Thursday, August 04, 2005

44. இந்தி எதிர்ப்பு - பாகம்-3 (அல்லது) 38-க்குப் பின்குறிப்பு...2.

அந்த போராட்ட நாளில் நடந்து முடிந்த காரியங்கள் அத்துடன் முடியவில்லை; சொல்லப்போனால் அதன்பிறகே பலப்பல நிகழ்வுகள் தமிழ் நாடெங்கும் தொடர்ந்தன. அதில் முக்கியமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் கிளர்ச்சி மேலும் கொழுந்துவிட, போலீஸ் துப்பாக்கி சூடும் நடந்து. அதில் இறந்துபட்ட இராஜேந்திரன் என்ற மாணவருக்கு ஒரு சிலை பல்கலைக்கழகத்தினுள்ளே வைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

மதுரையில் அந்தப் போராட்டம் முடிந்ததும் ஊரே சில நாட்களுக்கு மயான அமைதியில் இருந்தது. கூர்க்கா படையினர் மதுரையில் முகாமிட்டனர். நம் போலீஸ் மீது நம்பிக்கை இல்லாமல் அவர்களைக் கொண்டு வந்ததாக மக்கள் எண்ணியதால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது வெறுப்பு. அன்று ஏற்பட்ட வெறுப்பு அவர்களை அடுத்த தேர்தலில் (1966) ஆட்சியில் இருந்தே அகற்றியது. கூர்க்கா படையினரைப் பார்க்கவே எங்களுக்கு அச்சம். யானைக்கல் அருகே குவிந்திருந்தனர். அதோடு, மாணவர்களைக் குறிவைத்து சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீசார் எங்கும் திரிவதாக மாணவர்களுக்குள் பேச்சு. கல்லூரி விடுதிகள் பூட்டப்பட்டன. நண்பர்கள் பலரும் ஊருக்குச் சென்று விட்டனர். கேரளாவிலிருந்து வந்த வகுப்பு நண்பன் தனியறை எடுத்து - அந்த நாட்களில் நான் அவனோடே தங்கியிருக்க வேண்டுமென்று என் அப்பாவுடன் அவன் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையுடன் - வடக்குமாசி வீதியும், மேலமாசி வீதியும் இணையும் இடத்தில் ஒரு குட்டிச் சந்தில் தங்கியிருந்தான். பல பத்திரிக்கைகள் வாங்கி சூடான அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது, முதல் அமைச்சர் பக்தவத்சலம் கார்ட்டூன் ஒன்று - 'தீ பரவட்டும்" என்ற தலைப்பில் வந்திருந்ததைப் பார்த்து நான் பெரியதாக வரைய முயற்சிக்க அது எப்படியோ 'அச்சுஅசலாக' வந்து விட நண்பர்கள் அதை trace எடுத்து (photocopying ஏது அப்போது?)multiple copies தயார் செய்து, அதை சுவர்களில் ஒட்டலாமென முடிவெடுத்து, முதலில் ஒரு டீ குடிக்கலாமென டீக்கடைக்கு வந்தால் - அங்கே நின்ற மூன்று பேரைப்பார்த்துத் திகைத்து நின்றோம். அரண்டவன் கண்ணுக்கு அப்படிப் பட்டதோ, இல்லை அவர்கள் நிஜ போலீசாரோ தெரியாது. அவர்களும் எங்களிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் பேச ஆரம்பிக்க எங்களுக்கு உதறல். நல்லவேளை படங்களை முன்யோசனையோடு பாடப் புத்தகங்களோடு ஃபைலில் வைத்திருந்ததால் பிழைத்தோம். மனம் தளராமல் இரவு வெகுநேரம் கழித்து திரும்பி வந்து வாழைப்பழங்களைப் பிசைந்து பசையாக மாற்றி அங்கங்கே ஒட்டிவிட்டுப் போனோம். முதல் படம் அந்த டீக்கடையில்தான். மக்களெல்லாம் மாணவர்கள் பக்கம்தான். டீக்கடை அண்ணனும்தான். அப்போது இதில் மிகத் தீவிரம் காட்டியது அந்த மலையாள நண்பன். எங்க மக்கள் ஏன் இந்தியை உங்களைப்போல் எதிர்க்கவில்லை என்று கவலையோடு கேட்பான்.

இந்த அளவு எதிர்ப்பு உணர்ச்சி தமிழ்நாடு முழுவதுமாக அன்று பரவியிருந்தது என்றால் அப்போது நாடாளுமன்றத்தில் இது பற்றிய காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. அண்ணா அவர்கள் இதில் முன்னணியில் இருந்தவர்.

மாலன் குறிப்பிட்டதுபோல்,
"இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டாலும்,அது இந்தி ஆதிக்கத்திற்கான கிளர்ச்சி. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது எது நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற விவாதம் அரசமைப்பு சட்ட மன்றத்தில் நடந்தது. அப்போது ஒரு முடிவுக்கு வரமுடியாததால், 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும். பின்னர் இந்தி ஆட்சி மொழியாகும் என் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்றத்தில் நாஞ்சில் மனோகரன் எழுப்பிய விவாதத்தின் போது நேரு, 'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்' என்று ஓர் உறுதி மொழி கொடுத்தார்.

