Saturday, April 29, 2006

156. சிவாஜி –> கமல் –> ???

Image and video hosting by TinyPic


சிவாஜி நல்ல நடிகர்தானா என்று கேள்வி கேட்போரும் உண்டு. அந்தக் கேள்வியிலும் நியாயம் உண்டு. நாம் நல்ல நடிப்பு என்று கருதும் விஷயங்களின் அளவுகோல்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை வைத்துதான். ஹாலிவுட்டில் பல நடிகர்களின் நடிப்பு சிறந்ததாகக் கருதப்பட்டாலும் மார்லன் ப்ராண்டோ தனக்கெனத் தனியிடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. அவரது On the water front என்ற படத்தை மும்முறை பார்த்திருக்கிறேன். நாம் வழக்கமாகச் சொல்லுவோமே -’அவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கவில்லை; அந்த்ப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டார்’ என்று, அதேபோல்தான் அந்தப் படத்தில் மார்லன் ப்ராண்டோ அந்தக் கதா பாத்திரமாகவே மாறியிருப்பார். எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். அதேபோல் Godfather படத்தில் சிறிதே மாறுபட்ட மேக்கப்புடன், அவர் வழக்கமாக உதடுகள்கூட அசையாமல் பேசுவாரே அந்தப் பேச்சும், நடிப்பும் அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றும் என்றும் பேசப்படும். இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது. எனக்குப் பிடித்த இன்னொரு நடிகர் Antony Quinn. அவர் நடித்த Hunchback of NotreDame, La Strada மனதை விட்டு அகலாத, அவரது நடிப்புதிறனை வெளிக்கொணர்ந்த படங்கள். அதிலும் Umar Muktar என்ற படம் அச்சு அசலாக நமது கட்டபொம்மன் படம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும் - சுதந்திரத்திற்காக ஆள வந்த அயல்நாட்டுக்காரர்களை எதிர்த்த இரு புரட்சியாளர்களின் கதை. ஆக்கப்பட்டிருந்த விதங்களில் அவைகள் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன. இந்த ஆங்கிலப்படங்களில் அந்த நடிகர்களைக் காணும்போது இது போல் சிவாஜியால் எளிதாக நடித்திருக்க முடியும்; ஆனால் அவரை அவ்வாறு நாம் நடிக்க விடவில்லை என்ற உண்மைதான் மனதில் தைக்கிறது. அவருக்கும் சினிமாவைப் பற்றிய ஒரு பறவைப் பார்வை இல்லை. அதுவும் சினிமாவைப் பற்றிய உலகளாவிய ஒரு பார்வையோ, அது பற்றிய ஞானமோ சுத்தமாக இல்லவே இல்லை. நமது கைதட்டல்களும், விசில்களும் அவரை நாம் ஏற்றி வைத்த பீடத்திலிருந்து அவர் இறங்கி வந்து ஏற்கெனவே நன்கு வளர்ந்திருந்த மற்ற நாட்டுப் படங்களின் போக்கைப் பற்றிய உய்த்துணர்தல் ஏதும் இன்றி அவரை ஒரு ‘தனிக்காட்டு ராஜா’வாக முழுமையாக ஆக்கி விட்டது. இப்போது அவரைப் பற்றி நினைவு கூறும்போதெல்லாம் He had all tha potential; but Tamil film world did not utislise his talents fully’ என்ற cliche -வைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்படியாகி விட்டது. அவராகவே முடிவெடுத்தோ அல்லது அந்தப் பட டைரக்டர் பந்துலு (?) சொன்னதின் பேரிலோ கப்பலோட்டிய தமிழன் படத்தில் ‘அடக்கி வாசித்திருந்தார்’. ஆனால், அந்தப் படம் வெளியான போதோ பெரும் தோல்வியைச் சந்தித்தது. Our taste buds never relish newer and even better tastes ! at least சினிமாவைப் பொறுத்தவரையாவது. கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதை யாரும் கேள்வி கேட்பதேயில்லை. காரணம் கமல் தன்னை ஒரு விஷயம் தெரிந்த நடிகனாக ஆக்கிக் கொண்டுள்ளார். உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம். ஆயினும் தமிழ் சினிமா உலகத்துக்கே உரித்தான பல்வீனம் அவரையும் பாதித்துள்ளது. பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். அவரது ‘தளபதி’ படத்திற்கான அந்தக் கதைக்கு அவர் யாருக்கும் royalty தராமலேயே ஒரு நல்ல கதையைப் பெற்று, அதை நல்ல திரைக்கதையாக்கி ஒரு வெற்றிப் படம் அளித்தார்! மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ. தாங்களே கதாசிரியர்களாக மாறி, தாங்களே திரைக்கதை, வசனம்…இப்படி பல பொறுப்புகளையும் தங்கள் தலைகளில் ஏற்றிக்கொண்டு நம் டைரக்டர்கள் ‘சுமை தூக்கும் கழுதை’களாக மாறி விடுகின்றனர். (பாரதி ராஜா இதில் கொஞ்சம் விதி விலக்கு)கமலுக்கு இந்த ஆசை கொஞ்சம் அதிகம். படத்தில் தன் முழு ஆளுமை வேண்டும் என்பதற்காகவோ என்னவோ அவரே பல விஷயங்களிலும் தலையிட்டு, நடிகன் என்ற தனிப் பொறுப்புக்கு செலவிட வேண்டிய தன் சக்தியை வீணடிக்கிறார். அவரது சிந்தனை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து புதுப் புது விஷயங்களைக் கதைக்களன்களாக மாற்றும் கதாசிரியர்கள் இல்லை. அதற்காக அவரே மற்ற மொழிப்படங்களின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு நம் ரசனை, வாழ்வியல் பழக்க வழக்கங்கள் என்பதற்கேற்ப அவைகளை மாற்றும் ரசாயன வித்தைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இத்துணை வசதிக்குறைகளோடும், அவர் இன்னொரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்க வேண்டியதுள்ளது. அது ஏற்கெனவே சொன்னது போல, ‘எங்கள் ரசனைகளை மாற்றிக் கொள்ளவே மாட்டோம்’ என்ற கொள்கையில் உறுதியாக நின்று கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமுதாயம்! இங்கே கதாநாயகன் படங்களில் தனியொருவனாக நின்று பெரும்படையையே எதிர் கொண்டு அழித்தாலும், தரையிலிருந்து எம்பி எத்தனை அடி குதித்தாலும், எவ்வளவு முட்டாள்தனமான காரியங்கள் செய்தாலும் பரவாயில்லை; ஒரு ‘பஞ்ச் டயலாக்’ சொல்லணும்; கடைசியில எல்லாம் நல்ல படியா முடியணும் அவ்வளவுதான். சகிக்க முடியாத முக லாவண்யம் இருந்தாலும், அந்த நடிகனோ நடிகையோ ரெண்டு படத்தில் வெற்றிகண்டால் போதும் அவர்களுக்குப் பின்னே கூட்டம் போட்டு விசிலடிக்கத் தயார். இந்த ஃபார்முலாக்களில் இருந்து நம் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சமும் மாறுவதாயில்லை. எனவே இங்கு புத்திசாலித்தனமும் திறமையும் மதிக்கப்படுவதில்லை; அதிர்ஷ்டமும், வியாபார லாபமும்தான் நமது அளவுகோல்கள். இந்த சூழலிலும் தனித்து நிற்கும் கமலைப் பாராட்டவேண்டும்.

முன்பேகூட ஒரு பதிவில் கேட்டிருந்தேன் - ஏன் நமது தமிழ்நாட்டில் இரண்டாந்தரங்கள் எப்போதும் சுத்த அக்மார்க் முதல் தரங்களாக மக்களால் போற்றப்படுகின்றன என்று. சிவாஜி - எம்.ஜி.ஆர்.; கமல் - ரஜினி என்ற தொடரில் இன்று மக்கள் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நல்ல சில நடிகர்களைப் புறந்தள்ளி முன்னணி நடிகராக இருப்பது நம் வழக்கமான ஃபார்முலாப் படிதான். stereotyped cast, புதிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிடவும் எடுக்கவே மாட்டேன் என்று கூறுவதும் அவரின் தனித் தன்மை. இப்போது உள்ள இளம் நடிகர்களில் நல்ல நடிகர் யார் என்ற கேள்விக்கு எத்தகைய தயக்கமின்றி நான் சொல்லும் பதில் - சூர்யா. முதலில் வந்த சில படங்களில் கொஞ்சம் பாவமாகவே இருந்தது - அவரது தந்தை சிவகுமாரை உயர்ந்த மனிதன் படத்தில் பார்த்தது போல. அதன் பிறகு நல்ல பிரமிப்பு
தரும் வளர்ச்சி. முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. சடை வளர்த்து அதற்கு மேல் ஒரு போலீஸ் தொப்பியை வைத்துக் கொண்டு அந்தப் பதவியை ஒரு mockery செய்த நடிகர்களே அதிகம். ஆனாலும் அந்தப் படத்தின் நடிப்பு இயக்குனரின் ‘அடக்கு முறையால்’கூட வந்திருக்கலாம். ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான். இறுதி சீன், கதையமைப்பு, charectersation - இவைகளே அந்தக் கடைசி சீனில் விக்ரமையும் அந்த சீனில் அவர் நடிப்பையும் நம் மனதில் நிலை நிறுத்தியது. தண்ணி அடிச்சிட்டி ‘அப்டியா?’ன்னு கேக்குற இடமெல்லாம் தமிழ்ப் படத்துக்கு ரொம்பவே புதுசு. சூர்யாவின் நடிப்பு பட்த்துக்குப் படம் மெருகேறி வருவது கண்கூடு. இதுவே அவரை நம் தமிழ்த் திரை உலகத்தின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 29 2006 03:30 pm சினிமா
62 Responses
bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:45 pm






bharaniru_balraj Says:
April 29th, 2006 at 4:47 pm
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுரார்.

