Sunday, January 10, 2010

365. நானும் பேய்களும்* ... 1

*


*


“வேப்ப மரத்தைக் காட்டி

பேயொண்ணு ஆடுதுன்னு

விளையாட்டா சொல்லி வைப்பாங்க”



பட்டுக்கோட்டைத் தலைவர் ரொம்ப அனுபவிச்சி இதை எழுதியிருக்கணும். சின்ன வயசில பேய்க்கதை கேட்காம வளர்ந்த குழந்தையாக யாரிருக்க முடியும். ஆனா யாரும் சொல்லிக் கொடுத்த பிறகு அந்த பயம் நம்ம மனசுக்குள்ள வருமோ .. தானாகவே வந்திருமோ தெரியவில்லை. எப்படியோ ஒரு வேப்ப மரம் எப்பவுமே எனக்குப் பேய் பயத்தைத் தந்தது உண்டு. ரொம்ப சின்ன வயசிலேயே – இரண்டு இரண்டரை வயதிலேயே – பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சிட்டேனா. ( ஏன் அந்த வயசில பள்ளிக்கூடமெல்லாம் போக ஆரம்பிச்ச அப்டின்னு யாரும் கேட்டா அவங்க இதை வாசிக்கணுமே!) அப்பவுமே அந்த பயம் எனக்கு இருந்திச்சி. பாட்டையா பள்ளிக்கூடத்து காம்பவுண்டுக்கு – காம்பவுண்டுன்னா என்னமோன்னு நினச்சுக்காதீங்க; சும்மா ஒரு களிமண் சுவர்தான் – வெளியே ஒரு மரம் இருக்கும். வேப்ப மரம். மற்ற வேப்ப மரம் மாதிரி இல்லாம இது கீழேயே ரொம்ப பெருசா இருக்கும். அந்த தடித்த தண்டு பாகம் குட்டையாகவும் இருக்கும். ரொம்ப வயசான மரமாக இருந்திருக்குமோ என்னவோ மரம் உயரமா பெருசா இருக்கும். தடித்த வேர்ப்பகுதியோடு பிரமாண்டமா நிக்கிற அந்த மரத்தை பகலில் பார்த்தாலே ரொம்ப பெருசா தெரியும். ராத்திரி பார்த்த ரொம்ப பெருசா, பயமாவே இருக்கும். ராத்திரி ஏன் பார்த்தேன்னு கேப்பீங்களே .. ( அதுக்கு இங்க போகணும். ) அந்த மே மாசத்து ஜெபக்கூட்டங்களில் இருட்டில் விளக்கோடு முன்னே போவதற்கு எங்களுக்குள் பெரும்போட்டி இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் ஜாலியாக போகும் நான் அந்த இருட்டில் அந்த வேப்ப மரத்தைத் தாண்டும்போதும் மட்டும் கொஞ்சம் பயத்தோடு போவேன். முடிந்தவரை அந்த மரத்தைப் பார்க்காமலே போக முயற்சிப்பதுண்டு. இருந்தாலும் அதைத் தாண்டும்போது ஏற்படும் பய உணர்வு அப்படியேதான் இருக்கும். இன்னும் அந்த மரம் அங்கேயே நிற்கிறதா என்று பார்க்க வேண்டும். அனேகமாக இருக்காது. அப்போதே சின்ன பாதையை மறைத்துவேரூன்றி நின்றது. இருந்தாலும் இப்போது போய்ப்பார்க்கணும் என்று ஆசையாக இருக்கிறது. (பழைய நினப்புடா, பேராண்டி!)





மேல்வகுப்புப் பள்ளி படிக்கையில் வேப்ப மரம் போய் ஒரு பெரிய அரச மரம் கிடைத்தது. அப்போது நானிருந்த வீடு ஒரு ஒற்றைக்குடித்தனத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் யோசித்துப் பார்த்தால் அந்தச் சின்ன வீட்டில் எப்படி அத்தனை பேர் குடித்தனம் நடத்தினோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வீடு பற்றி இங்கே. அந்த வீட்டின் மேல் மாடி தான் எனது மேல்பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் எனது ஜாகையாயிற்று. மழையில்லாத நாட்கள் அங்குதான் நம் ‘சாம்ராஜ்யம்’. மழைநாளில் கீழே அப்பாவின் கட்டிலுக்கு அடியில் உள்ள ‘berth’!



மெத்தையில் தனியாக இருக்க ஆரம்பித்த நாளில் ஒன்றேயொன்று பயமுறுத்திக் கொண்டிருக்கும். அது அடுத்த தெருவிலிருந்த பெரிய அரசமரம். அதன் மேல்பாகம் மட்டுமே கண்களுக்குத் தெரியும். இருந்தாலும் இரவின் அமைதியில் (அந்தக் காலத்தில் இரவுகள் அமைதியாகத்தானிருந்தன.) மரத்தின் இலைகள் தரும் சலசலப்பு மிகவும் தெளிவாக என் மொட்டை மாடிக்குக் கேட்கும். அந்த சத்தம் அடி வயிற்றில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும். சத்தம் மட்டுமே பயத்திற்குக் காரணமாக இருந்தது.



