Monday, October 03, 2005

81. அப்பாவின் கல்யாண வைபோகமே…

அப்பா-அம்மா கல்யாணம் - நன்கு அழுத்தமாக நினைவில் நிற்கிற முதல் நினைவு அதுதான் என்று நினைக்கிறேன். பெத்த அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். ரொம்ப அம்மாவைத் தொந்தரவு செய்வேனாம். அம்மா இறந்ததும் அம்மாவுக்கு மாலை போடச் சொன்னார்களாம்; அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேனாம். எல்லாம் சொல்லக் கேள்வி. தொடச்சி வச்சது மாதிரி ஒன்றும் சுத்தமாக ஞாபகமில்லை. ஆனால் அதற்குப் பிறகு சின்ன வயது விதயங்கள் பலவும் நினனவில் இருக்கின்றன. பழைய போட்டோ ஆல்பம் ஒன்றைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்ப்பது போன்ற உணர்வு. பக்கங்கள் புரள புரள அதில் உள்ள படங்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து, என்னைச் சுற்றிச் சுற்றி நிஜ நடப்புகள் போல, ஒரு திரைப்படமாக உயிர்த்துடிப்போடு இயங்க ஆரம்பிக்கின்றன.

அந்தத் திருமண நிகழ்ச்சி தெளிவாகவே என் கண்முன் விரிகிறது. தென்காசிக்கு அருகில் அம்மாவின் ஊர் - குறும்பலாப் பேரி. கிராமத்துக் கிறித்துவக் கோயில்; அதற்குரிய எளிமையோடு இருக்கிறது. எனக்குத் தனியாக ஒரு நாற்காலி; எங்கிருந்து எடுத்து வந்திருந்தார்களோ. ஏனெனில் அந்தக் கோயிலில் ஏது நாற்காலியெல்லாம் அப்போது இருந்திருக்கப் போகிறது. அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இரண்டு நாற்காலிகள். ஆனால், அப்பா கோயிலின் முன்னால் அந்த பீடத்திற்குப் பக்கத்தில் முழங்கால் போட்டு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பா இளம் க்ரீம் கலரில் அந்தக் காலத்து Gaberdine துணியில் கோட், சூட் போட்டு இருந்தார்கள். நான் ஆல்டரின் பக்கத்தில் அந்த பெரிய சேருக்குள் அடங்கி உட்கார்ந்திருந்தேன். பெண்ணைப் பார்க்கும் டென்ஷன்; சிறிது நேரம் கழித்து கோயில் வாசல் பக்கம் கொட்டு சத்தம். திறந்த காரில் பெண் வந்தாகிவிட்டது. சிகப்பா,அழகா இருந்தார்கள். (என் அம்மா கருப்போ, புது நிறமோ; ஆனா நிச்சயமா சிகப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.) மஞ்சள் பட்டுப் புடவையும், தலையில் கிறித்துவ முறைப்படி ரீத், நெட் எல்லாம் போட்டிருந்தது. சின்னப் பிள்ளைகள் கூட்டமாய் பொண்ணைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்த திறந்த கார், கிறித்துவ முறையில் அலங்காரம் - இவை எல்லாமே அவர்களுக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும்.

பிறகு கல்யாணம் நடந்தது. பின் அந்த திறந்த காரில் ஊர்வலம். அதில் ஒன்று மட்டும் ஞாபகமிருக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தேனோ என்னவோ தெரியவில்லை; ஆனால், ஏதோ ஒரு நேரத்தில் என் பாளையன்கோட்டை பெரியம்மா என்னைத் தூக்கி காரில் அப்பாவுக்கும், 'பொண்ணு'க்கும் நடுவில் உட்காரவைத்தார்கள்.


இன்னும் கொஞ்சம் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்பு சொல்லவேண்டிய வேறு சில விதயங்களைச் சொல்லிவிட்டு பிறகு இதற்கு வருகிறேன். என் ஐந்தாவது வயதில் அப்பாவின் கல்யாணம் நடந்திருக்க வேண்டும்; ஏனெனில், கல்யாணம் முடிந்த கையோடு கிராம வாழ்க்கையை முடித்துக் கொண்டு, மதுரைக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தேன். அப்பாவின் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கும் அளவு அதற்கு முன் நடந்தவைகள் அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லை. அங்கங்கே விலகும் ஒரு பனி மூட்டம் வழியாக பார்ப்பதுபோல் சில காட்சிகள் - சில தெளிவாக; சில மஞ்சுவுக்கு ஊடாக.

நான் பிறந்து சில மாதங்களிலேயே அம்மாவுக்கு அந்தக் காலத்து பயங்கர நோயான எலும்புருக்கி - T.B. - வந்து விட்டதாம்; ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நோய் முற்றிவிட்ட நிலையில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார்கள். பின்னாளில் சில உறவினர்களுடன் அந்த மருத்துவமனை செல்லும்போது, அம்மா இருந்த கட்டிடம், வார்டு என்று என்னிடம் அடையாளம் காட்ட முயன்றதுண்டு. நான் அதை மனதில் வாங்கிக் கொள்ள முயன்றதேயில்லை; அது மட்டுமல்லாது அந்த சேதியை நான் அறியவும் விரும்பவில்லை. மருந்துகள் குணமளிக்க முடியாத நிலையில் அம்மா ‘நான் இங்கு சாகவேண்டாம்; ஊருக்குப் போய் விடுவோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். தென்காசி அருகிலுள்ள அம்மா ஊருக்கு - குறும்பலாப்பேரி - கொண்டு சென்றார்களாம். என்னை முடிந்தவரை அம்மா ‘தள்ளி’யே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார்கள் - மகனுக்கும் நோய் வந்துவிடக்கூடாதே என்று. நான் ரொம்பவும் அழுது தொல்லை கொடுத்திருக்கிறேன்.

ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள். அப்போது எனக்கு வயது ஒன்றரை போலும். என் பெரியம்மா -மதுரைப் பெரியம்மா- அப்போது நிறை மாதக் கர்ப்பிணியாம். அம்மா இறந்த அன்று காலை பெரியம்மாவுக்கு ஒரு கனவு. கனவில் என் அம்மா கையில் ஒரு கரும்புத் துண்டோடு மிதப்பது போல வந்து, கரும்பைக் கடித்து, சவைத்து, துப்பிவிட்டு ‘அக்கா,என் பிள்ளையைப் பாத்துக்குங்க’ன்னு சொல்லிட்டு மறைஞ்சு போய்ட்டாங்களாம். எழுந்திரிச்சி பாத்தப்ப நேரம் காலை 4 மணி. அன்றே அம்மா இறந்த சேதி வந்திச்சாம். அம்மா இறந்ததும் ஏறத்தாழ அதே நேரமாம். என் வாழ்வில் நடந்த இரண்டு supernatural incidents-ல் இது முதல். (அடுத்த supernatural inciden படிக்க இங்கே போகணும்.) பெரியம்மா எப்போதும் என்னிடம் -இந்த நிகழ்ச்சியால்தானோ என்னவோ - மிகவும் பிரியமாக இருப்பர்கள். அதனால், அவர்களின் இந்தக் கனவை நான் ‘ஆராய்ந்து’ பார்த்தால் அது அவர்களையும், அவர்கள் என் மேலும், அம்மா மேலும் வைத்திருந்த அன்பையே சோதிப்பதாக இருக்கும் என்ற எண்ணத்தால் அதை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டே வைத்திருந்தேன்.

அம்மா இறந்த பிறகு அப்பா தனியாளாக மதுரையில் இருக்க நான் ஊரில் என் அப்பம்மாவிடம் இருந்தேன். வீட்டில் அப்பாவின் நான்கு தங்கைகளில் இருவர் அப்போது அங்கே இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். செயிண்ட். ஜோசஃப் பாடசாலை என்று பெயர். அத்தைகள் இருவருமே அங்கே டீச்சர்களாக இருந்தார்கள். அப்பம்மாவும், பாட்டையாவும் காலங்காத்தால வயல்களுக்கு வேலைக்குப் போனால் பொழுது சாஞ்சதுக்குப் பிறகுதான் திரும்புவார்கள். இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன்.

அப்பா விடுமுறைகளில் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சி தவறாமல் அரங்கேறும். அதுவரை நான் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருப்பேன். அப்பா வந்ததும் என் அத்தைமார்கள், அப்பம்மா எல்லாரும் என்ன மாத்தி மாத்தி தூக்கி வச்சிக்கிடுவாங்க; ரொம்ப அழுதிருவாங்க. அதப் பாத்து நானும் அழுதிருவேன். இறந்துபோன அம்மா, அம்மா இல்லாத பிள்ளையாக இருக்கிற நான் - எல்லாம் உள்ளே இருக்கிற சோக நெருப்பை அப்பாவுடைய வரவு ஊதிப் பெருக்கிவிடும். அப்பாவும், பாட்டையாவும்தான் இந்த சூழலை மாத்துவாங்க - ஏதாவது பேசி; மதுரையில் மழ இருக்கா, வெயிலு எப்படி இருக்கு அப்டின்னு ஏதாவது பேசி.

அப்பா வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. எனக்குப் பிடிச்சது என்னன்னா, திராட்சைப் பழம். அப்போவெல்லாம் பச்சை திராட்சைதான் எங்கேயும் கிடைக்கும். நல்லா புளிக்கும். நரிகூட நிஜமாவே வேண்டாம்னு போச்சே, அது. கருப்புத் திராட்சை -ஹைதராபாத் திராட்சை என்பார்கள் - நல்லா இனிக்கும்; அத அப்பா வாங்கிட்டு வர்ரப்போவெல்லாம் ஒரே ஜாலி.

ஒருதடவை அந்த மாதிரி வரும்பொது எனக்கு ஒரு மூணு சக்கர சைக்கிள் வந்திச்சு. சரியான கனம்; கெட்டிக் கம்பில பண்ணுனது. பச்சைக் கலர். வீல் சைடு எல்லாம் ஒரு மாதிரி சிகப்பு. கெட்டி ரப்பர்ல டயர். அழகா பேப்பர் போட்டு சுத்தி வந்து இறங்கிச்சி. அடேங்கப்பா! எப்படித்தான் நியூஸ் பரவுச்சோ…கொஞ்ச நேரத்தில ஊர்ல இருக்கிற சின்ன பசங்க பூரா வந்திட்டாங்கல்லா நம்ம வீட்டுக்கு.

அப்போ சைக்கிள் ஓட்ற வயசும் இல்ல; அதனால நமக்கு ஒரு டிரைவர் செட் பண்ணியாச்சி. வேற யாரு; நம்ம தங்கச்சாமி தான். வீட்டுக்குப் பின்னால பெரிய காலி இடம் இருக்கும். நம்ம டிரைவரோடு போயிட வேண்டியதுதான்; என்ன உக்கார வச்சு தங்கச்சாமி சுத்தி சுத்தி தள்ளிக்கிட்டே ஓடுவான். வேணுமான்னு கேட்டாகூட வேண்டான்னுட்டு, தள்ளி உடுவான். நமக்கு ‘ஸ்டீயரிங் கன்ட்ரோல்’ மட்டும்தான். ஒருநாள் எனக்கும், தங்கச்சாமிக்கும் படு ஜாலி. வேக வேகமா சுத்திக்கிட்டு இருந்தோம். டபார்னு கால சக்கரத்துக்குள்ள விட்டுட்டேன். பெரு விரல் நசுங்கி ஒரே ரத்தம். தங்கச்சாமி என் அத்தைமார்களுக்குப் பயந்து பின் வாசல் வழியே ஓடிப் போய்ட்டான். ஆனா, இதில் ஒரு நல்லது நடந்தது. அதுக்குப் பிறகு வண்டிக்கு டிரைவர் கிடையாது. அதனால நானே ஓட்டப்பழகினேன்.. அதன் பின் அத்தைகளின் கையைப் பிடித்து நடந்து வந்த நான் சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். அநேகமாக என் சைக்கிள் மட்டுமே அந்தப் பள்ளியில் மரத்தடியில் ‘பார்க்’ செய்யப்பட்ட சைக்கிளாக இருக்கும். நான் சைக்கிளில் செல்வதைப் பார்க்க வழியில் உள்ள வீட்டிலிருந்து பெரிசுகள் தலைகள் கூட எட்டிப் பார்க்கும்.

