Sunday, April 24, 2011

500. ஆறு ஆண்டுகள் ... 500 இடுகைகள் ...

*

1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்விகள்....


4/24/2005 02:01:00 PM

1. இந்த வீக்கோ - கிரீம், பற்பசை - விளம்பரங்களிலும், அஷ்வினி எண்ணெய் விளம்பரங்களிலும் வரும் ஆட்களை எங்கே தேடிப்பிடித்திருப்பார்கள்?

2. 'குங்குமம்' விளம்பரத்திற்குப் பயன் படுத்தும் பெண்குரலை மாற்றிய பிறகுதான் குங்குமத்தைத் தொடுவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன். அப்ப ... நீங்க ?

3. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்கள் எல்லாம் இவ்வளவு கேவலமா இருக்கு. அது ஏங்க...?

4. இந்த விஜய்யும் - அதாங்க நம்ம இளைய தளபதி - அமிதாப் பச்சனும் விளம்பரப் படத்தில் மட்டும் நன்றாக நடிக்கிறார்கள். அது ஏங்க..?

5. மாமிகள் மட்டும்தான் குங்குமம் படிக்க வேண்டுமாமே. அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்.... 1

==================
இது என்  முதல் பதிவு. 

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் -  04.24.2005
சரியாக இன்று  இடுகை இடும் அதே நேரத்தில் -  02:01:00 PM

அந்த இடுகைக்கு ’பாவம் ! இந்தப் பய புள்ள இப்பத்தான் பதிவுலகிற்கு வந்திருக்குன்னு’ பாவப்பட்டு பினாத்தல் சுரேஷ் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார். நான் நிஜமாவே அப்போ பாவம்தான். கிடச்ச ஒரே ஒரு பின்னூட்டத்தை வச்சி வச்சி பாத்துக்கிட்டே இருந்திருக்கிறேன். அதுக்கு  ‘நன்னி’ன்னு ஒரு பின்னூட்டம் போடணும்னு கூட தெரியாத பாவப்பட்ட பிள்ளை!

ஆனா இப்போ 6 வருஷத்துக்குப் பிறகு என்னமோன்னு நினச்சி நம்ம ரோஸ்விக் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டார். பதிலும் போட்டுட்டேன். (ஒரு சோகம்: என் இடுகைக்கு இப்படி ஆறு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு பின்னூட்டம் வர்ரது என்னங்க நியாயம்! )  :(  இருந்தாலும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரோஸ்விக், உங்களுக்கும் நன்றி.

இரு பின்னூட்டமும் கீழே இருக்கு ...
=======================

On Monday, April 25, 2005 5:11:00 PM ,
பினாத்தல் சுரேஷ் said...

நல்ல நியாயமான கேள்விகள்.. கேளுங்க..கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.

1. அதுதான் முகவரியும் போடறாங்களே!
2. நான் அப்பவும் படிக்க மாட்டேன்.
3.கவர்ச்சியாகவும் எடுக்க முடியாது.. செலவும் பண்ண முடியாது. என்ன பண்றது சொல்லுங்க.
4.ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டு நல்லா நடிச்சிடலாம்.. மூணு மணி நேரம்? Impossible
5.தோடா.. அவங்க படிக்கிறாங்கன்னா நினைக்கிறீங்க?
===============

On Saturday, April 09, 2011 8:46:00 AM ,
ரோஸ்விக் said...

கலைஞர் ஆட்சி பற்றிய விளம்பரங்கள்ல நல்ல ஃபிகர்களா வருதாமே? உண்மையா?


நாங்களும் கேப்போமுள்ள... :-))

On Saturday, April 09, 2011 10:29:00 AM ,
தருமி said...

ரொம்ப பிடிச்ச மாடல் (திவ்யா?) இதில் வழக்கமான அழகில் இல்லையே!
========================

ஆறு ஆண்டுகள். என்னென்னமோ நினச்சி வந்தேன். என்னென்னமோ எழுதியிருக்கிறேன். எழுதியதில் இரண்டு வகைக் கட்டுரைகள்தான் எனக்கான அறிமுகமாக எல்லோருக்கும் இருக்குமென நினைக்கிறேன்.