ஆனால் சில ஆண்டுகளில் பக்கத்து வீட்டு மாடியில் ஒரு தற்கொலை நடந்து போச்சு. யாரோ ஒருத்தர் தொங்கிட்டார் போலும். நாங்கள் விடுமுறைக்குச் சொந்த ஊர் போயிருக்கும் போது நடந்திருக்கும் போலும். அந்த மாடிக்கும் எங்கள் இடத்துக்கும் பத்து அடி வித்தியாசம் கூட இருக்காது. எங்கள் வீடு வசதியில்லாமல் இருந்ததால் அப்போதெல்லாம் முன்னிரவில் படிக்க பள்ளிக்கூடத்தில் வசதியில்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருந்த இடத்திற்குப் படிக்கப் போவதுண்டு. எட்டு மணிவரை அங்கு. (அங்கு உட்கார்ந்து ஒழுங்கா படிச்சேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது.) பின் வீட்டுக்கு வந்து விடுவோம். என்னைவிட வசதிக்குறைவான வீட்டில் இருந்த நண்பன் கோபால் எங்கள் வீட்டுக்குப் படிக்க வந்துவிடுவான். எங்கள் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகைக்குக் கீழ் ஒரு முட்டை பல்பு வெளிச்சத்தில்தான் எங்கள் படிப்பு. கோபால் பயங்கர பயந்தாங்கொள்ளி. இரவில் அந்த மொட்டை மாடியில் அவனை விட்டு விட்டு கீழே போய் தண்ணீர் எடுத்து வரப்போனாலும் என் கூடவே வரும் அசகாய சூரன்.



தற்கொலை நடந்த பிறகு கோபால் சில முறைகள் மட்டும் வந்தான். ஆனால் ரொம்ப பயந்து போனது மட்டுமில்லாமல் என் மனத்திலும் பயங்கர பயத்தை உண்டு பண்ணி விட்டான். உள்ளதே மர இலைகளின் ஓசை. இப்போதைக்கு ஒரு தற்கொலை வேறு. பயல் மிகவும் பயந்தது மட்டுமில்லாமல் இரவு அவனும் தூங்காமல் எங்களையும் பயமுறுத்தி வந்தான். நிச்சயமாக ஒரு பேய் பக்கத்து வீட்டில் இருக்கிறது; அதுவும் அடிக்கடி நம்மை வந்து வந்து பார்த்துட்டு போகுதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டான். தன்னால தாக்குப் பிடிக்க முடியாதுன்னு கொஞ்ச நாளில் வர்ரதை நிப்பாட்டிட்டான்.



இப்போ நான் மரத்தின் சத்தத்தோடு, புதுசா சேர்ந்துக்கிட்ட பேயோடும் காலத்தை ஓட்ட வேண்டியதாகப் போச்சு. முந்தி மரத்தில் சத்தம் கேக்கும்போது மட்டும் கொஞ்சம் மரத்தைப் பார்த்து என் பயத்தைப் போக்க முயற்சித்தேன். ஆனால் இப்போ அடுத்த வீட்டு பேய் … அதுவும் எங்கள் மொட்டை மெத்தையிலிருந்து கீழிறங்கும் படிக்கட்டில் போய் வருவது – அதுவும் அந்தப் படிகளில் இரவில் இறங்குவது – ஒரு பெரிய விவகாரமா போச்சுது! நான் முதலில் பயந்து போய் வெகு வேகமாகப் படியிறங்க ஆரம்பித்தேன். அப்படியும் பேய் என் பின்னாலேயே தொடர்ந்து வருவது போலிருந்தது. அந்தச் சின்னப் படிகளில் அவ்வளவு வேகமாக இறங்குவதும் கொஞ்சம் தகராறுதான். இது வெட்டிப் பயம்; இந்தப் பேயை அல்லது பேப்பயத்தை எப்படியும் உண்டு இல்லைன்னு பண்ணிரணும் அப்டின்னு மனசுக்குள்ள தோணிச்சி. அதுக்குப் பிறகு வேண்டுமென்றே மெல்ல இறங்க ஆரம்பித்தேன். பின்னால் பேய் வருவதுபோல் தோன்றும் போது, படியில் நின்று மெல்ல மெல்ல இறங்க ஆரம்பித்தேன். அதோடு அப்பப்போ நின்று திரும்பிப் பார்த்து இறங்க ஆரம்பித்தேன். பரவாயில்லை … சில நாட்களுக்குப் பிறகு ‘பேய்த் தொந்தரவு’ நின்று போச்சு. எனக்கு நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

பேய் பயம் எனக்கு நின்னு போச்சா .. அதனால் மற்றவங்களுக்குப் பேய்க்கதை சொல்றது, பயமுறுத்துறது அப்டின்னு பசங்க கூட விளையாட ஆரம்பிச்சேன். ஆனா அது எல்லாம் ஒரு ‘பேயடி’ வாங்கும் வரைதான்.

