Wednesday, August 17, 2005

52. பொட்டு வைத்த முகமோ...

ஜோவின் பதிவில் பின்னூட்டமிட்ட நேயர்களின் விருப்பத்திற்கு இணங்கி (நல்லா மாட்டிக்கிட்டேன்) இந்தப் பதிவை எழுதுகிறேன். நடைமுறைகளைச் சொல்லி, அவைகளுக்கான நான் நினைக்கும் காரணங்களைச் சொல்கிறேன்.

கத்தோலிக்கர்களுக்கும், பிரிவினைச் (Protestant) சகோதரர்களுக்கும் நம்பிக்கைகளிலும்,வழிபாடுகளிலும் வேற்றுமைகள் உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு: 'மேரி' முன்னவர்களுக்கு மிக முக்கியம்; அடுத்தவர்கள் அதைத் தவறு என்பார்கள். Joe, take it in lighter sense: முன்னவர்களுக்கு பைபிள் பற்றி அதிகம் தெரியாது; பின்னவர்களில் பலரும் கரைத்துக் குடித்திருப்பார்கள். இப்படி பல வித்தியாசங்கள்.

வெளிஅடையாளங்களிலும் அதிக வேற்றுமை உண்டு. நம்ம ஊரில் ஒரு கத். (இப்படி சுருக்கமா வச்சுக்குவோமா?) வீட்டுக்குப் போனால், அதற்கும் மற்ற இந்து நண்பர்கள் வீட்டுக்கும் அதிக வேற்றுமை இருக்காது் - (கிறித்துவ)சாமி படங்கள், படங்களுக்குச் சூட்டப்படும் பூக்கள், அதன் முன் குத்து விளக்குகள், கோலங்கள், ஊதுபத்தி இப்படியாக... ஆனால், பொதுவாக, பிரி. வீடுகளில் அவைகளைப் பார்க்க முடியாது. கொஞ்சம் western look-ஓடு இருக்கும்; நடை, உடை பாவனைகளிலும் அதைப் பார்க்கலாம். கத். பெண்களிடம் எந்த வித்தியாசமும் தெரியாது - பொட்டு, மிஞ்ஜி, கொலுசு, நெற்றி வகிட்டில் குங்குமம்... இத்யாதி..இத்யாதி. இவைகள் ஏதும் அநேகமாக பிரி. பெண்மக்களிடம் இருக்காதது மட்டுமின்றி, இவைகளைப் பயன்படுத்தும் கத். மக்களை ஒரு கேள்விக்குறியோடு பார்ப்பதும் உண்டு. எது இருந்தாலும், பொட்டு நிச்சயமாக இருக்காது. (ஜோ சொன்னது ஆச்சரியமாக இருந்தது)
பொட்டு ஏன் வைப்பதில்லை என்றால் வழக்கமாக அவர்கள் சொல்லும் பதில், 'சிலுவைக்குறி இடும் இடத்தில் எப்படி பொட்டு வைப்பது' என்பதே.

என் 'ஆழ்ந்த' ஆராய்ச்சியில் (இதிலெல்லாம் ஆராய்ச்சி ஏன் என்று கேட்டீர்கள் என்றால் - பிறவியால் நான் கத்., வேலை பார்ப்பதோ பிரி. நடத்தும் கல்லூரி; குடும்பத்தோடு போனால் மக்கள் தனியாகவே தெரிவார்கள். அதைப் பற்றி யோசித்து..யோசித்து ) விளைந்த கருத்துக்கள்:

கத். missionaries முதலில் வந்தவர்கள். தாமஸ் யேசுவின் சீடர்; முதலாம் நூற்றாண்டிலேயே நம் நாடு வந்துவிட்டார். அதைப் போலவே, மற்ற கத். மிஷினரிகள். அப்போது அவர்கள் எல்லா வகையிலும் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாகவே நம் தாத்தா, பாட்டியரால் கருதப்பட்டிருக்க வேண்டும். they should have been outright OUTSIDERS. and the first task for them was to get acceptance of local people. அதற்கு முதல் படியாக அவர்கள் நம் ஊர் மக்களைப்போல உடை முதல் எல்லாவகையிலும் தங்களை மாற்றிக்கொண்டார்கள். தேம்பாவணி இயற்றிய வேதமாமுனிவர் தன் பெயரை மாற்றிக்கொண்டது மட்டுமின்றி, நம் ஊர் சாமியார்கள் போலவே, காவி உடை, கட்டைச்செருப்பு, கையில் தண்டம் என்று தன்னை நம்மோடு ஐக்கியப்படுத்திக்கொண்டனர். அவர்கள் மக்களை மதம் மாற்றும்போது, அவர்களின் பழக்க வழக்கங்களையோ, வாழ்க்கை முறைகளையோ மாற்ற முனையவில்லை. அப்படி முனைந்திருந்தால் அதிக எதிர்ப்புகள் இருக்கும் என்பது அவர்களுக்கு நன்கே தெரியும்.

ஆனால், பிரி. மிஷினெரிஸ் வந்த காலம் வெள்ளையர் காலத்தில்தான். வெள்ளையர்கள் வந்து காலுன்றி, ஆட்சி செய்யவும் ஆரம்பித்த பிறகு, ஆங்கிலேயர்களோடு identify செய்து கொள்வது நம்மில் பலருக்கும் பிடித்துப்போயிற்று. என் பாட்டையா சட்டை போட்டுக்கொண்டு, தலையில் தலைப்பாகையோடு pose கொடுத்ததும், என் அப்பா கோட்டும் சூட்டும் போடுவதற்கு முன்பு வேட்டிகட்டி கோட்டு போட்டது எல்லாமே அந்தத் தாக்கம்தான். உடையாலோ, மதத்தாலோ தங்களை வெள்ளையரோடு ஒன்றிக்காண்பிப்பதில் மக்களுக்கு ஒரு பெருமை. அதோடு, கிறித்துவர்களுக்கு அப்போது ஒரு தனி மரியாதை; நான் சின்னவனாக இருக்கும்போது அதைக் கண்டிருகிறேன். 'அவர்கள் வேதக்காரர்கள்' என்று தனிப்படுத்தப்பட்டு, அதில் ஒரு சிறப்பும் சேர்க்கப்பட்ட காலம். படித்தவர்கள் ('உயர்ந்த ஜாதிக்காரர்கள்? ) தங்களை உடை, வேலை மூலம் வெள்ளையர்களோடு ஒன்றிக்கொண்டார்கள். புதிதாக மாறிய பிரி. கிறித்துவர்கள் தங்கள் மதம் மூலமாக மட்டுமின்றி, பல வகைகளிலும் அவர்களோடு தங்களை identify செய்துகொள்ள, தங்கள் வாழ்க்கை முறைகளை மேற்கத்தியத் தாக்கத்திற்கு உள்ளாக்கிக் கொண்டார்கள். ஆண்கள், shoe, pants, suit என்று ஆடைகளை மாற்றிக்கொள்ள முடிந்தது. பெண்கள் frock போட முடியுமா என்ன? ஆனாலும், மற்றவரிடமிருந்து வேற்றுமைப்படுத்திக் கொள்ள எளிய வழி - வெற்று நெற்றியோடு இருப்பது. அது தொடர்கிறது.

அவர்கள் பொட்டு இடாமலிருப்பதற்கு, இந்த சமுதாயக் காரணங்கள்தானேயொழிய வேறு வெளியே சொல்லப்படும் சமயக்காரணங்கள் சரியானவைகளாக எனக்குத் தோன்றவில்லை.

எவ்வளவு சின்ன விஷயம் இது. ஆனால், இரு தாராரும் இதை எவ்வளவு கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள் தெரியுமா? நான் சொன்னது போல் என் கல்லூரியில் படித்து, காதல் திருமண்ம் செய்துகொண்ட இருவர், வீட்டினரின் தலையீட்டால் 'பொட்டுச்சண்டை' போட்டு, விவகார ரத்து...ச்சீ...விவாக ரத்து வரை போக, ஆசிரியர்கள் போய் சமாதானம் செய்யச் சென்றனர். அதனால்தான் சொல்கிறேன், மதம் நம்மை என்னவெல்லாம் செய்கிறது என்று.