உண்மையைச் சொல்லணும்னா, இந்த இரண்டையும் பற்றி பதிவுலகம் வந்த பிறகே நன்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். இரண்டும் எதிர்ப்பினால் மட்டுமே வளர்ந்தவை. இடப்பங்கீடு பற்றி எழுத ஆரம்பித்த போது ‘உன் மேல் வழக்குப் போடுவேன்’ என்ற பயமுறுத்தல். அதனாலேயே மேலும் மேலும் வாசித்தேன்; தெளிந்தேன்; எழுதினேன். மதப்பதிவுகளும் அப்படியே. அதிக எதிர்ப்புகள் வந்ததாலேயே ஒரு மதத்தைப் பற்றிய பதிவுகளும் அதிகமாகி விட்டன. மற்ற இரு மத நம்பிக்கையாளர்களும் என்னை எதிர்த்திருந்தால் அவைகள் பற்றியும் இன்னும் அதிகமாகத் தெரிந்திருப்பேன்; கேள்விகளும் கேட்டிருப்பேன்!

சொந்தக் கதைகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். அந்தக் காலத்துக் கதைகள் என்பதாலோ என்னவோ நல்ல வரவேற்பும் இருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள், நயா பைசா அறிமுகம் போன்ற பொது இடுகைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது மகிழ்ச்சி. இதைப் போல் இன்னும் எழுத ஆவல். முயற்சிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகளில் ‘சம்பாதித்தது’ என்ன?

நிறைய சம்பாதித்துள்ளேன். முதல் சம்பாத்தியம் - எனக்கு உலகம், அதுவும் அறிவுலகம், எவ்வளவு குறைவாகத் தெரிகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். . நிறைய இடுகைகள் time filling என்பது போன்றவைதான். நல்ல துறைகளில் ஆழமான கட்டுரை எழுதப் பலரால் முடியும்; ஆனால் அந்தக் கட்டுரைகளுக்குப் பின்னூட்ட ‘ஆதரவு’ அதிகமாக இருக்காது என்பதாலேயே அவைகள் அதிகமாக எழுதப்படுவதில்லை. ஆனாலும் எழுதும் மிகச்சிலரின் அறிவுத் திறன் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றது. வெறும் 30 - 40 வயதிற்குள் இருக்கும் சிலரைத் தெரியும்.  அவர்களை என் தனிப்பட்ட முறையில் பாராட்டியும் உள்ளேன். அவர்களது இப்போதைய வயதையும் அந்த வயதில் நான் இருந்த நிலையையும் ஒன்றாய் நிறுத்திப் பார்த்தால், இந்த இளைஞர்கள் மிக உயரத்தில் இருப்பது புரிகிறது. ஏன் அந்த வயதில் இவர்களுக்கிருக்கும் அறிவுத் தேடல் நமக்கு இல்லாது போயிற்று என்ற எண்ணமே மிஞ்சுகிறது. அத்தகைய ’சில’ பதிவாளர்கள் போல் பலரும் தங்கள் தனித் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றொரு ஆசை எனக்கு.

பதிவுலகம் புதிய வாசலை எனக்குத் திறந்து விட்டுள்ளது. தெரியாதவைகளைத் தெரிந்து கொள்ள, தெரிந்தவைகளை மேலும் புரிந்து கொள்ள, பல நல்ல நண்பர்களை - முகம் கூட தெரியாத பல நண்பர்களை - தெரிந்து கொள்ள ... பதிவனாக ஆன பின் என் உலகம் மிகப் பெரியதாகி விட்டது.