அந்த உறுதிமொழியில், :English MAY continue till...." என்பதை "English SHALL continue...." என்று மாற்ற விவாதங்கள் நடந்தன. அன்று தங்கள் வெறும் மொழித் திறமையைக் காண்பிப்பதற்காக இவ்வாறு பேசுவதாகக்கூட கருதப்பட்டது. ஆனால், இப்போதுள்ள அரசியல் நிலையிலும், நம் அரசியல்வாதிகள் தங்கள் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மரியாதையையும் புரிந்த பின்னர் அன்று திமுக தலைவர்கள், நேருவின் வார்த்தைகள் சட்டமாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது எவ்வளவு சரி என்பது தெளிவாகும்.


1964ல் நேரு காலமாகிவிட்டார். சாஸ்திரி பிரதமராக ஆனார். அவர் 15 ஆண்டுக் காலம் முடியும் 1965 ஜனவ்ரி 26 முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தார். நேருவின் உறுதிமொழி சட்டமல்ல, அதனால் அதனை நடைமுறைப்படுத்தத் தேவை இல்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது. அதனால்தான் ஜனவரி 25 போராட்டநாளாகக் குறிக்கப்பட்டது.

உலகத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன அண்ணனது கரங்கள் வலுவற்றிருக்கலாம் ஆனால் உன்னை இரண்டாம் தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட அவை துவளப்போவதில்லை என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அதிலிருந்த இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை வதைத்தது".


இதுதான் அன்றைய உண்மையான நிலை.

நீங்கள் இந்தி படியுங்கள்; வட இந்தியாவில் உள்ளவர்களுக்குத் தென்னிந்திய மொழி ஒன்றை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்றொரு வாதம்கூட வைக்கப்பட்டது. ஆனால், இது ஒரு ஏமாற்றுவித்தை என்பது நன்கு புரிந்தது. ஏனென்றால், நாங்கள் பள்ளியில் படிக்கும்போது இந்தி ஒரு பாடமாக இருந்தது. ஆனால், அந்த மதிப்பெண்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால் நாங்கள் அதைக் கொஞ்சம்கூட மதித்ததில்லை. பாவம் எங்கள் இந்தி ஆசிரியர்கள். இதே போன்றுதான் இந்த compromise formula இருந்திருக்கும்.


மேலும் சில நண்பர்கள் சொன்ன சில கருத்துக்களை இங்கு உரிமையோடு மேற்கோளிடுகிறேன்.

அருள்:

"ஹிந்தி தேசியமொழி என்ற முடிவும் எப்படி சற்றும் நடுநிலைமையின்றி செய்யப்பட்டது என்பதை அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்த சி. சுப்பிரமணியம் தான் உயிருடன் இருக்கும் வரையில், ஹிந்துவில் மொழிப்பிரச்சினை பற்றி யார் தவறான கருத்துத் தெரிவித்தாலும் உடனே ஆசிரியருக்கு கடிதங்கள் பகுதியில் எழுதிவிடுவார். நடுவண் அமைச்சில் கூட்டாட்சி இயல்பாக வந்த விபிசிங் காலம் முதற்கொண்டு இம்மொழிப்பிரச்சினை அவ்வளவு பெரிதாக இல்லை. அப்படி தவறாக ஏதோ தேச எதிர்ப்பு போல் இதைக்காட்டிப் பேச ஆளில்லாததால் இப்போது விவாதமும் இல்லை. மற்றபடி தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்டங்கள் அத்தனையும் நியாயமானவைதான்".

தங்கமணி:
"இந்திய ஒன்றியம், பல தேசிய இனங்கள் அடங்கிய கூட்டாட்சி அமைப்பு. அதில் எல்லா மொழிகளும் சமமான அந்தஸ்தும், உரிமையும் பெறமுடியவில்லை எனில் அதற்காக போராடவேண்டியது மிகவும் அவசியமானது. ஏனெனில் அது மொழி என்பதைத்தாண்டி அரசியல் அதிகாரத்தைப் பற்றி பேசுவதாக அது ஆகிறது".

--இதைத்தான் 'இரண்டாந்தரக் குடிமகன்' என்ற நிலை ஏற்படும் என்ற அச்சத்தைக் கொடுத்தது. மொழியின் மூலமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியோ ஒரு முறை ஒரு தென்னிந்தியர் அரசியல் தலைமையை தில்லியில் ஏற்றார். அதைத்தவிர இதுவரை அரசுத் தலைமை வட இந்தியர்களிடமே இருந்துவந்துள்ளது. இதோடு மொழியாலும் அவர்களுக்கு மேல் இடம் கிடைத்திருந்தால்...It is only a hypothetical situation. But still...

வளவன்:
"அதென்ன 'வடநாட்டில் பஞ்சம் பிழைக்க வேண்டும்' என்கிற வாதத்தை இந்தி எதிர்ப்பு பற்றி விவாதம் வரும்போதெல்லாம் சொல்கிறீர்கள்".

--இந்தி தெரிந்திருந்தால் ஏதோ அவர்களே வலிய வந்து நம்மைக் கையைப் பிடித்து கூட்டிட்டுபோகப் போறதுமாதிரி மக்கள் எப்படி கற்பனை செய்கிறார்கள், வளவன்?

ஆரோக்கியம் உள்ளவன்:உங்கள் வாதத்தை உடைத்து, உடைத்து(literally!?) இங்கு தருகிறேன்.