எங்கள் வீட்டில் அப்போது ‘priced possession’ ஆக இருந்த இன்னொரு பெரிய பொக்கிஷம் ஒரு கிராமபோன். நிஜமாகவே கிராமத்தில் இருந்ததால் அந்தப் பெயர் வந்திருக்குமோ? அப்போவெல்லாம் எங்க ஊரில் மின்சாரம் கிடையாது. ஊரில் அங்கங்கே ஒரு கல் தூணில் ஒரு லாந்தர் விளக்கு இருக்கும். அந்த விளக்குக்கு தான் இருப்பதைக் காட்டிக் கொள்ள மட்டுமே திராணி இருக்கும். சுற்றி எந்த ஒளியும் இருக்காது. ஒரு ‘மரியாதைக்காக’ அந்த காலத்தில் தெரு விளக்குகள் இருந்திருக்கும்போல. மின்சாரம் வந்தது ரொம்ப வருஷங்களுக்குப் பிறகுதான்.

அந்த கிராமஃபோன் ஒரு சில இசைத்தட்டுகளோடு வீட்டில் பல வருஷங்கள் இருந்தது. பொதுவாக, யாராவது ஏழு கடல், ஏழு மலை தாண்டி வருவது போல் அந்தப் பொட்டியைப் பார்க்க வருவார்கள். அவர்களுக்காக அதன் பாதுகாப்பான இடத்திலிருந்து அது ‘கீழே எழுந்தருளி’ சில பாட்டுகள் பாடும். அத்தைமார்கள் தான் அதன் இயக்குனர்கள். என் வயசு பசங்களுக்கு ‘உள்ளே சின்ன ஆள் இருந்து பாடுறார்’ அப்டீங்ர விஞ்ஞான அறிவு இருந்த அளவுக்கு நான் மோசமா இருக்கவில்லை; ஆனாலும் என்னவாக இருக்கும்; அதுவும் அந்த ஊசி முனையில் இருந்து எப்படி பாட்டு வரும் என்று ஒரே குடைச்சல். சும்மா, சொல்லக்கூடாது…இன்னும் அந்தக் குடைச்சல் இருக்கு. இப்பகூட யாருக்குத் தெரியும் அந்த விஞ்ஞானம் எல்லாம்!

கிராமத்துப் பிள்ளைகளோடு விளையாடி ஒன்றாக இருந்தாலும் எல்லோருக்கும் நான் ஒரு ‘தாயில்லாப் பிள்ளை’. அந்தக் கண்ணோட்டத்தில்தான் என்னைப் பார்ப்பார்கள். அதை எனக்குப் புரியும் வகையில் ‘ஸ்பெஷல் அன்பை’ப் பொழிவார்கள். I was the most pampered and petted child in the village. அதுவே என் பின்னாளைய வாழ்வில் ஒரு அழியா தடத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் பாதிப்பு என்னிடம் இன்னும் வரை இருப்பதாகவே நினைக்கிறேன். அத்தை இருவருடன் இன்னொரு டீச்சர் வேலை பார்த்தார்கள்; அத்தைகளுக்கு நல்ல தோழி போலும். தினமும் மதியம் நான், என் அத்தைகள், அந்த டீச்சர் எல்லோரும் பள்ளியின் பக்கத்திலேயே இருந்த எங்கள் வீட்டுக்கு மதியச் சாப்பாட்டுக்கு ஒன்றாய் வருவோம். வழக்கமாய் அத்தைகளின் கையைப் பிடித்து, தொங்கி, ஆடிக்கொண்டே வரும் வழக்கம். ஒரு அத்தை இல்லாவிட்டால் அந்த டீச்சரின் கையைப்பிடித்து தொங்கிக்கொண்டு வருவது பழக்கமாயிருச்சி. அந்த டீச்சர் ரொம்ப அழகு. எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அம்மாவாக வந்தால் நல்லா இருக்குமே என்று ஏனோ நினைத்திருக்கிறேன். பிஞ்சிலே பழுத்த கேசோ…அப்படியும் இல்லை; அந்தப் பேச்சு வீட்டில் அடிபட்டுக்கொண்டிருந்தது. அதனால் அப்படி நினச்சிருப்பேனாயிருக்கும்.

சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டோமோ? கல்யாணத்திற்கு வருவோம். அது என்னவென தெரியல…காட்சிகள் எல்லாம் சினிமாவில் cut-shots என்பார்களே அது மாதிரி தொடர்பில்லாமல் துண்டு துண்டுக் காட்சிகளாகத் தெரிகின்றன. அம்மா-அப்பாவின் நடுவில் கல்யாண ஊர்வலக் காரில் உட்கார்த்தப் பட்டது ‘தெரிகிறது’. அதை விடவும் வழி நெடுகச் சென்ற ஊர்வலத்தில் நானே பலரின் கவனத்தை ஈர்ப்பவனாகி விட்டேன். அதை நான் அப்போதே உணர்ந்ததாக இப்போதுகூட எனக்குத் தோன்றுகிறது.