8 அடி = 16 அடி

Muthuraman Says:
April 29th, 2006 at 6:42 pm
Sivaji ellaa padathilum over acting pannavillai. udharanthukku mudal mariyathai, devar makan , even parasakthi. neenga sonnathu pola avarai nadikka vida villai enru thaan sollanum.

Prasanna Says:
April 29th, 2006 at 10:31 pm
நல்ல நடிகரை பயன்படுத்த தெரியாமல் விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். உயர்ந்த மனிதன், முதல் மரியாதை, தேவர் மகன், புதிய பறவை போன்ற படங்கள் மிகச் சிறந்த நடிப்பால் மெருகேற்றப்பட்டவை. பாபு படத்தில் ரிக்ஷாகாரனாக செய்ததை பாராட்டாதவர்கள் எம்.ஜி.ஆரின் ரிக் ஷா காரன் படத்திற்கு தேசிய விருது தந்தார்கள். இன்று கமலையும் அப்படித்தானே செய்து விட்டார்கள். வசூல்ராஜா கமலின் கேரியருக்கு என்ன நன்மை செய்தது என எனக்கு தெரியவில்லை..

TheKa Says:
April 29th, 2006 at 11:02 pm
நல்லா சிந்தித்து தீர்க்கமான முறையில அருமையா எழுதியிருக்கிற கட்டுரை, தருமி. ஆனால் நாம் ஒன்றை கவனத்தில் நிறுத்த தவறக்கூடாது, மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இரங்குகிறார்கள் இல்லன்னா…குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற விசயப் படங்கள் மாதிரி ஊத்திக்க வேண்டியதுதான்.

எனவே இது நடிகர்களின் தவறு இல்லை, நம் ரசனையில்தான் இருக்கிறது என்பேன்.

என்ன ரேடியோவில நாம நாடகம் கேட்டதெல்லாம் மறந்து போச்சா…சார் நடிடிடிடிடிக்க்க்கனும் சார்…

சூர்யா நல்ல தேர்வு.

தெகா.

வெளிகண்ட நாதர் Says:
April 29th, 2006 at 11:38 pm
//பக்கத்தில் இருக்கும் கேரளாவில்கூட நல்ல இலக்கியக் கர்த்தாக்கள் சினிமாவுக்குக் கதை எழுதுகிறார்கள்; அல்லது அவர்களது சிறந்த படைப்புகள் படங்களாக உருமாறி வருகின்றன. ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது.//
நல்ல நாவல்களை படமெடுக்கும் முயற்சியில் வெற்றி கொண்ட மகேந்திரன் ஏனோ அதிகம் தொடர்ந்து எடுக்கவில்லை! அதே போல R.செல்வராஜின் அழகான ஆழம் மிகுந்த கிராமியக்கதைகளை, நம் மண்வாசனை கொண்ட கதைகளுக்கு நல்ல திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக ஆரம்பத்தில் எடுத்த படங்களுக்கு பிறகு, பராதிராஜா பிறகு மசாலாவிற்கு சென்றதும் வருத்தமானது! அதே போல, அந்த கால நடிகர்களில் அதீத செயற்கையில் நடித்தால் தான் நடிப்பு என்று இலக்கணம் படைத்துக்கொண்டிருந்த சிவாஜியின் காலகட்டத்தில், அதிக மசலா, மக்கள் ஈர்ப்பு ஃபார்மலாவில் தன்னை தனியாக நிலை நிறுத்தி கொண்டிருந்த எம்ஜிஆர் போன்றோர் நடித்த காலகட்டத்தில், மிதமாகவும் இயல்பாகவும் நடித்த ஜெமினி கணேசன் எவ்வளவோ மேல்!
//உலக சினிமாவை நன்கு புரிந்து கொண்டு, அதன் வீச்சை முழுமையாகப் புரிந்து கொண்ட கலைஞன் என்ற முறையில், சிவாஜிக்கு இல்லாத ஒரு புது பரிமாணத்தோடு சினிமாத்தொழிலில்
ஈடுபடுவதே அவரது இந்த உயர்ந்த நிலைக்கும், புகழுக்கும் காரணம்.// இதுவும் கொஞ்சம் அதிகம் புகழுவது. ஏனென்றால் மிதமான எதார்த்த நடிப்பை விட அதிபிரசங்கித்தனமான ஓவர் ஆக்டிங் வெளிப்பாடுகள் அதிக இடங்களில் கமலிடம் வெளிப்படுவது உண்மை. இதை நான் ஒரு நடிகன் என்று உணர்ந்து நான் நடித்த காலங்களில் இந்த அதீததை தவிர்க்க நான் பெரிதும் பாடுபட்டிருக்கிறேன்! ஆனால் இது போன்ற அதீதமான நடிப்புகளுக்கு, மக்களிடையே இருந்து வரும் ஆதரவு, கைத்தட்டல், விசில் போன்றவை தரும் போதைகள் அதிகம், அதனால் அதை முழுவதும் விட்டு விட்டு இயல்பான நடிப்புக்கு மாறுவது சற்று கடினமே! இதுவும் நான் உணர்ந்த என் அனுபவம்! ஆதாலால் நடிப்பின் பரிமாணங்களை நிறைய கற்று கொண்டு அதில் மிளர எத்தனையோ யுக்திகளை கடைபிடிக்க இன்று இருப்பது போல, அதனை பக்கத்தில் கண்டுணர்வதுகுண்டான வசதிகள் அப்பொழுதில்லை. ஆனால் அவை அனைத்தும் இருந்தும் இப்பொழுதும் நமது பெருவாரியான ஜனங்களின் ரசிப்பு தன்மையில் அதிக முன்னேற்றம் ஏதும் வரவில்லை என்றே கூறுவேன். அது என்னமோ மெத்தபடித்து, இது போன்ற வசதிகளை பெற்று, பல மடங்கு பரிணாமங்களை பெற்று நடிக்கும் நடிப்பு திறன்கள், புது கதை களங்கள், மற்றும் கதை சொல்லும் பாங்கு போன்வற்றை பார்த்தும், நம் மக்களின் ரசனை வீணாப் போன இந்த ‘திருப்பதி’ போன்ற படங்களை கண்டு ரசிக்கும் தன்மை மாறவில்லை. இதை கண்கூடாக இங்கு அமெரிக்காவிலும் நான் பார்க்கிறேன். இதை என்ன சொல்லுகிறீர்கள். நம் தமிழனக்கு இந்த அதீதமான உணர்வுகள் தம்மால் வெளிகொணற முடியாத அந்த உணர்ச்சி மற்றும் செய்கைகளை திரையில் மற்ற பிம்பங்கள் செய்யும் பொழுது அவனை அறியாமலே பொங்கும் அந்த உணர்ச்சியும் ஒரு காரணம் நீங்கள் சொல்லும் மாறாத நிலை, அதனால் உண்டான வியாபாரத்த்ன்மை! இது மாற பல காலங்கள் ஆகலாம். அது வரையில் சூரியா போன்றோர் மென்மேலும் தங்களி செதுக்கி ஒரு பண்பட்ட நடிப்பின் ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பது நல்லது. அதுவரை விஜய்யும் பேரரசு போன்றோரின் ஆளுமை தான் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்க போகிறது!

குறும்பன் Says:
April 30th, 2006 at 12:14 am
உண்மை படத்திற்கு படம் சூர்யாவின் நடிப்பு மெருகேறிவருகிறது. நல்ல நடிகர் கணக்கில் விக்ரமையும் சேர்த்துக்கொள்ளலாம். முதல் மரியாதையில் சிவாஜி நடிக்கவில்லை வாழ்ந்தார்.
எல்லா (90%) மசாலாபடங்களும் ஓடுவதில்லையே? ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும் .

