Friday, December 13, 2019

1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2




*


 முந்திய பதிவு:

ஒரு கிழவனின் புலம்பல் ...1



///மனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்; நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும், உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட கலப்படம் செய்யும் அளவிற்கு மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள் ... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள்.  மணல் வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்!) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன!” என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் பாயக்கூடாது” என்றதொரு  பெரும் தத்துவம் நமக்கு.//

கிழவர்களின் புலம்பல்கள் நிற்காது. அது ஒரு நீள் தொடர் கதை தான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன ...?

தேர்தல் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும் போது என் அச்சங்களைப் பட்டியலிட்டிருந்தேன். அச்சங்கள் நிஜமாக பூதாகரமாக  படையெடுத்து வருகின்றது. அதில் முக்கியமாக ஒன்று சொல்லி அச்சப்பட்டிருந்தேன். //அதுவும் அவருக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. //  ... என்று எழுதியிருந்தேன். சுற்றியுள்ள நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியரல்லாதார் மேல் கரிசனத்தைக் கொட்டிக் கவிழ்த்த மோடி - அமித் ஷா கம்பெனிக்கு ஏன் இலங்கை மறந்து போய் விட்டது, அதிலிருந்து வந்த தமிழர்கள் காலங்காலமாக எவ்வித உரிமைகளும் இல்லாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு மறந்து போனது? பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் திபெத்திய “அகதிகளுக்காக” ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பெரிய tourist center ஆக உள்ளது. பெரிய புத்தர் கோவிலகள் .. குரு மடங்கள் .. எல்லாவற்றையும் விட விவசாயம் செய்ய பெரும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. அகதிகள் முதலாளிகளாக ஆகி நம்மூர் ஆட்களை வேலைக்கமர்த்தி விவசாயம் செய்கிறார்கள். பல கேள்விகள் எழுந்தன. இப்பதிவில் அவைகளைப் பார்க்கலாம்.

ஹைதராபாத்தில் நடந்த கற்பழிப்புக் கொலைக்கு நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டதும் எங்கிருந்து தான் வந்தார்களோ .. இந்த “செயல்பாட்டாளர்கள்” தங்கள் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வந்து விட்டார்கள். பொள்ளாச்சியில் நால்வர் பெண்கள் விஷயத்திற்காக கைதானது, அவர்கள் மேல் வழக்கு விரைந்து நடக்காமல் தூங்கிப் போனது பற்றியெல்லாம் தெரியாமல் இவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் இன்னும் விழிக்கவில்லை. இப்போது விழித்து பல கேள்விகள் எழுப்பி தங்கள் அறிவுத் திறனைக் கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு நல்ல கேள்வி -- சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரும் ஏழை பாழைகள். சுட்டு விட்டார்கள். பொள்ளாச்சி போல் பணமும் அரசியல் பலமும் இருந்திருந்தால் இப்படி காவல் படை ஒரு என் கவுண்டர் நடத்தியிருக்குமா?  நிச்சயமாக நடந்திருக்காது. கேள்வி கேட்பார் இல்லாதவர்கள் என்பதால் சட்டென்று சுட்டு விட்டார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த கற்பழிப்புக் குற்றங்களில் நமது காவல் படைக்கு எப்போதுமே அளவுக்கதிகமான பொறுமை உண்டு. நிச்சயமாக பல கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் ஏழைகள் தான். அவர்கள் வழக்குப் பதிவு செய்யப் போனால் காவல் துறை பொதுவாக அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவும், வழக்கப் பதியாமல் இழுத்தடிப்பதும் வழக்கமாகத் தொடர்ந்து செய்கின்றார்கள். உனானே கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கதையும் அவளின் தந்தை கதியும் எல்லோருக்கும் தெரியும். ஏழைகளாக இருந்தால் பாவம் அவர்கள். அதுவும் ஏழையான தலித் பெண்கள் இன்னும் அதிகமான இளக்காரம் இருப்பது எல்லோரும் அறிந்ததே. 

கற்பழிப்பு வழக்குகளில் முதல் குற்றவாளிகளாக இருக்க வேண்டியவர்கள் வழக்கைப் பதிய காலங்கடத்தும், அல்லது பதியாமலே இருக்கும் காவல் துறை தான்.

