Tuesday, November 22, 2005

108.தல புராணம்…5*
ஏனைய பதிவுகள்:
1...................
2..................
3...................
4..................
5..................*

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 மீட்டர்தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…
Nov 22 2005 10:10 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 8 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
20 Responses
Kumaran Says:
November 22nd, 2005 at 11:05 pm e
நம்ம ஊர் புராணம் சொல்றீங்க அதனால ஒரு + போட்டுட்டேன். ரீகல் தியேட்டர் (தங்க ரீகல் ஆவதற்கு முன்) உரிமையாளர்களில் (14 பேர் இருந்தார்கள்) என் தாய்வழி தாத்தாவும் ஒருவர் என்பதால் நிறைய படங்கள் பாப்கார்னுடன் ஓசியில் பார்த்திருக்கிறேன்.

சன்னாசி Says:
November 23rd, 2005 at 12:49 am e
//இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது!//

என்னதான் தள்ளுமுள்ளாக இருந்தாலும், கம்பியில் காலைவைத்து ஏறுகிறேன் என்ற சாக்கில் வரிசையில் முன்னால் நிற்கும் ஆள் தோள்மேல் ஏறி நடந்து கூட்டத்துக்குள் பாயும் rock starகள் போல சர்வசாதாரணமாக சினிமா டிக்கெட் கவுண்ட்டரைநோக்கிப் படையெடுக்கும் நபர்களை முதன்முதலாக மதுரையில்தான் (மாணிக்க விநாயகரில், அதுவும்!!) பார்த்தேனென்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன் . பார்க்கச் சென்றது Gladiator படமென்பது உபரித் தகவல்!!

Rajan Says:
November 23rd, 2005 at 2:37 am e
Dear Dharumi

In another corner of college house around 6-7 PM I used to be there standing with another group. In your busy chit-chat with your friends you would not have noticed a slim person in his kadar dhoti and shirt wearing a specs chatting with another group in another corner of the same college house. That person is now deciding the financial fate our country.

People used come in their Enfield Bullets from neighbourhood villages just to have a coffee and meet friends in college house. The full meals lunch of college house was very famous next to its coffee once upon a time. Now a days for coffees small roadside chains like Visalam are famous. Taste the coffee at Rajendra in a small lane (the one in my photo album) next to Sai Engg in Townhall road. They still maintain a superb taste.

Now a days it is very difficult to find a suitable joint near townhall road. Since college house became crowded we started assembling behind Sarvodhya Ilakkiyap Pannai. Hmm, I miss all those days crisscrossing the town without any purpose, chitchatting, going to second show movies, chatting for another couple of hours after the movie was over. That was a life.

When I sought a permission to apply for a passport, Major.PPC told me ‘Maduraiyai Chuthuna Kazhuthai kooda veliya pogaathu, neeya pogap pora?’

Regards
Rajan

Rajan Says:
November 23rd, 2005 at 2:45 am e
One more titbit:

The land where the current college house stands was originally acquired to build the current Madura College. Somehow instead of college, a lodge with boarding facility came up. So it acquired the name college. Seerkazhi Sivachidambaram is married to the daughter of this complex. Rest you carry on. There was a joke on how rickshaw waalaahs used to bring people from railway station to college house.

Regards
Rajan

துளசி கோபால் Says:
November 23rd, 2005 at 3:10 am e
தருமி,

காலேஜ் ஹவுஸ்ன்னு சொன்னதும் எனக்கு ஞாபகம் வர்றது என்னன்னா, அடுக்களை
பக்கத்துலே ஒரு பெரிய ஹாலிலே ஆட்டுக்கல்லுங்களாப் போட்டிருக்கும். எல்லாம்
மின்சாரத்தாலே வேலை செய்யும். கடமுடகடமுடான்னு தானே மேல்குழவி சுத்திச்சுத்தி
ஆட்டறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு ரொம்ப இஷ்டம்! ஒரு இரும்புச் சங்கிலி குழவியோட
சேர்த்திருப்பாங்க.

அதுசரி, நான் ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க

அந்தக் காலத்துலே மதுரைக்கு வர்றப்பெல்லாம் காலேஜ் ஹவுஸ்லேதான் தங்குவோம்.

அப்படி வர்றப்ப ‘தங்கத்துலே’ படம் பாக்கறதும் உண்டு.

வெளிகண்ட நாதர் Says:
November 23rd, 2005 at 5:22 am e
நீங்கள் சொல்ற மாதிரி சில தியோட்டர்ங்க பெருமையெல்லாம் அந்தந்த காலகட்டத்தோட முடிஞ்சு போவுது. நமக்குத்தான், பழய நினப்புதான், பேராண்டி, பழய நினப்புதாங்கிற மாதிரி அல்லாடுது. எதுவுமே நிலையைல்ல, இருந்த உருத்தெரியாம போவும்னு சொல்றாங்களே, அது மனுஷ ஜன்மத்தையும் சேத்து தான்.

தருமி Says:
November 23rd, 2005 at 2:27 pm e
குமரன்,
நீங்கள் பாப்கார்ன் மட்டும்தான் சாப்பிட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்!

இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?