துளசி கோபால் Says:
April 30th, 2006 at 2:13 am
தருமி,

தமிழ்சினிமா ரசிகர்களின் ‘டேஸ்ட்’ தனிரகம்ன்றது இப்பவாவது புரிஞ்சதா? :
சிவாஜி நாடக மேடையிலே இருந்து வந்தவர். அதான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்னு சொல்லும்படி ஆயிருச்சு.
ஆனாப் பாருங்க, சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனருக்குத்தான் எதை எப்படி எதுவரை செய்யணும்றது
தெரியணும். சரியான நடிப்பு வர்றவரை திரும்ப ஷூட் செய்யலாம்தான். தயாரிப்புச் செலவு கூடிரும்.

ஆனாலும் இதுக்கு முழுப் பொறுப்பு டைரக்ட்டர்தாங்க.

எனக்கும் கமலுக்கு அடுத்தபடி சூர்யாதாங்க.
இன்னும் என்னென்னமோ சொல்லணும்தான். பார்க்கலாம். பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்.

சிட்டுகுருவி Says:
April 30th, 2006 at 10:57 am
சூர்யா வை பற்றி என்பதால் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அந்த வரிசையை அடைய.
மற்றபடி நடிகன் என்ற நிலயை தாண்டி சகலகலாவல்லவன் ஒரு கலைஞனுக்கு நிகர் (multi-skill artist) இந்தியாவில் இன்னும் யாருமில்லை.
இங்கு தமிழை தாண்டி யோசித்தால், மம்மூட்டி யை இந்த வரிசையில் வைத்துத்தான் ஆக வேண்டும்.

கதாநாயகன் என்ற அந்தஸ்து எடுத்துவிட்டால், ரகுவரன்,நாசர்,பிரகாஷ்ராஜ் இவர்களை ஒதுக்க முடியாது.

ஏன் ரஜினியையே நாம்தான் கெடுத்துவிட்டோம். அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,16 வயதினிலே.. கமலுடன் சேர்ந்து நடிக்கும் போது,நிறைய இடங்களில் கமலைவிட நன்றாக perform செய்திருப்பார்.
நன்றி…

தருமி Says:
April 30th, 2006 at 11:14 am
bharaniru_balraj,
நான் கணக்குல ரொம்ப வீக்குங்க. நீங்க வேற கணக்கு போட்டுத்தள்றீங்க..
அதோடு ஸ்மைலிகள் வேறு.

என்ன சொல்றீங்கன்னு தெளிவா சொல்லுங்களேன்; புரிஞ்சுக்கிறேன்.

பிறகு இன்னொண்ணு - உங்க இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு என்ன மாயக்கண்ணாடி போடணும்னும் சொல்லிருங்கோ.

தருமி Says:
April 30th, 2006 at 11:19 am
மன்னிச்சிக்கங்க bharaniru_balraj,
லின்க் தப்பா கொடுத்திட்டேன். நான் சொன்னது இந்தப் பதிவைத்தான். ஒரு preview option இருந்தா இதுக்குத்தான் நல்லதுன்னு தோணுது

தருமி Says:
April 30th, 2006 at 11:25 am
Muthuraman,
அவரை நன்றாக நடிக்க நாமும் விடவில்லை; அவருக்குமே நாடக ஸ்டேஜிலிருந்து திரைப்படங்களுக்கு எடுக்க வேண்டிய பரிணாமம் தெரிகிற அளவுக்கு விஷய ஞானம் இல்லாம போச்சு. அவரோட காலமும் அப்படி.
நாமும் சரி அவரும் சரி ரொம்பவே unlucky.

ஆனால் இப்பவும் ‘வளர மாட்டேன்’ அப்டின்னு அடம் பிடிக்கிற சினிமாக்காரர்களும், ரசிகப் பெருமக்களான நாமும்தான் ரொம்ப மோசம் & பாவம்

தருமி Says:
April 30th, 2006 at 11:48 am
Prasanna,
நாம் ‘வளரணும்’ அப்டிங்கிறதுதான் எனது ஆசையும், எதிர்பார்ப்பும். என்னைக்கி அது நடக்குமோ…உங்க காலத்திலேயாவது வளருங்க’ப்பா

செல்வன் Says:
April 30th, 2006 at 11:57 am
பார்ட்னர்,

இதில் முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை.நல்ல படம் என்றால் என்ன?ரசிகன் விரும்புவதை தருவது நல்ல படமா அல்லது பண்டிதர்கள் விரும்புவதை தருவது நல்ல படமா?திரைத்துறை கலைத்துறையா வியாபாரமா என்பதை பொறுத்தே இதற்கான பதில் அமையும்.திரைத்துறை கலைத்தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.இது முழுக்க முழுக்க கமர்சியல் சினிமா எனும்போது கலையை இங்கு கொண்டு வந்து புகுத்துவது தேவையற்றது.

வியாபாரத்தில் இப்படித்தான் மேகின்டாஷ் சிறந்த கம்புயூட்டர் என பண்டிதர்கள் அனைவரும் சொல்வார்கள்.ஆனால் அதிகம் விற்பது பி.சியாகவும் வணீக ரீதியாக அடிவாங்குவது ஆப்பிள்,மேகின்டாஷாகவும் இருக்கும்.

வியாபாரத்தின் பொன்விதி quality is determined by customers,not by pundits என்பதாகும்.(Quality is as perceived by customers and not determined by manufacturer’s internal standards)

மேலும் தரமான படம் என ஒன்று தமிழில் இருக்கிறது என நான் நம்பவில்லை.(ஆங்கில,மலையாள,இந்தி படம் எல்லாம் நான் பார்த்ததில்லை,so can’t compare and comment).தரமான படம் என பண்டிதர்கள் சொல்லும் படங்களை பார்த்தால் அழுவாச்சி வரும்.அதில் பெரிதாக ஒன்றும் இருக்காது.நடிப்பை பார்,மேக்கப்பை பார்,மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார்,போலிஸ்காரன் போல் முடிவெட்டிக்கொண்டு போலிஸ்காரனாக நடித்திருக்கிறார் ஆ ஊ என்பார்கள்.யாருக்கு வேணும் அதெல்லாம்?who cares?what difference does it make to me?Who knows it?who notices it?Not me.I am not ready to spend my cognitive resources on such pointless things.I go there to have fun,not to do a reviewer’s job.ரஜினி பரட்டைத்தலையோடு இன்ஸ்பெக்டராக வந்தா தான் நல்லாருக்கும்.அழகா இருப்பார்.போலிஸ் கட்டிங்க்ல இன்ஸ்பெக்டரா வந்தா நல்லாவே இருக்காது.

ரஜினி படம் பார்த்து விட்டு திரயரங்கை விட்டு வெளிவரும் குடும்பம் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு வரும்.ஜாலியாக கணவனும் மனைவியும் சிரித்தபடி குழந்தைகளை அருகிலுள்ள ரெஸ்டாரண்டுக்கு கூட்டிப்போய் டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு,ரஜினி போல் குழந்தை வசனம் பேசுவதை,சண்டை பிடிப்பதை ரசித்துக்கொண்டு சந்தோஷமாக அந்தக் குடும்பம் வீட்டுக்கு போகும்.

கமல் படத்தை பார்த்துவிட்டு அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வெளியே வந்து மூட் அவுட்டாகி வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவார்கள்.காப்பியாவது,டிபனாவது?

கமல் சீரியசாக ஒருபடம் தந்துவிட்டு,காமடியாக இன்னொரு படம் தருவார்.ஒரு படம் விட்டு இன்னொன்றை தான் பார்ப்பது என வழக்கமாக வைத்திருக்கிறேன்.

தருமி Says:
April 30th, 2006 at 12:08 pm
தெக்காட்ஸ்,
“மக்களின் ரசனையை பொருத்துதான், தயரிப்பாளரும், இயக்குனரும் அந்த குட்டைக்குள் இறங்குகிறார்கள் ..”//

இது ரொம்ப age old excuse ! இதுக்கு நான் கொடுக்கிற age old answer இதுதான்: வீணை செய்ற கலைஞனால ரொம்ப விற்குமே அப்டிங்கிறதுக்காக அகப்பைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டான். நல்ல கலைஞனால் மோசமான படைப்பைத் தர முடியாது. (அந்த உணர்வை சலங்கை ஒலியில் இயக்குனர் நன்கு காண்பித்திருப்பார்)
ஒரு ஆடூரையோ, நம்ம மகேந்திரனையோ ஒரு திருப்பதி/ திருப்பாச்சி படம் எடுக்கச் சொல்லிப்பாருங்க…பாவம் அவர்களால் அது முடியாது.

