Thursday, March 03, 2011

483. சில உலக சினிமாக்கள் ...

*
கா.பா. வோடு  சேர்ந்ததால்  நடந்த  விபரீதம் ...  1முந்திய பதிவர் சந்திப்பில் நூலாராய்வு என்று ஒரு புதிய முயற்சி எடுத்தோம். அதற்கு அடுத்த சந்திப்பில் உலக சினிமா ஏதாவதொன்று பார்க்கலாமென முடிவெடுத்தோம். சென்ற ஞாயிறன்று - 26.2.11 - கா.பா. வீட்டில் சந்தித்தோம். Ki-duk Kim இயக்கிய Spring, Summer, Fall, Winter... and Spring  என்ற படத்தைப் பார்த்தோம்.


Spring, Summer, Fall, Winter... and Spring

 எனக்கு இப்படம் இரண்டாம் முறை. அதனால் முதலில் பார்த்த போது புரியாதது இப்போது இன்னும் ‘கொஞ்சம்’ புரிந்தது. எல்லாம் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் படத்தின் அழகு எத்தனை முறை வேண்டுமானாலும் இதைப் பார்க்கத் தூண்டும். மரங்கள் சூழ்ந்த மிக அழகான ஏரி. சுற்றிலும் மலை. நான்கு கால நிலைகளிலும் அங்கு அழகுக்குப் பஞ்சமில்லை. ஒவ்வொரு கால நிலைக்கும் ஒரு அழகு.

வாழ்க்கை ஒரு சுழல். நாயகன் குழந்தையாக இருக்கும்போது செய்த தவறுகளுக்காகப் பிராயச்சித்தம் செய்கிறான். ஆனால்,   வாழ்வின் அடுத்த பகுதியில் இன்னொரு தவறு, மீண்டும் பிராயச்சித்தம். அதன் பின் அடுத்த குழந்தை அதே தவறுகளைச் செய்கின்றது. அறியாமையின் தொடர்ச்சி. உச்சத்தில் இருந்து புத்தர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பருவங்களுக்கு ஏற்றது போல் மனிதனிடம் கர்ம வினைகள் ... தண்டனைகள் ...  வாழ்க்கை கடந்து போகின்றது ...


--------------------------------------இந்தப் படம் பார்ப்பதற்கு முன்பே கா.பா விடம் ஒரு குறுந்தகடு - நான்கு உலகப்படங்கள் - வாங்கிப் போனேன். அதில் பதிவர்களோடு Spring, Summer, Fall, Winter... and Spring பார்ப்பதற்கு முன்பே கிகுஜிரோ பார்த்தாயிற்று. அதன்பின்னும் இன்னும் மூன்று படங்கள். அது பத்தாது என்பது போல் நேற்று மாலை ‘யுத்தம் செய்’ படமும் தொடர்ந்து பார்த்தாகி விட்டது. வயசாகிப் போன காலத்தில் இப்படி ஒரு வாரத்தில் ஆறு படமா? எல்லாம் கா.பா. வோடு  சேர்ந்ததால்  நடந்த  விபரீதம் ... இன்னும் இந்த வாரத்திலேயே நடுநிசி நாய்கள், பயணம் பார்க்கணும் ...  :)  விபரீதம் வளர்கிறது ...


-----------------

கிகுஜிரோ by Takeshi Kitano.
ஜப்பானிய நந்தலாலா! (ஆமாம் ... தமிழில் இந்தப் படத்திற்கு கிஷ்கின் ஏன் நந்தலாலா என்ற இந்தப் பெயரை வைத்தார்?) எனக்கென்னவோ தமிழ்ப்படம் இதைவிட பிடித்தது.