16 comments:

வசந்தன்(Vasanthan) said...

சுவாரசியமான பதிவு.
நான் கூட சின்னவயசில் வீரமாமுனிவரை ஐரோப்பியர் என்று நம்பச் சிரமப்பட்டேன். அது என்னங்கோ 'வீரமாமுனிவன்' எண்ட பேரிலயே எத்தனைத் தமிழ்த்தனம் தெரிகிறது. அவர் லிஸ்பனிலிருந்து வந்து பேர் மாற்றிக்கொண்ட ஐரோப்பியர் என்பதை நம்பவா முடியும்?

அத்தோடு தமிழை ஒன்றிப்படித்து தமிழுக்காக நிறைய நல்லதுகளைச் செய்தவர். எகர ஏகார வித்தாயசங்கள், ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு அறிமுகங்கள் தமிழ் அச்சுலகுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஆனாலும் அவரின் உருவாக்கமான "ஈ" ஒரு தவறான அறிமுகமாகவே பலராற் பார்க்கப்டுகிறது.

ஓர் 'இத்தினி'ப் பொட்டுல இத்தனை விசயமிருக்கா?

நீங்கள் விவிலியம் பற்றிச் சொல்வது மிகச்சரி. கத்தோலிக்கரிற் பெரும்பான்மையானவர்கள் விவிலியத்தைத் தொட்டதேயில்லை. அனேகமாக முக்கால்வாசிப்பேரின் வீட்டில் விவிலியம் இருக்காது. ஆனால் பிரிவினைச் சபைகளைச் சேர்ந்தவர்களுக்கு அதைவிட்டால் வேறு இல்லையென்றளவுக்கு விவிலியத்தோடு ஒன்றிப்போவார்கள்.

எனக்கு விவிலியம் மிகப்பிடிக்கும். குறிப்பாக பழைய ஏற்பாடு. சாண்டில்யனின் ரசிகனாக முன்பே விவிலியத்தின் ரசிகன் நான். ஒரு புனிதமாகவன்று, ஒரு புதினமாகவே நான் விவிலியத்தை இரசித்திருக்கிறேன்.

தருமி said...

வீரமாமுனிவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி, வசந்தன்.

அது சரி,
//சாண்டில்யனின் ரசிகனாக முன்பே விவிலியத்தின் ரசிகன் நான்//
என்ன சொல்ல வருகிறீர்கள்?

வன்னியன் said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

சாண்டில்யனின் கதைகளில் போர் இருக்கும். அதைவாசிக்கச் சுவாரசியமாயிருக்கும்.
காமமிருக்கும் அதுவும் சுவாரசியமாயிருக்கும்.
விடலைப்பருவத்தில் அதிகம் பிடித்த புதினங்களாக அந்த வகையறாக்களே இருந்தன. அதே ரசனையோடு விவிலியத்தையும் வாசித்தேன். அவற்றிலும் சாண்டில்யனின் நாவலுக்குரிய அம்சங்கள் அழகாக இருக்கும். விறுவிறுப்பாக இருக்கும்.க

ஏஜண்ட் NJ said...

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

இதைக் காதலர்களும் கவிஞர்களும் படிக்கலாம்!

இங்கே கடவுள் ஏன் மன்னிக்கிறார்? என்று பார்க்கலாம். (4 அதிகாரங்களையும் படித்தால் முழுதும் அறியலாம்!)

இங்கே கடவுள் ஏன் மனிதனை சோதிக்கிறார் என்று அறியலாம்!

எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு என இங்கே சொல்லப்பட்டுள்ளது.


மேலும் பைபிள் படிக்க இங்கே

துளசி கோபால் said...

என்னங்க தருமி,

ரொம்ப சிம்பிளாச் சொல்லிக்கிட்டு வர்றீங்க. நல்லாவே புரியுது.

நான் இந்துவா இருந்தாலும் ப்ரொட்டஸ்டண்ட் பள்ளிக்கூடத்திலே( ஹாஸ்டல் வாசம். அதனாலே பாதிப்பு கூடுதல்)படிச்சவள். அதனாலேயே நல்லாப் புரியுது.

