், கண்மூடித்தனமான கோட்பாடுகளும் இளைஞர் மனதில் போராட்ட உணர்வை ஊட்டி விடும் என்பது மீண்டும் நம் முன் புலனாகி விட்டது. எப்படி ஒரு எழுச்சி!  ஒரு வேளை இந்தி எதிர்ப்பின் நீட்சியாகக் கூட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அதனால் தான் அரசியல்வாதிகளை இம்முறை ஒதுக்கி வைத்து விட்டார்கள் போலும். அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் வெற்றுக் காய்களாக இருக்க மறுத்து விட்டார்கள்.


எப்படி கூடினார்கள் .. எப்படி ஒன்றிணைந்தார்கள் என்று எல்லாமே அதிசயம். சாதியில்லை … மதமில்லை … பாலின பேதம் இல்லை… அட.. வயசு வித்தியாசமுமில்லை. அப்பாவும், அம்மாவும் பிள்ளையும் என்று எல்லோருமாக ஒன்று கூடி விட்டார்கள். ஒரே குடும்பம், கூடிய கூட்டத்தினுள் எப்படி இத்தனை ஒழுங்கும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், சுத்தமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டன. காவலுக்கு நின்ற காக்கிச் சட்டைகளையே நண்பர்களாக்கிக் கொண்டார்களே!


 இந்த நிகழ்ச்சிகளைக் கண்முன்னே கண்டதே ஒரு பெரும் பேறு. முதல் இந்தித் திணிப்பு போராட்டத்திலும் அதிக ஆச்சரியத்தோடு போராட்டத்தின் முன்னணியிலிருந்தோரை ‘ஆவென’ வாய் பிளந்து ரசித்தேன். இன்றும் அதே நிலைதான். சிட்டுக் குருவிக் கூட்டம் போல் அழகாக ஊருக்கு ஊர் அமைந்த இந்தக் கூட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. அன்றாவது கூட்டத்தில் ஒருவனாக கோஷம் போட்டுச் சென்றேன். இன்று எட்டத்தில் நின்று படம் மட்டும் எடுத்து வந்தேன்.


 இப்போராட்டத்தில் எல்லாம் செவ்வனே சென்று கொண்டிருந்தது. ஆனால் முடிவு தான் முற்றிலும் தவறாகப் போய் விட்டது. இப்போது எல்லாம் முடிந்த பிறகு இவர்கள் அவர்களையும், அவர்கள் இவர்களையும் பழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


என்னைப் பொறுத்தவரை வந்த ஒரு பெரும் சந்தேகம். இன்னும் எதிர்காலத்தில் பல சமூக, அரசியல் பிரச்சனைகள் தலையெடுக்கும் போது இப்போது போல் இளைஞர்கள் மீண்டும் தலையெடுப்பார்களா? ஒன்று கூடி தேரிழுப்பார்களா? அல்லது, இந்த முயற்சியின் இறுதியில் நடந்த முட்டாள் தனமான, வெறித் தனமான விஷயங்கள் அவர்களது எதிர்கால முயற்சிகளை முற்றுமாகத் தடை செய்து விடுமா?

 நடந்த போராட்டத்தின் முடிவினால் தங்களுக்கு இருந்த சில மரியாதைகளையும் காவல் துறையினர் இழந்தார்கள். ஏனிந்த வெறி என்றே புரியவில்லை. எத்தனை எத்தனை வெறியாட்டங்கள்.

 பாவம் … ஒரு பாவப்பட்ட பெண்மணி தன் வீட்டின் முன்னால் நிற்கிறாள். ஓடி வந்த காவலன் ஒருவன் அவளை அடித்து , அவள் கையிலிருந்த ப்ளாஸ்டிக் குடத்தைத் தெருவில் அடித்து உடைத்துப் போகிறான். வெறி ……

யாரைத்தேடி வந்தார்களோ… நாலைந்து காவலர்கள். ஆண்கள் யாரும் அங்கில்லை. இருந்த பெண்களை – அதிலும் வயதில் மிக மூத்த பெண்களை அடித்துத் தள்ளி அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்துப் போகிறார்கள். ஏதோ ஒரு வெறி … ஒரு மன வியாதி.

அதை விட வீட்டுக்கு விளக்கேற்றி வைப்பாள் பெண் என்பார்கள். ஒரு பெண் காவலாளி வேலை மெனக்கெட்டு தூரத்திலிருந்து நெருப்பெடுத்து வந்து ஒரு ஓட்டை வீட்டை ‘விளக்கேற்றி’ எரித்தாள் அந்த நவயுகக் கண்ணகி. 

சாலையில் நின்று கொண்டிருந்த வண்டிகளை அடித்து நொறுக்குவதில் பெயர் வாங்கி விட்டார்கள் நம் தமிழ் போலீஸ்காரர்கள். என்னே அவர்களது திறமை.

ஒதுங்கி நின்ற ஆட்டோவைத் தீ வைத்து எரித்த அவர்களது சாணக்கியத் தனத்தை எப்படி, எத்தனை காலத்துக்கு நாம் போற்றிப் பாடிக்கொண்டிருக்க வேண்டுமோ தெரியவில்லை.

 காவல் துறையின் கேவலமான ஆட்ட பாட்டங்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். எளிதில் மறக்கவும் கூடாது.