அடுத்த cut-shot! இது கல்யாண நாளின் மாலை நேரம். அந்தி சாய்ந்து விட்டது. இடம்: அப்பாவின் ஊர் (காசியாபுரம்), எங்கள் வீடு. அந்தக் காலத்தில் - ஏன் இப்பவும் கூட, கிராமத்தில் ஒரு கல்யாணம் என்றால் ஊர் ஒட்டு மொத்தமும் கல்யாண வீட்டில்தான் இருக்கும் - வீடு முழுவதும் ஆட்கள். நாலைந்து ‘பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்’. அதுவும் அந்தக் காலத்திற்கு பெரிய novelties. வீட்டுக்கு முன்புறம் இரண்டு தலைவாசல்கள் இருக்கும். வடக்குப் பக்க வாசல்தான் பொதுவாக எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் வழி; தெக்குப் பக்கம் உள்ளது அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்று தெரியாது - நான் தனியாக அந்த தெக்கு வாசலில் உட்கார்ந்து கொண்டு, அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்த என் வயசுப் பசங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் யாரோ வந்து நின்னது மாதிரி இருந்திச்சி; திரும்பிப் பார்த்தேன். அப்பாதான் பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு நின்னாங்க. பக்கத்தில் உக்காந்தாங்க; கொஞ்ச நேரம் ஏதும் பேசலை. நானும்தான். பிறகு அப்பா மெல்ல கேட்டாங்க: ‘வந்திருக்கிறது உனக்கு யார்?’என்று கேட்டார்கள் . ‘சித்தி’. அப்படிதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்; அதைச் சொன்னேன். ‘இல்லப்பா, அது உனக்கு அம்மா’ என்றார்கள்.

அதிலிருந்து அப்படித்தான்.