முதன் முதல் ஒரு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்மணத்தின் முதல் 500 பதிவர்களில் நாமும் ஒருவனாக இருப்போமே என்ற ஆசையில் பதிவனானேன்.  என்ன எழுதுவோம் என்ற எந்த நினைப்பின்றி வந்த நானும் ஆறு ஆண்டுகள் கழித்து விட்டேன்.ஏதேனும் சாதித்திருக்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக ஒரு நல்ல மன திருப்தியோடு இருக்கிறேன்.  இன்னும் எழுதுவதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். இன்னும் புதிதாக எழுத முயலவேண்டும்  -- ஆறு ஆண்டுகளின் முடிவில் இருக்கும் இந்த ஆவலை இன்னும் தொடரவேண்டும்.


காசிக்கும், தமிழ் மணத்திற்கும், அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், followers-க்கும்  மிக்க நன்றி.








37 comments:

Unknown said...

வாழ்துக்கள் ஐயா, தொடருங்கல் உங்கள் எழுத்துபணியை அன்புடன் Josadhit.

தருமி said...

மிக்க நன்றி, - jesu

அது என்ன .. jesu & josadhit ..?

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சார் :)

Unknown said...

Jesu..... என்னுடய அப்பாவின் பெயர் Joseph என்னுடயது Adhit என் மகனின் பெயர் அப்புறம் இன்னொரு பெயர் Oviya என் மகளின் பெயர்
அன்புடன் Josadhit

suvanappiriyan said...

திரு தருமி!

ஆறு வருடங்களில் 500 இடுகைகளை இட்ட திரு தருமி அவர்களுக்கு முதற்கண் பாராட்டுக்கள்.

//மதப்பதிவுகளும் அப்படியே. அதிக எதிர்ப்புகள் வந்ததாலேயே ஒரு மதத்தைப் பற்றிய பதிவுகளும் அதிகமாகி விட்டன.//

அதிகமாகி என்ன மாற்றத்தை கொண்டு வந்தீர்கள் என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று. கடந்த ஆறு ஆண்டுகளை விட தமிழகத்தில் முன்பு இருந்ததை விட அதிக ஈடுபாட்டோடு இஸ்லாத்தை கடை பிடிக்கும் மக்கள் அதிகமாகி இருக்கிறார்கள். இஸ்லாமிய பதிவர்களில் 25 வயதிலிருந்து 45 வயதுக்குள் உள்ளவர்களே பெரும்பான்மையினர். அனைவரும் இஸ்லாத்தின் பெருமைகளை தங்கள் பாணியில் திறம்பட சொல்லி வருபவர்கள். அதிலும் இளைஞர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் குர்ஆனையே தங்களின் வாழ்க்கையாக அமைத்திருக்கிறார்கள். உங்கள் கொள்கையில் இருந்த பெரியார்தாசன் இன்று அப்துல்லாவாக மாறி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். இது போல் இன்னும் எத்தனையோ சம்பவங்கள். மேற்கத்திய கலாசாரத்தை நாட்டுக்குள் நுழைவித்த அரபு ஆட்சியாளர்கள் அந்த மக்களாலேயே தூக்கி எறியப்பட்டு குர்ஆனின் ஆட்சி அமுல்படுத்தப் படுவதைப் பார்க்கிறோம். எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் இவ்வுலகுக்கும் மறு உலகுக்கும் எது வெற்றியோ அதை தேர்ந்தெடுப்பதுதான் சான்றோர்க்கு அழகு.

முடியை மழித்து விட்டதை சமீபத்திய புகைப்படத்தில் பார்த்தேன். கோடை வெயிலின் தாக்கத்தினாலும் இருக்கலாம். 

உங்களின் பல கேள்விகளின் மூலமாக நானும் சில விபரங்களை தெரிந்து கொண்டேன். அந்த கேள்விகள் என்னை மேலும் இஸ்லாத்தினுள் இழுத்து சென்று விட்டது. அதற்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலாவது பதில் சொன்ன கேள்விகளையே திருப்பி ...திருப்பி... திருப்பி...... திருப்பி (நண்பர் ஆஷிக் உபயம்) கேட்டுக்கொண்டிருக்காமல் ஆக்கப் பூர்வமான வாதங்களை வைப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் ஏசு நாதரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டு நாத்திக பாதையில் இருந்து விலகி ஆத்திகனாக மாறி பரலோக ராஜ்ஜியத்தில் சிறந்த இடம் பிடிக்க பிரார்த்திக்கும் உங்கள் சகோ.சுவனப்பிரியன்.

saarvaakan said...