போராட்டத்தின் முடிவால் இன்னொருவருக்கும் பெரும் இழப்பு என்றே நினைக்கின்றேன். ஆயாவின் காலில் விழுந்து தன் தன்மானத்தை முழுவதுமாக இழந்து நின்ற தமிழ்நாட்டின் சீப் மினிஸ்டர் ஓ.பி.எஸ். இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விரைவாக தில்லி சென்று ஏதேதோ செய்து அவசரச் சட்டம்… சட்டத் திருத்தம் என்றெல்லாம் கொண்டு வந்தபோது போராட்டக்காரர்களை நேருக்கு நேரோ, மறைமுகமாகவோ சந்தித்து போராட்டத்தை நல்ல முறையில் முடித்து வைப்பார் என்று நினைத்திருந்தேன். அதற்குரிய வழிகள் திறந்தேயிருந்தன. ரம்மி ஆட்டத்தில் எல்லாம் சேர்ந்த பின் ‘டிக்’ அடிக்க வேண்டுமே … அந்த நிலையில் அவர் இருந்ததாக நினைத்தேன். கையில் அத்தனை நல்ல ஜோக்கர்கள் இருந்தார்கள்! அழகாக ‘டிக்’ அடித்திருக்கலாம். உட்டுட்டார் ... பாவம்!!


அப்படி ஏதும் உண்மையில் நடந்திருந்தால் அரசியலில் அவரது நிலை நன்கு காலுன்றி நின்றிருக்கும். அதற்கு மேல் மன்னார்குடி மாபியா அவரைத் தொட அஞ்சியிருக்கும்; மக்கள் மனதிலும் அவர் உயர்ந்திருப்பார். முதலமைச்சர் பதவி நன்கு கைவசமாக வந்திருக்கும்.

ஆனால் …

யாரோ ஒரு பத்திரிகைக்காரர் கேட்டதற்கு அவசரமாக அலங்காநல்லூரில் வாடிவாசலைத் திறந்து வைப்பேன் என்று சொல்லியதே அவரை ஒரு அவசரக்குடுக்கை என்று நினைக்க வைத்தது.


அடுத்து நாள் அலங்காநல்லூர் என்று எடுத்த அவசர முடிவை போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல … எல்லோருக்குமே பொருந்தாத ஒரு முடிவு. அமைச்சரின் முடிவு நிராகரிக்கப்பட்டது.


அதனால் அவருக்கெழுந்த கோபத்தினால் தான் காவல் துறையை மக்கள் மீது ஏவி விட்டு விட்டார் என்றும் ஒரு கருத்து பரவலாக உண்டு.


 உண்மை எதுவோ… வெற்றியின் வாசலைத் தொட்ட முதலமைச்சர் கொடுத்த ஆணையோ… அல்லது வேறு எந்த காரணமோ … காவல் துறையின் வெறியாட்டத்தால் அமைச்சரின் மீது கனிந்த நல்ல கருத்துகள் நாசமாகி விட்டன. மக்கள் மனதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நல்ல இடம் பறி போனது.


 ரம்மியில் ’டிக்’ அடிப்பதற்குப் பதில் wrong tick அடித்து விட்டார் … பாவம்! 

*
a "heroic" action of police


https://youtu.be/mSnUBMVz2Dw

 *

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

1938 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஐயா
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு அமைப்பின் வழியாக தீர்மானம் நிறைவேற்றித் துவக்கி வைத்த பெருமை
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே சாரும்.
அதன் பின் அதனை மக்கள் முன் கொண்டு சென்ற பெருமை பெரியாரைச் சாரும்.

ஆட்சியாளர்களின் உத்தரவு இல்லாமல் காவல் துறை வெறியாட்டம் ஆடியிருக்க வாய்ப்பே இல்லை ஐயா
---உண்மை எதுவோ… வெற்றியின் வாசலைத் தொட்ட முதலமைச்சர் கொடுத்த ஆணையோ… அல்லது வேறு எந்த காரணமோ … காவல் துறையின் வெறியாட்டத்தால் அமைச்சரின் மீது கனிந்த நல்ல கருத்துகள் நாசமாகி விட்டன. மக்கள் மனதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நல்ல இடம் பறி போனது.---
உண்மைஐயா உண்மை

இராய செல்லப்பா said...

பன்னீர் அவர்களின் வெற்றியைக் காண சகிக்காத அவரின் எதிர்ப்பாளர்கள் செய்த சதியே, மெரீனாப் புரட்சியின் இறுதிநாளில் நடைபெற்ற காவல்துறையின் வன்முறை என்று சென்னையில் பேசிக்கொள்கிறார்கள். - இராய செல்லப்பா நியூ ஜெர்சி.

Unknown said...

//கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்!
என்னங்க சொல்ல வர்றீங்க? "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‍"-ங்கறத பகடி பண்றீங்கன்னு எடுத்துக்கறேன். :)

- இன்னொரு கருப்பன்.

தருமி said...

எடுத்துக்குங்க ...........

Unknown said...

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் ஆரம்பித்து, தமிழ்நாடெங்கும் மாணவர்களின் உணர்வு பூர்வமான பங்களிப்புடன், உயிர்பலி உட்பட பலவித தியாகங்களுக்கிடையே, இறுதியில் வெற்றி பெற்றது என்பது உண்மைதான். ஆனால், இன்று, மோடியின் தலைமையில் இருக்கும் பா.ஜ. க. நடுவண் அரசு, இந்தியை, நாட்டின் ஒரே மொழியாக கொண்டுவரவேண்டுமென்ற குறிக்கோளுடன், அதை, kநேரடியாகவும், மறை முகமாகவும் பலவழிகளில், பல துறைகளில்திணித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதை பற்றி நமது அரசோ,கட்சிகளோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் ஒரே நிர்வாகம் என்ற போர்வையில் மத்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் செயல்பாடுகளின் பயந்கர பின் விளைவுகளை உணர்ந்து தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய காலமிது. இளைஞர்கள்- குறிப்பாக மாணவர்கள்- இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

Post a Comment