Sunday, June 14, 2020

1101- யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 5



ஏனைய பதிவுகள் ….



தொடர்ச்சி ... 










மோசேயின் சட்டங்கள் மூன்று  பிரிவுகள் ஆகும்.

1. உடன்படிக்கை சட்டங்கள் (Covenant Codes )-  சிவில் சட்டங்கள் - இன்றைய நமது ஐபிசி (IPC - Indian Penal Code) சட்டங்கள் மாதிரி.
2. குருத்துவ சட்டங்கள் (Priestly Codes)
3.  இணையச் சட்டங்கள் (Deuteronomy ) -  சமூக அல்லது புதுச் சட்டங்கள்.

 இஸ்ரேலிய சமூகத்திற்குக் கொடுப்பதற்காக கடவுளே அச்சட்டங்களைத்  தம்மிடம் வழங்கியதாக மோசே கூறினார்

 இன்னொரு சம்பிரதாயமும் மிக முக்கியமானது. அது விருத்தசேதனம். (37) ஏன் இப்போது இந்த விருத்தசேதனம் கிருத்துவ மதத்தில் இல்லை என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.  அதற்கான பதில் இந்த நூலில் பின்வரும் பக்கங்களில் கிடைத்தது.

 உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை (தீர்க்கதரிசி) அவர்களுடைய சகோதரர்களிடமிருந்து நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். ( உபாகமம் இணைச்சட்டம் 18;18)

 இது யோசுவா குறித்து எழுதப்பட்ட வசனம் ஆனால் அது இயேசுவை குறித்து எழுதப்பட்டதாக புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கூறிக் கொள்வர். (அப்போஸ்தலர் நடபடிக்கைகள் - திருத்தூதர் பணிகள் 3:21,22)

 புற ஜாதியிடமிருந்து கைப்பற்றிய நாடுகளை லேவி ஜாதியினரைத் தவிர ஏனைய இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். லேவியருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் இஸ்ரேல் கடவுளுக்குக் குருக்களாக இருந்து பணியாற்றும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.( இந்த லேவியருக்குத்தான்காணிக்கை கொடுக்க வேண்டும் என்று ப.ஏற்பாட்டில் வலிந்து வலிந்து சொல்லப்படும். அட ..  நம் வரலாற்றில் அய்யர்கள் ராஜ குருக்களாக இருந்ததாகச் சொல்வார்கள். தட்சணைகள், பரிகாரங்கள் எல்லாம் அவர்களுக்குத் தானே!  History repeats - sadly!!  புரியுதா?) (38)

 போரில் வென்று ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்த இப்தா நேர்த்திக் கடனாக தனது ஒரே மகளை எரிபலியாக எரித்து விட்டார்.  இஸ்ரேலியர்களின் கடவுளுக்கு நரபலி  என்றால் மிகவும் விருப்பமான ஒன்று!

 இயேசுவே கூட கடவுள் நம் பாவங்களுக்குக் கழுவாயாக அமையுமாறு நரபலியாகச் செலுத்தினார் என்று பைபிள் அறிவிக்கிறது.

ஆசிரியர் இதில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.  ஆபிரகாம் ஈசாக்கை கடவுளுக்கு பலியிடப் போனார் அடுத்து இப்தா தன் மகளைக் கடவுளுக்குப் பலியாக்கினார்.  இந்த இரண்டிலும் பலி செலுத்த முயன்றவர்; பலிப் பொருள்; பலியைப் பெற்ற கடவுள் என்ற மூவரும் இருந்தார்கள். ஆனால்  மூன்றாவது சம்பவத்தில் கடவுள் இயேசுவை பலியாகச் செலுத்தினார். பலி செலுத்தியவர் ஆண்டவர்; இயேசு  பலிப் பொருள்.  பலியைப் பெற்றுக் கொண்டவர் யார்?  இந்த கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்.(39)

அடுத்து கிறித்துவத்தில் அதிகமாகப் புகழப்படும் தாவீது, அவரது மகன் சாலமன் பிறந்த பிறப்பை பற்றி -  அது ஒரு கேடுகெட்ட, அவலட்சணமான கதை -  ஆசிரியர் கூறுகிறார். தாவீது  தனது படை வீரன் உரியாவைக் கொன்று, அவன்  மனைவி பத்சேபா மூலம் இரண்டாவது கர்ப்பத்தின் மூலம்  ஒரு மகனைப்  பெற்றெடுக்கிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1.3  )  அவன்தான் அதிபுத்திசாலி சாலமன். 