வாழ்த்துகள் .இன்னும் நிறைய எழுதுங்கள்.

துளசி கோபால் said...

ஆஹா..... அஞ்சு சதமா????


பத்து சதம் விரைவில் வரட்டும்!!!!!

அசராம அஞ்சு வருசம் இந்த ரத்தபூமியில் நின்னதுக்குப்
இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் தொடரட்டும் கேள்விகள் :)

துளசி கோபால் said...

oops............

ஆறை அஞ்சாக்கிய இந்தப் பாவியை மன்னிக்கணும் தருமி:(

தருமி said...

//பதில் சொன்ன கேள்விகளையே திருப்பி ...திருப்பி... திருப்பி...... திருப்பி (நண்பர் ஆஷிக் உபயம்) கேட்டுக்கொண்டிருக்காமல் //

இந்தப் பதிவில் இந்த விவாதம் வேண்டுமா என்று யோசித்தேன்.

இதற்கான பதிலை மறுபடியும் தருகிறேன். பல கேள்விகளை மறுபடி...மறுபடி கேட்டாலும் பதில் இல்லாமல் போனதற்கு விளக்கமும் சான்றுகளும் கொடுத்த பிறகும் மறுபடி .. மறுபடி உங்கள் ஒரே பல்லவியைப் பாடுவதை நிறுத்தினால் என்ன? பதில் இல்லை; கொடுக்கவில்லை .. அவ்வளவே!

தருமி said...

//முடியை மழித்து விட்டதை சமீபத்திய புகைப்படத்தில் பார்த்தேன். கோடை வெயிலின் தாக்கத்தினாலும் இருக்கலாம்.//

என் “அதன்” மேல் உங்களுக்கென்ன அப்படி ஒரு ’இது’!!!!

தருமி said...

நேசமித்திரன்,
சார்வாகன்,
துளசி (என்ன! ரத்த பூமியா? உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?),
முத்துலட்சுமி,

மிக்க நன்றி

ஆனந்தி.. said...

வாழ்த்துக்கள் தருமி சார்...அடுத்த ஆறு ஆண்டு கழிச்சு இந்த பின்னூட்டவாதியையும் நீங்கள் நினைவு கூற நான் பின்னூட்டம் இப்ப போட்டாச்சு...:))

ஆனந்தி.. said...

புது பொழிவுடன் தருமி சார் ப்லாக் இப்ப இருக்கிற மாதிரி இருக்கே:))...அப்படியே வருங்கால முதல்வர் கிட்டே சோடா புட்டி கண்ணாடி இலவசமா கிடைக்குமான்னு கேட்கணும் போலவே தருமி சார் ப்லாக் படிக்க...(சார் கொஞ்சம் பான்ட் சைஸ் பெருசு பண்ணுங்க..) உங்களை மாதிரி சின்ன வயசு எங்களுக்கு இல்லயே...:)))

suvanappiriyan said...

//என் “அதன்” மேல் உங்களுக்கென்ன அப்படி ஒரு ’இது’!!!!//

'எது' வாக இருந்தாலும் நமக்கு 'அது'(சுவனம்) கிடைக்க வேண்டும். எனவே 'இதை'ப் பற்றிய பேச்சோடு சற்று தமாஷாக 'அதை'ப்பற்றியும் கூற வேண்டி வந்தது. 'அதை'ப் பற்றி கூறியது தவறென்றால் அதற்காக 'இதை'(வருத்தம்)யும் கேட்டு விடுகிறேன்.

'எதை'ப் பற்றி எழுதினாலும் 'அதை'(இஸ்லாம்)ப் பற்றி எழுதும் போது இணையத்தில் கிடைத்த ஆதாரமற்ற 'கதை'களை சொல்லி எங்களை 'வதை' செய்யாமல் 'விதை' போல வாதங்களை விதைப்பீர்களாக!