*
*
*
_____________

*
*
*
Oct 03 2005 11:10 pm நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 21 பரிந்துரைகள்)Click on the stars for voting pad.
40 Responses
P.V.Sri Rangan Says: after publication. e -->October 4th, 2005 at 12:34 am e
வாழ்த்துக்கள் தருமி!நட்ஷத்திர வாரப்பதிவுகள் நன்றாகவுள்ளது.பையனின் அகத்தின் அழகு முகத்தில் மிளிர்கிறது.
Thangamani Says: after publication. e -->October 4th, 2005 at 1:40 am e
நல்ல சித்திரம் போன்றதோர் பதிவு, நகைச்சுவையின் தீற்றல்களுடன். நன்றி!
ஜோ Says: after publication. e -->October 4th, 2005 at 3:44 am e
என்ன ஒரு இயல்பான நடை.கொன்னுட்டீங்க!வால் நட்சத்திரம் சும்மா ஜெகஜோதியா மின்னுது.
Balaji-paari Says: after publication. e -->October 4th, 2005 at 4:42 am e
mmhm..Nalla pathivu…
வசந்தன் Says: after publication. e -->October 4th, 2005 at 5:45 am e
//எனக்குப் பிடிச்சது என்னன்னா, திராட்சைப் பழம். அப்போவெல்லாம் பச்சை திராட்சைதான் எங்கேயும் கிடைக்கும். நல்லா புளிக்கும். நரிகூட நிஜமாவே வேண்டாம்னு போச்சே, அது. கருப்புத் திராட்சை //
எப்பிடித்தான் உதுகளக் கொண்டு வந்து செருகிறீங்களோ?..
நல்லாயிருக்குப் பதிவு. அதுவும் நட்சத்திரமா வேற இருக்கிறீங்கள். கலக்குங்கோ.
துளசி கோபால் Says: after publication. e -->October 4th, 2005 at 6:09 am e
என்னங்க தருமி,மனசைத் தொடறமாதிரி……
அப்பா அம்மா கல்யாணம் பார்த்த மொதல் பதிவாள(ல)ர்நீங்கதான் போல.
தெருத்தொண்டன் Says: after publication. e -->October 4th, 2005 at 6:53 am e
//‘வந்திருக்கிறது உனக்கு யார்?’ . ‘சித்தி’. அப்படிதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்; அதைச் சொன்னேன். ‘இல்லப்பா, அது உனக்கு அம்மா’ என்றார்கள்.
அதிலிருந்து அப்படித்தான்.//
அற்புதமாக அடுத்த 60 ஆண்டு வாழ்க்கையை “அதிலிருந்து அப்படித்தான்” என்ற இரண்டு சொற்கள் மூலம் சொல்லிவிட்டீர்கள்.
//இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன்.// நல்லா வலை பதியத் தேவையான அறிவைத் தேடணும்னு 60 வருஷம் முன்னாலேயே உணர்ந்து சீக்கிரமா பள்ளி போயிருக்கீங்க.
தருமி சார்! எழுத்து கரைக்கிறது.
Go.Ganesh Says: after publication. e -->October 4th, 2005 at 8:07 am e
நல்ல நெகிழ்வான பதிவு தருமி.
சில சோகங்களை மறப்பது நல்லது. ஆனால் சோகங்கள் எல்லாவற்றையும் மனிதனால் மறக்க முடிவதில்லை. ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் பதிவாக்கியிருப்பது உங்களது நினைவின் சக்தியையும் அந்த நிகழ்வுகளின் ஆழத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
நல்ல பதிவு
Suresh - Penathal Says: after publication. e -->October 4th, 2005 at 1:58 pm e
அருமையான பதிவு தருமி.
இயல்பான எழுத்தோட்டம், நகைச்சுவை - மேலாக ஆழ்ந்து உள்ள ஒரு சோகம்..உங்கள் உணர்வுகளை இடம் பெயர்த்துவிட்டீர்கள்!
கோ.இராகவன் Says: after publication. e -->October 4th, 2005 at 2:18 pm e
கொஞ்சம் கண்களைக் குளிக்கை வைத்து விட்டீர்கள் தருமி. வாழ்க்கையில் பலவைகளைக் கேள்விப் படுகையில் நான் ஆண்டவனை நினைத்து, “ஐயா! நீ என்ன ரொம்ப நல்லா வெச்சிருக்க. ரொம்ப நன்றி.” என்று சொல்லியிருக்கின்றேன். என்னதான் சந்தோஷத் தருணங்களாக இருந்தாலும் தடக்கென்று நெஞ்சு சில நொடிகள் முறிந்து விடுகிறது அல்லவா. சரி..என்ன சொல்ல வர்ரேன். தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கேன். ரொம்ப நல்லாயிருக்கு. படம் ரொம்ப அழகு. சுத்திப் போடுங்கள்.
நட்சத்திரப் பதிவாளர் ஆயிட்டீங்க. வாழ்த்துகள்.
இளவஞ்சி Says: after publication. e -->October 4th, 2005 at 3:09 pm e
//அதிலிருந்து அப்படித்தான்.//
சில நேரங்களில் விசயங்களைச் சொல்லிமுடிக்கும் வகையிலும் ஒரு அழகு இருக்கிறது… இது போல..
Raj Says: after publication. e -->October 4th, 2005 at 3:21 pm e
Dear Dharumi Sir,
I have been a reader of your blogs since you started writing. I like your way of narrating things very much. it is just free flow of thoughts in a beautiful way. this post has touched my heart, especially the last two words, it is very powerful and means a lot.
kid Says: after publication. e -->October 4th, 2005 at 6:17 pm e
hi dharumi appanu
Good. Perumaiya Irukku.
dharumi Says: after publication. e -->October 6th, 2005 at 8:02 pm e
Hi Dharumi Appa’nnu,
i’m really a very big fan of ur writings. but i haven’t sent u any comments so far. i’m really proud to have u as my dad. u’ve become a star of this week too. good. keep going…
read ur ‘அப்பாவின் கல்யாண வைபோகமே…’. got moved with the last line ‘அதிலிருந்து அப்படித்தான்’. முடிக்கும் பொது ‘என் கண்கலில் நீர்’.
இப்படிக்கு உங்கல் செல்ல குட்டி மகள் - ஜுனி
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 11:02 pm e
உங்கள் பின்னூட்டங்களை வாசித்ததும் மனசு என்னமோ போல ஆயிடுச்சி. அதுக்கு மேல ஒண்ணும் சொல்லப்போறதில்ல.எல்லாருக்கும் - நன்றி
Josaph Irudayaraj Says: after publication. e -->October 9th, 2005 at 1:33 pm e
நான் ரொம்ப லேட்டு….ஹீ !ஹீ!
காணாம போன “கிராமபோன”பத்தி தேடி வந்தா!………என்னா போங்க!கொன்னுபுட்டீங்க!
ஏதேதோ எழுதனும்னு நினைக்குது மனசுஆனா எத பத்தி எழுதுரது.
என்னத்ததான் சொல்லுங்க!…அப்போது இருந்த வாழ்வியல் சுகங்கள் இப்ப இருக்குங்களா?மனுசன் எங்கயோ தொலைஞ்சி போயிட்டானுங்க!
மனிதன் Says: after publication. e -->October 9th, 2005 at 2:02 pm e
கருமம். உளரலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போயிடுத்து. 2 வயதில் நடந்தது இந்த 50 வயது கிழவனுக்கு இன்னும் நிழலாடுதாம். 2 வயதில் ஏற்படும் நிகழ்வுகளின் பதிவுகள் நிச்சயமாக மனதில் நிலைக்காது மற்றும் அதை நினைவு கூற முடியாது என்பதே என் வாதம்.
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 2:19 pm e