நம்ம ஆளுகளுக்கு அவ்வளவுதான் ஐவேசு..சரக்கே அவ்வளவுதான். கேட்டால் ரசிகர்கள் (வினியோகஸ்தர்கள்) அதைத்தான் கேட்கிறாங்கன்னு நம்ம தலையில போட்டுருவாங்க. அவங்க சரக்கைப் பத்தி அடுத்த பதிவு ஒண்ணு போடுறேன். அவ்வளவு எதுக்குங்க, சமீபத்திய நிகழ்வு: பாலாவின் பிதாமகனில் ஒரு டப்பா டான்ஸ் வேணும்னு வினியோகஸ்தர்கள் கேட்டதால் சிம்ரன் டான்ஸ் ஒண்ணு கடைசியில சேர்த்ததாக ஒரு செய்தி.அந்த நடனம் படத்துக்கு ஒரு பிளஸ் பாயிண்டாகத்தான் இருந்தது - though focus was on Surya and not on simran. that is out and out becasue of Bala. making of that scene was simply great unlike - இப்படிப் போடு போடு/ வடுமாங்காய் ஊறட்டுமா?

தருமி Says:
April 30th, 2006 at 6:02 pm
வெளிகண்ட நாதர்,
நீங்கள் கூறுவதில் பலவற்றுடன் உடன்படுகிறேன் - சில விஷயங்கள் தவிர.
ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety? சந்தோஷமாக இருந்தால் கோட்டு சூட்டு; கவலையானா ஜிப்பா,பைஜாமா. கொஞ்சம் வளையாத உடல்வாகு..எப்பவும் ஒரு straight rod போன்றதொரு உடலமைப்பு. pliability totally missing …இல்ல..?

கமல்: ஓவர் ஆக்டிங்..? இதை நம் திரைப்படங்களில் சிறிது சிறிதாக ஏற்பட்டு வரும் பரிணாமம் என்றுதான் என்னால் கூற முடியும். ஹாலிவுட் படங்களில் நடிகர்களின் நடிப்பைவிடவும் உணர்ச்சிகளைக் காண்பிக்க கேமிரா கோணங்களும், இசையும் பெரிதும் பயன் படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த cliff hanger பட்த்தின் முதல் சீனில் உயிருக்குப் போராடும் ஒருவரின் நடிப்பு ஒரு சில காமிரா கோணங்களினாலும் இசையாலும் உயிர்ப்போடு இருக்கும்.நாம் இன்னாள் வரை நாம் எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….

TheKa Says:
April 30th, 2006 at 6:44 pm
தருமி, உங்க காச போட்டு இந்த ‘காட்டான’ சினமா காட்ட கூட்டிடு போனீங்கன்னா, அந்த படம் டப்பவா இல்ல தங்கமான்னு தெரிஞ்சுக்கலாம், எப்படின்னு கேளுங்க…நான் ஒரு அளுமூஞ்சி படம் பாத்துகிட்டு இருக்கும் போது கீழ குமிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா, இயக்குனர் என் மனச ‘lick’ பண்ணீட்டருன்னு பொருள் அதுக்காக, கையிலா அம்மாவ தூக்கிட்டு கோயில் படில ஹீரோ “அம்மாவை வணங்காத”ன்னு பாடிக்கிட்டு ஏறப்ப அப்படி தோணுமான்னு கேக்காதீங்க…என்னமோ தோனாது…

KOZHUNDU Says:
April 30th, 2006 at 7:14 pm
உலக அளவில் பேசப்படுகிற படங்களில் இயக்குனர்தான் கடவுள். கமலோட திறமையால பல இயக்குனர்களெல்லாம் இவர்கிட்ட வேலைதான் செய்யறாங்க. சிவாஜி விசயத்திலேயும் இதேதான் நடந்தது. சிவாஜியை சரியா உபயோகித்தவர் பாரதிராஜா. நம்ம மக்கள் சினிமாவுக்கு போறது
மூணு விசயத்துக்காகன்னு நினைக்கிறேன். அன்றாடம் கவலையை மறக்கிறதுக்கு, நம்மளவிட அழகானவங்கள பாக்கிறதுக்கு, நம்மால முடியாததை மத்தவங்க செய்யறத பாக்கிறதுக்கு.
வாழ்கைத்தரம் முன்னேற முன்னேறத்தான் வேறு விதமாப் படங்கள் வரப் போகுது. ஆனா இதுல ஒரு விதி விலக்கு இருக்கு. பலரோட அனுபவங்கள திரைப்படங்களா இயல்பா காமிக்கணுன்னு வரும் போது இயக்குனருக்கு வெற்றி. அந்த காலத்தில ஒரு தலை ராகம். இந்த காலத்தில காதல், தவமாய்
தவமிருந்து. ‘hunchback of notredame’ யெல்லாம் தமிழ்ல ஒடவே ஓடாது. அன்பே சிவத்தில கமல் முகத்தை கோரப் படுத்திக்கிட்டது படம் ஓடாததற்கு ஒரு காரணம். அட அது கதைக்கு தேவைன்னு சொல்லலாம். அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?

கமல் தானே இயக்குகிற படத்தில் இந்த தப்பைப் பண்ணுகிறார். காட்சி அமைப்புகளின் நீளம் அதிகம். சேரனும் இதையே செய்கிறார். யார் வீட்டிலயாவது சாப்பிட போகும் போது, சாப்பாடு நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை ஆரம்பத்திலேயே சொல்லிட்டா, எழுந்து போக விட மாட்டாங்க.
தட்டில அதிகமா விழுந்துகிட்டே இருக்கும். நமக்கு என்னடா செய்யறதுன்னு ஆயிடும்.

கமலோட வலிமை, காட்சி அமைப்புகள்(Details). நகைச்சுவை.

சூர்யா நல்ல தேர்வு!

அன்புடன்
சாம்

//எதிர்பார்ப்பது முகத்தின் ஒவ்வொரு தசையும் துடிக்கணும்; கண்ணுக்குக் கீழ் உள்ள சதை மட்டும் ஆடணும்….//

எனக்கு மாடு ஞாபகம் வருது )

dharumi Says:
April 30th, 2006 at 9:25 pm
partner,
better you visit this my earlier posting: 106. (8.M.G.R.–>ரஜினி–>விஜய்–>..???) - பின் குறிப்பு The very first line may question your view. you are welcome to come back after reading that…

ஜோ Says:
April 30th, 2006 at 9:31 pm
தருமி,
நான் இதைப்பற்றி பின்னூட்டமெல்லாம் தர முடியாது.பதிவு போட்டால் தான் உண்டு..அவ்வளவு சொல்ல வேண்டியிருகிறது .இப்போதைக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன் .இயல்பு நடிப்பு ,மிகை நடிப்பு ,ஸ்டைல் நடிப்பு ,கம்பீர நடிப்பு ,வீர நடிப்பு ,கோழை நடிப்பு எல்லா நடிப்புலயும் மன்னன் ஒருவர் தான் .எங்கள் நடிகர் திலகம் தான் .அவருக்கு பிறகு கமல் தான்.

செல்வன் Says:
April 30th, 2006 at 10:02 pm
பார்ட்னர்
உங்களோட அந்த பதிவை முன்னமே படிச்சிருக்கேன்.என்னை பொறுத்தவரை சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.பொழுதுபோக்குக்காக மூளையை களட்டி வைக்கணுமான்னு கேக்கறீங்க.ஆமாம்னு தான் சொல்லுவேன்.மூளையோட பொழுதுபோக்க செஸ்,புத்தகம் படித்தல்னு நிறைய இருக்கு பார்ட்னர்.மூளையை கழட்டி வச்சுட்டு எஞாய் பண்ண மாயாஜாலம்,மந்திரம்,ரகளை,ரவுசுன்னு தர்ர சினிமா வேணும்.லைட் என்டெர்டைன்மென்டை போய் சீரியசா எடுத்துக்க சொன்னா என்னங்க பண்றது?

மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?

சினிமாங்கறது ஒரு குடும்பத்தோட சந்தோஷமான ஞாய்யிற்றுக்கிழமையை கழிக்க உதவணும்ங்க.சிரிச்சுட்டே குழந்தைகளோட சேர்ந்து படம் பாத்துட்டு பாப்கார்ன் சாப்பிட்டுட்டு ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வர்ர மாதிரி இருந்தா தானுங்க அது படம்.எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமா?கூட வர்ர 3 வயசு குழந்தைக்கும் படம் புரிய வேண்டாமா?

சிவாஜியோட பாசமலர்,பாகப்பிரிவினை எல்லாம் கஷ்டப்பட்டு எவ்வளவோ டிரை பண்ணியும் முழுக்க பாக்க முடியமாட்டேங்குது.பலே பாண்டியா,சபாஷ் மீனா,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி எல்லாம் பாத்தா சிரிப்பே நிக்க மாட்டேங்குது.குளோசப்ல அழுகற காட்சி அவர் மாதிரி யாராலும் பண்ண முடியாதும்பாங்க.எனக்கு அது பாக்க புடிக்காதுங்கறப்ப அது தேவைங்களா?