படித்தது கிறித்துவப் பள்ளி. வருஷத்தில் மூன்று நாட்களுக்கு வெளி கிறித்துவ மாணவர்களுக்கு ‘தியானம்’ நடத்துவார்கள். நடு நடுவே நரகத்தின் கொடூரங்களைச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்; அந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் பசங்க எல்லாத்துக்கும் ரொம்ப ஜாலியா இருக்கும். யாரும் பேசக்கூடாதுன்னு சட்டம்; சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல .. காவலுக்கு இருக்கிற Father-க்குத் தெரியாமல் அப்பப்ப ஏதாவது ஒரு கலாட்டா அங்கங்க நடக்கும். என் நண்பன் ஒருவன். அப்பவே பயங்கர உயரமா, பெருசா இருப்பான். ஸ்டீபன். உருவம்தான் பெருசு. ஆனா பயங்கரமான பயந்தாங்கொள்ளி. அவனைப் பயமுறுத்தணும்னு ஒரு மூலையில் நின்று கொண்டு அவன் வரும்போது ஊன்னு கத்திப் பயமுறுத்தணும்னு ஒரு ஐடியா. அதே போல் ஒரு படி ஓரத்தில் ஒளிந்து நின்று கொண்டு அவன் வந்ததும் கீழ்ப்படியில் நின்று கொண்டு ஊன்னு கத்தினேன். அவன் முந்தின மேல் படியில் நின்று கொண்டிருந்தவன் எக்கச்சக்கமா பயந்து போய், துள்ளிக் குதிச்சிக்கிட்டு ‘அம்மாடி’ன்னு கத்திக்கிட்டு அந்த பயத்தில் என் இரண்டு தோளிலும் போட்டான் பாருங்க ஒரு அடி .. என் ஜென்மத்தில அப்படி அடி நான் வாங்குனதேயில்லை! சரியான பேயடி. போதுமப்பா .. அதில் இருந்து யார் கூடவும் பேய் விளையாட்டு விளையாண்டதேயில்லை.


இதெல்லாம் சின்னப் பிள்ளை வயசில நடந்தது. முப்பது நாப்பதுகளில் இன்னொரு அனுபவம்.


……………………தொடரும்.




* நீயே ஒரு பேய்; இதில் என்ன 'நானும் பேய்களும்' அப்டின்னு ஒரு தலைப்பு -- இப்படியெல்லாம் கேட்க மாட்டீங்கன்னு நினச்சிக்கிட்டு போட்ட தலைப்பு இது!


*

17 comments:

Samuel | சாமுவேல் said...

ஏன் சார் இப்படி terror பண்றீங்க ....நமக்கு சின்ன வயசில் நடந்த சம்பவங்கலாம் நியாபகம் வருதே.....உச்சந்தலையில் சுர்ருன்னு ஒரு ஷாக் அடிக்கும் பாருங்க ....

//முப்பது நாப்பதுகளில் இன்னொரு அனுபவம்///..... ஆச்சர்யம் !

உண்மைத்தமிழன் said...

ஸார்

எனக்கு பேய்ன்னு கேட்டாலே கே.ஆர்.விஜயா வெள்ளை டிரெஸ்ல வானத்துல இருந்து ஜெமினிகணேசனை பார்த்து பாடிக்கிட்டே வர்றதுதான் ஞாபகத்துக்கு வருது..!

நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!

கிருஷ்ண மூர்த்தி S said...

/நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!/

இந்த அனுபவம் தினசரி கிடைக்கறதுக்காவது நம்ம உண்மைத் தமிழனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்! இந்த வருஷத்திலாவது, தை பிறந்தவுடனேயே முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!

கபீஷ் said...

//அங்கு உட்கார்ந்து ஒழுங்கா படிச்சேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது//

உங்க கிட்ட அப்படி எல்லாம் கேப்போமா :-)

தருமி said...

கபீஷ்,
//உங்க கிட்ட அப்படி எல்லாம் கேப்போமா :-)//

அதான, மொச பிடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாதா ..?!

Thekkikattan|தெகா said...

பதிவையை படிக்கும் பொழுதே எல்லாருக்கும் சின்ன வயசிலே இது மாதிரி ஏதாவது சில விசயங்களை வைச்சு பேய் பயம் கண்டிப்பா இருந்திருக்குமின்னு தெரியுது ;) .