மனிதனே,கொண்டு இவ்வளவு கோபம் கொள்ளலாமா?இரண்டு தவறுகள்: (1)இரண்டு வயது நினைவுகள் - அம்மாவைப் பற்றிய விதயங்கள் - நினைவில் இல்லையென்று கூறியுள்ளேன். நின்றவை எல்லாம் நான்கு வயதிற்குப் பிறகு நடந்தவையே.(2) 50 வயது கிழவன் இல்லை. 61 வயது குடு..குடு கிழவன். போதுமா?
இன்னும் கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே, நீங்கள்.
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 2:22 pm e
மேலே எழுதிய மடலில் விட்டுப்போன முதல் வரி:‘மனிதனே,மனிதனாக இருந்து கொண்டு…”
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 2:27 pm e
“மனிதனுக்கான” மூன்றாவதும் முழுமையானதுமான மடல்:
மனிதனே,“மனிதனாக”(?!) இருந்து கொண்டு இவ்வளவு கோபம் கொள்ளலாமா?
இரண்டு தவறுகள்: (1)இரண்டு வயது நினைவுகள் - அம்மாவைப் பற்றிய விதயங்கள் - நினைவில் இல்லையென்று கூறியுள்ளேன். நின்றவை எல்லாம் நான்கு வயதிற்குப் பிறகு நடந்தவையே.
(2) 50 வயது கிழவன் இல்லை. 61 வயது குடு..குடு கிழவன். போதுமா?
இன்னும் கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே, நீங்கள்.அதுவும் இதுபோன்ற பதிவுகளிலாவது…
மனிதன் Says: after publication. e -->October 9th, 2005 at 3:03 pm e
//* பெத்த அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். *//
//* இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன். //*
தவறு யாருடையது?
தங்களின் தாயார் இறந்தபோதும் உங்களுக்கு வயது ஒன்றை அல்லது இரண்டு என் கூறியுள்ளீர்கள் மற்றும் நீங்கள் பள்ளி செல்லும்போது உங்களின் வயது இரண்டு எனக் கூறியுள்ளீர்கள். அனேகமாக உங்களின் நினைவுகளெல்லாம் இந்த இரண்டு வயதிற்கு உட்பட்டதாகவே தெரிகின்றது.
நான் தேடிய வரையில் நான்கு என்பதை..
//* எழுந்திரிச்சி பாத்தப்ப நேரம் காலை 4 மணி. *////* அப்பாவின் நான்கு தங்கைகளில் *//
இங்கு தான் காணப்படுகின்றதே தவிர, நான்கு வயது என காண இயலவில்லையே அறியத்தரவும்.
நான் ஏன் மதம் மாறினேன் என்ற வலைப்பதிவில் உங்களின் அனேக கற்பனைகளை கலந்து விட்டதைப் போல் இங்கும் அவ்வாறு நடத்துகின்றீர்களோ என நினைத்தனால் தான் இப்படி என் வார்த்தைகள் தடித்தது. மனம் வருந்தச் செய்துவிட்டால் மன்னிக்கவும்.
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 3:15 pm e
“நான் ஏன் மதம் மாறினேன் என்ற வலைப்பதிவில் உங்களின் அனேக கற்பனைகளை கலந்து விட்டதைப் போல்”
மனிதனே,/உங்கள் எழுத்தில் உள்ள ஆத்திரம் எனக்கு இப்போது புரிகிறது. அந்தக் ‘கற்பனை’களை அங்கே எதிர்கொள்ள எது உங்களைத் தடுத்தது - பதிலின்மையா?
எங்கே எதைப் பேச வேண்டுமோ அதை அங்கே பேசுவதுதான் நாகரீகம்.‘தடித்த வார்த்தைகள்’ என்று இப்போதாவது உணர்ந்தமைக்கு சந்தோஷம்.
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 3:24 pm e
இதுவரை இப்பதிவுக்குப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் - of course except மனிதன் - மிக்க நன்றி. இந்தப் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லாமலே இருக்கவே ஆசைப்பட்டேன். ஏனெனில் எழுதி முடித்து இதை வாசித்த போதெல்லாம் மனதை சில இடங்கள் வருத்தின. அப்படியே விட்டுவிட நினத்தேன்.
மனிதனின் மடலால் பதில்கள் எழுதும்படி ஆயிற்று.
அதோடு இந்தப் பதிவுக்கு எப்படி இத்தனை ‘-’ ஓட்டுகள் என்று வியப்படைந்தேன். ஆச்சரியமாயிருந்தது. இப்போது புரிகிறது. தென்னை மரத்தில் கொட்டிய தேளுக்கு பனை மரத்தில் நெறி…போகட்டும்.
மனிதன் Says: after publication. e -->October 9th, 2005 at 3:25 pm e
//* //* பெத்த அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். *//
//* இதனால் நான் இரண்டு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டேன். //*
தவறு யாருடையது?
தங்களின் தாயார் இறந்தபோதும் உங்களுக்கு வயது ஒன்றை அல்லது இரண்டு என் கூறியுள்ளீர்கள் மற்றும் நீங்கள் பள்ளி செல்லும்போது உங்களின் வயது இரண்டு எனக் கூறியுள்ளீர்கள். அனேகமாக உங்களின் நினைவுகளெல்லாம் இந்த இரண்டு வயதிற்கு உட்பட்டதாகவே தெரிகின்றது.
நான் தேடிய வரையில் நான்கு என்பதை..
//* எழுந்திரிச்சி பாத்தப்ப நேரம் காலை 4 மணி. *////* அப்பாவின் நான்கு தங்கைகளில் *//
இங்கு தான் காணப்படுகின்றதே தவிர, நான்கு வயது என காண இயலவில்லையே அறியத்தரவும். *//
இதற்குரிய பதில் எங்கே சார்?
//*மனிதனே,/உங்கள் எழுத்தில் உள்ள ஆத்திரம் எனக்கு இப்போது புரிகிறது. அந்தக் ‘கற்பனை’களை அங்கே எதிர்கொள்ள எது உங்களைத் தடுத்தது - பதிலின்மையா?
எங்கே எதைப் பேச வேண்டுமோ அதை அங்கே பேசுவதுதான் நாகரீகம். *//
என்னுடைய ஆதங்கம் பதில் இல்லை என்பதல்ல. சிறுபிராயத்து நிகழ்வுகளிலுமா உங்கள் கற்பனையை தரிகெட்டு பாயவிடுவது என்பதில் தான். புரிந்ததா?
தருமி » Says: after publication. e -->October 9th, 2005 at 3:52 pm e
[…] என் வீட்டுக்கு வருபவர்கள் உடனே பார்க்கவேண்டிய ஒன்று இந்தப் பின்னூட்டங்களில் கடைசிப் பின்னூட்டம். தயவு செய்து பாருங்களேன். Oct 09 2005 03:52 pm Uncategorized Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is: Click on the stars for voting pad. Leave a Comment […]
குழலி Says: after publication. e -->October 9th, 2005 at 7:48 pm e
தருமி, நெகிழ்வு பதிவு,மனிதன் அவர்களுக்கு, இரண்டு வயது சம்பவங்கள் ஞாபகம் இருக்காது என்பது சொல்வதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை, எனக்கும் இன்னமும் சில இரண்டு மூன்று வயது ஞாபகங்கள் புகை காட்சிகளாக மனசில் நிழலாடுகின்றது தொடர்ந்து அதையே யோசிக்கும் போது சில சங்கிலித் தொடர் சம்பவங்கள் ஞாபகம் வருகின்றது, இது தொடர்பாக மேலும் அம்மா,அப்பாவிடம் பேசினால் அவர்கள் நிச்சயம் அந்த சம்பவங்களைப் பற்றி கூறுவர்கள் என நம்புகின்றேன், அப்போது தெளிவான காட்சி படமே கூட கிடைக்கலாம்.
தாணு Says: after publication. e -->October 9th, 2005 at 8:00 pm e
மனிதனுக்கு உங்கள்மேல் ஏன் இந்தக் காழ்ப்பு? ஏதோ ஒன்றில் உங்களின் வார்த்தைகள் அவரைச் சீண்டியிருக்கிறது போலும்.
