Friday, April 03, 2020

1090. CORONA QUARANTINE




*


I AM SO LUCKY …!
சும்மா சொல்லக்கூடாது நல்லூழ் விரட்டி விரட்டி என்னை மகிழ்விக்கின்றது! வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று சொன்னாலும் சொன்னார்கள் .. எங்களை எங்கள் சுற்றத்தார் அனைவரும் அந்த அளவு கவனித்துக் கொள்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் வந்து எங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரர்களை எங்களின் guardian angels என்று சொல்வதுண்டு. அவர்களிடம் கனிவு இருக்கும் .. அவ்வப்போது கண்டிப்பும் இருக்கும். நேத்து வச்ச முட்டைகுழம்பு .. சும்மா சொல்லக்கூடாது. அப்படி ஒரு டேஸ்ட். குவாரண்டைனில் இப்படி சாப்பாடு போட்டால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. விடுங்கள் … அவர்கள் எப்போதும் அப்படித்தான்

நேற்று மெயின் தெருவில் கார்ப்பரேஷன் காய்கறி வண்டி வந்தது. முக்கு வீட்டுக்காரர் இரண்டாம் வீட்டுக்கு போங்க .. அவரை வெளியே வர விட வேண்டாம். காயகறிகளை வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று வண்டி ஓட்டுனருக்கு ஆர்டர் போட்டார். நல்ல ட்ரைவர்,. அவரும் என்னை வீட்டைவிட்டு வெளியே வர விடவில்லை. வீட்டுக்கே இல்லை .. இல்லை .. வாசலுக்கே வந்து விட்டது காய்கறி.

பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடைக்காரர். தவறாமல் காலையில் பாலை வீட்டில் வந்து கொடுத்து விடுகிறார் . வேண்டிய சாமான்களுக்குப் பட்டியல் கொடுத்தால் 10 மணிக்கு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார். இதில் ஒரு விசேஷம். முதல் இரண்டு நாள் காலை ஏழரை மணிக்கெல்லாம் என்னை எழுப்பி பால் கொடுத்துக் கொண்டிருந்தார் . அவருக்குத் தெரிந்துவிட்டது கிழடு காலையில் நன்றாக தூங்குவார் என்று. அதற்குப் பிறகு ஒரு பையை வாசல் கதவில் தொங்க விடுங்கள் என்றார். பையைத் தொங்கப் போட்டு விட்டேன். காலங்காத்தால பாலும் வந்துவிடுகிறது ... காலைத் தூக்கமும் கலையவில்லை. நம்மைப் புரிந்து வசதி செய்த பலசரக்கு கடைகாரத் தம்பிக்கு நன்றிகள். காசு கொடுத்து சில்லறை வாங்கி… என்றெல்லாம் எங்களிடம் கிடையாது.

இன்னொரு பக்கத்து வீட்டுக்காரம்மா. தடைச் சட்டம் வந்த முதல் நாளே சொல்லிவிட்டார்கள். உங்களுக்கு வேலைக்காரம்மா வர மாட்டார்கள், நானே உங்களுக்கு மாவு அரைத்துக் கொடுத்து விடுகிறேன். நாலைந்து நாட்கள் வரும். அதை வைத்து சமாளித்துக் கொள்ளுங்கள் என்று வீட்டுகார அம்மாவிடம் சொல்லி விட்டுப் போய்விட்டார்கள். அதேபோல் அவர் கொடுத்த மாவு நேற்றுடன் முடிந்தது . நேற்றிரவே புதிய மாவு வந்து சேர்ந்துவிட்டது. அந்த மாவை கொண்டு வருவது, அதை வழித்து வைப்பது எல்லாமே அந்த அம்மாதான். கேட்டால் அப்பா அம்மாவுக்கு செய்கிறோம் என்கிறார்கள்.

எதிர் வீட்டுக்காரர்கள் இன்று காலையில் காய்கறி வாங்கப் போனவர்கள் எங்களுக்கும் சேர்த்து காய்கறிகள் பழங்கள் - முக்கியமாக பழங்கள் - தாங்களாகவே வாங்கி வந்துவிட்டார்கள்.

திடீரென்று வங்கி செல்ல வேண்டுமே .. செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது மண்டைக்குள் ஒரு மணி அடித்தது. அடுத்த தெருவில் இருக்கும் நண்பரை வரச்சொன்னேன். அவர் ரசீது என்று தேவையான அனைத்தையும் கொண்டு வந்த அவரிடம் காசோலை கொடுத்து வங்கியில் போடக் கொடுத்துவிட்டேன். போட்டு் விட்டு அத்தாட்சித் தாளையும் தந்து விட்டு, கொஞ்சூண்டு அரசியல் பேசி விட்டுப் போனார். நான் வீட்டுக் கதவின் உள்ளே .. அவர் வாசலுக்கு வெளியே. என் வங்கிப் பிரச்சனையும் முடிந்தது.

கொஞ்சம் தூரத்தில் இருக்கும் இரண்டு நண்பர்கள் முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொலைபேசியில் என்ன ஏது என்று கேட்டுக்கொள்வார்கள். இப்பொழுது அனேகமாக காலையில் முதலில் வரும் போன்கள் அவர்களுடையதாகத் தான் இருக்கும். மாலையில் ஒரு முறை அழைப்பு வந்து விடும். மருந்து வேண்டும் என்று சொன்ன அடுத்த நாள் காலையில் வீட்டில் டெலிவரி. அவ்வப்போது சில ஆலோசனைகள் கொடுப்பதும் வாங்குவதும் நடக்கும்

அப்பாடா... வடிவேலு சொல்வது போல் இந்த க்வாரண்டைனில் அக்கடா என்று படுத்தி இருக்கலாம் போல இருக்கிறது. அன்பு காட்டி அணைத்துச் செல்லும் மக்களுக்கு நன்றி சொல்வது எனக்கு சரியாகப்படவில்லை.

அன்புக்குப் பதில் அன்பு மட்டும்தான்..










*







2 comments:

கோமதி அரசு said...

அன்புக்குப் பதில் அன்பு மட்டும்தான்..
சரியாக சொன்னீர்கள்.
அன்புக்கு அன்பு அதுதான் சரி.

அன்பு காட்டும் அன்பு உள்ளங்களுக்கு அன்பு.
வாழ்க வளமுடன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவரவர் தம்மை சுயமதிப்பீடு செய்யக்கூட இது ஓர் ஏற்ற தருணமாக அமைந்துவிட்டது ஐயா.

Post a Comment