கொஞ்சம் திகிலாவும், அதே சமயம் குசும்பாவும் சொல்லியிருக்கீங்க. பரவாயில்ல ரொம்பச் சீக்கிரமாவே நீங்க 'தெளிஞ்சிட்டீங்க' எனக்கு நெம்ப நாள் எடுத்திக்கிச்சு.

//சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல .//

இது எல்லா விசயத்திற்குமே பொருந்தும் போலவே... ;-)

தருமி said...

நன்றி சாமி.

தருமி said...

உ.த.,

'அந்தப் பேய்'ஜெமினியைப் பார்த்து வந்திச்சி. உங்களைப் பார்த்து எப்போ என்ன வரப்போகுதோ?!

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி,

//முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!//

ரொம்ப அர்ஜென்டான ஆர்டர் போட்டுட்டீங்களே .. பார்க்கலாம்.

தருமி said...

தெக்ஸ்,

////சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல .//

இது எல்லா விசயத்திற்குமே பொருந்தும் போலவே... ;-)//

இல்லியா பின்ன...?

கோவி.கண்ணன் said...

இருட்டு குறித்த பயம் இயல்பிலேயே மனிதர்களுக்கு உண்டு. நாம வெளிச்சத்திலேயே வாழ பழகிவிட்டோம் என்பதும் காரணம் தான்.
இரவில் சுடுகாடுகளுக்கு தனியாகப் போக பயம் ஏற்படுவதற்குக் காரணம் பேய் அல்ல இருட்டு தான்.

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...

/நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!/

இந்த அனுபவம் தினசரி கிடைக்கறதுக்காவது நம்ம உண்மைத்தமிழனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்! இந்த வருஷத்திலாவது, தை பிறந்தவுடனேயே முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!]]]

முருகா.. ஸார் சொல்றதை நல்லா கேட்டியா..?

நீ வழியைக் காட்டு.. செலவையெல்லாம் அவர் பார்த்துக்குவாரு..!!!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...
உ.த., 'அந்தப் பேய்' ஜெமினியைப் பார்த்து வந்திச்சி. உங்களைப் பார்த்து எப்போ என்ன வரப்போகுதோ?!]]]

இது வாழ்த்தா..? வயித்தெரிச்சலா..? சாபமா..?

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா..

பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட்டால்தான் பதிவுகளை சூடாக்க முடியும்.. இல்லாட்டி ஆறிப் போய் வரண்டு போன புரோட்டா மாதிரிதான் இருக்கும்..!

ஓப்பன் தி கேட்..!

வால்பையன் said...

மருத்துவ வசதியில்லாத காலத்தில் மனநோய்களை தீயசக்தியின் விளையாட்டு என பெயரிட்டு பின்னாளில் அதுக்கு உருவமிட்டு பேயாக மாற்றிருக்கக்கூடும்!

நம்ம ஆளுங்க தான் தண்ணிக்கு ஒரு கடவுள், பன்னிக்கு ஒரு கடவுள்னு உருவம் கொடுப்பாங்களே!, எனக்கு தெரிந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது, அது கூட பெரும்பாலும் என சொல்லலாம், ஆனால் பேய் நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது! சரிதானே!

Samuel | சாமுவேல் said...

@வால்
" நல்ல சக்தி" அப்படின்ற ஒரு நம்பிக்கை இருந்தா....."தீய சக்தி" ஒன்னு இருக்குன்ற நம்பிக்கையும் இருக்கும்..... எல்லாமே நம்பிக்கைகள் தான்..சிலர் ரெண்டையும் அனுபவித்தும் இருக்கார்கள்.......சில சமயம் பார்தீங்கனா மருத்துவ ரீதியா ஒரு விளக்கமும் இருக்காது. அனுபவங்கள் தான் சில சமயம் புரிய வைக்கும்.

"நடந்தது என்ன !!!! "............ :-)

வால்பையன் said...

//சிலர் ரெண்டையும் அனுபவித்தும் இருக்கார்கள்.......சில சமயம் பார்தீங்கனா மருத்துவ ரீதியா ஒரு விளக்கமும் இருக்காது. //

மருத்துவம் 100% முழு வளர்ச்சியடைந்ததாக நான் சொல்லவில்லையே! இல்லாத காலத்தில் என்று தான் சொன்னேன்! இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன, மருத்துவத்தில் அதற்கு பெயர் மர்ம காய்ச்சல்!

அனுபவம் என்பது புறம் சார்ந்தா!? அகம் சார்ந்தா என நீங்கள் குறிப்பிடவில்லை! எனது மன சிந்தனையில் நான் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வந்த அனுபவம் பெற முடியும், ஆனால் அதை உண்மை என்று நம்பினால் எனக்கும் ஒரு படுக்கை தயாராக இருக்கும்!

Post a Comment