"இன்றும் வட நாட்டிலும், பிற நாடுகளிலும் "இந்தியன் என்கிறாய், இந்தி தெரியாதா?" என்று ஏளனமாகவும் கேட்கப்படும்போதும்,

---இந்த (தாழ்வு) மனப்பான்மை தமிழர்களாகிய நம்மைத்தவிர பிறரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு மொழி - அது எம்மொழியாயினும் - தெரியவில்லையென்பதற்காக நான்(ம்) ஏன் வெட்கப்படவேண்டும். i dont know டமில் - என்பதைப் பெருமையாகச் சொல்லும் தமிழன் ஏன் ஆங்கிலமோ, இந்தியோ, இன்னும் என்னென்ன மொழியோ தெரியாதிருப்பதற்கு வெட்கப்படவேண்டும்; கவலைப்படவேண்டும் என்பது என்ன வகை சித்தாந்தம் என்று எனக்கு உண்மையிலேயே புரியாத விஷயம். இதில் என்ன ஏளனம்?அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகன்கள், சைனாக்காரர்கள் பலர் கொஞ்சமும் ஆங்கிலம் தெரியாமல் இருக்கிறார்கள்; ஆனால், வெட்கப்படவேயில்லை.

இந்தி அறியாததால் வடமாநிலங்களில் உண்மையிலேயே இரண்டாம் தரக் குடிமகனாக இருப்பதாலும்,

-- இரண்டு பதில்கள்:

1. நன்றாகச் சொன்னீர்கள்; இப்போதாவது வடமாநிலங்களுக்குச் செல்லும்போதுதான் அந்த நிலை; இந்தி ஆட்சி மொழியாகவோ, பொது மொழியாகவோ ஆகியிருந்தால், நாம் எங்கேயும், எப்போதும் இரண்டாம் தரக் குடிமகனாகவே இருந்திருப்போம்.

2. உண்மையிலேயே சொல்லுங்கள்; இந்தி தெரியாததால் கடைகண்ணிக்குப் போய் பேரம் பேச முடியாமல் போகலாம்; கொஞ்சம் ஏமாந்தும் போகலாம். Do you say that we undergo insurmountable difficulties as far as our official business is concrned? Come on... நம்ம ஊரில் தமிழ்பேச முடியாத வட இந்தியர்களைப் பார்த்து ஏளனமாகவா சிரிக்கிறீர்கள்?

...இந்தி எதிர்ப்பு என்பது "தமிழ் வெறியாகவே" எனக்குப்படுகிறது.

It is a matter of perspective. ஆனால், அந்த 'வெறி' அன்று இல்லாமல் இருந்திருந்தால் என் போன்ற 'மொடாக்குகள்' தமிழ் (வீட்டுக்கு), இந்தி (நாட்டுக்கு), ஆங்கிலம்(உலகத்துக்கு) என்று மூன்று மொழிகளின் பழு தாங்காமல் பள்ளிப் படிப்பைத் தாண்டி இருக்கமாட்டோம்!

ஒருவேளை, இந்தி அறிந்திருந்திருந்தால் வடநாட்டு இந்தியனிடம், தமிழை விட இந்தி எந்தவகையிலும் உயர்ந்ததில்லை என உணர்த்தி இருக்கலாம்"..

அப்போதுகூட நம் 'டமிழ்ஸ்' அதை ஆங்கிலத்தில்தான் செய்திருப்போம்!!
தமிழைச் செம்மொழியாக்கி அதையும்தான் இப்போது உணர்த்தி விட்டோமே; அப்படி தோன்றவில்லையா உங்களுக்கு!


மாயவரத்தான் :
"பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பது போன்றது இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியை எதிர்த்ததும்"

வேண்டாம், மாயவரத்தான்; இது தப்பு. எல்லாவற்றையுமே ஜாதிக்கண்கொண்டு பார்ப்பது தவறு. உங்கள் வயது என்னவென்று தெரியாது.ஆனாலும் எல்லா பதிவாளர்களைப்போலவே நீங்களும் இளையவராக இருக்கவேண்டும். நடந்தைவைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. பிறந்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நான் மாணவனாக இருக்கும்போது என் ஜாதி என்னவென்று மற்றவர்களுக்கோ, அவர்கள் ஜாதி என்னவென்று எனக்கோ தெரியாது. மாணவர்கள் மத்தியில் இன்று இருப்பதுபோல ஜாதி வேறுபாடுகளோ, அதனால் ஏற்படக்கூடிய சச்சரவுகளோ மிக மிகக் குறைவு; எங்கோ, எப்போதோ ஒன்றிரண்டு நடந்திருக்கலாம்; அவ்வளவே. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதேவும், வேலைக்காக நாம் செல்லும் இடங்களிலும் நமக்கு முன் நம் ஜாதி அங்கே ஆஜராகிவிடுகிறது. ஆனால், அதிலும் ஒரு ஆச்சரியம்; வெளியே நடக்கும் நிதர்சனம் வேறு; உள்ளே -நமது ப்ளாக் உலகத்தில்- நடக்கும் 'நிழல் யுத்தம்'? வேறு. இதைப்பற்றி எனது கருத்துக்கள் இங்கே.