(ஏற்கனவே என் பழைய பதிவு ஒன்றில் ஆபிரஹாம் கதையை சுட்டிக் காண்பித்து எப்படி பெற்றோர்கள், அதுவும் பைபிள் தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆப்ரஹாம் என்ற பெயரை வைக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். அதோடு இப்பொழுது தாவீது, சாலமன் என்ற இருவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இருவருமே கீழ்த்தரமான மக்கள்.  ஆனால் வேத புத்தகம் சொல்வதால் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் இது வேடிக்கையா வேதனையை தெரியவில்லை!  ஆனால் நிச்சயமாக புரிந்தவர்களுக்கு இது வேதனையாகத்தான் இருக்க வேண்டும்.) (40)

வேதம் என்ன சொல்கிறது என்றால், “ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால் அந்த விபச்சாரனும் அந்த விபச்சாரியும் கொலை செய்யப்படக் கடவர்கள்”. (லேவி 20;10 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)

தாவீதின் இச்செயல் கடவுளின் பார்வையில் தீயதாகப் பட்டது. (2 சாமுவேல் 11:27) ஆனால் இதே தாவீது மிகவும் நல்லவர் என்றும் கடவுளின் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே அவர் செய்தார் என்றும் பைபிள் பாராட்டுகிறது. ஆனால்  கடவுள் தவறு செய்த  ஏரோபவாம் என்பவரைக் கண்டிக்கும் போது தாவீதைப் புகழ்ந்து பேசுகிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 14:8) (41) 

தாவீதின் மகனும், நீதிமானாவனாகவும் கருதப்படும் சாலமன்  இதோடு விட்டு விட்டாரா என்ன? கடவுள் புறஜாதியார் பெண்களை இஸ்ரேலியர் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்(உபாகமம் - இணைச்சட்டம் 7:3).  ஆனால் சாலமனோ ஆயிரம் புறஜாதிப் பெண்களை தன் மனைவியாக வைத்திருந்தார்.  அதில் 700 மனைவிகள்; 300 பேர் வைப்பாட்டிகள்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1-3) 

எஸ்ரா காலத்தில் ஆளுக்கு ஒன்று என வெறும் நூத்தி எட்டு பேர் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்திருந்தனர். அதற்காக கோபம் கொண்ட கடவுள், “ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை”,  என்று தன் பிள்ளைகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியையும் மீறி (யோசுவா 1:5 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)  அவர்களைக் கைவிட்டுவிட்டு எருசலேம் ஆலயத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ஒரே மனிதர் ஆயிரம் பிற ஜாதிப் பெண்களை வைத்திருந்த மனிதனாகிய சாலமன் மன்னர் கட்டிய கோயிலில் தான் முதன்முதலில் குடியேறினார்! (42)

நெபுகத்நெசரின் படையெடுப்பும் யூதர்களின் வீழ்ச்சியும்:
,
 கிமு 586ல் நெபுகத்நெசர் என்ற புறஜாதி மன்னன் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்றான். சாலமன் கட்டிய ஆலயத்தையும் சேதப்படுத்தினர். இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கடவுளின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஏதேனும் காரணம் கூறலாம் என்று இறைவாக்கினர்கள் முயற்சி செய்து தடுமாறியது கீழே உள்ள வாசகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
( ஏரேமியா - 25:6-9;  51:34;  51 36,37
எஸ்றா 9: 11-15
எசக்கியேல் 9:3;  10: 4-5; 18 , 19
எசாயா 52:8; 
சக்ரியா 8:3 (பக்கம் 46)
இந்த படையெடுப்பினால்  இஸ்ரேலிய யூதர்கள் பல நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள் இவர்களைத்தான் “ காணாமல் போன ஆடுகள்” என்று புதிய ஏற்பாடு அழைக்கிறது.  எருசலேம் ஆலயம் சேதமானது; பாபிலோன் மன்னனுக்கு மக்கள் அடிமையாக்கப்உ பட்டனர்.