தருமி said...

..இணையத்தில் கிடைத்த ஆதாரமற்ற 'கதை'களை சொல்லி எங்களை 'வதை' செய்யாமல் 'விதை' போல வாதங்களை விதைப்பீர்களாக!//

499வது பதிவைப் பார்த்து இப்படித்தான் சொல்வீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், 493-ம் பதிவில் //உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என்று இஸ்லாமிய நண்பரிடம் கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்!

சுரா 4:3 - பெண் அடிமைகளோடு இணைந்து வாழலாம். 4 : 28 - பெண் அடிமைகள் திருமணம் ஆகியிருந்தாலும் அவர்களையும் ’சேர்த்துக்’ கொள்ளலாம். (இவைகளெல்லாம் முகமது இருந்த ‘அந்தக் காலத்தை’ மனதில் வைத்து கடவுள் இட்ட கட்டளைகள் என்ற ‘தத்துவம்’ வேண்டாம். ஏனெனில், இவை ‘அல்லாவின் வார்த்தைகள்’. கடவுளின் வார்த்தைகள் எந்த இடத்திற்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இன்றும் இந்த சட்டங்கள் சரிதானா?// - என்பதுவும்,

494-ல் சொல்லப்பட்ட அடிமைப் பெண், வைப்பாட்டி என்பதுவும்,

496-ல் //இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. //
என்று சொல்லி சில குரான் பகுதிகளைக் கொடுத்திருப்பதுவும் ஆதாரமற்றவைகள் என்றா சொல்வீர்கள் - எல்லாம் உங்க அல்லா சொன்னதுதானே அவை. இதுவரை அவைகளைக் கண்டு கொள்ளவேயில்லையே நீங்கள்!!!!

தருமி said...

ஆனந்தி,
எழுத்துக்கள் சரியாகிவிட்டனவா?

வந்து வாழ்த்தியமைக்கு நன்றி

Kamaraj said...

வாழ்த்துகள்!!! உங்கள் வயதில் உங்களை போன்று அதே திடமாக, அதே தேடலுடன் நான் இருந்தால், மிகவும் சந்தோசப்படுவேன்!

cheena (சீனா) said...

அன்பின் அண்ணே தருமி !

ஐநூறுக்கு நல்வாழ்த்துகள் - ஆறாண்டிற்கும் நல்வாழ்த்துகள் - என் மேலே கோபமா இருப்பீங்க ! தள்ளிக்கிட்டே போறதுனாலே ! ம்ம்ம்ம் - சிந்திக்கிறேன் - நட்புடன் தம்பி சீனா

ஆனந்தி.. said...

//ஆனந்தி,
எழுத்துக்கள் சரியாகிவிட்டனவா?//
இப்ப டபிள் ஓகே :)

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள் தருமி! சரக்கான பதிவுகளை கொடுத்து மாற்றுச் சிந்தனைக்கான அடிப்படையை நாங்கள் அமைத்துக் கொள்ள நீங்க போடும் உழைப்பிற்கும், உங்க வாசிப்பு ஆழத்திற்கும் அதனை நாங்கள் பெறுவதற்கு அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

நீங்க, இன்னும் சிலர் எங்களுடன் சமகாலத்தில் இந்த வலையுலகத்தில் இருப்பதற்கு நாங்க நிச்சயமாக கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

//ஏன் அந்த வயதில் இவர்களுக்கிருக்கும் அறிவுத் தேடல் நமக்கு இல்லாது போயிற்று என்ற எண்ணமே மிஞ்சுகிறது.//

அப்படியா நினைக்கிறீங்க! அந்த நேரத்தில் உங்களுக்கு எழும்பி இருக்கும் சிந்தனையே இத்தனை ஸ்ட்ராங்காக நீங்கள் முன் வைக்கும் கருத்துக்கள் காலம் கடந்தும் நிற்கும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த இளைஞர்கள் உங்களிடம் இருக்கின்ற அந்த வாசிப்பு, தேடல் அப்படியே காலந்தோறும் உங்களைப் போல கடந்தும் எடுத்துச் சென்றும் சேர்ப்பதில்தான் இருக்கிறது. எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் ஓரளவிற்காவது நின்று விளையாட வேண்டுமென்றும் வாழ்த்திச் செல்லுங்கள் :)