எனக்குத் தெரிந்தவரை 50-களில் அழுக்கு வேட்டியுடன் இருந்தாலும் ஹோட்டலில் வேலை செய்யும் பிராமணரை 'சாமி' என்றுதான் அழைப்போம். அவர்களுக்கு சமூகத்தில் இருந்த இடம்பற்றிச் சொல்ல இதைச் சொல்கிறேன். 60-களில் அது அப்படியே மாறியது - நன்றி பெரியாருக்கு. ஆனால், என்னதான் போராட்டங்கள், பிள்ளையார் சிலை உடைப்பு என்றெல்லாம் நடந்துகொண்டிருந்தாலும் ஜாதித்துவேஷங்கள் மக்கள் மனங்களில் இல்லை; இல்லவே இல்லை. நான் சொல்வது பெரும்பான்மையான மக்களைப் பற்றி - the social mileu அப்படித்தான் இருந்தது. இன்று நீங்கள் பேசும் பகைமை உணர்ச்சிகள் எனக்குத்தெரிந்தவரை மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டும், அதன் தொடர்பாக எழுந்த போராட்டங்களுக்குப் பிறகுதான். எதற்கும் உங்கள் அப்பா, சித்தப்பா, மாமா போன்றோரை விசாரியுங்கள்- நான் சொல்வது சரிதானா என்று. இதெல்லாமே கடந்த 15-20 ஆண்டுகளுக்குள் நம்மிடம் நுழைந்த விஷம். நீங்கள் சொல்வதுபோல, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும், ஜாதிகளுக்கும் தொடர்பு இல்லை. என் போன்றோர் அந்தப் போராட்டகாலத்தில் மாணவனாக இருந்தற்காகப் பெருமை கொள்கிறோம்;(ஆ.உ., அது ஒரு accidentதான்; இருந்தும்..) அதை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

எதற்கும் எதற்குமோ ஏன் முடிச்சு போடணும். சமூகம், நாம் எல்லோரும் சேர்ந்ததுதானே. எல்லாமே சரியாக இருக்க நாம் என்ன ஒரு Utopian society-யிலேயா இருக்கிறோம்? என்னை மாதிரி, உங்களை மாதிரி எல்லோரும் சேர்ந்ததுதானே. தவறுகள் - வரலாற்றுத் தவறுகள், நிகழ்காலத் தவறுகள் - எத்தனையோ நம்மிடம். குற்றமில்லாதவன் யார் நம்மிடம், சொல்லுங்கள். ஆனால் , வலைப்பதிவுக்குள் வரும் அளவிற்குப் படிப்பும்,ஞானமும் உள்ள நாம்தான் அந்தத் தவறுகளைத் திருத்தவேண்டும்; திருந்த வேண்டும்.



அய்யே!! எல்லோரும் மன்னிக்கணும் மன்னிக்கணும், ஏதோ நல்லொழுக்க வகுப்பு வாத்தியார் மாதிரியில்ல நாம்பாட்டுக்கு போயிட்டேன்...sorry...ஒரு digression-தான், நம்ம வகுப்பு மாதிரி !! வாத்தியார் புத்தி இதுதான்னு உட்ருங்க. மக்களே!!


Okay..Rewind பண்ணுவதற்குப்பதில் இன்றைய நிலையில் இருந்தே ஆரம்பிப்போமே. உண்மையிலேயே இந்தி பெரும்பான்மையரின் மொழிதானா என்பது போன்ற கேள்விகளுக்குள் செல்வதற்கு முன் நம்மில் பலர் தி.மு.க. இந்த பிரச்சனையைத் தங்கள் அரசியல் ஆயுதமாக எடுத்துக்கொண்டதை ஏதோ ஒரு பெரிய தவறுபோல காண்பிப்பதுண்டு. அரசியல் கட்சிகளுக்கு அவ்வப்போது ஒரு ஆயுதம் தேவைதான். எடுக்கும் ஆயுதம் நமக்கு, மக்களுக்கு நல்லதா என்றுதான் பொதுவில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை அன்று தி.மு.க. இந்தப் பிரச்சனையை எடுக்கவில்லை; நமதுஅண்டை மாநிலங்கள் ஏதும் எதிர்க்காமல் இருந்ததுபோல நாமும் இருந்து அதன் மூலம் இந்தி நம் தேசிய மொழியாக மாறியிருந்தால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும். அதைவிட ஏறத்தாழ Hindi-Belt-ன் கட்சியாக இருக்கும் B.J.P. என்னவெல்லாம் செய்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை; அவர்கள் ஆட்சியில், வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருதத்திற்கு, இறந்துபோய்விட்ட அந்த மொழியை 'வளர்ப்பதற்கு' எத்தனை முயற்சி; பாடத்திட்டங்களில் அவைகளைக் கொணர எத்தனை எத்தனை முயற்சி; யார்தான் கேட்பார்களோ தெரியாது ஆனால் தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு! இறந்த மொழிக்கே இந்த ஆர்ப்பாட்டம், ஆராதனை என்றால் இந்திக்கு என்னென்ன மரியாதை கிடைத்திருக்கும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது என்பது கண்ணை மூடிக்கொண்ட பூனையின் நிலைதான்.

ஆனால் காங்கிரஸ் தென்னாட்டு மாநிலங்களிலும் ஓட்டுவங்கி வைத்திருந்ததால் அவர்கள் இந்த மொழிப்பிரச்சனையை அணுகியதிற்கும், இந்தி மாநிலங்களை மட்டும் நம்பி இருக்கும் பி.ஜே.பி. இந்திக்காக எந்த அளவிற்குச் சென்றிருக்கும் என்ற நிலையினையும் பார்க்கும்போது தி.மு.க.வின் அன்றைய நிலைப்பாட்டிற்கு நாம் அந்தக் கட்சிக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.
ஆனாலும், இன்று மொழிப்போரை நடத்தி இந்தியைத் தடுத்த பெருமையை அந்தக் கட்சி முழுமையாக எடுத்துக்கொண்டிருந்தாலும், அன்று காங்கிரஸ் , நடந்த போராட்டங்களுக்கும், மாணவர்களின் உயிரிழப்பினுக்கும் திமுக-வே காரணம் என்று சுட்டியபோது அது மாணவர்களாகவே உணர்ச்சி வேகத்தில் நடத்திய போராட்டம்; நாங்கள் ஒன்றும் தூண்டவில்லை என்று கூறினார்கள். ஆனால் அவர்களே சூத்திரதாரிகள் என்பது குழந்தைகளுக்குக்கூட தெரியும். (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!)