ம்ம்ம்ம். இன்னும் சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
துளசி

ஜோ/Joe said...

தருமி,
விளக்கத்திற்கு நன்றி!பின்னர் விரிவாக விவாதிக்க வருகிறேன்.

// Joe, take it in lighter sense: முன்னவர்களுக்கு பைபிள் பற்றி அதிகம் தெரியாது; பின்னவர்களில் பலரும் கரைத்துக் குடித்திருப்பார்கள்.//
I am ready to take everything in right sense..Don't worry.

//எது இருந்தாலும், பொட்டு நிச்சயமாக இருக்காது. (ஜோ சொன்னது ஆச்சரியமாக இருந்தது)//
எதிலும் விதிவிலக்குகள் உண்டு இல்லையா? கத்தோலிக்கர்களிலும் பொட்டு வைக்க கூடாது என்று நினைப்பவர்கள் இருக்கலாம்..நாம் பெரும்பான்மையோரை பொதுமைபடுத்தி தானே விவாதிக்குறோம் .அதனால் ஒன்றும் தவறு இல்லை.

தருமி said...

ஞானபீடம்,
சர்வேஸ்வரனுக்கு தோஸ்த்ரம்.

அது என்னங்க? சைனீஸ் ஃபாண்ட்ல அனுப்பிச்சீட்டிங்க? எல்லாம் இந்த மாதிரி வருது..?降 ?Ϡ??҃??, ?降 ?Ϡ

துளசி - இந்தப்பதிவு அவ்வளவு சீரியசான விஷயமில்லையே. நான் ஏன் மதம் மாறினேனில் இரண்டாவது பகுதி தெளிவாக எழுதியிருந்தேனா என்று ஒரு ஐயம்.

ஜோ - சரி

ஏஜண்ட் NJ said...

தருமி, பைபிள் படிக்க முரசு அஞ்சல் தேவை; மேலும் தகவல்கள் இங்கே
http://www.tamil-bible.com/Bible/howto.html

தருமி said...

ஞான்பீடம்,
முதலில் கொடுத்த லின்க்குகளுக்கு விவிலியத்தலைப்புகளைக்கொடுத்தால் அதை வாசித்துக்கொள்வேனே!

ஏஜண்ட் NJ said...

பழைய ஏற்பாடு

உன்னதப்பாட்டு
இதைக் காதலர்களும் கவிஞர்களும் படிக்கலாம்!

யோனா
இங்கே கடவுள் ஏன் மன்னிக்கிறார்? என்று பார்க்கலாம். (4 அதிகாரங்களையும் படித்தால் முழுதும் அறியலாம்!)

யோபு (அதிகாரம் 1)
இங்கே கடவுள் ஏன் மனிதனை சோதிக்கிறார் என்று அறியலாம்!

பிரசங்கி (அதிகாரம் 3)
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு என இங்கே சொல்லப்பட்டுள்ளது.

பைபிள் வைத்திருக்கும் எல்லோருக்கும் அநேகமாக இவையெல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தருமி said...

உங்களுக்குப் பதில் எனது அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன், ஞானபீடம்

புருனோ Bruno said...

கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிறார்கள். (பிரி - மதம் மாறியவர்களை தவிர)

தருமி said...

ப்ருனோ,
//கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிறார்கள்//

நானும் அப்படித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

சீனு said...

தருமி சார்,

எனக்கென்னவோ இப்படி இங்கு வந்து தன்னை தமிழ்படுத்திக்கொள்வதுகூட ஒருவித ப்ளான் தான் என்று தோன்றுகிறது.

பெங்களூரில் இருந்தபொழுது அங்கு கண்டது, அனைத்து கிருத்துவ தேவாலயங்களும் சுத்தமான அக்மார்க் கன்னட பாஷையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அங்குள்ள மக்களின் பாஷையை கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களின் 'வேலை' இன்னும் சுலபமாக முடிந்து விடுகிறது என்பது என் கருத்து.

தருமி said...

சீனு,
நீங்கள் சொல்வதெல்லாம் முற்றும் முற்றும் உண்மைதான்.

Post a Comment