இறைவாக்கினர் எனப்பட்ட தீர்க்கதரிசிகள்: 
தாவீது மன்னனால் கட்டியெழுப்பப்பட்ட இஸ்ரேலியப் பேரரசு தம் கண் முன்னே புறஜாதியாரிடம் விழுந்து கிடப்பதைக் காண இறைவாக்கினருக்குச் சகிக்கவில்லை. (ஆமோஸ் 9:11)
கிபி 49ல்  கூடிய எருசலேம் சங்கத்தில் இச் சூழ்நிலைகளிலிருந்து மீள்வதற்குப் ”பவுல் குழுவினர்” உதவக்கூடும் என எதிர்பார்த்து தான் இயேசுவின் சகோதரரான யாக்கோபு பவுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்.(48) 

இஸ்ரேலிய யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த போது தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த புற ஜாதியர்களுடைய மதம் சார்ந்த கொள்கைகளின் சிறப்புகளைக் கண்டனர் அவற்றின் மேன்மையைப் புரிந்து கொண்டு அக்கொள்கைகளை தம் மதத்தின் புதிய கொள்கைகளாகப் பதிவு செய்தனர். (51)

அப்படி வந்த புதிய மாற்றங்கள்:

1.     மீட்பர் என்னும் மெசியாவாகிய இரட்சகர் கொள்கை  -   இது கிரேக்க மதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. (வழி, வாய்மை, வாழ்வு -  யோவான் நற்செய்தி நூல் விளக்கம்.  ஆசிரியர் ஞான.  ராபின்சன்;  பக்கம் 21)
2.         2. மெசியா ஒரு விடுதலை வீரரே தவிர அவரைக் கடவுள் என பழைய ஏற்பாடு         அறிவிக்கவில்லை.
3.     ஞானஸ்நானம் -  கிரேக்க மதம்
4.      இரண்டாம் வருகை -  பாரசீக மித்ராயிச  மதம்
5.      உயிர்த்தெழுதல் -  பாரசீக ஜொராஷ்ட்ரிய மதம்
6.      மறுவாழ்வு -               ,,              ,,                 ,,
7.     கன்னிப் பிறப்பு -         ,,              ,,                 ,,
8.     நியாயத்தீர்ப்பு -  எகிப்திய மதம். (கி.ர. அனுமந்தன், பண்டைக்கால நாகரிகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்)

மேற்கொண்ட மாற்றங்கள் எவையும் கிமு 586ல்  நிகழ்ந்த பாபிலோனிய படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு நூல்களில் இல்லை. 













Monday, June 08, 2020

1100. கருப்பு துரை ...





*

  ஆயிரம் தாண்டிய எனது 1100 வது பதிவு.. 

*****


பயங்கர சிரிப்புன்னா வாயை நல்லா திறந்து சிரிக்கணும்; அதாவது உதடுகள் இரண்டு இஞ்சாவது விரியணும். சத்தம் வேறு வரணும்.

சிரிப்புன்னு சொன்னா உதடுகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மொத்தத்தில ஒரு இஞ்ச் அதாவது இரண்டரை  செ.மீ. உதடுகள் இழுக்கப்படணும்;

புன்னகைன்னா அரை இஞ்ச் அதாவது ஒரு செ.மீ.க்கு கொஞ்சூண்டு கூட உதடுகள் விரியணும்.

மெல்லிய புன்னைகைன்னா அரை செ.மீ, தான் கணக்கு.
ஆனா இந்தப் படம் பார்க்கும் போது அரை செ.மீக்குக் குறைவாக உதடுகள் இருக்கிறமாதிரி மிக மெல்ல்ல்லிய புன்னகையோடு படம் முழுவதையும் - கடைசி பத்துப் பதினைந்து நிமிடங்கள் தவிர்த்து - பார்க்க வேண்டியதிருந்தது.