66-ல் நடந்த தேர்தலில் மாணவர் பலர் போல நானும் ஒரு தி.மு.க. அனுதாபி; ஓட்டுப் போட்டேன். அதன்பிறகு ஓட்டுப் போட்டதும் உண்டு; எதிர்நிலை எடுத்ததுவும் உண்டு. ஆகவே என் கருத்துக்களை ஒரு கட்சிக்காரனின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை அந்த இளம் பிராயத்தில் மனதில் ஆழ்ப்பதிந்த காரணத்தால் 'மொழிப்போர்' என்று வர்ணிக்கப்பட்ட அந்த கருத்து முழுமையாக எனக்கு ஏற்புடையதாக இன்றும் இருக்கலாம். ஆனாலும், இந்தி படிக்காததால் ஏதோ தமிழ் நாட்டு இளைஞர் பலர் வேலை வாய்ப்பை இழந்து நிற்பதுபோல ஒரு தவறான கருத்தைப் பலர் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

மொழியைப்பற்றி நமக்குப் பல தவறான கருத்துக்கள் உள்ளன. தாய்மொழிக்கல்வி என்பது உலகளாவிய ஒரு விஷயம். 1950-ல் சுதந்திரம் வாங்கிய இந்தோனேஷிய நாட்டு நண்பர், "So, you still carry that yoke" என்று கேட்டார். ஆனால் நாமோ இன்னும் ஒரு நூற்றாண்டு போனால்கூட விட முடியாத ஆங்கில மோகத்தோடு - என்னையும் சேர்த்தே - இருக்கிறோம். கல்லூரி ஆசிரியனாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாம் கல்வித்துறையில் தவறான அணுகுமுறைகள் வைத்திருக்கிறோம். தாய்மொழிக்கல்வி என்பது இன்றைய நிலையில் ஒரு நிறைவேறாக்கனவு என்றே நினைக்கிறேன்- a pipe dream. பாடத்திட்டங்களை மாற்றியாகவேண்டும்; ஆனால் அது நடக்கப்போவதில்லை! - a catch-22 situation?. ஏனெனில்,ஆனானப்பட்ட நமது ஜனாதிபதி சொன்ன கருத்துக்களையே யாரும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. தாய்மொழியில் பாடங்களைப் படிக்கவேண்டும் என்றால் ஆங்கிலம் தேவையில்லை என்று பொருளில்லை. இளம் வயதில் நிறைய மொழிகளைக் குழந்தைகள் படிக்க முடியும். ஆறாம் வகுப்புவரை சிறிதே கணக்கும், மற்றபடி ஆழமாகவும், அகலமாகவும் மொழிக்கல்வி தரப்படவேண்டும். மூன்றாம் வகுப்புக் குழந்தை இங்கிலாந்து நாட்டின் கவுண்டிகளையும், அங்கு விளையும் rye என்ற agricultural produce (!) பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இளம் வயதில் மொழிகளை நன்கு ஆழமாய் படித்து, பின் ஆறாம் வகுப்பிலிருந்து மற்ற பாடங்களைப் படிப்பதே நல்லது. என்றைக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர bazar notes in the form of WORKBOOKS வந்ததோ அன்றே நல்ல ஆங்கிலப் போதனைக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. நாங்கள் படிக்கும்போது அது போன்ற - fast food மாதிரி - ரெடிமேட் சரக்குகள் கிடையாது. ஆசிரியர்களுக்கு முனைந்து சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாயமே இருந்தது. இப்போது எந்த மீடியத்திலிருந்தும் வரும் கல்லூரி மாணவனுக்கும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ தன் கருத்துக்களைச் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை என்பதே உண்மை - ஆங்கில மீடியத்தில் படித்தும். இந்த லட்சணத்தில் (கொஞ்சம் கோபம், நம் தலைவிதியை நொந்து) இந்தியும் படிக்காததுதான் குறையென்று பலரும் பேசுவது வேடிக்கைதான்.

கோபித்துக் கொள்ளாதீர்கள் - நிறைய digression! சொல்ல வேண்டியதையெல்லாம் உங்களிடம் கொட்ட ஆசை - ஒருவேளை, உங்களில் யாராவது ஏதாவது செய்யக்கூடிய உயர்நிலை அடைந்தால்...! ஒருவருக்கு பல்கலைக் கழகத்தில் செனட்டர் பதவி கிடைக்கலாம்(வாழ்த்துக்கள், மாலன்!). ஏன், நாளைக்கு வேறொருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்றால் இந்த மாற்றங்களைக் கொண்டுவந்துவிட மாட்டா(டீ)ர்களா, என்ன? ஆரம்ப வகுப்புகளில் மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து - இந்தியும் படிக்கலாமே தாராளமா - அதனால் குழந்தைகள் உயர்கல்வியில் 'புரிந்து' படித்து, படித்தவைகளை உள்வாங்கக்கூடியவர்களாக ஆனால் - ஆகா! அப்படி ஒரு நிஜத்தைத் தரிசிக்க -- வலைப்பதிவின் எழில்மிகு வாலிபர்களே, இளைஞர்களே வாருங்கள்... வாருங்கள் என்று இந்தக் கிழவன்....அச்சச்சோ..மறுபடி எப்படியோ சாக்ரடீஸ் வசனம் ஞாபகத்திற்கு வந்து...எல்லாம் ஒரு வயசுப் ப்ராப்ளம், இல்ல ?