தயாரிப்பாளர் வாழணும்ங்க.ரஜினி படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருக்காங்க.சிவாஜி வாழ்க்கை முழுவதும் நடிச்சு சம்பாதிச்சு சேத்த சொத்தை விட அதிக சொத்தை பிரபுவுக்கு தந்து சந்திரமுகிங்க.
வேட்டையாடு விளையாடு எடுத்த காஜா மைதீன் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாரு,கலைப்புலி தாணு கிட்டத்தட்ட அந்த நிலைமைக்கு போயி தப்பிச்சாரு,அன்பே சிவம் எடுத்த வெங்கடேச்வரா பட கம்பனி அதோட காலி….அந்த படம் எடுத்த நஷ்டத்தை ஈடுகட்ட இலவசமா ஒரு படம் நடிச்சுதர்ரேன்னு கமல் சொல்லி கூட அவங்க ஒத்துக்கலையாம்.

இவரும் கஷ்டப்பட்டு,தயாரிப்பாளரையும் கஷ்டப்படுத்தி,படம் பாக்க வர்ரவங்களையும் அழ வெச்சு…எதுக்குங்க இதெல்லாம்?

சகலகலாவல்லவன் அடைந்த வெற்றி சரித்திர சாதனைங்க.நாயகன்,ஏ ராம் எதுவும் அது முன் நிக்க முடியாதுங்க.

தருமி Says:
April 30th, 2006 at 10:36 pm
குறும்பன்,
படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..?

தருமி Says:
April 30th, 2006 at 10:39 pm
துளசி,
“பின்னூட்டமெல்லாம் சுருக்கமா இருக்கணுமாமே.
டிபிஆர்ஜோ சொல்லி இருக்கார்..'’//
-அதெல்லாம் அவர் பதிவுகளுக்காகச் சொல்லியிருப்பார் பாருங்களேன்..சோதனையாய் இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் பல என்ன நீளம்னு. நீங்க எழுதுங்க..எழுதிக்கிட்டே இருங்க…

தருமி Says:
April 30th, 2006 at 10:43 pm
சிட்டுக்குருவி,
“சூர்யா இன்னும் சற்று தூரம் பயணம் செய்ய வேண்டும்.”//

- அதனால்தான் தலைப்பை அப்படி வைத்தேன்.

தருமி Says:
April 30th, 2006 at 11:01 pm
பார்ட்னர்,
“முக்கால்வாசி கருத்துக்களோடு நான் ஒத்துப்போகவில்லை” - கால்வாசிக்கு நன்றி
உங்கள் கேள்விகளுக்கு இரு வகை பதில்கள் கொடுக்கலாம்:
1. நாம் இருவரும் இந்த விஷயத்தில் இணைய முடியா இணை கோடுகள். வேற விஷயம் பேசுவோமா..?
2. உங்களைப்போலவே நகைச்சுவைப் படங்கள் Laurel&Hardyயிலிருந்து இன்றைய நகைச்சுவைப் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவை நகைச்சுவைப்படம் என்று தெரிந்து போய், மகிழ்வது என்பது வேறு. சீரியஸான படத்துக்குப் போய் அங்கே ஒருவன் பத்துபேரை தோளில் உள்ள துண்டு அல்லது கண்ணில் போட்டிருக்கும் கண்ணாடி, அல்லது உதட்டிலிருக்கும் பீடித்துண்டு கீழே விழாமலே எல்லாரையும் புரட்டி எடுக்கும் நகைச்சுவைக் காட்சி என்னை ரசிக்க வைப்பதில்லை.அந்த மாதிரி இடங்களில் என் பேரப்பையன் அதை ரசிக்கலாம்; ஆனால் நானுமா அதை ரசிக்க முடியும்?
genre - என்ற வார்த்தையே நம் சினிமா உலகில் இல்லையே என்பதுதான் வருத்தம். அப்படி இருந்தால் உங்களுக்குப் பிடித்தது நீங்கள் பார்க்கலாம்; எனக்குப் பிடித்ததை நான் பார்க்கலாம் - ஆங்கிலப்படங்களில் இருப்பது மாதிரி. இங்கே நாம் இரண்டு பேருமே ஒரே படத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதிருக்கிறதே!

அதோடு பார்ட்னர், நீங்கள் சொல்வது போல எல்லாமே சுகம் என்கிறது மாதிரியான படங்களாக இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது சரியா? இலக்கியங்களிலே எப்போதுமே அவலச்சுவைதான் நிலைத்து நிற்கும் இலக்கியங்களாக இருக்கின்றன - சிலப்பதிகாரம் போல். ஷேக்ஸ்பியரின் as you like it போன்ற நாடகங்களைவிடவும் Macbeth, Hamlet, Othello போன்ற சோக முடிவுள்ள நாடகங்களே புகழ் பெற்றன.

அடிப்படையில் ஒரு பெரிய வித்தியாசம் - நீங்கள் சொல்கிறீர்கள்: “சினிமாங்கறது பொழுதுபோக்குத் தான்.” எனக்கு அப்படி இல்லைங்க.

செல்வன் Says:
April 30th, 2006 at 11:41 pm
பார்ட்னர்,

நீங்கள் சொல்லுவதை புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் ரசனையும் எதிர்பார்ப்புகளும் வேறு,என்னுடையது வேறு.

நீங்கள் சொன்ன மாதிரி கலைப்படம் விரும்பும் ரசிகர்களுக்காக அம்மாதிரி படங்கள் தேவைதான்.வெரைடி இல்லை என்கிறீர்கள்.உண்மைதான்.variety will come with numbers.

ஒரு கதாநாயகன் 1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்.First blood, fist of fury,என்டர் தெ டிராகனில் எல்லாம் அப்படித்தான் வெளிநாட்டில் எடுத்தார்கள்.கிளாடியேட்டர்,Robinhood பார்த்தால் பழைய எம்ஜிஆர் படம் மாதிரி தான் இருக்கு.இந்த படங்களை எல்லாம் ஆஸ்கார் கொடுத்து நல்ல படம் என்கிறோம்.நம்மூரில் ரஜினி,எம்ஜிஆர் செய்தால் நமக்கு பிடிப்பதில்லை.

சரி…சினிமா சீரியஸ் இல்லைன்னு சொல்லிட்டு அதை சீரியசா ஆராய்ச்சி பண்ணி கிடைப்பது என்ன?

தருமி Says:
May 1st, 2006 at 10:13 am
கொழுந்து சாம் / சாம் கொழுந்து,
* முதல் மரியாதையையும் விட தேவர் மகன்தான் எனக்குப் பிடித்தது.
* அன்பே சிவம் தோற்றதற்கு நீங்கள் கொடுத்த காரணம் சரியா என்று தெரியவில்லை. அப்படியானால், பதினாறு வயதினிலே அதில் சேராதா?
* “அழகா இல்லாதவங்க
நடிச்சு படம் எதாவது வந்திருக்கா?” இப்படியெல்லாம் ஜோக் அடிக்கக் கூடாது. நம்ம பாரதிராஜா அறிமுகம் செய்த சந்திரசேகர், பாண்டியனிலிருந்து இன்றைக்கு நம்ம தனுஷ் வரை உள்ள ‘திரு முகங்களை’ மறந்திட்டீங்களா?

தருமி Says:
May 1st, 2006 at 10:14 am
ஜோ,
ஒண்ணு சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போய்ட்டீங்க…
தேர்தல் வேலையில் பிஸியா இருக்கீங்க போலும்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:39 am
தேவர் மகனையும் சேர்த்திருக்கணும். இயக்குனர் மலையாளப் பட இயக்குனர் பரதன் தானே!
இவர் மலையாளப் படங்கள் நீங்கள் சொல்கிற ‘genre’ வகை. பதினாறு வயதினிலே முழுக்க முழுக்க
பாரதிராஜா படம். அவருக்காகவே அவருடைய புதிய மாறுபட்ட முயற்சிக்காக பேசப்பட்டது.
படம் முழுக்க கமலுக்கு மட்டும் முக்கியத்துவமில்லை. ரஜினிக்கு அட்டகாசமான ரோல், ஏன் sri devi, காந்திமதிக்கு கூட நினைவில் நிற்கும் கதா பாத்திரங்கள். இவர் தான் முதல் முறையா படத்தின்
இயக்கம், ஆக்கம் எல்லாத்துக்கும், தரத்துக்கும் தான் காரணம்னு காட்டியவர். நல்ல இசை, நல்ல
ஒளிப்பதிவு, முழுக்க முழுக்க கிராமம் எல்லாமே +. இன்னைக்கு இந்த ரோல்ல கமல் நடிக்க மாட்டார். அன்னைக்கு பாலசந்தர்
உருவாக்கிய அழகிய பையன் இமேஜை உடைக்க உதவியது இந்த பாத்திரம்.
பாண்டியன், சந்திர சேகர் படவுலக ஆயுள் கம்மிதானே! இவங்க படம் ஓடின மாதிரி தெரியலையே! பாலைவனச்சோலையைப் பத்தி சொல்றீங்கன்னா, அது சுகாசினி படம். பையங்க பொண்ணு பின்னாடி
போற கதை.

அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 10:46 am
தனுஷ் பத்தி சொல்லணுன்னா, தெரிந்து உருவாக்கிய ‘bad boy’இமேஜ். நிறையப் பேர் மனசில நினைக்கிறத
திரையில செய்கிறார். இவர் முதல் படம் ஆபாசம்ன்னு எதிர்ப்பு இருந்துதுன்னு நினைக்கிறேன்
அன்புடன்
சாம்

KOZHUNDU Says:
May 1st, 2006 at 11:07 am
பாரதி ராஜா தன்னை ஹிரோவாப் போட்ட படம் நல்ல படம்னாலும் ஒடலையே! விஜய சாந்தி,
அருணாவின் அறிமுகப் படம்.
அன்புடன்
சாம்

Prasanna Says:
May 1st, 2006 at 3:14 pm
///ஜெமினி கணேசன் - மிதமும் இயல்பும் சரி; ஆனால் variety?
///
அப்போ ஸ்ரீகாந்த் இந்த வகைல சேர்த்துகலாமா?? வெண்ணிற ஆடைல அடக்கி வாசிச்சது. காசேதான் கடவுளடால காமெடி, ராஜ நாகம்ல வில்லன். அவர நாம மிஸ் பண்ணலயா??

//மகாநதி பாத்துட்டு மூட் அவுட்டானது, ஏ ராம் பாத்துட்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையே வீணாணது,குருதிபுனல் பாத்துட்டு வாழ்க்கையே வெறுத்தது…எதுக்குங்க இப்படி பொழுது போக்கணும்?//
கரெக்ட் அதுக்கு பதிலா, ஊர்க்காவலன் படத்துல கால்ல கயிறு கட்டி ஜீப்ப நிறுத்துற டெக்னிக்க கத்துக்கலாம். பாபா பாத்து ஷூல தீ வர்ற மாதிரி நடக்க கத்துக்கலாம். சந்திரமுகில ரஜினி அறிமுக காட்சில கைல ஷு கட்டி இருப்பாரே அத பாத்து ரசிக்கலாம்.
அடப்போங்கய்யா! பேரரசு படம் எடுத்தா மெஸேஜ் இல்லனு சொல்றது, கமல், சேரன் படம் எடுத்தா காட்சி நீளம்னு சொல்றது. உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்???

வசந்தன் Says:
May 1st, 2006 at 3:32 pm
சிவாஜி திரைக்குப்பின்னும் நடித்துக்கொண்டுதான் இருந்தார் என்று நினைக்கிறேன்.
சென்னை வானொலியில் சிவாஜியின் செவ்வி தொடராகப் போனபோது கேட்டேன். தொடக்கத்தில், இவர் நடித்த படத்திலிருந்துதான் வசனங்கள் போடுகிறார்களோ என்று ஐயுறுமளவுக்கு இருந்தது.
‘சாமி, ஆக்டர்ஸ் கிட்ட அவ்வளவுக்கு பிரிவினை வந்துடிச்சா? மலையாளி, தெலுங்கன், கர்னாடகான்னு பிரிச்சுப் பாக்கிற நெலம வந்துடிச்சா? அப்பிடியா நாம இருந்தோம்? அந்தநேரத்துல இந்தியா -சீனா வார் நடந்தப்போ….” என்று அடித்தொண்டையில் கரகரத்துக்கொண்டிருந்தார், கெளரவம் சிவாஜிபோல.
பல நாட்கள் ஒலிபரப்பான அவரின் அத்தொடர் முழுதும் நான் கவனித்தது இதைத்தான்.
அவர் வழமையிலும் அதீத நடிப்புக்காரன் என்றுதான் நான் நினைக்கிறேன். நேரில் அறிந்தவர்கள் உண்மை சொன்னால் நன்று.

கொழுந்து சொல்வதுபோல, வாழ்க்கைத்தரம் மாறினால் ரசனையும் மாறுமென்பதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஆனாலும் அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது.

தருமி Says:
May 1st, 2006 at 3:51 pm
partner,
1000 பேரை அடிப்பது உலகம் பூரா இருப்பதுதான்…sylvester படம், james bond படம் அப்டின்னா எப்படியிருக்கும்னு தெரியும். நீங்க சொல்றது மாதிரி ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் படம் பார்க்க குடும்பமா போகும்போது baby’s day out, home alone அப்டின்னு போவீங்க; கொஞ்சம் வயசான பையன் ஆயிட்டா saving the ryan அல்லது james bond படத்துக்கோ கூட்டிக்கிட்டு போவீங்க. வ்யசுக்கார ஆளுகளா சேர்ந்தா basic instinct, indecent proposal அப்டின்னு போவீங்க. இங்கே எல்லா மசாலாவையும் ஒரே படத்தில் அல்லவா அள்ளித் தெளிக்கணும்னு எதிர்பார்க்கிறோம்.

bharaniru_balraj Says:
May 1st, 2006 at 3:52 pm
தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்.

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:03 pm
//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:05 pm
தெக்காட்ஸ்,
“கீழ குனிஞ்சு ஏதோ தேடுற மாதிரி ஆக்ட் வுட்டேன்னா…” நம்ம டெக்னிக் வேற

தருமி Says:
May 1st, 2006 at 4:13 pm
கொழுந்து சாம்,
தனுஷ் பற்றிச் சொன்னது தமிழ்த் திரையுலகின் ‘அழகுத் திருமுகங்கள்’ என்ற முறையில். ரஜினியைக்கூட இதில் சேத்துக்கலாம். என்ன, மக்கள் அடிக்க வராமலிருந்தால் சரி

தருமி Says:
May 1st, 2006 at 4:15 pm
ப்ரசன்னா,
“உங்கள எப்படித்தான் திருப்தி படுத்த முடியும்??? “//
- அதச் சொல்லுங்க…

தருமி Says:
May 1st, 2006 at 4:17 pm
வசந்தன்,
probably the ‘actor’ in him had overgrown on his personal self

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:22 pm
தருமி சார்,
எங்க வீட்டில ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் இருக்கார்!!! நிறைய பேர்
வீட்டிலேயும் இத பார்த்திருக்கேன்!
மாமனார் சுறு சுறுப்பு மருமகனுக்கு கொஞ்சமாவது இருக்கு. மாமனார் charisma தான் இல்லை!:-)
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:28 pm
கொழுந்து,

“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?

அது எப்படிங்க? சினிமாவிலோ, சின்னத் திரையிலோ மூஞ்ச காமிச்சிட்டாலே அவங்க எவ்வளவு ‘கேவலமா’ இருந்தாலும் நம்ம ஊரு கூட்டம் கொஞ்சம் பின்னாலேயே போயிடுது? சில comperes, சின்னத்திரை நடிகர்கள் இருக்கிறார்கள் - அதுகளை smart, cute அப்டின்னு சொல்லிக்கிட்டு பின்னால போறதுகளைப் பார்த்தா வேடிக்கையாகத்தானிருக்கு.

தருமி Says:
May 1st, 2006 at 4:31 pm
bharaniru_balraj Comments:

தருமி,

முதல் கமன்ட் “வித விதமான் தோற்றம்”
2 வது கமன்ட் ” அப்பா 16 அடி பாஞ்சா இவர் 16 அடி பாயுறார்.

அவ்வளவுதான்

தருமி Says:
May 1st, 2006 at 4:34 pm
bharaniru_balraj,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்.

உங்கள் இரண்டாம் கமண்ட் புரிந்தட்க்ஹு. முதலாவது இப்போது தான் புரிகிறது.
அப்பா எங்கே 8 அடி பாய்ந்தார்?

KOZHUNDU Says:
May 1st, 2006 at 4:40 pm
//“ஒரு வயசிலிருந்தே ரஜினி ரசிகரானவர் ஒருவர் ..” அந்தப் பிஞ்சுக் ‘கொழுந்து’ யாருங்க?//
நிசமாலுந்தான் சொல்றேன். சின்னத்திரையில ரஜினி முகத்தைப் பார்த்தா வர சந்தோசத்த விலை கொடுத்து வாங்க முடியாது. படையப்பா திரும்ப திரும்ப பார்த்துட்டு அந்த பிறந்த நாள் பாட்ட ஹம் பண்ணப் பார்ப்பாங்க. இது கோர்வையா பேச்சு வரதுக்கு முன்னாடி!
அன்புடன்
சாம்
சின்ன திரையில ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை?
அன்புடன்
சாம்

தருமி Says:
May 1st, 2006 at 4:45 pm
KOZHUNDU Comments:

//அமெரிக்காவில் சூடம் காட்டுவது யாரென்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது//

வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!