நல்ல படம் …
*****

ஈரானியப் படம் ஒன்று பார்த்தேன். Where Is My Friend's Home? வீட்டுக் கணக்கு நோட்டைத் தன்னுடன் படிக்கும் தோழனிடம் சேர்ப்பதற்காக சின்னப் பையன் ஒருவன் தன் தோழன் வீட்டைத் தேடி ஓடும் படம். அந்தப் படம் பார்க்கும் போது இது மாதிரி படங்கள் நம் ஊரில் எடுக்க மாட்டார்களா என்று ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இந்தப் படம் பார்த்ததும் அந்த மனக்குறையும் தீர்ந்தது.

நல்ல படம்.
*****

K.D. அல்லது கருப்பு துரை. ”தலைக்கு ஊத்திவிட” பிள்ளைகளும் உறவினர்களும் தயாராக, கோமாவில் இருந்த கருப்பு துரை நினைவுக்கு வந்து வீட்டை விட்டு ஓடிப் போனவருக்கு கோயிலில் துணை கிடைக்கிறது. துணை நண்பனாக, அமைச்சனாகி, அன்பால் பெரியவரை ஆட்டிப் படைக்கிறான் -- நம்மளையும் தான்.

இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது; பார்த்து மட்டுமே ரசிக்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு சீனும் நான் முன்பு சொன்னது போல் மெல்ல்லிய புன்னகையுடன் தான் பார்க்க முடியும். நான் படத்தை அதேபோன்று ஒரு மெல்ல்லிய புன்னகையோடு தான் பார்த்தேன்.

படம் முழுவது செடிகளின் பச்சை வண்ணம் நம்மோடு உடன் வரும். ஒரு வேளை அவர் வீட்டை முதலில் காண்பிக்கும் போது அப்பகுதியை ஒரு வறண்ட இடமாகக் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. இறுதியில் தாத்தா - பேரன் பஸ் ஸ்டாப்பை விட்டுப் போகும் போது பாதைகள் இரண்டாகப் பிரிகின்றன - அவர்களைப் போலவே. கடைசி சீனில் அவர் தப்பிப் போய் விட்டார் என்பதைக் காட்ட வீட்டிற்கு உள்ளிருந்து வெளிக்காட்சியைத் திறந்த கதவு வழியே காண்பித்ததும் நன்கிருந்தது. தாத்தாவின் ஒன்பது ஆசைகளையும் பேரன் நினைவேற்றி வைக்கிறான். என்ன .. மாசக் கணக்கில் கோமாவில் இருந்த மனிதனுக்கு ஊரைவிட்டு ஓடும் அளவிற்கு எப்படி அத்தனை உடல் நலம் கிடைத்தது என்பது மட்டும் ஒரு சின்னக் கேள்விக் குறியாக நின்றது. கருப்பு துரை வள்ளியைப் பார்ப்பதற்கு முன் தன்னைச் சீர்படுத்திக் கொள்வதும், வள்ளிப் பாட்டி மாட்டுச் சாணி வாடை கையிலிருந்த் போகுமளவிற்குக் கையை கழுவிக் கொண்டு தயாராக ஆவதும் .. நல்லதொரு காதல் கவிதை.

இயக்குநர் மதுமிதா. ஆனால் இயக்குநர் என்பது ”மதுமிதா & டீம்” என்று போட்டிருந்தது  அது அவரது பெருந்தன்மையைக் குறிக்கிறது. காட்சிக்குக் காட்சி நன்றாக இருந்தது. பாட்டு வரிகள் மனதைத் தொட்டன.


பார்த்து ரசிக்க வேண்டிய படம். பாருங்கள் …








*





Friday, May 29, 2020

1099. இடப் பங்கீட்டின் பரிதாப நிலை




*



இதெல்லாம் புரிஞ்சா தானே கோபம் வரும். இந்த OBC பசங்களுக்கு இது துப்புறவாகப் புரியவேயில்லை. இது வெறும் மாடு பிடிக்கும் சண்டையில்லை. அடி வயிற்றில் அடிக்கும் மரண அடி என்பது அவர்கள் மண்டையில் எப்போது ஏறுமோ!