23 comments:

வசந்தன்(Vasanthan) said...

அருமையான பதிவு. நன்றிகள்.

ENNAR said...

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அன்றைய முதல்வர் கருணாநி டாக்டர் பட்டம் வாங்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கிளர்ச்சியில் உதயகுமார் என்பர் போலீசாரால் சுடப்பட்டு அவரது தந்தையே தனது மகன் இல்லை என்று சொன்னதாக ஞாபகம்
தங்கள் கருத்தென்ன?

என்னார்

Anonymous said...

அருமையான பதிகள் தருமி, நன்றி. எண்ணார், இங்கே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி எழுதப்படுவதால், தற்போதைக்காவது அதுகுறித்துக் கேள்வியெழுப்புதல் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும்.

-/பெயரிலி. said...

வரலாற்றின் வழியிலே அவசியமான பதிவு

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அவசியமான, அருமையான பதிவு.

நாற்பது வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று தெரியாமல் பிதற்றிக்கொண்டிருக்கும் நம்மவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விதயங்களை எழுதுகிறீர்கள். நன்றி!

முன்னொரு பதிவில் ஒருவர் சொல்லிச் சென்றதுபோல, உங்கள் பொதுவாழ்க்கை அனுபவங்களையும் விரிவாக எழுதுங்கள்.

ஒரு விதயம்:
உங்கள் பதிவின் வடிவமைப்பைக் கொஞ்சம் மாற்றுங்கள். வெளிர் நிறப் பின்னணியில் அடர்த்தியான வண்ண எழுத்துகள் கண்ணைப் பாதிக்காது.

தொடர்ந்த விரிவான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

-மதி

தருமி said...

வசந்தன், என்னார்,பெயரிலி, மதி & ? ? -- நான் இந்தப் பதிவை இப்போதுதான் (மணி இரவு:11.52)க்கு ஒரு வழியாக, proof பார்த்து, பார்த்து பதிந்திருக்கிறேன்; ஆனால் அதற்குள் நீங்கள் வந்து போயிருக்கிறீர்கள். ஆகவே, மறுபடியும் வாருங்களேன்.

நன்றி

மதி, அவ்வளவெல்லாம் தெரிந்தால் நான் விட்டு வைத்திருப்பேனா?
முயற்சிக்கிறேன். எழுத்தையும் பெரிதாக்க வேண்டும்.

உங்களைத்தொடர்பு கொள்ள ஆசைப்பட்டேன்; ஒரு தேவையும் கூட.நம் தமிழ் வலைஞர்களின் தொகுப்பு ஒன்று உண்டல்லவா? அதனைத் தொகுப்பவர் நீங்கள்தானே? நான் சேரவேண்டுமே? வழிமுறை தெரியவில்லை; வழிகாட்டுங்களேன்.

தருமி said...

மதி,
இதையும் நீங்க வாசிக்கணும்,சரியா?

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

மதி,
ஆஹா!! எழுத்தைப்பெரிசாக்கிட்டேன் - நேரம்: 12.35

அடுத்தது வண்ண வேலைதான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

dharumi,

ennudaiya email id

mathygrps at yahoo dot com

mathygrps at gmail dot com

சன்னாசி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Prammathamaana pathivu. ungal muyarthichikku nandri, melum ezhuthungal

ஏஜண்ட் NJ said...

ஜி, ஆப் பஹூத் அச்சா லிக்ரஹேங் ஹை !


ஞானபீடம்

துளசி கோபால் said...

தருமி,
'பரத்திட்டீர்'ஐயா!

சூப்பர் பதிவு!

என்றும் அன்புடன்,
துளசி.

மு. சுந்தரமூர்த்தி said...

(நீங்கள் பணிபுரிந்த கல்லூரியில் படித்திருந்தால் உங்கள் மாணவனாக இருந்திருப்பேன். அதனால்)தருமி சார்,

//எந்த மீடியத்திலிருந்தும் வரும் கல்லூரி மாணவனுக்கும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ தன் கருத்துக்களைச் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை என்பதே உண்மை - ஆங்கில மீடியத்தில் படித்தும். இந்த லட்சணத்தில் (கொஞ்சம் கோபம், நம் தலைவிதியை நொந்து) இந்தியும் படிக்காததுதான் குறையென்று பலரும் பேசுவது வேடிக்கைதான்.//

இது நிதர்சனம். இன்று ஆங்கிலவழிப் படித்த பிள்ளைகளின் (குறிப்பாக முதல் தலைமுறையில் கல்லூரி செல்பவர்கள்) மொழியறிவு--தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்--படுமோசமாக உள்ளது. இது போகிற போக்கில் விடும் கதை இல்லை. எங்கள் ஊரிலும், உறவினர்களின் வீடுகளிலும் காணும் யதார்த்தம்.