அன்புடன்
சாம்

suresh - penathal Says:
May 1st, 2006 at 4:49 pm
உங்கள் பதிவு தூண்டி நானும் ஒரு திரை அரசியல் பற்றிப்பதிவிட்டிருக்கிறேன் இங்கே!

அவசியம் பாத்து திட்டிட்டுப்போங்க!

தருமி Says:
May 1st, 2006 at 4:50 pm
கொழுந்து சாம்,
உங்க பின்னூட்டத்தை அனுமதித்த பின்னும் இங்கே ‘இறங்க’ மறுத்துவிட்டதால் நானே வலுக்கட்டாயமாக இறக்கம் செய்து விட்டேன்

“வசந்தன் என்ன சொல்றீங்க? புரியவில்லையே!”//
- எனக்குப் புரிஞ்சு போச்சே! சந்திரமுகி படத்துக்கு நமது அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்கள் அடித்த ‘லூட்டி’ பத்திதானே சொல்றீங்க, வசந்தன்?

இளவஞ்சி Says:
May 2nd, 2006 at 9:13 pm
தருமி சார்,

சிவாஜி, கமல் அதுக்கப்பறம் சூர்யா.. இதெல்லாம் ஓகே!

ஆனா சிவாஜி ஓவர் ஆக்டிங்னு ஹாலிவுட் படங்களையெல்லாம் கம்பேர் செய்து சொல்வதை நான் கொஞ்சம்கூட ஒத்துக்க மாட்டேன்!

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு கலை. இயல், இசை, நாடகம்னு நமக்கு எல்லாமே இயல்பு வாழ்க்கையைவிட ஒரு படி தூக்கலா இருக்கனும்! இத்தகைய பின்புலத்தில் இருந்து வந்த ஒரு கலைஞன் அந்த காலத்தில் அத்தனை வேடங்களை ஏற்று அத்தனை வெரைட்டி காட்டியிருக்காருன்னா அது எப்பேற்பட்ட சாதனை! கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும்னு சொன்னா எந்த முகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறது?!

ராமாயண மகாபாரத கூத்துக்கள் பார்த்திருக்கிறீர்களா? அது வாழ்க்கையோடு ஒட்டி இயல்பாகவா இருக்கு?! அப்படி இருந்தாதான் அது ரசிக்குமா?! யோசிச்சு பாருங்க.. இயல்பா இருக்கட்டும்னு அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள் மாதிரி கூத்துல ராமன் வில்லை எடுத்துக்கிட்டு 10 நிமிசமா எதுவுமே பேசாம நிலைகுத்திய பார்வையோட நடந்து போய்க்கிட்டே இருக்காருன்னு வைங்க! மக்கா பிரிச்சுற மாட்டாங்க! கூத்து, நாடகம் என்பவை நம் மண்ணோடு பிணைந்திருந்த காலத்தில், ரசிக்கப்பட்ட காலத்தில், போற்றப்பட்ட காலத்தில், அதுவே அற்புதமான நடிப்பென நம்பப்பட்ட காலத்தில் இந்த மண்ணில் ஒரு கலைஞன் இதைவிட வேறெப்படி நடித்திருக்க முடியும்?! :

அவங்கவங்க மண்ணுக்கு அவங்கவங்க ரசனை! கதக்களிய பார்த்தா எனக்கு சிரிப்புதான் வரும்! ஏனெனில் எனக்கு அந்த மண்ணுடன் எந்த பந்தமோ, அந்த கலையைப் பற்றிய எந்த அறிவோ ரசனையோ இல்லை என்பதே உண்மை! அதற்காக அது கேரளாவின் இயல்பில்லையென ஆகிவிட முடியுமா என்ன?

மார்லன் பிராண்டோ அவர் ஊருக்கு.. சிவாஜி நம்ப ஊருக்கு…

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா??

இந்த விசயத்துல நான் ஜோ கட்சி!!!

தருமி Says:
May 3rd, 2006 at 8:51 pm
ஹாய் இளவஞ்சி,
நீங்க நம்ம கட்சி / அட, நான் உங்க கட்சி –ரெண்டுல எதையாவது வச்சுக்கங்க. ந்ம்ம தமிழ்மணதின் சிவாஜி ரசிகர் மன்றத்துக்கு தலைவர் ஜோ அப்டின்னா நானதான் துணைத்தலைவர். வேணும்னா உங்கள செயலரா போட்டுருவோம். நீங்க என் பழைய பதிவைப் படிக்கலைன்னு நினைக்கிறேன். படிச்சுப் பாருங்க.

திமிங்கிலத்துக்கு தரைல நடக்கத் தெரியலைன்னும், சிங்கத்துக்கு தண்ணிக்குள்ள தம்கட்ட தெரியலைன்னும் சொன்னா அது சரியா?? // - இது நச் & இளவஞ்சி டச்

இளவஞ்சி Says:
May 3rd, 2006 at 9:06 pm
தருமிசார்,

ஹிஹி…(போற போக்கைப்பார்த்தா என் பேரே ஹிஹி ஆகிடும் போல இருக்கு )

அந்த பதிவினை படிச்சு பின்னூட்டம் வேற போட்டிருக்கேன்! சைக்கிள் கேப்புல கொஞ்சம் உணார்ச்சி வசப்பட்டு மறந்துட்டேன்!

இந்த ஒரு தபா விட்டுருங்க!

தருமி Says:
May 3rd, 2006 at 9:22 pm
போனா போகுது இந்த ஒரு தபா நம்ம இளவஞ்சியாச்சேன்னு உடுறேன்.

கமல் Says:
May 4th, 2006 at 7:21 pm
வழக்கம்போலவே, மிக அருமையான பதிவு.

//எந்த அளவு என்றால் சில சமயங்களில் ‘என்ன மார்லன் ப்ராண்டோ பெரிய நடிகர் என்கிறார்கள்; ஆனால் அவர் அப்படி ஒன்றும் “நடிக்க”வில்லையே என்று தோன்றுமளவிற்கு வெகு இயல்பாய் அந்தப் படத்தில் அவரது நடிப்பு இருக்கும். …….. இத்தகைய நடிப்பை சிவாஜியிடம் பார்க்க முடியுமா, முடிந்ததா என்ற கேள்விக்கு அனேகமாக இல்லை என்ற பதில்தான் தரவேண்டியிருக்கிறது.//

சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?

//ஆனால் தமிழ் படவுலகத்தில் கதை எழுதும் ஆட்கள் யாருமே கிடையாது. இதுவரை எழுதப்பட்ட கதைகளைப் படங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தவர் மணிரத்தினம் மட்டும்தான் என நினைக்கிறேன். ……. மற்ற இந்த வகையான தமிழ்ப்படங்கள் இதுவரை சொல்லிக் கொள்ளுமளவிற்கு வெற்றி பெறாமல் போனதே, கதைக்காக இலக்கியங்களைத் தேடி இயக்குனர்களைப் போக விடவில்லையோ என்னவோ.//

மணிரத்னம் மட்டுமல்ல. தளபதி கமர்ஷியலாக வெற்றியடைந்திருந்தாலும், அழகி (நாவல் : கல்வெட்டு) அளவுக்கு நல்லபடம் என்று பாராட்டப்படவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள், மோகமுள், இதெல்லாம் நாவலாக வந்து வெற்றியடைந்தபின் சினிமாவாக வந்து வெற்றியடைந்தவை.

//முதலில் என்னைக் கவர்ந்த படம் ‘காக்க காக்க’. அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். , சிவாஜியிலிருந்து இன்றைய விக்ரம் வரை போலீஸ் வேடங்களில் வராத நடிகர்கள் (விஜய் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லையோ?) யாருமே இல்லையெனச் சொல்லலாம். ஆனால் யாருமே சூர்யாவைப் போல் இயல்பாய், with perfect body language நடித்ததாக நினைவில்லை. …. ஆனா நான் ரசித்தது பிதாமகனில் ரயில் வண்டி வியாபாரியாக வந்து செய்யும் அமர்க்களம்தான். யாருக்கும் இந்த அளவு அந்த நடிப்பு ‘பாந்தமாய்’ பொருந்திவருமா என்று சந்தேகம்தான். கெட்டப் மட்டுமில்லாமல், கழுத்து நரம்பு வெடிக்க, கத்தி கலாட்டா செய்யும் அந்த சீன் பிரமாதம் போங்கள்! அந்தப் படத்திலேயே கடைசிவரை மிக நல்ல நடிப்பு அவருடையதுதான்.//

100% சரி. ஆனால், காக்க காக்க பார்த்து முடித்தபின், குருதிப்புனல் போன்று எடுக்க முயன்று தோற்று விட்டார்களோ என்ற நினைவு வருவதுண்டு. குருதிப்புனல் கமலும் போலீஸ் வேடத்துக்கு முழுப்பொருத்தம். ஆனால் கமர்ஷியல் கலந்த காக்கிச்சட்டையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

நன்றி
கமல்

தருமி Says:
May 4th, 2006 at 9:00 pm
கமல்,
இப்படித்தான் நேரம் கழிச்சி வர்ரதா? என்ன நீங்க?