இது ’ஆண்ட சாதி’க்கு மட்டும் வந்ததல்ல. அனைத்து சாதிக்கும் வச்ச ஆப்பு தான் இது. சும்மா சொல்லக் கூடாது ... நல்ல மூளைக்காரர்கள் .. எங்கு கன்னம் வைக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாமல், இழந்தது என்னவென்றே புரியாமல் இருக்கும் நம்
அத்தனை சாதியினருக்கும் வச்ச ஆப்பு இது.






முதலில் நாம் யாருன்னு இந்த OBC பசங்களுக்குத் தெரிந்தால் நல்லது. அதுவே தெரியாமல் இருக்கிறவங்களுக்கு இந்த மீம்ஸ் சொல்லும் முக்கியமான சேதி போய்ச் சேரவே சேராது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர்களாவது இதைச் சொல்லிக் கொடுக்கலாம். இது எவ்வளவு பெரிய விஷயம் என்று புரியாமால் இருப்பவர்களைப் பார்த்தால் என்னைப் போன்ற கிழவனுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? என் புலம்பலில் இது ஒரு வெகு முக்கியமான புலம்பல்……. வெகு நாட்களாகவே!





*



Sunday, May 24, 2020

1098. நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?






*

நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக்கூடாதா?

(தமிழ் இந்துவில் சமஸ் எழுதிய நடுப்பக்கக் கட்டுரை)


நாட்டிலேயே பெரிய கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கரோனா களேபரரங்கள் இடையே கலிபோர்னியாவை ”தேசிய அரசு” என்று அறிவித்தார். அரசு மாநிலங்களுக்கு மருத்துவ சாதனங்கள் அனுப்புவதில் காட்டிய மெத்தனத்தை சாடியவர் நேரடியாகவே வெளிநாடுகளில் இருந்து அவற்றை தடுக்க ஒப்பந்தங்களுக்கு உத்தரவிட்டார். அதற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக ஒரு மாநிலம் தன்னை தேசிய அரசாக அறிவித்து கொண்டால் அதை உள்நாட்டு போருக்கான அறிவிப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு அப்படி பார்க்கப்படவில்லை. மாநில மக்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சுதந்திரமாக விரைவாக எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டும் பிரகடனமாக சரியாகவே புரிந்து கொள்ளப்பட்டது.
மற்ற மாநிலங்களுக்கு எப்படியோ தமிழ் மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிகள் எதுவும் சரியாக கொடுக்கப்படவில்லை; மருத்துவ சாதனங்கள் ஒழுங்காக அளிக்கப்படவில்லை; இன்னும் பல இல்லை.. இல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளை எல்லாம் சரிக் கட்டுவதற்கு நாமும் பேசாமல் ஒரு தேசிய அரசு அறிவித்தால் என்ன?
தமிழ்நாடு தேசிய அரசு வாழ்க!!









Monday, May 18, 2020

1097. TRANCE கிளப்பி விட்ட தூசி





*

TRANCE கிளப்பி விட்ட தூசி 



 ஒரு வழியா TRANCE படத்தைப் பார்த்தாச்சு. துணிச்சலாக இப்படி ஒரு படம் எடுத்தமைக்கும், நன்றாக எடுத்திருப்பதற்காகவும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பழைய நினைவுகளும் அனுபவங்களும் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தொடர்ந்து வருகின்றன

. தூசி …1 

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். பக்கத்து வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. கௌசல்யா. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பெண் திடீரென நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையானாள். முதுகுத்தண்டில் வீக்கம் என்றார்கள். என் வீட்டில் நாங்கள் ஒருவேளை அவளுக்கு கேன்சராக இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் பின்னால் முற்றிலுமாக நடக்க முடியாமல் போனது . அப்போது ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் அவர் பெயர் எல்லாம் எனக்கு ஞாபகமில்லை.(ஒரு வேளை டி ஜி எஸ் தினகரனாக இருக்கலாம்.) அவரது கூட்டத்திற்கு இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள்.