இந்த தன்மைப் பதிவுகள் (first person accounts) இயல்பாக இருக்கின்றன. ஒரு வரலாற்று நிகழ்ச்சியில் பங்குபற்றிய இதுபோன்ற சாதாரண மனிதர்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்படவேண்டும். இதை விரிவாக எழுதி பத்ரியிடம் கொடுத்து ஒரு நூலாக வெளியிடலாமே (seriously). எம் முன்னோர்களுக்கு நன்றி.

கல்லூரி நாட்களில் எங்கள் வீரத்தைக் காட்ட வாய்த்ததெல்லாம் பஸ் கண்டக்டருடன் சண்டைபோட்டு ஊர்வலம் போய் அண்ணா சிலைக்கும், காந்தி சிலைக்கும் மாலைகள் போட்டுவிட்டு பகல் காட்சி ரஜனி, கமல் சினிமா பார்த்த பாக்கியம் மட்டும் தான்.

ஹிந்தி கற்றுக்கொள்ளாததால் ஒரு தலைமுறையே பாழாகிவிட்டது என்று சிலர் பிதற்றுவதெல்லாம் மிகை. அதேபோல சமீபகாலம் வரை ஹிந்தி தெரியாதது தேசத் துரோகமாகவே சித்தரிக்கப்பட்டு வந்தது.

பெங்களூரில் IIScயில் படித்தபோது பார்த்ததில் பிற தென்மாநிலங்களிலிருந்து ஹிந்தி 'படித்து' விட்டு வந்த நண்பர்களுக்கு உருப்படியாக ஹிந்தி பேசத் தெரிந்திருக்கவில்லை. தெரியும் என்று காட்டிக்கொள்ள அவர்கள் கையாண்ட ஒரே வழி ஹிந்தி சினிமா பார்ப்பது மட்டும் தான்.

அதே போல தேவையை முன்னிட்டும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியும் அங்கு கன்னடம் கற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலோனோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற மாணவர்கள் (நான் உள்பட), சிலர் வங்காளிகள். இந்த இரு மொழிப்பிரினருமே பொதுவாக 'மொழிவெறியர்கள்' என்று கருதப்படுவதுண்டு.

குழலி / Kuzhali said...

தருமி உங்கள் பதிவுகள் நிச்சயம் சேமிக்க வேண்டியவை. நன்றி பதிவுகளுக்காக.

நன்றி

ஜோ/Joe said...

நன்றி ஐயா! நன்றி!

Anonymous said...

Theekunju,
20-30 varudam munthaya ilakiyam, vaara-maatha ithazgalai paarungal. Appothiruntha manipravaalathukkum ippothulla manipravaalathukkum vithiyaasam puriyum.

தருமி said...

"ஆனால் இப்போது எங்கே தமிழர்கள் தூய தமிழ் பேசுகிறார்கள்? எல்லாம் "மணிபிறவாழ" நடைதானே ஐயா? எனக்கே..."

தீக்குஞ்சு,

அதாவது, தூய தமிழில் பேசாமல் மணிப்பிரவாள நடையில் நாம் எல்லோரும் பேசுகிறோம் என்கிறீர்கள்; அப்படித்தானே?

அது என்ன தவறு என்பது என் கேள்வி.

அதோடு இங்கு பேச எடுத்துக்கொண்ட விஷயம் வேறு. திணிப்புக்கு எதிர்ப்பு. இந்தியின் மேல் யாருக்கும் வெறுப்பில்லையே.

Thangamani said...

இந்தித் திணிப்பு எதிர்ப்பை அரசியலாக்கும் போதே, அதன் எதிர் துருவமும் உண்டாயிற்று. அது தனது பல்வேறு நலன்களுக்காக இந்தி எதிர்ப்பால் தமிழர்கள் மிகப்பெரிய இழப்பை அடைந்தது போன்று ஒரு கருத்தாக்கத்தை விதைத்து, நீரூட்டி வளர்த்து கிளைபரப்பச் செய்தது. அதன் நிழலில் குற்றவுணர்வும், தாழ்வுமனப்பான்மையும் கொண்ட தமிழர்கள் உருவாகிறார்கள்.

பதிவுக்கு நன்றி!

Anonymous said...

தருமி
நான் உங்கள் முதல் இரண்டு பதிவுகளையும் படித்தேன். உண்மையில் வட இந்தியாவில் கூட, காஷ்மீர் கிராமங்கத்திலிருந்து வந்த என் சக மாணவிக்கு காஷ்மீரி மட்டும்தான் தெரியும். இதுபோல பல குஜராத்திய கிராமத்தில்ரிஉந்து, பீஹாரிலிருந்து வந்தவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வரும்போது ஹிந்தியில் பேசி பயனில்லை. குஜராத்தியும், போஜ்பூரியும் வேண்டும். நாம் வட நாட்டில் உள்ள் அனைவரும் ஹிந்தி மொழியில் படிப்பதாக ஒரு கருத்தை உருவாக்கி இருக்கிறோம். பெருவாரியான மக்கள் பேசுகிறார்கள் என்பதுகூட கருத்து கணிப்பில் தெளிவாக, நன்றாக என்று கேட்கப்படுவதில்லையோ என்னவோ?
நான் தமிழ் வழியிலதான் பள்ளி முழுதும் படித்தேன்.
இந்தி திணிப்பு எதிர்ப்பது தவறாகாது. ஆனால் அதை தங்கள் இலாபத்திற்காக அரசியலாக்கியது தவறு. உங்கள் அனுபவங்கள் படிக்கும் போதே சிந்திக்க வைக்கின்றன.