“சிவபெருமான், கர்ணன், கட்டபொம்மன், வ.உ.சி, ராஜராஜசோழன், இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே!”//
- இதில வ.உ.சி.ய வெளியே எடுத்துடுங்க; மீதியெல்லாம் நீங்க சொன்னது மாதிரி நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தான்; ஆனால் அது சரியல்லவே. வ.உ.சி. அப்படியல்ல. இப்படித்தான் அவர் இருந்திருப்பார் என்ற நினைவே வந்தது. மிக இயல்பு. மில நேர்த்தி. வாவ்… தலைவர்னா தலைவர்தான். அப்படிப்பட்ட கலைஞனை பயன்படுத்தாம விட்டுட்டோமே.

அதே போல நீங்கள் சொல்லியுள்ள மூன்று நாவல்களில் சி.நே.சி. மனிதர்கள்,மோகமுள் இரண்டும் படங்களாகப் பரிமளிக்கவில்லையே.

குருதிப் புனலில் the technical qualities எனக்குப் பிடித்தது. நடிப்பில் கமல் நன்றாக் இருந்தாலும், என் ஓட்டு சூர்யாவிற்குத்தான்.

Prasanna Says:
May 4th, 2006 at 9:38 pm
//இவர்களையெல்லாம் நினைக்கும்போது நமக்குத் தோன்றுவது சிவாஜியின் முகம்தானே! கதாபாத்திரத்துடன் ஒன்றவில்லையெனில், இது எப்படி சாத்தியமாகியிருக்கும்?//
இதப் பத்தி எனக்கு ஒரு அனுபவம் உண்டு. நான் ஒரு சின்ன சீரியல் மாதிரி (விஜய் டி.வி.ல ஞாயித்து கிழமை காலைல ஏழு மணிக்கு போடுவாங்க, கிறிஸ்டியன் ஸீரியல்) ஒரு விஷயத்துல நடிச்சேன். அதுல கும்பலோட கோவிந்தா போட்ற சீன்ல எல்லாம் ஒழுங்கா பண்ணிட்டேன். கிளோஸ்-அப் நு ஒண்ணு வெச்சு கொல்லுவாங்க. டைரக்டர் சொல்ற எக்ஸ்பிரஷன் சுத்தமா எனக்கு வரல.அப்போ யூனில இருந்த லைட் மேன் ஒருத்தர் சொன்னார், சிவாஜி சேர்ல உக்காந்து சிகரெட் குடிச்சுகிட்டி இருப்பாராம். டைரக்டர் பக்கத்துல வந்து “சார் நெகிழ்ச்சியா ஒரு கிளோஸ் அப் வேணும்” அப்படின்னு சொல்லுவாராம். உடனே சிகரெட்ட கீழ போட்டு “ம்! எடுத்துகுங்க”னு அசால்ட்டா எக்ஸ்பிரஷன் குடுத்திடுவாராம்.
அவர் படத்துல எல்லாம் வேல பாத்துட்டு இப்போ உனக்கு தெர்மாகோல் பிடிக்குறனே-ன்ற ரேஞ்சுக்கு பேசினார். அப்போ தான் எனக்கு அந்த நடிப்ப உணர முடிஞ்சது. அதுவரைக்கும் நானும் ஓவர் அக்ட்னு தான் சொல்லிகிட்டு இருந்தேன்.

தருமி Says:
May 4th, 2006 at 9:46 pm
அடடே நம்ம பக்கம் ஒரு நடிகர் இருக்காரா…
இனிமே ‘சின்னத் திரைப் புகழ் ப்ரஸ்’ அப்டின்னு போட்டுருவோம். சரியா?

Prasanna Says:
May 5th, 2006 at 8:05 am
என்னத்த நடிகர். அந்த விஷயம் படா கஷ்டமா இருக்கு பாஸ். அடுத்த ஒரு நிகழ்ச்சிக்கு கூப்ட்டாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த டைரக்டர் கிட்ட திட்டு வாங்கி மாளாது.

மேட்டர் எல்லாம் சரிதான். அந்த ஸ்மைலி என்ன சொல்ல வருது???

தருமி Says:
May 5th, 2006 at 11:44 pm
ப்ரஸ்,
“…திட்டு வாங்கி மாளாது. “//
பட்டை தீட்டுறதின்னா சும்மாவா?

–> ஒரு பொறாமைதான்

தருமி Says:
May 5th, 2006 at 11:53 pm
வசந்தன்,
நீங்க போட்ட பின்னூட்டத்தை எடுத்தா குண்டுஎழுத்தில இருந்து விமோசனம் கிடைக்கலாமென்றதால் எடுத்தேன். எடுத்ததை மீண்டும் இப்போது இடுகிறேன்.

தருமி, உங்களுக்கு உண்மையிலேயே ‘-/’ யாரென்று தெரியாதா? அதுவும் பாலச்சந்தருக்கு ஒரு இடி கொடுத்த பிறகும். ‘பெயரி’ல்லாமல் வநதாலும் ரெண்டு கோடு போட்டு வாறார்தானே?

குறும்பன் Says:
May 13th, 2006 at 12:16 am
// படங்கள் ஓடுவது மட்டுமே படங்களின் தகுதியையும் தரத்தையும் பற்றிச் சொல்லும் காரணிகளா என்ன..? //
ஆகாது. நல்ல தரமான படம் எடுத்தா ஓடாது மக்கள் அதை ரசிக்க மாட்டாங்க என்று கூறும் மக்களுக்காக கூறினேன்.
தரமான படத்தை ரசிக்கும் படியா எடுத்தா ஓடும் என்பது என் வாதம். குறிப்பா சொல்லனும்ன்னா ரசிக்கும் படியா இருக்கும் எல்லா படங்களும் ஓடும் அங்கு தரத்துக்கு வேலையில்லை. தரம் இருந்தா அதன் வெற்றி அதிகபடியாக இருக்கும்.

தருமி Says:
May 13th, 2006 at 12:29 pm
குறும்பன்,
“ரசிக்கிறமாதிரி படம் எடுத்தா ஓடும். “//
யாருரசிக்கிறது மாதிரி அப்டிங்கிறதுதான் அடிப்படைக் கேள்வி!
ஒரு பெங்காலி மாதிரியா?
ஆந்திரக்காரர் மாதிரியா?
இல்ல நம்ம ரஜினி ரசிகர்கள் மாதிரியா????

கோ.இராகவன் Says:
May 13th, 2006 at 1:13 pm
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன் தருமி. சூர்யா மிகச் சிறந்த நடிகர். காக்க காக்க அவரது திறமையை வெளிக் கொண்டு வந்த படம். அவரை முறையாக இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிவாஜியிடம் ஒரு முறை கேட்டதற்குச் சொன்னார். “அப்பா….நான் இயக்குனர் நடிகன். ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என்று விரும்புவது இயக்குனரின் உரிமை. அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்கிறேன். சரியில்லை என்று அவர்கள் சொன்னால் அவர்கள் சொன்னது போல மாற்றிக் கொள்கிறேன்.”

ஆகக் கூடி அவரை வைத்தும் நல்ல படம் எடுக்க முடியாத இயக்குனர்கள் மீதுதான் குற்றம். கப்பலோட்டிய தமிழன் மட்டுமல்ல, நிறைய படங்கள் இருக்கின்றன. பரீட்ச்சைக்கு நேரமாச்சு படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? சிவாஜியே பிடிக்காத நண்பன் கூட பாராட்டிய படம். ஒரு சரிதா படம் கூட உண்டு. ரொம்ப இயல்பாக இருக்கும். முதல்மரியாதை, தேவர்மகன், பூப்பறிக்க வருகிறோம் என்று வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனாலும் தங்கத்தைக் கொண்டு ஓட்டை அடைத்த இயக்குனர்கள்தான் தமிழில் நிறைய.

மகரிஷி எழுதிய நாவல் பத்ரகாளி நாவலை ஏ.சி.திருலோகச்சந்தர் மிகவும் இயல்பாக படம் பிடித்திருந்தார்…ஆனால் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா போன்ற படங்களைத்தான் பிரதானமாக எடுத்தார். வியட்நாம் வீடு படத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்ட சுந்தரம் அடுத்தடுத்து வழக்கமான பாணியிலேயே போய் விட்டார்.

1 comment:

Unknown said...

Dear Dharumi,
You cannot compare Sivaji with any actors in the hollywood. If you analyse conditions of state Tamil Nadu and Hollywood movies.If you analyse the closely, Sivaji is the greatest actor ever to be born or no.

Post a Comment