நான் அன்று வீட்டுக்கு வந்த போது என் மனைவி பயங்கர சந்தோஷத்துடன் கௌசல்யா நடந்துவிட்டாள் என்றாள். எப்படி என்றேன். கூட்டத்திற்கு போயிருக்கிறாள். சுகம் இல்லாதவர்கள் நடக்க முடியாதவர்கள் நடந்து வாருங்கள் என்று சொன்னவுடன் மேடைக்குப் போட்டிருந்த பாலம் போன்ற அமைப்பில் 20.. 30 அடிக்கு மேல் நடந்து மேடைக்கு சென்று சாட்சியம் சொல்லி இருக்கிறாள் என்றார்கள், என்னால் நம்பவே முடியவில்லை அடுத்த நாள் காலை அடுத்த வீட்டில் அழுகை ஒலி கேட்டது. விரைந்து ஓடிப் போய் பார்த்தோம். அந்தப்பெண் கௌசல்யா ஆர்வத்தின் காரணமாக காலை நேரத்திலேயே எழுந்து நடக்க முயற்சித்திருக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சோகத்தில் அழத்தொடங்கினாள். அழுகை எல்லோரையும் பற்றிக்கொண்டது. விரைவில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.

இது எப்படி நடந்தது என்ற கேள்விக்குறி எனக்கு. அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை. மாஸ் ஹிப்னாடிஸம், அது .. இது .. என்று ஏதேதோ நினைத்துப் பார்த்தேன். அவ்வளவே.

 *****

 தூசி … 2

இரண்டாவது அனுபவம் என் சொந்த அனுபவம். 1990ல் முதல்முறையாக ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனை வாசம்முடிந்து மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்த நேரம். அப்போது நான் முழுமையான இறை மறுப்பாளனாக ஆகவில்லை; அந்தப் பாதையில் இருந்தேன். அவ்வளவே. கத்தோலிக்க மதத்தில் ஒரு பாதிரியார். அவர் பெயர் பெர்க்மான்ஸ். வேடிக்கை பார்ப்பதற்காக புறப்பட்ட ஒரு நண்பர் என்னையும் அழைத்துச் சென்றார். என்னால் அந்தக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை. அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் நிலைதடுமாறி இருந்தது போலவே தோன்றினார்கள். ஏறக்குறைய இந்த காட்சியை ஒரு பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு பெர்க்மான்ஸ் பேச ஆரம்பித்தார். மயிர்க்கூச்செறியும் என்பார்கள்… goosebumps என்பார்கள். அந்த உணர்வு எனக்கும் தோன்ற ஆரம்பித்தது . ஏனென்றால் பேச ஆரம்பித்த பெர்க்மான்ஸ் சாதாரண குரலில் பேச வில்லை. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன் சொல்வாரே நாபிக்கமலத்தில் இருந்து என்று … அதே போல் இவரும் குரல் எழுப்பி மெல்ல - சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பில்டப் கொடுத்து - கூட்டத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தார். அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்து அவருடைய குரல் மெல்லியதாக ஒடுங்கி ஆரம்பித்தது. Crescendo என்பார்களே அதைப் போல் குரல் மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த பிச்சிற்குப் போனது. என் மனதிற்கு அது பிடிக்கவில்லை. ஆனால் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. வயிற்றுக்குள் இல்லாமல் நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சிகள் படபடத்தன. ஏனிப்படி ஆனது என்று தெரியவில்லை . அந்த குரலில் ஏதோ வசியம் இருந்ததா? அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை.

 **** 

தூசி .. 3 

 எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு ஒன்று. இந்துக் கோவில் ஒன்றில் கர்ப்பகிரகத்தில் அர்ச்சகர் ஒருவர்… அவர் ஒரு பெண்ணோடு கொண்ட பாலியல் நிகழ்ச்சியை அவரே வீடியோ எடுத்து, அது வெளிவந்து அவர் மாட்டிக்கொண்டார் என்ற செய்தி எல்லோருக்குமே தெரியும். இவரைப் பற்றி ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் … கடைசியாக அதற்கு வருவோம்.