குத்துக்கு நன்றி

தருமி Says:
November 23rd, 2005 at 2:32 pm e
சன்னாசி,
ஹும்..முந்தா நாள் வந்த படம் gladiator; அத நேத்து பாத்துட்டு இப்படி அசந்து நிக்கிறீங்க! அந்தக் காலத்தில சிவாஜி, எம்.ஜி.ஆர். படம் வந்தா முதல் இரண்டு நாள்ல கட்டாயம் எந்த தியேட்டரா இருந்தாலும் ஒண்ணு ரெண்டு சாவு or at least குத்துவெட்டு நடக்கலன்னா என்ன ஊரும்பாங்க, தெரியுமா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:36 pm e
Rajan,
thanks for the tips. that gives me a chance to write about the ‘famous’ roadside coffee joints including vishalam. let me write it as an annexure to this.

“That person is now deciding the financial fate our country. ” // - whom do you mean, P.C. ..??

தருமி Says:
November 23rd, 2005 at 2:40 pm e
துளசி,
நீங்க என்ன சொல்லுங்க…”ஏன் மாவாட்டற இடத்துக்குப் போனேன்னு கேட்டுறாதீங்க ..” - இதில என்னமோ இருக்கு. உண்மையைச் சொல்லிடுங்க எங்கிட்ட மட்டும்; நான் யார்ட்டயும் சொல்லலை, சரியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:42 pm e
வெளிகண்ட நாதர்,
நம்ம வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட சில விஷயங்களைத் திரும்பிப் பார்க்கும்போது-nostalgia ? - ஒரு சின்ன கலக்கம்தான்; இல்லியா?

தருமி Says:
November 23rd, 2005 at 2:47 pm e
குமரன்,
அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை?

குமரன் Says:
November 23rd, 2005 at 3:45 pm e
//அந்த வயசில் பாவம் உங்களை எந்தப் படம் பார்க்க அனுமதித்திருக்கப் போகிறார்கள்//

உண்மைதான். எல்லா படத்துக்கும் என்னை அனுமதித்தது கிடையாது. எங்க அப்பா மட்டும் போய் பார்ப்பார்.

//இப்போது மூடிக்கிடக்கும் நியூ சினிமா தியேட்டரும் அந்த குரூப்புக்கு உரியது என்பார்களே? உண்மையா?// உண்மை.

//அது என்ன என் பதிவின் பின்னூட்டத்தில் மட்டும் உங்கள் படம் வரவில்லை? // ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

Rajan Says:
November 24th, 2005 at 12:21 am e
Yes Sir, It was PC. That was in early 80s. One day, by pointing him my friend whispered in my ears “see that person is paana cheena who translates Indira’s speeches in meetings’. He used to be seen in college house frequently along with aavanna rathinam et al. College House book store is the only place in Madurai, where you can find everything from Time magazine to Kanayaazhi. For a city like Madurai where public parks and beaches are of unheard things, college house served the purpose of everything. Another peaceful airy place is Kovil’s aadi veedhi, the beach of Madurai.

Yes, you may write about such roadside popular joints like visalam, mudaliyar idli, konar mess, nagapattinam kadai etc too, pl. feel free to use that idli shop photo, if you need. Although lot of big hotels came to Madurai my favorite eating places are still the Rajendra, Gobu Iyengaar, Modern Rest, visalam cofee only.

New Cinema, Reagel, Thangam, Parameswari were managed by a group of partners I think.

Thanks
Rajan

anand Says:
November 24th, 2005 at 10:52 am e
தருமி. நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை
எங்கே படம் ??

தருமி Says:
November 24th, 2005 at 11:17 am e
ஆனந்த்,
http://dharumi.weblogs.us/2005/11/08/124- படம்தான் சொன்னேன்.

தருமி Says:
November 24th, 2005 at 11:22 am e
rajan,
i had missed the opps to be some bigwig by a whisker, it seems!

கோ.இராகவன் Says:
November 24th, 2005 at 4:11 pm e
தருமி, எனக்கு விவரம் பத்தாத சிறு வயதில் (இப்ப என்ன பத்துதுன்னு கேக்காதீங்க) தங்கம் தேட்டரில் மலையூர் மம்பட்டியான் படம் பார்த்தேன். பிறகு தூத்துக்குடிக்குப் போய், சார்லஸ் தேட்டர் அளவுக்குப் பெரிய தேட்டர் மதுரைல ஒன்னு இருக்குன்னு நண்பர்கள் கிட்ட சொல்லீட்டு இருந்தேன். அது உண்மையில்லை. தங்கம் உண்மையிலேயே மிகப்பெரியது என பிறகு உணர்ந்தேன்.

சென்ற முறை மதுரை சென்ற பொழுது தங்கியிருந்தது காலேஜ் ஹவுசில். பழைய பளபளப்பு இல்லாவிட்டாலும் சாப்பாடு பிரமாதம். தோசை போன்ற ஐட்டங்கள் சூப்பர்.

மணியன் Says:
November 24th, 2005 at 5:05 pm e
மதுரையின் காலேஜ் ஹவுஸ் மற்றும் ரீகல் பற்றியெல்லாம் முன்பே குமுதம், விகடன் மதுரை சிறப்பிதழ்களில் வந்திருந்தாலும், அவற்றோடு இணைந்திட்ட நினைவுகளை நீங்கள் பகிரும்போது அவற்றின் முழு பரிமாணம் உணரமுடிகிறது. எல்லோருக்கும் அவரவர் மதுரை நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

தருமி Says:
November 25th, 2005 at 2:05 pm e
இராகவன்,
உங்க ஊரு சார்லஸ் தியேட்டர்தான கப்பல் மாதிரி இருக்கும்?

நன்றி, மணியன்.

No comments:

Post a Comment