மேற்கிந்திய வழக்கப்படி மனநிலை சரியில்லாத தாயைப் பார்க்க செல்பவன் தூரத்திலிருந்து வெறித்த பார்வையோடு தன் தாயைப் பார்த்துவிட்டு திரும்புவது போலில்லாமல் தமிழில் - முழு புத்திசாலியாக இல்லாத நாயகன் - தாய்க்காக பல ஏற்பாடுகளைச் செய்வது போல் காண்பித்தது எனக்குப் பிடித்தது. தமிழில் வந்த சில கதாபாத்திரங்கள் போல் மற்ற பாத்திரப்படைப்புகளையும்  வித்தியாசப் படுத்தியிருக்கலாம். அங்கேயும் இங்கேயும் பைக்கில் வரும் இருவர்; புதுமணத்தம்பதிகள், தலையில் பனை ஓலையை வைத்துக் கொண்டு போவது ... என்று பல ‘ஈயடிச்சான் காப்பி’ எதற்கு? அவை இல்லாமல் மிஷ்கின் படைத்த இளநீர் தாத்தா, பீர் பாட்டிலால் அடி வாங்கும் கார் பையன்கள், பரத்தை ... இதையெல்லாம் படைத்த மிஷ்கின் சில ஒற்றுமைகளைத் தவிர்த்திருக்கலாமோவென்று தோன்றியது. ஆனால் அவர் ஜப்பானிய இயக்குனர் Takeshi Kitano போலவே தானும் கதாநாயகனாக ஆக்கிக் கொண்டதிலிருந்து பலவற்றில் ஒத்துப் போய்விட்டார். இப்படத்தில் வரும் மெளனங்கள் பல இடத்தில் நன்கிருந்தன. தேவையில்லாமல் இசை எதற்கு என்று தோன்ற வைத்த  இடங்கள் பல.  (ஆயினும் இசை, படப்பிடிப்பு நமது தமிழில் எனக்குப் பிடித்தன.)  நம் கதையில் படம் முடிகிறது; ஜப்பானில் படம் முடியவில்லை .. கதாநாயகன் இன்னும் ஒரு முறை இதுபோல் ஊர் சுற்றுவோம் என்று சொல்லி விடை பெறுகிறான்.

=================

BARAN (the rain)  by Majid Majidi
டெஹ்ரானில் நடக்கும் கதை. அங்கு நிறைய ஆப்கானிஸ்தானிய மக்கள் முறையான தங்கும் உரிமை ஏதுமின்றி கள்ளத்தனமாக உள்ளனர். அவர்களுக்கு இங்கு வேலை பார்க்க உரிமையில்லாவிட்டாலும் கள்ளத்தனமாக அங்கும் இங்கும் வேலை பார்க்கிறார்கள். லத்தீப் வேலை பார்க்கும் இளைஞன் / சிறுவன். அங்கு வேலைபார்க்க வரும் ஒரு பையன் உண்மையில் பெண்ணென கண்டு கொள்கிறான்.  காதல் ... அவளுக்கு நிறைய உதவி செய்கிறான். தணிக்கை அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்ளும் நேரத்தில் அவளை காப்பாற்றுகிறான். ஆனாலும் அவளுக்கு - ரெஹ்மத் - வேலையில்லாமல் போகவே அவளைத் தேடி போகிறான். அவளின் மேலிருந்த அன்பினால் தன் உடமைகள், பணம் எல்லாவற்றையும் அவளுக்காக இழக்கிறான். இறுதியில் அவள் ஆப்ஹானிஸ்தானிற்குப் போவதைக் கவலையோடு பார்க்கிறான். அவள் போனபின் அவள் கால்தடம் பார்த்து மகிழ்கிறான். பெய்யும் மழையில் அந்தக் கால்தடம் மூழ்கிவிடுகிறது.

படத்தின் கதை எனக்கு ஒன்றும் புதியதாக இல்லை. நம் தமிழ்ப்படக் கதை மாதிரிதான்.  "கன்னியரின் கடைக்கண் பார்வை காளையரின் மேல் பட்டுவிட்டால் மண்ணில் மைந்தர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்"  என்ற தமிழ்க்கதாநாயகன் போல் எல்லாவற்றையும் தாரை வார்த்துவிடுகிறான்.