முதல் தவறு காவல் துறை என்றால் கடைசித் தவறைச் செய்பவர்கள் நம் “மதிப்பிற்கு அருகதையில்லாத” நீதிபதிகள். எப்படித்தான் இவர்களால் வழக்குகளை இந்த அளவு இழுத்தடிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதில் நம் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மிகுந்த திறமைசாலிகள் தான். வழக்கு நடக்கும் .. நடக்கும் .. நடந்து கொண்டே இருக்கும். அதன்பின் சாட்சியங்கள் பற்றவில்லை / காவல் துறை சரியான் முறையில் வழக்குப் பதியவில்லை / தவறு செய்தவன் பாவம் .. ரொம்ப சின்னப் பையன்.. அவனை விட்டுருவோம் .. என்றெல்லாம் சொல்லும் நீதியரசர்கள். 

காசுக்காரன் மேல் குற்றம் பதிவிட்டிருந்தால் இந்த அளவிற்குக் கூட வராது. அடுத்து இன்னொரு “திருவிளையாடல்” இருக்கும். தண்டனை கொடுத்த பின்னும் பல ஆண்டுகள் அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். அடுத்து கருணை மனு வரும். முடியாதென்பார்கள். அதன் பின்னும் அது தொடரும் பல காலத்திற்கு. கட்சிக்காரர்கள் என்றால் அவர்களை யாராவது செத்துப் போன ஒரு பெரிய மனுசன் பேரைச் சொல்லி கொலையாளிகளை வெளியே அவிழ்த்து விட்டு விடுவார்கள். இந்த “செயல்பாட்டாளர்கள்” தருமபுரிக் கொலைகாரர்களை விடுதலை செய்ததற்கு என்ன ...தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் செய்தவர்கள் காசு பணம் இருப்பவர்களாக இருந்திருந்தால் என் கவுண்டர் நடந்திருக்காது தான். ஆனாலும் நம்மூர் சினிமா போலீஸ்காரர்கள் வில்லனை நேரடியாகத் தண்டிப்பார்கள். ஏனெனில் வழக்கு என்று கோர்ட் படியேறினால் என்னாகும் என்பது யாரும் அறிந்த உண்மை. இந்த காவல் அதிகாரி சஜனார் அது போல் தான். ஆதுவும் இதை அவர் இரண்டாவது முறையாகச் செய்துள்ளார், குற்றப் பதிவு செய்யவே தயங்கும் காவல் துறையில் இப்படி ஒரு அதிகாரி. என் சல்யூட் அவருக்கு. 

“செயல்பாட்டாளர்கள்” காவல் துறை தண்டிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுப்பது தவறு என்று சொல்வதில் தவறில்லைதான், ஆனால் இந்த சஜனார் என் மதிப்புக்குரியவர். பொள்ளாச்சியில் அவர் பதவியில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கனவு கண்டு கொண்டுதானிருக்கிறேன். செயலற்ற காவலர்கள், செயல் முறையற்ற நீதிமன்றங்கள் இருக்கும் போது இப்படி ஓரிரு சஜனார்கள் இருப்பது மகிழ்ச்சியே.

  • இதைக் குற்றம் சொல்லும் “செயல்பாட்டாளர்கள்” பொள்ளாச்சி வழக்கைத் தங்கள் கண்ணாடிகளை கழற்றித் துடைத்து நியாயம் விரைவில் கிடைக்க விரைந்தால் மகிழ்ச்சி.
  • அதே “செயல்பாட்டாளர்கள்” தரும்புரி வழக்கில் விடுதலையானவர்களைக் கண்டு கொள்ளட்டும்.
  • இன்னும் கல்வித் துறை “செயல்பாட்டாளர்கள்” .. மூன்றாம், எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
  • பல மாநில அரசுகள் மத்திய அரசின் பணிகளில் தங்கள் மாநிலத்திற்கென்று இத்தனை விழுக்காடு என்று வரையறை வைத்திருப்பது போல் நம் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.