சிறுவயது நினைவுகள் தெளிவற்று இருந்தாலும், அதை எழுதுவது முதிர்ந்த ஒரு `மனிதர்’தானே. அதே 4 வயதுகுழந்தையின் மழலையில் எழுதினால் யார் புரிந்து கொள்வது. நீங்களே முக்கியத்துவம் கொடுத்து எழுதாத 4 என்ற எண்ணுக்கு இத்தனை வியாகியானம் கொடுத்தவர் உங்கள் பதிவை எப்படி ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று நினைத்து சந்தோசப் படுங்கள் .
Ramya Nageswaran Says: after publication. e -->October 9th, 2005 at 8:09 pm e
நல்லா எழுதியிருக்கீங்க..சில சமயம் நமக்கு சில சம்பவங்கள் தெளிவா ஞாபகமில்லாம போனா கூட, நாம் வளரும் பொழுது உறவினர்கள் அதைப் பத்தி பேசி நினைவுகளை ஃப்ரெஷ்ஷா வைச்சிருப்பாங்க.
ஆமா, மனிதன் சொன்னதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டு அந்த பின்னூட்டத்துக்கு ஒரு தனி பதிவே போட்டிருக்கீங்க?
dharumi Says: after publication. e -->October 9th, 2005 at 10:04 pm e
“மனிதன் சொன்னதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டு அந்த பின்னூட்டத்துக்கு ஒரு தனி பதிவே போட்டிருக்கீங்க? ”
-தப்புதான் ரம்யா. மனிதன் என்று ஒருவன் தன்னை அழைத்துக் கொள்வதாலேயே அவன் ‘மனிதனாக’ இருக்க வேண்டுமா என்ன?
மூர்த்தி Says: after publication. e -->October 10th, 2005 at 7:05 am e
தவறுகள் சில சமயம் ஏற்படுவதுண்டு. தெரிந்தே யாரும் தவறு செய்ய மாட்டார்கள். சிறு வயதில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மூத்த எழுத்தாளர் தமக்கே உரிய பாணியில் சுவைபடச் சொல்லி இருக்கிறார்கள். இதில் குற்றம் இருப்பதாக நான் எண்ணவில்லை.
தருமி அய்யா அவர்களே… மனம் கலங்க வேண்டாம்.
தருமி » 91. PASSING SHOT… Says: after publication. e -->October 10th, 2005 at 10:24 am e
[…] உண்மையாகச் சொல்கிறேன். ஒரு மறக்க முடியாத வாரமாக இந்த நாட்கள் கழிந்தன. ஆனால், முடியும் தருவாயில் வந்த ஒரு பின்னூட்டம், பின்னூட்டமா அது என்னைக் கொஞ்சம் - கொஞ்சமென்ன கொஞ்சம் - நன்றாகவே தடுமாற வைத்துவிட்டது. எழுத நினைத்து வைத்தவைகளை எப்படி சொல்ல முடியுமோ, தெரியவில்லை. அந்தப் பின்னூட்டம் வந்து சில நிமிடங்களே ஆயின. இப்போது தொடர மனமில்லை. சிறிது நேரம் கழித்து வந்து தொடர்கிறேன். […]
ஷ்ரேயா Says: after publication. e -->October 10th, 2005 at 10:52 am e
Hi Dharumi
I don’t think u should worry about this. it maybe (-) to some, but not for us.
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 11:08 am e
ஆறுதல் கூறிய நல்ல நெஞ்சங்களுக்கு,இது ஒரு தேவையில்லாத ஒரு விளக்கம்தான். இருந்தாலும்….அம்மா இறந்தது, அது தொடர்பான விதயங்கள் எதுவும் சுத்தமாக நினைவில் இல்லை என்று எழுதியுள்ளேன். அப்பாவின் கல்யாணம் எனது 5வது வயதில். கல்யாணம் முடிந்த கையோடு அப்பாவுடன் மதுரை வந்து பள்ளியில் சேர்ந்தேன். நடுவில் இருந்தது கிராமத்தில்.
எந்தக் கோபத்தையோ எங்கேயோ காட்டியதும், காட்டிய முறையும் - இவைதான் somehow it made me very emotional and upset.
இப்போ தெளிவாய்ட்டேன். விடுங்க அத…எப்பவும் போல் இனிமே ஜாலியா இருப்போமா!
துளசி கோபால் Says: after publication. e -->October 10th, 2005 at 11:53 am e
தருமி,
நீங்களுமா?……
ஜோ Says: after publication. e -->October 10th, 2005 at 12:12 pm e
தருமி,யாரோ ஒருவர் எதையோ சொல்லி விட்டார் என்பதற்காக நீங்கள் போட நினைத்திருந்த பதிவுகளை பதிய யோசிக்க வேண்டாம் .எங்களுக்கெல்லாம் வழிகாட்டி நீங்கள்.மறந்து விடாதீர்கள்! ‘-’ ஓட்டு ஒரே ஆளே பல முறை போட முடியும் .அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தொடருங்கள் உங்கள் பணியை .இல்லையென்றால் துளசியக்கா கேட்ட மாதிரி தான் நானும் கேட்கவேண்டியிருக்கும்.(மிரட்டல் மாதிரி இல்லையில்ல!)
dharumi Says: after publication. e -->October 10th, 2005 at 1:04 pm e
துளசி,கொஞ்சம் தலைய துக்கிப் பாருங்க…என்ன எழுதியிருக்கேன், பாத்தீங்களா?
ஜோ,இல்ல ஜோ, அந்த கடைசிப் பதிவுக்காக சிலது யோசிச்சி வச்சிருந்தேன். அத கடைசிப் பதிவா எழுத முடியாம போச்சு; அவ்வளவுதான். மற்றபடி நினச்சத எழுதிடறேன். சரியா?
அதோட (-)க்கு வருத்தமில்லை; ஆச்சரியமா இருந்திச்சு. ‘coz it was not at all a conroversial subject.இப்படி இருக்குமோன்னு நினச்சேன். அப்டிதான்னு ‘மனிதன்’ சொல்லிட்டுப் போய்ட்டார்; நல்ல மனிதன்!
BALA Says: after publication. e -->October 10th, 2005 at 6:00 pm e
Dharumi,Well remembered and well narrated AUTOGRAPH You were really a “SUPER” STAR at ThamizmaNam last week !!!!
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 3:02 pm e
நேச குமார் Says:October 23rd, 2005 at 2:36 pm eஅன்பின் தருமி,
உங்களது குழந்தைப் பருவம்/தாயார் பற்றிய பதிவைப் படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டன, இப்போது இதை எழுதும் போதும் தான். நல்ல பதிவு.
அப்பதிவை திரும்பவும் தேடிப்பார்த்தால் கிட்டவில்லை. ஆதலால் இந்த பின்னூட்டம் இங்கு. மன்னிக்கவும்.
நேச குமார் Says: after publication. e -->October 23rd, 2005 at 3:19 pm e
நன்றி தருமி. தற்போது தமிழ்மண பின்னூட்டப் பதிவுகளில் இதைக் கண்டேன்.
மற்றபடி, குழந்தைப் பருவ நினைவுகள் துல்லியமாக நினைவில் நிற்பது இயல்பானதுதான்.
ஜெயமோகன் கூட சொல்லியிருப்பார் - இம்மாதிரி தமக்கு நினைவில் இருப்பது எதோ மனச்சிதைவின் அறிகுறி என்ற சந்தேகம் தமக்கு இருந்ததாகவும், பின்பு மற்ற பலர் இதே மாதிரி தெரிவித்த பின்னர் தமது சந்தேகம் நீங்கியது என்று.
மதுரையில் எனக்கு ஒரு நன்பர் உண்டு. வயது 75ஐத் தாண்டிவிட்டது அவருக்கு. சாவகாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் தருணங்களில் அந்தக் கால மதுரையைப் பற்றிக் கேட்கக் கேட்க மிகவும் சுவையாக இருக்கும். மங்கலான, கீறல்கள் விழுந்து ஓடும் பழைய கறுப்பு-வெள்ளை திரைப்படம் பார்ப்பது போன்று இருக்கிறது உங்களது எழுத்து பாணி - இப்போது திரும்பப் படிக்கும்போது அதையும் ரசித்தேன்.