 **** 

தூசி … 4 

டி ஜி எஸ் தினகரன் என்று ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி. ஏறத்தாழ எல்லோரும் அவரைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு சிறு செய்தி. ஏறத்தாழ கிறிஸ்தவ பிரச்சாரத்தில் முதல்முதல் மிகவும் ஆழமாக காலூன்றிய மனிதர் இவர்தான் என்று நினைக்கிறேன். பேசினார்.. கூட்டம் சேர்த்தார் …. பணம் சேர்த்தார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் முடிந்தால் இந்த கட்டுரையை வாசித்த பிறகாவது யூடியூப் சென்று Dinakaran in heaven என்று போட்டுப் பாருங்கள். அவர் மோட்சத்திற்கு செல்வது போன்ற காணொளிகள் நிறைய இருக்கின்றன. Very very interesting. don't ever miss those videos. இவரைப் பற்றியும் பின்னால் பேசுவோம்.

 *************

 படம் பார்த்ததும் இதுபோன்ற நினைவுகள் அடுத்த எடுத்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே வெறியோடு இருந்த ஒரு இளைஞனை ஒரு கார்ப்பரேட் குழு அவனை ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி ஆக்கி பணத்தை அள்ளிக் கட்டுகிறார்கள். மேலும் மேலும் செல்வம் குவிகிறது. அதன்பின் வழக்கமாக நமது சினிமாக்களில் வருவதுபோல் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பிரச்சனைகள். ஹீரோவை கொல்ல வில்லன்கள் திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு பிரச்சார பீரங்கியை வில்லன்கள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊக்க மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நமது ஹீரோவிற்கு நிறைய சைட் எஃபெக்ட்ஸ். அதனாலேயே அவர் உண்மையைக் கூறிய பிறகும் இரண்டு வருட மன நல மருத்துவம் நடந்து அவர் சுதந்திர பறவை ஆகிவிடுகிறார்.

ஏறத்தாழ ஹீரோ மட்டுமே இந்த படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மற்ற நட்சத்திரங்கள் வந்துபோகும். அவ்வளவே. ஆனால் கதாநாயகன் பாசில் மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார். அது அவர் ஆவேசம் வந்தது போல் கத்தும் காட்சிகளெல்லாம் உண்மையான பிரசங்கிகள் செய்வது போலவே எனக்கு தோன்றியது. பல காணொளிகள் பார்த்திருக்கிறோமே அதிலும் இதுபோல்தான் ஆடுவார்கள்; குதிப்பார்கள்; மற்றவர்களைத் தள்ளி விடுவார்கள். படங்களில் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.

 படத்தைப் பற்றிச் சொல்வதற்கு இதைவிட அதிகமாக ஏதும் இல்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. எப்படி இந்த படத்தை எடுத்தார்கள்? எப்படி கிறிஸ்தவர்கள் நிறைய இருக்கும் மலையாள நாட்டில் இந்த படம் எந்தவித எதிர்ப்புமின்றி நடந்தது? இதே படம் தமிழில் எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் போன்ற கேள்விகள் மட்டுமே நம்முன் நிற்கின்றன. கேரளாவில் எந்த எதிர்ப்பும் வராதது ஒரு பெரிய ஆச்சரியம்தான்

*****

 இந்தப் படத்தில் வருவது போல் கிறித்துவ மதத்தின் ஒரு பகுதியான பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான் அதிகமாக இதைச் செய்வார்கள்; ஆனால் பெர்க்மான்ஸ் ஒரு கத்தோலிக்க பாதிரி; டி ஜி எஸ் தினகரன் தென்னிந்திய கிறித்துவ திருச்சபைக்காரர். நான் முன்பே சொன்னது போல் பெர்க்மான்ஸ் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்தார், அவர் கூட்டம் போடுவது .. உயர்நிலைப் பாதிரிமார்களை மதிப்பதில்லை … மாதாவைக் கும்பிடுவதில் மாற்றுக் கருத்து … பணம் திரட்டி ஜெபத் தோட்டம் நிறுவியது … இப்படி பல காரணங்களைச் சொல்லி அவரை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் அவர் இன்றும் கத்தோலிக்க கிறித்துவப் பாதிரியாகத் தானிருக்கிறார். அனைத்துப் பிரிவினரும் நடத்துகிறார்கள். அதிகமாக நடத்துவது பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான். Hardcore Christians!