//இரண்டும் எதிர்ப்பினால் மட்டுமே வளர்ந்தவை. இடப்பங்கீடு பற்றி எழுத ஆரம்பித்த போது ‘உன் மேல் வழக்குப் போடுவேன்’ என்ற பயமுறுத்தல். //

இவ்வளவு எல்லாம் நடந்திருக்கா? பாருங்க, இது போன்ற சூழல்களை எல்லாம் கடந்தும் நிற்க வேண்டும், அந்த இளைஞர்கள், அல்லவா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் அய்யா.... இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்

தருமி said...

மிக்க நன்றி, தெக்ஸ்.

//ஓரளவிற்காவது நின்று விளையாட வேண்டுமென்றும் வாழ்த்திச் செல்லுங்கள் :)//

வாழ்த்துகிறேன்.

தருமி said...

ஆனந்தி,
சீனா,
CorText,
தமிழ்வாசி

நன்றி.

அமர பாரதி said...

வாழ்த்துக்கள் தருமி சார். தாங்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை ( ;-) ) பிரார்த்திக்கிறேன். இந்த டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.

Anna said...

வாழ்த்துக்கள் தருமி sir. CorTexT உம் தெகாவும் சொன்ன கருத்துக்களை முற்று முழுதாக வழிமொழிகின்றேன்.

தருமி said...

அமரபாரதி,
the analyst

நன்றி

தருமி said...

சுவனப்பிரியன்
உங்களுக்கு சில கேள்விகளை 499-ம் பதிவின் பின்னூட்டத்தில் கேட்டுள்ளேன்.

PRABHU RAJADURAI said...

ஏற்கனவே பிரபல பதிவர் தாங்கள்...அதற்கு மேலும் சாதிக்க (மனநிறைவு பெற) வாழ்த்துக்கள்!

suvanappiriyan said...

தருமி!

//493-ம் பதிவில் //உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என்று இஸ்லாமிய நண்பரிடம் கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்!//

உலகில் எந்த மனிதனும் தனது குடும்பப் பெண்கள் யோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவான். இது மதம் கடந்த ஒரு எண்ணம். திருமணமான சில பெண்கள் கணவனுக்கு துரோகம் இழைத்து அது கொலை வரை செல்வதை நாம் தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இது போன்ற சூழலில் தான் இஸ்லாம் சிறந்த ஒரு வழிகாட்டுதலை கொடுக்கிறது.

'கட்டுப்பட்டு நடப்போரும் இறைவனின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று மனைவியர் விஷயத்தில் நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கைகளில் விலக்குங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'
-குர்ஆன் 4:34

மறைவான வெட்கத் தலங்களை பேணாத தனது கணவனுக்கு துரோகம் செய்யும் சில பெண்களைப் பற்றித்தான் இந்த வசனம் பேசுகிறது. எடுத்தவுடன் அரிவாளை தூக்கி ஒரே போடாக போட்டு விடுவதுதான் நாம் பலமுறை பத்திரிக்கைகளில் படித்தது. ஆனால் இதை இஸ்லாம் தடுக்கிறது.

முதலில் அந்த பெண்ணிடம் சிறந்த முறையில் அறிவுரை கூறி திருத்த முயல வேண்டும். இது சரிவராத போது சில நாட்களுக்கு மனைவியோடு சேர்ந்து படுக்காது தனிமைபடுத்த வேண்டும். கணவன் தன்னை படுக்கையிலும் ஒதுக்குகிறான் என்று தெரிந்து அந்த பெண் திருந்த முற்படுவாள். அதிலும் சரி வராமல் திரும்பவும் அதே தவறை மனைவி செய்தால் அவளை அடித்து திருத்த முயற்ச்சிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு தீய நடவடிக்கைகளை விட்டும் தவிர்ந்து கொண்டால் வேறு வழிகளை தேடாமல் அவளோடு வாழ்க்கை நடத்த வேண்டும்.