ஆனால் படத்தில் பிடித்தது அந்த மக்களின் வாழ்க்கையை ‘அச்சு அசலாக’ப் பதிவு செய்திருப்பதுதான். அதோடு எந்த ஒரு கதா பாத்திரமும் ‘நடிப்பு’ என்பதேயில்லாமல் அப்படியே ‘வாழ்ந்திருக்கிறார்கள்’.நடிப்பு என்பதை எங்குமே பார்க்க முடியாது. நேரில் அங்கேயே போய் நடப்பதைப் பார்த்து விட்டு வந்த ஒரு திருப்தி. மக்கள், வாழ்க்கை, எளிமை, அச்சம், பணத்தின் அருமை - எல்லாமே நிஜம்போல் அழகாகக் காண்பிக்கப் படுகின்றன. LIVE TELECAST ...!கா.பா. வோடு  சேர்ந்ததால்  நடந்த  விபரீதம் ... 2

11 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யா.. இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. இன்னும் நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு...

அப்புறம் அந்த ந.நா பார்க்கணுமான்னு கொஞ்சம் யோச்சிங்க.. தண்டம்..

தருமி said...

ந.நா. நீங்க பார்த்திட்டீங்கல்ல ..? ’அந்த காலத்தில‘ அதாவது மதுரையில் மொத்தமே 14 தியேட்டர் இருந்த போது பார்க்கப் படம் இல்லைன்னாகூட ஏதாவது ஒண்ணுல உக்கார்ரது வழக்கம். அது மாதிரி இதைப் பார்க்கலாமோன்னு பார்த்தேன். வேணும்னா .. உடுங்க.. ’திருட்டு’ தனமா இன்னும் ரெண்டு வாரம் விட்டு பார்த்துக்கிறேன்.

தருமி said...

//நாம பார்க்க வேண்டியது நிறைய இருக்கு... //

அப்போ, கா.பா. வோடு சேர்ந்ததால் நடந்த விபரீதம் இன்னும் தொடரும்னு சொல்றீங்க!!!

நேசமித்ரன் said...

நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங்க நம்மள:))

ஆதவா said...

பாருங்க பாருங்க..., ஆனா ஒரு கட்டத்தில தமிழ் சினிமாவையே ரொம்ப வெறுத்துடுவீங்க....

ஆனந்தி.. said...

//(ஆமாம் ... தமிழில் இந்தப் படத்திற்கு கிஷ்கின் ஏன் நந்தலாலா என்ற இந்தப் பெயரை வைத்தார்?)//

மிஷ்கின் பாரதியாரின் அதீத விரும்பி தருமி சார்..அவர் படங்களுக்கு பாரதி சார்ந்த தலைப்புக்கள் தான் இருக்கும்...சித்திரம் பேசுதடி,யுத்தம் செய்,நந்தலாலா,அஞ்சாதே..இப்படி...:))))

ஆனந்தி.. said...

BARAN (the rain) by Majid Majidi இந்த படத்தை பற்றிய விமர்சனம் ஏற்கனவே படிச்சிருக்கேன் தருமி சார்...படிக்கும்போதே ரொம்ப பிடிச்சு போனது..அந்த லிங்க் கூட அனுப்பிருக்கேன் ..

http://umajee.blogspot.com/2011/01/blog-post_11.html

ஆனந்தி.. said...

..நா பார்த்துட்டு நீங்களும் விமர்சனம் போடுங்க தருமி சார்...அந்த படத்தை வச்சு ஒரு சர்ச்சையே நடந்துட்டு இருக்கு பதிவுலகில்..பார்ப்போம் உங்க பங்கு என்னனு ஹ ஹ.....:-)...:-)

தமிழ்வாசி - Prakash said...

அருமையான கதையம்சம் கொண்ட நல்ல படம் அது...

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

தருமி said...

நேசமித்ரன்

//நல்ல விஷயத்துக்கு எல்லாம் கூப்டாதீங்க நம்மள:))//

உங்களை இன்னும் நைஜீரியாவிற்கு ‘
நாடு கடத்தலையா’?

தருமி said...

ஆனந்தி,
//அவர் படங்களுக்கு பாரதி சார்ந்த தலைப்புக்கள் தான் இருக்கும்//

தலைப்பு எப்படியோ கதைக்கு ஒத்து வந்தால் சரியா இருக்குமேன்னு கேட்டேன் ...

Post a Comment