அதென்னவோ தெரியவில்லை. இந்த மூன்றாம், எட்டாம் வகுப்புத் தேர்வுகள், இந்தி ஆதிக்கம், எங்கும் எதிலும் இந்திப் பெயர்கள் (தேஜஸ் ரயில்  .. அப்டின்னா? இனி கம்பர் விரைவு ரயில்.. பாண்டியன் / [பல்லவன் ரயில் போன்ற பெயர்களைப் பார்க்கவே இனி முடியாதோ??(, நீட் தேர்வுகள், அதில் நடக்கும் பித்தலாட்டங்கள்.. காது கம்மலை கழற்றி வைத்து தேர்வு எழுதப் போ என்கிறார்கள்.. ஆனால் நம் ’தெரமசாலிகள்’ ஆளையே மாற்றி விடுகிறார்கள்!), குடியுரிமைச் சட்டத்தில் காணாமல் போன secularism .. இப்படியே பட்டியலிட்டால் நீளமாகப் போய் விடும். 

இவைகளைப் பற்றி ஓரளவாவது தமிழ் நாட்டில் பேசுகிறோம். ஏன் ஏனைய மாநிலங்கள் மெளனமாக இறுகி நிற்கின்றன. இந்தித் திணிப்பைப் பற்றி தென் மாநிலங்கள் ஏதும் மூச்சு விடுவது கூட கிடையாதே .. இது ஏன்? எப்படி? இப்படியே தான் எல்லாம் இருக்குமோ .. இதெல்லாம் ஒரு கிழவனின் புலம்பலில் மட்டும் தான் இருக்குமா? தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் ஏதும் செய்யாது சுரணையற்று தான் இருக்குமோ?  எப்படியோ என்ன காரணமோ .. ஜல்லிக்கட்டுவிற்கு ஒரு கூட்டம் எப்படியோ சேர்ந்தது. அவ்வளவு தான். இனி எல்லாம் தனிப் பகல் கனவுதானா?????









 *

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்திலுமே அரசியல் உள்ளதே ஐயா. உட்டோபியன் உலகு என நாம் நினைத்துக்கொண்டால்தான் உண்டு. இவையெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

srinivasan Nattarasan said...

மீண்டும் மெரினா கூட்டம் சேரும்.மனம் தளரவேண்டாம். நீங்கள் விக்கிரமாதித்தன் ஐயா!

வேகநரி said...

இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் பிரசுரிக்கபடும் படங்களில் பெரும்பாலவை, ரயிலில், பஸ்சில் தெருக்களிலும் ஜன கூட்டம் பிதுங்கிவழிந்து கூரையிலும் பயணிப்பது. உண்மை தான் இந்தியா ஜனதொகை பெருக்கத்தால் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது. ஜனதொகை பெருக்கத்தை கடவுள் இந்தியாவுக்கு தந்த ஒரு கொடை என்று பெருமைபடும் பக்தர்களும் உள்ளனர். இந்த நிலைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ்சில் இருந்து வரும் இஸ்லாமியரல்லாத மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது கொண்டாடபட வேண்டிய ஒரு விஷயம் அல்ல. அப்படியிருக்க தமிழக அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்று கொள்வதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ்சில் இருந்து வரும் இஸ்லாமியர்களளோடு மியான்மர் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இது உணர்வுபூர்வமாக இருப்பதற்காக அரசியல் லாபம் கருதி இலங்கை தமிழர்களையும் சேர்த்துள்ளார்கள்.

//ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் செய்தவர்கள் காசு பணம் இருப்பவர்களாக இருந்திருந்தால் என் கவுண்டர் நடந்திருக்காது தான். //
அதே தான் உண்மை. என் கவுண்டர் என்கின்ற இந்திய போலீஸ் படுகொலை திட்டம் ஏற்படுத்தபட்டதும் சஜனார் செய்வதும் அதே தான்.

//தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் ஏதும் செய்யாது சுரணையற்று தான் இருக்குமோ?  எப்படியோ என்ன காரணமோ .. ஜல்லிக்கட்டுவிற்கு ஒரு கூட்டம் எப்படியோ சேர்ந்தது.//
இப்போது கூட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ், மியான்மர் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.
மாட்டோடு சண்டை போட்டு ஜெயிக்கும் விளையாட்டுக்கு தடை என்று ஒன்று வந்தாலும் போராட வருவார்கள்.

Post a Comment