Sri Rangan said...

மொழிவழி போராட்டங்களும்,சமூகச் சிக்கல்கள் குறித்துச் சிந்திக்கும் இன்றைய சூழலில் தங்கள் பதிவுகள் அற்புதமாகச் சிலவற்றைச் சொல்கிறது.அநுபவங்களின் தொகுப்பே கல்வியென்றால்-தங்கள் அநுபவங்கள் பலருக்குப் பாடமாகலாம்.இந்த இடத்தில் நீங்கள் மிகவுயரத்தில் இருக்கிறீர்கள்.இத்தகைய எழுத்துக்கள் புதிய தலைமுறைக்கு அவசியமானது.தொடருங்கள் தருமி!
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

மாலன் said...

இரண்டு சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்:
1.இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் 1965க்கும் முன்ன்ரே இருந்து வந்ததுண்டு. மறைமலை அடிகள், திரு.வி.க ( இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றியவர்) போன்றோர் அதில் முனைப்புக் காட்டினார்கள். இவர்கள் அன்றைய சமூகத்தில் மரியாதையைப் பெற்றவர்கள். ஆனாலும் அப்போது இந்தி எதிர்ப்பு 1965ல் இருந்ததைப் போன்ற மக்கள் இயக்கமாக இருக்கவில்லை.ஏன்?

ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டதுதான் 65 கிளர்ச்சிக்கு ஒரு வேகம் கொடுத்தது.எந்த மனிதனையும் அரசியல் அதிகாரத்தின் மூலம் அடிமையாக்கிவிட முடியாது என்ற ஆதார உண்மைதான் 65 கிளர்ச்சியின் அடிப்படை.

65 கிளர்ச்சியில் காங்கிரஸ் அனுதாபிகளும் கூட் மத்திய அரசுக்கு எதிராக இருந்தனர். சி.சுப்ரமணியமும், ஓ.வி அளகேசனும் தங்கள் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.கிருஷ்ணசாமி பாரதி என்ற பழுத்த காங்கிரஸ்காரர் ( சுதந்திரப் போராட்ட தியாகி, இந்திய அரசமைப்புச் சட்ட்ம் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்)இன்னொரு உதாரணம்.

2.கடந்த 20,25 ஆண்டுகளாகவே மாணவர்கள் இளைஞர்களிடம் மொழிப்பற்று, மொழி ஆளுமை குறைந்திருகிறது.ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற ஒருவர் வேலைக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் தான் அந்த வேலைக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட் வேண்டும் என்று எழுதிய குறிப்பில், I have 15 years RESISTANCE in that place என்று எழுதியிருந்ததை நானே பார்த்திருக்கிறேன். நேர்முகத் தேர்வில் அது குறித்துக் கேட்ட போது 'நான் 15 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வருகிறேன்' என்று (தமிழில்)விளக்கினார்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் ஆங்கிலத்தை முதன்மைப்பாடமாகப் படித்திருந்தாலும் தமிழர்களில் பெரும்பாலும் தாய்மொழியில்தான் சிந்திக்கின்றனர். சிந்திக்கும் மொழி ஒன்று வெளிப்படுத்தும் மொழி எனும் போது முரண்பாடுகள் நேர்கின்றன.

தமிழ்வழிக் கல்வியில் இந்த நெருக்கடிகள் இல்லை. நான் பள்ளி இறுதி ஆண்டுவரை தமிழில்தான் படித்தேன். ஆங்கிலம் ஒரு பாட மொழி.

அதனால் எனக்கு ஒன்றும் பின்னடைவு ஏற்பட்டுவிடவில்லை. பின்னாளில் நான் அமெரிக்கப் பல்கலை ஒன்றில் Advanced Ediing என்பதை சிறப்புப் பாடமாகப் படித்தேன். பெரும்பாலும் மொழி, மொழி வழக்குகள் இவைதான் அதன் உள்ளடக்கம். அந்தப் பாடத்தில் நான் முதல் மாணவனாகத் தேறினேன். பெருமைக்காக இதைச் சொல்லவில்லை.ஒன்றக் கற்கும் முறையை அறிந்து கொண்டு விட்டால், ஆங்கிலத்தை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட நன்கு கையாளமுடியும்.

நாங்கள் மாணவர்களாக இருந்த போது இந்தக் கற்றுக் கொள்ளும் ஆற்றல்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் இங்கு 'சுமாராக' இருந்த மாணவர்கள் கூட தொழில்நுட்பம் மிகுந்த அயல்நாட்டு மருத்துவமனைகளில், தொழிலகங்களில் வெற்றிக்ரமானவர்களாக கொடிகட்ட முடிந்தது.

இன்று கல்வியில் மொழி பின் தள்ளப்பட்டுவிட்டது. தொழிற்கல்லூரி நுழைவுத் தேர்வில் மொழிப்பாடங்களின் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.தருமியின் இந்தி வாத்தியார் நிலைதான் இன்று எல்லா மொழி ஆசிரியர்களுக்கும்.

மொழியைக் கற்பது, கற்கும் ஆற்றலை கூரிமைப்படுத்துகிறது. (அதிலும் தமிழ். அதன் அமைப்பு அப்படி.) வெற்றிபெற்ற/ புகழ் பெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாகிகள் இவர்களை எடுத்துக் கொண்டு அலசிப்பாருங்கள். அவர்கள் மொழித் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அது அவர்களது துறையாக இல்லாத போதும்.

அன்புடன்
மாலன்

Post a Comment