9 comments:

cheena (சீனா) said...

நண்பா, பழைய நினைவுகள் மலரும் நினைவுகளாக பதிவில் கூறியது படித்து ரசித்து மகிழ்ந்தேன். தந்தையின் திருமணத்தைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் தாங்கள் ஒருவராகத்தானிருக்க முடியும். செய்திகள் பலப்பல. நினைவாற்றல் அபாரம். சிறி சிறு செய்திகளைக்கூட விட்டு விடாமல் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது. நினைவுகள் எந்த வயதில் நடந்ததை நினைவுறுத்தும் என்பது ஒவ்வொருவறுக்கும் மாறுபடும். என்னைப் பொறுத்த வரையில் 5 வயது முதல் நடந்தது நினைவில் உள்ளது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதொ - சில நிகழ்வுகளைப் பார்க்கும் போதோ, சில சிறு வயது நினைவுகள் வந்து போகும். கேட்டவையும் பார்த்தவையும் அந்நினைவுகளுடன் தொடர்பு கொண்டவைகள். அதனால் தான். ஆக நினைவின் வயதுக்கு விதி ஒன்றுமில்லை,,

தருமி said...

பாராட்டுக்களுக்கு
மிக்க நன்றி நண்பா ...

சாம் தாத்தா said...

தருமி அண்ணா...

எனக்கான உங்கள் பின்னூட்டம் கண்டு பின் தொடர்ந்து வந்து பார்த்தால்...

கடவுளே....!

எத்தனை அழகான அற்புதமான எழுத்து.

எந்த எழுத்து வாசகனுக்கு அவனது வாழ்வின் நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டுகிறதோ அது நிச்சயமாக நல்ல் எழுத்து என எங்கோ படித்திருக்கிறேன்.

எவருக்கு எப்படியோ...
எனக்கு என் கடந்தகாலம் நினைவுக்கு வந்தது.

நிறைய எழுதுங்கள் அண்ணா.

உங்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு நிறைய உள்ளது.

எனது இடைப்பட்ட சோகம்.... ஒரு மூடுபனி மட்டுமே.

உங்களுடைய... மற்றும் நண்பர் சீனாவுடைய....
சூரிய ஒளி பட்டவுடன் அனைத்தும்... போயே போச்சுண்ணா.

என் மேல் நீங்கள் இருவரும் காட்டும் அன்பில் மனம் நெகிழ்கிறேன்.

தருமி said...

நன்றி சாம் தம்பி.

ஆனா சொல்றதை ஒழுங்காகவே கேக்கிறதில்லை. அடிக்கடி வந்து போங்கன்னு சொன்னது மறந்தே போச்சா ... ?

Thekkikattan|தெகா said...

தருமி, மனதை கணக்கச் செய்கிறது பதிவு. நான் அழைத்த தொடழைப்பு பதிவிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மலைப்பு மட்டுமே எச்சமாக என்னிடத்தில்...

cheena (சீனா) said...

இல்லப்பா அவங்க உனக்கு அம்மா - அதுலந்து அப்படித்தான்

அண்ணே தருமி - ஐந்து வயதில் - சித்தி சடாரென அம்மாவாக மாறியதில் - அதுவும் இறுதி வரை அம்மாவாக இருந்தது - உங்கள் மனத்திடத்தினைக் காட்டுகிறது அண்ணே

வடுவூர் குமார் said...

இதெல்லாம் எப்ப‌டி ப‌டிக்காம‌ விட்டேன் என்று தெரிய‌வில்லை.

தருமி said...

வடுவூர் குமார்,
எப்படி பாத்தீங்களா? புதிய பதிவில் பழைய பதிவின் தொடுப்பு கொடுத்து உங்களை இங்கே அழைச்சிட்டு வந்தாச்சு ..

எப்புடீ ..!

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

2007ல் எனது முதல் மறுமொழி - பிறகு 2010ல் ஒரு மறுமொழி - இப்பொழுது 2014 இறுதியில் ஒரு மறு மொழி - தங்களை நண்பா என அழைத்த எனது முதல் மறுமொழி. தங்களின் பதிவுகளை - படிக்க வேண்டிய பதிவுகளைத் தவற விட்டு விட்டேன் என வருந்துகிறேன். படிக்க முயல்கிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Post a Comment