 **** 

எனக்கு உள்ள சில ஆச்சரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: இந்தப் பிரச்சார பீரங்கிகளுக்குத் தாங்கள் பேசுவதில் எந்த அளவு நம்பிக்கை இருக்கும் என்ற கேள்வி என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். நிச்சயமாக ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கடவுள் நம்பிக்கையோடு தங்கள் “ தொழிலை” ஆரம்பித்திருக்கலாம். அதன் பின் அதனை “வியாபாரம்” என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும் பொழுது அவர்களுக்கு நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கவே இருக்காது என்பதுதான் எனது தீவிர நம்பிக்கை. 

ஏனென்றால் மேலே சொன்ன ஒரு இந்து அர்ச்சகர் கோவிலின் கர்ப்பகிரகத்திலேயே தனது திருவிளையாடலை நடத்தியிருக்கிறார். நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கும் ஒரு மனிதருக்கு அவ்வாறு செய்ய மனம் வரவே வராது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட வராது. ஆனால் அவருக்கு வந்திருக்கிறது என்றால் அவரிடம் தெய்வ பயம் மட்டுமல்ல தெய்வ நம்பிக்கையும் போய்விட்டது என்றுதான் பொருள்.

 இதைப்போலவே தினகரன். இவரும் பக்தியோடு ஆரம்பித்திருக்கலாம். நம்பிக்கையோடு கூட்டங்கள் நடத்தி இருக்கலாம். ஆனால் பின்னாளில் தான் வாரம் ஒருமுறை இயேசு கிறிஸ்துவை நேரில் பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லும் பொழுது நிச்சயமாக அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துணிந்து அவர் சொல்லுகிறார் என்றால் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பது வெளிச்சம்போட்டுத் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை நேரில் வாராவாரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் அவ்வளவு எளிதாகப் பொய் சொல்லிவிட முடியாது.

 இந்தப் படத்தில் ஹீரோவிற்கும், அவர் பணத்திற்கும் அவர் பின்னாலிருக்கும் கார்ப்பரேட் ஆட்களால் ஆபத்து வருகிறது. ஆனால் உண்மையான கிருத்துவ பீரங்கி களுக்கு இந்த பிரச்சினையே வராது ஏனென்றால் அவர்கள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக இருப்பதில்லை. அவர்களே கார்ப்பரேட் ஆக மாறி விடுகிறார்கள். தங்களைச் சுற்றி தங்கள் குடும்பத்தை மட்டுமே வைத்து தங்கள் சொத்து வெளியே எங்கேயும் போகாத படி பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். அப்பா .. அதன்பின் அவரது மனைவி.. பின் மகன்.. மருமகள் .. பேரன் பேத்திகள் … கிறித்துவ போதகர்கள் நல்ல அறிவாளிகள்! 


படத்தில் ஒரு காட்சி வரும். எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்று ஹீரோவைக் கேட்பார்கள். ஆனால் நிஜமாக இந்த ‘சாமிக் கடவுள்கள்’ காசு சேர்ப்பது ஏன் பக்த கோடிகளுக்குத் தெரிவதுமில்லை; தெரிந்தாலும் கண்டு கொள்வதுமில்லை. ஏசுவின் பீரங்கிகளை விட இந்து பீரங்கிகள் கொஞ்சம் பரவாயில்லை. பாபாவும், மேல்மருவத்தூரும் சொத்து சேகரித்தாலும் மக்களுக்கென்று மருத்துவ மனைகள், கல்லூரிகள் என்று ஏதோ செய்கிறார்கள். கிறித்துவப் பீரங்கிகள் யாரும் இப்படி ஏதும் ‘தர்ம காரியங்கள்’ இதுவரை செய்ததாகத் தெரியவில்லை.


*
டி ஜி எஸ் தினகரன்  தான் அடிக்கடி செல்லும் மோட்சம் (??) பற்றி ....

https://www.youtube.com/watch?v=m-WUBu4iDiY&feature=youtu.be

***

Funny Christian Missionary trying to convert people to Christianity through fraud in Kerala

https://www.youtube.com/watch?v=Fu9gfDaBa-0



 *