இப்படி ஒரு அழகிய வழிமுறை மற்ற மார்க்கங்களில் இல்லாததாலதான் 'நடத்தையில் சந்தேகம் மனைவி கொலை' என்று நாம் பத்திரிக்கையில் அடிக்கடி பார்க்கிறோம்.

மனைவியை அடிப்பதற்கும் சில வழிமுறைகளை இஸ்லாம் வகுக்கிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் முகமது நபி அவர்கள் மிக வன்மையாக தடுத்துள்ளார்கள். ஆதாரம் புகாரி 1294, 1297.

அதாவது தான் தவறாக நடந்தால் நம் கணவன் நம்மை அடிக்கவும் செய்வான் என்ற பயம் இது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இதனாலும் அந்த பெண் திருந்தவில்லை என்றால் அவளை விவாக விலக்கு செய்த விடுங்கள் என்று இஸ்லாம் பணிக்கிறது. இது போன்ற சட்டங்கள் இஸ்லாத்தில் இருப்பதால்தான் கணவனால் மனைவி கொல்லப்படுவது இஸ்லாத்தில் மற்ற சமூகங்களோடு ஒப்பிடும் போது குறைவாக இருக்கிறது.

'பெண் விடுதலை' என்ற பெயரில் பெண்களை காட்சிப் பொருள்களாக மாற்றியதால் இன்று குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பெண்மைக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன்னேற்றத்தால்தான் அவர்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.

மற்றபடி அடிமைப் பெண்களைப் பற்றி ஏற்கெனவே பல முறை விளக்கியாகி விட்டது.

தருமி said...

சுவனப்பிரியன்,
இப்பதிவில் விவாதம் எதற்கு என்பதற்காகத்தான் கேள்விகளை 499 இடுகைக்குக் கொண்டு சென்றேன். உங்கள் கேள்விகளோடு அந்த இடுகைக்குச் செல்கிறேன். மறுப்பிருக்காது என நினைக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

அன்புள்ள தருமி சார்,
சக பயணியின் வாழ்த்துக்கள்! எந்த வருஷம்?வலைப்பதிவர்களின் கடற்கரை கூட்டத்தில்
பதிவெரெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டு, உள்ளே நுழைந்த ஆள் இல்லையா நீங்கள் :-)
இத்தனைக்கும் உங்களைப் போன்று சிலருடன் சொல்லும்படி பர்சனலாய், மெயில், சந்திப்பு
எதுவும் இல்லை. ஆனாலும் அதையும் தாண்டி ஒரு சிநேகம் இருக்கிறது (இருக்கு இல்லே)
இணையத்துக்கு நன்னி. இன்னும் எழுதுங்கள்.
அன்புடன்,
உஷா

தருமி said...

உஷா அவர்களுக்கு,
//இருக்கு ..
இணையத்துக்கு நன்னி.//

அதே!

என்னை இன்று வரை ஆச்சரியப்படுத்தும் ‘அம்மா’ நீங்கள். பிள்ளைகள் நலமறிய ஆவல்.

நீங்கள் ஏன் (இங்கு வந்த பின்னும்) எழுதவில்லை?!

தருமி said...

//எந்த வருஷம்?வலைப்பதிவர்களின் கடற்கரை கூட்டத்தில்
பதிவெரெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டு,...//

2005-ன் மார்ச் மாதமாக இருக்கலாம்.

TBR. JOSPEH said...

ஆறு வருடங்கள்!!! பாராட்டுக்கள்... தொடரட்டும் உங்கள் பணி:))))

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

வாழ்த்துகள் .இன்னும் நிறைய எழுதுங்கள்.
kalakarthik

தருமி said...

Prabhu Rajadurai
kalakarthik
டி.பி.ஆர் (சிரிப்பானுக்கு தனியே ஏதும் பொருளில்லையே?)

மிக்க நன்றி

Post a Comment